கென்சிங்டன் 1931 வெள்ளை கடிகாரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 25, 2014
பார்வையிட்டோர்: 9,007 
 

அது 1879 இல் செய்யப்பட்ட சுவர் கடிகாரம் என்று பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது.. இங்கே அல்ல, இங்கிலாந்தில். கடிகார முகத்திலேயே Kensington Station என்றுகொட்டை எழுத்தில் எழுதியிருக்கிறது. கூடவே London என்று வேறு. ஒரு வேளை நம்ம மூஸா தெருவிலேயே ஏதோ ஒரு காதர் பாய் செய்து விட்டு இந்த மாதிரி எழுதி வைத்துவிட்டாரோ என்கிற சந்தேகத்துக்கு இடமில்லாமல் அது இன்னும் துல்லியமாக ஓடிக்கொண்டிருக்கின்றது! Black Metal என்னும் உலோகத்தில் ஆங்கில “L” வடிவம் கண்ணாடி பிம்பத்தில் தெரிவது போன்ற வளைவில் சுவற்றில் பதித்த அந்த stand இல் கடிகாரம் ராயசமாக தொங்கியது.

நானும் மனைவியும் அந்த கிளினிக்கில் நுழைந்தவுடன் முதன் முதலில் என் கண்ணில் பட்டது அந்த கடிகாரம்தான். அந்த பழமையில் கவரப்பட்டு உடனே என் மொபைலில் போட்டோ எடுத்துக்கொண்டேன். கிளினிக் இருந்த வீடு 1931இல் கட்டப்பட்டது என்பதை பில்டிங் முகப்பிலேயே பச்சை கலரில் எழுதி வைத்திருந்தார்கள். வாசலில் பெரிய போர்டிகோ, சுற்றிலும் தோட்டம். வீடு கட்டும்போது வைத்த மனோரஞ்சிதம் இப்போது மரமாகி, அதன் கிளைகளும் வேர்த்தண்டும் கெட்டிப்பட்டு முறுக்கிக்கொண்டு ஏடாகூடமாக பரவியிருக்க டாக்டர் அதன் பாரம்பரியத்தை நன்கு அறிந்தவர் போல ஆங்காங்கே இரும்பு கம்பிகள் நட்டு முட்டுக்கொடுத்திருந்தார். காற்றில் பரவின சுகந்தம். முப்பது நாற்பது வருடங்களாக நடக்கும் கிளினிக் என்பதும் தெரிந்தது. முதல் அறையில் பழைய மேஜைக்கு அருகில் உட்கார்ந்திருந்த பெரியவருக்கு நூற்றுப்பத்து வயது என்றால் கேள்வி கேட்காமல் நம்பலாம்.

“ அப்பாய்ண்ட் இருக்கா?”. அந்தக்கால எட்டாங்க்ளாஸ்!

“ இருக்கு, பதினொரு மணிக்கு”

“ உக்காருங்க. டாக்டர் பதினொன்னறைக்கு வருவார்!”

உட்கார்ந்தோம்.

தொபக்கென்று சரிந்தது நாற்காலி.

“அந்த நாற்காலி ஒடன்ஜிடுத்து. அங்க போய் உக்காருங்க”

இதுவரை ஏழெட்டு டாக்டர் பார்த்தாகிவிட்டது என் மனைவிக்கு. அவளுக்கு யார் பேரிலும் நம்பிக்கையே வரவில்லை. அதுவும் போனதரம் பார்த்த specialist இடம் எனக்கே நம்பிக்கை வரவில்லை. நாங்கள் சொன்னதை காது கொடுத்தே கேட்காமல் மருந்தும் test உம் எழுதிக்கொடுத்து விட்டா.ர். நாங்கள் உள்ளே நுழைந்ததுமே ஒரு போன் வந்துவிட்டது.போனில் பேசியவாறே எங்களை கண் ஜாடையில் உட்காரச்சொன்னார்.

“ போன வாரத்துலேர்ந்து நடக்கும்போதெல்லாம் காலில் ஒரே வலி”

“ ம், நா மூணு மணிக்கெல்லாம் ரெடியாய்டுவேன்”

“ அதுவும் கார்த்தால எழுந்தவுடனே, காலை கீழேயே வைக்க முடியல”

“ நீ காரை அனுப்பு. உமாவும் ரெடியாத்தான் இருப்பா”

“ எனக்கு diabetes உண்டு”

“ ராத்திரி பத்து மணிக்கெல்லாம் முடிஞ்சுடுமொனோ?”

என் மனைவி சொல்லுவதை நிறுத்தி விட்டாள்.

போனை வைத்துவிட்டு, “ ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். நா எழுதித்தர test எல்லாம் பண்ணிட்டு அடுத்த வாரம் மறுபடி வாங்க. இப்ப பீஸ் 500 ரூபாய்” என்று வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டார்.

வெளில வந்த முதல் காரியமாய் மனைவி அந்த Prescription ஐ கிழிச்சு எறிந்தாள்!

“நா சொல்றதை முழுசாவே எந்த டாக்டரும் கேட்கலைன்னா எப்படி அவாளுக்கு என்னோட situation புரிஞ்சு மருந்து கொடுப்பா”:

லாஜிக்கலான கேள்விதான்!
கடைசீயில் எதேச்சையாக பேசும்போது நண்பர் ஒருவர் சொன்னார், “ எங்கிட்ட முன்னமேயே சொல்லப்படாதோ? நீங்க பார்க்க வேண்டியது டாக்டர் கோபாலன்தான். அவருக்கு 70க்கு மேல வயசாறது. நாம சொல்றத முழுசா கேட்கறது மட்டுமில்லை, அவராவே நேரடியா கேள்விகள் கேட்டு enquiry பண்ணிதான் prescriptionஏ எழுதுவார்னா பாருங்களேன்”

மனைவி தீர்மானித்து விட, இதோ நாங்கள் டாக்டர் கோபாலன். கிளினிக்கில்.
இப்போது வழக்கொழிந்து விட்ட ஒரு பல்லிளிலிக்கும் காலாவதியான அம்பாசடர் காரில் டாக்டர் வந்து இறங்கி க்ளினிக்குக்குள் போனார்.

பளபளக்கும் வழுக்கை. ஒல்லியா தேகம். தளர்வான நடையுடன் நடந்தார் என்பதை விட நகர்ந்தார் என்று சொல்ல வேண்டும். எங்களுக்கு முன்னால் இரண்டு பேர் காத்திருந்தார்கள். எங்களின் முறை வருவதற்குள் பன்னிரெண்டரை ஆகிவிட்டது. மனைவிக்கு சந்தோஷமே.

“ பேஷண்ட் சொல்றதை கேட்கறார் பாருங்கோ, அதான் லேட்”

உண்மைதான்.

கன்சல்டிங் ரூம் நல்ல விஸ்தாரமாக இருந்தது. கடைசியில் ஒரு விக்டோரியன் மேஜையில் அவர் சுழல் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அந்த ஒல்லியான தேகம் ஏதோ நாற்காலி ஓரத்தில் ஒட்டிக்கொண்டாற்போல இருந்தது. பின்னால் அலமாரியில் இன்னும் சில லண்டன் சமாச்சாரங்கள் போல இருந்தன.

கனிவாக பார்த்தார்.கண்களில் சாந்தம்.

லதா .விலாவரியாக சொல்வதையெல்லாம் கேட்டு அப்புறம் பல கேள்விகளுக்குப்பிறகு இரண்டு மூணு பேப்பர்களில் எழுதினர்.

“ இங்க கிட்ட வாங்கோ, என்னால சத்தமா பேச முடியாது”

“ இந்த டெஸ்ட் மேற்கு மாம்பலத்துல எடுக்கணும். நரம்பு சம்பந்தப்பட்டது. வேற எங்கியும் எடுத்துட வாண்டாம். Reflex அப்புறம் motor function பாக்கணும்.

“ மேற்கு மாம்பலமா டாக்டர்?

ஆமா, ஆர்யா கௌடா ரோடுல இருக்கு”

“ நாங்க அடையாறுல இருக்கோம். பக்கத்துல எங்கியும் எடுக்க முடியாதா?”

“ அவருக்கு கோபம் வந்து விட்டது.சிடு சிடுத்தார்.

: உங்களுக்கு குணமாகணுமா வாண்டாமா?”

“சரி சரி டாக்டர்.”

“நா இந்தக்கால டாக்டர்கள் மாதிரி test எடுக்கரவாளோட financial arrangement எல்லாம் பண்ணிண்டுகுடுக்கறவன் இல்ல. நா சொல்றபடி கேட்கரதானா உங்கள பார்க்கறேன். இல்லேன்னா நீங்க வேற டாக்டர்கிட்ட போகலாம்”!

“ நோ நோ டாக்டர், முந்திக்கொண்டு நானே பதில் சொன்னேனே.

“இந்த டெஸ்டுக்கு எழாயிரத்தி ஐநூறு ரூபாய் ஆகும். காஷ் எடுத்துண்டு போகணும்”

“சரி டாக்டர்”

ரெண்டு நாள்ல ரிப்போர்ட் கொடுப்பா. எடுத்துண்டு அடுத்த திங்கள் என்னைப்பார்க்க வாங்கோ”.

“ பீஸ் டாக்டர்..?”

“ எண்ணூறு ரூபாய்”

எடுத்துக்கொடுத்து விட்டு அவரை குஷிபடுத்தும் என்று “டாக்டர்! வாசல்ல இருக்கே அந்த Kensington கடிகாரம், எப்போ வாங்கினது?” என்று ஆவலை முகத்தில் காட்டி கேட்டேன்.

கொஞ்சம் புன்னகையுடன், “அது லண்டன்ல வாங்கினது. எங்க அப்பா தொள்ளாயிறத்து முப்பதுல லண்டன் போன போது எனக்கும் என் தம்பிக்கும் ஆளுக்கு ஒன்று வாங்கி வந்தார். எப்போதும் எங்கள் ரூமிலேதான் மாட்டியிருந்தோம். அவர் ஞாபகமாக 70லேர்ந்து க்ளினிக்குல மாட்டி வெச்சிருக்கேன்.”

உற்சாகம் திரும்பிவிட்டது டாக்டருக்கு.

“ சரித்திர வண்ணமாய் இருக்கு டாக்டர்” – மேலும் ஐஸ்!

“ஆமாம். நானும் என் தம்பியும் இதை விளையாட்டுப்பொருள் போல பாது காத்தோம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எண்ணை போட்டு துடைத்து வைப்போம். நா மெடிகல் காலேஜில் படிக்கும்போது இதுல நேரம் பாத்து பாத்துதான் படித்தேன்.”

“ சரி, போய் வருகிறோம் டாக்டர்”

“நான் ஏன் ஒங்கள வெஸ்ட் மாம்பலத்துல எடுகச்சொல்றேன்னா அங்கதான் இந்த test துல்லியமாக எடுக்கிறார்கள். வேற காரணம் ஒன்னும் இல்லை.I wish the best for you, okay ?”

கொஞ்சம் குற்றமாக உணர்ந்தேன். முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு “நிச்சயமா அங்கேயே போய் எடுத்துண்டு வந்துடறோம் டாகடர்” என்று சொல்லிவிட்டு வெளியேறினோம்.
, “
லதாவுக்கு சந்தோஷம்.

“நான் சொன்னது முழுசா கேட்டார். எனக்கு நம்பிக்கையா இருக்கு, இவர் ட்ரீட் பண்ணினா நன்னா சரியாபோய்டும்”.

“வெஸ்ட் மாம்பலம் என்ன அவ்வளவு தூரமா? சினிமா பாக்கணும்னா மாயாஜால் வரைக்கும் ஒடறோமோனோ, இதுக்கு மட்டும்? டாகடர் irritate ஆய்ட்டார்”

அதுதான் kensington கடிகாரம் பத்தி பேசி அவரை கூல் பண்ணியாச்சே. மனுஷனுக்கு எவ்வளவு செண்டிமெண்ட் பாரு!”

அடுத்த நாள் வெஸ்ட் மாம்பலம் கிளினிக் போன் பண்ணியதில் மறுநாளே அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்து விட்டது.

“வெறும் வயத்துல ஒண்ணும் சாப்டாம கார்த்தால எட்டு மணிக்கெல்லாம் இங்கே இருக்கணும்”

கிளம்பும்போதே ஏழரை ஆகிவிட்டிருந்தது. ஜப்பான் மன்னரும் ஜகன்மோகனும் சென்னையின் போக்குவரத்தை அதகளம் பண்ணிவிட்டிருக்க வெஸ்ட் மாம்பலம் போய்ச்செரும்போது எட்டரை.”!

“என்ன சார்! இவ்ளோ லேட்டா வர்றீங்க?”

“ சாரிம்மா. வர வழியில ஒரே ட்ராபிக்” – பம்மினோம்.

சரி சரி, மேடம்! நீங்க உள்ளே போங்க. சார், ஏழாயிரத்து ஐநூறு கட்டணும்”.
எடுத்துக்கொடுத்துவிட்டு காத்திருந்தேன்.

பேப்பரில் எப்போதும் போல மோடியும் காங்கிரசும் ஒருவரை ஒருவர் திட்டிகொண்டிருந்தனர். தென் ஆப்ரிகா கிரிக்கெட், ஏற்காடு தேர்தல்,என்று பேப்பரில் மூழ்கினேன்.

“ கிளம்பலாம்” – லதா முடித்துவிட்டு வந்து விட்டாள்.

“ சார்!.இந்தாங்க ரசீது. ரிப்போர்ட்டெல்லாம் சனிக்கிழமை கெடைக்கும்”

வெளியே வந்து செருப்பை மாட்டிக்கொண்டபோது டிரைவர் காரை வாசலுக்கு நேராய் நிறுத்த, அதில் ஏறிக்கொண்டவன் எதேச்சையாக நிமிர்ந்து பார்த்தேன்.

கிளினிக்கின் வாசலில் நேரேயே சன் ஷேடுக்கு அடியில் Black Metal இரும்புக்கம்பியில் அழுக்கு வெண்மையில் ராயசமாக தொங்கிக்கொண்டிருந்தது Kensington 1931 என்று பதித்த வெள்ளை கடிகாரம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *