நாய்ச்சோறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 5,512 
 

அந்த வீட்டில் வேலைக்குச் சேர்ந்ததற்காகத்தான் அவனை எல்லோரும் திட்டினார்கள். ‘ஆறுமாதத்திற்கு ஒரு வீடு’ என மாறி மாறி வேலை செய்துகொண்டே இருந்தால், தன்னுடைய வேலைத்திறமை, நடத்தை மீது மற்றவர்களுக்கு ஐயம் ஏற்படக் கூடும்’ என்று நினைத்துத்தான் அவன் ஒரே முடிவோடு அந்த வீட்டில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான்.

அவன் இதுவரை நான்கு வீடுகளில் பணியாற்றி இருக்கிறான். அந்த வீட்டுக்காரர்கள் யாரும் இவனை “வேலையைவிட்டுப் போ!” என்று கூறியதே இல்லை. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அவனாகத்தான் தன் விருப்பம் போலவே வெளியேறினான். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அவன் விலகுவதற்கும் அவனுக்கு மட்டுமே நியாயமாகத் தெரியும் காரணம் அவனிடம் இருந்தது.

அவன் முதன்முதலில் வேலைக்குச் சேர்ந்தது இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவரின் வீட்டில்தான். அங்கு அவனை வடநாட்டுச் சமையல்களை மட்டுமே செய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்தியதால், அவன் அங்கிருந்து வெளியேறினான்.

“தமிழ்நாட்டுக்காரனால் இட்லி, சாம்பார் சாப்பிடாமல் எப்படி உயிர்வாழ முடியும்?” என்று தன் நண்பர்களிடம் அவன் கேட்டான். அப்போதும் அவனின் நண்பர்கள் அவனைத் திட்டத்தான் செய்தனர்.

“உனக்கு இட்லி, சாம்பார் சாப்பிட விருப்பம் இருந்தா, ஹோட்டலுக்குப் போயிச் சாப்பிட வேண்டியதுதானே? ஒருத்தருக்கு மட்டும் சமைச்சுப் போட்டுட்டு, மூணுவேளையும் அங்கேயே சாப்பிட்டுக்கிட்டு, சமையற்கட்டிலேயே தங்கிக்கிட்டு, மாசம் பத்தாயிரம் ரூபாய் வாங்கிக்கிட்டு இருந்த நல்ல வேலையை யாராவது விட்டுடுவாங்களா?” என்று அவனிடம் வெளிப்படையாகவே கேட்டனர். அந்த வினாவுக்கு அவனிடம் பதில் இல்லை. அவன் அமைதியாக இருந்தான். அவனுக்கு வீட்டு இட்லியின் மீது பெருவிருப்பம் இருந்தது. அதை அவன் அவர்களிடம் கூறவேயில்லை.

இரண்டாவதாக அவன் பணியாற்றியது உடற்பயிற்சிநிலைய நிர்வாகியின் வீட்டில். அந்த வீட்டில் மூன்றுபேர். மூன்றுவேளை சாப்பாடும் 12ஆயிரம் ரூபாய் ஊதியமும் மொட்டைமாடியில் தங்குவதற்கு இடமும் என அவனுக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அந்த நிர்வாகி, “எல்லாவற்றையும் பாதிவேக்காட்டில் மட்டுமே சமைக்க வேண்டும்” என்று கூறியமைக்கு ஒப்புக்கொண்டுதான் அந்த வீட்டில் பணிக்குச் சேர்ந்தான். “வாரம் ஒருநாள் நெருப்பில்லாமல் சமைக்க வேண்டும்” என்பதை அந்த நிர்வாகி, அந்த வாரத்தின் இறுதியில்தான் கூறினார். இது அவனுக்குச் சற்று நெருடலாகவே இருந்தது. ஆனாலும் அவன் அங்குப் பல்லைக் கடித்துக்கொண்டு பணியாற்றினான்.

‘நெருப்பைக் கையாள்வதில்தானே நல்ல சமையற்காரின் முழுத் திறனும் வெளிப்படும்?. நெருப்பே இல்லாமல் சமைக்க நான் என் காட்டுமிராண்டியா?’ என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு, அந்த வீட்டுவேலையிலிருந்து விலகினான்.

மூன்றாவதாக அவன் வேலைக்குச் சேர்ந்தது, நான்கு பெண்கள் இணைந்து தங்கியிருந்த ஒரு குடியிருப்பில். அந்த நால்வரும் பணிபுரியும் நடுத்தர வயதுப் பெண்கள். அவர்கள் மூன்றுவேளை உணவும் மாதம் எட்டாயிரம் ரூபாய் ஊதியமும் தருவதாகக் கூறினர். அவன் வெளியில் வேறு இடத்தில்தான் தங்க வேண்டியிருந்தது. அந்த வகையில் அவனுக்குப் பொருளாதார இழப்பு மிகுதிதான்.

அந்தப் பெண்களே எல்லாப் பொருட்களையும் சந்தையிலிருந்தும் பல்பொருள் அங்காடிகளிலிருந்தும் வாங்கி வந்துவிடுவர். ‘ஊறுகாய் உட்பட அனைத்து மசால் பொடிகளையும் வீட்டிலேயே தயாரிக்க வேண்டும்’ என்றும் ‘அவற்றை அவனே செய்ய வேண்டும்’ என்றும் கூறினர். “ ‘அயோடின்’ சேர்க்காத உப்பைத்தான் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்” என்று அவர்கள் கூறியதால், அவன் கல்லுப்பை நுணுக்கி, தூளுப்பாக்கிச் சமையலுக்குப் பயன்படுத்தினான். அதனால், அவனின் பணி இந்த வீட்டில் மும்மடங்காகிவிட்டது. ஒவ்வொரு நாளும் அதே நாளில் தூங்கி அதே நாளில் எழுந்தான்.

எல்லாப் பணிகளையும் முடித்துவிட்டு அவன் தூங்கச் செல்லும்போது மணி இரவு பன்னிரண்டைத் தாண்டியிருக்கும். காலையில் ஐந்து மணிக்கு எழவேண்டும். அதனால் அவன், “நான் நன்றாகத் தூங்கிச் சில மாதங்களாகின்றன” எனத் தன் நண்பர்களிடம் புலம்பினார். அவர்கள் அவனுக்கு வேறு பணியிடம் ஏற்பாடு செய்வதாகக் கூறினர். அதற்குள் அவன் அவசரப்பட்டு, தன் பணியினை உதறினான்.

ஒருவாரம் ஊரைச் சுற்றித் திரிந்தான். இரண்டாவது வாரத்தில் அவனின் நண்பர்களின் ஏற்பாட்டின்படி ஒரு கூட்டுக்குடும்பத்தில் பணிக்குச் சேர்ந்தான். அந்தக் கூட்டுக் குடும்பத்தில் மொத்தம் எட்டுப் பேர். அதில் ஐந்து பேர் வயதானவர்கள். மற்ற மூவரும் பணிக்குச் செல்பவர்கள். “வயதானவர்களுக்குத் தனியாகவும் தங்களுக்குத் தனியாகவும் இரண்டு விதமாகச் சமையல் செய்ய வேண்டும்” என்று அவர்கள் கூறியதற்கு அவன் ஒப்புக்கொண்டான்.

மூன்றுவேளை உணவும் மாதம் 12 ஆயிரம் ரூபாய் ஊதியமும் கொல்லைப்புறத் தாழ்வாரத்தில் தங்குமிடமும் வாரத்தில் ஒருநாள் ஓய்வும் என முடிவானது. மகிழ்ச்சியோடு பணிபுரிந்தான். ஆனால், அவனுக்கு ஒரே ஒரு தலைவலிதான் அங்கிருந்தது.

பகற்சமையல் தொடங்கும்போது அந்த ஐந்து பெரியவர்களும் சமையற் கூடத்துக்குள் புகுந்து, அவனிடம் பேசத் தொடங்குவார்கள். அவர்கள் ஐவருக்கும் பிறரின் பேச்சைச் செவிமடுக்கும் பழக்கமே இல்லை. ஐந்துபேரும் ஒரே நேரத்தில் பேசத் தொடங்குவார்கள்.

பிறர் பேசுவதைக் கேட்கும் பழக்கம் இல்லாததால், அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விஷயத்தைப் பற்றிப் பேசுவார்கள். ஐந்து விதமான செய்திகளையும் தகவல்களையும் நிகழ்ச்சி விவரிப்புகளையும் இவன் ஒரே நேரத்தில் கேட்க வேண்டியிருக்கும். ஒரே நேரத்தில் ஐந்து வானொலிகளையும் வெவ்வேறு அலைவரிசையில் இயக்கியது போலத்தான் அவர்களின் பேச்சு இருக்கும்.

ஆறுமாதம் நிறைவடைவதற்குள் தன்னுடைய மனநிலை சற்றுப் பிறழ்ந்துவிட்டதாக அவன் உணர்ந்தான். உடனேயே வேலையை உதறிவிட்டான். அங்கிருந்து புறப்படும்போதே, ‘நாய்’வீட்டில் சமையல்வேலைக்கு ஆள் எடுப்பதாகக் கேள்விப்பட்டான். தன் நண்பர்களிடம் கூறினான்.

அவனின் நண்பர்களின் கூட்டத்தில் மூத்தவரும் வீட்டுச் சமையற்காரர்கள் சங்கத்தின் பொருளாளருமானவர் அவனிடம், “நீ வேலைக்கே போகாட்டாலும் பரவாயில்லை. கொஞ்சநாள் சும்மா இரு. நல்ல இடத்துல நாங்களே உன்னை வேலைக்குச் சேர்த்து விடுறோம். தயவு செஞ்சு அந்த நாய்வீட்டுக்கு மட்டும் வேலைக்குப் போயிடாதே!” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.

சமையற்பணியாளர்கள் பலருக்கும் அந்த ‘நாய்வீடு’ பற்றி நன்றாகவே தெரிந்திருந்தது. அந்த வீட்டுக்கு ‘நாய்வீடு’ என்று பெயர் வைத்ததே வீட்டுச் சமையற்காரர்கள் சங்க நிர்வாகியின் தலைவர்தான். அந்தச் சங்கத்தில் இருப்பவர்களுக்கு அந்த நாய்வீட்டைப் பற்றியும் நன்றாகத் தெரியும்.

“நீ அங்குப் அங்குப் பணியில் சேர வேண்டாம்” என்று அனைவருமே அவனை வலியுறுத்தினர். ஆனால், அவன் கேட்கவில்லை. நல்லசொல் பாதத்திலும் நச்சுச்சொல் தலையிலும் அமரும். அவர்கள் அனைவரின் சொற்களும் அவனின் பாதத்தில்தான் அமர்ந்தன.

‘இனி, எந்த வீட்டில் வேலைக்குச் சேர்ந்தாலும் அந்த வீட்டிலேயே குறைந்தபட்சமாக ஐந்தாண்டுகளாவது தொடர்ந்து வேலைபார்க்க வேண்டும்’ என்று உறுதிகொண்டான். எல்லா உறுதிகளும் நம் கைகளில் மட்டுமா இருக்கின்றன?

‘அந்த நாய்வீட்டில் வேலைசெய்வதில் அப்படியென்ன சிக்கல் இருக்கிறது?’ என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டு, அந்த வீட்டில் பணியாற்றுவதை ஓர் அறைகூவலாகவே ஏற்றுக்கொண்டான்.

15 ஆயிரம் ரூபாய் ஊதியமும் மூன்றுவேளை உணவும் கொல்லைப்புறத்தில் நாய்களின் சிறுவீடுகளுக்கு இடையில் தங்குமிடம் என அவனுக்கு முடிவானது. அந்த வீட்டில் வேலைக்குச் சேர்ந்தான்.

‘நாய்வீடு’ என்று அழைக்கப்படும் அந்த வீட்டில், ஒரு நாய் அல்ல; ஏழு நாய்கள் இருந்தன. அந்த வீட்டின் சொந்தக்காரர் ‘ரைஸ்மில்’ நடத்தி வந்தார். அவருக்கு ஒரு மகள். அவள் கல்லூரியில் படித்தாள்.

அவன் அந்த வீட்டில் வேலைக்குச் சேர்ந்ததும் அவனை அவன் நண்பர்கள் அனைவருமே திட்டினர். “உனக்கெல்லாம் பட்டாத்தான் புத்தி வரும்” என்று கூறி, அவனைத் தம்மிருந்து சற்றுத் தள்ளி வைத்தனர். உடனே, அவனும் சினத்துடன், “நான் உங்க சங்கத்துல இருந்து விலகிக்கிறேன்” என்றான்.

‘ரைஸ்மில்’ முதலாளி தனக்கும் தன் மகளுக்கும் சமைக்க வேண்டிய ஒரு வார உணவுப் பட்டியலை விரிவாக ஒரு பக்க அளவில் எழுதிக் கொடுத்தார். தங்களின் ஏழு நாய்களுக்கும் சமைக்க வேண்டிய ஒருநாள் உணவுப் பட்டியலைச் சுருக்கமாக நான்கு பக்கங்களில் எழுதிக் கொடுத்தார். அவன் அந்தப் பட்டியல்களை வாங்கிக் கொண்டு, அந்த வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து, படிக்கத் தொடங்கினான்.

முதலில் இருந்த ஒரு பக்கத்தில் காலை ஐந்து மணிக்கு டீயும் பிஸ்கட்டுகளும் எனத் தொடங்கி, இரவு ஒன்பது மணிக்குப் பாலும் பேரிச்சம்பழமும் என முடிந்தது.

அடுத்து இருந்த நான்கு பக்கங்களைப் படிக்கத் தொடங்கினான். அவற்றின் முதற்பக்கம்… காலையில் நான்கு மணி நாற்பத்து ஐந்து நிமிடத்தில் அத்தனை நாய்களும் எழுந்துவிடும். உடனே அவற்றுக்கு நாய் பிஸ்கட்டுகளும் தண்ணீரும் வைக்க வேண்டும். அவை அவற்றை உண்டு முடிப்பதற்குள் அதாவது ஐந்து மணி ஆவதற்குள் அவற்றுக்குச் சூடாக, உப்பில்லாத கஞ்சி வைக்க வேண்டும். ஆறு மணிக்கு அத்தனை நாய்களையும் அழைத்துக்கொண்டு முதலாளி நடைப்பயிற்சி மேற்கொள்வார். அவர்கள் திரும்பி ஏழு மணக்கு வருவார்கள். உடனேயே அவற்றுக்கு உப்பில்லாத சோறு வைக்க வேண்டும். எட்டு மணிக்கு பிஸ்கட்டுகள். ஒன்பது மணிக்கு மீண்டும் உப்பில்லாத மிதமான சூட்டில் கஞ்சி. பத்து மணிக்கு மோர்சோறு. பன்னிரண்டு மணிக்கு உப்பில்லாத காய்கறி சூப். ஒரு மணிக்கு உப்பில்லாத சுடுசோறு. இரண்டு மணிக்கு அன்றைக்குக் குளிர்சாதனப் பெட்டியில் என்ன மாமிசம் இருக்கிறதோ அதை வைத்து உப்பில்லாத குழம்பும் சூப்பும். மாலை நான்கு மணிக்கு நாய் பிஸ்கட்டுகளும் தண்ணீரும் வைக்க வேண்டும். ஐந்து மணிக்கு அத்தனை நாய்களையும் அழைத்துக்கொண்டு முதலாளி நடைப்பயிற்சி மேற்கொள்வார். அவர்கள் திரும்பி ஆறு மணக்கு வருவார்கள். உப்பில்லாத மிதமான சூட்டில் கஞ்சி. ஏழு மணிக்கு உப்பில்லாத காய்கறி சூப். எட்டு மணிக்கு ரொட்டித் துண்டுகளைச் சத்து மருந்தில் தோய்த்து, இனிப்புத் தூவி வைக்க வேண்டும். அதன் பின் நாய்கள் தூங்கச் சென்றுவிடும். மீண்டும் காலையில் நான்கு மணி நாற்பத்து ஐந்து நிமிடத்தில் அத்தனை நாய்களும் எழுந்துவிடும். உடனே அவற்றுக்கு நாய் பிஸ்கட்டும் தண்ணீரும் வைக்க வேண்டும்….. என நீண்டு நீண்டு சென்று, ஒவ்வொரு உணவு இடைவேளையிலும் அவன் மேற்கொள்ள வேண்டிய செயல்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. மொத்தமாக இந்த ஐந்து பக்கங்களையும் படித்து முடிக்க அவனுக்கு அரைமணிநேரம் தேவைப்பட்டது.

அவன் சற்றுச் சிந்தித்தான். ‘நான் மனிதர்களுக்குச் சமைக்கிறேனா? அல்லது நாய்களுக்குச் சமைக்கிறேனா? இந்த வீட்டில் மனிதர்களை விட நாய்கள்தான் மிகுதியாக உண்கின்றன. இவர்கள் ஏன் நாயை நாயைப் போல வளர்க்கவில்லை?. இவர்கள் நாயை மனிதர்களைவிட மேலானவர்களைப் போலக் கருதி, வளர்க்கிறார்களே! அப்படி இவர்களுக்கும் இந்த நாய்களுக்கு என்ன உறவு? அப்படியென்ன பாசம்?’.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. மனிதர்களைப் பற்றியே புரிந்துகொள்ள முடியவில்லை. இதில் எப்படி நாய்களைப் பற்றியும் நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள உறவு குறித்தும் புரிந்துகொள்ள முடியும்?

அந்த ஒரு பக்கக் குறிப்பையும் நான்கு பக்கக் குறிப்பையும் மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு, அவற்றிலிருந்து ஒரு பட்டியலைத் தயாரித்தான். அது அரைப்பக்க அளவில் இருந்தது. அவற்றோடு அதனையும் இணைத்து வைத்துக்கொண்டான்.

அங்கிருந்த ஒவ்வொரு நாயும் சிறிய கன்றுக்குட்டி அளவுக்கு இருந்தன. ஒவ்வொன்றும் இரண்டாள் உணவினை உண்ணும் என்று கணக்கிட்டான். ஆனால், அவை ஒவ்வொன்றும் இரண்டரை ஆள் உணவினை உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தன. அவற்றின் கழுத்தில் கழுத்துப்பட்டைகள் கட்டப்பட்டிருந்தன. ஏழு நாய்க்கும் ஏழு விதமான நிறத்தில் கழுத்துப்பட்டை. அந்த நாய்களின் பெயர்கள் அனைத்துமே அவை அணிந்திருக்கும் கழுத்துப்பட்டையின் நிறத்தைக் கொண்டே, ‘ரெட் புல்ட்டி, க்ரீன் சிம்சி’ எனத் தொடங்கின.

முதல்நாள் முழுக்க ‘ரைஸ்மில்’ முதலாளி அவனை அந்த நாய்களுக்கு நல்லமுறையில் அறிமுகத்தையும் பிணைப்பையும் ஏற்படுத்தினார். அவை அவன் மீது காட்டும் பாசம் அவனுக்குப் பிடித்திருந்தது. அவற்றின் உடற்துர்நாற்றம்தான் அவனால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அவை ஒன்றுகூடத் தங்களுக்குள்ளும் பிறரைப் பார்த்தும் குரைப்பதாகவே அவனக்குத் தெரியவில்லை. மனிதர்களின் பேச்சு போலவேதான் அவற்றின் குரைப்பொலிகளும் இருந்தன.

அவன் மறுநாள் அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து, கொல்லைப்புறத்தில் அந்த நாய்களின் சிறுவீடுகளுக்கு அருகில் உடைகற்களை அடுப்பாகக் கூட்டி வைத்து, பெரிய பெரிய பாத்திரங்களில் நாய்களுக்குச் சமைக்கத் தொடங்கினான். காலை ஆறு மணிமுதல் அந்த வீட்டிலிருந்து மனிதர்களுக்குச் சமைக்க நினைத்தான்.

ஆனால், முதல்நாளே நேரம் தவறிவிட்டது. அந்த வீட்டு மனிதர்களுக்கு அவன் சமைக்கத் தொடங்கியபோது மணி எட்டு.

முதலாளி அவனைத் திட்டிக்கொண்டே, தன் முகத்தைச் சுளித்து, அவனிடம், “ஒனக்கு மணி பார்க்கத் தெரியாதா?” என்று கேட்டார்.

அவன் தன் முகத்தைக் கவிழ்த்தி, வெறுப்புடன் “தெரியாது” என்றான்.

உடனேயே அவர் அவனைத் திட்டுவதை நிறுத்திக்கொண்டார். அவர் சிந்திக்கத் தொடங்கினார். அவன் தன் சமையற்பணியைத் தொடர்ந்தான்.

அந்தப் பெண் கல்லூரியில் ஒன்பதுமணிக்கே இருக்க வேண்டுமாம். அவன் சிந்தனை செய்தான். அவனுக்கு வேறுவழி தெரியவில்லை. நாய்களுக்கு ஆக்கிய சோற்றையே சற்று மாற்றி, சுவைகூட்டி, நிறங்களைச் சோர்த்து, மறக்காமல் உப்பினை இட்டு, ஒருமாதிரியான உணவினை உருவாக்கினான். அந்தப் பெண் அதை உண்டாள். பாதி உண்ணும்போதே அவள் அவனை அழைத்தாள். அவன் அச்சத்தோடு அவளின் அருகில் வந்து, நின்றான்.

அவனிடம் அவள், “இந்தச் சாப்பாடு நல்லா இருக்கு. நான் வழக்கமா மதிய உணவை கேண்டீன்லதான் சாப்பிடுவேன். இன்னைக்கு இதையே எனக்கு ‘பார்சல்’ கட்டிக்கொடுங்க. நான் மதியம் சாப்பிட்டுக்குறேன்” என்றாள்.

மாலையில் அவள் வந்தாள். வீட்டுக்குள் வந்ததும் அவள் அவனைத்தான் தேடினாள். அவளின் அப்பா நடைப்பயிற்சிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். அவனோ கொல்லைப்புறத்தில் நாய்களுக்கு பிஸ்கட்டுகளும் தண்ணீரும் வைத்துக்கொண்டிருந்தான்.

அவள் அவனிடம், “இன்னைக்கு நீங்க கொடுத்த ‘பார்சல்’ சாப்பாட்டை என்னோட ஃபிரண்ஸ் எல்லாம் ஆளுக்கு ஒரு கைஎடுத்துச் சாப்பிட்டாங்க. நல்லா இருக்குணாங்க. இந்த வாரம் அவங்கல்ல சிலர் வீட்டுக்கு வருவாங்க. அப்ப அவங்களுக்கு இதே சாப்பாட்டைச் செஞ்சு கொடுங்க” என்றாள்.

அவன் அவளிடம், “எத்தனை பேர்?” என்று கேட்டான்.

அவள் சற்றுச் சிந்தித்துவிட்டு, “நாலு பேர்” என்றாள்.

அவன் மெல்லிய குரலில், “சரி! பதினைஞ்சுபேருக்கும் சேர்த்தாப்ல சமைச்சுடுறேன்” என்றான். அவள் அவன் கூறியதைக் கவனிக்காமல் சென்றுவிட்டாள்.

மறுநாள் ‘ரைஸ்மில்’ முதலாளி பேசும் கடிகாரத்தை வாங்கி வந்து அவனுக்குப் பரிசளித்தார். அது தானியியங்கி முறையில் அரைமணிநேரத்துக்கு ஒரு முறை, அழகிய பெண்குரலில் மணியைக் கூறும். அந்தக் கடிகாரம் அவனுக்குப் பிடித்திருந்தது.

அவன் தன் மனசுக்குள், ‘நல்ல முதலாளி. நாம அவருட்ட திமிராகப் பேசியதைப் புரிஞ்சுக்காம, ‘மணி பார்க்கத் தெரியாதது என்னோட அறியாமை’யிணு நினைச்சு, மணி சொல்ற கடிகாரத்தை வாங்கிக் கொடுத்துட்டாரே!’ என நினைத்தான். அவர் மீது அவனுக்கு இரக்கம் பிறந்தது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அவளின் தோழியர்களுள் நால்வர் வந்தனர். அந்த வீட்டிலிருந்த ஏழு நாய்களுடனும் அவர்கள் கொஞ்சி, கெஞ்சி, துள்ளி, ஓடி விளையாடினர்.

அவன் கொல்லைப்புறத்தில் சமைக்கத் தொடங்கினான். அன்று குளிர்சாதனப் பெட்டியில் ஆட்டுக்கறி இருந்ததால், அவற்றையே அன்றைய மதிய உணவாகச் சமைக்க நினைத்தான். அவள் அன்று அவனிடம் கூறியிருந்ததால், ‘விருந்தினர்களுக்காகக் கூடுதலாக அந்த ஒருமாதிரியான உணவினையும் தயாரிக்க வேண்டும்’ என நினைத்தான்.

உடனே, அன்றைய உணவுப்பட்டியலை அவர்களுக்கும் நாய்களுக்கும் ஒரே மாதிரியாக மாற்றிவிட நினைத்தான். இந்தச் செயலை முதலாளியிடம் கூறாமல், தன்னிச்சையாகவே முடிவெடுத்துவிட்டான். சமைத்தான். மறக்காமல் அதிலிருந்து ஏழு பேருக்குரிய உணவினைத் தனியாக எடுத்து, அதில் மட்டும் உப்பினை இட்டான்.

வழக்கம்போல உணவு மேஜையின் எதிர்ப்புறத்தில், தரையில், எட்டுத் தட்டுகள் வைக்கப்பட்டன. விடுமுறை நாட்களில் மட்டும் அவர்கள் மதிய உணவினை தங்களின் நாய்களோடுதான் உண்பார்கள். உணவு மேஜைக்கு அருகில் ஆறு நாற்காலிகள் இடப்பட்டன. அவர்களும் விருந்தினர்களும் நாய்களும் தங்களுக்குரிய இடத்தில், உணவுத் தட்டுகளுக்கு அருகில் அமர்ந்தவுடன், அவன் உணவினைப் பறிமாறத் தொடங்கினான்.

விருந்தினர்கள் தம் தோழியுடன் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் அவன் எந்தப் பாத்திரத்திலிருந்து யாருக்கெல்லாம் பறிமாறுகிறான் என்பதைக் கவனிக்கவில்லை. எல்லோரும் சுவைத்து உண்ணத் தொடங்கினர்.

ஒரு நாய் மட்டும் தனக்கு வைக்கப்பட்ட உணவினை விரைவாக உண்டுவிட்டு, நிமிர்ந்து உணவு மேஜையைப் பார்த்துக் குரைக்கத் தொடங்கியது. உடனே அவன், உணவு மேஜையிலிருந்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அந்த நாயின் அருகில் சென்று பறிமாறத் தொடங்கினான்.

விருந்தினர்களுள் ஒரு பெண் மட்டும் அவன் இங்கிருந்து பாத்திரத்தை எடுத்து, நாய்க்குப் பறிமாறுவதைப் பார்த்துவிட்டாள். அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. திருதிருவென விழித்தாள்.

அவள் தனது தட்டிலிருந்த சாப்பாட்டையும் நாய்களின் தட்டுகளில் இருந்த சாப்பாட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தாள். இரண்டுக்கும் பெரிய அளவில் எந்த வேறுபாடும் இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை. அவளின் வாய்க்குள் இருந்த உணவு தொண்டைக்குள் இறங்கவில்லை. அவளின் விழிகளில் கண்ணீர்த்துளிகள் திரளத் தொடங்கின.

அப்போது, இந்த வீட்டுப் பெண் தன்னுடைய தோழிகளிடம் சொல்லத் தொடங்கினாள். “ஏய்! உங்களுக்கு நினைவிருக்கா? அன்னைக்கு என்னோட சாப்பாட்டை ஒருகையள்ளிச் சாப்பிட்டு, ‘ரொம்ப நல்லா இருக்கு’ன்ணு சொன்ணீங்களே, அதே சாப்பாடுதான் இது” என்றாள்.

இதுவரை திரண்டிரந்த கண்ணீர்த்துளிகள் விழிகளைக் கடந்து, அவளின் கன்னங்களில் வழியத் தொடங்கியது. பதற்றத்தில் அவளுக்குத் தலைசுற்றியது. சப்தமின்றி அழுதவாறே அவள் மற்றவர்களைப் பார்த்தாள்.

மற்றவர்கள் தம் தோழி கூறுவதைக் கேட்டுக்கொண்டே, தங்களின் பார்வையை உணவில் பதித்திருந்தனர். அவள் தன் கண்ணீரை இடது புறங்கையால் துடைத்துக்கொண்டு, எரிச்சல் மிகுந்த குரலில் அவனிடம், “ஹலோ! நீங்க என்ன பண்றீங்க? அது இங்கிருந்த சாப்பாடு” என்றாள்.

அவன் திரும்பிப் பார்த்தான். சற்றுத் தயங்கி, “ஓ! சாரி! நான் மறந்துட்டேன். இது உப்புபோட்டதுல?. பரவாயில்லை, உப்புப் போட்ட சாப்பாட்டை ஒரு கையளவு நாய் சாப்பிட்டா தப்பில்ல” என்றான்.

உடனே அவளுக்கு உமட்டல் எடுத்தது. வலது உள்ளங்கையால் வாயை அழுத்தி மூடிக்கொண்டு, துள்ளியெழுந்து, கைக்கழுவும் இடத்தை நோக்கி ஓடினாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *