நினைவுச் சின்னம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 27, 2014
பார்வையிட்டோர்: 10,198 
 
 

சேதுவுக்கு இன்று விடுதலை.

சட்டம் வழங்கிய தண்டனை பூர்த்தியாகிவிட்டது. இனி அவன் சுதந்திர மனிதன். இனி வார்டனால் ‘டேய்…. மகனே ‘ என எழுப்ப முடியாது. கன்னத்தில் ‘பளா ‘ ரென்று அறைந்து, ‘என்ன முறைக்கிறே ? ‘ என்று கேட்க முடியாது. நீண்டுக்கொண்டே போகும் பகலும், உறக்கமே வராத இரவுகளும் இனி இல்லை. பக்கத்தில் படுத்து தன் பிரியமுள்ள மனிதர்களுக்காக ஏங்கி, சோக கதைகள் சொல்லி, கண்ணீர் விடும் சக கைதிகளின் கதைகளை இனிக் கேட்க வேண்டாம்.

இது ஓர் அனுபவம். மறக்கவே முடியாத அனுபவம். பின்னால் வரும் வாழ்க்கையைத் திடமாக்க, கடவுள் அளித்த சோதனை….

‘ஹா… ‘ வென்று மூச்சை இழுத்தான். இதுவரை உணராத சுகமாயிருந்தது.

சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு ஜெயிலரின் அறையை விட்டு வெளியே வந்தான். வாசலை நோக்கி நடந்தான்.

அவனுக்காக சத்தத்துடன் கதவு திறந்தது. பெரிய இரும்புக் கேட்டின் வயிற்றுப் பகுதியில் சின்னக் கதவு. குனிந்துதான் வெளியேற வேண்டும். துப்பாக்கி காவலாளி ஒதுங்க, ‘வர்றேன் சார்… ‘ கடைசியாக திரும்பிப் பார்த்தான்.

‘வராதே… இங்கேயும் எழவு வீட்டிலேயும் வர்றேன்னு சொல்லக் கூடாது ‘ பெரிய வயிறு குலுங்கச் சிரித்தான் காவலாள்.

அவனுக்குச் சிரிக்க வரும் என்று சேது நினைத்ததில்லை.

முரட்டு ஆள். ஊரில் பெரிய வஸ்தாது ஆக இருந்தவனெல்லாம் அவனைக் கண்டதும், பயந்த நாய் மாதிரி ஒதுங்கி நிற்பான். முதுகில் வைக்கிற அடியில் முன் நெஞ்சு ‘கிண் ‘ ணென்று அதிரும்.

‘நேரா ஊருக்குத்தானேடா… ? ‘

‘ஆமாம் சார்… ‘

‘எந்த ஊரு ? ‘

சொன்னான்.

‘போயி ஒழுங்கா இரு. மறுபடியும் இங்கே வரும்படி நடந்துக்காதே… ‘

தான் ஒழுங்காக இருந்தவன்தான் என்று சொல்லலாமா ? நீதிபதியே நம்பவில்லை. தண்டனை அடைந்து, விடுதலையாகும்போது, அவனை நம்ப வைப்பதால் என்ன ஆகப்போகிறது ?

‘சரீங்க… ‘

அம்மா, மஞ்சுளா, சினேகிதன் வெங்கிடு, பார்சல் சர்வீஸ் முதலாளி என்று முகங்கள் வரிசையாக நீண்டன.

இந்த மூண்று மாதங்களில் அம்மா ரொம்பவும்தான் கஷ்டப்பட்டிருப்பாள். பார்க்க வருகிற நாளில் அப்படியெல்லாம் இல்லை என்று அவள் சொன்னாலும், உடம்பு காட்டிக் கொடுத்துவிடும். பாதியாகி இருந்தாள். முகம் கறுத்திருந்தது. கவலை, ஊராரின் கேவலப் பார்வை.

தன்னைக் கண்டதும் என்ன பண்ணுவாள் ?

அழுவாள். ‘உன் தலையெழுத்து இப்படி ஆச்சே ‘ ‘ எனப் புலம்புவாள். தனது தனிமையை, பணக் கஷ்டத்தை, ஊரார் உதவாததை…. எல்லாம் முடிந்தபின் கடைசியாய் அந்தக் கேள்வியையும் கேட்பாள்.

‘ஏன் அப்படி செஞ்சே ? ‘

‘மஞ்சுளாவுக்காகத்தாம்மா… ‘ சொல்லிவிடலாமா ? என்றைக்கு இருந்தாலும் தெரியவேண்டிய விஷயம்தானே அது ?

ச்சைய் ‘ அமைதியாய் ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு பெண்ணின் வரவால் எவ்வளவு மாற்றங்கள்… ?

ஆறு மாதங்களுக்கு முன்புதான் முதன் முதலாக அவளைப் பார்த்தான்.

அப்போது சரியான தண்ணீர்ப் பஞ்சம்; ஒரு குடம் தண்ணீருக்காக தெருப் பெண்கள் ஓலமிட்டுச் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்; ‘என்னடா சாமி இது… ? காலங் கார்த்தால ‘ எனத் தூக்கம் கலைந்து திண்ணையில் உட்கார்ந்த ஒருநாள் காலையில்தான் அவள் குழாயடிக்கு வந்தாள்.

அந்தத் தெரு மனிதர்களுக்குப் பொருந்தாத அமைதியான முகம்; பூப்போட்ட மஞ்சள் தாவணி; துறுதுறுத்த பார்வை; கையில் தகரக் குடம்.

‘யார்ம்மா இது ? ‘

‘செட்டியார் வீட்டுக்குப் புதுசா குடி வந்திருக்காங்க. வாத்தியார் குடும்பம். ‘

‘வேறே தெரு கிடைக்கலையா ? அவுங்களுக்கு ? இங்கேதானா வரணும் ? ‘

சேது சிரித்தான்.

அம்மா பதில் சொல்லவில்லை.

வந்தவள் சண்டைகளைக் கண்டு மிரண்டு போனாள். கழுத்துப் பாசியைக் கடித்தபடியே தயங்கித் தயங்கி நின்றாள்; கொஞ்ச நேரத்திற்கு ஒரு தடவை,

‘ஏங்க…. எனக்கு ஒரு குடம் விடுங்க ‘ என்றோ, வரிசையாப் பிடிச்சா எல்லோருக்கும் கிடைக்கும் ‘ என்றோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவளை யாரும் சட்டை பண்ணப் போவது இல்லை என்றே சேது நினைத்தான். அப்படித்தான் ஆயிற்று. கொஞ்ச நேரத்திலேயே தண்ணீர் நின்றுவிட, காலி குடத்தை எடுத்துக் கொண்டு நடந்தாள்.

‘பாவம்மா அந்தப் பொண்ணு… முதல் நாள்லியே வெறும் குடத்தோட போகுது. ‘

‘அதுக்கு நாம் என்ன பண்றதுடா ? ‘

ஏதாவது செய்யத்தான் வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

அவசரமாகக் குளித்தான்; சாப்பிட்டான்.

‘வர்றேம்மா… ‘

செட்டியார் வீட்டருகில் வந்ததும் தயங்கி நடந்தான்.

மஞ்சுளாவின் முதுகு தெரிந்தது; உள்ளே ஒரு நடுத்தர வயதுக்காரி அவளைத் திட்டிக் கொண்டிருந்தாள்.

‘பார்த்தீங்களா உங்க அருமை மகளை… ? நாலு பாத்திரம் துலக்க ரெண்டு குடம் தண்ணி செலவு பண்ணியிருக்கா… ‘

‘என்னம்மா… ? ‘ – ஆண் குரல்.

‘தெருக் குழாயில் பிடிக்கலாம்னு நினைச்சேன்பா…. பாத்திரமும் அதிகம். ‘

‘நினைச்சாப் போதுமா… ? புடிச்சிட்டு வந்தியா ? ‘ – பெண்.

‘பாதியிலேயே நின்னிருச்சு; வர்றதையும் இங்க யாரும் வரிசையாய்ப் புடிக்க மாட்டேங்கிறாங்கப்பா… ‘

‘மத்தவங்களுக்கு எப்படியம்மா கிடைக்குது ? ‘

‘அது வந்து…. வரிசையா நின்னா…. ‘

‘நாளைக்கு சீக்கிரம் போயிடு… ‘

‘சரீப்பா… ‘

‘கிணத்துல இருந்து தண்ணி இழுக்க எனக்குத் தெம்பு இல்லை; அவளையே புடிச்சு நிரப்பச் சொல்லுங்க… ‘

சேது திகைத்தான்; வீட்டு நிலைமைகள் இலேசாகப் புரிந்தன.

அவளுக்கு அம்மா இல்லை. சித்தி ‘ இரண்டாம் கல்யாணம் பண்ணும் பலரைப் போலவே, வாயில்லாத அப்பா.

அடுத்தநாள் அவன் கண் விழிப்பதற்கு முன்னதாகவே அவள் குழாயடிக்கு வந்துவிட்டாள்; அன்றைக்கு முதல் நாளைவிட ரகளை அதிகம்.

‘பாவம்மா… புது இடம்; நீயே புடிச்சுக் குடுத்திடும்மா… ‘

இரண்டு நாட்கள் கழித்து, அவனுக்காக வீட்டு வாசலில் நின்றிருந்தாள்; அவன் கடந்து செல்லும்போது கிசுகிசுத்த குரலில்.

‘ரொம்ப நன்றிங்க ‘ என்றாள்.

‘எதுக்குங்க ? ‘

‘உங்க அம்மாகிட்டே சொன்னீங்களாமே… எனக்கு ஒரு பெரிய பிரச்னை தீர்ந்திச்சு… ‘

அதன்பின் சேது தற்செயல் போல அவளது வீட்டைப் பார்ப்பது வழக்கமாகி விட்டது.

ஒருமுறை சித்தியின் குழந்தைகளை ஸ்கூலில் விட்டு விட்டுத் திரும்பும்போது வழியில் சந்தித்து கொண்டார்கள். ஒன்றிரண்டு வார்த்தைகளில் அவனைப் பற்றித் தெரிந்து கொண்டாள். பதிலுக்கு அவன் அவளது பெயரை மட்டும் கேட்டறிந்தான்.

மஞ்சுளா… அவனுக்கு பிடித்திருந்தது.

சேது சொன்னதை முதலில் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை; பொன்னன் மனைவி நேரடியாகச் சண்டைக்கு வந்தாள்,

‘இதென்ன புதுசா வரிசைக் கணக்கு, இங்க அதெல்லாம் ஒத்து வராது… ‘

பொன்னன் அவனுக்கு தொழில் எதிரி; அவனும் பார்சல் சர்வீஸ் ஆள்தான். ஆனால் இரண்டு பேரின் முதலாளிகளுக்கும் ஆகாது. அதை மனத்தில் வைத்துக் கொண்டுதான் பேசுகிறாளா ?

‘இப்பவும் வரிசையாத்தான் பிடிக்கிறோம்; தகர டப்பா ஓட்டைப் பாத்திரம்னு அடையாளம் வச்சுக்கிட்டு…. ‘ சந்தேகமாக இழுத்த சில பெண்டுகளுக்கு மட்டும் விளக்கிச் சொன்னான்.

‘டோக்கன் முறை நல்லதும்மா…உனக்கு என்ன நம்பர்னு முதல்லியே தெரியும். அந்த நேரத்துக்கு வந்தாப் போதும். இங்கே நின்னு நேரத்தை வீண் பண்ண வேணாம் ‘

‘அட பரவாயில்லையே… ? ‘

‘இப்படிக் கூட உண்டா ? ‘

‘என்னவோப்பா…எங்களுக்குத் தண்ணீர் கிடைச்சா சரி… ‘

பொன்னனின் மனைவி மட்டும் இன்னும் அதே பிடிவாதத்தில் இருந்தாள்.

‘எல்லோரும் ஏத்துக்கிட்ட பிறகு என்ன கெடக்கு ? ஒண்ணாந் தேதியில் இருந்து டோக்கன் முறைதான் ‘ சேது கண்டிப்பாகச் சொன்னான்.

‘நான் ஒத்துக்க மாட்டேன்; நாளைக்கு என் புருஷனையும் கூட்டிட்டு வர்றேன். ‘

மறுநாள் – பொன்னனின் மனைவி வந்தாள்; எந்தக் கணக்கும் இல்லாமல் இடையில் குடத்தைக் கொண்டு போய் நீட்டினாள்.

‘டோக்கன் வாங்கினாத்தான் விடமுடியும்… ‘

‘நிஜமாவா ? ‘

‘ம்… ‘

‘ஏய்யா…இங்க வா…என்னன்னு கேளு… ‘

எங்கிருந்தோ பொன்னன் வந்தான். வரும்போதே கர்ஜனை: ‘குடத்தை வையிடி…எவன் தடுக்கிறான்னு பார்ப்பம்… ?

சேதுவுக்குக் கோபம் வந்து விட்டது.

‘நல்லது செஞ்சா ஏத்துக்கத் தெரியணும். இல்லேன்னா அதைக் கத்துத் தர வேண்டியதுதான் வரும். நீ மட்டும்தான் ஆம்பளையா… ? குடத்தை வச்சுப்பாரு தெரியும்… ‘

வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டான்; அவள் குனிந்து வைக்கப் போன குடத்தைக் காலால் உதைத்து உருட்டினான். வாய்த் தகராறு ஆனது. பின்பு கைகலப்பு நடந்தது. சேது அவனைத் தூக்கி உதறியதில் பொன்னன் கீழே விழுந்தான். மண்டை உடைந்தது. இரத்தம் கொட்டும் வெளிக்காயம் ‘

முதலாளி பொன்னைக் கொம்பு சீவிவிட்டார். சட்டம் சேதுவைப் பிடித்துக் கொண்டது. போலீஸ், கோர்ட்டு, விசாரணை என என்னென்னவோ நடந்து, கடைசியில், ‘குற்றம் ருசுவானதால் மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கிறேன்… ‘ என முடிந்தது.

சேது பஸ்ஸை விட்டு இறங்கினான்.

முதலில் வீடு—அம்மா—பிறகு மஞ்சுளா—வெங்கிடு—முதலாளி.

அட்டவணையை முதலில் உடைத்தது வெங்கிடுதான்.

‘சேது…டேய்…. ‘

தேரடியை நெருங்கும்போது, ஓடிவந்தான்.

வெங்கிடுவின் கையைப் பற்றிக்கொண்டு முடிந்தவரை வேகமாக நடந்தான். சொந்தத் தெருவிற்குள் நுழையும்போது கூசியது. தன் மீது துடைக்க முடியாத அசிங்கம் ஒட்டிக்கொண்ட மாதிரியும், துர்நாற்றம் வீசுகிற மாதிரியும்…

இனி பழைய சேதுவாக யாரும் நினைப்பார்களா ? அல்லது இருபுறமும் போலீஸ் வர, வேனில் ஏறிய சேதுதான் ஞாபகத்திற்கு வருமா ? ‘தெரியாதா உன்னை ‘ ‘ என உள்ளுக்குள் சிரிப்பார்களா ?

ஒதுங்கு. எல்லோரிடமிருந்தும் ஒதுங்கிவிடு. அம்மாவும், மஞ்சுளாவும், ஒன்றிரண்டு சினேகிதர்களும் போதும் உனக்கு.

‘மஞ்சுளா எப்படி இருக்கு ? வீட்டை நெருங்கும்போது மெதுவாக விசாரித்தான்.

‘எந்த மஞ்சுளா ? ‘

‘வாத்தியார் மகள். தெரியாதா உனக்கு ? ‘

வெங்கிடு தயங்கினான். பிறகு நிதானமான வார்த்தைகளில், ‘அவுங்க ஊரைக் காலிப் பண்ணிட்டுப் போயாச்சு… ‘ என்றான்.

‘என்னது ? ‘

‘நம்ம ஜனங்களைத் தெரியாதா ? உங்க விஷயம் எப்படியோ தெரிஞ்சு போச்சு. ஊதி ஊதிப் பெரிசாக்கிட்டாங்க. அவுங்க அப்பன் அந்தப் பொண்ணை அடிச்சு நொறுக்கினாரு. அடுத்த வாரமே மாற்றல் வாங்கிட்டுச் சொந்த ஊருக்குப் போயிட்டாரு. அங்கே எவனுக்கோ ரெண்டாந்தாரமாக் குடுத்திருக்கிறதாப் பேச்சு… ‘

சேதுவுக்குக் கண்களை இருட்டியது.

இதற்காகவா இத்தனை பாடு ? அவமானம் ? வாழ்க்கையைப் பணயம் வைத்தது ?

கடவுளே ‘

அம்மா அன்று முழுவதும் அவனை வெளியே விடவில்லை. முதலாளியைப் பார்க்க வெங்கிடு கூப்பிட்டதற்குக் கூட, ‘நாளைக்குப் போகலாம் ‘ என்று தடுத்துவிட்டாள்.

சேதுவுக்கு தோஷம். வேண்டியிருந்த சாமிகளுக்குப் பரிகாரம் செய்த பின்பு எங்கேயும் போவதுதான் நல்லது.

குளிக்க வைத்து, கோயிலுக்கு, ஜோசியர் வீட்டிற்குக் கூட்டிப் போய், பரிகாரச் செலவு செய்து, விருப்பமானதைச் சமைத்துப் போட்டு, முதலாளி மீண்டும் சேர்த்துக் கொள்வாரா என அவன் கவலைப்பட, ‘இருக்கட்டும். அதனால் என்ன செத்தா போயிடுவோம். அவரு இல்லேன்னா இன்னொருத்தரு ‘ எனச் சமாதானம் கூறி…

சேது ஆச்சரியப்பட்டான். புது அம்மாவா ? சம்பளம் இரண்டு நாள் தாமதமாக வந்தாலே புலம்புவாளே ‘ சோதனைகளைத் தனி ஆளாகச் சமாளித்துப் பழகியதில் நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது போலும்.

மஞ்சுளாவும் மாறிவிட்டாள். இல்லாமல் இரண்டாம்தாரக் கிழவனுக்கு ஏன் சம்மதிக்கிறாள் ?

எவ்வளவு சுலபமாக இவையெல்லாம் நிகழ்ந்துவிடுகின்றன ?

அம்மா நிறையப் பேசினாள்.

அவள் கஷ்டப்பட்டது—உதவி செய்தவர்கள்—செய்யாதவர்கள்—ஊர் நடப்பு…

‘அந்த நாசமாப் போனவன்…உன்னைக் கெடுத்தானே பொன்னன். இப்ப ஆஸ்பத்திரியில் கெடக்கான். வயித்துல ஏதோ கட்டியாம். ஆபரேஷன் பண்ணி இருக்கு, மகமாயி கூலி கொடுத்துட்டா…. ‘

‘பாவம்மா…முதலாளி தூண்டி விட்டதுக்கு இவன் என்ன பண்ணுவான் ? ‘

‘காரியத்துல இறங்கினது இவன் தானே… ‘

‘தூண்டிவிட்டவன் நல்லாத்தானே இருக்கான்… ஒண்ணும் ஆகலையே ? ‘

அம்மா பதில் சொல்லவில்லை.

திடாரெனச் சேதுவுக்கு, தான்—மஞ்சுளா—பொன்னன் எல்லோரும் ஒரே நேர்க்கோட்டில் வருவதைப் போல இருந்தது.

கஷ்டங்கள், தெய்வ சோதனை எல்லாம் ஏன் இப்படி ஒரே தளத்திலேயே மையம் கொள்கின்றன ?

அம்மா அவனுக்குச் சந்தோஷத்தைத் தருகிற இன்னொரு செய்தியையும் சொன்னாள். ‘இப்பல்லாம் நீ சொன்ன மாதிரி டோக்கன் வச்சுதான் தண்ணி விடறாங்க. அதுக்குன்னு ஓர் ஆளையே போட்டிருக்கு… ‘

சேது தனது கேள்விக்கான பதிலை யோசித்துக் கொண்டிருந்ததால் அவள் எதிர்பார்த்த சந்தோஷத்தை அவனால் காட்டிக் கொள்ள முடியவில்லை.

– ஜூலை 2000

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *