நாளை மற்றுமொரு நாளே…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 16, 2023
பார்வையிட்டோர்: 2,726 
 

(1974ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8

தரகர் அந்தோணி ஷெனாய் நகரில்தான் குடியிருந்தார். வீடு, குடிமனை, நிலம், கார், ஆண்கள், பெண்கள், இன்னும் எதை எல்லாம் வாங்கி விற்கலாமோ அல்லது வாடகைக்கோ குத்தகைக்கோ அமர்த்திக் கொள்ளலாமோ, எல்லாமே அவரது தரகுத் தொழிலுக்கு உட்பட்டவைதான். ஒரு முறை வீணை கற்றுக்கொள்வது வசதியான குடும்பங்களில் தொற்று நோய் போலப் பரவியபோது, இது பொப்பிலி வீணை, அது திருவனந்தபுர வீணை; இந்த வீணையில் பஞ்சமம் ‘ஏ ஒன்’. அது ஏகாண்ட வீணை; ஆனால், மரம் பலா இல்லை என்றெல்லாம் கூடப் பேசக் கற்றுக்கொண்டார். இருந்தாலும், கல்யாணமே செய்துகொள்வதில்லை என்று நாற்பத்தைந்து வயது வரை வீராப்பாக இருந்துவிட்டுப் பிறகு சபலத்துக்கு ஆளாகும் ஆண்மகன்கள், இரண்டாங் கல்யாணத்துக்கு இடந்தராத வயதில் மனைவிகளை இழந்துவிட்ட அரைக் கிழங்கள், முழுக்கிழங்கள். இன்னும் ‘ஒன்று’ போதாதென்று நப்பாசைப்படும் அதீத ஆண்கள் ஆகியோர்க்கு விவாக பந்தமில்லாத வாழ்க்கைத் துணைகள் அமர்த்தித் தருவதுதான் அவரது பிரதான தொழிலாக இருந்தது. சில பணக்கார, நடுத்தர விதவைகளுக்கும் அவர் தொழில் முறையில் உதவிய தாகப் பேச்சு உண்டு. ஒரு கல்லூரி மாணவி கருச்சிதைவு செய்துகொள்ள அவர் உதவினார். மாணவி இறந்துபோனாள். அதன் விளைவாக அந்தோணி மீது வழக்குத் தொடரப்பட்டு, இரண்டு வருடக் கடுங்காவல் தண்டனையை அனுபவித்து வெளியே வந்தார். அதன் பிறகுதான் தரகர் அந்தோணி தனது அமெரிக்க சித்தாந்தத்தை மாற்றிக்கொண்டார்: சமுதாயத் திலுள்ள ஒரு தேவையைப் புரிந்து கொண்டு, அதனைப் பூர்த்தி செய்வதன் மூலமே பொருளீட்ட முடியும் என்பது உண்மையே ஆயினும், கண்ணுக்குப் படுகிற எந்தத் தேவையையும் பூர்த்தி செய்ய முற்படுவது ஆபத்தில் கொண்டுவிடலாம் என்று அவர் புரிந்துகொண்டதே அம்மாற்றம்.

பல தொழில்களில் கவனத்தைச் சிதறடிக்காது, ஒரு குறிப் பிட்ட தரகுத் தொழிலிலேயே அந்தோணி முழுக் கவனத்தை யும் செலுத்த வேண்டும் என்று அந்தோணியின் நண்பர்கள் சிலர் அந்தோணிக்கு அறிவுரை செய்தனர். அந்தோணி இவ் வறிவுரையை ஏற்றுக்கொள்ள மறுத்தார். பலதரப்பட்ட தொழில் களில் ஈடுபடுவதன் மூலந்தான் பலதரப்பட்ட மனிதர்களோடும் தொடர்பு கிடைக்கும் என்பது அந்தோணியின் வாதம். எடுத்துக் காட்டாக, ஒருமுறை அந்தோணி ஒரு பேராசிரியருக்கு வீடு கட்ட ஒரு இடம் முடித்து வைத்தார். பேராசிரியரின் நட்பு கிடைத்தது. அதைப் பயன்படுத்தி ஒரு எஞ்ஜினியரின் மகளுக்குப் பல்கலைக்கழகத் தேர்வில் அதிக மார்க்குகள் வாங்கிக் கொடுத்தார். எஞ்ஜினியரின் சிநேகம் ஏற்பட்டது. எஞ்ஜினிய ரின் உதவியால் நகரின் பிரபல சிமென்ட் வியாபாரியின் தொடர்பு கிடைத்தது. சிமென்ட் வியாபாரியின் பழைய காரை சோலைப்பிள்ளைக்கு முடித்து வைத்தார். பிறகு சோலைப்பிள்ளையின் ‘குழந்தைகளில்’ ஒன்றை ஒரு அரசாங்க அதிகாரிக்கு ஏற்பாடு செய்தார். அவ்வதிகாரியின் உதவியினால் ஒரு மருந்துக் கடைக்காரருக்கு ‘ஸ்பிரிட் லைசென்ஸ்’ வாங்கிக் கொடுக்க முடிந்தது. மருந்துக் கடைக்காரரை வைத்துக்கொண்டு நகர ‘டிரக் இன்ஸ்பெக்ட ‘ருடைய நட்பினைப் பெற்றார். ‘டிரக் இன்ஸ்பெக்ட’ருக்கும் நகர மருந்துக் கடைக்காரர் களுக்கும் இடையே தொடர்ந்து தரகு வேலை பார்த்ததனால், எல்லா மருந்துக் கடைக்காரர்களையும் வளைத்துக்கொள்ள முடிந்தது. அவர்களை வைத்துக்கொண்டு டாக்டர்கள், டாக்டர் கள் மூலம் வைத்தியக் கல்லூரித் தேர்வுகளில் வெற்றிகள். சில சமயங்களில் வைத்தியக் கல்லூரியில் இடங்கள் என்று தரகர் அந்தோணியின் தொழில் வளர்ச்சியும் வியாபகமும் அடைந்தது. பிறகு இந்தத் தொழில்களிலெல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், கட்சி பேதமின்றி, தரகு வேலை புரிய ஆரம்பிக்கவும்தான், அந்தோணி அநேகமாக ஓய்வுபெற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். இப்போது அவருக்கு ஷெனாய் நகரில் ஒரு வீடு இருக்கிறது. ஒரு மகன் இஞ்ஜினியர்; வடக்கே ரயில்வேயில் வேலை பார்க்கிறான். மற்றொருவன் டாக்டருக்குப் படிப்பதாகச் சொல்லுகிறான். அவரது மகளை ஒரு ரைஸ்மில் முதலாளி அவருக்கு ரூபாய் இருபதாயிரம் கொடுத்து முறையாகக் கல்யாணம் செய்து கொண்டுள்ளார்.(அவளும் பி.எஸ்.சி. வரை படித்தவள்) ரைஸ்மில் முதலாளியின் ஒரு கார் அநேகமாக எப்போதும் தரகர் அந்தோணியின் வீட்டு வாசலில்தான் நிற்கிறது. 

ஐம்பத்தைந்து வயதாகிவிட்ட அந்தோணியிடத்துக் கந்தனுக்கு மதிப்பு உண்டு. அந்தோணியும் அவரது பழைய நண்பர்களில் உருப்படியானவர்களை இன்னும் மறந்து விடாது, அவ்வப்போது அவர்களுக்குச் சிறு சிறு உதவிகள், பெரும் பெரும் ஆலோசனைகள் இவற்றைத் தருவதுண்டு. பொதுவாக ஆறுதலும் உலக ஞானமும் வேண்டுமளவுக்குத் தருவார். வீட்டை விற்பதில் சோலைப்பிள்ளையால் ஏமாற்றப் பட்டுவிட்ட கந்தன் அந்தக் காலத்திலேயே தரகர் அந்தோணி யிடம்தான் சென்றான். சோலைப்பிள்ளையினுடைய காலையோ கையையோ வாங்கிவிடப் போவதாக அவரிடத்து ஆத்திரத்தில் பேசினான். அந்தோணி அவனுக்குச் சமாதானம் சொன்னார். 

“தம்பி, ஏமாத்தறவங்களும் ஏமார்றவங்களும் இருக்கிறது தான் உலகத்தின் தன்மை; அதன் அழகூன்ட்டுக்கூட எனக்குப் படுது. எல்லோரும் நேர்மையா நடந்துகிட்டா, வாழ்க்கைலே போட்டியோ முன்னேற்றமோ இருக்காது; வாழ்க்கையே ‘சப்’னு இருக்கும். என்னைப் பொருத்தவரை, யாரையாவது கவுக்க, எதைப் பத்தியாவது சூழ்ச்சி செய்யும்போதுதான் எனக்கு உசிரோட இருப்பதாகவே தெரியிது. இல்லாட்டி தலையாட்டி பொம்மை மாதிரி இருப்பதுபோல் தான் இருக்கு சூழ்ச்சி செய்யற தெறமெதான் மனுஷனே மனுஷனாக்குது; அதுதான் மனிதருக்கும் மிருகங்களுக்கும் உள்ள பெரிய வித்தியாசம். சூழ்ச்சி செய்யத் தெரியாதவன் வாத்தியாராவோ குமாஸ்தாவாவோ வாழ்நாள் பூரா இருக்க வேண்டியது தான். அவன் பெரிய வக்கீலாவோ, டாக்டராவோ, ஏதோ வியாபாரியாவோ, அரசியல்வாதியாவோ, போர் வீரனாவோ வர முடியாது. மந்தரம் கிந்தரம்னு பேசறாங்க. மந்தாமும் கெடெயாது; மாயமும் கெடெயாது. தந்தரந்தான் மந்தரம். யுத்த தந்தரம்னு தானே சொல்றோம்? யுத்த மந்தரம்னா சொல்றோம். இது நா ஒண்ணும் புதுசாக் கண்டுபிடிச்ச உண்மை இல்லை. இந்த உண்மை, மெய்யாச் சொல்லப்போனா, பைபிள் காலத்துக்கும் முன்னதான உண்மை. பைபிள்லேந்து ஒரு உதாரணம் மட்டும் சொல்றேன். கடவுள் சாத்தானே பரலோகத்திலேந்து விரட்டி யடிச்சிடுறாரு. சாத்தானுக்குப் படுகோபம். எப்படியும் கடவுள் மீது வஞ்சம் தீத்துக்கணூம்னு துடிக்கிறான். ஆனா கடவு ளோட மோத இவனுக்கு சக்தி இல்லை. சாத்தான் இங்கே என்ன செய்யறான் தெரியுமா? ஒரு சூழ்ச்சி பண்ணறான். ஒரு சூழ்ச்சி பண்ணி ஏவாளை ஏமாத்தி, ஏவாளையும் ஆதாமை யும் கடவுளே சொர்க்கத்துலேந்து விரட்டியடிக்குமாறு செய்யறான். தோல்வி யாருக்கு, கடவுளுக்கா சாத்தானுக்கா? கடவுளுக்குத்தான். இது எங்க மதத்தில் ஒரு முக்கியமான பாடம்னு நெனெக்கிறேன். ஏன், ராமன் பெரிய வீரன்தான். ஆனா சூழ்ச்சி செஞ்சிதானே வாலியைக் கொல்ல முடியுது? ஆசை காட்டிக் கூடப் பொறந்தவங்களெப் பிரிச்சு, வீபிஷண னைத் தம்பக்கம் இழுத்துக்கிட்டுத்தானே இராவணனைக் கொன்னு சீதையை மீட்டாரு? கண்ணன் கதையைத்தான் எடுத்துக்கோயேன். தர்மனை ஜெயிக்க வைக்கத்தான் கண்ணன் எத்தனை சூழ்ச்சிக செய்யறாரு! பைபிளைப் படிக்கிறோம், ராமாயணத்தைப் படிக்கிறோம், பாரதத்தைப் படிக்கிறோம்; ஆனா இந்த விஷயங்களை எல்லாம் நாம புரிஞ்சுக்கறதே இல்லை” என்று சொல்லித் தரகர் அந்தோணி வருத்தப்பட்டுக் கொண்டார். 

“அதெல்லாம் சரி, ஆனா நம்மெ ஒருத்தன் ஏமாத்தும் போது…” என்று ஆத்திரத்தோடு ஏதோ சொல்ல வாயெடுத் தான் கந்தன். 

“பொறு தம்பி. என்னெப் பொருத்தமட்டிலே, என்னை ஒருவன் ஒரு வளிலே ஏமாத்தினா, அதே வளிலே வேறு யாரெ நான் ஏமாத்த முடியும்னுதான் யோசிப்பேன். என்னை ஏமாத்தினவன் கையெக் காலே வாங்கிடலாமான்னு யோசிக் கவே மாட்டேன். இந்தக் கத்தியையும் கபடாவையும் தூக்கறது எந்தப் பிரச்சினையையும் தீக்காதூனு யேசுநாதர்லேந்து காந்தி வரை சொல்லியிருக்காங்க. நீ அவன் கையெக் காலே வாங்கறே; அவன் ஆள் வச்சு ஒன் தலையை வாங்கிப்புடறான். அப்புறம் என்ன பிரயோசனம்? ஒன்னே ஒருத்தன் ஏமாத் தினா அவன் ஒனக்கு ஒரு தந்திரம் கத்துக்கொடுத்தான்னு வச்சிக்க. அவன் ஒரு வகைலே ஒனக்குக் குரு. அதை மட்டும் மறந்திராதே” என்று ஒரு குட்டிப் பிரசங்கம் செய்து கந்தனை சமாதானப்படுத்த முயன்றார் அந்தோணி. அவர் எப்போதும் அப்படித்தான். குட்டி பிரசங்கங்கள் செய்வதில் சமர்த்தர். இன்டர்மீடியட் வரை வேறு படித்தவர். சமயங்களில் ஆளுக்கேற்றாற்போல ஆங்கில மேற்கோள்கள் காட்டுவார் – அதாவது ஆங்கிலமே தெரியாதவர்களிடத்து. அவரது பிரசங்கத்தி னால் சமாதானம் அடையாத கந்தன், “இருந்தாலும் நம்ம பணத்தெ ஒருத்தன் தாப்பாப் போட்டான்கும்போது சும்மா இருந்தா மானங்கெட்ட பொளெப்பில்லையா?” என்று தொடர்ந்தான். 

“எதெத் தாப்பாப் போட்டான்? பணத்தத்தானே? பணமே ஒரு மானங்கெட்ட விஷயந்தானே?” என்றார் அந்தோணி. 

“எப்படி?” என்றான் கந்தன். 

“சொல்றதெக் கேளு. நான் பள்ளிலே படிக்கும்போது அப்ப எஸ்.எஸ்.எல்.சி. படிச்சிட்டிருந்தேன் – ஒரு நா கிரவுண்டிலே விளையாடிட்டிருந்தோம். சாயங்காலம் அஞ்சு, அஞ்சரை மணிதான் இருக்கும்; இன்னும் பொளுது சாயலை. ஒரு பணக்கார வீட்டுப் பையன் – சோமு நாடார் மகன்ட்டு நெனெக்கிறேன் – எவன் இந்த மோனேலேந்து அந்த மோனே வரைக்கும் பிறந்த மேனியா ஓடறானோ, அவனுக்குப் பத்து ரூபாய் தருவேன்னான். நாங்க எல்லோருமே தடிப்பசங்க. சோமு நாடார் மகன் சொன்னதைக் கேட்டு எல்லாரும் சிரிச்சாங்க. ஒரு சிலர் யோசிச்சாங்க. ஆனா நா சிரிக்கவும் இல்லை; யோசிக்கவும் இல்லை. ‘ரெண்டு தரம் ஓடினா, இருபது ரூபாய் தருவயா’ன்ட்டு மட்டும் சோமு நாடார் மகனேக் கேட்டேன். முடியாதூன்னான். சரி, கெடெச்சது லாபம்ன்ட்டு, அவன் எப்படிச் சொன்னானோ அப்படியே ஓடிட்டு, நிறுத்தி நிதானமா வேட்டியையும் சட்டையையும் போட்டுக்கிட்டு, சோமு நாடார் மகன்கிட்டேந்து பத்து ரூபாயை ஜெயிச்சேன். மத்தப் பசங்க எல்லாம் யாரெக் கேலி பண்ணினாங்கன்னு நெனெச்சே? என்னை இல்லை; சோமு நாடார் மகனெத்தான். தோத்தவன் அவன்தானே? புத்தருக்கு ஞானோதயம் வந்த மாதிரி எனக்கும் அப்பதான் ஞானம் ஏற்பட்டது” என்றார் அந்தோணி. 

“என்ன ஞானம்?” என்றான் கந்தன். 

“இந்தப் பணமே ஒரு மானங்கெட்ட விஷயம்ங்கற ஞானம் தான்.” 

கந்தனுக்கு எதோ சமாதானம் ஏற்பட்டதாகப் பட்டது.

கந்தன் சைக்கிள் ரிக்ஷாவில் தரகர் அந்தோணியின் வீட்டு முன் வந்திறங்கினான். வாயிற்படியை மறைத்துக்கொண் டிருந்த காரைக் கடந்து வீட்டினுள் நுழைந்தான். “சார்” என்று குரல் கொடுத்தான். ஒரு வேலைக்காரச் சிறுமி வெளியே வந்து, “யாரது?” என்றாள். 

“அய்யா இருக்காரா?” என்றான் கந்தன். 

“உங்க பேரென்ன?” என்றாள் சிறுமி. 

“கந்தன்ட்டு சொல்லு.” 

“அய்யா டிப்பன் சாப்பிடறாரு; இப்படி வந்து உக்காருங்க” என்றாள் சிறுமி. கந்தன் நடுவறையில் இருந்த இரண்டு சோபாக் களில் ஒன்றில் உட்கார்ந்துகொண்டான். சிறுமி மின்விசிறியைத் தட்டிவிட்டு உள்ளே சென்றாள். கந்தன் சுற்றுமுற்றும் பார்த் தான். சுவரில், பெரிய சைஸ்ஸில் ரைஸ்மில் முதலாளியும் அந்தோணியின் மகளும் மணக்கோலத்தில் இருந்த படம் ஒன்றும், யேசுநாதர், புத்தர், காந்தி மூவர் உருவங்களையும் கொண்ட ஒரு காலண்டரும் காணப்பட்டன. 

சிறிது நேரத்தில் அந்தோணி அறையினுள் நுழைந்தார். நல்ல கருப்பு. நல்ல உயரம். வழுக்கைத் தலை. தங்க பிரேம் மூக்குக் கண்ணாடியும், வெள்ளை பனியனும், வெள்ளை வேட்டியும் அணிந்திருந்தார். உடையில் ஒரு பொட்டு அழுக்கு இல்லை. அவரைக் கண்டதும், கந்தன் எழுந்து நின்று வணக்கம் சொன்னான். 

“கந்தனா? உட்கார் தம்பி” என்றுகொண்டே, அந்தோணி எதிர் சோபாவில் அமர்ந்துகொண்டார். 

“காபி சாப்பிடறயா?” 

“இல்லீங்க, இப்பத்தான் சாப்பிட்டு வந்தேன்.”

“மீனா எப்படி இருக்கு?” 

“இருக்கு. அது விஷயமாத்தான் ஒங்களெப் பாத்திட்டுப் போகலாம்னு வந்தேன்.” 

“ஏதாவது விவகாரம்னா மட்டுந்தான் அந்தோணி சார்கிட்டே வருவே; நல்ல நெலெலெ இருக்கும்போது ஒரு வாட்டி இந்தப்புறம் தலை காட்ட மாட்டே” என்றுவிட்டு இலேசாகச் சிரித்தார் அந்தோணி. 

“அப்படி ஒண்ணுமில்லே சார். இருந்தாலும் நீங்க சொல்ற திலும் உண்மை இருக்கத்தான் செய்யுது; ஒரு ஒதவி வேணூம்ன்ட்டுதான் ஒருத்தர்கிட்டே போறோம்.” 

“அப்படி இருக்கக்கூடாது தம்பி. யார் ஒதவி எப்போ தேவைப்படும்னு சொல்ல முடியாது. அவனா அவன் ஒரு அற்பப்பயல், அவன் ஒதவி நமக்கு எப்பத் தேவைப்படப் போகுதுனு ஒருத்தனெப்பத்தி நெனெச்சிருப்போம்; ஆனா ஒரு நேரத்துலே அதே ஆளோடெ ஒதவி தேவைப்படும். அப்பத் தான் நமக்குப் புத்தி வரும். அதுனாலேதான் யாரையும் ஒரு போதும் அசட்டை செய்திடக் கூடாது” என்று உபதேசம் செய்யத் தொடங்கினார் அந்தோணி. 

“நான் ஒங்களே அசட்டை செய்யலேயே?” என்றான் கந்தன். 

“நீ என்னெ அசட்டை செய்திட்டேன்னா நா இப்ப சொன்னேன்? பொதுவா உலகப் போக்கப் பத்திதான் சொல்லிட்டுருந்தேன்… சரி, இப்ப என்ன விஷயம்?” என்றார் அந்தோணி. 

“அதான் சொன்னேனே, மீனா விஷயமா.” 

“மீனாவுக்கு இப்ப என்ன?” 

“நல்லாத்தான் இருக்கு. எனக்குத்தான் ஒடம்புக்கு முன்னே மாதிரி இல்லே. மீனாவே ஒரு நல்ல இடமாப் பாத்து ஒரு ஏற்பாடெப் பண்ணிட்டா எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்” என்றான் கந்தன். 

“போடா, பைத்தியக்காரா. மீனா தங்கமான பொண்ணு; அது இல்லாட்டி நீ இன்னும் குட்டிச்சுவராப் போவே.” “நான் எப்படியும் போறேன். அது எங்காச்சிம் நல்லா இருந்தாப் போதும்.” 

“என்ன கந்தா, நீ என்ன எல்லாம் மின்னக் காலம் மாதிரி இருக்கூன்னா நெனெச்சிட்டிருக்கே? அயோக்கியத்தனம் பெருத்துப் போச்சு; வாய்ச் சுத்தங்கறது மருந்துக்குக் கூடக் காண முடியறதில்லே. உதாரணமாப் பார், போன வருஷம் நான்தான் முடிச்சு வச்சேன். இத்தனைக்கும் முடிக்கறதுக்கு அந்தச் சம்பகத்தெ இரும்புக்கடை சுந்தர பாண்டியனுக்கு பேசினேன். அவுங்களே, ‘எனக்கு ஆஸ்த்துமா; என்னாலே முன்னாலே, சுந்தரபாண்டியோடே சம்சாரத்தெக் கலந்து எம் வீட்டுக்காரருக்குச் சந்தோஷமில்லே; அவர் பிரியப்படி நீங்களே அவருக்கு ஒரு நல்ல ஏற்பாடா செய்துவைங்க’னிச்சு. நானும் செய்து வைத்தேன். ஆனா ஒரு வருஷமாகலே, அந்த சம்பகத்தெக் குளோஸ் பண்ணிட்டாங்களே! இன்னிவரைக்கும் அம்மாவும் அதோட கூடப் பொறந்தவங்களுமாச் சேந்து போலீசுக்கு ஒரு துப்புக்கெடெக்கலயாம்.” 

“ஆமாம், அந்தோணி சார். வில்லங்கம், சங்காத்தம் எதுவும் இல்லாத எடமாத்தான் பாக்கணும்” என்றான் கந்தன். 

“நீ என்ன புரிஞ்சிக்காம பேசறே? வில்லங்கம், சங்காத்தம் இல்லாத இடம் கெடெக்கறதுதானே அபூர்வமா இருக்கு இந்தக் காலத்திலே?” 

“நீங்க பாத்தா முடியாதா, சார்?” 

“சம்பகத்துக்கு நான்தான் பாத்தேன்; விளங்கலேயே!” 

“அதுக்கென்ன சார். நூத்துலே ஒண்ணு அப்படியும் போயிடும்.” 

“நூத்துலே ஒண்ணா? நூத்துலே தொண்ணூறுன்னு சொல்லு… சமயத்துலே நம்ம ஆளே சேம் சைடுலேயே ஃபவுல் பண்ணிடுது.” 

“எப்படி?” என்றான் கந்தன். 

“ஒனுக்கு தெரியுமோ தெரியாதோ, வில்லியம்ஸ் ரோட்டுலே கோகிலான்ட்டு ஒரு பொண்ணு இருந்திச்சு. பாத்தா ரொம்ப ஒளுங்காத்தான் தெரிஞ்சது. தலையெடுத்து ஒரு ஆம்பிளேயெப் பாக்காது. அதெ பூதமய்யர் ஓட்டல் மானேஜருக்கு முடிச்சு வச்சேன். மானேஜர் நல்ல கலர்; மன்மதன் மாதிரி இருப்பான். இந்தக் களுதே என்னடான்னா அவன் கூட ராணி மாதிரி இருக்கிறதெ விட்டிட்டு, ஓட்டல்ல தண்ணி எடுத்த ஒரு நாயர் பையனோடெ ஓடிரிச்சு. அய்யன் எனக்கு ஆயிரம் ரூவா தந்திருந்தான்; வீட்டுக்கு வந்து என் சம்சாரம் முன்னாடி கூச்சப் போட்டு எம்மானத்தெ வாங்கினான்.” 

“மீனா அப்படில்லாம் இல்லே. நாம ஒண்ணெச் சொன்னோம்னா அது நாம போட்ட கோட்டே உசிரு போனா லும் தாண்டாதில்லே” என்றான் கந்தன். 

“நம்ம கன்ட்ரோல்லே இருக்கற வரைக்கும்தானே நாம் போட்ட கோட்டெத் தாண்டாது? நம்ம கன்ட்ரோலெ விட்டுப் போயிட்டா?” என்றுவிட்டு அந்தோணி சிரித்தார். 

“இல்லீங்க அந்தோணி சார், மீனாவெ ஒங்களுக்குத் தெரியாது. நான் எல்லாத்தையும் அதுகிட்டே வௌக்கமாச் சொல்லி, அதோட முழு சம்மதத்தையும் வாங்கிட்டா, அது கொடுத்த வாக்கெ மீறாது.” 

“நீ வௌக்கமாவே சொல்லிடுவே; அதுவும் வாக்குக் கொடுத்துடும். ஆனா…” என்றிழுத்தார் அந்தோணி. 

“ஆமாம் ஒங்களுக்கு என்ன ஆயிரிச்சு?” என்றான் கந்தன். 

“வயசா?” 

கந்தன் சிரித்தான். 

“வயசைக் கேக்கலே. எப்போதும் ‘அது அப்படி ஆயிடும்; இது இப்படி ஆயிடும்னு யோசனெ பண்ணிட்டிருக்கக் கூடாது. துணிஞ்சு ஒரு கார்யத்துலே இறங்கணூம்’பீங்களே. இப்ப மட்டும் தொளவக்கணை 

யோசனை ஆரம்பிச்சிட்டீங்களே !” என்றான் கந்தன். 

“ஆமாம். ஆமாம். அதுவும் வயசு சம்பந்தப்பட்ட விஷயந் தான். எம்மக கல்யாணத்துக்குப் பிறகு நான் கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்க வேண்டிருக்கு. உனக்கு அந்த அம்பிகா கேசு தெரியுமில்லே?” 

“இப்ப ஏதோ சினிமாவிலே நடிக்குதாமே, அந்தப் பிள்ளே தானே. ஆமாம் ஆமாம். இப்பத்தான் நெனெப்புக்கு வருது. உங்கபாடு ரொம்ப மோசமாய் போயிருக்கும்னு சொல்லிட்டாங்க.” 

“மோசமாவா, தற்கொலை பண்ணிட்டிருப்பேன். மகராசன் நல்ல நேரத்துலே வந்து ஒதவினான்” என்றுவிட்டு, ‘அதுனாலேதான் இந்த மாதிரி சங்காத்தங்களே இனிமே வச்சுக்கிறதில்லைனு முடிவுக்கு வந்திருக்கேன்” என்றார் அந்தோணி. 

இந்த நேரத்தில் வீட்டுக்காரச் சிறுமி ஒரு தைல பாட்டி லோடு வந்து அந்தோணியிடத்து, “அம்மா காத்திட்டிருக்காங்க” என்று அறிவித்தாள். அந்தோணி எழுந்திருந்து தைல பாட்டிலைச் சிறுமியிடத்திருந்து வாங்கிக்கொண்டு, “சரி கந்தா, சேஃபா ஏதாவது இடம் கெடச்சா மீனாவுக்குப் பாக்கறேன். நீ மீனாவெ ஒரு டாக்டர் கிட்டே காட்டி, கம்ப்பீளீட்டா டெஸ்ட் பண்ணி, அதுக்கு டானிக் கீனிக் வாங்கிக் குடு. புஷ்டியாச் சாப்பிடச் சொல்லு. காய், கறி, பால், தயிர், முட்டை, மீன் நிறையச் சேக்கச் சொல்லு. வெளியே அதிகம் போகச் சொல்லாதே. இன்னும் ரெண்டு மூணு மாசத்துலே ஒனக்குச் சொல்லி அனுப்பறேன். நீ அப்ப வந்தாப் போதும்” என்று கூறிவிட்டு, “பிறகு சந்திக்கலாம்” என்றார் அந்தோணி. கந்தன் எழுந்து அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டான். 

கந்தனுக்கு ஏமாற்றமாக இருந்தது. தரகர் அந்தோணி இவ்வளவு நைசாகத் தப்பித்துக்கொள்வார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ‘அந்தோணி சாரும் மாறிட்டார்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். அவன் ஷெனாய் நகருக்கு இதற்கு முன்னால் வந்தது இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு. இப்போது நகரம் மிகவும் விஸ்தாரம் அடைந்திருந்தது. எங்கு பார்த்தாலும் புதுப்புது வீடுகள்; எல்லாமே மாடி வீடுகள். ஷெனாய் நகரில் முதல் முதலாகக் கட்டப்பட்ட ஓரிரு வீடுகள் மட்டும் ஒளியிழந்து, பள்ளிச் சிறுமிகள் மத்தியில் நிற்கும் பிச்சைக்காரக் குழந்தைகள் போலத்தென்பட்டன. எங்கு பார்த் தாலும் வளர்ச்சி; எங்கு பார்த்தாலும் மாறுதல். ஆனால் தன் வாழ்க்கையில் மட்டும் மாறுதலே இல்லை போல் அவனுக்குப் பட்டது. 

எல்லாரும் அவனை விட்டுவிட்டு எங்கேயோ சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு எல்லாம் எங்கு செல்ல வேண்டும். எப்படிச் செல்ல வேண்டும் என்று தெரிந்திருந்தது. அவனுக்கு மட்டும் தெரியவில்லை. மீனாவுக்கும் தெரிய வில்லை. திருவிழாக் கோலாகலத்தில் எல்லாரும் உற்சாகத் தோடு அங்குமிங்கும் சென்றுகொண்டிருந்தனர். கந்தனும் மீனாவும் மட்டும் எங்கு போவது, எதைப்பார்ப்பது, எதை வாங்குவது, எப்படி வாங்குவது ஒன்றும் அறியாமல் தெரு வோரம் தனித்து உட்கார்ந்திருந்தனர். அவனுக்கும் அவளுக் கும் இருந்ததெல்லாம் ‘இன்று’ மட்டுந்தான்; ‘நாளை கூடப் பிடிபடவில்லை. ‘நாளை திங்கக்கெழமை’ என்று அர்த்த மில்லாமல் நினைத்துக்கொண்டான் கந்தன். தேதி? தேதியை யார் கண்டது? நாயுடு வாடகைக்கு வந்தால் தேதி ஆறு; அவ்வளவுதான். 

ஷெனாய் நகர் வீடுகளின் காம்பவுண்டுகளுக்குள் சிறுவரும் சிறுமியரும், பந்தோ, பாண்டியோ, ஓடிப்பிடித்தோ விளை யாடிக் கொண்டிருக்கின்றனர். இருட்டாகிற நேரம்; ஆனால் இன்னும் முற்றிலும் இருட்டாகவில்லை. வீடுகளிலெல்லாம் விளக்கு சற்றே அசட்டுப் பிரகாசத்தோடு எரிகின்றன. மேடு பள்ளங்களோ, கோணல் மாணல்களோ இல்லாது நேராகச் செல்லும் சாலைகள் வழியேயும், குறுக்குச் சாலைகள் வழியே யும் கந்தன் நடக்கிறான். அவ்வப்போது ஓரோர் பர்லாங்கு தூரத்தில் வந்து நிற்கும் சிட்டி பஸ்ஸிலிருந்து வேலைக்கோ, வேறெங்கோ சென்றுவிட்டுத் திரும்புபவர்கள் இறங்கு கின்றனர் – ஆடவரும் பெண்டிரும், யுவர்களும் யுவதிகளும், சிறுவரும் சிறுமியரும். முகங்களில் சற்றே உடற்களைப்பு; ஆனால் அதை விஞ்சி நிற்கும் மனக் களிப்பு. சிரித்துப் பேசி விடைபெற்றுக் கொள்கின்றனர். அவ்வப்போது ஒரு கார் விரைந்து கந்தனைக் கடந்து செல்கிறது. சாலையோரம் இருக்கும் மின்விளக்குகள் சொல்லி வைத்தாற்போல ஒரே நேரத்தில் கண்களைத் திறந்து நீல ஒளியைப் பொழியத் தொடங்கு கின்றன. வரிசையாக நிற்கும் வேப்பமரங்கள் அவ்வப்போது முன்னறிவிப்பு இல்லாமல் சலசலத்து ஓய்கின்றன. சந்தோஷமும், எந்தவிதத் தீங்கும் சம்பவிக்காது என்ற உறுதியும் பழக்கப்பட்டு விட்டதால், அவற்றைப் பெரிதுபடுத்தாது இனி வருவது இப்போதுள்ளதைக் காட்டிலும் சிறப்பாகவே இருக்கும் என்ற நம்பிக்கையில் ஊறிப் போயிருக்கும் ஷெனாய் நகர வாசிகள் தத்தம் வீடுகளுக்குள்ளேயே உலகம் முழுமையும் கண்டு கொண்டிருக்கும் நேரத்தில் அவர்கள் நடுவே, ஒரு வேற்று நாட்டவன் போல் கந்தன் நடந்து செல்கிறான். நடையில் வேகமோ நோக்கமோ இருப்பதாகத் தெரியவில்லை. அவனைப் பொருத்தமட்டில் இன்னும் கொஞ்ச நாட்கள் தாம். ஆனால் அவனுக்குப் பிறகும் அவர்கள் எல்லாம் இன்னும் பெரிய வீடுகளைக் கட்டிக்கொண்டு அவற்றில் வசிப்பார்கள்; அவற்றில் இன்னும் பிரகாசமான விளக்குகள் எரியும். அவ் விளக்குகளின் ஒளியில் இன்னும் இன்னும் மகிழ்ச்சி நிறைந்த குழந்தைகள் விளையாடுவார்கள். கந்தன் சுற்றுமுற்றும் பார்த் தான். வெளியுலகம் இருட்டி விட்டதால், வீடுகளுக்குள் எரிந்த விளக்குகள் மிகவும் பிரகாசம் நிறைந்து தோன்றின. வீடுகளை ஒட்டியிருந்த சிறு சிறு தோட்டங்களில் மட்டும் ஆங்காங்கே பசுங் கருந்திட்டுகள் தென்பட்டன. வீடுகளுக்கு உள்ளே ஆர்ப் பாட்டமோ, பரபரப்போ இல்லாமல் திட்டமிட்ட முறையில் மன நிறைவோடு அன்றாட வாழ்க்கையைச் சுவைத்துக் கொண் டிருந்த மனிதர்கள். அவ்வீடுகளைப் பார்த்துக்கொண்டே நடந்தான் கந்தன். ஒரு நாய் அவனைப் பார்த்துக் குரல் கொடுத்தது; ஒரு காகம் அவன் தலையையொட்டித் தாழ் வாகப் பறந்து சென்றது. டவுனுக்கு இட்டுச் செல்லும் ஒரு குறுக்குப் பாதையை நோக்கிக் கந்தன் சென்றுகொண்டி ருந்தான். ஷெனாய் நகரம் முடிவடைகிறது. ஷெனாய் நகரோடு ‘ஒன்று விட்ட’ உறவு கொண்டாடும் சில எளிய வீடுகளைக் கடந்தபின் சிவலிங்கபுரம் தொடங்குகிறது. மனித வாடை மூக்கைத் தட்ட ஆரம்பிக்கிறது. கூடவே கொஞ்சம் இரைச்சல்; கொஞ்சம் இருள். அந்த இருளில் ஒரு சிவப்பு விளக்கு ‘இது தான் சாராயக்கடை, எண்-13, சிவலிங்கபுரம்’ என்று அறிவிக் கும் பலகை ஒன்றை எடுத்துக்காட்டுகிறது. 

கடையில் கூட்டம் அதிகம் இல்லை. கந்தன் உட்கார்ந்த தும் அவனுக்கு எதிரே சுவரில் பெரிய எழுத்துகளில் எழுதி யிருந்த வாசகத்தைப் படித்தான்: ‘அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சு- தெ.சோ.க., சிவலிங்கபுரம் கிளை’. அந்தக் கடைக்குக் கந்தன் வருவது அது முதல் தடவை அல்ல. அவனுக்குக் கடை மானேஜரைக்கூட ஓரளவு தெரியும். அவர் ஒரு இளைஞர்; சற்றுப் படித்தவர். கடையைத் திறந்தபோது மிகுந்த உற்சாகத்தோடு சுவரில் பெரியதாக ‘மசூதியில் வீணடித்த நேரத்தைச் சாராயக் கடையில் சரிக்கட்டுவோமாக’ என்று எழுதிப்போடச் செய்தது கந்தனுக்குத் தெரியும். அந்த வாசகம் அவனுக்கும் பிடித்திருந்தது. பல தடவை சாராயக்கடைக்குள் நுழையும்போது அவன் அந்த வாசகத்தைத் தனக்குள் சொல்லிக் கொண்டதுண்டு. ஆனால் அந்த வாசகம் எழுதப்பட்ட பத்து நாட்களுக்குள் ஒருநாள், சிவலிங்கபுரத்திலிருந்து ஆறு மைல் தொலைவிலிருந்த ஆதம்சாபுரத்திலிருந்து சில இளைஞர்கள் சாணிச் சட்டிகளோடு வந்து சாணித் தண்ணீரை வாசகத்தின் மீது வீசினார்கள். மானேஜர் அந்த இளைஞர்களிடம் சென்று, அந்த வாசகத்தைச் சொன்னதே ஒரு முகமதியக் கவிஞன்தான் என்று விளக்கவும், மீதியிருந்த சாணித் தண்ணீரை அவர்கள் மானேஜர் மீது காலி செய்து விட்டு, கல்லாப் பெட்டியையும் கொள்ளையடித்துச் சென்றனர். அதற்குப் பின்தான் தெ.சோ. க.வின் சிவலிங்கபுரத்துக்கிளை தனக்கு மக்களின் வளமான வாழ்க்கையில் இருந்த அக்கறையை வெளிப்படுத்திக்கொள்ள, ‘அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சு’ என்ற வாசகத்தைச் சாராயக் கடையின் சுவரில் எழுதி வைத்தது. கந்தனுக்கு என்னவோ இப்புதிய வாசகம் கொஞ்சமும் பிடிக்கவில்லை; அளவோடு குடிப்பவர்களைக் கண்டால் கந்தனுக்குச் சற்று எரிச்சல்தான் ஏற்படும். மளமளவென்று குடித்துவிட்டுக் கடையை விட்டு வெளியே வந்தான் கந்தன். தரகர் அந்தோணியின் நினைவு வந்தது. ‘பெண்டாட்டிக்குத் தைலம் தடவிக் குளுப் பாட்டி விடற்ற அவசரம்!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அவன் அந்தோணியின் ‘மனைவி’யைப் பார்த்து இருக்கிறான். மலையாளத்துப் பெண். நல்ல கலர், நல்ல ஃபிகர். அந்தோணியின் மகள் அவருக்குப் பிறக்கவில்லை என்பது தான் பொதுவான நம்பிக்கை. மில் முதலாளிக்கு அவளைப் பேசும்போது, அந்தோணியே அந்த அளவுக்கு ஒத்துக்கொண்டதோடு, அவள் ஒரு நம்பூதிரிக்குப் பிறந்ததாகச் சொன்னதாகவும் சிலர் சொன்னார்கள். ‘இந்தப் பணமே ஒரு மானங்கெட்ட விஷயந்தானே?’ என்ற எப்போதோ கேட்ட வார்த்தைகள் கந்தன் நினைவுக்கு வந்தன. 

சிவலிங்கபுரத்தைக் கடந்து டவுனுக்கு இட்டுச் செல்லும் குறுக்குப் பாதைக்குக் கந்தன் வந்தான். ரோட்டின் ஒருபுறம் ஊருணி இருந்தது. இப்போது அதில் அதிகம் நீர் இல்லை; இருந்த நீர்ப்பரப்பையும் அல்லியும் ஆம்பலும் மறைத்து இருந்தன. தெரு விளக்குகளில் சிலவற்றில் பல்புகள் இல்லை; இருந்தவையும் அதிகப் பிரகாசத்தோடு எரியவில்லை. ஊரின் ஒதுக்குப்புற மாதலால், பல ஆண்டுகள் ஆகியும் மின்சாரக் கம்பிகள் மாற்றப் படாததால், விளக்குகள் வெண்மையான ஒளிக்குப் பதிலாகச் செம்மையான ஒளியையே தந்தன. அந்தப் பகுதியிலிருந்த நூற்பு ஆலை ஒன்று பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடைக்கப் பட்டதிலிருந்து அந்தப் பகுதியே கேள்வி கேட்பாரற்றுப் போய் விட்டது. ஆளரவமற்றுப் போன நூற்புமில் கட்டிடம்தான் அந்தப் பகுதியையே கட்டியாளும் துர்தேவதைபோல, சாலையிலிருந்து சற்றுத் தொலைவில் கருவேல மரங்கள் சூழ, மழையையும், காற்றையும், வெயிலையும், இருளையும் சுமந்து நின்றது. ஒரு காலத்தில் அக்கட்டிடம் கள்ளச்சாராயக் கிடங்காக இருந்ததாகவும், ஊரில் நடந்த ஓரிரு கொலைகள் அங்குதான் திட்டமிடப்பட்டதாகவும் சொல்வார்கள். கந்தன் கடந்து வந்த ‘ரயில்வே கிராசிங்’கிலிருந்து சுமார் ஒன்றரை பர்லாங்கு தூரத்திற்கு வீடுகளோ கட்டிடங்களோ கிடையாது. சாலை யின் ஒருபுறத்தில் மட்டும் வரிசையாகப் புளிய மரங்களும் பூவரசு மரங்களும் நின்றன. டவுன் எல்லையை அணுகுவதற்கு முன்னால் தென்படுவது வலது கைப்புறத்தில் ஒரு சிறு வீடும், வீட்டுத் திண்ணையின் ஒரு பகுதியில் இருந்த சிறு வெற்றிலை பாக்குக் கடையும். கடைக்கு எதிரே ஒரு ‘ஒர்க்ஷாப்’ ஞாயிற்றுக் கிழமையாதலால் ‘ஒர்க்ஷாப்’ அடைத்துக் கிடந்தது. ‘ஒர்க்ஷாப்’ பிலிருந்து இன்னும் இரண்டு பர்லாங்குகள் சென்ற பின்தான் டவுன் ஆரம்பமாகிறது. இவ்விடைவெளியில் இன்னும் கட்டிடங் கள் தலை தூக்கவில்லை. மேற்சொன்ன வெற்றிலைபாக்குக் கடையில் ஒரு மண்ணெண்ணெய் விளக்கு எரிந்துகொண் டிருந்தது. கந்தன் கடைக்குப் பதினைந்து இருபதடி தூரத்தில் வந்துகொண்டிருந்தபோது, வழக்கமாகக் உட்கார்ந்திருக்கும் அன்னக்கிளி கடையைவிட்டு வெளியே வந்து கடையருகே நின்றுகொண்டு டவுனுக்குச் செல்லும் திசையில் எதையோ பார்த்துக்கொண்டிருப்பதைக் கந்தன் கண்டான். ஒருமுறை அவளிடம் தீப்பெட்டி வாங்கிய போது அவள் தீப்பெட்டியைக் கந்தன் கையில் கொடுத்தபடியே, அவன் உள்ளங்கையைச் சுரண்டியதை நினைத்துக்கொண்டு, கந்தன் பின்புறமிருந்து அன்னக்கிளியை அணுகிக்கொண் டிருந்தான். கைகளை உதறிக்கொண்டே சற்றுத் தொலைவில் எதையோ நோக்கிக் கொண்டிருந்த அன்னக்கிளியைக் கந்தன் அணுகவும் அவள் பதறிப் போய், “அடியாத்தே!” என்று கத்திக் கொண்டு ஒருபுறம் ஓட முயன்றாள். கந்தன் அவளது கையை இறுகப் பற்றி “என்ன ஓட்டம்?” என்று கடிந்தான். கந்தனைப் பார்த்த அன்னக்கிளி சற்று நிதானம் அடைந்த வளாய், “அங்கே பாருங்கையா, அங்கே பாருங்க, அந்த ரெண்டு பேரும் அந்த ஆளே கும்கும்னு குத்திக்கிட்டு இளுத்திட்டிருக்காங்க” என்று குழறினாள். 

அன்னக்கிளி குறிப்பிட்ட திசையில் கந்தன் நோக்கினான். சற்றுத் தொலைவில், சாலையின் ஒரு ஓரமாக மூன்று உருவங் கள் தள்ளாடிக் கொண்டு நின்றதை அவனால் பார்க்க முடிந்தது. ஒரு கணம் யோசித்துவிட்டுப் பிறகு நிதானமாக உருவங்களை நோக்கி நடந்தான் கந்தன். உருவங்களுக்குப் பத்துப் பதினைந்து அடி தூரத்திற்கு வந்தவுடன், அரை குறை இருட்டில் இரண்டு பேர் ஒரு மூன்றாவது நபரை அடித்துக் கொண்டும், குத்திக் கொண்டும். இழுத்துக்கொண்டும் இருந்ததைக் கண்டான். மூன்றாவது நபர் நன்றாகக் குடித்த நிலையில், தனது முழுப் பளுவையும் கொண்டு மற்ற இருவரின் இழுப்பைச் சமாளித்துக் கொண்டிருந்ததாகப்பட்டது. இருவரில் ஒருவன் ஒரு கையில் கத்தி போன்று ஒன்று வைத்திருந்தான். கந்தனுக்குத் திடீ ரென்று உடல் சிலிர்த்தது; வாய் இறுக மூடியது; கண்கள் விரிந்தன. இழுபட்டுக் கொண்டிருந்த மூன்றாம் நபர் சோலைப் பிள்ளை! ஒரு தாவு தாவி மூவர் மத்தியிலும் குதித்தான் கந்தன். சோலைப்பிள்ளையைத் தாக்கிக்கொண்டிருந்தவர்களில் ஒருவனைக் கையாலும், மற்றவனைக் காலாலும் எட்டி அடித்தான். அவர்களில் ஒருவன் கத்தியை ஓங்கவே, கந்தன் சோலைப்பிளையையே தனக்குப் பாதுகாப்பாக அமைத்துக் கொண்டு, அவரைப் பின்புறமாக அணைத்துக் கொண்டான். திடீரென்று “அய்யோ” என்ற அலறல் கேட்டதும், கந்தன் சரக்கென்று சோலைப்பிள்ளையைத் தன்னணைப்பிலிருந்து விடுவித்தான். “அய்யோ, அம்மா” என்று கத்தினான் இருவரில் ஒருவன். அவன் முன்னங்கையிலும் சட்டையிலும் ரத்தம் பாய்ந்திருந்தது. அது வழிந்து அவன் கையிலிருந்த கத்தி நுனியி லும் தென்பட்டது. “கொலை! கொலை! சோலைப்பிள்ளை யை அந்த ஆளுங்க கொன்னுப் போட்டாங்க” என்று உரக்கக் கூவினான் கந்தன். தொலைவில் இருந்து கொண்டே இந்தக் காட்சியை எல்லாம் பார்த்துக்கொண்டு நின்ற அன்னக்கிளி, “கொலெ! கொலெ!” என்று கத்திக்கொண்டே ஓட்டமெடுத் தாள். சோலைப்பிள்ளையைத் தாக்கிய இருவரும் ஊருணிக்குள் குதித்துத் தலைதெறிக்க ஓடினர். கந்தன் அருகே இருந்த பூவரசு மரத்துக்குப் பக்கம் சென்று, கையிலிருந்த ஸ்பிரிங் கத்தியையும் இடுப்பிலிருந்த உறையையும் பூவரசு மரப் பொந்தினுள் போட்டு விட்டு, வேக வேகமாகக் கடை வெளிச்சத்துக்கு வந்தான் அவனது வேட்டி சட்டைகளின் முன்புறத்தை நன்றாக வெளிச்சத்தில் துருவித் துருவிப் பார்த்துக்கொண்டான். பிறகு அன்னக்கிளி ஓடிய திசையில் திரும்பிப் பார்த்தான். அவள் சிறிது தூரம் ஓடிவிட்டு, கடைப் பக்கம் பார்த்தவளாய் நின்று கொண்டிருப்பது போல் கந்தனுக்குத் தெரிந்தது. “கொலெகாரப் பசங்க ஓடிட்டாங்க. நீ இந்தப் பொறம் வந்திடு. ஆத்தா” என்று உரக்கக் கத்தினான் கந்தன். 

தொலைவில் தரையில் கிடந்த உருவத்தைப் பார்த்தவாறே தயங்கித் தயங்கிக் கடையருகே வந்து, கந்தனுக்குப் பின்னால் நின்றுகொண்டு “உசிரு போயிரிச்சா?” என்று நடுங்கியவண்ணம் கேட்டாள் அன்னக்கிளி. 

“அப்படித்தான் தெரியுது” என்றான் கந்தன், ஒரு சிகரெட் டைப் பற்றவைத்தவாறே. 

“இப்ப என்ன செய்யறது?” என்றாள் அன்னக்கிளி. 

“போலீசுக்குத் தகவல் சொல்லியனுப்பணும்” என்று கந்தன் சொல்லிக்கொண்டிருக்கும்போது ரோட்டில் சைக்கிள் வெளிச்சம் ஒன்று பெரியதாகிக்கொண்டே அவர்களை நோக்கி வந்தது. கந்தன் நடுரோட்டில் நின்றுகொண்டு சைக்கிளை நிறுத்தினான். சைக்கிளில் வந்த இளைஞன் பதறிப்போய் “என்ன? என்னைய்யா?” என்று இளைத்தான். 

“அங்கே பாரு, அந்த ஆளே ரெண்டு பேருக இப்பத்தான் குத்திக் கொன்னுட்டுப் போறாங்க. பிள்ளையார் கோவில் ஸ்டேஷனுக்குப் போயி ஒடனே தகவல் சொல்லிவிட்டு வா” என்றான் கந்தன். 

“கொலையா? எங்கே?” என்று கேட்டான் இளைஞன். “அதோ அங்கேதான். நீ வேகமாப்போயி, பக்கல்லே தானே இருக்கு, பிள்ளையார் கோயில் ஸ்டேஷனிலே சொல்லிட்டு வா.” 

“அய்யோ, எனக்கு எந்தப் போலீஸ் ஸ்டேஷனும் தெரியாது; நா போகமாட்டேன்.” 

“ஏன்?” 

“நா ஊருக்குப் புதுசு.” 

“ஏந் தம்பி டூப்பு விடறே? ஊருக்குப் புதுசா இருக்கவுந் தானே இந்நேரத்துலே இந்த ரோட்டுப் பக்கம் சைக்கிள்லே வர்றே? உம், பாவம் ஒரு பக்கம் பளியொரு பக்கம்னு போயிறக் போலீசிலே தகவல் கொடுத்திரு” கந்தன் இளைஞனை முறைத்துப் கூடாது.கொலெ சின்ன விஷயம் இல்லே. ஒடனே போயிப் பார்த்தான். 

“என்ன கண்றாவி இதூங்க. நான் அவசரமா ஒரு எடத்துக்குப் போக வேண்டிருக்கு” என்று முணுமுணுத்துக் கொண்டே, இளைஞன் வந்த பக்கமே சைக்கிளைத் திருப்பினான். இளைஞன் சைக்கிளில் ஏறுவதற்கு முன் கந்தன் அவன் பெயர், விலாசம் இவற்றை விசாரித்துக் கொண்டான். 

“எனக்குக் கையும் காலும் பதறுதுங்க; ரெண்டு கை நெறெய, ஆதரவா, எதாச்சிம் கட்டிப் பிடிச்சுக்கிட்டா தேவலே போல இருக்கு” என்றாள் அன்னக்கிளி. 

அடுத்தடுத்த மரங்களை இருளிலிருந்து கிழித்துக் கண்ணுக்குக் காட்டிக் கொண்டே விரைவில் விலகிப் போய்க் கொண்டிருந்த சைக்கிள் வெளிச்சத்தைக் கவனித்துக்கொண்டும் புகைத்துக்கொண்டும் இருந்த கந்தன், “புருஷன் எங்கே போயிருக்காரு?” என்றான். 

“பக்கத்து ஊரு போயிருக்காரு; வர்ற நேரம்தான்” என்றாள் அன்னக்கிளி. 

“பின்னே என்ன, கொஞ்ச நேரம் பொறுத்துக்க” என்றான் கந்தன். அன்னக்கிளி சிரித்தாள். பிறகு, “நாம கோட்டுக்குப் போக வேண்டியிருக்குமா?” என்று கேட்டாள். 

“என்ன வேடிக்கையா? நாமதான் போலீசுக்கு முக்கிய சாட்சியா இருப்போம்.” 

“இங்கேயே ரோட்டுல நின்னுக்கிட்டிருந்தா? வாங்க வீட்டுக்குள்ளாற போயிக் குந்திக்கலாம்.” 

“பொணத்தெப் பாத்துக்கிட வேணாமா?” 

“நீங்க அதெ நல்லாப் பாத்திங்களா? எப்படி இருக்கு?” 

“நீயே பக்கல்ல போயிப் பாத்திட்டு வா.” 

“அடியாத்தே நா மாட்டேன். அப்பொறம் தூக்கம் வராது. இன்னும் சொல்றாங்க, இந்த மாதிரி செத்தவங்க பொணத்தெக் கண்டுக்கிட்டா, அதோட ஆவி வந்து நம்மச் சுத்திக்கிட்டு சுத்திக்கிட்டு வருமாம்.” 

“எதுக்கு?” 

“என்னெக் குத்தும்போது நீ பாத்திக்கிட்டுத்தானே இருந்தேன்னு கேட்டுக்கிட்டு இமிசை பண்ணுமாம். ஆமாண்ணே, சுடுகாட்டுலே வச்செரிக்கிறப்ப இந்த மாதிரி பெணங்களோட நெஞ்சு வேகாதாமே, அப்படியா அண்ணே?” 

“ஆமாம், வேகாதும்பாங்க. சரி, இப்ப போலீசு வந்து என்ன நடந்திச்சூன்னு கேட்டா என்ன சொல்லுவே?” 

“கண்டுக்கிட்டதெ சொல்லுவேன்.” 

“கடசிலே நாம் போயி அவுங்களெப் பிரிச்சுவிட அவங்க மத்திலே விளுந்ததே எல்லாம் சொல்லிட்டிருக்காதே. நம்மத் தேவையில்லாம விசாரிச்சுத் தொந்தரை பண்ணுவாங்க. நாம அவுங்க கிட்டே போவறதுக்கு முன்னமே அவுங்க ரெண்டு பேரும், அந்த ஆளெக் குத்திச் சாகடிச்சிட்டு ஓடிட் டாங்கன்னே ரெண்டு பேரும் சொல்லுவோம்.” 

“ஆமா ஆமா, நீங்க எதுக்கு இந்த வில்லங்குத்துலே மாட்டிக் கணும்? 

அப்ப, இந்தக் கேசு முடியற மட்டும் நாம ரெண்டு பேரும் சந்திச்சுக்கிட்டு இருப்பம் இல்லீங்களா?” 

“ஆமாம்.’ 

“உங்க பேரு என்ன? என்ன செய்யறீங்க?” 

“எம் பேரு கந்தன். வீடு, நெலம் தரகு வேலை பாக்கறேன். திருவிளா டயத்துலே வெளியூர்லேந்து வார்றவங்களுக்கு ஊரே, கோவிலே சுத்திக் காட்டுவேன்.’ 

“நல்ல சம்பாத்தியங்களா?” 

“ஏதோ வண்டி ஓடுது.” 

“என்னெத் தெரியூங்களா ஒங்களுக்கு?” 

“அன்னக்கிளிதானே ஒம் பெயரு?” 

“ஆமாம், ஆமாம்! உங்களுக்கு எப்படீங்க எம் பெயரு தெரியுது?” 

“இந்த ஒர்க்சாப்பு இருக்கில்லே, அதுலே என் சேத்தாளி ஒருத்தன் வேலெ பார்த்தான்; அவன் ஒன்னெப் பத்திச் சொல்லியிருக்கான்.” 

“யாரது?” 

“பாண்டுரங்கன்னு பேரு.” 

“ஓ, செவத்திருக்குமே, அந்த நாயுடு வீட்டுத் தம்பியா?” 

“அவனே தான்.” 

“அது ரொம்ப சொவாபமான தம்பீங்க. ஆனா இந்த ஒர்க்சாப்புலே வேலே பாக்கற மத்தப் பசங்க எல்லாம் படுக்காளிப் பசங்க” என்று கொண்டே, கலைந்து போயிருந்த தனது கொண்டையை முற்றாக அவிழ்த்துவிட்டு இரண்டு கைகளாலும் அதைப் பின்புறமாகச் சொடுக்கி விட்டு மீண்டும் முடியை அள்ளிச் சொருகினாள் அன்னக்கிளி. 

இந்த நேரத்தில் கந்தன் வந்த அதே திசையிலிருந்து வந்த ஒரு மனிதர், “அன்னம், என்ன இது கடெயெ விட்டிட்டு நட்டுக்கு ரோட்டிலே நின்னுக்கிட்டு இருக்கே?” என்று கேட்டார். அவரைத் திரும்பிப் பார்த்த அன்னக்கிளி, “மச்சான் மச்சான், அங்கே பாரு, அங்கே பாருங்க, ஒரு ஆளே ரெண்டு பேருங்க குத்திக் கொலெ பண்ணிட்டு ஓடிட்டாங்க.” 

“கொலையா?” என்றார் அன்னக்கிளியின் மச்சான். 

“ஆமாம்” என்றனர் கந்தனும் அன்னக்கிளியும். 

ஏதோ அடித்துப்போட்ட பாம்பைப் பார்க்கச் செல்வது போல், அன்னக்கிளியின் மச்சான் அவள் காட்டிய இடத்தை நோக்கி நடந்தார். 

“அய்ய, நீங்க அங்கிட்டுப் போவாதீங்க” என்று அலறினாள் அன்னக்கிளி. பிணத்தருகே சென்று அதை உற்று நோக்கிவிட்டுத் திரும்பினார் அன்னக்கிளியின் மச்சான். பிறகு வீட்டுக்குள் சென்று ஒரு டார்ச்சு லைட்டை எடுத்து வந்தார். பிணத்தருகே சென்று, டார்ச் லைட்டு வெளிச்சத்தில் பிணத்தைப் பார்த்தார். பிணம் குப்புறக் கிடந்தாலும், தலை பக்கவாட்டாகத் திரும்பி இருந்தது. ஒரு கன்னம் தரையில் அழுந்தி, நாக்கின் ஒரு சிறு பகுதி பற்களுக்கிடையே துருத்திக்கொண்டு, கண்கள் வெறித்து நோக்கக் கிடந்தது அப்பிணம். இரண்டு கைகளும் வயிற்றை அழுத்திப் பிடித்துக்கொண்டு, குளிரில் சுருண்டு கிடக்கும் ஒரு குழந்தையைப் போலவும், யார் காலடியிலோ விழுந்து உயிருக்கு மன்றாடிக்கொண்டிருப்பது போன்றும் அது கிடந்தது. கண்கள் வெறித்திருந்தாலும், நாக்கின் ஒரு சிறு பகுதி பற்களுக்கிடையே துருத்திக்கொண்டிருந்தாலும், அந்தப் பிணத்தைப் பார்த்தால் பயமோ பீதியோ ஏற்படாது, இரக்கமே ஏற்படும் வகையில் கிடந்தது அது. அன்னக்கிளியின் மச்சானின் பின்னால் வந்து பிணத்தை நோக்கிய கந்தனுக்கு ‘திக்’கென்றது. 

“வெத்திலப்பேட்டை பிச்சையா மாதிரினா தெரியுது!” என்றார் அன்னக்கிளியின் மச்சான் தேவைப்படாத சலிப்புடன். 

கந்தன் மனதில் வெட்கம் வெடித்தது. 

“நீங்க ரெண்டு பேரும் நேர்ல பாத்தீங்களா?” என்றார் அன்னக்கிளியின் மச்சான். 

“ஆமாம்” என்றாள் அன்னக்கிளி. 

“அப்ப நீ எங்கிருந்தே?” 

“இங்கிட்டுத்தான்.” 

“அவரு?” 

“அவரும் இங்கிட்டுத்தான்.” 

“இங்கிட்டுத்தான்னா, நடு ரோட்டுலேயா?” 

“ஆமாம், ரோட்டுலெதான். அவரு அப்பத்தான் இப்படி வந்துக்கிட்டிருந்தாரு” 

இருவர் பேசிக்கொள்ளும்போதும் அவ்விருவரையும் மாறி மாறிப் பார்த்தான் கந்தன். அன்னக்கிளியின் மச்சான் கந்தன் பக்கம் திரும்பி, “நீங்க யாரு?” என்றார். 

“அவர் பேரு கந்தன்” என்றாள் அன்னக்கிளி. 

“டவுன்லே ‘திருவாளத்தான் கந்தன்’ம்பாங்களே, அது நீங்கதானா?” என்று தொடர்ந்தான் அன்னக்கிளியின் மச்சான். 

“அது நானில்லீங்க; வேறொரு ஆளு” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் கந்தன். 

– தொடரும்…

– நாளை மற்றுமொரு நாளே…(நாவல்), முதல் பதிப்பு: 1974.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *