நாளை மற்றுமொரு நாளே…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 18, 2023
பார்வையிட்டோர்: 6,681 
 
 

(1974ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-7 | அத்தியாயம்-8

அதுதான் கந்தன் தானாகவே வாதிட்ட முதல் போலீசுக் கேசு. பொன்னுச்சாமி ஏட்டையா ஒன்றாவது சாட்சியாக, கந்தன் செய்த குற்றத்தைத் தான் நேரிலேயே கண்டதாகவும், அவனை உடனேயே ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றதாகவும் வாக்குமூலம் கொடுத்தார். கந்தன் அவரைக் குறுக்கு விசாரணை செய்ய ஆரம்பித்தான். 

“வக்கீல் யாரும் வச்சிக்கலயா?” என்று மீண்டும் கந்தனைக் கேட்டார் மாஜிஸ்டிரேட். 

“இதென்ன கேசுங்க எசமான், வக்கீல் வைக்க? அன்னைக்குக் கூட ஏட்டையா என்ன சொன்னார் தெரியூங்களா?’தம்பி, நீ ஒண்ணும் பயப்படாதே. வருசம் முடியுதேன்ட்டு ரெக்கார்டுக்குத்தான் இப்படி ஒரு கேசு. குத்தத்தெ ஒத்துக் கிட்டேனா, நான் எசமான்கிட்டே சொல்லி இருபது, முப்பது ரூவா பைனோடெ விட்டுறச் சொல்லிடறேன்’ட்டுனா சொன் னாருங்க எசமான்” என்று கந்தன் கூறவும், மாஜிஸ்டிரேட் சிரித்துவிட்டார். அவர் சிரித்தது உறுதியானதும் சில வக்கீல் கள் சிரித்தனர். வக்கீல்கள் சிரித்ததைக் கேட்டதும் கோர்ட்டில் சுற்றியிருந்த இதரரும் சிரித்துக்கொண்டே, ஒருவரையொருவர் என்னவென்று கேட்டுக் கொண்டனர். ஒருமுறை கோர்ட் டில் இருந்த கூட்டத்தைத் தற்செயலாகப் பார்ப்பதுபோல் சுற்றிப் பார்த்துவிட்டு, சற்றுச் சிரித்த முகத்துடனேயே, கந்தன் பக்கம் திரும்பினார் மாஜிஸ்டிரேட். பொன்னுச்சாமி ஏட்டையா முகத்தைச் சுளித்துக்கொண்டார். 

குறுக்கு விசாரணையின்போது பொன்னுச்சாமி ஏட்டையா வைக் கந்தன் கேட்ட முதல் கேள்வி, “ஏட்டையா ஒங்களெப் பொடியன் பொன்னுச்சாமின்ட்டு எல்லாரும் கூப்பிடறதுண்டா?” என்பதுதான். கேள்வியைக் கேட்டதும் கண்களை அகல விரித்துக் கந்தனைப் பார்த்துவிட்டு மாஜிஸ்டிரேட் பக்கம் திரும்பினார் ஏட்டையா. 

“என்ன கேட்டே?” என்றபடி, கந்தனுக்கு நேரே தலையை நீட்டினார் மாஜிஸ்டிரேட் 

“ஏட்டையா பொன்னுச்சாமிக்குப் பொடியன் பொன்னுச் சாமீன்ட்டு ஊர்ல ஒரு பெயர் உண்டில்லேன்ட்டுக் கேட்டேன்” என்றான் கந்தன். 

“என்ன, பொடியன் பொன்னுச்சாமியா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் மாஜிஸ்டிரேட். அடுத்த கணம் குரலை மாற்றிக்கொண்டு, “இந்தாப்பா, ஏட்டையாவுக்கு வீட்லேயும் ஊருலேயும் ஆயிரத்தெட்டுப் பட்டப் பெயர் இருக்கும். அதுக்கும் கேசுக்கும் என்ன சம்பந்தம்?” என்றார். 

“சம்பந்தம் இருக்குங்க” என்றான் கந்தன். 

“என்ன சம்பந்தம்?” என்றார் மாஜிஸ்டிரேட்.

கந்தன் சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டு, “எனக்கும் ஏட்டையாவுக்கும் முன்விரோதம் உண்டுங்க” என்றான், 

“அது சரி, இப்ப ஒம்மேலே உள்ள குத்தத்துக்கு என்ன சொல்லறே? பதினெட்டாம் தேதி ஞாயித்துக்கிழமை அன்னிக்கு, சாயந்திரம் அஞ்சு, ஆறு மணிக்கெல்லாம் நீ பொருட்காட்சித் திடல்லதானே இருந்தே?” என்றார் மாஜிஸ்டிரேட் 

“ஏட்டையா சொல்றது முளுப் பொய்யுங்க. அவர் ஞாயித்துக் கிளமை சாயங்காலம் பொருட்காட்சித் திடலுக்குப் போயிருந் தாரூங்கறாரு; ஆனா, அதெக்கூட என்னாலே நம்ப முடியலீங்க.” 

“ஏன்” என்று கேட்டார் மாஜிஸ்டிரேட். 

“ஞாயித்துக்கிளமை சாயங்காலம்னா, சிட்டி கிளப்புலே பெரிய பெரிய செட்டுக சேருங்க…” என்று கந்தன் ஆரம்பிக்கவும், “இந்தக் கதெயெல்லாம் இங்கே அளக்காதே” என்று குறுக்கிட்டார் மாஜிஸ்டிரேட். 

“கதை அளக்கலீங்க எசமான். எனக்கும் ஏட்டையாவுக்கும் முன் விரோதம் உண்டுங்க; அந்தக் கோபத்துலேதான்…” என்று இழுத்தான் கந்தன். 

“அப்ப ஏட்டையா சொன்னதெல்லாம் நீ மறுக்கறே, இல்லையா?” என்றார் மாஜிஸ்டிரேட். 

ஏட்டையா இலேசாகக் கனைத்துக்கொண்டார்.

“ஆமாங்க எசமான், அவர் சொல்றதெல்லாம் பச்சைப் புளுகூங்க” என்றான் கந்தன். 

“அப்ப என்ன நடந்திச்சி?” 

“என்னிக்கு எசமான்?” 

“ஞாயிற்றுக்கிழமை பதினெட்டாம் தேதி அன்னிக்கு.”

“ஞாயித்துக்கிளமை ஒண்ணும் நடக்கலீங்க. வெள்ளிக் கிளமைதான் நானும் ஏட்டையாவும் சந்திச்சுக்கிட்டதே.” 

அதற்குள் ஏட்டையா மாஜிஸ்டிரேட்டிடம், “ஞாயித்துக் கிழமே நடந்தது பத்திதான் கேசு. அதெப்பத்தி எதுவும் எதிரி கேக்கறதுன்னா கேக்கட்டும்” என்றார். 

“உம், சரி” என்று சற்றுக் கடுமையோடு கூறிவிட்டு, கந்தன் பக்கம் திரும்பி, “வெள்ளிக்கிழமை நடந்ததுக்கும் இந்தக் கேசுக்கும் என்ன சம்பந்தம்?” என்றார் மாஜிஸ்டிரேட் 

அதற்குள்ளே ஏட்டையா, “எசமான் எதிரியெப்பத்தி ஒங்களுக்குத் தெரியாதுங்க. அவுனுக்கு டவுன்ல அவ்வளவா நல்ல பெயர் கெடெயாதுங்க. இந்தக் கேசு சம்பந்தப்பட்டதே மட்டும் ஏதாச்சியும் சொல்லணூம்னா சொல்லச் சொல்லுங்க” என்றார் கொஞ்சம் கண்டிப்புடனே. 

ஏற்பட்ட எரிச்சலை மறைக்காதவராய், “நீ என்னப்பா சொல்றே இப்ப?” என்றார் மாஜிஸ்டிரேட் கந்தனிடத்து. 

“நான் ஏட்டையாவே ரெண்டு மூணு கேள்வி கேக்கணூங்க, அவ்வளவுதான்” என்றான் கந்தன். 

“சரி, சுருக்கமா சட்னு கேளு” என்றார் மாஜிஸ்டிரேட், 

கந்தன் ஏட்டையா பக்கம் திரும்பி, அதே கேள்வியைத் திரும்பக் கேட்டான்: “உங்களைப் பொடியன் பொன்னுச்சாமீன்ட்டு எல்லாரும் சொல்றதுண்டா?” 

“எனக்குத் தெரிஞ்சு யாரும் என்னை அப்படிச் சொன்னதில்லே” என்றார் ஏட்டையா. 

“அப்ப ஒங்களுக்குத் தெரியாமே எல்லாரும் சொல்லிட்டிருக்கலாம் இல்லையா?” என்றான் கந்தன், சிரிக்காது. 

ஏட்டையா முழித்தார். 

வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு “உம், அடுத்த கேள்வி” என்று கடித்துத் துப்பினார் மாஜிஸ்டிரேட். 

இரண்டு வக்கீல்கள் ‘பக்’கென்று சிரித்தனர். மற்றொரு வக்கீல் இருமிக்கொண்டார். 

“இந்தா, இங்கே திருவாளத்தான் மாதிரி நடந்துக்கக் கூடாது, தெரியுமா? நியாயமான கேள்வியை நியாயமாக் கேளு” என்றுவிட்டு, பொருத்தமான அளவுக்குச் சிரித்துக் கொண்டார் மாஜிஸ்டிரேட். வக்கீல்கள் சிறிது பேசிக்கொண் டனர். ஒரு வக்கீல் உட்கார்ந்தபடியே கந்தனைப் பார்த்து, “அனாவசியமா கோர்ட்டாரைப் பகைச்சுக்காதே” என்று கந்தனுக்கு அறிவுரை தருவதுபோல் எச்சரித்தார். வேகமாகவே அந்தத் திசையிலிருந்து முகத்தைக் கந்தன் பக்கம் திருப்பி, “உம்” என்று உத்தரவிட்டார் மாஜிஸ்டிரேட். 

கந்தன் ஏட்டையா பக்கம் திரும்பிக் கேட்டான்: “போன வெள்ளிக்கும் முந்தின வெள்ளிக்கௌமை, சொமார் ஆறு ஏளு மணிக்குச் சாயந்தரம் நீங்க இஸ்மாயில்புரத்திலிருக்கிற பாலர் விடுதிக்குப் பக்கல்லே இருக்கே சவுரிமுத்து டீக்கடை, அந்தக் கடெக்கு வந்தீங்களா?” 

“எதாச்சியும் சோலியாப் போயிருக்கலாம். நெனெப்பில்லே” என்றார் ஏட்டையா. 

கந்தன் தொடர்ந்தான். “ஏட்டையா டுயூட்டி பாக்கறது தெப்பக்குளம் ஸ்டேஷன்ல. குடியிருப்பு வஸ்தாதுபேட்டை போலீசு லைன்ல. பாலர் விடுதி இருக்கிறதோ, டவுனுக்கும் இன்னொரு கோடீல இஸ்மாயில்புரத்துலே. அவ்வளவு தூரம் தள்ளி பாலர் விடுதிக்குப் போனீங்கனா, என்ன காரியமா அங்கே போனீங்கனூ கூடவா நெனெவில்லே” என்று கேட்டான் கந்தன். 

ஒரு கிழட்டு வக்கீல் வாய்விட்டுச் சிரித்தார். மாஜிஸ்டிரேட் கந்தன் பக்கம் முழுக்கவனத்தோடு திரும்பினார். 

“ஏதாவது கேசு விஷயமாப் போயிருப்பேன்” என்றார் ஏட்டையா. 

“அது என்ன கேசூன்னு நெனெவிருக்குங்களா?” என்றான் கந்தன். 

ஏட்டையா மாஜிஸ்டிரேட்டிடம் திரும்பி, “போலீஸ் உத்தியோகஸ்தர் கிட்டே மரியாதையாக் கேள்வி கேட்கச் சொல்லுங்க, எசமான்” என்று முறையிட்டார். 

“உண்டு, இல்லை, சொல்ல முடியாது, சொல்லத் தேவை யில்லைனு நீங்க ஸ்ட்ரெயிட்டா பதில் சொல்ல வேண்டியது தானே?” என்றார் மாஜிஸ்டிரேட். 

“அவன் அவனோடெ திருவாளத்தான்தனமெல்லாம் இங்கே காட்டிட்டிருக்கான்” என்று தொடர்ந்து ஏட்டையா குறை சொன்னார். 

“அதெப் பாத்துக்கத்தான் நான் இங்கே இருக்கேனே! டோன்ட் யு ஒர்ரி அபவுட் இட். உம், ப்ரொசீட்” என்றார் மாஜிஸ்டிரேட். 

“அதெல்லாம் சரிங்க எசமான். எதிரி எப்படிப்பட்டவன், உண்மைலே என்ன தொளில் பாக்கறான்ட்டு எல்லாம் உங்களுக்குத் தெரியாதுங்க” என்றார் ஏட்டையா. 

“எல்லார் பொளெப்பும், அப்படியோ இப்படியோ பிடுங்கித் தின்ன…” என்று கந்தன் ஆரம்பித்தான். 

அப்போது ஒரு கான்ஸ்டபிள் மாஜிஸ்டிரேட் முன் வந்து நின்று, ஏக தடபுடலோடு சலாம் செய்துவிட்டு, நேராக மாஜிஸ்டிரேட்டின் காதருகே சென்றான். இருவரும் ஒரு நிமிடம் காதோடு வாயாக இரகசியம் பேசினர். கான்ஸ்டபிள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தோடு, தனது தலையீடு வெற்றி கண்டு விட்டதுபோல் ‘கரமுர’வென்று இரைச்சலை எழுப்பிக் கொண்டு சலாம் செய்துவிட்டு நடந்தான். 

மாஜிஸ்டிரேட் உடனே கந்தன் பக்கம் திரும்பி, “இந்தா, இது கோர்ட்டு, தெரியுமில்லே. இங்கே கோர்ட்டுலே நடந்துக்கிறாப்போல நடந்துக்கணும். ஒங்க தெரு, சந்துகள்ள நடந்துக் கிறாப்போலெல்லாம் நடந்துக்கக் கூடாது” என்று கந்தனை எச்சரித்தார். 

கந்தன் முகத்தில் ஒரு ‘படபடப்பு’த் தோன்றியது. மறுகணமே அவன், “சரிங்க எசமான் என்றான் சுருக்கமாக. 

“உம், இன்னும் எதுவும் கேக்கணுமா?” என்றார் மாஜிஸ் டிரேட். 

கிழட்டு வக்கீல் தனக்குள் சிரித்துக்கொண்டே, தன் நாற்காலியிலிருந்து எழுந்து வெளியே சென்றார். 

“எனக்குத் தெரிஞ்சதே நான் சொல்லிடறேன், எசமான். அது உண்டா இல்லையான்ட்டு ஏட்டையா சொல்லட்டும்’ என்றான் கந்தன். 

“உம், சரி சொல்லு” என்றார் மாஜிஸ்டிரேட், கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெளியே சென்றுகொண்டிருந்த கிழட்டு வக்கீலைப் பார்த்தபடியே. 

“இந்தப் பாலர் விடுதி சொன்னேனே” என்று கந்தன் ஆரம்பித்து, “அதனோட மானேசர் எனக்கு ரொம்ப வேண்டிய வரு. அவரு ஒரு நா ‘இப்படி பொடியன் பொன்னுச்சாமீன்ட்டு ஒரு ஏட்டு இருக்காரே, அவரு ஏதாவது காரணம் சொல்லிக் கிட்டு, விடுதிலேந்து பசங்களே ஸ்டேஷனுக்கூனு அடிக்கடி இளுத்துக்கிட்டுப் போறாரு. பெரிய வம்பாப் போச்சு. பாவம், இஷ்டம் இல்லாத பொடியன்களைப் போட்டுக் கஷ்டப்படுத்தி கிட்டு! நீதான் கந்தா, ஒரு நா அந்த ஏட்டையாவெ என்னன்ட்டுக் கேளு’ன்ட்டு சொன்னாரு. அதான் நான் அந்த வெள்ளிக் கௌமை பாலர் விடுதிக்குப் போனேன்” என்று சொல்லிக் கொண்டு போகவும், “எசமான், கேசே விட்டிட்டு என்னத் தெல்லாமோ உளர்றான்” என்று கூச்சலிட்டார் ஏட்டையா. 

“அட, உங்கக் கேசெத்தான் முளுப்பொய்யீனுட்டேனே!” என்றான் கந்தன். 

“அப்ப, எதுக்கு இப்பப் பேசிட்டிருக்கே?” என்றார் ஏட்டையா. 

கந்தன் ஏட்டையா பக்கம் திரும்பவும், “கோர்ட்டெப் பாத்துப் பேசு” என்று மாஜிஸ்டிரேட் கந்தனுக்குச் சொன்னார். கந்தன் அவர் பக்கம் திரும்பி, “எனக்கும் ஏட்டையாவுக்கும் ஒரு வாட்டி தகராறு வந்து எங்களுக்குள்ளே விரோதம் உண்டுங்க. அதெத்தான் நான் சொல்றது” என்றான். 

“உம், சுருக்கமாகச் சொல்லு. என்ன தகராறு?” என்று முனகினார் மாஜிஸ்டிரேட். 

“நான் இதெ அப்ஜெக்ட் பண்ணறேன், எசமான்” என்றார் ஏட்டையா. 

“அப்ப எதிரிக்கும் உங்களுக்கும் முன்விரோதம் உண்டூனு ஒத்துக்கோங்க. எதிரியை விவரம் எல்லாம் தர வேண்டானுடறேன்” என்றார் மாஜிஸ்டிரேட் சிறிது கோபத்தோடு. 

“அதெப்பிடீங்க? போலீசுக்காரன் ‘பப்ளிக்’கிலே யாருக்குத் தான் நல்லவங்க?” என்று கேட்டார் ஏட்டையா. 

அதற்குள் கந்தன், “ஏட்டையா சொல்றது நியாயந் தானுங்க. பப்ளிக் யாரும் போலீஸ்காரங்களெ நல்லவங்கனு மதிக்கறது இல்லீங்கதான். ஆனா, எனக்கும் ஏட்டையாவுக்கும் ஒரு குறிப்பிட்ட காரியத்துலே தகராறு வந்ததுங்க” என்றான். 

“இதுக்கு என்ன சொல்றிங்க?” என்றார் மாஜிஸ்டிரேட் ஏட்டையாவிடத்து. 

“அப்புறம் ஒங்க பிரியம், எசமான்” என்றார் ஏட்டையா.

“உம், நீ சொல்லப்பா” என்றார் மாஜிஸ்டிரேட் கந்தனிடத்து. 

“அன்னைக்குங்க எசமான், ஏட்டையா இஸ்மாயில் புரத்துக்கு வந்திருந்தாரு. அவரு பாலர் விடுதிக் கேட்டுக்குப் பக்கல்லே…” என்று கந்தன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வேடிக்கை பார்க்கும் கூட்டம் இரண்டு புறங்களில் நெறியும் சப்தமும், பூட்சுக் கால்கள் ஏற்படுத்தும் நரநரவென்ற சப்தமும் ஒருங்கே ஒலித்தன. சுருக்கமாக, ஆனால் புறக்கணிக்க முடியாத வகையில் மாஜிஸ்டிரேட்டுக்கு சலாம் செய்துவிட்டு ஒரு நாற்காலி யில் உட்கார்ந்தார் உள்ளே பிரவேசித்த போலீஸ் இன்ஸ் பெக்டர். 

“உம், அப்புறம்?” என்றார் மாஜிஸ்டிரேட் கந்தனைப் பார்த்து, சற்றுத் திடமான குரலில். 

“ஏட்டையா அவுங்க, பாலர் விடுதிக்குப் பக்கல்லே ஒரு டீக்கடை கிட்டே, பாலர் விடுதி மானேசர் ரங்கசாமியோடே ஒரக்கப் பேசிட்டிருந்தாரு. சீனிவாசங்கற அந்தத் தம்பியும் அங்கே நின்னிட்டிருந்தது. நான் அங்கே போகவும்…” என்று கந்தன் சொல்லிக்கொண்டிருந்த போதே, “ஒன் மினிட், யுவர் ஆனர்” என்று சொல்லிக்கொண்டே இன்ஸ்பெக்டர் எழுந்திருந்தார். 

“யெஸ்” என்று அவரைப் பார்த்துத் தலையசைத்தார் மாஜிஸ்டிரேட். 

“சம்பவம் நடந்தது ஞாயிற்றுக்கிழமை பதினெட்டாம் தேதி, எக்சிபிஷன் கிரௌன்டுலே. இவன் வேறெ எதையோ பத்தினா சொல்லிட்டிருக்கான்?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர். உடனே, மாஜிஸ்டிரேட், “உம், அய்யா கேக்கராரு இல்லே? பதில் சொல்லு” என்று கந்தனை அதட்டினார். 

கந்தன், “ஏட்டையாவுக்கும் எனக்கும் ஒருவாட்டி முன் விரோதம் ஏற்பட்டிச்சு. அதெப்பத்திச் சொல்லிக்கிட்டு இருக்கேன்” என்றான். 

இன்ஸ்பெக்டர் மாஜிஸ்டிரேட்டைப் பார்த்து, “யுவர் ஆனர், இவன்லாம் ‘பாட் கேரக்டர்’ டிப்பார்ட்டுமென்ட்டோட இவங்களுக்கு எல்லாம் எப்பவும் தகராறுதான். இதெல்லாம் நீங்க தீர டீடெய்ல்டா விசாரிச்சிட்டிருக்கணும்னு அவசியம் இல்லை” என்று கூறிவிட்டு உட்கார்ந்தார். 

“யெஸ் யு ஆர் கொய்ட் ரைட்” என்று கூறிவிட்டு மாஜிஸ்டிரேட் கந்தனைப் பார்த்து, “என்னப்பா உன்னைப்பத்தி இன்ஸ்பெக்டர் சொல்றதெக் கேட்டே இல்லே? இப்ப என்ன சொல்லறே?” என்றார். 

கந்தன் ஒரு நிமிடம் யோசித்தான். 

பிறகு, “எசமான் சொல்றதும் சரிதானுங்க. நாங்களும் தப்புப் பண்ணறோம்; அவங்களும் தப்புப் பண்றாங்க. இதுலே யாரு மொதல்லேன்ட்டு யாருங்க சொல்றது? குத்தெத்தெ ஒத்துக்கிறேங்க எசமான். ஏட்டையா சொன்னபடி ஏதாச்சிம் சின்ன ஃபைனா போட்டுவிடுங்க” என்று சிரித்துக்கொண்டே கந்தன் சொல்லவும் கோர்ட்டில் வேறு சிலரும், ஏதோ சங்கடம் தீர்ந்த நிலையில் சிரித்தனர். 


ஒரு ஜீப்பு வரும் ஒலியும், கண்ணைப் பறிக்கும் அதன் விளக் கொளியும் எல்லாப் பேச்சையும் நிறுத்தியது. மூவரும் கடை யருகே போய் நின்று கொண்டனர். ஜீப்பின் வெளிச்சத்தைக் கொண்டு, ஜீப்பில் இருந்தவர்கள் பிணத்தைப் பார்க்க முடிந்ததால், பிணத்துக்கு சுமார் இருபதடி தூரத்தில் ஜீப்பு நின்றது. ஜீப்பிலிருந்து இரண்டு போலீஸ்காரர்கள் துப்பாக்கி யோடு இறங்கினர். அவர்களைத் தொடர்ந்து ஒரு ஏட்டையாவும், ஒரு சப் – இன்ஸ்பெக்டரும், இறுதியில் அவர்களை அழைத்து வந்த இளைஞனும் இறங்கினர். போலீஸ்காரர் இரு வரும் பிணத்துக்குக் காவல் நிற்பது போல் அதன் அருகே விறைப் பாக நின்றுகொண்டனர். ஏட்டையா தனது தொப்பியை அகற்றி, அதை இடதுகையில் தாங்கிக்கொண்டு, வலது கையால் தலையை வரட்டு வரட்டு என்று சொரிந்துகொண்டார். சற்றுப் பருமனாகக் கறுத்திருந்த சப்-இன்ஸ்பெக்டர் அந்த வட்டாரத்தை ஒரு நோட்டம் விட்டுவிட்டு, கடையோரம் இருந்த மூவருக்கும், “இப்படி வந்து நில்லுங்க” எனக் கட்டளை யிட்டார். மூவரும் சப்- இன்ஸ்பெக்டர் பின்னால் வந்து நின்றுகொண்டனர். 

“வேலுச்சாமியா, என்ன அந்தத் தம்பி பேரென்ன, அவன் எங்கே?” என்று இரைச்சலிட்டார் சப் – இன்ஸ்பெக்டர். ஜீப்பு ஓரம் பதுங்கியிருந்த வேலுச்சாமி மெதுவாக வந்து சப்- இன்ஸ்பெக்டர் பின்னே நின்றுகொண்டான். சப் – இன்ஸ் பெக்டர் பிணத்தருகே சென்று பிணத்தைத் தொட்டுப் பார்த்தார். “கதெ முடிஞ்சு போச்சுங்க, எஜமான்” என்றார் ஏட்டையா, அரைகுறையாய்க் கொட்டாவி விட்டுக்கொண்டே. 

“ஏட்டையா பொசிஷனக் குறிச்சிக்கோங்க” என்றார் சப்- இன்ஸ்பெக்டர். 

“கவனிச்சிக்கிட்டேங்க எஜமான். சிவலிங்கபுரம் ரோடு, கொஞ்சம் மேக்கே திரும்பி, சுமார் வடமேக்கா, கடைக்கு இருபது கஜ தூரத்திலே” என்று தொடர்ந்தார் ஏட்டையா. “யார் கடைன்னு கேட்டீங்களா?” என்றார் சப் இன்ஸ் பெக்டர். 

செவலிங்கபுரம் சுப்பு மூப்பனார் மகன் மருத மூப்பனார் கடைங்க” என்றார் அன்னக்கிளியின் மச்சான். 

“உம், சுப்பு மூப்பனார் மகன் மருத மூப்பனார் கடைலேந்து இருபது கஜ தூரத்திலே” என்று கூறிக்கொண்டே ஒரு குறிப்புப் புத்தகத்தையும், பென்சிலையும் எடுத்துக்கொண்டு எழுத ஆரம் பித்தார் ஏட்டையா. பிறகு சட்டென்று திரும்பி, மருத மூப்ப னாரிடத்து, “எஜமானுக்கு ஒரு சேர், கட்டில் எதாச்சிம் கொண்டு வா” என்றார். 

மருத மூப்பனார் பாய்ந்து சென்று வீட்டுக்குள்ளிருந்து ஒரு கட்டிலை எடுத்து வந்தார். 

“இந்தா தேர்ட்டி நைன், சட்டி கொண்டு வந்திருக்கே இல்லே? ரத்த சாம்பிள் எடுத்துக்க. நைன்ட்டி சிக்ஸ், நீ பாடியெ சோதனை போடு” என்று இரு போலீஸ்காரர்களுக்கும் உத்தரவிட்டார் சப் – இன்ஸ்பெக்டர். தேர்ட்டி நைன் ஜீப்புக்குச் சென்று ஒரு கலயத்தையும், ரத்தத்தை மண்ணோடு சுரண்டி எடுக்க ஒரு கத்தியையும் எடுத்து வந்தான். நைன்ட்டி சிக்ஸ் இலேசாகப் பிணத்தைப் புரட்டிப் போட்டான். 

பிணத்தின் வெறித்த கண்களைப் பார்த்ததும், “ஆத்தாடி” என்று கூச்சலிட்டாள் அன்னக்கிளி. 

கந்தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான். 

“யாரு தெரியுமா?” என்று சப்-இன்ஸ்பெக்டர் தன் பின்னாலிருந்த நால்வரையும் கேட்டார். “வெத்திலப்பேட்டை பிச்சையா மாதிரி தெரியுது” என்றார் மருத மூப்பனார். 

கந்தனும் அன்னக்கிளியும் பேசாதிருந்தனர். 

“உங்களுக்குத் தெரியுமா?” என்று அவர்களைக் கேட்டார் ஏட்டையா. 

“வெத்திலப்பேட்டை வியாபாரி பிச்சையா மாதிரிதான் தெரியுது, ஆனா…” என்றிழுத்தான் கந்தன். 

“ஆனா என்ன?” என்றார் ஏட்டையா. 

“ஒண்ணுமில்லே” என்றான் கந்தன். அவனைப் பார்த்துத் திடுக்கிட்ட பொன்னுச்சாமி ஏட்டையா முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டார். 

“ஆனான்ட்டு இளுத்தியே?” என்றார் சப் – இன்ஸ்பெக்டர். 

“நான் அந்தப் பிச்சையாவெ ஒரு வாட்டியோ, ரெண்டு வாட்டியோ தான் பாத்திருப்பேன்; உறுதியாச் சொல்லிக்கிட முடியாதூன்னேன்” என்றான் கந்தன். 

“அந்தப் பிச்சையா வீடு தெரியுமா?” என்று சப் இன்ஸ்பெக்டர் மூப்பனாரைக் கேட்டார். மூப்பனார் பதில் சொல்வதற்கு முன்னால் “பேட்டைலே போயி விசாரிச்சாத் தெரியும்” என்றார் ஏட்டையா. 

“டிரைவர்” என்று கூப்பிட்டார் சப் – இன்ஸ்பெக்டர். 

“டிரைவர்தானே? அவன் வந்ததும் ஊருணிப் பக்கம் இறங்கிப் போனான்; இப்ப வந்திருவான்” என்று ஏட்டையா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, தனது அரை காக்கி டிராயரையும் முரட்டு பனியனையும் சரி செய்துகொண்டே டிரைவர் வேகமாக வந்து சப்-இன்ஸ்பெக்டர் முன்பு சலாம் போட்டு நின்றான். ஏட்டையா ஜீப்புக்குச் சென்று அதில் எரிந்துகொண்டிருந்த ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கை எடுத்து வந்தார். மருத மூப்பனாரும் வீட்டுக்குள் சென்று ஒரு மண் ணெண்ணெய் விளக்கை எடுத்து வந்தார். ஏட்டையா மீண்டும் ஜீப்புக்குச் சென்று சில குறிப்புப் புத்தகங்கள் மற்றும் சில காகிதங் களை எடுத்து வந்தார். 

தேர்ட்டி நைன் ரத்தம் உறைந்த மண்ணைச் சுரண்டிக் கொண்டிருந்தான். நைன்ட்டி சிக்ஸ் பிணத்தின் தலையிலிருந்து ஆரம்பித்து அதன் பல்வேறு பாகங்களையும் இலேசாக அழுத்திச் சோதனை போட ஆரம்பித்தான். சப் – இன்ஸ்பெக்டர் டிரை வருக்கு உத்திரவு போட்டுக்கொண்டிருந்தார். “வெத்திலெப் பேட்டைக்குப் போயி பிச்சையாங்கறவர் வீட்டே விசாரிச்சு, வீட்லேந்து இங்கே ஒரு ஆளே அனுப்பச் சொல்லு.ஆம்பிள ஆளாவே பாத்துக் கூட்டியா” என்று விட்டு ஏதோ நினைவுக்கு வந்தவராய், “அப்படியே வரும்போது அந்த மணிப் பயலே இளுத்திட்டு வா” என்றார் சப் – இன்ஸ்பெக்டர். 

“சரிங்க எசமான்” என்றுவிட்டு, சலாம் செய்துகொண்டே ஏட்டையாவைப் பார்த்தான் டிரைவர். 

“மணிதானே? ஒண்ணு அந்தக் கிளப்புலே இருப்பான்; இல்லாட்டி நர்சம்மா வீட்லே இருப்பான். இளுத்திட்டு வா” என்றார் ஏட்டையா. 

டிரைவர் ஜீப்புக்குச் சென்று, அதில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஜீப்பைத் திருப்பிப் பறந்தான். பெட்ரோமாக்ஸ் விளக்கும், மண்ணெண்ணெய் விளக்கும் எரிந்துகொண்டிருந் தாலும் ஒரு கணத்துக்கு இலேசான இருள் கவிந்துவிட்டது போல் இருந்தது. 

“என்ன குறிச்சிக்கிறீங்களா, ஏட்டையா?” என்றான் நைன்ட்டி சிக்ஸ். 

“உம்” என்றுவிட்டு எழுத ஆரம்பித்தார் ஏட்டையா. சப்-இன்ஸ்பெக்டர் கட்டிலில் உட்கார்ந்துகொண்டு, ஒரு சிகரெட்டைப் புகைத்தவண்ணம் நைன்ட்டி சிக்ஸ் எடுத்துக் காட்டிய பொருட்களைக் கவனித்துக்கொண்டிருந்தார். 

“வெள்ளை வேட்டி, நாலு நாலரை முழம், வெள்ளைச் சட்டை, அரைக்கை சட்டை, உள்ளே கருப்பு பனியன், உள்டிராயர் இல்லே, இடுப்புலே தோல் பெல்ட், பெல்டுலே ஒரு பை, சட்டைலே ஒரு பை” என்று தொடர்ந்தான் நைன்ட்டி சிக்ஸ். 

“அந்தச் சட்டையையும் பெல்டையும் அவித்திரு” என்றார் சப் – இன்ஸ்பெக்டர். இரண்டு போலீஸ்காரர்களும் ஒருகணம் திகைத்தனர். இரத்தம் அநேகமாக உறைந்துவிட்ட நிலையில், சட்டையையும் பனியனையும் உடலிலிருந்து பிய்த்து எடுக்கத்தான் வேண்டிவரும். இருவரும் ஏட்டையாவை நோக்கினர். 

“எஜமான், அந்த வம்பெல்லாம் நமக்கு எதுக்கு ? உள்ள படியே ‘போஸ்ட்மார்ட்ட’த்துக்கு அனுப்பிடுவோம்” என்றார் ஏட்டையா. 

“அதுவும் சர்தான்” என்றார் சப் – இன்ஸ்பெக்டர். “பாடிலே உள்ளத மட்டும் பாத்துச் சொல்லுங்க” என்றார் ஏட்டையா. 

“என்ன எழுதியிருக்கீங்க?” என்றான் நைன்ட்டி சிக்ஸ். “இடுப்புலே தோல் பெல்ட்; பெல்டுலே ஒரு பை… மேக்கொண்டு உம்…” என்றார் ஏட்டையா. 

“சட்டைப் பைலே ஒரு இரும்புச் சாவி இருக்கு” என்று தொடர்ந்தான் தேர்ட்டி நைன். 

“மேலுக்கு ஒரு காகிதப் பொட்டலம்” என்றுகொண்டே நைன்ட்டி சிக்ஸ், ஒரு பொட்டலத்தைப் பிரித்து, “பொட்ட லத்துலே துன்னூரு, குங்குமம், தொளசி இலே, ஒரு பத்து ரூவாத் தாளு, ஒரு ரெண்டு ரூவாத் தாளு, ஏளு காசு” என்று சொல்லி நிறுத்தினான். 

“பெல்ட்டுப் பைலே ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு நூறு ரூவாத்தாளு ஒரு சீட்டுக்கட்டுப் பெட்டி” என்று தேர்ட்டி நைன் தொடரவும், “பெட்டியெத் தெறந்து பாரு” என்றார் ஏட்டையா. 

பெட்டியைத் திறந்த தேர்ட்டி நைன், பெட்டிக்குள் இருந்து சீட்டுக் கட்டின் அளவுக்கும் சற்றுச் சிறிதான அளவில் இருந்த சில கார்டுகளை எடுத்து ஒவ்வொன்றாகப் பார்க் கிறான். பிறகு சிரித்துக் கொண்டே, “இந்தாங்க எஜமான்” என்று அவற்றை சப் – இன்ஸ்பெக்டரிடத்து நீட்டுகிறான். சப்-இன்ஸ்பெக்டருக்குப் பின்புறம் நின்று கொண்டிருக்கும் கந்தன், வேலுச்சாமி, மருத மூப்பனார், அன்னக்கிளி ஆகிய நால்வரும் ஆவலோடு குனிந்து சப் – இன்ஸ்பெக்டர் கையிலிருந்த படங்களைப் பார்க்கின்றனர். 

“அம்மோவ், இதென்ன படம்?” என்றுவிட்டுப் பயங்கரமாகச் சிரிக்கிறாள் அன்னக்கிளி. 

“ஷட்அப்” என்று கத்திக்கொண்டு பின்புறம் திரும்பு கிறார் சப்-இன்ஸ்பெக்டர். பிறகு சாவதானமாகக் கையிலிருக் கும் படங்களை ஒவ்வொன்றாக ஆராய்கிறார். சப் இன்ஸ் பெக்டர் போட்ட சத்தத்தில் அன்னக்கிளியும், மருத மூப்பனாரும், வேலுச்சாமியும் சற்றுப் பின்நகர்ந்துவிட்டனர். கந்தன், ஏட்டையா, சப் – இன்ஸ்பெக்டர் மூவருந்தான் எல்லாப் படங்களையும் பார்க்கின்றனர். 

“இதெல்லாம் என்ன ஏட்டையா?” என்று அறியாத்தன்மையோடு கேட்கிறார் சப்- இன்ஸ்பெக்டர். 

“இதெல்லாம் பெரிய பிசினெஸ்ங்க; படம் அஞ்சு, பத்தூனு போகுங்க” என்கிறார் ஏட்டையா. 

“இதெல்லாம் என்ன செய்யறது?” 

“கோர்ட்டுலே ஒண்ணும் புரொடியூஸ் பண்ண வேண்டாம்; ஸ்டேஷனுக்கு வேணாக் கொண்டு போகலாம்” என்கிறார் ஏட்டையா சப் – இன்ஸ்பெக்டர் படங்களைப் பார்த்துவிட்டு, அவற்றைப் பெட்டியில் போட்டு பெட்டியை ஏட்டையா விடம் நீட்டுகிறார். பிறகு பின்புறம் திரும்பிப் பார்க்கிறார். கந்தனும் ஏட்டையாவும் அவர் பின் நின்றுகொண்டிருக்கின்றனர். ஏட்டையா கனைக்கிறார். அன்னக்கிளியும், மருத மூப்பனாரும், வேலுச்சாமியும் முன்னால் நகருகின்றனர். 

அன்னக்கிளியைப் பார்த்ததும், “விசாரணைப்ப இப்படியாக் கூச்சல் போடறது?” என்று கண்டிக்கிறார் சப் – இன்ஸ்பெக்டர். 

அன்னக்கிளி நாணிக்கோணி சிரிக்கிறாள். ஏட்டையா மீண்டும் கனைக்கிறார். 

“உம் உம், ஆயுதம் எதுவும் இருக்கா பார்” என்றார் சப்- இன்ஸ்பெக்டர், தன்னினைவு வந்தவராய். அப்போது தான் அவரையும், அவரது கோஷ்டியையும் சுற்றிப் பத்துப் பனிரெண்டு பேர்கள் கொண்ட சிறு கூட்டம் கூடிவிட்டதைக் கவனித்தார். அவரது பார்வையைப் பார்த்துவிட்ட தேர்ட்டி நைன் பாய்ந்தெழுந்து தனது தடியை ஓங்கிக் கூட்டத்தை விரட்டினான். கூட்டம் சிதறிச் சற்று விலகித் தூரத்தில் போய் நின்றுகொண்டது. ஒரு ஜீப்பு வரும் ஒலியும் ஒளியும் எல்லார் கவனத்தையும் ஈர்த்தது. ஜீப்பின் டிரைவர் முன்புபோலவே அதை நிறுத்திவிட்டு, சப் – இன்ஸ்பெக்டர் முன் வந்து சலாம் போட்டு நின்றான். ஜீப்பிலிருந்து மற்றும் இருவரும் ஒரு போலீஸ்காரரும் இறங்கினர். “என்னைய்யா, இப்படி நேரம் கழிச்சா வர்றது” என்று சப் – இன்ஸ்பெக்டர், வந்த போலீஸ் காரரை விரட்டினார். சப் – இன்ஸ்பெக்டருக்கு சலாம் இட்ட வாறே அவன் ஏதோ முணுமுணுத்தான். பிறகு பையிலிருந்து ஒரு லென்சையும், டார்ச்சு லைட்டையும் எடுத்துப் பிணத் தினருகே சென்று கைரேகை, மயிர், நூல் பிசிறு இவற்றுக்குப் பிரேதத்தைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்தான். 

“அதுலே ஒரு எளவும் கெடெக்காது; பொணெத்தே பொரட்டிப் போட்டு என்னவெல்லாமோ செய்தாச்சு” என்றார் ஏட்டையா. ஜீப்பிலிருந்து இறங்கிய மணி சப் – இன்ஸ்பெக்டர் முன் நின்று வணங்கினான். ஜீப்பிலிருந்து இறங்கிய மற்ற நபர் பிணத்தின் அருகே சென்று பிணத்தை உற்று நோக்கினார். “எஜமான், பிச்சையா வூட்டுலே எல்லாரும் வெளியூர் போயிருக் காங்க. இந்த ஆளு பிச்சையாவுக்கு சொந்தம்னாரு; இவரெக் கூட்டியாந்தேன்” என்று கூறிக்கொண்டு பிணத்தைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த நபரைச் சுட்டினான் டிரைவர். பிணத்தைக் கூர்ந்து நோக்கிவிட்டு, “வெத்திலப்பேட்டை பிச்சையாவேதான்” என்று அந்த நபர் உறுதி சொன்னார். 

வேடிக்கை பார்க்கும் கூட்டம் சற்று அதிகரித்தது. ஆனால் கூட்டத்தினர் ஒரு வரம்பு கடந்து வராதபடி போலீசாரால் பார்த்துக் கொள்ள முடிந்தது. கூட்டத்தினரும் ஒரு கொலைக்குத் தரவேண்டிய மரியாதையைச் செலுத்தி அமைதியாகவே இருந்தனர். “ஒரே குத்து!”, “வவுத்துலே சரியான குத்து!” ‘ஆத்தாடி! எவ்வோளவு ரத்தம்!” போன்ற சிறு சிறு முணு முணுப்புகளே வெளிவந்தன. 

சப்- இன்ஸ்பெக்டர் பிரேத விசாரணை செய்ய ஆரம்பித் தார். ஐந்து பஞ்சாயத்தார் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் மருத மூப்பனாரும் ஒருவர். இறந்துபோனவரைக் கடைசியில் உயிரோடு கண்டவர்களாகவும், கொலையை நேரில் பார்த்தவர் களாகவும் கந்தனும் அன்னக்கிளியும் தனித்தனி வாக்குமூலங் கள் கொடுத்தனர். கொலை செய்தவர்களைத் தங்களுக்கு இதற்கு முன் தெரியாதென்றும், ஆனால் மறுமுறை பார்த்தால் அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்றும் இருவரும் அபிப்பிராயப்படுவதாகவும் குறித்துக்கொள்ளப்பட்டது. இறந்து போனவர் கத்திக் குத்தின் காரணமாக மாண்டிருக்கலாம் என்று அபிப்பிராயப்படுவதாகப் பஞ்சாயத்தார் இறுதியில் கையெழுத்திட்டனர். இரவு பதினொரு மணி அளவில் எல்லாச் சடங்குகளும் முடிவடைந்தன. பிரேதத்தை ஒரு வண்டியில் போட்டு, அதை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லும் பொறுப்பு போலீசாரிடம் விடப்பட்டது. 

கந்தனையும் அன்னக்கிளியையும் ஜீப்புக்குள் ஏறிக்கொள்ளு மாறு ஏட்டையா உத்தரவிட்டார். “அய்யோ, நா எதுக்கு?” என்று அலறினாள் அன்னக்கிளி. “ஒண்ணுமில்லே, காலேலே வீட்டுக்கு வந்திடலாம்” என்றார் சப் – இன்ஸ்பெக்டர். கந்தனும், மணியும், ஏட்டையாவும் ஜீப்பின் பின்புறத்தில் உட்கார்ந்து கொண்டனர். சப் – இன்ஸ்பெக்டர் டிரைவருக்கு அருகே உட்கார்ந்துகொண்டு அன்னக்கிளியைத் தன் பக்கத்தில் உட்காரச் சொன்னார். மருத மூப்பனார், தானும் ஸ்டேஷனுக்கு வரவேண்டும் என்றார். “நீங்க காலேலே வரலாம்” என்று விட்டார் ஏட்டையா. ஜீப்புக்குள் ஏற அன்னக்கிளி தயங்கினாள். சப் – இன்ஸ்பெக்டர் அவர் கையை நீட்டவும், அவளும் ‘களுக்’ என்று சிரித்துவிட்டு ஜீப்புக்குள் ஏறிக்கொண்டாள். ஜீப்பை ‘ஸ்டார்ட்’ பண்ணுவதற்கு முன்னால், ஜீப்பின் உள் விளக்கை அணைத்தான் டிரைவர். அன்னக்கிளியின் ‘ச்சு’ என்ற வக்கரிப் பும், வளையல் ஒலியும், அவற்றைத் தொடர்ந்து ஏட்டையா வின் கனைப்பும் கேட்க இரைச்சல் இட்டுக்கொண்டு டவுனை நோக்கித் திரும்பியது ஜீப்பு. 


கந்தன் அவன் குடிசைக்குச் சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருப்பது போலிருக்கிறது. தெருவோரம் குறைவான கடைகளும் வீடுகளுமே தென்படுகின்றன. தெருவிலே ஜன நடமாட்டம் கிஞ்சித்தும் இல்லை. அசட்டுத்தனமாக மின்விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்து கொண்டிருக்கின்றன. ஒரு விளக்கு திடீரென்று அணைகிறது; மற்றொன்று திடீரென்று புதிய பிரகாசத்தோடு எரிகிறது. கந்தனின் கண்கள் உறுத்துகின்றன. பிச்சையா அவனைப் பார்த்துச் சிரித்துவிட்டு ஒடிந்து விழுகிறான். 

“கத்தி எதுக்குங்க?” என்கிறாள் மீனா. 

“யாரும் சேட்டை பண்ணினா?” 

“ஒங்ககிட்டே யாரும் எதுக்குச் சேட்டை பண்ணனும்?” 

என்கிறாள் மீனா. 

“அது என் தலையெழுத்து.” 

“ஒங்க தலையெழுத்தில்லே; ஒங்க பயம்” என்கிறாள் மீனா…

பக்கத்துச் சேரி தீப்பற்றி எரிகிறது. குய்யோ முறையோ என்று மனித உயிர்கள் கூச்சலிடுகின்றன. ஆனால் அவற்றில் பனிரெண்டுக்கு மட்டும் விரைவில் கூச்சலிடும் உரிமை மறுக்கப்படுகிறது. அந்தப் பனிரெண்டும் தீயணைக்கும் படையினரால் குளிப்பாட்டப்பெற்று – பெரிசுகளும் சிறிசுகளு மாக – வரிசையாகத் தரையில் கிடத்தப்பட்டுள்ளன. வீணாக நகரசபைக்கு ஏன் கெட்ட பெயர் என்று மூன்று உயிர்களையே விபத்துக் குடித்துவிட்டதாகப் பத்திரிகைகள் அறிவிக்கின்றன. 

“அந்தப் பனிரெண்டு பேருமே சாகவில்லை; அவுங்க எல்லாருமே வாக்காளர் பட்டியல்ல இருக்காங்க; எப்படியும் அடுத்த தேர்தல்லே ஓட்டுப்போட வந்திடுவாங்க. வாழ்க முதலாளித்துவ ஜனநாயகம்!” என்கிறான் கந்தனிடத்து ராமு அண்ணன்…

கந்தன் ஒரு வாத்தைப்போல நடந்துகொண்டிருக்கிறான். அவனே ஒரு பெரிய வாத்தாகிவிட்டது போன்ற உணர்வு. சுத்திச் சுத்தி வருகிறான். வீட்டை நோக்கித்தான் நடந்து கொண்டிருக்கிறான்; ஆனால் வீடுதான் அவனைவிட்டு விலகிச் சென்றவண்ணமே உள்ளது. ஒரு குழந்தையின் அழுகுரல் காதில் படுகிறது. கந்தன் எழுந்து நின்று சுற்றுமுற்றும் பார்க் கிறான். தற்செயலாக வானில் அவன் பார்வை விழுகிறது. கொட்டிக் கிடக்கும் ஒளிக் குவியல்கள் அவனை மெய் சிலிர்க்க வைக்கின்றன. அவையெல்லாம் என்ன, ஏன் என்று ஒருபோதும் அவன் கேட்டதில்லை. அவற்றின் மத்தியில் பறந்து செல்ல வேண்டும் என்று அவன் குழந்தைத்தனமாக ஆசைப்பட்ட துண்டு. இப்போது அந்த ஆசையில்லை. அவற்றைப் பார்க்கவே சற்று பயமேற்படுகிறது. அவை அவனை நோக்கி விரட்டி வருவது போல் இருக்கிறது. கந்தன் ஓடப் பார்க்கிறான். குப்புறச் சரிந்து ஒரு இருண்ட பாதாளத்துக்குள் விழுந்துகொண்டிருக் கிறான்… 

புரண்டு படுப்பது போன்றதொரு உணர்வு. மீண்டும் ஒரு குழந்தையின் அழுகுரல். 

“என்ன பாப்பா? யாரு நீ?” 

“உம் உம், எங்க அம்மா, எங்க அம்மா…” 

“உங்க வீடு எங்கே?” 

“பள்ளிக்கூடத்துக்குப் பக்கல்லே; உம் உம், எங்க அம்மா. எங்க அம்மா…”

“எந்தப் பள்ளிக்கூடம்?” 

“எங்க வீட்டுக்குப் பக்கல்லே எங்க ஊர்ப் பள்ளிக்கூடம். உம் உம், எங்க…” 

“ஒங்க ஊரு எது?” 

“உம், எங்க ஊரு, எங்க ஊரு..” 

“ஒன் அம்மா பேரு என்ன?” 

“எங்க அம்மா, உம், எங்க அம்மா…” கந்தன் குழந்தை யை எடுத்துத்தோளில் சாத்திக்கொண்டு நடக்கிறான். குழந்தை திமிறுகிறது. கந்தனின் கழுத்தைக் கடித்துக்கொண்டே, இரண்டு கைகளாலும் கந்தனின் முகத்தைப் பிறாண்டுகிறது. தன் கால் களைக் கொண்டு. கந்தனின் வயிற்றில் ‘மங்கு மங்கு’ என்று போடுகிறது. சோலைப்பிள்ளை எதிர்ப்படுகிறார். ஒரு பொலி காளையை இழுத்துக்கொண்டே கந்தனைப் பார்த்துச் சிரிக் கிறார். தன்னை லாக்கப்பில் அடைத்தது கந்தனுக்கு நினைவு வருகிறது. அன்னக்கிளி போலீஸ் ஸ்டேஷனில் ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கிறாள். மணி சப் – இன்ஸ்பெக்டருக்குப் பிராந்தியும் பிரியாணியும், அன்னக்கிளிக்கு பிரியாணி மட்டும் வாங்கி வருகிறான். சோலைப்பிள்ளை பொலிகாளையோடு ஸ்டேஷனுக்குள் வந்து லாக்கப்புக்குள் எட்டிப் பார்க்கிறார்… 

கந்தனின் வீடு. கந்தன் குழந்தையை மீனாவுக்கு அருகே படுக்க வைக்கிறான். அழுது தூங்கிவிட்டது; இருந்தாலும் தூக்கக் கலக்கத்தில், “உம், எங்க அம்மா” என்று முனகுகிறது. 

கந்தன் குடிசையை விட்டு வெளியே வந்து, இருளோடு இருளாய்க் கலந்தான். ஜன்னி கண்டதுபோல் இருள் குளிர்ந் திருந்தது. மேலும் அது கரடுமுரடான கற்களும், முள்புதர் களும் நிறைந்திருந்தது. அது ஒரு பிண வாடையையும் கொண் டிருந்ததாகக் கந்தனுக்குப் பட்டது. ‘இன்னுங் கொஞ்சம் தூரந்தான்’ என்று நினைத்துக் கொண்டே, நடந்த கந்தன் திடீரென்று நின்றான். அந்தப் பூவரசு மரம், அவன் காலைத் தட்டிற்று. புயல் அதன் கழுத்தைத்திருகி அதைத் தரையில் வீசியெறிந்து விட்டது போலிருந்தது. ஒரு விகாரமான ஆனால் சாதுவான மிருகம் போல் அது தன் அத்தனை கைகளையும் கொண்டு பூமியைப் பற்றிக் கிடந்தது. அதன் வேரிலிருந்து தொடங்கிப் படிப்படியாக அடிமரம் முழுவதையும் தடவிக் கொண்டிருந்தான் கந்தன். மரத்தின் கொப்புகள் அவனுக்குப் பெரும் இடைஞ்சலாக இருந்தன. வெகு தொலைவிலே பூமி யினுள் புதைந்தது போன்று கிடந்தது அவன் கத்தி. அது வைரம் போல இருட்டில் ஜ்வலித்தது. யார் கண்ணுக்கும் எளிதில் பட்டுவிடும்! கந்தன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். அவன் முதுகில் தன் கைகளை வைத்துக் குனிந்து தரையை உற்று நோக்கிக்கொண்டிருந்தார் மருத மூப்பனார். அவர் கைகளை உதறிவிட்டு எழுந்தான் கந்தன்… 

ஒரு சிகரெட்டு புகைக்க எண்ணிக் கந்தன் சட்டைப் பையைத் துளாவினான். பை வள்ளிசாகக் காலியாக இருந்தது. படுத்தபடியே இரண்டு கைகளாலும் தரையைத் துளாவினான். கைகளுக்கு எதுவும் சிக்கவில்லை. சற்று எழுந்து நேர் எதிராகப் பார்த்தான். ‘லாக்கப்’ அறையின் கம்பிகள் கண்களுக்குத் தென் பட்டன. ‘லாக்கப்’ அறையை ஒட்டியிருந்த சுவரின் மேல்விளிம் பில் சிறிது ஒளி அரைகுறைத் தூக்கத்தில் இருந்தது. யாரோ குறட்டை விடும் சத்தம் கேட்டது. தான் போலீஸ் ஜீப்பில் ஏறிய நேரத்திலிருந்து ‘லாக்கப்’புக்குள் அனுப்பப்பட்டதுவரை நடந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக நினைவுக்குக் கொண்டு வரக் கந்தன் முயன்றான்.

-முற்றும்-

– மின்நூலாக்கம்: முரளிதரன்

– நாளை மற்றுமொரு நாளே…(நாவல்), முதல் பதிப்பு: 1974.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *