கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 27, 2022
பார்வையிட்டோர்: 3,282 
 
 

(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அப்துல்லாஹ் ஹாஜி

என்ன வெயில்! என்ன வெயில்! ழுஹர் தொழுதுவிட்டு வீடு வந்து, மேலே உள்ள விசிறியைச் சுழலவிட்டு சாய்வுநாற்காலியில் சாய்ந்தேன்…. அன்று சாப்பிடப் பசியில்லை … மேசையில் இருந்த தினசரி ஒன்றை எடுத்து வாசித்த என் மனம் செய்தியில் ஓடவில்லை ; மனதில் ஆழப்பதிந்த செய்தியை வட்டமிட்டது.

குடும்பம் என்று ஒன்று இருந்தால் அதற்கு குழந்தை ஒன்று தேவை… ஓடி விளையாட ஒரு வாரிசு அமையாவிட்டால் அக்குடும்பத்துக்கு என்ன பெருமை. என் மகனுக்குக் குழந்தையில்லை . எனக்கொரு வாரிசு… பரம்பரை இல்லை… நாளை சொத்து சுகங்களை அனுபவிப்பது யார்…? –

நான் மௌத்தானால் என் மகன் இருக்கிறான்… என் ஒரே வாரிசு என் மகன். அவனுக்குப் பிறகு இந்தச் சொத்துக்களை அனுபவிக்கப் போவது யார்…? கஷ்டப்பட்டு உழைத்ததால் இன்று கௌரவமாக ஹாஜியார் என்ற அடைமொழி பெற்று வாழ்கிறேன்… – பலருக்குப் பெருமையாகக் கொடுத்ததால் கொடை வள்ளல் என்ற நாமமும் எனக்குண்டு. யாரும் என்னைக் கண்டால் ஹாஜியார் என கேள்விக்குறி போல் வளைகின்றனர்.

ஊர் பெரியபள்ளிவாசலில் நான் பிரதம டிரஷ்டி. இவைகளெல்லாம் என்னைத் தேடிவரக் காரணம் நான் தேடிய சொத்து செல்வங்கள்தான். ஏழு தலைமுறைகளுக்கு என் சொத்துக்களினால் சுகம் பெறலாம், ஆனால் ஒரு தலைமுறையுடன் என் செல்வங்கள் அழிய வேண்டுமா…? என் மகனுக்குப் பின்னால் என் சொத்துக்களை அலங்கரிக்க ஒரு வாரிசு தேவை… வாரிசு இல்லாத என் மகனுக்குப் பிறகு என் உடைமைகள் யார் கைகளில் சேருமோ…? – அல்லாஹ்! என்ன சோதனை! எத்தனை நிய்யத்துக் கொடுத்தேன்… பல இலட்சங்களுக்கு ஊர் முழுதும் பலமுறை குர்பான் கொடுத்தேன்… கண்பார்வை அற்றோர்க்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்கினேன். இப்படியாக – வாரிக் கொடுத்தும் என்ன பயன்! பரிகாரம் இல்லையா?

‘ஏன் இல்லை. என் அடி மனம் அலறியது..’ஒரே – ஒரு பரிகாரந்தான் உண்டு….நீ உன் மகனுக்கு மறுமணம் செய்து வை…!’

‘மறுமணம்… அதாவது இரண்டாந்தரம் திருமணம் செய்வதென்றால் என் மருமகளை தலாக் சொல்ல வைக்க வேண்டும். தலாக் சொன்னால் வேறு பிரச்சினையே இல்லை…. முஸ்தபா ஹாஜியாரைப் பகைத்துக் கொள்ள வேண்டும். அவரைப் பகைத்துக் கொண்டால் நாளெல்லாம் பகைதான். தன் மகளை வாழாவெட்டியாகக் காண எந்தத் தகப்பன் விரும்புவான்? இதற்கொரு வழிதான் உண்டு… இந்தப் பெண்ணும் இருக்கட்டும்…இன்னொரு பெண்ணை மறுமணம் செய்து கொடுப்போம்….என்மகன் விரும்புவானா…? அவன் பெஞ்சாதியின் மேல் உயிரையே வைத்துள்ளான்… சரி பார்ப்போம்… அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்… யாரையும் பகைக்கத் தேவையில்லை. என் பேச்சை இதுவரை என் மகன் மீறியதில்லை….மறுமணத்துக்கு மருமகள் இணங்காவிட்டால் தலாக்கைத் தவிர வேறு வழியுமில்லை …. அதன் பிறகு… பகை…? அதையும் ஒரு கை பார்ப்போம்…’ என சிந்தித்தவாறு நின்றேன். அந்நேரம் சாப்பாட்டுக்கு அழைக்க என் மனைவி வந்தாள்… – “கொஞ்சம் நில்லு…” எனக் கூறிவிட்டு, அவளை அழைத்துக் கொண்டு என் அறைக்குச் சென்றேன். நெஞ்சினிலே அலையும் வேதனையைக் கொட்டினேன்.

சபீதா உம்மா:

என் கணவர் என்னிடம் கூறியது எனக்கு அதிர்ச்சியைத்தான் தந்தது. என்றாலும் அவர் கூறியதில் உண்மை இல்லாமலுமில்லை. எங்களுக்கு ஒரு வாரிசு தேவை. அதற்கொரு வழி அவர் சொல்வதுதான்… என் மருமகளை நினைத்துப் பார்த்தேன். இதுவரை என்னைப் பார்த்து சிறிதும் அலட்சியம் காட்டாத தங்கமான பெண். யாருக்கும் கிடைக்காத மருமகள். எமக்கிடையே எந்த விரிசலும் இல்லாமல் என் மனம் கோணாமல் நடப்பவள். நானும் அப்படித்தான். என்றாலும்… தங்கக் கத்தி என்று குத்திக்கொள்ள முடியுமா….? அதற்கு ஒரே வழி அவர் சொன்னபடி என் மகன் இரண்டாந் தரம் முடிக்க வேண்டும். ஒரு பெண் தன் கணவனை பங்கு கொள்ள விரும்புவாளா…? என் மனம் என்னை உறுத்தியது. என் கௌரவம் என்னைப் பார்த்துச் சிரிப்பது போல உணர்ந்தேன். என்ன செய்ய…? தனக்கு இயலாவிட்டால் கணவனை பங்குபோடத்தான் வேண்டும். அப்படி என்றால் என் மகனுக்கு இன்னொரு பெண் தேவை… பெண் வீட்டார் விருப்பம் இல்லாவிட்டால் “தலாக்” கேட்கத்தான் வேண்டும். அலை பாயும் மனதுடன் மகன் வரும் வரை காத்திருந்தேன்.

சல்மான்:

உம்மா சொன்ன விஷயத்தைக் கேட்டதும்… விஷம் குடித்தவன் போலானேன்! என் தலை சுற்றியது. சிறிது நேரம் கட்டிலில் சாய்ந்தேன். என் மனைவி வீட்டில் இல்லை … அவள் இருந்தால் என்ன நடக்கும்…? நல்ல நேரம் இரண்டு நாள் தங்குவதற்காக அவள் உம்மா வீடு சென்றுள்ளாள். நாளை மறுநாள் வருவாள்…. நான் அவள் முகத்தில் எப்படி விழிப்பது…? கலியாணம் முடித்து ஐந்து வருடம்…. பிள்ளை இல்லாதது உண்மைதான். நாங்கள் பார்க்காத டொக்டர்மார் இல்லை. அவர்கள் எல்லாரும் எங்கள் இருவரிடமும் எந்தக் குறைபாடுகளும் இல்லை என்றே கூறினார்கள். உம்மாவின் வேண்டுகோளைத் தட்ட முடியாமல் மந்திரவாதிகளையும், ஓதிப்பார்ப்பவர்களையும் அணுகினோம். எதிலும் ஒன்றும் நடைபெறவில்லை . அல்லாஹ் நாடியது நடக்கும்… இருவரும் பொறுமையுடன் இருந்தோம்… எமது இல்லறம் சந்தோஷமாக இருந்தது. எமது பெற்றோருக்கு எங்கள் பொறுமையை சீரணிக்க முடியவில்லை…. என்ன செய்வேன்…?

அல்லாஹ் எனக்குத் தந்த நல்ல துணை என் மனைவி… சிரித்த முகம்… பால் மனம் மாறாத பேச்சு… கவரிமானின் நடை… எதையும் தாங்கும் இதயம் கொண்டவள்…. யாரையும் பகைக்க மாட்டாள்….எவர் வந்தாலும் இல்லை என்னாது வாரி வழங்கி எல்லோரினதும் அன்பைப் பெற்றவள். அப்படியான ஒரு பெண்ணுக்கு இப்படியான இடியை நான் போட வேண்டுமா….? என் கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது… – உம்மாவின் நச்சரிப்பையும் வாப்பாவின் கண்டிப்பையும் தாங்க முடியாத நான் கோழையாக ஊர்த் தலைவரைச் சந்திக்க அவர் காரியாலயம் நோக்கிச் சென்றேன்.

தலைவர்

குறைவின்றி எல்லாவித வசதிகளும் நிரம்பிய அழகான ஓர் ஆண் மகன் தேம்பித் தேம்பி அழுவதை அன்றுதான் நான் கண்டேன். உயிருக்கும் மேலாகத் தன் மனைவியை நேசிக்கும் ஒருவன் பெற்றோரின் கரைச்சல் காரணமாக என்னை நாடி வந்துள்ளான். வந்தவனுக்கு ஆறுதல் கூறும் நிலை எனக்கு. விடயத்தைக் கேட்டேன். அழுகையின் மத்தியில் நடந்த விபரங்களைக் கூறினான். சிறிது நேர மௌனத்துக்குப் பின் நான் அவனை விசாரித்தேன்.

“எங்கே தொழில் செய்கிறீர்கள்? என்றேன்.

“நான் சொந்தமாகத் தொழில் செய்கிறேன்” என்றான்.

“அப்படியா? எப்படியான தொழில்….?”

“சேர்… நான் பி.எஸ்.எஸி பட்டதாரி..படகெமிகல் பாத் வேலைகளிலும், நிக்கல்பாத் வேலைகளிலும் நான் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளேன்.. அதையே – தொழிலாகவும் செய்கிறேன். இன்றைய காலகட்டத்தில் இது இலகுவாகச் சம்பாதிக்கக் கூடிய தொழில்… எனக்கு இந்தத் தொழிலை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை; படித்துவிட்டு அதற்கேற்ற தொழிலை பிறருக்கு உதவியாக செய்ய வேண்டும். என்பது தான் என் இலட்சியம்… அதனால் பல பேருக்கு தொழில் கொடுத்து… நிறையப் பேருக்கு தொழில் பயிற்றுவிப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது… அதனால் இதை தொழிலாக செய்கிறேன்” என்றான்….

“அப்படியா…? ”

என் மனதில் நான் படித்த செய்தி ஒன்று நினைவுக்கு வந்தது. ஒருவனுக்கு குழந்தைகள் இல்லை….அவன் பார்க்காத வைத்தியம் இல்லை ….ஒரு டொக்டர் அவனை நன்றாகப் பரிசோதித்தார்…. அவன் உயிரணுக்கள் பாதிப்படைவதைக் கண்டு பிடித்தார்… அவன் செய்யும் தொழில்தான் அவனுக்கு வினையாக இருந்தது. அவன் அஸிட்பாத்தில் நாளெல்லாம் வேலை செய்தான்…. பலதரப்பட்ட அஸிட் வாயுக்களை சுவாசிக்க வேண்டியிருந்தது. 1 இதனால் அவனது உயிரணுக்கள் பாதிப்படைய அவன் குழந்தைப் பேற்றை இழப்பதை அறிந்தார். உடனே அவனை வேலைத்தளத்திலிருந்து சில நாட்களுக்கு ஓய்வு எடுக்கச் செய்தார்…வீட்டினிலே இயற்கைச் சூழலிலே உலாவி வரும்படி பணித்தார். சில விட்டமின் குளிசைகளை குடிக்கக் கொடுத்தார். கொஞ்ச நாளில் அவன் மனைவி கருத்தரித்தாள்… இது செய்தி…. இதை அடிப்படையாகக் கொண்டு நானும் பரீட்சையில் ஈடுபடத் துணிந்தேன்…

“சல்மான் துரை….நான் கூறுவதை நீங்கள் கேட்பீர்களா…?”

“நீங்கள் கூறுவதை கேட்கத்தானே நான் இங்கு வந்தேன் ஸேர்”

“சரி… நீங்கள் கெமிக்கல்…அஸிட்ட இவைகளுடன் தானே புலங்குகிறீர்கள்…? ஆறுமாத காலத்துக்கு இத்தொழிலை விட்டு கொஞ்சம் ஓய்வு எடுங்கள்…அத்துடன் உங்களுக்கு நுலரெலியாவில் ஒரு பங்களா இருக்கிறதுதானே?”

“ஆமாம்”

“அப்படியானால் நீங்கள் உங்கள் மனைவியுடன் அங்கு போய் சிறிது ஓய்வு எடுங்கள். தவறாமல் தஹஜ்ஜத் தொழுது துஆ கேளுங்கள்…உடற்பயிற்சி செய்யுங்கள்…இன்ஷா அல்லாஹ்…அல்லாஹ்வின் உதவி உங்களுக்கு இருக்கும்.” என்றேன்.

“சரி பேர்” என்றான்.

“இன்னொன்று… உங்கட உம்மா….வாப்பாவிடம் பொறுமையாக இருக்கச் சொல்லுங்கள்… அவசரப்பட வேண்டாம். குடும்ப ஒற்றுமை முக்கியம்…” எனக் கூறினேன்.

மும்தாஜ் பேகம் :

எனக்கு நம்ப முடியாத ஓர் ஆச்சரியம்…. இவ்வளவு காலமும் கலியாண வீடுகளுக்கும், உறவினர் வீடுகளுக்கும் அழைத்துச் செல்வதைத் தவிர வேறெங்கும் இரண்டு நாள், மூன்றுநாள் தங்கி வருவோம் என எப்பொழுதும் சொல்லாதவர்; நானும் கேட்டதில்லை. ஒரே அடியாக நுவரெலியாவுக்கு சில நாட்கள் ஓய்வு எடுக்கப் போவோம் என்ற செய்தி எனக்கு சந்தோஷத்தை தந்தது. கலியாணம் முடித்த புதிதில் குடும்ப சகிதம் ஹஜ்ஜுக்குச் சென்றோம்…. அதன் பிறகு அவரும் அவர் பெக்டரியும் தான்… நான் எங்கள் குடும்பத்தாருடன் பல இடங்களுக்குச் செல்வேன்…. அவர் தடை சொல்வதுமில்லை . அப்படியானவர் உடன் மாறியது ஆச்சரியமாக இருந்தது. சந்தோஷமாக நுவரெலியா சென்றோம்.

ஒரு நாள் எனக்கு மயக்கமாக வந்தது…. வாந்தி எடுத்தேன்… உடல் அசதியாக இருந்தது. கட்டிலில் சாய்ந்தேன்… என் நிலைமையைக் கண்ட என் கணவருக்கு தூக்கிவாரிப் போட்டிருக்க வேண்டும். உடன் பக்கத்திலிருந்த களினிக்குக்குக் கூட்டிச் சென்றார். என்னைப் பரிசோதித்த டொக்டர்கள் என் கணவரிடம் ஏதோ சொல்வதைக் கண்டேன்…. என்ன சொன்னார்களோ…. தெரியாது…. பப்ப அவர் சிறுபிள்ளை மாதிரி சிரித்துக்கொண்டே ஓடி வந்தார்…என் கைகளைப் பிடித்து கண்ணீர் விட்டார்… எனக்கு ஒரே குழப்பம்….. – “என்ன நடந்தது… ஏன் இப்படி பதறுகிறீர்கள்?” என்றேன்.

“நான்… நான் வாப்பாவாகப் போகிறேன்” என்றார்….

என் உடலில் இருந்த அசதி எங்கு போனதோ தெரியாது…. சந்தோஷ மிகுதியால் என் கண்களிலும் கண்ணீர் ஆறாக ஓடியது. அவருடன் சேர்ந்து ஆகாயத்தில் பறப்பது போல் ஓர் உணர்வு!

அவர் தன் கையிலிருந்த செல்போனை எடுத்து டயல் பண்ணுவதும் கதைப்பதுமாக இருந்தார். மறுநாள் என்னைச் சுற்றி என் குடும்பத்தவர்களும், அவர் குடும்பத்தவர்களும் நிறைந்திருந்தனர்… எல்லாருடைய முகத்திலும் மகிழ்ச்சி! நான் மகாராணி மாதிரி நடுவிலே வீற்றிருந்தேன்….

சல்மான்:

நாங்கள் எல்லாரும் சந்தோஷமாக மேலும் ஒரு மாதகாலம் நுவரெலியாவில் இருந்து வீடு வந்தோம். வீட்டுக்கு வந்ததும் உறவினர்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர். நான் உடனடியாக தலைவரைக் காணச் சென்றேன்.

“அஸ்ஸலாமு அலைக்கும் ஸேர்… வரலாமா?”

“வஅலைக்குமுஸ்ஸலாம்… அட சல்மான் ஹாஜி… வாங்க துரை வாங்க…. என்ன இந்தப் பக்கம்…?

“ஸேர்… நான் உங்களுக்கு நன்றி சொல்ல வந்தேன்” “ஏனாம்…” “ஸேர்… நான் வாப்பாவாகப் போறேன். ”

“மாஷா அல்லாஹ்… ரொம்ப சந்தோஷம்…”

“இப்படி பெரிய உதவி செய்த உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்வேன்…? டொக்டர்மார் செய்யாத உதவிய நீங்கள் செய்துள்ளீர்கள்….” என்றேன்.

“அப்படிச் சொல்ல வேண்டாம். அல்லாவின் நியதி, அதன்படிதான் உலகம் இயங்கும்…. இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்…. நான் படித்த மனோதத்துவ ரீதியான ஒரு செய்தி உங்களுக்கு உதவி உள்ளது…. அவ்வளவுதான்…”

“ஸேர்… இது எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் தான் தெரியும். நான் யாரிடமும் சொல்லவில்லை : எங்கள் குடும்பப் பிரிவை காப்பாற்றி உள்ளீர்கள்… உங்களுக்கு என்ன தேவையோ சொல்லுங்கள்” என்றேன்.

“சல்மான் துரை… நான் கைமாறோ… நன்கொடையோ எதிர்பார்த்து எதையும் செய்ய மாட்டேன். ஒருவனின் தகுதியும் திறமையும் அல்லாஹ்வின் அருளால் வருவது. அதுதான் மூலதனம். உதவிகளும் அப்படித்தான் அல்லாஹ் விரும்பிய வழியில் செய்ய வேண்டும். கைமாறாகச் செய்வது உதவியல்ல. தயவு செய்து கோபிக்க வேண்டாம். அந்த எண்ணத்தை கைவிடுங்கள்.” என்றார். நான் விடவில்லை … அவரை நச்சரித்தேன்…

“சல்மான் உங்கள் மனநிலை எனக்குப் புரிகிறது…உங்கள் நிலையில் நான் இருந்தால் இதைத்தான் சிந்திப்பேன். திரும்பத் திரும்ப இதையே நீங்கள் கூறுகிறீர்கள்….அதனால் நான் சொல்கிறேன்…எங்கள் பகுதி பாடசாலைக்கு இடநெருக்கடி இருக்கிறது. போதிய மலசலகூட வசதியில்லை ….எழுதப்படிக்க கொப்பி புத்தகங்கள் இல்லாமல் நிறைய பிள்ளைகள் உள்ளனர்…பள்ளிக்கூடம் போக முடியாமல் வீடுகளில் வேலை பார்க்கும் சிறார்கள் இருக்கிறார்கள். இவர்களைப் போன்றோருக்கு உதவுங்கள்….இது நிரந்தர தருமமாகும். எங்கள் பகுதி இஸ்லாமிய மறுமலர்ச்சி பேரவைகளுடன் இணைந்து உதவுங்கள்…”

“இன்ஷா அல்லாஹ்…. உங்கள் விருப்பப்படியே செய்வோம்.” – நான் அமைதியாக விடைபெற்றேன் .

– நவமணி – 2002.09.29, மூன்றாம் தலாக் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மே 2007, முஸ்லிம் சமுதாய மறுமலர்ச்சி இயக்கம், பாணந்துறை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *