நீதிமன்றம் மாறி விட்டது!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 4, 2024
பார்வையிட்டோர்: 2,818 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்தான். ஜோடிகளைச் சேர்ப்பது. இறைவனது வேலை. அதே நேரத்தில் பொருத்தமில்லாமல் சேர்ப்பது அவனது லீலை. 

நூற்றுக்கு நாற்பது குடும்பங்கள் உடற்பொருத்தமோ, மனப்பொருத்தமோ இல்லாமலேயே ஊருக்காகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. 

நோயாளிக் கணவனைத் தலை மீது தூக்கிச் சென்ற பத்தினி; தாசி வீடு சென்ற கணவனுக்காகத் தவம் கிடந்த குலமகள்; இவர்களெல்லாம் புராணத்திலும், இலக்கியத்திலும் இந்தியப் பெண்மையைக் காட்டுகிறார்கள்.

ஆனால் நான்கு சுவர்களுக்கு நடுவே நடந்து பார்த்தால் பல வீடுகளில் நடைபெறும் ரணகளம், ஓலம், ஒப்பாரி. ‘எத்தனை மலர்ப் படுக்கைகள் இருந்தாலும் நீ முள்ளின் மீதுதான் படுத்தாக வேண்டும்’, என்று இறைவன் எழுதிவிட்டால், யார் அதை மாற்ற முடியும்? 

அனுராதா ஒரு கலெக்டரின் மகள்தான். அவளது அப்பா வேதநாயகம் வெள்ளைக்காரன் ஆட்சியில் இருந்த கலெக்டர்களில் ஒருவர். நாணயமானவர் என்று பெயர் பெற்றவர். 

தாயார் ஜானகி அம்மாளோ கோவிலைக் கண்டாலே குடும்பத்தை மறந்துவிடக் கூடியவர். 

சொத்து சுகம் தேவையான அளவிற்கு இருந்தது. பாரம்பரியம் பெரியதுதான். என்றாலும் என்ன? 

குணம் கெட்டவள் என்று தாயாராலேயே பட்டம் சூட்ட பெற்ற அனுராதா அல்லவா, அவர்களுக்குத் தலைச்சன் மகளாகப் பிறந்து விட்டாள்? 

அவளோடு கூடப் பிறந்தவர்கள் இரண்டு பெண்கள், விஜயா, சுதா. கடைக்குட்டிப் பையன் கங்காதரன். 

சாதாரணமாக மூத்த மகளுக்குத்தான் அடக்கமிருக்கும். மற்றவர்கள் துடிதுடிப்புள்ளவர்களாக இருப்பார்கள். வேதநாயகம் வீட்டில் நிலை வேறாக இருந்தது. அதுவும் இறைவன் கொடுத்த வரம்தான! 

எல்லோரையும் அனுராதா அதிகாரம் பண்ணுகிறாளே என்று வேதநாயகத்தைக் கேட்டால், “நான் கடுமையாக அதிகாரம் பண்ணிய காலத்தில் பிறந்தவள்,” என்று சொல்லுவார். 

தமிழ்க் குழந்தைகளில் ஆயிரத்தில் ஒருவரே கான்வெண்டுக்கு சென்ற காலத்தில், கான்வெண்டில் படித்தவள் அனுராதா. 

அவள் ஏ.பி. சி. டி. எழுதுவதைப் பக்கத்து வீட்டுக் குழந்தை களெல்லாம் வந்து வேடிக்கை பார்க்கும். 

அப்போது மதுரையில் இருந்தவை நான்கே கான்வெண்டுகள்தான். கலெக்டரின் மகள் என்பதால் போட்டி போட்டுக் கொண்டு அவை இடம் கொடுத்தன. 

1939’ல் பிறந்த அனுராதா முதலேயே கான்வெண்டில் சேர்க்கப் பட்டாள். சுதந்திரம் வந்த பிறகுதான் அவள் பி.ஏ. படித்துப் பாஸ் செய்தாள். 

தன்னைவிட உயர்ந்தவர்களாக யாரும் இருக்கக் கூடாது; தான் வைத்திருப்பதை விட நல்ல பொருளாக யாரும் வைத்திருக்கக் கூடாது என்பது அவளது லட்சியம். 

பெண் பி.ஏ. படித்திருக்கிறாள், முன்னாள் கலெக்டரின் மகள் என்பதாலே மாப்பிள்ளை ஜாதகங்கள் நிறைய வரத்தான் செய்தன. 

வேதநாயகம் ஒன்றும் சீர்திருத்தக்காரரல்ல. ஜாதி பார்த்துத் தான் அவரும் மாப்பிள்ளை எடுக்க விரும்பினார். அவருடைய ஜாதியிலேயே போடி நாயக்கனூரில் ஒரு ஏலக்காய் எஸ்டேட் முதலாளியின் மகனான பிரபு என்ற இளைஞன் இருந்தான். 

மதுரையில் அனுராதா பாத்தீமா கல்லூரியில் படித்தபோது, அவன் அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். இரண்டொரு தடவை பொதுவிழாவில் அனுராதா, பிரபுவைச் சந்தித்திருக்கிறாள். 

பையனைப் பற்றி அவளுக்கும் உயர்ந்த அபிப்பிராயமே இருந்ததால், திருமணத்திற்குச் சம்மதித்து விட்டாள். 

நல்ல வைதிகரான வேதநாயகம், நல்ல நாளில் திருமணத்தை முடித்துவிட்டார். 

ஆரம்ப காலங்களில் மிகவும் மகிழ்ச்சிகரமாகத்தான் இருந்தாள் அனுராதா. 

ஏப்ரல் வந்தால் கொடைக்கானல் போவார்கள்; ஜூலை மத்தியில் குற்றாலம் போவார்கள். இரண்டாண்டுகள் அவள் மிகவும் உற்சாகமாக இருந்தாள். 

திருமணமான கொஞ்ச நாளிலேயே விஷயங்களைப் பிரபு ஊகித்திருந்தான். 

ஒன்று, அனுராதாவுக்குக காதல் உணர்வு அதிகம் என்பது; இரண்டு, பொறாமை உணர்ச்சி மிகுதி என்பது. 

யார் எந்த நகை போட்டிருந்தாலும், அதே நகை தனக்கும் வேண்டும் என்று அவள் ஆசைப்படுவதையும் பிரபு நன்றாகக் கவனித்திருக்கிறான். 

 புது மோகம், புது வேகம்; அவளது செயற்கை உணர்வுகளைத் திருப்தி செய்தால்தான் தனது இயற்கை உணர்வுக்கு அவள் சுகமாக இருப்பாள் என்பதால், எல்லாவற்றையுமே அவன் வாங்கிக் கொடுத்தான். 

அழகான ஆண் குழந்தை ஒன்றை அனுராதா பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தையிடம் உயிரையே வைத்திருந்தான் பிரபு. 

பிடிப்பு அதிகமாகிவிட்ட காரணத்தால் அவளது கோபதாபங்களையெல்லாம் கூட அவன் சகித்துக் கொள்ள வேண்டியவனானான். அவள் போட்ட சண்டையிலும் சப்தத்திலும் சமையற்காரன் முன்னால் ஓடிவிட்டான். கார் டிரைவர் பின்னால் ஓடிவிட்டான்; சாப்பாடு கூடப் பிரபுவுக்குப் பிரசினையாகிவிட்டது. 

காலையில், ‘இட்லி இல்லையா’ என்று கேட்டால், ‘இன்றைக்கு உப்புமாதான்’, என்று பதில் சொல்லுவாள் அனுராதா. 

அவனுக்கென்ன யாருக்குமே பிடிக்காத விஷயங்களைச் சமைத்து வைத்துவிட்டு, உத்தரகாண்டத்துக்கு தேவி போல் ஊஞ்சலில் சாய்ந்து கொண்டு ரேடியோ கேட்பாள். 

சாதாரணமாகவே மருமகள் வந்த பிறகு மகன் இளைத்து விடடதாகக் கருதும் தாயார், அவன் உண்மையிலேயே இளைப்பதைக் கவனித்தாள். ஒவ்வொரு வேளையும் தான் சமைத்து டிபன் காரியரில் கொடுத்தனுப்பினாள். 

“உங்கள் அம்மா சமையலென்ன அப்படி…?” என்று பல நேரங்களில் காரியரைத் தூக்கி வீசுவாள் அனுராதா. 

சண்டை வரும்போது யாராவது ஒருவர் பேசாமல் இருந்தால் தான் குடும்பம் நிலைக்கும் என்று பேசாமல் இருப்பான் பிரபு. 

இவை எல்லாவற்றையுமே அவன் சகித்துக் கொண்டான்.

‘வாழ்க்கையில் ஏற்புடைய எந்த வரட்சியையும் விட குடும்பத்தில் ஏற்படும் நிம்மதியற்ற நிலைமை ஒரு மனிதனைச் சீக்கிரம் தற்கொலைக்குத் தூண்டுவது,’ என்று அவன் சண்டேகர் புத்தகத்தில் படித்திருக்கிறான். 

வயது வந்த பெரிய பெண்களைப் போல் கோபதாபங்கள் இருக்கத்தான் செய்யும், அனுசரித்துத்த போக வேண்டும் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொள்வான். 

அவளுக்கு எப்படி எப்போது கோபம் வரும், ஆசை வரும் என்பதெல்லாம் அவனுக்குப் பள்ளிப் பாடமாகவே பதிந்துவிட்டது. 

மாலையில் நன்றாகக் குளித்துக் கொண்டையிட்டு, புதுச்சேலை கட்டி இருக்கிறாள் என்றால், அன்றைக்கு அவளுக்கு ஏதோ காதல் கிளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம். அலங்கோலமாக இருக்கிறாள் என்றால் ஆத்திரமாக இருக்கிறாள் என்று அர்த்தம். குழந்தையைத் தூக்கி வந்து அவனிடம் கொஞ்சுகிறாள், இரவுக்கு அஸ்திவாரம் என்று பொருள். 

அவள் எதை எதை விரும்புகிறாளோ, அதை அதைச் செய்துக் கொண்டு, பொழுதைத் தள்ளிக் கொண்டிருந்தான் பிரபு. 


அந்த நேரத்தில்தான் அவள் மூலமாக விஜயாவின் திருமணம் முடிவாயிற்று.  

மாப்பிள்ளை ரவிகுமார், இந்தியாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய இளைஞர்களில் ஒருவன். முன் போலீஸ் அதிகாரி ஒருவரின் முறையான தேகப் பயிற்சியால் அழகான உடம்பு அவனுக்கு வாய்த்தது. அவன் சிரித்தால் ஆணுக்கு கூட ஆசை வரும். 

அவனுடைய அழகோடு ஒப்பிட்டால் விஜயா சுமாராகத்தான் இருப்பாள்.

வேனிற்காலத்துச் சந்திரனை முழுதாகக் கார்மேகம் மூடியது போல மாநிறமாக இருந்த விஜயாவுக்கு, செக்கச் செவேலென்று தக்காளிப் பழம் போலிருந்த ரவிகுமார் கிடைத்து விட்டான்.

திருமண வீட்டில் எல்லோரிடம் மாப்பிள்ளையின் அழகைப் புகழ்ந்தார்கள். அதையெல்லாம் கேட்கக் கேட்க ஏதோ காரணமில்லாமல் கணவன் மீது கோபப்படத் தொடங்கினாள் அனுராதா. 

கல்யாண வீட்டிலேயே பிள்ளையைக் கொண்டு போய் அவனிடம் தூக்கிப் போட்டாள். “இந்தச் சனியனை வைத்துக் கொள்ளுங்கள்; உயிரை வாங்குகிறது” என்றாள். 

“ஏம்மா இப்படிக் கோபித்துக் கொள்கிறாய். .?” என்று மெதுவாகத்தான் கேட்டான் பிரபு. 

“போதும் போதும், உங்கள் கொஞ்சல்,” என்று, பத்துப் பேருக்கு முன்னால் முகத்திலடித்தாற் போல் பதில் சொன்னாள். 

மாப்பிள்ளைக்குப் பரிசுகள், புகைப்படங்கள், பக்கத்து வீட்டுக் காரர்களின் வளவளப்பு-எல்லாமே அவளுக்கு எரிச்சலாக இருந்தது. 

அவர்கள் வழக்கப்படி தன குடும்பத்தினர் அனைவரையும் வேதநாயகம் தன் மருமகனுக்கு அறிமுகப்படுத்தினார். 

மூத்த மகளைக் கூப்பிட்டு, “இவள் என் முதல் மகள். அனுராதா. பிரபுவின் மனைவி,” என்றார்.

அப்போதுதான் நேருக்கு நேராகத் தங்கையின் கணவனைக கவனித்தாள் அனுராதா. 

சோழ பாண்டிய ராஜாக்களைப் போல் எடுப்பாக நின்ற அவனைப் பார்த்ததும், அவள் நெஞ்சம் இன்னும் கொதித்தது.

அன்று மாலை வரவேற்பின் போது தானும் அழகிதான் என்பதைக் காட்டவோ என்னவோ, கடல் நீலத்தில் சிவப்பு பார்டர் போட்ட ஜரிகைச் சேலை கட்டி மினுமினுவென்று மின்னினாள். 

அவள் புதுச் சேலைக் கட்டிப் பூவை வைத்துக் கொண்டால் விஷயம் என்ன என்பது பிரபுவுக்குத் தெரியுமே! 

“இன்று நாம் வேண்டுமானால் ஊருக்குப் போய் வரலாமா?” என்று மெதுவாகக் கேட்டான் அவன். 

“போதும் போதும் ஊரில் தங்கியதும், நான் தங்கியதும், நீங்கள் தாங்கியதும்,” என்று முகத்திலடித்தாள் அவள்.

அவள் நெஞ்சுக்குள்ளே தான் தோற்றுவிட்டது போலவும், தன் தங்கையே தன்னைத் தோற்கடித்தது போலவும் ஓர் உணர்வு தோன்றி கொண்டே இருந்தது. 

பெண் வீட்டுக்காரி, அதிலும் பெண்ணுக்கு அக்கா சீக்கிரம் விடை பெற்றுப் போக முடியுமா? 

பத்து நாள் இருக்கத்தான் வேண்டும் என்று அப்பா வேறு கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். 

மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருநாள் ஊருக்குப் போய்த் திரும்பி விட்டார்கள். 

அந்தப் பத்து நாட்களுக்குள் விஜயாவை அதிகாரம் பண்ணத் தொடங்கினாள் அனுராதா. இந்த வீட்டில் நான்தான் ராணி என்பதைக் காட்டிக் கொள்ள விரும்பினாள். 

கணவனுக்கு விஜயா சாப்பாடு போடப் போனால், “இலையை அப்படிப் போடாதே இப்படிப் போடு”, என்று மேஜை அருகில் வந்து நிற்கவாரம்பித்தாள். 

குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு அப்பாவி போல் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான் பிரபு.

வழக்கத்துக்கு விரோதமாகச் சேலையை ஒருபுறம் ஒதுக்கி விட்டுக் கொண்டும், எடுப்பான ‘ப்ரா’ அணிந்து கொண்டும் பரிமாறத் தொடங்கினாள் அனுராதா. 

ஒரு நாளைக்கு மூன்று சேலை மாற்ற ஆரம்பித்தாள். 

கள்ளம் கபடமற்ற விஜயா அக்காள் தன் கணவனை நன்றாகவே கவனிப்பதாகக் கருதினாள். “உன் அக்கா மிகவும் நல்லவர்கள்,” என்று, ரவிகுமார் வேறு சொல்லிவிட்டான். 

பரிமாறத் தொடங்கிய அனுராதா இரண்டொரு நாட்களில், கை கழுவத் தண்ணீர் ஊற்றும் வேலையையும் தானே செய்தாள். சமயங்களில், “கையெல்லாம் நல்ல கொழுப்பு. நன்றாகக் கழுவுங்கள்!” என்று தானே கையைப் பிடித்துக் கழுவிவிடவும் செய்தாள். ஒரு தடவை கையைக் கழுவும் போது “கை பூப்போலிருக்கிறது,” என்றாள். 

சாகஸக்காரி மனம் வைத்து விட்டால், பிரம்மதேவனே சிருஷ்டித் தொழிலை மறந்துவிடுவார். ரவிகுமார் எம்மாத்திரம்? 

விஜயாவின் அப்பாவித்தனத்தைவிட, அனுராதாவின் ஆதிக்கப் போக்கே அவனுக்கு ரசிக்கும்படியாக இருந்தது. 

ஒன்றும் தெரியாத விஜயா, எல்லாம் தெரிந்த அனுராதா! 

பத்து நாட்கள் தங்குவதாக இருந்த அவர்கள் பல நாட்கள் தங்க ஆரம்பித்தார்கள். 

அதிகாலையிலேயே குளித்து விட்டு, அன்றைய பொழுதிற்குத் தயாராவது அனுராதாவுக்குப் பழக்கமாகி விட்டது. அவள் நெஞ்சில் எழுந்த பொறாமை காதலாகித் காமமாகத் திரண்டது. 

இரவெல்லாம் அவனைப் பற்றியே கனவு கண்டாள்; கணவனையும் குழந்தையையும் மறந்தாள். 

ஒருநாள். அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, தங்கை இல்லாத நேரமாகப் பார்த்து அவனது அறைக்குள்ளேயே நுழைந்துவிட்டாள். 

பனியனோடு கட்டிலில் சாய்ந்து கிடந்த ரவிகுமார் இதை எதிர் பார்க்கவில்லை. 

சுற்றுமுற்றும் டார்த்தபடி அவனை ஆசை தீர முத்தமிட்டாள் அனுராதா. 

அது ஒரு வெறி பிடித்தவளின் செயலாகத்தான் இருந்தது. ஆனால் இவ்வளவு உற்சாகத்தை அவன் விஜயாவிடம் காணவில்லையே? அவனும் துணிந்தவனாகிவிட்டான். 

துணிச்சல் முட்டாள் தனமானதோ. நியாயமானதோ ஏதோ ஒரு முடிவைக் கொண்டு வந்து விடுகிறது. சட்டம், தர்மம், வரையறை எதையும் அவர்கள் மதிக்கவில்லை. அவர்களது நல்லகாலம் பகல் மூன்று மணி. எல்லோரும் வேறு வேறு பக்கம் தூங்கிக் கொண்டிருந்தார்கள். 

“உன்னைக் கண்டால், கண்ணகியே கூடக் கெட்டுத்தான் போவாள்,” என்ற வாக்கியத்தோடு, அக்கம் பக்கம் பார்த்தபடி ஆனந்த வயத்தில் வெளியேறினாள், அனுராதா. 

பிரபுவுக்கு, ஒருநாள் இரவு எல்லாம் புரிந்துவிட்டது. 

அவர்கள் பங்களா பெரிய பங்களா. இரவிலே கீழ்க்கட்டிலே படுத்திருந்தாள், அனுராதா. நள்ளிரவிலே குழந்தை அழுதது. 

”எங்கே அவள்? என்ன செய்கிறாள்?” என்றபடி விளக்கைப் போட்டான் பிரபு. 

அவளைக் காணவில்லை. 

அவனுக்குச் சந்தேகம் வந்து அங்கும் இங்கும் தேடினான். தோட்டத்துப் பக்கம் போனான். கதவு திறந்து கிடந்தது. பாத்ரூமிற்குள் ஏதோ சப்தம் கேட்பது போலிருந்தது. பளிச் சென்று உள்ளே நுழைந்தான். 

பத்திரிகை பாஷையில் சொன்னால், அலங்கோலமான நிலையில் அவர்கள் இருந்தார்கள். 

இனி பேசுவதற்கு என்ன இருக்கிறது? மனிதனின் கடைசி உணர்ச்சி பறிக்கப்பட்டுவிட்டது. 

அவன் வேறொன்றும் செய்யவில்லை. நேராக மாடிக்குச் சென்று, விஜயாவை எழுப்பி விஷயத்தைச் சொன்னான். முட்டி மோதிக் கொண்டு அழுதான். 

இவர்கள் இருவரும் கீழே இறங்கி வந்தபோது, அவர்களிருவரும் அங்கே நின்றார்கள். அவர்கள் பயந்ததாகவும் தெரியவில்லை. 

“விஜயா, நீ போ உள்ளே” என்று பிடித்துத் தள்ளினான் ரவிகுமார். 

“மானம் வெளியே போய் விட்டது; நான் உள்ளே போகிறேன்” என்று போனாள் விஜயா. 

“நான் உங்கள் மீது வழக்குத் தொடரவில்லை. ஆனால் உங்களோடு வாழப் போவதில்லை,” என்று கணவனிடம் சொல்லிவிட்டாள் அவள். 

விவாகரத்து வழக்கைத் தொடுத்த பிரபு, தன் எஸ்டேட்டை விற்றுவிட்டு பம்பாயிலே ஒரு வீடு வாங்குவதற்காகப் பம்பாய்க்குப் பறந்தான். 

என்றுமில்லாத துணிச்சலோடு அவனை வழியனுப்பியவள் விஜயா. 

விஜயா பிரபுவிடம் கொடுத்த பெட்டியில் தான் எழுதிய கடிதம் மட்டும் இருப்பதாகக் கருதினாளே தவிற ஒரு ரகசியமும் இருந்தது அவளுக்குத் தெரியாது. 

விமானம் பம்பாயை மிதித்த போது பயங்கர விபத்துக்குள்ளாயிற்று.

“ஆயிரம்தான் சொல்லுங்கள், ஆண்டவன் பல நேரங்களில் அயோக்கியர்களுக்குத்தான் உதவுகிறான்,” என்றபடி சடலங்களைப் பெறறுக் கொண்ட உறவினர்கள் வந்திருந்தார்கள். 

அடுத்த விமானத்திலேயே விஜயாவும் வந்திருந்தாள். பிரபுவின் மனைவி என்று கையெழுத்திட்டு அவனின் சடலத்தைப் பெற்றுக் கொண்டாள். 

இந்தச் செய்தியைப் பத்திரிகையில் பார்த்த ரவிகுமார் அனுராதாவிடம் ஆத்திரத்தோடு ஓடிவந்தான். “பார்த்தாயா உன் தங்கை கதையை?” என்று இரைந்தான். 

திறந்துவிட்ட காஸ் சிலிண்டரை மூடாமல் ஓடிவந்தாள். அனுராதா.  

தீ பரவுவது போல் தோன்றிற்று. அவள் மீதும் தீ பரவிற்று. 

சப்தம் போட்ட ரவிகுமார் வெளியே ஓடினான். அவளைக் காப்பாற்ற முடியவில்லை. 

இப்போது ஊரார், “கடவுள் இருக்கிறார்!” என்று பேசி கொண்டார்கள். 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *