நிரூபணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 6,633 
 
 

வந்த பில்லை கல்லாவில் வாங்கிப் போட்டார் செல்லப்பா, “அம்பது காஸ் சில்ற

இருக்கா?”

சட்டை பையையும் உதட்டையும் ஒருசேரப் பிதுக்கிய வாடிக்கையாளர் – கல்லாவின் மீது இருந்த வறுத்த சோம்பை அள்ளி வாயில் போட்டுக்கொண்டார்.

வழக்கம்போல சில்லறைக்கு மிட்டாய் கொடுத்துக் கணக்கை முடித்தார் செல்லப்பா.

“எல்லாக் கடைலயும் முட்டாய் குடுக்க ஆரம்பிச்சுட்டீங்க. ஒரு நாளைக்கு மொத்தமாச் சேத்து, பில்லுக்கு துட்டுக்குப் பதிலா முட்டாயத் தரப்போறேம் பாருங்க” – வாடிக்கையாளர் சிரித்தபடி வெளியேறினார்.

ராமனாதன் உட்காரவில்லை. மனசுக்குள் அலை அடித்துக்கொண்டு இருந்தது. பெருமூச்சாக வேறு வெளியேறிக்கொண்டு இருந்தது. வியாபாரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் அண்ணனின் இடது புறம் நின்றிருந்தான். பக்கத்தில் அவனுக்கான இருக்கை இன்னமும் காத்திருந்தது.

“ஒக்கார்ப்பா!” – அடுத்தடுத்து பில்கள் வரிசையாக வந்துகொண்டு இருந்தன. காலை டிபன் முடிந்து, வடை, பக்கோடா நேரம். அண்ணன் கடைப் பக்கோடாவுக்கு தேனி பஜாரிலும்கூட வாடிக்கை இருந்தது. ‘இதென்ன செல்லப்பா கட பக்கோடாவா? இம்புட்டு வெல சொல்ற’ என்று அடுத்த கடையில் ஓப்பீடு செய்யும் அளவு அதன் ருசி பிரபலமானது.

“பக்கோடா… காபி” என்ற குரல்கள் கலகலவென ஒலித்த வண்ணம் இருந்தன. அடுத்து ஒரு மணி நேரத்தில் மதிய சாப்பாடு துவங்கிவிடும். அந்தக் கூட்டம் இதைவிடக் கூடுதல். அளவான கடைதான். ஐந்து டேபிள் போட்டிருக்கிறார். பெரும்பாலும் மதிய சாப்பாட்டுக்கு இடம் பிடிக்க வெளியில் ஆள் நிற்கும்.

ராசி என்றார்கள். இத்தனைக்கும் சாமி படம் என்றால், கல்லாவுக்கு நேர் மேலே பிரமாண்டமாக பெரிசாக்கப்பட்ட வேட்டைக் கருப்பு படம்தான். மற்றபடி, ஹோட்டல் சுவரெல்லாம் அண்ணனும் தம்பியுமாக அரசியல் வாழ்க்கைப் பயணத்தின் ஆதாரங்களாக நிற்கும் புகைப்படங்கள், கறுப்பு – வெள்ளை துவங்கி லேமினேஷன் காலம் வரை வரலாறு சொன்னது. அநேகமாக, அடுத்த தேர்தலில் தம்பி வார்டு கவுன்சிலர் ஆகும் வாய்ப்பு உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் அன்றாட அஜெண்டாவில் தவறுவது கிடையாது.

“வீட்டுக்கு எப்ப வருவ?” – அவனுக்கே தெரியும். ஆனால், ஏதாவது பேச வேண்டுமே!

“யே… என்னாச்சு?”

“நீ இப்ப வீட்டுக்கு வர்லேன்னா… அவள (மனைவி சாந்தி) சீமெண்ணய ஊத்திக் கொளுத்தப்போறேன்!”- உள்ளிருந்த உஷ்ணத்தின் காரணமாக வார்த்தைகள் சத்தம் மிகுதியாக வெளிப்பட, வாடிக்கையாளர்களில் சிலர் திரும்பிப் பார்த்தனர்.

“நா என்னா செய்யணும்கற… தீப்பெட்டி வாங்கித் தரட்டுமா, இல்ல மண்ணெண்ண வாங்கி வரணுமா?” – கல்லாவில் சாய்ந்தபடி ஆசுவாசப்படுத்திக்கொண்டு கேட்டார். சில்லறை தரும்போது குனிந்துகொண்டே இருப்பது ரொம்ப சிரமம்.

அண்ணன் பேச்சு அவனுக்கு அசதியைக் கொடுத்தது. சோர்ந்துபோய் ஸ்டூலில் உட்கார்ந்தான்.

“பின்ன என்ன… கொல்லப்போறேன், கொளுத்தப்போறேன்னு வாய்க்கு வாய் பேசிட்டேதான் இருக்க!”

“நெசமாவே கொல்லச் சொல்லுறியா?”

“ஆகுற பேச்சத்தான் பேசணும்கறேன், அரசியல்ல கத்தியக் காட்டிலும் புத்திதேம் பெருசு. ‘பெருசு’ பாட்டக் கேட்டு இருக்கீல்ல. அதனால, வார்த்தயக் கொற!”

மறுபடி ராமனாதன், “நீ இப்ப கல்லாவுல மொதலாளியா ஒக்காந்துருக்க… நான் நிண்டுக்கிட்டிருக்கேன். இப்ப பேச்சு சுத்தப்படாது. நீ மொதல்ல வீட்டுக்கு வா!” – செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பினான். வழக்கம்போல, அவனும் ‘தலைவரும்’ சிரித்துப் பேசியபடி இருக்கும் போட்டோ கண்ணில் பட்டது. அந்த ஒரு போட்டோதான் அவனது இன்றைய உயரத்துக்கு ஆதாரம்.

“குற்றாலத்துக்கு என்னிக்குப் போகணுமாம்?” – அண்ணன் கேட்டார்.

“தெரீல… நகரத்ததேங் கேக்கணும். இன்னிக்கின்னாரு… நாளைக்கின்னாரு… எப்பிடின்னாலும் ஒரு நா, ரெண்டு நாளுக்குள்ளார கௌம்ப வேண்டியிருக்கும்!” – சொல்லிக்கொண்டே கரை வேட்டியை இழுத்துவிட்டபடி நடந்து மோட்டார் வண்டியில் ஏறினான்.

பி.சி. என்று செல்லமாக அழைக்கப்படுகிற பி.செல்லப்பா, தன் அரசியல் வாரிசாக தம்பி ராமனாதனை இறக்கிவிட்டிருந்தார். ஒரு காலகட்டம் வரை ஊருக்குள் பி.சி-யைத் தெரியாத பேர்கள் கிடையாது. தாலுகா முழுக்க போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தாசில்தார் அலுவலகம் வரைக்கும் பெரிய செல்வாக்குப் பரவி இருந்தது. ஓரளவுக்கு மந்திரி வரைக்கும்கூடப் பழக்கம்வைத்து இருந்தார். கூடவே, காப்பிக் கடையும் இருந்தது. சம்பள ஆள் வைத்து ஓட்டிக்கொண்டு இருந்தவர். ஊருக்குள் இருந்த கடையை ரோட்டுக்கு மாத்தினார். கடையும் சொந்தக் கடையாகிப்போனது.

அப்போது இளைஞர் அணி உருவாக்கப்பட்டது. அதில் பி.சி-க்கு கருத்து மாறுபாடு இருந்தது. “கட்சிய வளத்துவிடுறது ஓராளு, காபந்து பண்ண வாரது ஓராளா? – இளைஞர் அணியை அவரால் ஏற்க முடியவில்லை. சிறு பயல்கள் தனக்குச் சமதையாக வந்து நிற்பதும் சில சமயங்களில் கேள்வி கேட்டுத் தன்னை ஆளுமை செய்வதும் அவரால் அனுமதிக்க முடியவில்லை. அதற்காக, கட்சியைவிட்டு ஒதுங்கவும் இல்லை.

தன்னளவில் காப்பிக் கடையிலேயே தனது அலுவல்களை சுருக்கிக்கொண்டார். கட்சி வேலைகளையும் காப்பிக் கடைக்குள்ளேயே அடங்கும்படி அமைத்துக்கொண்டார். தனது விசுவாசிகளின் வேண்டுகோளுக்காக, தம்பி ராமனாதனை அவர் கட்சிக்குத் தர வேண்டியதாயிற்று.

எட்டாம் வகுப்புக்கு மேல் படிப்பு வராமல், வீட்டில் இருந்த எருமை மாடுகளை மேய்த்துக்கொண்டு இருந்தான் ராமனாதன். காப்பிக் கடை பாலுக்கு அலைச்சல் இல்லாமல் இருந்தது. ஆனால், சோக்காளிகளோடு சேர்ந்து, ‘ரிக்கார்டு டான்ஸ்’ ஆட்டத்துக்குப் போவதுதான் இடைஞ்சலாக இருந்தது. அவனைத் திருத்தவும் ஒரு வழி தேடிக்கொண்டு இருந்தார்.

இளைஞர் அணிக்குப் பொருத்தமாகவும் இருந்தான். கட்சியில் சேர்ந்த பின்னும் அவனால் டான்ஸ் கச்சேரியைவிட்டு வர முடியவில்லை. அதனால், மேடைகளில் கட்சிக் கொடியோடு ஆடலானான். அது கட்சிக்குத் தேவையாகவும் இருந்தது. வெகுசீக்கிரத்தில் கட்சியில் பிரபலமாகிவிட்டான். கட்சி மேடைதோறும் அழைப்பும் வந்தது. ஆனால், பணம் பெயரவில்லை. அந்த நேரத்தில்தான் சாந்தியுடனான நட்பு துவங்கியது. அவனோடு இணையாக நடனம் ஆட வந்த பெண். சினிமா நடிகைகளுக்கு ஒப்பாக ஆடத் தெரிந்திருந்தாள். நட்பு காதலாக மாற, அவளையே கல்யாணம் செய்ய வேண்டுமென அண்ணனிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தான் ராமனாதன்.

சாந்திக்கு ஏற்கெனவே மணமாகிவிட்டதாகவும், மேடைப் பழக்கத்தில் பலருடன் ‘நட்பு’ இருப்பதாகவும் வந்த தகவல்களைத் தம்பியிடம் தெரிவித்தார் பி.சி.

“தின்ன சோத்துக்கு வெஞ்சனம் கேக்க ஆரம்பிச்சா, எதுனாச்சும் வெளங்குமா?” – வேதாந்தம் பேசினான் ராமனாதன். திடீரென தண்ணியைப் போட்டுக்கொண்டு, ‘உலகம் ஆயிரம் சொல்லட்டுமே… உனக்கு நீதான் நீதிபதி!’ என்று பாடவும் செய்தான்.

சொந்தபந்தங்களைக்கொண்டு அவன் மனசை மாற்ற யோசித்தபோது, மருந்து குடித்து செத்துவிடப்போவதாய் பயம் காட்டினான். ஒருநாள் எதனையோ குடித்து ஆஸ்பத்திரிக்கும் போய்க்கிடந்தான்.

வீரபாண்டி ஈஸ்வரன் கோயிலில் வைத்து அவர்களுக்குக் கல்யாணம் செய்துவைத்தனர். கட்சியில் மகளிர் அணி உருவானபோது, சாந்தி அதில் முக்கியப் பொறுப்பில் இணைக்கப்பட்டாள்.

முதல் குழந்தை பிறக்கும் வரை ஆட்டத்துக்குப் போனவர்கள், பிற்பாடு ஆட்டோ விளம்பரத்துக்கு மட்டுமே போகலானார்கள். படிப்படியாக சாந்தி, ‘ஹவுஸ் ஒய்ஃப்’பாக மாறிக்கொண்டாள். ராமனாதன், வார்டு செயலாளராகப் பதவி வாங்கினான். அதில் தனது செல்வாக்கும் தொடர்ந்து நீடித்திருப்பதில் பி.சி-க்குச் சந்தோஷம். ஆனால், ராமனாதனின் குடும்பத்தில் அமைதியைக் கொண்டுவருவதில் சிரமப்பட வேண்டி இருந்தது. காதல் கல்யாணம் பூராவும் இப்படித்தான் இருக்குமோ என்று பேசும்படி ஆகிவிட்டது. தினசரி பிரச்னைகள், சண்டை, சமயத்தில் அடிதடி, பிள்ளைகள் மூன்று பேரைப்பற்றிய கவலையற்ற தடிமனான ஏச்சுப் பேச்சுக்கள்.

மதியச் சாப்பாட்டு அரிபரிகள் ஓய்ந்த நேரத்தில், தாமதிக்காமல் வீடு வந்து சேர்ந்தார் பி.சி. வேட்டி மாற்றி கைலிக்குள் புகுந்து, சாப்பிட உட்கார்ந்தார். சாந்தி வீட்டுக்குள் நுழைந்தாள்.

“வா..!” – வாய் நிறைய சோத்துப் பருக்கையோடு அவளை பி.சி. வரவேற்க, அவரது மனைவியோ பார்வையிலேயே அழைப்பு விடுத்தார்.

வரவேற்புகளைப் பொருட்படுத்தாதவளாக சாந்தி, ஓரமாகக்கிடந்த சேரை இழுத்துப் போட்டு, பி.சி-க்கு முன்னால் அமர்ந்தாள்.

கனகாம்பர கலர் மெல்லிசான சேலையில், கைக்கு மட்டும் கரைவைத்த சட்டையுமாக… காற்றில் அலைந்த கூந்தலுமாக ஓவியமாகத் தெரிந்தாள். கல்யாணத்தில் இருந்ததைவிட இப்போது சற்றுப் பூரித்திருந்தாலும், சிவப்பும் வாளிப்புமாக தளதளப்பாகத்தான் இருக்கிறாள். யாரையும் சட்டென ஒரு கணம் ஸ்தம்பிக்கச் செய்யும் உடல்வாகு.

“என்ன பிரச்ன சாந்தி?”- லயிப்பில் இருந்து விடுபட்டு பி.சி. கேட்டார்.

உடனடியாக அதற்குப் பதில் சொல்லாமல், அவரை உற்றுப் பார்த்த சாந்தி, “உண்மையிலயே ஒண்ணும் தெரியாதா மாமா?”- எனக் கேட்டாள்.

“ம்… சொன்னான்” என்றவர், மனைவியிடம், “தயிரு வேணாம், மோராக்கிக்கொண்டா” – தட்டு நிறையச் சாப்பாடு முங்கமுங்க மோரை ஊற்றிப் பிசைந்து, புறங்கை வழிய வழிய உறிஞ்சி உறிஞ்சிச் சாப்பிட்டார். கையைக் கழுவி எழுந்தவர், வேட்டி முனையில் துடைத்துக்கொண்டே தமது அறைக்கு வந்தார். பின்னாலேயே சாந்தியும் நுழைந்தாள். அந்த அறையிலும் கடையில் மாட்டி இருந்ததைப்போல தலைவர்களுடனான போட்டாக்கள் அவரது இருப்பை உறுதிப்படுத்தும்விதமாக சுவரை அடைத்துத் தொங்கின.

“சாந்தீ… ரெண்டு பேரும் லவ் பண்ணிக் கல்யாணம் முடிச்சவங்க. பிரச்னை எப்பவும் உங்களத் தாண்டி வரக் கூடாது. ஆனா, எப்பப் பாத்தாலும் பஞ்சாயத்து பஞ்சாயத்துனுதேன் வந்து நிக்கிது!”

“வெக்கமாத்தென் மாமா இருக்கு! செத்துக்கூடப் போயிரலாம்னுதேன் தோணுது!”

“ம்… அதத்தே அவனுஞ் சொல்றான்” – தம்பியை விட்டுக்கொடுக்காமல் பேசினார். “வாழ்றதப்பத்தி யோசிக்கணும்!”

“வாழணும் மாமா. ஆனா, இப்பிடி அசிங்கமா வாழணும்னு அவசியம் இல்ல!” – சொல்லும்போதே புருஷன் மீது கோபம் பொங்கிப் பெருகியது. ஒரு கணம் அவனை எரித்துக்கூட விடலாமா என்று தோன்றியது.

படுக்கையில் காலைத் தொங்கவிட்டு, கைகளைப் பின்புறமாக ஊன்றிக்கொண்ட நிலையில் பி.சி. பேசலானார். “இங்க பாரு சாந்தி! நீயும் அவனும் எல்லாரையும்போல இல்ல. ரெண்டு பேருக்குமே அரசியல் தெரியும். சமயத்தில் அட்ஜஸ் பண்ணித்தேன் ஆகணும். இல்லாட்டி நீடிக்க முடியாது!”

சாந்திக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவரும் அட்ஜஸ் பண்ணத்தான் சொல்றாரே… “மாமா… ஒங்கள என்னோட அப்பாவா நெனச்சு வந்து ஒப்பிக்கிறேன். நீங்களும் இப்பிடி?”

‘உஸ்… இதெல்லாம் மேடைல பேசத்தேன் நல்லா இருக்கும். ஒண்ணு சொல்லட்டுமா, மேடைல ஆடுனதக் காட்டிலும் இது ஒண்ணும் அசிங்கமில்ல தெரியுமா?” என்றவர், “ஆண்டவா… இதெல்லா நாம் பேசக் கூடாது. ஏற்கெனவே அவங்கிட்டச் சொல்லி இருக்கேன். எந்தப் பிரச்னையும் நீங்களே பேசிக்கங்கடான்னு. பெட்ரூம்ல தீக்க வேண்டியத…” – பி.சி-யின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட வார்ப்புபோலத் தெரிய வந்தது சாந்திக்கு. அரசியல் என்று சொல்லிச் சொல்லியே, சகலத்தையும் சாக்கடைக்குள் தள்ளுகிற காரியத்தைத் திறம்படச் செய்கிறார்கள். தன் கனவுகளைப் பூராவும் காவு கொடுத்து வந்தாயிற்று. காதலித்தது தப்பா என்று பலமுறை கேட்டுக் கேட்டு அலுத்துப்போயிற்று. இத்தனை வருஷத் தாம்பத்திய வாழ்க்கையில் அறிந்ததைவிட, இந்த நொடிப் பொழுதில்தான் சன்னல்கள் திறந்துகொண்டதாக உணர்ந்தாள். காதலை எப்படி எல்லாம் வியாபாரம் செய்யலாம் என்ற சூட்சுமம்மிக்க ஒரு குடும்பத்தில் அகப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆனாலும், போராடாமல் தீராது.

“வெவரம் தெரியுமா மாமா?”

“என்ன வெவரம்? நகரச் செயலாளர்கூட ஒன்னிய குற்றாலத்துக்குப் போகச் சொல்றான்… அதான?” ஊன்றிய கைகளை எடுத்துத் தன் மடியில் வைத்துக்கொண்டார். “இன்னிக்கி அரசியல் தெரியுமா? முந்தியெல்லாம் ஓட்டுக்கு நாம பணம் கொடுப்போம். இப்ப ஐந்நூறு, ஆயிரம்னு ஓட்டுப் போடுறவன் பேரம் பேசுறான். எந் தம்பி கவுன்சிலராகணும்கற ஆச எனக்கும் இருக்கும்ல. செயிச்சிட்டான்னா, சேர்மன் ஆகவும் சான்ஸ் தர்றதா ‘நகரம்’ உத்தரவாதமாப் பேசறாரு! என்னா… ஃபேமிலி டூருதான?”

விக்கித்துப்போன சாந்தி, அதிர்ச்சி அடைந்தவளாக வெளியேறினாள்.

வீட்டில் மண்ணெண்ணெய் கேனுடன் ராமனாதன் உட்கார்ந்திருந்தான். கண்கள் சிவந்து முழுப் போதையில் இருப்பதைச் சொன்னது.

“நீதி கேட்டுட்டு வர்றியாக்கும்?”

பிள்ளைகள் பள்ளிக்கூடம் போய்விட்டதால், வீடு வெறிச்சென இருந்தது. மதிய உணவுக்குப் பிறகான வேளை என்பதால், வீதியும் ஆளோடிக்கிடந்தது.

பேசாமல் அவனைக் கடந்து வீட்டுக்குள் சென்றாள்.

‘நீ எத்தினி பேருக்குப் பத்தினிங்கறது எங்களுக்கும் தெரியும்!’

அவளுக்குத் தலை விண்விண் எனத் துடித்தது. ‘தம்பி பொண்டாட்டிங்கறதால நானே என்னிய அடக்கிக்கிட்டேன்… தெரியுமா ஒனக்கு?’ – பி.சி. ஒரு தரம் ஹாஸ்யம்போலப் பேசியது சம்பந்தம் இல்லாமல் நினைவுக்கு வந்தது.

“என்னா சொன்னாரு அந்த பி.சி? அந்த வெத்துவேட்டுப் பயலைக் கொன்னுட்டு, எங்கிட்ட வான்னாரா? இந்தா… பத்து லிட்டர் சீமெண்ணெ இருக்கு. என் மேல ஊத்து, ஊத்திக் கொளுத்திப் பத்தவையி!” – மண்ணெண்ணெய் கேனுடன் எழுந்துவந்தான்.

சாந்தி பேசவே இல்லை. தலை குனிந்தபடியே இருந்தாள்.

“என்னா… சோகம்? ஆக்டிங்கு? நீ உண்மையிலயே பத்தினின்னா… இந்தா இத உம் மேல ஊத்திக்கிட்டு பத்தினிங்கறத நிரூபி! பத்தினிகிட்ட நெருப்பே பயந்துக்குமாம்ல… இந்தா ஊத்திக்க… ஊத்திக்க!”

நிஜமாகவே மூடியைக் கழற்றி அவளது தலைக்கு மேலாக எண்ணெய் கேனைத் தூக்கி ஊற்ற முயன்றான்.

வெறிகொண்டவளாக கேனைத் தட்டிவிட்டாள் சாந்தி. வீடெங்கும் நெருப்பு திகுதிகுவென எரிந்தது. ராமனாதன் அலற அலற, அவனை நழுவவிடாமல் இறுகப் பற்றி எரிந்தது நெருப்பு!

– செப்டம்பர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *