நாவப்பழம்..! நாவப்பழம்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 11, 2022
பார்வையிட்டோர்: 4,188 
 
 

“நாவப்பழம்…! நாவப்பழம்…!” குரல் கேட்டு திரும்பினேன்.

தலையில் மூங்கில் கூடை சுமை. வயிறு வேறு பெரிசாய் எட்டு மாதம். வியர்வை ஒழுகும் முகம். அவள் அசைந்து அசைந்து வருவதைப் பார்க்கவேப் பாவமாக இருந்தது. கூடவே எட்டு வயது சிறுவன் வேறு. மேல் சட்டை போடாமல் அரைக்கால் டிரவுசரோடு அவன் தலையிலும் ஒரு சின்ன கூடை. அவளை ஒட்டி வந்தான்.

வறுமை எவ்வளவு கொடுமை..?? !!

வயிற்றில் சுமையோடு தலையில் பாரம் சுமந்து பாவம் இவள் பிழைப்பு. படிக்கும் வயதில் சிறுவர் தொழிலாளிகள் சட்டப்படி குற்றம் என்பது தெரிந்து , தெரியாமல் இந்த சிறுவன் தலையிலும்ல சுமை , பிழைப்பு, உழைப்பு !!

அப்பப்பா..!! – எனக்குள் நடுக்கியது. சமாளித்து….

“நாவப்பழம் !” அழைத்தேன்.

“ஐயா..!” அவள் எட்டி நடை போட்டு வந்தாள்.

சிறுவன் அவள் வேகத்திற்கு ஈடு கொடுத்து லொங்கு லொங்கென்று ஓடி வந்தான்.

அவள் கஷ்டம் புரிந்து….

“அவசரமில்லை. மெதுவா வாம்மா…!” பரிவுடன் சொல்லி சாலையோரம் உள்ள ஆலமர நிழலில் ஒதுங்கினேன்.

இவள் கூடையில் உள்ளே உள்ள பழங்கள் மொத்தப் பழங்கள் எவ்வளவு விலை போகும்..?…. நூறு..? இருநூறு..?! – மனம் கணக்குப் போட்டது.

பையன் கூடையையும் சேர்த்தால் ஒரு நூறு அதிகம். இந்த அளவைவிட அது அதிகம் தாண்டாது.!! மனம் கணித்தது.

இந்த மூன்று நூறு ரூபாயில் ஒரு குடும்பம் குடித்தனம் ஜீவனம்.! இந்த தாய், பிள்ளை மட்டும் குடும்பமாய் இருக்க முடியாது. மேலும் இரண்டு மூன்று பிள்ளைகள், பையன் தகப்பன், தாத்தா, பாட்டி என்று எத்தனை பேர்களோ..?

இத்தனை நபர்களுக்கும் இந்த வருமானம்தான் ஜீவனாமா..? வேறு வருமானம் உண்டா..? வேறு வருமானம் உண்டென்றால்… இவள் ஏன் வயிற்றுப் பிள்ளையுடன், பெற்றப்பிள்ளையையும் சேர்த்துக் கொண்டு உழைக்க வேண்டும்..?!

“எவ்வளவு வேணும்ய்யா..?” அவள் குரல் கலைத்தது.

கூடையை இறக்கினாள். கூடையில் பாதி அளவு பழங்கள் இருந்தது. அதன் மேல் கால்படி, அரைப்படி, ஒரு படி என்று அளவைகள் கிடந்தது.

வீட்டில் நான், மனைவி, இரு பிள்ளைகள் என்று சிறு குடும்பம். ஒரு படி வாங்கி சென்றால் அவ்வளவையும் தின்ன ஆட்கள் கிடையாது. மேலும்…. ஒரேமூச்சாக அதிகமாக நாவற் பழங்கள் தின்றால் தொண்டை கட்டும், சுரம் வரும்.

“எதுக்கு இவ்வளவு..?” மீனாட்சி கத்துவாள்.

“காசு குறைச்சல். கை நிறைய கிடைக்குதுன்னா.. கழுதை சாணியையும் வாங்கிக்கிட்டு வந்துடுவீங்க…?” என்று கடுகடுத்து, முணுமுணுத்துத் தூக்கி எறிவாள்.

புகை, மது பழக்கங்கள் என்னிடமில்லை. ஒரு காலத்தில் இருந்தது. அதற்கென்றே ஒரு கணிசமான தொகை செலவாகியது. பையன்கள் வளர்ந்து நான்கைந்து வயதுகளைத் தொட்டு வளர்ந்து முகம் சுளிக்க… செலவு வேறு தண்டம் என்று விட்டொழித்தாகிவிட்டது. மேலும் ஒரு வயதான விதவை வெள்ளரிப்பிஞ்சு கூடையில் சுமந்து விற்றாள். அப்படி செலவாகும் பணத்தை இப்படிப்பட்ட ஏழை உழைப்பாளிகளுக்கு கொடுத்து உதவலாம் தோன்ற… அன்றையிலிருந்து ஒட்டியிருந்த சீட்டாட்டம் கெட்டப் பழக்கமும் சுத்தமாக ரத்து !!

‘இப்போது இவர்களுக்கு உதவ… எவ்வளவு வாங்கலாம்..?’ என்று யோசித்த மனம்…அவள் கழுத்தைக் கவனித்தது. மனம் பக்கென்றது.

“உங்களுக்குப் புருசன்..?” இழுத்தேன்.

“குடி செத்துடுச்சி..”

“உங்க ஊர்ல சாராயக்கடை இருக்கா..?”

“அதான் கிராமத்துக்குக் கிராமம் தொறந்து கிடந்து குடியைக் கெடுக்காதே அரசாங்கத்துக் கடை” என்றாள். குரலில் காழ்ப்பு, காட்டம் கலவை.

“உங்க வயசு…?”

“இருபத்தி ஆறு..!”

“புள்ளைங்க.. ?”

“அதான் வயித்துல இருக்கு..!”

“வீட்டுக்காரர் இப்பத்தான் இறந்தாரா..?”

“ஆமாம். ஆறு மாசமாச்சு!”

“பக்கத்துல நிக்கிற பையன்..?”

“கொழுந்தன். ! ”

“என்ன கொழுந்தனா… ஆ… ஆ…?!!…” சன்னமாக அதிர்ந்து அலறினேன்.

“ஆமா. இதோட அண்ணன்தான் என் வயித்துல புள்ளையைக் குடுத்துட்டு ஆறு மாசத்துக்கு முன்னாடி குடியில செத்துப் போச்சி. இந்தப் பையன் இல்லாம இன்னும் ரெண்டு சின்ன தங்கச்சிங்க இருக்காங்க. கண்ணு மண்ணு தெரியாத அம்மா. அப்பா கிடையாது.

எல்லாருக்கும் வயித்துச் சோத்துக்குக் கூட வழி இல்லாம, ஒரு பொண்டாட்டியையும் கட்டி அவளையும் புள்ளத்தாச்சியாக்கி எங்களையெல்லாம் நிர்க்கதியாக்கிட்டுப் போய்ட்டியேடா, இனி நாங்க எப்படி பொழைப்போம்….?” னு மகன் செத்த அன்னைக்கு பொணத்தைக் கட்டிக்கிட்டு அத்தையை ஒப்பாரி வைச்சி கதறினாங்க. மனசு பிச்சுக்கிட்டுப் போச்சு.

அப்பதான் சுதாரிச்சேன். சரி. இனி இதுங்களைக் காப்பாத்தி கரை சேர்க்க வேண்டியது நம் பொறுப்பு, கடமை. நாமதான் இந்த வீட்டுக்கு ஆம்பளப்புள்ள. செத்துப்போன மூத்தப் புள்ள. உழைக்கனும்னு மறுநாளே தலையில சும்மாட்டைக் கட்டிட்டேன். காலையில காய்கறி. சீசன் நேரத்துல…நாவப்பழம், எலந்தப் பழம், வெள்ளரிப் பிஞ்சு, பழம்னு ஒரு நாள் விடாம இடை விடாமல் தூக்கி தெருத்தெருவா சுத்தறேன். அப்படி சுத்தினாத்தான் எங்களுக்கு அரை வயிறு நனையுது.

பொட்டப்புள்ளைங்க ரெண்டும் படிக்கப் போகுதுங்க. இந்தப் பையனையும் எனக்குப் படிக்க அனுப்பத்தான் ஆசை. எனக்கு வாயை வயித்தை வலிச்சி, மயக்கம் வந்தா என்ன பண்றது..? ‘ நீ சாதாரண பெண்ணில்லே. வயித்துப் புள்ளைக்காரி. புள்ளைத்தாச்சி. இந்தப் பையனால உதவ முடியலைன்னாலும் உன்னை அப்படியே உட்கார வச்சாவது உதவிக்குப் போய் ஆள் கொண்டு வந்து உன்னைக் காப்பாத்துவான் ‘ னு அத்தை இவனை என்னோட வற்புறுத்தி அனுப்பறாங்க.

மருமகள் இப்படி கஷ்டப்படுறாளேன்னு நினைச்சி,… நாங்க எப்படியாவது போறோம்.. நீ எவனையாவது மறுமணம் செய்துகிட்டு நல்லா இரும்மான்னும் கிழவி கண் கலங்கிச்சு. புருசனுக்கு அப்புறம் பொண்டாட்டிதானே குடும்பத்துக்குத் தலைமான்.! அப்படி போக முடியுமா..? அந்த வாழ்க்கையே வேணாம். இதுதான் என் வீடு. வயித்துலப் புள்ளை இல்லேன்னாகூட நீங்கதான் என் சொந்தம். உங்களை வச்சி காப்பாத்துறது என் கடமைன்னு சொல்லிட்டேன். கிழவி கம்முன்னு ஆயிடுச்சி.” சொல்லி நிறுத்தி முகம் துடைத்தாள்.

இவள் இருபத்தைந்து வயது இளம் பெண்ணில்லை. தன் கணவன் இழந்த பின்பும் இடியாமல் கணவனுக்குப் பின் மனைவிதான் குடும்பத் தலைவி என்பது உணர்ந்து திடமாக இருக்கும் முதிர்ச்சியானவள். இவ்வளவிற்கும் தன் பிறந்த வீடுகூட கிடையாது. புகுந்த வீடு. அவர்களைக் காப்பாற்ற தன் மறுமணத்தையும் மறுத்து நிற்கிறாளென்றால் இவளை என்னென்று சொல்வது.? எவரையும் எதிர்பார்க்காமல் உழைப்புதான் உயர்வு அதுதான் நமக்குச் சோறு போடும் தீர்வு !! என்று தெளிந்து தெரிந்து நிற்கிறாளென்றால்..எப்பேர்ப்பட்ட உயர்ந்த உள்ளம் !..?

மனசுக்குள் மடமடவென்று உயர்ந்தாள்.

“படி அம்பது. எவ்வளவுக்கு சார் வேணும்…?” கேட்டு கலைத்தாள்.

நான் அவளை மதிப்பாய்ப் பார்த்து…

“ரெண்டுபடி!” சொல்லி நூறு ரூபாய் எடுத்தேன்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *