நிழலாட்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 26, 2022
பார்வையிட்டோர்: 6,790 
 
 

சந்திரி அக்காவிற்கு பீடை கூடியிருக்கிறது என்று ஜோசியர் தாத்தா அப்பாவிடம் வந்து சொன்னார். அன்றைக்கு வெள்ளிக் கிழமை. ஜோசியர் தாத்தா வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பத்து மணி வாக்கில்தான் வருவார். பகல் முழுக்க அப்பாவிடம் சாஸ்திரம் பேசிவிட்டு மத்தியானம் சாப்பிட்டு கண்ணயர்ந்து விட்டுப் போவார்.

ஆற்றங்கரைப் படிக்கட்டில் புஸ்புஸ் என்று அவர் ஏறி வருவதை நான் தான் முதலில் பார்த்தேன். புருவங்களில் வேர்வை திரண்டு மினுங்கியது. “ஜோசியர் தாத்தா” என்றேன். “உங்கப்பா எங்கேடா?” என்றார். “குளிக்கிறார்” வேட்டி நுனியைத் தூக்கி முகத்தைத் துடைத்தபடி, கூனல் முதுகுடன், விடுவிடுவென்று நடந்தார். நான் அவருக்குப் பின்னால் ஓடினேன். திண்ணையில் அமர்ந்து சாஸ்திரக் கட்டை பக்கத்தில் வைத்துவிட்டு, “உங்கப்பன்கிட்ட போய் சொல்லுடா” என்றார். நான் அம்மாவிடம்தான் போய் சொன்னேன். அம்மா குளியலறைக்குள் போனாள். தண்ணீர் கொட்டும் சத்தம் நின்றது. பாதி துவட்டியபடி அப்பா என்னருகே போன போது வெந்நீரின் ஆவி என்மீது பட்டது. லைப்பாய்சோப்பின் இனிய மணம். அப்பாவைப் பின் தொடர்ந்தேன். உற்சாமாகச் சிரித்தபடி அப்பா ஏது இத்தனை தூரம் என்று கேட்டபடி ஓரத்து அறைக்குப் போனார். ஜோசியர் தாத்தா உற்சாகமே இல்லாமல் வா. ஒரு விசேஷம் இருக்கு என்றார். அப்பா சலவை வேட்டியை மொடமொட வென்று சுற்றியபடி வந்தார். அவர் உடலின் ஈரத்தில் அது ஆங்காங்கே நீலநிறம் பெற்றது. தாத்தாவின் உடல் உலர்ந்து விபூதிப் பட்டைகள் தெளிவடைந்தன. அப்பா அருகே உட்கார்ந்தார். “காப்பி சாப்பிடுது…” என்றார் தாத்தா. “இருக்கட்டும் பார்க்கலாம்” என்றார். அம்மா பித்தளை செம்பில் காப்பி கொண்டு வந்தாள். தாத்தா பெரிய டம்ளரில் வழிய வழிய ஊற்றி மூன்று முறை பருகினார். “அப்பாடா” என்றார். மறுபடி வேர்க்க ஆரம்பித்தது. அப்பா, “என்ன சங்கதி” என்றார். தாத்தா திரும்பி என்னைப் பார்த்தார். அப்பா, “போடா, போய் குளி” என்றார்

பின்கட்டுக்கு வந்தேன். தங்கம்மா நெல்லை வேக வைத்துக் கொண்டிருந்தாள். குட்டுவம் களக்களக் என்று சிரிப்பை அடக்க முயல்வது போலிருந்தது. எரியும் தென்னை மட்டைகள் டப் டப் என்று வெடித்தன. தொழுவிற்குப் போய் பசுக்களை வேடிக்கை பார்த்தபடி சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன். நேரமாகிக் கொண்டிருந்தது. பள்ளிக்கூடம் ரொம்ப தூரம். என்ன விஷயம் என்று தெரியாமல் எப்படி போவது? சிறிது நேரம் கழித்து தாத்தா ஜோசியக் கட்டுடன் கோயில் முற்றத்தில் நடந்து போவது தெரிந்தது. வீட்டுக்கு வந்தேன். அப்பா அதற்குள் சட்டை போட்டு குடையுடன் நின்றிருந்தார். நின்றபடியே காப்பி பருகிவிட்டு, அப்ப நான் வர்றேன்” என்றார். அவர் ஆபீஸ் போகவில்லை. ஆற்றுப்படிகளில் இறங்கிச் சென்றார். சமையலறைக்கு ஓடி அம்மாவிடம், அப்பா எங்கே போகிறார்?” என்று கேட்டேன். அம்மா, நான் அதுவரையிலும் பல்கூட தேய்க்காமல் இருப்பதைக் சொல்லிக் திட்டினாள். கொல்லைக் பக்கத்துக்குப் போனேன். தங்கம்மா பெரிய சல்லடைக் கரண்டியால் நெல்லை அள்ளி பனம் பாயில் கொட்டிக் கொண்டிருந்தாள். குட்டுவத்திலிருந்து ஆவி எழுந்தது. பாய் நெல்லின் மீது மேகம் பரவி எழுந்தது. இனிமையான புழுங்கல் மணம். நெல்மணிகள் வெடித்து புன்னகை புரிவதுபோல இருந்தன. தங்கம்மா ஆற்றில் விழுந்து எழுந்தவள் போல தெரிந்தாள். “கொச்சேமான் வடக்கேடத்துக்குப் போவேல்லியா?” என்றாள். எதுக்கு? அப்போதுதான் சந்திரி அக்கா பற்றி அறிந்தேன்.

எனக்குப் புரியவில்லை பல் தேய்ப்பதை நிறுத்திவிட்டு, “பீடை என்றால் என்ன?” என்றேன். “செண்ணு பாக்கணும். கொச்சேமானுக்கு அருமந்த அக்காதானே” என்றாள். சிக்கலான ஏதோ விஷயம் என்று புரிந்தது. முன்பு அக்கா திரண்டு குளித்த போது, பத்து நாள் என்னை அந்தப் பக்கம் அண்டவே விடவில்லை. மூலைப்புரையின் கரிபிடித்த ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தபோத நாலு உலக்கைகளால் வேலி கட்டப்பட்டு உட்கார்ந்திருந்தாள். என்னைப் பார்த்துச் சிரித்து, பச்சரிசி மாவு உருண்டை வேண்டுமா என்று சைகையால் கேட்டாள். மாவு உருண்டையும், உளுந்தங்களியும் தின்று அலுத்துப் போயிருந்ததனால் நான் வேண்டாம் என்றேன். அவளைப் பார்க்வே வினோதமாக இருந்தது. அவசர அவசரமாக இட்லியை விழுங்கிவிட்டு., புத்தகப் பையுடன் கிளம்பினேன். பையை செல்வராஜின் பெட்டிக் கடையில் போட்டுவிட்டு கீழக்கடவு வழியாக ஆற்றைக் கடந்தேன். அங்கு ஆழம் அதிகம். காற்சட்டை நனைந்து விட்டது. ஆற்றின் மறுகரையில், வயல் வரப்பு வழியாக ரொம்ப தூரம் போக வேண்டும். கையை விரித்துக் கொண்டு ஓடினேன். பிளேன் ஆக மாறி மிதக்க ஆரம்பித்தேன். தரையெல்லாம் பச்சை நிறமாக அலையடிக்கும் வயல்கள். தென்னந்தோப்பின் அரையிருட்டில் புகுந்து மேடேறிய போது வடக்கேடத்து மச்சுவீடு தெரிய ஆரம்பித்தது.

ஒட்டுக்கூரை கன்னங்கரேலென்று இருந்தது. முற்றத்தில் மூன்று பலா மரங்கள். கண்ணி, நீலி, சக்கி என்று பெயர். சகோதரிகள், கண்ணிக்கு நூறு வயது ஆகிவிட்டது. காய்ப்பதில்லை. போன வருடம் மட்டும் ஒரே ஒரு பழம் கிடைத்தது. அதை அறுக்கும் போது சந்திரி அக்கா என்னைக் கூப்பிட வந்தாள். குளித்து விட்டு அப்படியே எங்கள் வீட்டுக்கு வந்து, அம்மாவிடம் கதை பேசிவிட்டு பத்திரிகையெல்லாம் வாங்கிக் கொண்டு, மகாதேவர் கோயிலில் கும்பிட்டு விட்டுத்தான் திரும்பிப் போவாள். அன்றைக்கு ராஜப்பன் கூட வந்தான். அக்கா அவனிடம் கண்ணிப் பலாவைப் பற்றித்தான் பேசியபடி வந்தாள். ஊரில் உள்ள எல்லா வரிக்கைப் பலா மரங்களும் அதன் வம்சம்தான். அக்கா தோள் நிறைய ஈரத் துணிகளை முறுக்கிப் போட்டிருந்தாள். கூந்தல் நுனியிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. ராஜப்பன் ஏதோ சொல்ல, அக்கா சிரித்தாள். இரண்டு பேரும் என்னைப் பார்த்தார்கள். ராஜப்பன் எங்கள் பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தலிருந்த குட்டி பள்ளிக்கூடத்தில் வாத்தியார். அவனைப் பள்ளிக்கூடத்தில் மட்டும்தான் ராஜப்பா சார் என்று சொல்ல வேண்டும் என்று அம்மா சொல்லியிருந்தாள். “ராஜப்பா நீதான் பலாப் பழத்தைப் பறிக்கப்போகிறாயா?” என்று கேட்டேன். அக்கா என் தலையில் ஓங்கி அரைந்து, “பெயர் சொல்லியா கூப்பிடுவது கழுதை?” என்று திட்டினாள். உண்மையிலேயே அவளுக்கு பயங்கர கோபம். கண்களும் மூக்கும் சிவந்து விட்டன. “ராஜப்பா சார்” என்று நான் ஈனஸ்வரத்தில் சொன்னேன். சரி சரி விடு. என்று ராஜப்பா சார் சொன்னார். என் தலையை வருடி, “சின்னப்பையன் தானே? பெரியவங்க பேச்சைத்தானே அவன் கேப்பான்” என்றார். ராஜப்பா சார் ரொம்ப நல்லவர் என்று நினைத்தேன். அதே சமயம் கோபமும் வந்தது. தலையை உதறினேன். வீடு நெருங்கியதும், அக்கா தலையை அசைத்து விட்டு விலகி, கொல்லைப் புறமாகப் போனாள்.

நானும் ராஜப்பா சாரும் முகப்பு முற்றத்துக்கு வந்தோம். குஞ்ஞ’ப் பாட்டி திண்ணையில் கம்பிளி மேல் உட்கார்ந்திருந்தது. காலெல்லாம் குந்திரிக்கத் தைலம். தாங்க முடியாத நாற்றம். பாட்டியின் பக்கத்தில் போனால்தான் வாய் வேறு மாதிரி நாறுவதை உணர முடியும். “ஏண்டா ராஜப்பா நீயா ஏறப் போகிறாய்?” என்று பாட்டி கேட்டாள். “ஓம் அம்மிணி” சார் சொன்னார். “எப்பிடி ஏறுவியோ என்ன இழவோ! நாலெழுத்துப் படிச்சு தொலைச்சுப்பிட்டே. அங்கே பள்ளிக்கூடத்திலே என்னடா சொல்லி குடுக்கிறே? மரம் ஏறவா? ஹெஹெஹெ” பாட்டியின் வாயில் மூக்குப் பொடி நிறத்தில் இரண்டு பற்கள் காணப்பட்டன. “சார் தான் மூணாம் கிளாஸ் பயக்களுக்கு கிளாஸ் டீச்சர் பாட்டி” என்றேன். “சாரா? யாருடா அது?” தணிந்த குரலில், “ராஜப்பா சார்” என்றேன். “தூ, உன் வாயைப் பொசுக்க. நாய் கெட்ட கேட்டுக்கு வாலுக்கு பட்டுக்குஞ்சலம் வேணுமா? ஏண்டா ராஜப்பா. ஏரப்பாளி, நீயாடா சொல்லிக் குடுத்தே இப்பிடி?” சார் புன்னகை புரிந்தபடி, “இல்லம்மணி” என்றார். என்னைப் பார்த்து, ஏதோ கண்ணைக் காட்டினார். “இல்லைபாட்டி அக்காதான்….” என்று நான் ஆரம்பித்தேன். சார் உடனே, அக்காகிட்டேயிருந்து ஒரு கயிறு வாங்கிட்டு வா ஓடு” என்றார். நான் கயிறு வாங்கி வந்தேன். சார் சட்டையைக் கழட்டி விட்டு, வேட்டியைத் தார் பாய்ச்சினார். சாரின் உடம்பு கருப்பாக, பளபளப்பாக, கோயில் வீரபத்ரன் சிலை மாதிரி இருந்தது. பவுன் சங்கிலி போட்டிருந்தார். அதைக் கழட்டி மடியில் செருகினார். அடிமரப் பொந்தில் கையை வைத்து தொத்தி ஏறினார். அவருடைய தோளிலும், கைகளிலும், முதுகிலும் தசைகள் இறுகி அசைந்தன. இடுப்பில் கயிறு கட்டப்பட்டிருந்தது. பெரிய பாம்பு மரத்தில் ஊர்ந்து ஏறுவது போல அது மேலே சென்றது. வலப்பக்க நுனிக் கிளையில் குரங்கு போல ஊர்ந்து சென்றார். பலாப்பழ காம்பில் கயிற்றின் நுனியை முடிந்த பிறகு வெட்டினார். கிளை வழியாக கயிற்றைப் போட்டு இறக்கினார். பலாப்பழம் பலூன் போல கீழே வந்தது. தரையைத் தொட்ட பிறகுதான் அது எத்தனை பெரிது என்று தெரிந்தது. முள்ளெல்லாம் மழுங்கி விட்டிருந்தது. மணம் வந்தது. அக்கா ஜன்னல் வழியாக பார்த்தபடி நின்றிருந்தாள். “டேய்” என்றாள். ஓடிப்போய் “என்னக்கா?” என்றேன். “சார் கிட்டே பழம் சாப்பிட்டு விட்டு போகலாம் என்று சொல்லு” சார் திரும்பிப் பார்த்து சிரித்தார். கைகளை உரசி அரக்கை உருட்டியபடி, படிகளில் அமர்ந்தார். அவருடைய பல்வரிசை அழகாக இருந்தது. அக்கா அந்தப் பலாப்பழத்தை கமுகம் பாளையை கீழே வைத்து அரிவாளால் வெட்டினாள். சாறு ஊறி பாளையில் கொட்டியது. சுட்டு விரலால் வழித்து என் நாவில் தடவினாள். நெற்றியை மோதியது இனிப்பு. சுளைகளை எடுத்து தட்டில் போட ஆரம்பித்தாள். “டம்ளரில் கொஞ்சம் சாறு தாறேன் சாருக்கு கொண்டு போய் கொடுக்கிறாயா? யாருக்கும் தெரியக்கூடாது” என்று என்னிடம் அந்தரங்கமாகக் கேட்டாள். அப்படி அவள் கேட்டதில் நான் மிகவும் பூரிப்பு அடைந்தேன். அதற்குள் பாட்டி வந்து விட்டாள். பக்கத்தில் அவள் உட்கார்ந்த போது பலாப்பழ வாசனை மறைந்தது. “எவ்வளவு சுளைடி இருக்கு?” என்றாள். அக்கா எதுவும் சொல்லவில்லை. “ரெண்டு சுளையை இப்பிடி போடு. வாய் ஒரு மாதிரி இருக்கு. கிருஷ்ணா குருவாயூரப்பா….” அக்கா பேசாமல் இரண்டு சுளையை பாட்டி கையில் வைத்தாள். பாட்டி முகமே சப்பி விரிய மெல்ல ஆரம்பித்தாள். “அந்த ராசப்பன் பயலுக்கு ரெண்டு சுளை குடு. அங்கியே நிற்கிறான்.” பாட்டி இன்னொரு சுளையை எடுத்தாள். “அந்த காலத்திலெல்லாம் பலாப்பழ மட்டையே ஆசையா வாங்கிட்டு போவான்கள். இப்போ அவன்களுக்கு காலம் வந்திருக்கு…” நான் எட்டிப் பார்த்தேன். சார் சட்டையை மாட்டிவிட்டு கிளம்பிக் கொண்டிருந்தார். “சார் போகிறார் என்றேன்” “போனால் போறான். மாசச் சம்பளம் வாங்குகிறவன்தானே? இங்கே மாதிரி ராச்சாப்பாட்டுக்கு பலாப்பழ மட்டையா அவனுக்கு…? கலிகாலம்! மாதவா, கோபாலா” பாட்டி சொன்னாள். அக்கா பேசாமல் சுளைகளை இணுத்துப் போட்டுக் கொண்டிருந்தாள். பிறகு “இருடா அக்கா கொல்லைக்கு போய் விட்டு வந்திடறேன்” என்று எழுந்து போனாள். நான் நாலைந்து சுளைகளைப் பிய்த்தேன். சரியாக வரவில்லை. எழுந்து கொல்லைப் பக்கம் போனேன். மூத்திரப் புரையின் மேலாக அக்காவின் தலை தெரியவில்லை. இடது பக்கம் மஞ்சணாத்தி மரத்தடியில் அக்காவும் சாரும் நின்றிருந்தனர். சார் சிரித்தபடி ஏதோ சொன்னார். அவர் கையில் வாழையிலையில் பலாச் சுளைகள் இருந்தன.

நான் நினைத்தபடி வீட்டு முற்றத்தில் கூட்டம் ஏதும் இல்லை. அப்பாவும், அச்சு மாமாவும், சந்திரன் அண்ணாவும், சிவன் அண்ணாவும், பிரபாகரன் மாமாவும், ஒரு கருப்பு நிற தடியனும் பாட்டியும் மட்டும் திண்ணையில் ஏதோ பேசியபடி இருந்தார்கள். கொல்லைப் பக்கத்துக்கு போனேன். நாலைந்து பெண்கள் தென்பட்டனர். சாவித்திரி மாமியும், பங்கஜம் மாமியும் எனக்குத் தெரிந்தவர்கள். அவர்களிடம் ஊடே புகுந்து, சமையலறைக்குள் நுழைந்தேன். இருட்டாக இருந்தது. அங்கும் சில பெண்கள் நின்றிருந்தனர். ஒரு மாமி என்னிடம், “யாருடா நீ?” என்றாள். இன்னொரு மாமி “நீ விசாலத்தின் பிள்ளைதானே? உங்கம்மா வரவில்லையாடா?’ என்றாள். நாள், “அப்பா இதை நீலம் மாமியிடம் கொடுக்கச் சொன்னார்” என்றேன். உள்ளே போ” என்றாள். உள் அறையில் யாருமில்லை. வடக்கேடத்து வீடு மிகவும் பழையது. பாழடைந்த நிறைய அறைகள். பக்கவாட்டு அறையில் உறிகளும். அடுக்குப் பானைகளும் இருட்டுக்குள் இருக்கும். அங்கு சிறு மண்ணெண்ணை விளக்கு எரிந்தது. பெரிய நிழல் சுவரில் விழுந்தது. அக்காவின் நிழல். அக்கா தலையை அங்குமிங்கும் திருப்பியபடி, “ஊம்ஊம்!” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். தலை கலைந்திருந்தது. முகம் வீங்கியது போல இருந்தது. அருகே நீலம் மாமி. இன்னொரு பாட்டி சுவரோடு ஒட்டி நின்றிருந்தாள். மாமி திரும்பிப் பார்த்து என்னிடம், “என்னடா” என்றாள். அக்கா? என்றேன். ஓடு இங்கே நிற்காதே” என்று கடுப்பாகச் சொன்னாள். நான் கொல்லைப் பக்கம் வந்தபோது இன்னும் ஒரு பாட்டி விசுவிசுவென்று வருவதைப் பார்த்தேன். கல்லத்தி வீட்டில் நாராயணிப் பாட்டி பர்ஸ் போன்ற வாயைத் திறந்தபடி, சாவித்திரி மாமியிடம், ” ஏண்டியம்மா இது, கேட்டதெல்லாம் சத்தியமா? இதென்ன கொடுமை? கலிகாலம் முத்திப் போயிட்டதா?” என்றாள். “போய்ப் பாருங்கள் பாட்டி. உட்கார்ந்திருக்கிறது மூதேவி” என்றாள் சாவித்திரி மாமி. பாட்டி குரலைத் தாழ்த்தி “யாரு”? என்றாள். எல்லார் முகமும் ரகசியத்தைக் காட்ட ஆரம்பித்தது. சாவித்திரி மாமி என்னை கவனித்து. “நீ இங்கேயா நிற்கிறாய்? ஓடு வீட்டுக்குப் போ” என்றாள். நான் தயங்கி நின்றேன். “உள்ளே போய் பார்க்கிறது” என்று மாமி சொன்னாள். “அய்யோ அம்மை முகத்தில் முழிக்க என்னால் முடியாதம்மா. அம்மே பரதேவதே…” பாட்டி கை கூப்பியபடி பின்னடைந்தாள்.

வெயில் பிரகாசமாகக் கொட்டிக் கொண்டிருந்தது. தோட்டமெங்கும் நிழல்கள் பின்னி அசைந்தன. வாலை செங்குத்தாக தூக்கியபடி ஒரு நாய் போனது. வாழைக் கூட்டம் அருகே தரை குளிர்ச்சியாக இருந்தது. கரிய மண்ணில் ஒரு மென்மையான குழி. அந்த நாயின் இடமாக இருக்க வேண்டும். அங்கிருந்து பார்த்த போது வீடு தொலைவில் சத்தமே இல்லாமல். இருப்பதுபோல இருந்தது. வாழைக் கூட்டத்தில் ஒரு குலை தென்பட்டது. அதன் பூவுக்குள் தேன் இருக்கும். சந்திரி அக்கா எடுத்துக் கொடுப்பாள். யாரிடம் உதவி கேட்பது என்று புரியவில்லை. வீட்டின் மறுபுறம் பாழடைந்த தொழுவம். அதன் படிக்கல் மீது காளி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். கண்கள் மூடியிருந்தன. புகையிலை மெல்லும் போது கண்களைத் திறக்க மாட்டாள். நான் அருகே போய் “காளி” என்றேன். “ஆரு?” என்றபடி கண்களைத் திறந்தாள். “ஆரு கொச்சா? இங்க எதுக்கு வந்தது?” நான் அவள் மடியில் ஏறி அமர்ந்தேன். “சந்திரி அம்மிணியைப் பாக்கவா வந்தது. அம்மிணிக்கு பீடையில்லா வந்திருக்கு?” காளி என் தலைமயிரை விலக்கிப் பார்த்தாள். “அம்மைக்கு நேரமே இல்லியாக்கும்? பேனு புளுத்து கெடக்குதே?” என்றாள் “பீடை என்றால் என்ன காளி?” என்றேன். “சாமி வந்து மனியனுக்க மேத்த கேறுய தாக்கும்” நான் அவள் முகவாயைத் திருப்பு “மலைச்சியம்மன் சாமிதானே?” என்றேன். “ஆரு சென்னாவல இதையொக்க? ” நான் சிரித்தேன். “எனக்குத் தெரியும்” என்றேன். “மலைச்சியம்மன் கண்கண்ட அம்மையாக்கும். கொச்சு கும்பிடணும்” காளி என் கையைப் பற்றி கூப்பி வைத்தாள். ” சாமீய் சந்திரியக்களுக்கு எல்லாம் செரியாவணும் சாமீய் – சொல்லணும்” நான் உற்சாகமாக அதைச் சொன்னேன். காளி என்னிடம் “கொச்சு மலைச்சியம்மன் காவுக்கு செண்ணு பாத்ததுண்டா?” என்றாள்.

ஒரு தடவை போயிருக்கிறேன், ஐப்பசி மாதக் கொடைக்கு, மழைக்காலம் தெற்கு மடம் வயல்கரையில், பெரிய தோட்டத்தின் விளிம்பில், ஏழெட்டுப் புளிய மரங்கள் கூட்டமாக நின்றன. புளியம் சருகு மெத்தை போல பரவியிருந்தது. நடுவே கல்லாலான சிறு மேடை. அதில் ஒரு சிறு சூலாயுதம். அதுதான் காவு. அன்றைக்கு எல்லாரும் குடை வைத்திருந்ததனால் யானைக் கூட்டம் மாதிரி இருந்தது. பூசாரி கண்ணன் கூட தலைக்குடை வைத்தபடிதான் பூசை செய்தான். பக்கத்தில் பெரிய நீரோடை சிவப்பு நிறமாக சுழித்து ஓடியது. வயல் வெளியில் மழை புகை போல காற்றில் அலையலையாக பரவிச் சென்றது. புளிய மரக் கிளைகள் எம்பி எம்பி விழுந்தன. மேலே ஒவென்று இலைகள் இரைந்தன. அப்பா என்னைத் தூக்கி வைத்திருந்தார். நான் குடையிலிருந்து சொட்டிய நீரை கையால் பிடித்தேன் என்று தொடையில் கிள்ளினார். பூசாரி குனிந்தபோத அவன் பின்புறத்தில் மழை கொட்டியது. பீடத்துக்கு செந்தூரம் வைத்த உடனே ரத்தமாக கரைந்து ஓடி வாய்க்காலில் கலந்தது. அரளிப்பூக்கள் தயங்கித் தயங்கி ஓடை நோக்கிச் சென்றன. சோமன் அண்ணாவின் கையில் இருந்த கூடையில் மூன்று சேவல்கள் இருந்தன. ஒன்று சிவப்பு மற்ற இரண்டும் வெள்ளை, ஈரத்தில் உடலைக் குறுக்கி சத்தமில்லாமல் உட்கார்ந்திருந்தன. பூசாரி சிவப்புக் கோழியை எடுத்தான். அதன் தலையையும் ஒரு காலையும் ஒரு கையால் பற்றினான். இன்னொரு கையால் இன்னொரு காலைப் பற்றினான். சூலாயைதத்தின் மீது தூக்கி ஒரே குத்தாகக் குத்தினான். கோழி துடிதுடித்தது. அப்படியே இறக்கி விட்டு அடுத்த கோழியை எடுத்தான். மூன்று கோழிகளும் சூலத்தில் கிடந்து வட்டமிட்டுத் துடித்தன. ரத்தம் வழிந்தது. ஓடையை நோக்கிப் போனது. திடீரென்று மின்னல். பிறகு இடி. நான் அப்பாவின் கழுத்தை இறுகப் பற்றினேன். எல்லோரும் “அம்மே, மலைநீலி! மகாமாயே” என்று கூவினார்கள். ரத்தத்தைப் பிரசாதமாக தந்தார்கள். என் நெற்றியில் கூட அப்பா போட்டு விட்டார். திரும்பி வரும் வழியில் வயல்கள் எல்லாம் நிரம்பி சிவப்பாக, தண்ணீர் விரிந்து கிடந்தது. வாய்க்கால்கள் கொப்பளித்தச் சென்றன. ஆற்றில் வெள்ளம், திருவட்டாறு போய் பாலம் வழியாக திரும்பி வர வேண்டியிருந்தது.

“அந்த மலைச்சியம்மனா அக்கா மேல் கூடியிருக்கிறது?” என்று கேட்டேன். “அம்மைக்கு கொடை திகையேல்ல. எளகிப் போட்டாள். இனி அவ மனசடங்காம போவ மாட்டா. அவளுக்கு மனசு அணையாத்த தீயில்லா? குடும்பத்த எரிச்சுப் போடுமே” என்றாள் காளி. உள்ளிருந்து சாவித்திரி மாமி, “காளீ காளீ” என்றாள். “ஓம் அம்மிணி”, “அங்கே என்ன செய்யே? பூசாரி வந்தாச்சு வா” காளி என்னை இறக்கி விட்டாள். “கொச்சு வீட்டுக்குப் போவணும். இஞ்ச நிக்கப்படாது கேட்டுதா? சந்திரியம்மிணிக்கு நாளைக்கு செரியாப் போடும் என்றாள்.

நான் யோசித்தேன். பிறகு கண் மறைவாகப் பதுங்கினேன். பாழடைந்த தொழுவம் வழியாக வீட்டுக்குள் நுழைய ஒரு இடுக்கு உண்டு. நானும் சந்திரி அக்காவும் ஒளிந்து விளையாட அதைப் பயன்படுத்துவது உண்டு. அதன் வழியாக உள்ளே போனேன். தூசும் ஒட்டடையும் மண்டிய அறையில், மாடிப்படி மச்சுக்கு போனது. ஒட்டடையைப் பிய்த்தபடி ஏறினேன். மச்சுப்பலகை உளுத்திருந்தது. கிச்கிச் என்று எலிகள் கலைந்து ஓடின. வெளவால் ஒன்று கலைந்து டபடபவென்று தலைக்கு மேலாகப் பறந்தது. அப்படியே நின்றேன். வெளவால் கூட்டம் மச்சின் கூரை முழுக்கப் பரவியிருந்தது. கலைந்தால் அவ்வளவுதான். இருட்டுக்கு கண் பழகிய போது அவற்றின் நீர்மணி போன்று கண்களின் மினுக்கம் தெரிந்தது. மெதுவாக நடந்து போனேன். அங்கங்கே மச்சுப் பலகை உடைந்து கீழிருந்து ஒளி வந்தது. கூரைமேல் நிழல்கள் ஆடின. ஒரு இடைவெளி வழியாக கீழே ஆள் நடமாட்டம் தெரிந்தது. எட்டிப் பார்த்தேன். கீழே கூட்டம். அதன் நடுவில் பாய் விரிக்கப்பட்டிருந்தது. மணை ஒன்று போடப்பட்டிருந்தது. ஒரு தீப்பந்தம் ஓரமாக எரிந்தது. சாவித்திரி மாமி பெரிய கெண்டியில் தண்ணீரும், கமுகம் பூக்குலையும் கொண்டு வைத்தாள். அரளிப் பூக்கூடை, சீவிய இளநீர் காய்கள், கனல் புகைந்த தூபத்தட்டு. செந்தூரத்தட்டு என்று வரிசையாக வந்தன. ஜோசியர் தாத்தா ஒவ்வொன்றாகச் சரி பார்த்தார். செந்தூரத் தட்டு எங்கே? முக்கியமானதை மறந்துடுங்க” என்று இரைந்தார். நீலம் மாமி, “அதோ இருக்கு” என்று தணிந்த குரலில் சொன்னாள். “அது அப்பவே சொல்லித் தொலைக்கிறது மூதேவி” என்றார் தாத்தா. அப்பா உள்ளே வந்தார். துண்டால் முகத்தைத் துடைத்தபடி “சின்னவங்க யாரும் இங்கே நிக்க வேண்டாம்” என்றார்

பூசாரி மெதுவாக பூனை போல வந்தான். மார்பு வெளிறி எலும்பெலும்பாக இருந்தது. மீசை இல்லை. குடுமி ஒரு பக்கமாக சாய்ந்து. இருந்தது அக்குளில், இருபுறமும் மணி கட்டிய, கட்டெறும்பு நிறம் கொண்ட, பெரிய பிரம்பு ஒன்று இருந்தது. அதைப் பார்த்தபோதே “விஷ்க்” என்று அது சீறும் ஒலி கேட்டது. கையிலிருந்த பெட்டியைக் கீழே வைத்து திறந்தான். கைமணி, கொப்பரை சம்புடம், சிறிய மரச்செம்பு எல்லாவற்றையும் எடுத்தப் பரப்பினான். காலை மடக்கி முதுகை நிமிர்த்தி அமர்ந்து கொண்டான். அவன் உதடுகள் படபடவென்று துடிக்க ஆரம்பித்தன. எல்லாரும் அமைதியாக நின்றார்கள். அப்பா கைகளை மார்பில் கட்டியபடி நின்றிருந்தார். பூசாரி கண்களைத் திறந்து, சைகை காட்டினான். அப்பா மெல்ல “கொண்டு வரச் சொல்லு” என்றார் உள்ளிருந்து காளியின் மீது சாய்ந்தவளாக, நடை தடுமாற அக்கா வந்தாள். அவளை பூசாரி முன் பிடித்து உட்கார வைத்தார்கள். அக்காவின் தலை தொய்ந்து முகவாய் மார்பில் அழுந்தியது. தலைமயிர் முகத்திலும் மடியிலுமாக சரிந்தது. பூசாரி மந்திரத்தை உரக்கச் சொன்னான். தூபத்தட்டில் சாம்பிராணியைப் போட்டான். புகை குபீரென்று எழுந்து என்னை நோக்கி வந்தது. சாம்பிராணியின் மணம் எனக்கு அச்சமூட்டுவதாக இருந்தது. பூசாரி அக்காவைக் கூர்ந்து பார்த்தான். பிறகு அக்காவிடம் “ஆராக்கும் நீ” என்று தணிந்த குரலில் கேட்டான். அக்காவிடம் “ம்ம்ம்…” என்றாள். “சொல்லிப்போடு ஆராக்கும் நீ” “ம்ம்ம்…” சொல்லாம உன்னை விடப் போறதில்லை. மரியாதியா சொல்லிப்போடு. நீ ஆருடி கூதறமேளே?” பூசாரியின் குரல் முழுங்கியது. அக்கா திடீரென்று உரக்கச் சிரித்தாள். முரட்டு ஆண்கள் இரண்டு பேர் சேர்ந்து ஒரே சமயம் சிரிப்பது போல இருந்தது. “நானா? நான்தேம்பில உன்னைப் பெத்தது அந்தக் குரல் கூட அக்காவின் குரலாக இல்லை. இறுக்கமும் கரகரப்பும் கொண்ட பெண் குரல். பூசாரி சிரித்தான். “இத வேற வல்ல எடத்திலயும் வச்சுக்க கேட்டியா? இது கொறே கண்டவனாக்கும் நான். மரியாதையா சொல்லிப் போடு. ஆராக்கும் நீ?” அக்கா நிமிர்ந்து பார்த்தாள். முடி விலகியது. அவள் முகம் சீற்றம் மிகுந்து இருந்தது. கண்கள் முடிப்புரைக் காலில் அம்மன் சிலையின் கண்கள் போல சிவப்பாக வெறித்தன. பூசாரி பிரம்பை எடுத்தான். வலக்கையால் திடீரென்று கொப்பரைச் சம்புடத்திலிருந்து சாம்பலை அள்ளி அக்கா முகத்தில் வீசினான். அக்கா “ஆ” அலறினாள். என் உடம்பு நடுங்கியபடி இருந்தது. நரியின் ஊளை போன்றிருந்தது அது. பூசாரி பிரம்பால் மாறி மாறி அடித்தான். “அடிபில! அடிபில மோன! அடிபில” என்று கூவியபடி அக்கா தலை மயிரைச் சுழட்டி சுழன்றாடினாள். உரக்கச் சிரித்தாள். சீறும் நாயின் பற்கள் போல அவள் பற்கள் ஈறுடன் வெளித் தெரிந்தன. குரல்வளை புடைத்து, பச்சை நரம்புகள் நெளிந்தன. கையை நீட்டினாள் விரல்கள் ஸ்பிரிங் கத்தியின் நுனி போல வெடுக் வெடுக் என்று விரிந்து கொண்டன. மணிக்கட்டு மட்டும் சுழன்றது. முழுமையாக இரண்டு முறை சுழன்று நடுநடுங்கியது. கையின் சதைகள் இழுபட்டு அதிர்ந்தன. பூசாரி கூட ஒரு கணம் அடிப்பதை நிறுத்தி விட்டான். சமையலறைக்குள் இருந்து “அம்மே பரதேவதே” என்று அலறல் ஒலிகள் கேட்டன. அப்பா கூட கன்னத்தில் போட்டு கொண்டார். பூசாரி தன் பெட்டிக்குள்ளிருந்து ஒரு குவளையை எடுத்து அதிலிருந்து சிவப்பு நிறத்தூளை அள்ளி அக்கா முகத்தில் ஓங்கி ஓங்கி வீசிறினான். வத்தல் மிளகாய் கமறல் நெடி எழுந்தது.

அக்காவின் நாக்கு வெளியே வந்தது. நாயின் நாக்கு போல மோவாயைத் தாண்டி கீழிறங்கித் தொங்கியது. பூசாரி பெட்டியிலிருந்து வெண்ணிறக் குச்சியொன்றை எடுத்தான். அது ஒரு எலும்புத் துண்டு என்று தெரிந்தது. அதன் உருண்ட நுனியால் அக்காவின் கைகளிலும் எலும்பு மூட்டுகளிலும் அடிக்க ஆரம்பித்தான். அக்கா தூக்கி விசிறப்பட்டவள் போல விழுந்து துடித்தாள். அவள் உடம்பு அட்டைபோல சுருண்டு உடம்பு இறுகியது. தலை தொடையிடுக்கில் நுழைந்தது. அது ஒரு மனித உடம்பு என்றே தோன்றவில்லை. பூசாரி தூபத்தணலில் செருகப்பட்டிருந்த இரும்புக் கரண்டியை எடுத்தான். அது கனலாக ஒளிர்ந்தது. பின் வெண்ணிறச் சாம்பல் நிறம் பெற்றது. அதை அக்காவின் கால்களிலும் புஜங்களிலும் வைத்து இழுந்தான். அக்கா பாய்ந்து எழுந்து அலறியபடி ஓட ஆரம்பித்தாள். காளி பிடிக்க முயல, ஒரே உதறலில் அவளைதூக்கி வீசினாள். பூசாரி அக்காவின் கால்களை அடித்து மடக்கி வீழ்த்தினான். தலைமயிரை அள்ளி இழுத்து போட்டு மீண்டும் சுட்டான். அக்கா திடீரென்று அவளுடைய சொந்தக் குரலில் வேண்டாம் வேண்டாம் விட்டுடு என்னை விட்டுடு என்ற கதறினாள். அக்கா என்று நானும் கதறியிருப்பேன். அந்தக் திகிலிலும் நான் எங்கிருக்கிறேன் என்ற உள் பிரக்ஞை எனக்கிருப்பதை அறிந்தேன். “செல்லு இல்லெங்கி பொசுக்கிப் போடுவேன்” என்றான் பூசாரி. அக்கா மீண்டும் அந்த கட்டைக் குரலில் “செல்லிப் போடுதேன் வேண்டாம் செல்லிப்போடுதேன் என்றாள்.

வாசல்களில் கூட்டம் முண்டியடித்தது. அக்கா விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள். பிறகு ஒப்பாரிப் பாட்டின் நீட்டல்களோடு விளங்காத சொற்களில் கூவி அழுதாள். கண்ணீர் கொட்டியது. “செல்லிப் போடு ஆராக்கும் நீ?” என்று பூசாரி கேட்டான். “நான்தான்” என்றாள் அக்கா. “நான் எண்ணு சென்னா?” அக்கா தலையை ஆட்டி, விசும்பியபடி, “மலைச்சியாக்கும் நான்” என்றாள். கூட்டம் பிதுங்கி சிலர் அறைக்குள் வந்து விட்டனர். “ஓகோ நீதானா செரி, எதுக்கிப்பம் இஞ்ச வந்த?” அக்கா ஓங்கி மார்பில் அறைந்தபடி அழுதாள். அழுகை ஏறி ஏறி வந்தது. சின்னையன் பயல் ஆற்று வெள்ளத்தில் போனபோது அவன் அம்மா அப்படித்தான் கதறிக் கதறி அழுதாள். அழுகை சற்றுக் குறைவதும், பின்பு பீறிடுவதுமாக இருந்தது.

“உனக்கென்னவேணும்? செல்லிப் போடு” என்றார் பூசாரி. “பாவியளா, மண்ணாப் போன படுபாவியளா, எனக்க பொன்னு தம்புரானை எனக்கு குடுத்துப் போடுங்கலேய்! எனக்க தம்புரான் எக்கு வேணும்பிலேய் கொண்ணு போட்டியளே பாவிப் பயலுவளே. இந்த கொலம் வெளங்குமா? வெளங்கு விடுவேனா?” அப்பா கும்பிட்டார். பூசாரி உரக்க “ஆரு ஆரக் கொண்ணா? அதைச் சொல்லு. பரிகாரம் வல்லதும் உண்டெங்கி செய்வம்” என்றான். “எனக்க பொன்னுதம்புரானை கொண்டு போட்டியளே பாவி மக்கா. எனக்க கும்பி ஆறதில்லையே. எனக்கு கும்பி அடங்கேல்லியே. எனக்கு கெதி மோட்சம் இல்லியே” திடீரென்று பல்லை நறநறவென்று கடித்தாள். சத்தம் மச்சுக்கு கேட்டது. கைகளைத் தூக்கியபடி காட்டுப் பூனை போல உறுமினாள். “விடமாட்டேன். கொளம் தோண்டிப்பிட்டு தான் போவேன். இந்தக் குடும்பத்துக்க தாய்வேரை அறுத்துப் போட்டுத்தான் அடங்குவேன். எனக்கு கும்பி அடங்கேல்ல.”

பூசாரி பாய்ந்து எழுந்து மீண்டும் அடிக்க ஆரம்பித்தான். பிரம்பு அறையின் உள்ளே சுழன்று பறப்பது போலிருந்தது. அடிபட்ட இடத்தில் அக்காவின் சதை துடிப்பது தெரிந்தது. பூசாரியின் முதுகில் வியர்வை வழிந்தது. குடுமி அவிழ்ந்து கூத்தாடியது. அக்கா அப்படியே தரையோடு தரையாக விழுந்தாள். அவள் தலைமயிரைப் பற்றித் தூக்கி, உனக்கு என்னவேணும்? என்ன கிட்டினா எறங்குவே? மரியாதிய சொல்லிப் போடு என்றான். அக்கா தீனமாக விசும்பினாள். எனக்கு எக்க பொன்னு தம்புரான் வேணுமே. எனக்கு தம்புரான் வேணுமே” பூசாரி “ஆருட்டி கொண்ணது உனக்க தாம்புரானே” என்றான். “இந்தக் குடும்பத்துக்கு மூத்தருமாருவளும், ஊராய் மக்காரனுவளும்தேன்.” “எப்பம்?” “இப்பம்தேன்” உனக்க தம்புரானுக்க பேரு என்னவாக்கும்? பத்மநாபன் தம்பி, எனக்க தம்புரானே உன்னைக் காணாம எனக்கு மனசு ஆறலில்லியே. எனக்கு நெனைச்சுப்பாக்க பளுதில்லையே அறு கொலை பண்ணிப் போட்டினுமே பாவிய. எனக்கு தீயடங்கேல்லியே “பூசாரி அக்காவை உலுக்கினான். “உனக்க பேரு மலைச்சிங்கிய. நீ எப்பிடிட்டி தம்புரானுக்கு கெட்டினவ ஆனே?” அக்கா திடீரென்று மவுனமானாள். பிறகு மெதுவாக “பேச்சி மலையிலே என்னைக் கண்டு மோகிச்சு விளிச்சோண்டு வந்தாவ. கண்ணுக்கு மணி போல வச்சு சினேகிச்சாவ. எனக்க அம்மையில்லா, எனக்க தேவியில்லா எண்ணுல்லா எக்கதம்புரான் என்னை விளிப்பாரு. கொண்ணு போட்டினுமே. எனக்க தம்புரானைக் கொண்டு கெடத்திப் போட்டினுமே. அது எனக்க கண்ணில விட்டு மாறேல்லியே” அக்கா வெறி எழுந்து கதறியழுதாள். “இஞ்ச பாரு அபவாதம் செல்லப்பிடாது கேட்டியா? ஆரு கொண்ணா. என்னத்துக்கு கொண்ணா?” அக்கா மார்பை கையால் அழுத்தியபடி திக்கித்திக்கி சொன்னாள். “ஊராய் மக்காரனுவ வந்து எக்கதம்புரானை அடிச்சாவ. என்னைய விட்டுப் போடணும் எண்ணு சொன்னாவ. என்னைப் பெத்த அம்€யாக்கும் அவ எண்ணு செல்லிப் போட்டாரு. சாதிக்கு தீட்டு செல்லி தள்ளி வச்சாவ. புளியங்காட்டில் குடிலு கெட்டி கெடந்தோம். மண்ணும் மானமும் சாச்சியாட்டு கிளியும் கிளியும் மாதிரி கொஞ்சிட்டு கெடந்தோம். எக்கதம்புரானே உனக்க சிரிப்பு மறக்க ஒக்குதில்லியே. அறுகொலை பண்ணிப் போட்டினுமே படுபாவிய தீராப்பளி செய்து போட்டினுமே…” அப்பா முன் நகர்ந்து பூசாரியிடம் ஏதோ சொன்னார். பூசாரி “கொல மூப்பராக்கும் செல்லுயது. பரிகாரம் செய்து போடலாமிங்கியாரு. உனக்கு என்ன வேணும் சொல்லு” என்றான். “அவனுக்க கரளில் உள்ளசோர வேணும்பில” என்று அக்கா பாய்ந்து எழுந்தாள். பூசாரி அவளை உதைத்து தள்ளி அடித்தான். அக்கா தரையோடு தரையாக விழுந்தாள். பூசாரி “கொலத்துக்கு எளைய குருந்தை மறிமாயம் செய்து மயக்கி சோர குடிச்சு பலி எடுத்த மலைநீலியாக்கும் நீ. உனக்க கதையொக்க எனக்கும் அறியிலாம். அண்ணு மலைகேறின உனக்கு வரியம் முடங்காம பலி போட்டு கும்பிடுதாவ இவிய. இப்பம் நீ நரபலி கேக்க வந்தியா? கொறை கண்டவானக்கும் நான். உனக்கு என்னவேணுமோ செல்லி வாங்கிப் போட்டு விட்டு நீங்கு ” என்றான். அக்கா கைகளை ஊன்றி தலையை மட்டும் தூக்கி தணிந்த குரலில் நான் இவ இல்லாம போவ மாட்டேன். கொண்டு தான் போவேன்” என்றாள். பிறகு அவள் தலை சரிந்தது. பூசாரி இரண்டு முறை உதைத்தான். அசைவு இல்லை. அப்பாவிடம் “பாதிச் சோலி மிச்சம் கெடக்கு. எறக்கிப் போடலாம்” என்றான். அப்பா பணிவாக “இனி என்ன செய்ய” என்றார். “எளநீ வாட்டு” என்றான். நாலைந்து இளநீரை குடித்து வீசிய பிறகு ஜபம் செய்ய உட்கார்ந்தான். “நான் இருக்கணுமா?” என்றார் அப்பா. “நிறுத்தப்பிடாது நிறுத்தினா பின்ன கையில் பெடாது. தொடங்கியாச்சு. எண்ணு சென்னா எறக்கிப் போட்டுதான் மறுசோலி பாக்கணும்.” அப்பா பெருமூச்சுடன் விலகி நின்றார்.

நான் என் கால்கள் குளிர்ந்து, விரைத்திருப்பதை அப்போது தான் உணர்ந்தேன். தூபப்புகை மச்சில் நிரம்பியிருந்தது. மல்லாந்து படுத்தேன். என் கைகால்கள் குளிர்ந்து விலகிக் கிடந்தன. அக்காவின் சிரித்த முகமும் மூக்குத்தியும் அசைவும் ஞாபகம் வந்தது. உடனே ராஜப்பா சாரின் முகம். பிறகு மூன்றாம் கிளாஸ் பள்ளிக்கூடம். குழந்தைகளின் குரல். “சாலமன் கிரண்டி! பான் ஆண் சண்டே! கிரிஸ்டின்ட் ஆன் மண்டே” நானும் ஒரு குழந்தையாக பாடிக் கெண்டிருந்தேன். மச்சில் நிறைய கண்கள். மெலிதாக தங்களுக்குள் பேசியபடி அவை என்னைப் பார்த்தன. கண்களை மூடினாலும் அந்தப் பார்வைகள் அப்படியே இருந்தன. எல்லாமே கனவு என்று திடீரென்று அறிந்தேன். எவ்வளவு பயங்கரமான கனவு. விழித்துக் கொள்ளப் போகிறேன். வீட்டுப்பாடம் எழுத வேண்டும் கனவுதான்.

மச்சில் கீழ் விளிம்பு வாயாக உள்ளே வந்து நீண்டிருந்த மூன்று ஒளிச்சட்டங்களைப் பார்த்தபடி கண் விழித்தேன். மச்சே தவிட்டு நிறமாக வேறு மாதிரி இருந்தது. பதற்றத்துடன் பொன்னிற தூசிகள் சுழன்று பறந்து கொண்டிருந்தன. என் உடம்பு முழுக்க கரிய பசை போல வெளவால் எச்சம். எழுந்து தவழ்ந்து நடந்து படியிறங்கினேன். கண்கள் கூசின. தலை சுழன்றது. நிற்க முடியவில்லை. அப்படியே தொழுவத்துக் கல் மீது அமர்ந்து விட்டேன். பின்பு யாராவது பார்த்து விடுவார்கள் என்ற எண்ணம் வந்தது. குமட்டல் வந்தது. எழுந்து தோட்டத்தில் புகுந்து நீரோடையில் உடலைக் கழுவினேன். அது காலை நேரம் என்று அப்போது தெரிந்தது. இரவெல்லாம் மச்சிலேயே கிடந்திருக்கிறேன். சத்தமேதும் இல்லை. அக்காவிற்கு என்ன ஆயிற்று? மீண்டும் வீட்டுக்கு ஓடிவந்தேன். சமையலறையில் நீலம் மாமி காபி போட்டுக் கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் “எங்கேடா போயிருந்தாய் பாவி? உன் அம்மா நேற்று ராத்திரிபடாத பாடு இல்லை” என்றாள். கருப்பட்டிக் காபி மணம் குமட்டலை வரவழைத்தது. தெக்கேடகத்துக்குப் போனேன் என்றேன். அவ்வளவு தூரமா. எதுக்கு சொல்லாம கொள்ளாம?” என்றாள் மாமி. “அக்கா எங்கே?” மாமி ஏதும் பேசாமல் காப்பியைத் துணியால் ஜாக்கிரதையாகப் பற்றி இறக்கினாள். தீ எழுந்து படபடத்தது. அவள் முகம் சிவப்பாக கனன்றது. உள்ளே போனேன். அறையின் அரை இருட்டில் அக்கா குவியலாக கிடப்பது தெரிந்தது. முகம் வீங்கிக் கண்கள் இடுங்கி வேற எவரோ போல் இருந்தால். குறட்டைகேட்டது. கால்களும் கைகளும் கூட பொதபொதவென்று வீங்கியிருந்தன. மஞ்சளும் களபமும் உடலெங்கும் அப்பியிருந்தன. குமட்டல் தரும் ஒரு வாடை. ரத்த வாடையா சீழ்வாடையா என்று தெரியவில்லை. “அக்கா” என்றேன். அங்கு எவருமில்லை போலப் பட்டது. சிறிதுநேரம் நின்றுவிட்டு வெளியே வந்தேன். காளி பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள்.

அருகே போனேன். என்னைக் கண்டதும் சிவப்பாக பற்கள் தெரிய சிரித்தாள். “கொக்சு எங்க போச்சுது ராத்திரி? அம்மைய அரை உயிரு ஆக்கிப் போட்டுதே” என்றாள். “காளி, அக்காவிற்கு பீடை இறங்கிவிட்டதா?” என்று கேட்டேன். “வெளுக்கும்பம்தான் ஒரு மாதிரி விட்டு மாறிச்சு. ஒக்கே அம்மிணி செய்த புண்ணியம்தேன். கொஞ்ச பாடா படுத்திப் போட்டுது பிள்ளைய? ஆனா அந்தப் பயலுக்க கெதிகேடு. அவனுக்கு விதி இருந்திருக்கு. இல்லெங்கிலும் இம்மாதிரி மூத்த பீடைய வந்தா பலியில்லாம விட்டு மாறாது” என்றாள். நான் சட்டென்று பீதி வசப்பட்டேன். காளி கூறப் போவதை தெளிவின்றி முன் கூட்டியே உணர்ந்து கொண்டிருந்தேனா? “ஆரு காளி?” காளி வெற்றிலையைத் துப்பினாள். “நம்ம ராசப்பன் பயதான். நல்லோரு பய. வல்ல காரியமும் உண்டுமா? புளியங்காவுக்கு இந்த சமயத்தில் வல்லவனும் போவினுமா? வெளுக்கும்பம் பனைகேறப் போன தங்கராசுப் பய கண்டிருக்கான். பொற மண்டையில் அடி விளுந்திருக்கு. கையும் காலையும் பரத்திக்கிட்டு கமிந்து கெடக்குதான். கண்ணெடுத்துக் காணப் பளுதில்லை. அங்க கூடியுள்ள ஆளு பெகளத்துக்கு கையும் காலையும் கணக்குமில்ல. கொச்சு இண்ணு பள்ளிக்கூடம் போவாண்டாம் கேட்டுதா? ஒளிவாக்கும். பய வாத்தியாருல்லா?” நான் என் புறக்கழுத்தில் எவரோ தொடுவது போன்ற பீதிக்கு ஆளானேன். வீட்டை நோக்கி கதறியபடி ஓடினேன்.

நன்றி – மண்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *