பி.முட்லூர் நிக்குமா? என்று நடத்துனரிடம் கேட்டேன். கேட்பதற்கு முன்பே பச்சைப்பேருந்தின் பக்கவாட்டில் எஸ்ஈடிசி என்று எழுதி இருப்பதை படித்துவிட்டேன். படித்ததால்தான் அப்படிக்கேட்டேன். அது தஞ்சையில் இருந்து சென்னை செல்லும் தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து.
சிலநேரங்களில் பி.முட்லூரில் அந்த வகைப்பேருந்துகள் நிற்பது உண்டு. நடத்துனர் கடலூர் பாண்டி சென்னை என்றபடியே என்னைப்பார்த்து நிற்கும் என்பதற்கு சம்மதமாக தலையையாட்டினார். எனக்கு மகிழ்ச்சி. சீக்கிரமாக சென்றுவிடலாம். சீக்கிரமாக செல்வதில் என்ன மகிழ்ச்சி?. நான் சென்றபின்பு அங்கு மகிழ்ச்சி இருக்குமா? மகிழ்ச்சியின் முடிவு ஒரு துன்பம், துன்பத்தின் முடிவு மகிழ்ச்சி. இது பிரபஞ்சவிதி. எல்லோருக்கும் விதி தெரியும். துன்பம் வந்துவி்ட்டால் மட்டும் அழும் மனிதன் விதிசரியில்லை என்று நொந்துக்கொள்ளும்போது சிரிப்பதுவிதியில்லை ஆனாலும் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை.
மீசை வழித்த முகத்தோடும், ஒட்டவெட்டிய முடியோடும் வெள்ளையில் முழுக்கால்சட்டையும் முழுக்கை சட்டையும் அணிந்து கண்களை மறைக்க கறுப்புக்கண்ணாடி அணிந்து கையில் தினசரிக்குறிப்பேடு ஒன்று வைத்திருந்தேன்.
சிவந்திருக்கும் விழிகளை எவரும் பார்க்கக்கூடாது என்றுதான் கறுப்பு கண்ணாடி அணிந்து இருந்தேன். எனது சிவந்த விழிகளை பார்த்தவர்கள் “எமன் மாதரிப்பார்க்கிறான்“ என்று என் தலைமறையும்போது என்காதில் விழட்டும் என்று சொல்கிறார்கள். பாதுகாப்பு எல்லையில் இருந்துப்பேசத்தெரிந்தவர்கள். “நான்தான் எமன்“ என்று அவர்கள் இடம் எப்படிச்சொல்ல முடியும்?.
பஸ் சி.முட்லூரைத்தாண்டி வெள்ளாற்றுப்பாலத்தை கடக்கும்போது நடத்துனர் “டிக்கெட்” என்று கைநீட்டினார்.
தொலைதூர நிருத்தங்கள் கொண்ட இந்த பேருந்தில் ஐம்பத்தி இரண்டு இருக்கைகள். நான் வலது பக்க வரிசையில் நான்காவது இருக்கையில்தான் அமர்ந்து இருந்தேன். நடத்துனர் இப்பொழுதுதான் என்னிடம் வந்தார். நகரபேருந்துகளின் குறுகிய நிருத்தங்களில் அதிகபடியான மக்கள் ஏறி இறங்கையில் நடத்துனர் டிக்கெட் கொடுக்கப்படும்பாட்டை நினைத்துக்கொண்டேன். இவர் கொடுத்து வைத்தவர்.
“பி.முட்லூர்” என்று நான் பத்துரூபாய் நோட்டை நீட்டியபோது நடத்துனர் முகம் சுருங்கிவிட்டது.
“இது எக்பிரஸ் பி.முட்லூரில் நிக்காதுன்னு தெரியாதா?” அவருக்குள் இருந்து வெறு ஒரு ஆள் எழுந்து வந்துபேசுவதுபோல் எனக்கு தெரிந்தது. எனக்குள் இருந்து எழுந்த வேறு ஒரு ஆளை தட்டி உட்காரவைத்துவிட்டு “நான் உங்களிடம் கேட்டுதானே ஏறினேன்” என்று சிரித்தேன். பல்தெரியாமல்தான் சிறித்தேன். பல்தெறிந்தால் பயந்துவிடுவர் அல்லவா? நமக்குள் இருக்கும் இரண்டாவது ஆளை எதிரில் இருப்பவன் எளிதாக எழுப்பிவிடுகிறான். நமக்குள் அவனை மீண்டும் உட்கார வைக்க சகலகால வல்லமை தேவைப்படுகிறது.
அவரில் இருந்து வெளியேறி என்முன் நின்ற வேறு மனிதன் நடத்துனருக்குள் சட்டென்று ஒளிந்துக்கொள்ள, நடத்துனர் பழைய ஆளாக மாறி பற்களைக்காட்டியபடி “சாரிசார், நீங்கள் முட்லூர் என்றதை கடலூர் என்று நினைத்துக்கொண்டேன்” என்றார். உண்மையான வருத்தம் உள்ளத்தை தொட்டது.
“பி“ என்பதை அழுத்திச்சொல்லாமல் விட்டுவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சி நெஞ்சை கீறியது. நமக்குகூட நெஞ்சு இருக்கிறதா? என்று தடவிக்கொண்டேன். அதற்குள் பஸ் பி.முட்லூர் பஸ் நிறுத்தத்தை தொட்டுவிட்டது. “நிறுத்துங்கள் இறங்கிக்கொள்கிறேன்“ என்று கத்தினேன்.
“கடலூர் பயணச்சீட்டு எடுத்துக்கொண்டு முட்லூரில் இறங்கிக்கொள்ளுங்கள் சார்“. மீண்டும் மன்னிப்புக்கேட்டார் நடத்துனர். கையில் இருந்த பத்துரூபாய் நோட்டை பையில் திணித்துவிட்டு நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன். நிறுத்தத்ததை பேருந்து கடந்துவிட்டது.
“நிறுத்துங்கள்..நிறுத்துங்கள்” என்று ஓட்டுனர் இருக்கும் திசை நோக்கி கத்தினேன். அவ்வளவு பதட்டமும் கத்தலும் தேவை இல்லை என்று பதட்டப்பட்டு கத்தியப்பின்பே உணர்ந்தேன். உணர்வற்குள்ளேயே உணரப்போவதை செயலாக்குபவர்கள்தான் சான்றோர்கள். உணர்ந்ததை உணர்ந்தேன் என்று மட்டும் நம்புபவர்கள் வெறும் மனிதர்கள். நான் இப்போது வெறும் மனிதனாக இருக்கிறேன்.
நடத்துனர் தனது உதட்டைக்குவித்து வாயாலேயே ஒரு விசில் அடித்தார். ஓட்டுனர் கோபத்தில் இன்னும் கொஞ்சம் தூரம் சென்றே வண்டியை நிருத்தினார். நடத்துனர் கொடுத்த சில்லரையையும் பயணச்சீட்டையும் அவர் முகத்தைப்பார்த்தப்படியே வாங்கினேன் அதில் சிரிப்பு இல்லை ஆனாலும் சிரிப்பதுபோல் தெரிந்தது. ஏழு ரூபாய் செலவில் செல்லவேண்டிய தூரத்தை முப்பத்தைந்து ரூபாய் கொடுத்து கடந்த என்னை நொந்துக்கொண்டே இறங்கினேன். மானிடவேடம் போட்டால் கணக்குப்பார்க்கும் மானிட சஞ்சலம் எல்லாம் வந்துவிடுகிறது.
நிறுத்தம் இல்லாத இடத்தில் பஸ் நின்றதும் நிறுத்தத்தில் நின்றவர்கள் அனைவர் தலையும் காற்றின் திசையில் இலை பூ திரும்புவதுபோல என்னைப்பார்த்து திரும்பியது. நான் வானத்தை பார்த்தேன். வானம் வெளுத்து பளபளத்தது. கோடையின் உக்கரத்தில் திரும்பியவர்கள் முகத்தில் ஆவிப்படர்வதுபோல வெயிலின் அலை. .
நான் நிறுத்தத்திற்கு திரும்பிச்செல்லாமல் பேருந்து சென்ற திசையிலேயே நடந்தேன். எதிரில் வந்த இருச்சக்கர வாகன ஓட்டி தனது கழுத்தை முடிந்த அளவு திருப்பி என்னைப்பார்த்தப்படியே சென்றான். அவன் கண்ணில் தெரிந்தது என்ன? நான் யார் என்பதைவிட, ஏழு ரூபாய் கட்டணப்பேருந்தில் வராமல் முப்பத்தைந்து ரூபாய் கட்டணத்தில் வந்த இந்த கேனை யார் என்பதா? சௌதி அராபியாவிற்கு சென்றபோது தெரிந்துக்கொண்டேன். மோப்பநாய் ஏற்றிச்செல்லும் வாகனத்தின் எண் K9. இதைத்தான் தமிழில் கேனையன் என்கிறார்களோ?
இந்த 35ரூபாய் பயணச்சீட்டு செய்தியை சித்திரகுப்தனுக்கு அலைப்பேசியில் சொல்லவேண்டும்போல் இருந்தது. அதே நேரத்தில் அலைப்பேசி ஒலித்தது சித்ரகுப்தன்தான். “சித்ரகுப்தனுக்கு ஆயுசு நூறு“ என்று வாயில் எழுந்த சொல்லை நாக்கை கடித்து நிறுத்தினேன். மானிட வேடம் போட்டதும் எமன் என்பதே மறந்துவிடுகிறது. எமன் என்பதும் ஒரு வேடம்தானோ? சித்ரகுப்தனுக்கு ஏது சாவு?
மகிழ்ச்சியில் “செல்லம்..சித்ரகுப்தா” என்றேன். நான் துள்ளினேன் என்பதை என்கால்கள் தார்சாலையில் மோதியப்போதுதான் உணர்தேன். தலையில் வெயில் சுட்டது. எதற்கு இந்த மனிதர்கள் அழைப்பவர் பெயர் தெரிந்தும் ஹலோ என்கிறார்கள்?
“மன்னிக்கனும் பிரபோ“ என்றான் சித்தரகுப்தன். நான் மகிழ்ச்சியில் இருந்ததால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் “சொல்லு செல்லம்” என்றேன்.
எனது அளவுக்கடந்த அன்பு சித்ரகுப்தனை பேசவிடாமல் மௌனத்தில் முழுக்காட்டியது. மகிழ்ச்சிக்கூட ஒரு தடைக்கல்தான். அவனது மௌனத்தை கலைக்க மீண்டும் ஒருமுறை செல்லம் கொஞ்சவேண்டியவனானேன். விருத்தாசலத்தில் இருந்து சிதம்பரம் வரும் பேருந்தில் விஜயின் கில்லிப்படம் பார்த்த பாதிப்பு இந்த செல்லம். மென்மையான சொற்களை அன்பை வெளிப்படுத்தும் வசனங்களை வில்லன் பேசும்போது உள்ளம் உருகுகிறது என்றால் எமனே செல்லம் என்றால் சித்ரகுப்தனுக்கு எப்படி இருக்கும்?
பழைய சிதம்பரம் வட்டம் புதிய புவனகிரி வட்டம் மஞ்சக்கொல்லை கிராமத்திற்கு செல்லவேண்டிய நான் மஞ்சக்குழி கிராமத்திற்கு வந்துவிட்டேன் என்றான். உளுந்தூர்பேட்டையில் வாக்கு சேகரிக்க வந்த கேப்டன்விஜகாந்த் உடுமலைப்பேட்டை என்று பேசியப்பேச்சைக்கேட்டதால் வந்தவினை இது. இந்த நகைக்சுவையை நினைத்தப்படியே சித்ரகுப்தன் கையில் இருந்த கணக்கைபிடுங்கி “புவனகிரிவட்டம் மஞ்சக்…..கிராமம்“ என்று மூடிவைத்து கிளம்பிவிட்டேன். மஞ்சக்கொல்லைக்கு போகவேண்டியவன் மஞ்சக்குழிக்கு வந்துவிட்டேன்.
ஊருக்கு நல்லது செய்த அறவோர்கள், குடும்பத்தை உருவாக்கிய முதுதாய் தந்தையர், சான்றோர்களை அழைத்துச்செல்ல நானே வருவேன். அது அந்த உயிருக்கு நான் தரும் மரியாதை. பேத்திக்கும் பேரன் பிறந்துவிட்டதை பார்த்த ஒரு பெரும்தாய் எனக்காக மஞ்சக்கொல்லையில் சிவனேன்னு இருக்கிறாள். சிவனேன்னு இருப்பவளை சிவனாகவே மதித்து அழைத்துச்செல்லவேண்டும். இல்லை என்றால் சிவன் உதையை தாங்கமுடியாது. சிவன் உதைப்பது ஒரு பாக்கியம்தான். அந்த பாக்கியத்தை வாங்கிதந்த மார்க்கண்டேயனுக்கு நன்றி.
பக்கத்திலேயே பஸ் நிறுத்தம், மஞ்சக்கொல்லைக்கு பேரூந்து ஏறவேண்டியதுதான் என்று நினைத்து பேரூந்து நிறுத்தத்திற்கு திரும்பினேன். நடந்துபோகும் தூரம்தான் என்றான் பனியனில் ரஜினியை சுமந்தவன். . மீண்டும் அலைபேசியில் சித்ரகுப்தன் எழுத்தாகி ஒலிஒளியில் மின்னினான்.
“செல்லம்”
“பிரபோ..மஞ்சக்கொல்லைக்கு யமகிங்கரர்களை அனுப்புறேன். நீங்க மஞ்சக்குழிக்கே செல்லுங்க” என்றான்.
“வேண்டாம் செல்லம். அந்த முதுத்தாய் உயிர்களால் பூமியை நிறைத்த கற்பகவிருட்சம். அவள் வணக்கத்திற்கு உரியவள், அவளை அழைக்க நான்தான் போகனும்”
“சரி பிரபோ” சித்திராகுப்பதனும் கொஞ்சினான்.
“மஞ்சக்குழியில் யார் என்றேன்” மனிதனாக இருந்தாலும் இதை கேட்கும்போது எமனாகத்தான் அகம் இருந்தது.
“சாலைகளை பெரிதாக்காமல் வாகனங்ளை பெருக்குவதும், உழைப்பே இல்லாமல் குடிக்கிறதும் தொடங்கிய பின்பு காலம் நேரம் ஆள் முகவரி எதுவும் தேவை இல்லை பிரபோ” என்றான். கணக்கு எழுதி எழுதி கைவலிக்கொண்ட சித்ரகுப்தனுக்கு விடுதலைக்கிடைத்த மகிழ்ச்சி. ஒரு மடிகணினி கேட்கிறான். வாங்கிக்கொடுக்கலாம் ஆனால் மின்சாரத்திற்கு என்னச்செய்வது. மின்னலில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்றாலும் அது இந்திரன் கைப்படை என்பதால் காத்திருக்கவேண்டி உள்ளது. மானிடர்கள்போல் எதையும் கூறுப்போட்டு கமிஷனுக்கு விக்கும் நிலை அங்கு இன்னும் வரவில்லையே.
எந்த இடத்திற்கும் காலத்திற்கு செல்வதால்தான் எனக்கு காலன் என்றே பெயர், எனக்கே காலம் என்ன வென்று தெரியாத ஒரு திட்டமிடா பயணமா? மனிதர்களின் செய்கைகள் வானவர்கள் வாழ்க்கை முறையையும் மாற்றி வைக்கக்கூடியது. வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தால்தானே வானுறையும் தெய்வத்தில் வைக்க. வாழக்கூடாத வகையில்வாழ்ந்தால் தெய்வங்களின் வரிசையும் கலைந்துவிடும் என்பதை மனிதன் அறிந்தே இருக்கிறான் போலும்.
கழுகுப்பார்வையில் மொத்த பூமியையும் ஒரு கனத்தில் நோக்கிவிடுவேன். இருந்தும் மனித வடிவத்தில் இருந்துக்கொண்டு அதை எல்லாம் செய்ய விரும்பவில்லை. காலம் கணக்கில் இல்லாததால் காலதாமதமாகவே சென்றுக்கொண்டு இருந்தேன். யாருன்னுக்கூட தெரியாதபோது எதுக்கு வேகம்.
எமலோகத்தில் எண்ணெய் கொப்பறைகள் கொதிக்கும் கூடத்தில்கூட இத்தனை சூடு இல்லை. சித்திரை வெயிலில் தார்சாலையில் நடப்பது எனது வியர்வையில் என்னையேப்போட்டு யாரோ வறுப்பதுபோல் இருந்தது. யார் விட்ட சாபமோ?
மனிதனாக வேசம்போட்டால் மனிதர்களுக்கு உரிய அனைத்து உடல் உபாதைகளும் வந்துவிடும்போலும். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அருகில் நின்ற புளிய மரத்தில் வேர் மறைப்பில் ஒதுங்கினேன். எனக்கு முன்னமே யாரோ ஒதுங்கி இரண்டு வேலையையும் அங்கேயே முடித்து இருந்தார்கள். சாலையோரத்தில் மலம்கழிப்பதைப்பார்க்கும்போது தமிழ்நாட்டு மக்கள் வீட்டை குடிசையாக கட்டிக்கொண்டு கக்கூஸை பெரிதாக கட்டிக்கொண்டு உள்ளார்கள் என்று தெரிகிறது. மூக்கை பிடித்துக்கொண்டு தள்ளி உட்கார்ந்து நீர் இறக்கம் செய்துவிட்டு நடக்கத்தொடங்கினேன்.
ஒரு இருசக்கர வாகனத்தில் மூன்றுபேர் தொத்திக்கொண்டு என்னை இடிப்பதுபோல் வந்து வண்டியை வளைத்து முன்சக்கரம் துள்ள பாய்ந்து சென்றார்கள். மதுபான வீச்சம் எனது நாசியை திருகி குடலை மேல் இழுத்தது. மூக்கை சுளித்து காறி சாலை ஓரத்தில் துப்பினேன். “இச்ச.. மனுசனான உடனேயே பொது இடத்தில் துப்பக்கூடாது என்ற துப்புஇல்லாமே போச்சே“ என்னையே நொந்துக்கொண்டு தலையை உயர்த்தினேன்.
இருசக்கர வாகனத்தில் பின்னாடி உட்கார்ந்து இருப்பன் தலைதொங்கியதைப்பார்த்தபோது தூங்குகிறானோ என்ற சந்தேகமும் எழுந்தது, வழுக்கி விழுந்துவிடுவானோ என்ற பயம் எழுந்தது.
எமனுக்கே பயமா? உயிரை எடுப்பது தொழிலாக இருந்தாலும் இதுமாதரி விழுந்து அடிப்பட்டு அல்லல்படுவதைப்பார்க்க பரிதாபமாகத்தானே இருக்கிறது. ஆடு வெட்டுற கசாப்புக்கடைக்காரனும் ஆட்டுக்கு தீனி வைத்து தடவிதானே கொடுக்கிறான். அவர்கள் என் கண்ணில் இருந்து மறைந்துவிடும் தூரம் சென்றுவிட்டார்கள். கண்ணுக்கு அப்பால் என்ன நடந்தால் என்ன? சற்று நிம்மதியாக இருந்தது. இதுகூட மனித இயல்புதான் என்று சிரித்துக்கொண்டேன். இது எமலோகம் இல்லை என்பதால் சத்தம்வராமல் சிரித்துக்கொண்டேன்.
எங்காவது சற்று உட்கார்ந்தால் தேவலாம்போல் தோன்றும்போது மஞ்சக்குழி ஏரியை நெருங்கிவிட்டேன். இந்தக்கோடையில் இத்தனை நீரா? பரவசத்தில் துள்ளிக்குதித்து குளிக்கவேண்டும்போல் தோன்றியது. எனது வாகனம் ஐந்தாறு ஏரியில் அமிழ்ந்து கிடந்தது. என்னைப்பார்த்ததும் மரியதையாக எழுந்தது. மனிதனாக இருப்பதால் போதும் மரியாதை என்பதுபோல் படுத்துக்கொண்டது.
ஏரிக்கரையில் இருந்த திரௌபதி அம்மன்கோயில் அரசமரத்தின் நிழல் கொஞ்சம் உட்கார்ந்து படுத்துப்பார் என்றது. இந்த மனிதர்களுக்கு பூமியில் சொற்கம் விலையில்லாமல் கிடைக்கிறது ஆனால் அவர்கள் காசிக்கொடுத்து நரகத்தை வாங்கிக்கொள்கிறார்கள்.
அல்லிப்பூத்த ஏரியின் குளிர்ந்த வெள்ளிநீர் பரவசமாக இழுக்க வேக வேகமாக நடந்து ஆவலோடு படித்துறைக்கு சென்றேன். படித்துறைக்கு சென்றபின்புதான் அது பெண்கள் குளிக்கும் துறை என்று தெரிந்தது.
பெண் ஒருத்தி படிக்கட்டில் உட்கார்ந்து துணிக்கு சோப்பு போட்டு துணியை கும்மிக்கொண்டு இருந்தாள். சிறுகுழந்தையின் பள்ளிக்கூட சீருடை. சோப்புப்போட்டு கும்மிய துணிகள் எதிரில் இருந்தது. துவைக்கவேண்டிய துணிகளை வலதுப்பக்கம் அலுமினிய அன்னக்கூடையில் மேல் படிக்கட்டில் வைத்து இருந்தாள். மெலிந்து இருந்த அவள் உடலும் உடையம் கிழவி என்றுக்காட்டியது. எனது வரவு அவள் உணர்வில் பதிந்து இருக்கவேண்டும் துணியை கும்முவதை நிறுத்திவிட்டு தலையை திருப்பி என்னைப்பார்த்தாள். “ஆ! எத்தனை அழகான இளமையான முகம், எவ்வளவு அழகான கண்கள்! உடல் அறுபதையும் முகம் முப்பதையம் காட்டிக்கொடுத்தது. “என்ன மாயாம்“ என்று வியக்கும்போதே அவள் வெண்விழியின் சிவப்பும் அதில் உறைந்திருந்த கண்ணீரும் நெஞ்சைப்பிழிந்தது. யாரோ தொடை சதையைக்கிள்ளி இழுத்து நரம்பை பிடித்து கசக்கியதுபோல் குதிகாலை உயர்த்தி பின்பு பாதத்தை முழுவதும் மண்ணில் படியவைத்து நின்றேன்.
சோப்பு நுரையோடு இடதுக்கையால் முந்தானையை இழுத்து மூக்கை உறிஞ்சி அழுத்தி துடைத்துக்கொண்டு “அதோ அங்க இருக்கு ஆம்பள தொற“ என்றாள். அந்த அழகு முகத்தில் அழுந்தி இருந்த களைப்பு அவள் இனிய குரலில் இழையோடும் சோகமும் என்னை சுட வெயிலின் கொடுமை எனக்கு மறந்துப்போனது.
ஏன் இப்படி இவள்? தெறிவதை பார்க்கும் முகவிழிகளை மூடி, தெறியாததை பார்க்கும் அகவிழியை திறந்தேன். அதிர்ந்துப்போனேன்.
பூமாலைச்சூடி தேன்வடியும் வாழ்க்கை வாழவந்தவளுக்கு கிடைத்தது சாராய வாடையும் அடியும் உதையும்தான். மூன்றுமுறை தூக்குகயிறை எடுத்துக்கொண்டுப்போனவளை காப்பாத்தி கூப்பிட்டுவந்தது ஆறுதல் சொன்னது மாமியார்தான். காலன் கணக்கில் அவள் ஏடு இன்னும் எடுக்கப்படவில்லை என்பது அவளுக்கு எப்படி தெரியும்? மூன்று பிள்ளைகளுக்கு அம்மாவாகிவிட்டாள். பிள்ளையை அள்ளி முத்தம் வைக்கும்நேரத்தில்கூட பிள்ளைமீது சாரயவாடை அடிப்பதுபோலவே அவள் அகம் அறிகிறது. இரவுக்கூட குடியும் அடியும் உதையும்தான். மீண்டும் திரும்பி முழுவதும் அவளைப்பார்த்தேன். வயிறு முன்னால் சரிந்து அடுத்தது என்று காட்டியது. அவள் பின்புறம் அப்போதுதான் பறித்து வைத்த அல்லி மலர்கள் அதன் தண்டோடு சிரித்துக்கொண்டு இருந்தது. யார் வைத்திருப்பார்கள். அவள் கணவன் தண்ணீருக்குள் இருக்கிறான். பூ பறிக்கிறான்.
“ஆ” என்று அலற நினைத்து அடக்கிக்கொண்டேன். காலனும் காலமும் சந்தித்துக்கொண்ட காலம்.
அதே நேரத்தில் தூக்கிவாரிப்போட்டதுபோல் எழுந்த அந்த பெண் “ஐயய்யோ யாராவது ஓடிவாங்க, தண்ணிக்குள்ள போனவர இன்னும் காணவில்லையே” என்று தலையில் அடித்துக்கொண்டாள்.
எனக்கு என்னசெய்வது என்று தெரியவில்லை. பக்கத்து நிலத்தை துத்து வீடுக்கட்டிக்கொண்டு இருந்த கூட்டம் ஓடிவந்து ஏரியில் குதித்து ஆளுக்கு ஒரு திசையில் தேடியது.
அவள் நிற்கமுடியாமல் வயிற்றை பிடித்துக்கொண்டு படியில் சரிந்து விழுந்தாள். நான் பதறிப்போயி அவளை தொடுவதா வேண்டாமா என்று தயங்கியபோது யாரோ ஒருத்தன் அவளை தூக்கிவந்து மரத்தடியில் போட்டேன்.
ஏரி நீர் குழம்பி அலைகளாகி கரைகளை அறைந்துக்கொண்டு இருந்தது. முழுகி எழுந்தவர் அனைவர் கண்களிலும் அடுத்தவன் கையில் கிடைத்திருப்பான் என்ற பரிதவிப்பு இருந்தது. இல்லை என்று அறிந்து மீண்டும் உக்கிரமாக விழுந்து தேடினார்கள்.
எனக்கு தெரியும். நான் அதை செய்யக்கூடாது.
ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகங்களின் ஆழத்தில் புரண்டு எழுவது போல் மூச்சடைக்க வைத்தது. பத்து பதினைந்து நிமிட அமளிதுமளிக்கு பின்பு ஒருவன் தோளில் சுமக்க அவன் வந்தான். வலது கையில் அல்லிக்கொடிகளை பற்றிக்கொண்டு இருந்தான். தூக்கிவந்தவன் அவன் முகத்தை திருப்பப் பார்த்தேன் இருசக்கரவாகனத்தில் பின்னால் வழுக்கிவிழுந்துவிடுவதுபோல் குடிபோதையில் இருந்தவன். என்கால்களுக்கு கீழே பூமி நழுவுவதுபோல் இருந்தது தலையை இரண்டுகையாலும் பிடித்துக்கொண்டு நின்ற இடத்தில் உட்கார்ந்துவிட்டேன்.
“இச்ச செத்துட்டாண்டா, குடிகார கம்மணாட்டி!” என்று தரையை உதைத்தான் தூக்கிவந்தவன். அவன் தலையில் இருந்து வழிந்த தண்ணீர் பரவி தெறிக்க அவன் கண்ணீரும் சிதறியது.
“ஐயோ, குடிச்சிருக்க… தண்ணிக்குள்ள போயி பூ பறிக்காத, அல்லி செடியில சிக்கிக்குவ, வேண்டாம் வேண்டாமுன்னு சொன்னேனே” என்று அவள் நெஞ்சில் அறைந்துக்கொண்டு சாலையில் விழுந்துப்புரண்டாள்.
அவன் பறித்து வந்து வைத்த அல்லிப்பூ சிரிப்பு இன்னும் உதிரவி்ல்லை. அவன் உயிர் உதிர்ந்துவிட்டது. இத்தனை அற்பமானதா உயிர்? இதனை வைத்துக்கொண்டுதான் மனிதன் இத்தனை ஆட்டம்போடுகின்றானா? மனிதனாக இருக்கும் நான் என்னையே ஒரு முறைப்பார்த்துக்கொண்டேன்.
அதற்குள் ஊருக்குள் செய்தி கசிந்து ஊரே ஓடிவந்தது.
“பாண்டிச்சேரி அரவிந்தர் கண் ஆஸ்பத்திரிக்கு கண் ஆப்பரேஷன் செய்ய போன அவுங்க அம்மாவை அழைத்துவர ஒருத்தன அனுப்புங்கட” என்றான் கட்சிக்கரை துண்டுபோட்டிருந்த ஒருவன்.
“அந்த அம்மாவிற்கு கண்ணாப்பிரேஷன் நடந்திருக்கக்கூடாது“ என்று மனதில் வேண்டிக்கொண்டே என் கண்ணாடியை கழட்டினேன். என் விழிகளை கண்ணீர் மூடிக்கொண்டது. நான் அழக்கூடாது. ஆனால் நான் இப்போது மனித உருவில் அல்லவா இருக்கிறேன்.
– மே-04-2014