அவன் ஈரத்தரையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தது தூரத்திலிருந்தே தெரிந்தது. புங்க மரத்தடி காலை நிழல் இதமானதாக இருந்தது. என்னைப் பார்த்ததும் அவசரமாக எழுந்து வந்தான். அவன் கையில் மூங்கில் குச்சி ஒன்று இருந்தது. ஈரத் தரையைப் பார்த்தேன். செவ்வக வடிவில் கோடிட்டு இருந்தான். ஆள் தாட்டியாகவும், அதற்கேற்ற உயரத்துடனும், மாநிறமாகவும் இருந்தான். இந்தப் பக்கத்து முகஜாடையோ உடல்வாகோ இல்லை. அவனை உள்வாங்கும் முன்பே, ”வணக்கம் சார்” எனக் கை கூப்பினான்.
நான் பதிலுக்குக் கையை எடுக்காமலேயே, ”யாரைப் பாக்கணும்?” என்றேன்.
”உன்னைத்தான்… நான் மேக்க சின்ன சேலத்திலருந்து வர்றேன். கிணறு வெட்ற செட்டியாரு. நீ ஒரு புது கெணறு வெட்டப் போறேன்னு கேள்விப்பட்டு வந்தேன்” என்று என் முகத்தைப் பார்க்காமல், புங்க மரத்தடியில் மூங்கிலால் ஈரத் தரையில் வரையப்பட்ட செவ்வகத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.
”நான் புது கெணறு வெட்டப் போறேன்னு உனக்கு யாரு சொன்னது?”
”காத்து சார்… காத்துல சேதி வந்துச்சி!”
லேசாகச் சிரித்துக்கொண்டேன். அவனை நெருங்கவும் முடியாமல், விலக்கவும் முடியாததொரு மனநிலையில், ”உங்க ஆளுங்க பாதிலயே ஏமாத்திட்டு ஓடிடுவீங்களேப்பா!” என்றேன் விரக்தி மிஞ்சும் ஒரு குரலில்.
வார்த்தையால் அடிபட்டது மாதிரி திரேகம் பதைத்து, ”அதெல்லாம் ஒரு காலம் சார், இப்ப இல்ல. கவுரதயாப் பொழைக்க ஆரம்பிச்சி ரொம்ப நாளாச்சி. இங்க பச்சையப்பக் கவுண்டரு கெணறு, நாராயண ஒடையார் கெணறு, மாத்தூர் தலைவரு கெணறு எல்லாமே நான் வெட்னதுதான்” என்று தன் விஸ்தீரணத்தை அகலமாக்கினான்.
அவனோடு நெருங்க ஆரம்பித்தேன். அவன் உடல்வாகு இரண்டாம்பட்சமாகி, பேச்சில் உரமேற்றிக்கொண்டு பேச ஆரம்பித்தான். அது ஒரு சுழல் மாதிரி சுற்றிச் சுற்றி வந்து என்னைப் புதுக் கிணற்றுக்குள் இழுத்தது. சுதாரிக்க முடியவில்லை. அதற்கான இடைவெளியை அவன் தரவேயில்லை. ‘புதுக் கிணறு வெட்டப்போகும் இடத்தை தான் அதிகாலையிலேயே போய்ப் பார்த்ததாகவும், வேப்பங்குச்சியைச் சுழலவிட்டு நீர்மட்டம் சோதித்ததாகவும், 30 அடிக்கும் கீழே ஆறு ஓடுவதாகவும், இந்தக் கிணறு இனிவரும் என் சந்ததியைக் காப்பாற்றும்’ எனவும் அவன் என்னை அந்தச் சுழலிலேயே அமிழ்த்தினான்.
”எப்படி ரேட்டு?” என, நான் அவன் எதிர்பார்த்தது போலவே அவன் விரித்திருந்த வலையில் சுலபமாகச் சிக்கினேன்.
”தோட்டாவுக்கு எரநூத்து நாப்பது” என ஆர்வப்பட்டான்.
”இல்லையேப்பா, மாத்தூர் பிரசிடென்ட்ட விசாரிச்சேன்… எரநூத்து இருபதுதான?” என, என் சுதாரிப்பை அவன் முன்னால் வைத்தேன்.
”பத்து ரூபா கூட்டிக்கொடு சார்” என எனக்கு மிக அருகில் நெருங்கி, என் கண்களை ஏறிட்டான். நான் என் சட்டைப் பாக்கெட்டில் கை நுழைத்து நூறு ரூபாய் நோட்டு ஒன்றையும், ஒரு ரூபாய் காசையும் எடுத்து அவன் கைக்கு மாற்றினேன். அவன் கை வலுவேறிக் காய்த்திருந்தது.
அவன் முகம் பிரகாசமடைந்தது. அதில் சற்று முன் வரை படிந்திருந்த பதைப்பை அழுத்தித் துடைக்க, அந்த முழு நூறு ரூபாய் நோட்டே போதுமானதாக இருந்தது. அவன் அடைந்த வெற்றியின் மீது நின்று பேசினான். குரல் முன்னைக்கும் இப்போது உறுதிப்பட்டு இருந்தது.
”ஒரு லட்ச ரூபா அட்வான்சாக் குடு சார். நீ நிலத்துப் பக்கமே வர வேணாம். பத்து நாள்ல எட்டு கெஜம் எறக்கிடுவோம்” எனத் தொடர்ந்தான்.
”ஒரு லட்சமா?!” என நான் அதிர்ந்தேன். ஒண்ணு எண்பதாகி, ஐம்பதாகி, முப்பதில் முடிந்தது.
”உங்க ஆளுங்க?” என்ற என் கேள்வி முடியும்முன்பே அவன் தெற்கே கைகாட்டினான். மூட்டை முடிச்சுகளுடன் ஆறேழு பேர் ஆண்களும் பெண்களுமாக வந்துகொண்டிருந்தார்கள். இந்த ஒப்பந்தம் எளிதில் முடிந்துவிடும் என்ற அவன் பேச்சுத் திறமையில் அவனுக்கிருந்த நம்பிக்கை, என்னை மிரளவைத்தது.
நான் அங்கிங்கு புரட்டிய 30,000-தோடு அன்று மாலை அதே புங்க மரத்தடிக்குப் போனேன். பழைய கிணற்றுத்திட்டில் அவர்கள் கும்பலாக உட்கார்ந்து இருந்தார்கள். இப்போது ஆட்களின் எண்ணிக்கை மும்மடங்காக இருப்பதைக் கவனித்தேன். என்னைக் கண்டதும் அவன் மட்டும் எழுந்து வந்தான். மற்றவர்களின் கண்கள் மட்டும் என்னில் நிலைகுத்தி நின்றன. எங்களின் உரையாடலையும், கைமாறப் போகும் பணத்தையும் கேட்கும் பார்க்கும் ஆவல் அவர்களின் எல்லோர் முகத்திலும் இருந்தது.
நான் எதுவும் பேசாமல் 500 ரூபாய் நோட்டுகளாக எண்ணி 30,000-த்தை அவனிடம் தந்தேன். எண்ணிக்கை முடியும் முன்பே அதைப் பிடுங்கிவிடும் அவசரம் அவன் கண்களில் இருந்தது. கையின் பரபரப்பை அவன் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்தியது தெரிந்தது. வாங்கிய பணத்தை அவன் திரும்ப எண்ணவில்லை. என்னிடம் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தவனை, சொல்லால் நிறுத்தினேன்.
”நீ பாட்னு போற, எப்ப வேலைய ஆரம்பிப்பே?”
”நாளைக் காலைல வந்து பாரு சார்” என்று கூறிவிட்டு, அவன் நடையின் வேகத்தை அநியாயத்துக்குக் கூட்டினான். நான் அந்தக் குழுவைச் சமீபித்தேன். ஆண்கள், பெண்கள், இரண்டு மூன்று சிறுவர்கள் உள்பட 17 பேர் இருந்தார்கள். நடுத்தர வயதுப் பெண் ஒருத்தியும், இளம்பெண் ஒருத்தியும் தனியே தெரிந்தார்கள். அவன் மனைவியும் மகளும்போல என மனக்கணக்குப் போட்டேன்.
”உங்க வீட்டுக்காரு பேரு என்னம்மா?” என்று பேச்சுக் கொடுத்தேன்.
”சொல்லண்டி…” என்று அந்தப் பெண் இளம்பெண்ணைக் கையால் நிமிட்டினாள்.
”சக்கரபாணி சார்” – அந்தப் பெண் என்னைப் பார்க்காமல் தரையைப் பார்த்தபடியே சொன்னாள். எதிரில் தென்பட்ட ஓர் ஓணானைப் பிடிக்க அந்தச் சிறுவர்களில் ஒருவன் ஓடியதை இன்னொருவன் தடுத்தான். அவனால் முடியவில்லை. ஓரிரு நிமிடங்களில் அந்த ஓணான் அவர்கள் இருவர் கைகளிலும் மாறி மாறி விளையாட்டுப் பொருளானதைக் கவனித்தேன்.
அரை மணி நேரத்துக்கும் உட்பட்ட இந்த நேரத்தில் சக்கரபாணி இரு ஆடுகளைத் தன் தோளில் போட்டுக்கொண்டு, அதன் கால்களைக் கைகளால் அழுத்திப் பிடித்துக்கொண்டு மேற்கிலிருந்து நெல்லறுத்த கரம்பு வழியே வந்துகொண்டிருந்தான். நான் கண்கொட்டாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்கள் எல்லோரின் பார்வையும் அவன் தோள் மீது கிடந்த அந்த இரண்டு ஆடுகளை எடைப் போட்டுக்கொண்டிருந்தன.
”என்ன சக்கரபாணி… காசை வாங்கனதும் ஆட்டை வாங்கிட்ட!” என்ற என் கேள்வியின் இடையே அவன் சிரிப்பை நிரப்பி, ”கறி தின்னாம புது வேலைய எப்படி சார் ஆரம்பிக்கிறது?” என்ற தொடர்ச்சியில் ”இன்னக்கி ராத்திரி வீட்டுக்குப் பங்குக் கறி வந்துரும் சார்” என்று என் பலவீனத்தைத் தொட்டான். ‘பங்குக் கறிக்கு முன் இந்த 30,000 ஒன்றுமே இல்லை’ என்று உள் மனம் சொன்னது.
அன்று பின்னிரவில் வீட்டில் சுடுசோறும் வெள்ளாட்டுக் கறிக்குழம்பும், தூங்கிக்கொண்டிருந்த எங்களை எழுப்பிப் பரிமாறப்பட்டது. ஒரு முழு ஆட்டின் எல்லாப் பாகங்களும் கலந்த கலவை அது. அதன் ருசி எங்கள் எல்லோரையும் கிறங்கடித்தது. பேச்சற்று அந்தச் சோற்றை பத்திக்கப் பத்திக்க சாப்பிட்டு முடித்தோம். பல பின்னிரவுகளில் கிடைத்த திருட்டுக் கறியின் ருசி எனக்கு ஞாபகம் வந்தது.
சாப்பிட்டு முடித்தவுடன் எல்லோரும் தூங்க ஆரம்பித்தும் நான் அன்றைய விடியலுக்காகக் காத்திருந்தேன். புதுக் கிணறு, என் தூக்கத்தை அதனுள் அமிழ்த்தி இருந்தது. விடிந்தது என்பதை உணர்ந்த நிமிடம், நான் என் நிலத்தை நோக்கிப் பறந்தேன்.
ஓர் இயந்திரத்தின் வேகத்தைத் துச்சமெனப் பின்னுக்குத் தள்ளும் வெறியுடன் அவர்கள் இயங்கிக்கொண்டிருந்தார்கள். கணக்குப் போட்டுப் பார்த்தால், அதிகாலை மூணு மணிக்கு முன் வேலையைத் தொடங்கியிருக்க வேண்டும். நேற்று புங்க மரத்தடி ஈரத் தரையில் அவன் போட்டிருந்த மூங்கில் கோட்டின் வரைபடத்தின் அகன்ற வடிவம்தான் அந்தக் கிணற்றின் ஆரம்பம் என்று எனக்குக் காட்சிப்படுத்தப்பட்டது. நான் பரவசமானேன். அவர்கள் யாரும் என் இருப்பைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. மண் அள்ளும் சத்தத்தை மட்டும் அனுமதித்து, அவர்கள் அந்த நிலப்பரப்பில் இயங்கிக் கொண்டிருந்தனர். மனித உழைப்பின் மகோன்னதத்தில் நான் மீண்டும் பிரமித்தேன்.
என் அன்றாடங்கள் முற்றிலும் சிதைந்திருந்தன. நினைவில் அந்தக் கிணற்றின் ஆழம் மட்டுமே தங்கியிருந்தது. அலுவலகக் கோப்புகளில் முன்னிலும் அலட்சியமாகக் கையெழுத்திட்டேன். நாட்களின் எந்த இடைவெளிகளிலும் வாய்ப்புகளிலும் நிலத்தில் இருந்தேன். நேரம், காலம், அகாலம் என்றெல்லாம் அதை வகுக்கத் தெரியவில்லை. கிணற்றின் ஆழமும், வெளியில் குவிந்த மொரம்புக் கல்மேடும் என்னை இன்னும் இன்னும் என உந்தித் தள்ளின. இந்த இருபது நாட்களில் எட்டு கெஜத்தை எட்டியிருந்தார்கள். இடையில் இன்னும் ஒரு லட்சம் அவன் கைகளுக்கு மாற்றப்பட்டதில், மௌனப்பட்டு இருந்தான். கடும் உழைப்பு, பேச்சை உறிஞ்சிவிட்டிருந்தது.
சலிப்பு மிகுந்த அந்த சனிக்கிழமை மாலை, அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்த சாயங்காலத்தில், சக்கரபாணி, எதிர்வீட்டு வாசல் திண்ணையில் உட்கார்ந்திருந்தான். ஏதோ ஒரு கருமை அவனைச் சுற்றிலும் சூழ்ந்திருந்ததுபோல் ஒரு தோற்றம். மனம் எதை எதையோ கணக்கிட்டது. என் எண்ணத்தைச் சிதைப்பது மாதிரியான உற்சாகத்தில் அவன்,
”வீட்டம்மாவைப் பாக்கணும் சார்” என்றான்.
”ஏன்?”
”ஒண்ணுமில்லை சார். வேலை ஆரம்பிச்ச நாள்லயிருந்து அந்த அம்மா நெலத்துக்கு வரல. புதுக்கெணத்தையும் பாக்கல. நாளைக்கு ஞாயித்துக்கெழமைதானே, கண்டிப்பா அந்தம்மாவைக் கூட்டியாரணும் சார்” அவன் பேச்சில் எதையோ ஒளித்துவைத்திருந்தது எனக்குத் தெரிந்தது.
அவள் கையில் காபி டம்ளரோடு அவன் முன்னால் வர, அவன் இரு கைகளையும் குவித்து வணங்கினான். இப்போது அவன் என்னிடம் சொன்னதையே அவளிடம் நேரடியாகச் சொன்னான். அவள் முகம் பிரகாசமானதையும், நாளை காலை அவளின் வருகை உறுதியானதையும் அவர்கள் இருவரும் எனக்குச் சொல்லாமல் சொன்னார்கள்.
அடுத்த நாள் அதிகாலையிலேயே நானும் அவளும் நிலத்துக்குப் போனோம். எதிர்பார்த்ததுபோலவே இன்னும் விரைவாக வேலையை ஆரம்பித்திருந்தார்கள். கருக்கல் ஆங்காங்கே திட்டுத்திட்டாக இருந்தது. நான்கு ஆண்களைத் தவிர மற்ற அனைவரும் மேல்திட்டில் நின்று, உள்மண்ணை வாங்கிக் கொட்டிக்கொண்டு இருந்தார்கள். குவிந்திருந்த மொரம்பு மேடு பிரமிப்பூட்டியது.
ஜோதி, கரையில் நின்று ஒரு கையால் என்னை உறுதியாகப் பிடித்துக்கொண்டு கிணற்றை எட்டிப் பார்த்தாள். துளைக்கப்பட்டிருந்த ஆழம் அவளை ஆச்சர்யப்படுத்தியது. புது மனித வாசம் அவர்களை அடையக்கூட அவகாசமின்றி உள்ளேயிருந்து ஆரவாரமாகக் கூச்சலிட்டார்கள். தன் உரத்த குரலில் சக்கரபாணி, ‘வா தாயி’ என்று கத்தி, மிச்சமிருந்த அந்தக் கருக்கலை தன் குரலால் துடைத்தான். மண் கொட்டி காலியாக உள் திரும்பின கிரேன் பெட்டியில் எங்கள் இருவரையும் ஏறி நிற்கச் சொல்லி, அவர்கள் எல்லோருமாகக் குதூகலித்தார்கள்.
எவ்வளவு சொல்லியும் ஜோதி அதற்குச் சம்மதிக்கவில்லை. அவள் முகத்தில் பயம் அப்பியிருந்தது. நான் இரும்பு வடத்தை உறுதியாகப் பிடித்துக்கொண்டு அந்தப் பெட்டியின் மீது ஏறி நின்றேன். கண் மூடித் திறக்கும் இடைவெளியில் கிணற்றுக்குள் இருந்தேன். பழக்கப்படாத இருட்டு என்னை பயமுறுத்தியது. உள்ளே நின்ற ஆட்களின் உருவம் கண்ணுக்குப் பழகவில்லை. கொஞ்ச நேரம் கண் மூடி, இருட்டுக்குப் பழகினேன். இப்போது மேல் வெளிச்சம் உள்ளே கசிந்தது மாதிரி வெளிச்சம் பரவியது. அவர்கள் வேலையை நிறுத்திவிட்டு, என்னை நெருங்கினார்கள்.
ஏற்கெனவே அறிந்துவைத்திருந்தது மாதிரி, சக்கரபாணி ஒருவனிடமிருந்து கடப்பாரையை வாங்கி சனி மூலைப் பக்கம் ஒரு வெள்ளைக்கல்லை நெம்பினான். கல்லின் அசைவுக்கு அதனருகே உட்கார்ந்து கையால் பெயர்த்தெடுத்தான். சொல்லிவைத்தது மாதிரி நீர் சலசலவெனத் தரை இறங்கியது. அது என்னுடன் இறங்குவதுபோல மனம் பரவசப்பட்டது.
சக்கரபாணி, வெற்றிக் களிப்புடன் என் பின்னந்தலையில் கைகொடுத்து அந்த ஊற்றுக்கண்ணில் அமிழ்த்தினான். அதுவரை நான் அனுபவித்திராத சிலிர்ப்புடன் நீர், என் முகத்தை நிறைத்தது. இதுவரையில் என் உடம்பில் ஒட்டியிருந்த அழுக்கை அது பரிசுத்தமாகக் கழுவித் துடைத்துவிட்டது மாதிரி உணர்ந்தேன். ரத்தப் பிசுபிசுப்பில் குழந்தையைக் கழுவிவிடும் தாதிகள் அந்தக் கிணறு முழுக்க நிறைந்திருந்தது மாதிரி உணர்ந்தேன். முகத்தில் அப்பியிருந்த நீரோடும் சேறோடும் அண்ணாந்து ஜோதியைப் பார்த்தேன். எதுவும் தெரியவில்லை. கண்களிலும் நீர் முட்டி நின்றது. அவர்கள் எல்லோருமே மிகுந்த உற்சாகத்தில் இருந்தார்கள். பெரும் கூச்சலிட்டு மேலிருந்தவர்களையும் தங்களுக்குள் அழைத்தார்கள்.
”தட்சணை போடு தாயி!” எனப் பெருங்குரலெடுத்து சக்கரபாணி மேல் நோக்கிக் கத்தினான். ‘நூறு ரூபாயைக் கல்லுல சுத்தி உள்ள போடு’ என என் மனம் வார்த்தையை உந்தித் தள்ளும் முன் உள்ளே ஏதோ சில பொருட்கள் வந்து விழுந்தன.
நான் நிதானிப்பதற்குள் சக்கரபாணி நீரில் உட்கார்ந்து இரு கைகளையும் அகல விரித்துத் துழாவினான். சில நிமிடங்களில் அவன் இரு கைகளிலும் இரு வளையல்கள். அது ஜோதியின் திருமணத்தின்போது அவள் அம்மாவின் கையிலிருந்து அவள் கைகளுக்கு மாற்றப்பட்ட மூணு பவுன் எடையுள்ள வளையல்கள்.
நான் அதிர்ந்தேன். அந்த அதிர்வு, அவர்கள் எல்லோர் முகத்திலும் இருந்தது. அடுத்த நொடியில், யாரிடமும் எதுவும் பேசாமல் கிரேன் பெட்டியில் ஏறி நின்று மேலேறினேன். ஜோதி, ஒரு குழந்தையின் குதூகலத்தோடும் பரவசத்தோடும் அந்தப் பெண்களோடு கலந்திருந்தாள். எனக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. என் வண்டியை உயிர்ப்பித்து நீண்ட நேரக் காத்திருத்தலுக்குப் பிறகே பிரிய மனமின்றி அவள் என் பின்னால் ஏறி அமர்ந்து, என் தோளை அழுத்திப் பிடித்தாள். அதில் இழப்பின் வலியின்றி கூடுதல் கனமே ஏறியிருந்தது. வீடு வரும் வரை இருவருமே எந்தவொரு வார்த்தையாலும் அந்த மனநிலையைச் சிதையவிடவில்லை.
அடுத்த நாள் மாலை தாமதமாகத்தான் நிலத்துக்குப் போக முடிந்தது. அப்போதும் அவர்கள் வேலையில் மும்முரமாக இருந்தார்கள். சக்கரபாணியின் மகள் ஒட்டந்தட்டில் மண் அள்ளிக் கொட்டிக்கொண்டு இருந்ததையும், அவள் கைகளில் ஜோதியின் இரு வளையல்கள் பொருந்தாமல் கிடந்ததையும் கவனித்தேன்.
என் வருகையை உணர்ந்ததும் அவன் கிணற்றிலிருந்து உடனே மேலேறி வந்தான். மாமரத்தடியில் உட்கார்ந்து இருவரும் கணக்குப் பார்த்தோம். அவனுக்குப் பாக்கிக் கொடுக்க வேண்டிய 28,000-த்துடன் மேற்கொண்டு 50,000 முன்பணமாகத் தரவும் வேண்டினான். இந்தப் பணத்தில் தன் மகள் கல்யாணம் கூடிவிடுமெனக் கண்கலங்கினான். என்னால் மறுக்க முடியவில்லை. பணம் கைமாறியதும் இன்னும் ஏதோ குறைவதுபோல என்னை ஏறெடுத்தான். நான் அதிர்ந்தேன்.
”இன்னும் என்னப்பா வேணும்?”
”அந்த மவராசி கையில கிடந்த வளையலக் கழட்டிப் போட்ருச்சே சார்… புது ஊத்து கெடச்சிருக்கு கெடா வெட்ட வேணாமா?”
”மறுபடியும் கெடாவா?”
”முந்தி வெட்டுனது எங்க செலவு. இப்ப வெட்டப்போறது உங்க செலவு!”
மீண்டும் ஒரு 3,000 அவனிடம் தந்தேன். வேலையில் இருப்பினும் பல கண்களும் இதைக் கவனித்தன.
அன்றிரவு நடந்த அவர்களின் இரவுச் சாப்பாட்டில் நானும் உடனிருந்தேன். சுடுகளி, கறிக்குழம்பு மணம் என்னைத் தடுமாறவைத்தது. வட்டாவில் இருந்த நீரில் கை நனைத்து சக்கரபாணி மனைவி, களி உருண்டையை உருட்டி தட்டின் நடுவில் வைத்து அது மறையும்படி கறிக் குழம்பு ஊற்றி என்னிடம் நீட்டினாள். காரம், மூளை வரை சென்று உறைத்தபோதும் அதன் ருசியில் எதுவும் தெரியவில்லை. இன்னோர் உருண்டையில் பாதியைக் கேட்டேன்.
என் இருப்பின் பொருட்டு சண்டைச்சச்சரவுகள் குறைந்திருந்ததுபோலத் தோன்றினாலும், அவர்கள் மொழியில் வார்த்தைகள் தடித்தும் மெலிந்தும் கொட்டிக்கொண்டுதான் இருந்தன. ‘சாப்பிட்டியா, சீக்கிரம் கௌம்பு’ என்பதுபோல எல்லோரும் என்னை அனுப்புவதில் குறியாக இருந்ததுபோல உணர்ந்து அங்கிருந்து உடன் அகன்றேன்.
எல்லாம் முடிந்த அன்றைய பின்னிரவிலும் அவர்கள் விழித்திருந்து யாருடைய வருகைக்கோ காத்திருந்தார்கள். தூரத்தில் தெரிந்த வண்டியின் வெளிச்சம் அவர்களைத் துரிதப்படுத்தியது. இரவு ஒரு மணிக்கு ஒரு டாட்டா ஏஸ் மினி வண்டி அந்த நிலத்தில் வந்து நின்றவுடன், அவர்கள் எல்லோரும் அவசர அவசரமாகத் தங்கள் பொருட்களை அதில் ஏற்றினார்கள். கிணற்றைச் சுற்றிலும் சுத்தமாகத் துடைத்துவைத்தது மாதிரி சில நிமிடங்களில் எல்லாப் பொருட்களும் வண்டிக்குள் நிறைந்தன.
வண்டியின் பின்பக்கமாக ஒவ்வொருவராக ஏறினார்கள். சிறுவர்கள் ஏறுவதற்கு, சக்கரபாணியின் கைகள் ஏணியானது. அவர்கள் எல்லோரிடமும் புறப்படும் அவசரம் தெரிந்தது. வண்டி புறப்பட யத்தனிக்கையில்தான் சக்கரபாணியின் மனைவி ‘அஞ்சலை…’ என ரகசியமான, ஆனால் பெருங்குரலில் அழைத்தாள். எல்லோரும் ஒரு நிமிடம் திகைத்தார்கள். அவள் நீண்ட நேரம் இல்லாதது, இந்தக் கிளம்பும் அவசரத்தில் யாருக்கும் புலப்படாதது புரிந்தது.
ஒவ்வொருவராக வண்டியிலிருந்து மீண்டும் கீழே குதித்தார்கள். ஆளாளுக்கு ஒரு மூலையாகப் பிரிந்து அஞ்சலையைத் தேடப் போனார்கள். சக்கரபாணி பெருங்கோபத்தில் தன் இடது காலால் எட்டி மனைவியை உதைத்தான். அந்த வெற்று நிலத்தில் அவள் மல்லாந்து விழுந்தாள். இருவரிடமிருந்தும் சரமாரியாக வண்டை வண்டையான வார்த்தைகள் வந்து விழுந்தன.
இரண்டு மணி நேர அலசலுக்குப் பின்பும் அவர்களால் அஞ்சலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏறிய போதையும், தின்னக் களியும் கறியும் எங்கே போனது எனத் தெரியாத அளவுக்கு அவர்கள் களைப்படைந்து இருந்தார்கள். வெறுங்கையோடு மாமரத்தடி இருளில் நின்றார்கள்.
சக்கரபாணி, பெரும் கலக்கத்தில் இருந்தான். துக்கம் அவன் உடல் முழுக்கப் பரவியிருந்தது. ஆனாலும், அதைத் தாங்கிக்கொண்டு மௌனமாக இருந்தான். அந்த மௌனத்தை எவராலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ‘அவன் ஏதாவது பேசிவிட்டால் தேவலை’ எனத் தோன்றியது.
திடீரென அவனுக்கு ஏதோ ரகசியம் தெரிந்துவிட்டதுபோல கிணற்றுக்குள் தொங்கிய வடக்கயிற்றைப் பிடித்துக் கொண்டு சரசரவென உள்ளே இறங்கினான். எல்லோரும் பதட்டப்பட்டு கிணற்றுக்கரையில் நின்று எட்டிப் பார்த்தார்கள். அவன் முழங்கால் அளவுள்ள நீரில் குனிந்து வளையலைத் தேட அலசியதுபோல அலசிக்கொண்டே வந்தான். தெற்கே இயற்கையாக உருவாகியிருந்த ஒரு பொந்தில் ஓர் உருவம் குந்தியிருந்தது, இறங்கும் போதையையும் தாண்டி அவனுக்குத் தெரிந்தது. கீழே குனிந்து கைக்கு அகப்பட்ட அவள் பாவாடையை வலுக்கொண்டு இழுத்து தண்ணீரில் தள்ளினான். உள்ளே விழுந்த சரமாரியான அடியின் சத்தம் வெளியில் நின்றவர்களை அச்சப்படுத்தியது.
‘வயசுப் பொண்ணை அடிக்காதடா, மேல கூட்டிட்டு வா’ என்ற குரல்களுக்கு அடி நின்றது. நீரில் கிடந்த கோழிக்குஞ்சு மாதிரி அஞ்சலை அந்த மாமர இருட்டில் நின்றாள். துணி முழுக்க நனைந்து, நீர் சொட்டிக்கொண்டிருந்தது.
”சொல்லுடி ஊமக் கோட்டான்… எதுக்குப் போயி கெணத்துக்குள்ள உக்காந்த?”
”எவன் தாலியை அறுக்கலாமுன்னு இப்படி செஞ்ச?”
எதற்கும் அவள் ஒரு வார்த்தையும் பேசாமல் தரையைப் பார்த்து நின்றுகொண்டிருந்தாள்.
”கேக்கறாங்கில்ல… சொல்லண்டி தட்டுவாணி!” அவள் அம்மா வாய் திறந்தாள். அவளிடமிருந்தும் சாராய நெடியடித்தது.
”நீங்க எல்லாரும் போங்க… நான் வரலை. என் கல்யாணத்துக்கு மூணு பவுனு வளையலத் தூக்கிப் போட்ட அந்த மவராசி வீட்டுக் கெணத்தை நான் ஒண்டியா நின்னு வெட்டிக் குடுத்துட்டு வர்றேன்!”
அடுத்த நாள் காலை முன்கூட்டியே நான் போக நேர்ந்தபோது பின்னிரவில் நடந்த குருக்ஷேத்ரத்தை அந்த மாமரம் எனக்குச் சொன்னது. அவர்கள் வழக்கம்போல வேலையில் மும்முரமாக இருந்தார்கள். முன்னிலும் வேகம் கூடியிருந்தது. என்னைக் கண்டவுடன் சக்கரபாணி அவசர அவசரமாகக் கிணற்றுக்குள் இறங்கி, என் கண்படா இருட்டில் மறைந்து கடப்பாரையைப் போட ஆரம்பித்தான்!
– செப்டம்பர் 2013