நிம்மதி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 13,276 
 
 

ஆதவன் கிழக்கில் உதிக்க, ஈரக் கூந்தலை உலர்த்திய படி பால்கனியில் வந்து நின்றாள் வெண்மதி. பனிப் புகை முற்றி–லும் விலகாத நிலையிலும் மலை மேல் ஏறுபவர்களும், தரிசனம் முடிந்து கீழிறங்கு-பவர் களுமாக.. திருமலை சுறுசுறுப்பாக, பரவசமாக இருந்தது. பிரம்மோற்சவம் நெருங்கிக் கொண்டிருந்த தால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஆன்லைன் மூலம் அவளின் தரிசன நேரம் இரவு பன்னிரண்டு மணி என்று குறிக்கப்பட்டிருந்தது. காற்றில் பரவிய நெய்வாசமும், சுப்ரபாதமும் அவளைப் பழைய நினைவுகளுக்கு இழுத்துச் சென்றன. தினகருடன் காதல் நிறைவேற வேண்டும் என்ற வேண்டு தலுடன் வீட்டுக்குத் தெரியாமல், பொய் சொல்லி திருப்பதிக்கு வந்ததெல்லாம்.. அளவுக்கு அதிகமாக உறுதி அளிப்பவன் எதையும் தருவதில்லை.

‘வேண்டாம்.. நினைக்காதே!’

வெட்டிப் போட்ட கேக் துண்டுகளாக ஒரே மாதிரி யான கட்டடங்கள். ஒவ்வொரு கட்டடத்திலும், நாற்புறமும் பார்த்தபடி நான்கு அறைகள். கிழக்கு முக அறையில்தான் வெண்மதி தங்கியிருந்தாள்.

‘‘கல்யாண்.. கல்யாண்!’’ வெண்மதிக்கு அந்தப் பெயரை கேட்கும்போது அடிவயிற்றில் ஜிவ்வென்று இழுத்துப் பிடித்தது.

திரும்பிப் பார்த்தாள். இவள் வயதுடைய பெண் ணொருத்தி பக்கத்து அறையிலிருந்து அங்குமிங்கும் தேடியபடி வந்தாள். லட்சணமான முகம்.

‘‘கல்யாண்.. எங்கே இருக்கே?’’

‘‘இதோ இருக்கேம்மா..’’ ஓடிவந்த அந்தக் கல்யாணுக்கு எட்டு வயது இருக்கும். குவிந்திருந்த கீழுதடும், செல்லமான குண்டு மூக்கும், துறுதுறு விழிகளும்.. எங்கேயோ பார்த்தது போல்!

‘‘உன்னை எங்கேல்லாம் தேடுறது. ரொம்ப வால்த் தனம் பண்றான். இவனைக் கட்டி மேய்க்கறதுக்கே நேரம் சரியா இருக்கு..’’ என்றாள் வெண்மதியிடம். ‘‘நீங்க சென்னையிலருந்து வர்றீங்களா?’’

‘‘இல்லீங்க.. மும்பையிலருந்து. நீங்க?’’

‘‘நாங்க சென்னைதான். என் பேர் மஞ்சரி’’ என்றாள் சிநேகப் புன்னகையுடன்.

‘‘நான் வெண்மதி..’’ என்றாள் சிரித்து.

‘‘தரிசனம் எப்ப?’’

‘‘நைட்டு பன்னெண்டு மணிக்கு.’’

‘‘அட.. எங்களுக்கும் அந்த டைம்தான். பையனுக்கு எப்பவோ வேண்டிக்கிட்டது.. துலாபாரத்துல எடைக்கு எடை நாணயம் தர்றதா! இப்பதான் அவருக்கு நேரம் கிடைச்சது. சரிங்க.. நாங்க வர்றோம்.’’

தரிசனத்துக்கு இன்னும் ஐந்து மணி நேரம் இருந்தது. கதவைப் பூட்டிக்கொண்டு பஜார் வீதியில் இறங்கி நடந்தாள் வெண்மதி. கடைக்குக் கடை பெருமாளின் துதிப்பாடல்கள் செவியைத் தாலாட்டின. ஒரு கடைக்குள் நுழைந்து கண்களால் தேடினாள்.

‘‘வெங்கடேச சுப்ரபாதம் கேசட் இருக்கா?’’

அவள் குரல் கேட்டு பக்கவாட்டில் இருந்த தினகர் திடுக்கிட்டுத் திரும்பினான். நெய்வாசம் தாண்டி ‘பாய்ஸன் சென்ட்’டின் நறுமணம் அவள் மூக்கை நிரடியது. தன்னை மீறி நிமிர்ந்தவள்.. அவனைப் போலவே அயர்ந்து போனாள்.

‘‘நீ….ங்….க…ளா?’’

‘‘ம….தி!’’

சூழ்நிலை கருதி இருவரும் வெளியே வந்தனர்.

‘‘எப்படியிருக்கே மதி?’’ என்றான், அவள் கழுத்துச் சரடை தேடியபடி.

‘‘ம்.. நீங்க?’’

‘‘நல்லாருக்கேன். தனியாவா வந்திருக்கே.. ஸாரி, வந்திருக்கீங்க?’’

‘‘நோ ஃபார்மாலிட்டீஸ்.. மதின்னே கூப்பிடுங்க. தனியாதான் வந்திருக்கேன். நீங்க?’’

‘‘ஃபேமிலியோடதான்’’ என்றவன் அவளை ஆராய்ந் தான். தளதளவென இருந்தவள் மெலிந்திருந்தாள். கண்களில் தவிர்க்க முடியாத நிரந்தர சோகம்.

‘என்னால்தானே?’ கடந்த சில வருடங்களாக உறுத்திய நெருஞ்சி முள் இப்போது அதிகமாகவே குத்தியது அவளைப் பார்த்ததும். வெண்மதியும் அவன் கண்கள் தன்னிடமிருந்து அகன்ற கணங்களில் அவசர அவசரமாக நோட்டமிட்டாள்.

புது மனைவி சமையலில் கில்லாடி போலும். ஊட்டத்தில் சற்றே பெருத்திருந்தான். நெற்றியை மறைக்கும் கேசம் மேலேறியிருந்தது. லேசான தொந்தி. பேசும்போதே விழும் கன்னக்குழி சதைப் பற்றால் கோடாகியிருந்தது. செல்லமாக அவள் பிடித்திழுக்கும் மீசையில் ஓரிரண்டு நரை முடிகள்.

‘என்னை முழுக்கவே மறந்து ஃபேமிலியோடு ஒன்றிவிட்டீர்களா தினகர்?’

‘‘சென்னையிலே இல்லேன்னு கேள்விப்பட்டேன்..’’

‘‘அப்பவே மும்பைக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டுப் போய்ட்டேன். பையன் எப்படியிருக்கான்?’’

‘‘ரொம்ப நல்லாயிருக்கான் மதி! அவனுக்காக வேண்டுதல். அதான் திருப்பதி வந்தோம். உ.. உனக்குக் கல்யாணமாயிடுச்சா?’’ அவள் பார்க்கும்போது, கழுத்துச் சரடிலிருந்த பார்வையை சட்டென விலக்கினான்.

எல்லாவற்றையும் பார்க்கும் கண்கள் தன்னைப் பார்த்துக் கொள்வதில்லை அல்லவா? உள்ளுக்குள் வலித்தது வெண்மதிக்கு.

‘ம்.. ஆய்டுச்சே.. ஒரே ஒரு பையன்!’’

‘‘ஓ!’’ அவனுள் இம்சித்தது.

வெண்மதிக்கு பழசெல்லாம் கொதிக்க.. தன்னை மீறி கலங்கி விடுவோமோ என பயந்தாள்.

‘‘நான் வர்றேங்க.. நேரமாச்சு!’’ நகர்ந்தாள்.

‘‘ஒரு நிமிஷம் மதி! நான் உன்னைக் கஷ்டப்படுத் திட்டேனா?’’

விரக்தியோடு சிரித்தாள். ‘‘அதெப்படிங்க மனசாட்சி இல்லாம இப்படியரு கேள்வி?’’

‘‘……………..?!’’

‘‘என் உயிரையே என்கிட்டேருந்து பறிச்சிட்ட பிறகு.. வேண்டாம் தினகர்.. என்னை அழ வச்சிடாதீங்க!’’

‘‘ஸாரி.. வெரி ஸாரி!’’

வேகமாக நடந்து போய் விட்டாள். போகும் அவளையே பார்த்தபடி நடைபாதை திண்டின் மீது அமர்ந்துவிட்டான். ‘மதி.. மதி.. உண்மையறியாமல் என் அம்மா பேச்சைக் கேட்டு எப்படியெல்லாம் துன்புறுத்தி விட்டேன்? என்னை மன்னிப்பாயா? உன்னை என்னால் மறக்க முடியவில்லை மதி. ஆனால், நீ என்னை மறந்து விட்டாய். இல்லாவிட்டால், வேறொருவன் கையால் தாலி வாங்கி..’

தினகரால் ஜீரணிக்கவே முடியவில்லை. விழுந்து விழுந்து காதலித்து, பொக்கிஷமாக தன் இதயத்தில் வைத்துப் பாதுகாத்தவளை, நிமிடத்தில் தூக்கி எறிந்து விட்டான். இன்று அந்தப் பொக்கிஷம் யாருக்கோ சொந்தமாகி விட்டது. அதைத்தான் அவனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

மதிக்கு பசியுணர்வு மரத்துப் போனது. தன் அறைக்குத் திரும்பியவள், தாங்கமாட்டாமல் அழுதாள். யாரை ஜென்மத்துக்கும் பார்க்கக் கூடாது என்று தமிழ்நாட்டை விட்டே ஓடினாளோ, அவனைப் பார்த்துவிட்டாள்.

‘படுபாவி.. அப்போதுதான் என்னைப் புரிந்து கொள்ள வில்லை. இப்போதுமா? என்னிடமிருந்து எல்லாவற்றை யும் பறித்துக் கொண்டு நீ மட்டும் கல்யாணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கலாம். எவ்வளவு உயர்ந்த எண்ணம்? என் குழந்தைக்காக வேண்டிக் கொண்டு ஒவ்வொரு வருடமும் இங்கு வருகிறேன். இப்போது மட்டும் ஏன் என் கண்களில் விழுந்தாய்? எந்தக் கடன் தீர இந்த சந்திப்பு?’ & வெண்மதியின் கண்கள் கசிந்து கொண்டே இருந்தன.

நிறைவான தரிசனம். திருப்தியாக இருந்தது. உண்டியலில் காணிக்கை செலுத்த எறும்புபோல் நீண்ட வரிசை! களைப்பைப் பொருட்படுத்தாது வெண்மதி அந்த வரிசையை நோக்கி நடந்தாள். ‘‘வெண்மதி!’’

பின்னால் வந்த குரலுக்குத் தூக்கி வாரிப் போடத் திரும்பினாள்.

‘மறுபடியும் இவனா?’ அவளுக்கு அப்போதுதான் உறைத்தது. ‘இவனும் தரிசனம் முடிந்துதான் வந்திருக் கிறான். குடும்பத்தோடு வந்திருப்பதாகச் சொன்னானே! அப்படியானால்..’ ஆவலும் அவசரமுமாக கண்களால் துழாவினாள்.

‘‘உங்களை எங்கேயெல்லாம் தேடறது? எங்களை அங்கே விட்டுட்டு இங்கே என்ன.. அட.. நீங்களா? என் வீட்டுக்காரரை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?’’ ஆச்சர்யத்துடன் கேட்டாள் அங்கு வந்த மஞ்சரி.

‘இவளா இவன் மனைவி? அப்படியானால் கல்யாண் தான்..’

‘‘அ.. ஆமாம் மஞ்சரி. இவங்க ஏற்கெனவே சென்னை யில என்னோட அ.. ஆபீஸ்லதான் வேலை பார்த்தாங்க. இப்ப மும்பையில இருக்காங்க. மதி.. வெண்மதி.. இது என் மனைவி!’’

‘‘நீங்க ஒண்ணும் அறிமுகப்படுத்த வேணாம். நாங்க ஏற்கெனவே அறிமுகமாயாச்சு..’’

‘நான் இவனுடன் ஆபீஸில் ஒண்ணா வேலை பார்த்தேனாமா?’ நெஞ்சடைக்க மஞ்சரியை பார்வையால் அளந்தாள்.

‘‘ஆபீஸ்ல ஒண்ணா வேலை பார்த்திருக்கீங்க. அப்ப முழு விவரம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். நான் இவருக்கு ரெண்டாவது சம்சாரம்’’ & கேட்காமலேயே வளவளத்தாள்.

‘‘அவங்க?’’

‘‘முதல் சம்சாரம்தானே? செத்துப் போயிட்டாங்க. பாவம்.. ஆனா, அவங்களை நான் போட்டோவில் கூட பார்த்ததில்லை.’’

அதிர்ச்சியில் வெண்மதியின் நெஞ்சடைத்தது.

‘‘ஏ.. ஏன்?’’

‘‘இவர் அவங்களையே நினைச்சிட்டிருந்தா வேற கல்யாணம் பண்ணிக்க மாட்டார்னு என் மாமியார் எல்லா போட்டோவையும் எரிச்சிட்டாங்களாம்.’’

‘‘ஓஹோ..’’

தினகர் சங்கடத்தில் நெளிந்தான்.

‘‘உங்களுக்கு குழந்தைங்க..’’

‘‘இல்லீங்க.. எனக்கு அந்த பாக்கியம் இல்லை. அதனால என்ன? கல்யாண் இருக்கானே.. ‘அம்மா.. அம்மா’னு அவன் என்னையே சுத்திச் சுத்தி வர்றப்ப உலகமே மறந்து போகுது. கல்யாண் மட்டும் இல்லேன்னா.. எங்க வாழ்க்கை பாலைவனமாகி இருக்கும்’’ & வெகுளித்தனத்தை மீறிய ஏக்கமும் பாசமும் மஞ்சரி மேல் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

‘‘வாடா என் செல்லம்!’’ கல்யாணைத் தூக்கி வைத்துக் கொண்டாள் மஞ்சரி. எல்லாம் இடம் மாறிப் போயிருந்த அவல நிலையை எண்ணிக் குமுறிய மனதை அடக்கி, கல்யாணை ஆசையாக வருடினாள்.

‘‘க….ல்….யா….ண்!’’ காலையில் பார்த்திருந்த அறிமுகத்தால் வஞ்சனை யின்றி சிரித்தான். அந்தச் சிரிப்பில் கரைந்த வெண்மதி அவனை வாரி அணைத்துக் கொள்ள வேண்டும் போலத் தவித்தாள்.

மஞ்சரி நாலைந்து சாக்கு மூட்டைகளைப் பிரிக்க ஆரம்பிக்க,

‘‘எ.. என்ன வேண்டுதலுக்காக திருமலை வர்றீங்க வெண்மதி?’’ & பதட்டத்தை வெளிக்காட்டாமல் கேட்டான் தினகர்.

‘‘என் குழந்தை நல்லாயிருக்கணும்னு! கல்யாண் இப்படி வா!’’

‘‘என்ன ஆன்ட்டி?’’

வேதனையில் முகம் சுருங்கத் தூக்கி முத்தமிட்டாள்.

‘‘நோய் நொடியில்லாம தீர்க்காயுசா இருக்கணும் ராஜா!’’

‘‘கிஸ் பண்ணாதீங்க ஆன்ட்டி. அம்மாவைத் தவிர யார் கிஸ் பண்ணினாலும் எனக்குப் பிடிக்காது.’’

வெண்மதியின் கண்களில் பனித்துளி.

‘‘ஸ.. ஸாரி.. மதி!’’ என்றான் தினகர் மெல்லிய குரலில்.

‘‘அடுத்து நாமதான். சீக்கிரம் இந்த மூட்டையைப் பிரிங்க.’’

வெண்மதியின் பார்வையிலிருந்து தப்ப குனிந்து மூட்டையைப் பிரித்தான். துலாபாரத்தில் ஒரு தட்டில் கல்யாணை உட்கார வைத்து, இன்னொரு தட்டில் நாணயங்களைக் கொட்டினார்கள். அப்படியும் கல்யாண் அமர்ந்திருந்த தட்டு கீழே இருக்க, தினகரும் மஞ்சரியும் பர்ஸிலும் பேக்கிலும் தேடி இன்னும் சில நாணயங் களைப் போட, ம்ஹ¨ம்.. அப்போதும் கீழிறங்க மறுத்தது.

‘‘இப்ப என்னங்க பண்றது?’’ & மஞ்சரி கைகளைப் பிசைந்தாள்.

வெண்மதிக்கு சட்டென அந்த எண்ணம் உதித்தது. நேர்த்திக் கடனை நிறைவேற்ற தான் எடுத்து வைத்திருந்த நாணயங்களைத் தட்டில் போட முயல.. தடுத்தாள் மஞ்சரி.

‘‘என்னங்க இது.. உங்க பிள்ளைக்காக வேண்டிக்கிட்டு சேர்த்து வச்ச பணத்தை போய்..’’

கையை விலக்கிய மதி, ‘‘என் பிள்ளை வேறு.. கல்யாண் வேறு இல்லை!’’ என்றபடி கொட்டினாள்.

சர்ரென்று கல்யாண் இருந்த தட்டு மேலேற… ‘‘கோவிந்தா.. கோவிந்தா..’’ என்று கண்களை மூடிப் பரவசமாக தலை மேல் கைகளை குவித்தாள் மஞ்சரி. இதுநாள் வரை ஏற்பட்டிராத நிம்மதியும் மனநிறைவும் இப்போது ஏற்பட்டது வெண்மதிக்கு. நன்றியுடன் ஏறிட்டான் தினகர். அலட்சியப்படுத்தினாள்.

‘‘தாங்க்ஸ் ஆன்ட்டி!’’ அருகில் வந்து தலை உயர்த்திச் சிரித்தான் கல்யாண். கிள்ளி முத்தமிட்டவள், ‘‘நல்லா படிக்கணும், அப்ப நான் கிளம்பறேன்ங்க.. வர்றேன் தினகர், வர்றேண்டா கண்ணா!’’ செல்லமாக கன்னத்தைத் தட்டினாள்.

‘‘என் பேரு கல்யாண் ஆன்ட்டி!’’

‘‘நாட்டி பாய்!’’ பிரிய மனமின்றி நகர்ந்தாள்.. நடந்தாள். அவள் பின்னாலேயே சென்ற தினகர், ‘‘ஸாரி!’’ என்று மெல்லிய குரலில் சொன்னான்.

‘‘எதுக்கு?’’

‘‘எல்லாத்துக்கும்!’’

‘‘எல்லாத்துக்கும்னா?’’

‘‘கல்யாண் உன்னை ஆன்ட்டின்னு கூப்பிட்டதுக்கு.. நீ உயிரோட இருக்கும் போதே செத்துப் போய்ட்டதா மஞ்சரிகிட்ட சொன்னதுக்கு.. எல்லாத்துக்கும்..’’

‘‘நிஜம்தானே மிஸ்டர் தினகர்! நான் ஏழு வருஷத்துக்கு முன்னாடியே செத்துப் போயிட்டேனே! அணு அணுவா உணர்ந்து, சுமந்து, உணர்வுபூர்வமாப் பேசி, ரசிச்சு, வலிக்க வலிக்க பெத்த குழந்தையை சட்டம்ங்கற அரக்கன் மூலமா பிரிச்சப்பவே.. கல்யாணோட அம்மா செத்துப் போய்ட்டாளே! உங்களை மாதிரி பணக்காரங்க சட்டத்தை ஆளணும். என்னை மாதிரி ஏழைங்க அதுல அடைபட்டுச் சாகணும். அதைத்தானே செய்தீங்க? போங்க ஸார்.. மஞ்சரியையாவது சந்தோஷமா வச்சிருங்க.’’

‘‘ஸாரி மதி!’’

அவன் வார்த்தையைக் கேட்க அடுத்த கணம் அவள் அங்கில்லை. எல்லா கேடுகளுக்கும் இரண்டு மாற்று மருந்துகள் உண்டு. ஒன்று காலம். மற்றொன்று மௌனம்.

உண்டியலில் காணிக்கை போடும் வரிசையில் நின்றவள், தன் முறை வந்தபோது, கழுத்தில் இருந்த தினகர் கட்டிய தாலிச் சரடைக் கழற்றி உண்டியலில் போட்டாள். இதுநாள் வரை சுமந்திருந்த தினகரின் நினைவுகளையும் சேர்த்துத்தான்!

இப்போது நிம்மதியாக உணர்ந்தாள்!

– ஆகஸ்ட் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *