கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 13, 2013
பார்வையிட்டோர்: 15,109 
 
 

கேஷ் கவுண்ட்டரில் பில்லை செலுத்திவிட்டு ஷாப்பிங் பேக் எடுக்கையில் கொஞ்சம் கனமாக தோன்றியது.. . பார்க்கிங்கில் இருந்த தன் ஸ்கூட்டியை நோக்கி வித்யா வந்த போது தன் எதிரே வந்த அவனை பார்த்து ‘திடுக்’ கிட்டு ஒரு கணம் நெஞ்சுக்கூடு படக்.. படக்கென்று அடித்துக்கொண்டது. “ கடவுளே அவன் என்னை பார்க்காமலே கடந்துவிட்டால் நன்றாக இருக்குமே.” வியர்த்து கொட்டியது.

அதற்குள் அருகில் வந்துவிட்ட அவன் வித்யாவை பார்த்ததும், ஒரு கணம் திகைத்து.. “ வித்யா என்ன ஒரு ஆச்சர்யம்…? தேன்ங்க் காட் உன்னை இத்தனை வருஷத்துக்கப்புறம் இங்க பார்ப்பேன்னு நினைச்சிக் கூட பார்க்கலை நீ இந்த ஊர்லயா இருக்கே… நான் ட்ரான்ஸ்பர்ல இங்க வந்து ஒரு மாசம்தான் ஆகியிருக்கும், எப்படி இருக்கே…?

மெல்ல கண் கலங்கியது,,, “ ம்.. நல்லாயிருக்கேன்.. நீ தினா…?

“எதோ இருக்கேன் …இதோ பக்கத்துலதான் நான் தங்கியிருக்கிற ரூம் இருக்கு ஒரு பத்து நிமிஷம் பேசலாமா…? “

வித்யா யோசித்ததும்… புரிந்து கொண்டவனாய்…” கீழே ஹவுஸ் ஓனர் பேமிலி இருக்கு தயங்காதே… நடு ரோட்டில் நின்று எங்கே பேசுவது…. வா..!”

எதுவும் பேசாமல் அவன் பின்னாலேயே சென்றாள். “ என்ன சாப்பிடறே… டீ.. காபி… ஓ..நீ அதெல்லாம் குடிக்க மாட்டே இல்லை… ஒன்லி… ப்ரெஷ் ஜுஸ்… ஒன் செகண்ட் .. ப்ரிட்ஜை திறக்க.. “

“ வேண்டாம் … தினா.. எனக்கு டீயே கொடு…”

எதுவும் சொல்லாமல் அடுப்பை பற்றவைத்து டீயை தயார் செய்து.. இரண்டு கப்களில் ஊற்றிக்கொண்டு வந்து எதிரில் உட்கார்ந்தான். இந்த எட்டு வருஷத்தில உனக்கு பிடிக்காததெல்லாம் பிடிக்க பழகி கொண்டாயா வித்தி….?.”

அவன் கேள்வியில் ஏதோ சுடுவது போல் உணர்ந்தாள். புருவத்தை கேள்விக்குறியாய் வளைத்து என்ன கேட்கிறாய் என்பது போல் பார்த்தாள்.

“….. இல்ல நாம ஹோட்டலுக்கு போறப்ப எல்லாம் டீ வேண்டாம் எனக்கு பிடிக்காது என்று மறுப்பாயே … அதைத்தான் கேட்டேன்… நீ வேறு அர்த்தம் எடுத்துக் கொள்ளாதே….”

என்ன இவன் திருமணத்திற்கு முன் என்னுடன் சுற்றினாயே என்று சொல்லி காட்டுகிறானா…? வெறுப்பாய் வந்தது “ என் ஹஸ்பண்ட்க்கு டீ ரொம்ப பிடிக்கும்….” ஒற்றை வரியில் முடித்தாள்.

“ ரைட்.. குட்.. உன்னை மாத்திகிட்டதுக்கு.. பார்க்க இன்னமும் நீ அப்படியே இருக்கே வித்தி..உன் வாழ்க்கையில சந்தோஷமா இருக்கியா…?

“ என்னை பத்தியே கேட்கிறயே தினா … நீ எப்படி இருக்கே…? உனக்கு எத்தனை குழந்தைங்க … உங்க பேமிலியை கூட்டிகிட்டு வரலையா…?

“ ப்ச்… பேமிலியே இல்லை … நான் அப்படியேதான் இருக்கேன்.. என் மனசுக்குள்ள இருந்து நீ போகலை வித்தி…”

என்ன சொல்வதென்று புரியாமல்.. மௌனமாய் அறை முழுக்க நோட்டம் விட்டாள்.. ஷோ கேஸினுள் அவள் போட்டோ அழகு காட்டி கொண்டிருந்தது… ஒருமுறை மாமல்லபுரம் போனபோது எடுத்தது…” வித்தி… இந்த டிரஸ்ல ரொம்ப அழகாயிருக்க.. அப்படியே ஸ்மைல் பண்ணு ஒரு ஸ்நாப் எடுத்துக்கிறேனே….அவன் காமிராவை கிளிக்கும்போது வாயை கோணி கண்ணை உருட்டினாள்…

“ என்ன தினா இதை போய் வைத்திருக்கே…

“ உன் ஞாபகமா இந்த ஒரு போட்டோதான் எங்கிட்ட விட்டு போன.. அதுக்கப்பறம் நடந்தது எல்லாம் என் நெஞ்சை விட்டு நீங்கலே…”

கல்லூரி காலங்கள் அவர்களுக்கு வசந்தமாகத்தான் இருந்தது. கலை, இலக்கியம் என்று ரசனைகள் பரிமாறிக்கொண்டு நட்பில் விழுந்தவர்களை அடுத்த கட்டமாய் காதல் இழுத்துக் கொண்டது..

“வித்தி நேத்து என் கனவில் எப்படி தெரியுமா வந்தே.. மழையில் சொட்ட சொட்ட நனைஞ்சி… அப்ப உன்ன பார்க்க செதுக்கி வைத்த சிற்பம் மாதிரி இருந்தே… நான் மெல்ல கிட்ட வந்து…”

“ போதும்.. நிறுத்து… தினா.. சினிமாவில் வர்ற மாதிரி கதையடிக்காத….”

“வெயிட்… வெயிட்.. கேளு.. ஏன் இப்படி மழையில நனைஞ்சி வந்திருக்க உடம்புக்கு ஏதாவது ஆகிட்டா என்ன பண்றது…? போ.. உள்ளே போய் ட்ரஸ் மாத்திகிட்டு வா… நான் வெளியில நிற்கிறேன்னு.. வந்துட்டேன்…. “

“ ம்.. அவ்வளவுதானா..?”

“ பின்னே.. கனவுல கூட காதலி கிட்ட எவ்வளவு கண்ணியமா நடந்துகிட்டேன் பாரு…”

“ ரொம்ப நல்லவன்னு பில்டப்பா… கனவுல மூழ்கிடாதே நாம வாழ்க்கையில இன்னும் எதுவுமே சாதிக்கலை… செமஸ்டர்ல கொஞ்சம் அக்கறை வை.. “

படிப்பும் , காதலும் மூன்று வருடங்கள் போனதே தெரியவில்லை..தேர்வு முடிந்து கடைசி நாளான்று ப்ரென்ட்ஸுடன் சேர்ந்து மகாபலிபுரம் சென்றார்கள்.

பிரியும் அந்த தருணத்தில்தான் அப்படி ஒரு குண்டை தூக்கி போட்டாள் வித்யா,” தினா.. நான் சொல்றத நீ எப்படி எடுத்துக்க போறியோ தெரியலை.. நான் ரொம்ப யோசிச்சி பார்த்துட்டேன்.. இதுதான் நல்ல முடிவாயிருக்கும் நம்ம ரெண்டு பேருக்குமே… இது நம்ம கடைசி சந்திப்பாயிருக்கட்டும் தினா… நாம நேசிச்சது உண்மை.. நம்ம காதல் நிஜமானா அதைவிட சந்தோஷம் இந்த உலகத்தில் எதுவும் இருக்காது… ஆனா யதார்த்தமா யோசிச்சிப் பாரு… என்னை மேற்கொண்டு படிக்கவைக்கிற ஐடியா அப்பாவுக்கு இல்ல… நீ எம்பிஏ.. முடிச்சி அதற்கப்புறம் வேலை தேடி செட்டிலாக இன்னும் குறைஞ்சது அஞ்சு வருஷமாவது ஆகும்… அதுவரை எங்க வீட்டில எனக்கு கல்யாணம் பண்ணாம வச்சிருப்பாங்களா….? எனக்கு பின்னால ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க… ஒருத்தரை ஒருத்தர் காயப்படுத்திக்காம இப்படியே விலகி போய்டலாம் ..”

நினைவுகள் கலைந்த வித்யா “ தினா உன்னோட இந்த நிலமைக்கு நாந்தான் காரணம்னு என்னை குற்றவாளி கூண்டில ஏத்திடாதே …? …. நான் கிளம்பட்டுமா… வீட்டில வேலைக்காரியை விட்டுட்டு வந்திருக்கேன்…”

“ நேரம் கிடைக்கும் போது எங்க வீட்டிற்கு வா…” என்றவள் முகவரியை தந்து விட்டு போனாள்.

தினா அடுத்த மூன்றாம் நாளே அவள் வீட்டின் முன் அழைப்பு மணியை அடிக்க கதவை திறந்த வித்யா ஒரு கணம் தயங்கி ..” உள்ள வா… என்றாள்.

“ அவர் பிஸினஸ் விஷயமா வெளியூர் போயிருக்கார்…” உட்கார ஸோபாவை காட்டினாள்.

“ அக்கா வேலை எல்லாம் முடிஞ்சிடுச்சி… நான் கிளம்பவா.. ?” வேலைக்கார பெண் எட்டிபார்க்க , “ செல்வி.. மாவு அரைக்க போட்டு தர்றேன்.. பத்து நிமிஷம் இருக்கியா…”

அவள் வேலைக்காரியிடம் சொன்னது தினாவை பத்து நிமிஷத்திற்குள் கிளம்ப வேண்டும் என்று மறைமுகமாக சொன்னது போல் பட்டது.

காபி போட்டு எடுத்து வந்து தந்தாள். “ தினா.. இது எங்க மேரேஜ் ஆல்பம்,… இது போன வருஷம் நாங்க கோவா போனப்ப எடுத்தது… என்ன பேசுவது என்று தெரியாமல் போட்டோக்களையும் … நாளிதழ்களையும் டீப்பாய் மீது பரப்பினாள்.

“ தினா நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத.. வாழ்க்கையில் நிகழ்கிற எல்லா விஷயத்தையும் எதிர் கொண்டுதான் போகனும். முதல் பக்கத்திலயா முடிவு இருக்கு…? நீ கல்யாணம் செய்து கொள்….”

அவள் சொன்னதிற்கு பதில் சொல்லாமல் ஹாலில் ப்ளோ- அப்பில் சிரித்து கொண்டிருந்தவனை காட்டி“ யாரு இந்த குட்டி பையன்.. அழகா…?

“ எங்க பையன் தான்.. தினா செகண்ட் படிக்கிறான்…”

அதற்குள் மொபைல் ஒலிக்கவும் கையில் எடுத்தவள், “ என்னங்க நீங்க போய் ஏழு மணி நேரம் ஆச்சு போன் வராம பதறி போயிருக்கேன் தெரியுமா…? ம்.. ம்.. சரி.. சரி.. சின்ன குழந்தையாட்டம் உங்களை கவனிச்சிட்டேயிருக்கனும்.. சம்பாதிக்கிறது இருக்கட்டும்.. கரெக்ட் டயத்துக்கு சாப்பிடுங்க…. விக்கி ஹோம் வொர்க் பண்ணிட்டுருக்கான்… சரி.. வேற ஒண்ணுமில்லை .. சீக்கிரம் வந்துடுங்க…”

உள்ளே எழுதிக்கொண்டிருந்த அந்த குட்டிப்பையன் ஹாலுக்கு வந்து… “ ம்… மம்மி இந்த அங்கிள் யாரு…? என்றது. “ அவர் மம்மியோட ப்ரெண்ட்…. கண்ணா…”

“ மம்மி… எனக்கு தூக்கம் வருது… எனக்கு நீ வந்து கதை சொல்லிட்டு தூங்க வச்சிட்டு போ..” சிணுங்கியது.

“ தினா இந்த புக்ஸையெல்லாம் படிச்சிட்டிரு… நான் இவனை தூங்க வச்சிட்டு வர்றேனே…?”

“ ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம்… அவர் பேரு ……. வித்யாவின் குரல் மென்மையாய்.. காற்றில் கலந்து வந்தது… விக்கி கண்களை மூடியதும்… தலையணையை சரி செய்து விட்டு ஹாலுக்கு வந்தாள். ஸோபா வெறுமையாயிருந்தது. சொல்லாமல் போய்விட்டிருக்கிறான். ஒரு மணி நேரம் கழித்து போன் வந்தது,…” வித்யா … தினாதான் பேசறேன்.. உங்கிட்ட சொல்லிக்காம வந்ததுட்டேன்… அதான் சரி.. நீ எத்தனை அருமையானவ….. கணவன், குழந்தை என்று அன்பை அர்ப்பணிக்கிறாய்… நாந்தான் சுய நலக்காரன் … என்னை பார்த்த போது நீ சிந்திய கண்ணீரை எனக்கு சாதகமா எடுத்துக்கிட்டேன்… .. உன் வீட்டிற்கு வந்ததும் .. தினா எனக்கு இந்த வாழ்க்கையில் சந்தோஷமே இல்லை.. உன்னை பிரிஞ்சது என் துரதிர்ஷ்டம்தான் என்று ஃபீல் பண்ணி சொல்வேன்னு நினைச்சேன்… என்ன ஒரு கேவலம்… உன் துன்பத்தையா ரசிக்க இருந்தேன்…? தெய்வீகமா இருக்கிற உன் குடும்ப வாழ்க்கையில் உன்னை நான் இன்னமும் என் காதலியா நினைச்சிட்டிருந்தேன்னா அது உன்னை களங்கபடுத்தற மாதிரி இருக்கும். வேண்டாம்… அழகான தூய்மையான குளத்தில கல்லெறியர பாவத்தை செய்ற அளவுக்கு நான் மோசமானவன் இல்ல.. அடுத்த முறை நீ என்னை எங்காவது பார்க்க நேரிடறப்ப.. என் பெண்டாட்டியோடதான் பார்ப்பே….! “

கொரியரில் வித்யாவின் போட்டோ வந்தது. “ ஆஹா… இதென்ன வித்தியாசமா அழுவாச்சி காட்டிக்கிட்டு ஒரு போஸ்…?”

“அது என் பழைய போட்டோ.. ப்ரெண்டு ஒருத்தி அனுப்பியிருக்கா.. நல்லாவே இல்லை ஷோ கேஸ்ல வைக்காதிங்க… ப்ளீஸ்…”

“ ஏய்… ஜஸ்ட் ஆல்பத்திலயாவது செருகி வை…நிழல் படம்தானே அது என்ன பண்ண போகுது … இருந்திட்டு போகட்டுமே…” என்றான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *