நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 4, 2012
பார்வையிட்டோர்: 16,092 
 

ஆமாம்; நான் ஜன்னலண்டைதான் உக்காந்துண்டிருக்கேன்… அதுக்கென்னவாம்? உட்காரப்படாதோ?… அப்படித்தான் உட்காருவேன். இன்னிக்கி நேத்திக்கா நான் இப்படி உக்காந்துண்டிருக்கேன்… அடீ அம்மா! எவ்வளவோ காலமா உக்காந்துண்டுதான் இருக்கேன். இனிமேலும் உக்காந்துண்டுதான் இருப்பேன். என்ன தப்பு? இல்லே, யாருக்கு என்ன நஷ்டம்? பெரீசா எப்போ பார்த்தாலும் இதையே ஒரு வழக்காப் பேசிண்டு இருக்கேளே… ‘ஜன்னலண்டையே உக்காந்துண்டிருக்கா… உக்காந்துண்டிருக்கா’ன்னு. ஜன்னலண்டை உட்காரப்படாதோ? ஜன்னலண்டையே போகப் படாதோ? அப்படீன்னா வீட்டுக்கு ஜன்னல்னு ஒண்ணு எதுக்காக வெக்கணும்கறேன்! ஒண்ணா? இந்த வீட்டுக்கு ரெண்டு ஜன்னல் இருக்கு; பார்த்துக்கோங்கோ. தெருவிலே நின்னு பார்த்தா இந்த வீடு ரொம்ப லட்சணமா இருக்கோ இல்லியோ? அந்த லட்சணமே இந்த ஜன்னல் ரெண்டினாலேதான். ஜன்னல் இல்லேன்னா பார்க்கச் சகிக்குமோ? இந்த வீடு ரொம்பப் பழசுதான். பழசுன்னாலும் பழசு, அறதெப் பழசு… பழசானால் என்ன? அழகாகத்தானே இருக்கு! தாத்தாவோட தாத்தாவெல்லாம் இங்கேதான் பொறந்தாளாம். இப்போ இந்த வீட்டுக்கு ரெண்டு பக்கத்திலேயும் பெரிசு பெரிசா மாடி வீடு வந்துட்டுது. ரெண்டு பெரியவா கையைப் பிடிச்சுண்டு ஒரு சின்னக் கொழந்தை நிக்கற மாதிரி இந்த வீடுதான் குள்ளமா நடுவிலே நின்னுண்டு இருக்கு… சின்ன வீடு, ஓட்டு வீடு; வீட்டுக்கு முன்னே ரெண்டு பக்கமும் திண்ணை; நடுவிலே வாசற்படி; ரெண்டு திண்ணைக்கு நேராவும் ரெண்டு ஜன்னல்; இந்த வீடு ரெண்டு கண்ணையும் தெறந்துண்டு தெருவைப் பார்க்கற மாதிரி இருக்கும். இந்த ரெண்டு ஜன்னலும் இந்த வீட்டுக்கு ரெண்டு கண் மாதிரி. ஜன்னல் வீட்டுக்குக் கண்தானே? யார் சொன்னா அப்படி?… யாரும் சொல்லலே. எனக்கே அப்படித் தோன்றது… நான்தான் சொல்றேன்.

வீட்டுக்கு ஜன்னல் எதுக்கு வெச்சாளாம்? காத்து வரதுக்கு; வீடு தெருவைப் பாக்கறதுக்கு; வீட்டில இருக்கிறவா மூச்சு விடறதுக்கு. வீட்டிலெ இருக்கிறவா தெருவிலே நடக்கிறதையெல்லாம் பாக்கறதுக்கு…

ஏன் பார்க்கணும்னா கேக்கறேள்? நன்னா கேட்டேள்! ஏன் பார்க்கப்படாதுன்னு நான் கேக்கறேன். அதுக்குப் பதில் சொல்லுங்கோ. ஏன் மூச்சு விடணும்? ஏன் காத்து வரணும்னு கூடக் கேப்பேளா? இதெல்லாம் என்ன கேள்வி? ஜன்னலே இல்லாமெக் கட்டினா அதுக்கு வீடுன்னா பேரு? அது சமாதிடீ அம்மா, சமாதி!

காலமெல்லாம் இது ஒரு பேச்சா? ‘ஜன்னலண்டே உக்காந்துண்டிருக்கா… ஜன்னலண்டே உக்காந்துண்டிருக்கா’ன்னு கரிக்கறேளே…

எனக்கு ஜன்னலண்டேதான் சித்தே மூச்சு விட முடியறது. இந்த வீட்டிலே வேறே எங்கே போனாலும் மூச்சு முட்டறது; புழுங்கறது; உடம்பு தகிக்கிறது. இந்த வீட்டிலேயே… ஏன்? இந்த லோகத்திலேயே இதைவிட சொகமான இடம் கிடையாது. அடீ அம்மா! இங்கேதான் என்னமா ஜிலுஜிலுன்னு காத்து வரது! நான் உக்காந்துண்டிருக்கேனே, இந்த ஜன்னல் கட்டைதான் என்னமா வழவழன்னு இருக்கு! சேப்புக் கலர் சிமிட்டி பூசி இருக்கா… என்னதான் வெய்யல் நாளா இருந்தாலும் இது மட்டும் தொட்டா ஜில்லுனு இருக்கும்! ஜன்னலுக்கு நேரா தெரியறதே ஒரு அரச மரம்… எப்பப் பார்த்தாலும் அது ‘சலசல’ன்னு என்னமோ பேசிண்டே இருக்கு. இந்த ஜன்னல் கட்டையிலே ஏறி ‘ஜம்’னு உக்காந்துண்டு இந்த அரச மரத்தைப் பார்த்துண்டே இருந்தா நேரம் போறதே, காலம் போறதே தெரியறதில்லே – அப்படித்தான் நான் உக்காந்துண்டிருக்கேன்! இன்னிக்கி நேத்திக்கா உக்காந்திண்டிருக்கேன்? இதிலே உக்காந்துண்டா எனக்கு அது ஒரு பாந்தமாத்தான் இருக்கு. ஜன்னலுக்கு ரெண்டு பக்கமும் இருக்கற சுவத்திலே ஒரு பக்கம் முதுகைச் சாச்சுண்டு இன்னொரு பக்கம் ரெண்டு பாதத்தையும் பதிய வச்சு உதைச்சுண்டா ‘விண்’ணுனு எனக்கு ரொம்பக் கச்சிதமா இருக்கு. இதெ எனக்காகவே கட்டி வெச்சிருக்கா. இது என்னோட ஜன்னல். நான் இந்த ஜன்னலோட நான்! எனக்காக இதைக் கட்டி வச்சு, இதுக்காக என்னைக் கட்டி வச்சுட்டா. யாரும் வெக்கல்லே; நானே வச்சுண்டேன்! எப்படிச் சொன்னாத்தான் என்னவாம், இப்போ?

இந்த மாதிரி ஒரு பக்கம் சாஞ்சுண்டு இன்னொரு பக்கம் காலை உதைச்சுண்டு உக்காரணும்னு எவ்வளவு காலம் பிரயாசைப் பட்டிருக்கேன் தெரியுமா, நான்? அப்போவெல்லாம் எனக்குக் காலே எட்டாது. கால் எட்டினா முதுகைச் சாச்சிக்க முடியாது! அப்பல்லாம் ஜன்னல் கட்டையிலே ஏறி நின்னுண்டா எனக்கு உசரம் சரியா இருக்கும்!

எப்படி நிக்கணும் தெரியுமா? ரெண்டு கம்பிக்கு நடுவே ஒரு காலை வச்சுக்கணும். வலது காலை வச்சுண்டா வலது கையாலே கம்பியை இழுத்துப் பிடிச்சுண்டுடணும்… அப்புறம் இந்தப் பக்கமா இடது கையையும் இடது காலையும் நீளமா வீசி வீசி அரை வட்டமா சுத்திச் சுத்தி ஆடணும்… ரயில் போறதாம்!… வேக வேகமா போறதாம்; தந்திக் கம்பியெல்லாம் ஓடறதாம்! அப்பறம் கும்மாணம் வரதாம்… தஞ்சாவூர்லே நிக்கறதாம்; மறுபடியும் போறதாம்; திரும்பி இங்கேயே வந்துடறதாம்…

அடீ அம்மா! இந்த ஜன்னல் கட்டையிலே உக்காந்துண்டே நான் எத்தனை பிரயாணம் பண்ணி இருக்கேன்!…

காலையும் கையையும் வீசி வீசிச் செஞ்ச பிரயாணம்; கண்ணையும் மனசையும் வெரட்டி வெரட்டிச் செஞ்ச பிரயாணம்; ஆடாமல் அசங்காமல் செஞ்ச பிரயாணம்; அழுதுண்டு செஞ்ச பிரயாணம்; சிரிச்சுண்டு செஞ்ச பிரயாணம்; ஆனந்தமான பிரயாணம்; பிரயாணத்தின் அலுப்பே இல்லாமல் செஞ்ச பிரயாணம்…

ஜன்னலுக்குப் பொருத்தமாகப் பொருந்தி உக்காந்துண்டு நான் எவ்வளவு பிரயாணம் போயிருக்கேன்! பிரயாணம் போனவாளையும் பார்த்திருக்கேன். எவ்வளவோ பேர் போறா… சும்மா போறவா, சொமந்துண்டு போறவா, தனியாப் போறவா, கூட்டமாப் போறவா, ஜோடியாய் போறவா…

இந்த ஜன்னல் வழியாக மொதல்லே யார் பார்த்திருப்பா? மொதல்லே என்னத்தைப் பார்த்திருப்பா?… யாரோ பார்த்திருப்பா… எதையோ பார்த்திருப்பா… நான் மொதல்லே என்ன பார்த்தேன்? எனக்கு ஞாபகமிருக்கிற மொதல் நெனைவே இந்த ஜன்னல் வழியாப் பார்த்ததுதான்… என்னைப் பெத்தவளை நான் பார்த்த ஞாபகமே இலை… உயிரோடு பார்த்த ஞாபகமில்லை. எனக்கு ஞாபகமிருக்கிற மொதல் விஷயமே அதுதான்.

அம்மாவைத் தூக்கிண்டு போனாளே அதுதான்!… யார் யாரோ அழுதுண்டு வாசல் வரைக்கும் ஓடி வந்தாளே… அவா அழ அழ அவசர அவசரமா அம்மாவைத் தூக்கிண்டு நாலு பேர் ஓடினாளே… நான் இந்த ஜன்னல் மேலே நின்னுண்டு, ஜன்னல் வழியாப் பார்த்துண்டிருந்தேனே!…

அதுக்கப்பறம் அந்த மாதிரி எத்தனையோ பார்த்திருக்கேன். சந்தடியில்லாமத் தூக்கிண்டு திடுதிடுன்னு ஓடுவா… சில பேர் தாரை, தப்பட்டை, சங்கு எல்லாம் வச்சுத் தெருவையே அமக்களப்படுத்திண்டு போவா. சில சமயத்திலே அவா போனப்புறம் கூடத் தெருவெல்லாம் ரொம்ப நாழி ஊதுவத்தி மணக்கும்…

அதே மாதிரி, கல்யாண ஊர்கோலமும் பார்த்திருக்கேன்! அது ரொம்ப நன்னா இருக்கும். அதென்னமோ யாருக்குக் கல்யாணம் நடந்தாலும் நமக்குச் சந்தோஷமா இருக்கு. ஊர்கோலம் ஜன்னல் கிட்டே வர்றதுக்கு முன்னே ரொம்ப நாழிக்கி முன்னயே – திடும் திடும்னு மேளம் கொட்டற சத்தம் தூரத்திலே கேக்க ஆரம்பிச்சுடும். அதுவும் கல்யாண மேளச் சத்தம்னா அது மட்டும் தனியாத் தெரியறது. அது வந்து போறவரைக்கும் நான் ஜன்னலை விட்டு நகரவே மாட்டேன்…

அந்த ஜன்னல் வழியாத் தெரியற தெரு, அதோ… அந்த அரச மரத்தடி பிள்ளையார் தெரியறதே அங்கே ஆரம்பிச்சு இந்தப் பக்கம் சிவானந்தம் வீடு வரைக்கும் தான் தெரியும். அதுவும் இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் தலையை நன்னா சாச்சுச் சாச்சுப் பார்த்தால்தான் இந்த அளவுக்குத் தெரியும். கல்யாண ஊர்கோலம் வரச்சே, அந்த லைட்டுத் தூக்கிண்டு வர ஒருத்தன் மொதல்லே அரச மரத்தடிக்கு வருவான். சில பேர் லைட்டை அங்கேயே எறக்கியும் வச்சுடுவான். ஆயிரந்தான் எலக்டிரிக் லைட் இருக்கட்டுமே, கல்யாணம்னா இந்த லைட்தான் வேண்டியிருக்கு. ‘ஓ’ன்னு பாயிலர் எரியறமாதிரி… நாதசுர சப்தம் பக்கத்திலே கேக்கும். அதென்னமோ கல்யாண நாதசுரத்தைக் கேட்டா மட்டும் வயத்துக்குள்ளே என்னமோ குளு குளுங்கும். அப்புறம் நெறைய பெட்ரோமாக்ஸ் லைட்… வரிசையா வந்துடும்… உடம்பெல்லாம் வேர்த்து நனைய நனைய அந்தத் தவுல்காரனும் நாதசுரக்காரனும் போட்டி போட்டுண்டு வாசிப்பா. எனக்கு ஒத்து ஊதறவனைப் பார்த்தாச் சிரிப்பு சிரிப்பா வரும். பல் வலிக்காரன் மாதிரி அவன் வாயிலே துணியை வச்சுண்டு நிப்பான். அதுக்கப்புறம் கல்யாண ஊர்கோலத்துக்காகவே சேஞ்சு வச்ச மாதிரி ஒரு கார்… அந்தக் காருக்கும் அன்னிக்கிக் கல்யாணம்! மாலையெல்லாம் போட்டிருக்கும். அந்தக் காரிலே யார் இருந்தாலும் இல்லாட்டாலும் வாண்டுப் படைகள் மட்டும் நிச்சயமா இருக்கும். சில சமயங்களிலே மாப்பிள்ளை மட்டும் தனியா, கொழந்தைகள் உண்டு; அதாவது பொண் இல்லாமல் வருவார். சில சமயத்திலே பெண்ணும் மாப்பிள்ளையும் ஜோடியா வருவா. பொண்ணு தலையைக் குனிஞ்சிண்டிருக்கும். ஆனா மனசுக்குள்ளே ஒரே சந்தோஷம்னு மொகத்திலேயே தெரியும்! எல்லாப் பொண்களும் தலையைக் குனிஞ்சிண்டுதான் இருக்கும். ஆனா என்னோட படிச்சாளே சுமதி அவளுக்கு என்ன தைரியம்! ஊர்வலம் ஜன்னலண்டை வரும்போது என்னைப் பார்த்து சிரிச்சுண்டே கையை ஆட்டினாளே! எனக்கு வெக்கமாப் போயிடுத்து… எல்லாரும் திரும்பி என்னை வேற பார்க்கறா. அப்போதான் நானும் பார்த்தேன். எல்லார் ஆத்து ஜன்னல்லேருந்தும் எல்லாருந்தான் பார்க்கறா. ஆமா; என்னை மட்டும் பெரீசா சொல்றாளே… கல்யாண ஊர்கோலம் வந்தா அவாளுந்தானே வேடிக்கை பார்க்கறா… அவாளுக்கு கல்யாண ஊர்கோலம் மட்டும்தான் வேடிக்கை; எனக்கு எல்லாமே வேடிக்கை. நான் பார்க்கத்தான் பார்ப்பேன். காலத்துக்கும் இது ஒரு வழக்கா; இது ஒரு பேச்சா?

இந்த வீட்டிலேயே எத்தனையோ கல்யாணம் நடந்திருக்கு. எவ்வளவோ ஊர்கோலம் பொறப்பட்டிருக்கு. நான் அதையெல்லாம் கூட இந்த ஜன்னல் வழியாத்தானே பார்த்திருக்கேன். எனக்குத் தெரிஞ்ச இந்த ஆத்திலே நடந்த மொதல் கல்யாணம் அப்பாவோட கல்யாணம். ஆனா அதுக்கு ஏனோ ஊர்கோலம் இல்லை. சித்தி அப்போ ரொம்ப அழகாயிருந்தா… அப்போல்லாம் எனக்கு அவளைக் கண்டா பயமே இல்லை. மொத மொதல்லே இந்த வாசல்லே ஜட்கா வண்டி வந்து நின்னு, அதிலேருந்து சித்தி எறங்கினாளே, அப்போ நான் இந்த ஜன்னல் மேலே ஏறி நின்னுண்டுதான் பார்த்தேன். சித்தி ரொம்ப நன்னாயிருந்தா… அப்பறந்தான் போகப் போக… பாவம், சித்தி! என்னமோ மாதிரி ஆயிட்டா. அவ அடிக்கடி அவ அம்மா ஆத்துக்குப் போயிடுவா. அவ ஊரு வைத்தீஸ்வரன் கோயில். சில சமயம் அப்பாவும் கூடப் போவார். ஆனா, அநேகமா சித்தி மட்டும் தனியாத்தான் போவா; தனியாத்தான் வருவா… தனியாவா? பிரசவத்துக்காகப் போய்ட்டு வரச்சே பொறந்த கொழந்தையையும் தூக்கிண்டு, துணைக்குப் பாட்டியையும் அழைச்சுண்டுதான் வருவா. பாபு பொறந்தப்பவும், நாணு பொறந்தப்பவும் அந்தப் பாட்டி வந்தா… அப்புறம் வரல்லை. ஒரு தடவை அவ செத்துப் போயிட்டான்னு அடிச்சுப் பொரண்டு அழுதுண்டு சித்திதான் போய்ட்டு வந்தா. அப்புறமெல்லாம் சித்தி மட்டும் தனியாப் போய்க் கொழந்தையைப் பெத்துண்டு வந்துடுவா. அப்பா, நான், மத்த கொழந்தைகள் எல்லாரும் இங்கேயேதான் இருப்போம். அப்பாதான் சமைப்பா… நான் கொழந்தைகளை யெல்லாம் ஜன்னல்லே உக்காத்தி வச்சுண்டு வெளையாடிண்டிருப்பேன். கொழந்தைகளுக்கெல்லாம் சாதம் ஊட்டுவேன். அப்பா எனக்குச் சாதம் போடுவா. கொஞ்ச நாளைக்கி அப்புறம் நானே சமைக்க ஆரம்பிச்சேன். நான் சமைச்சு, கொழந்தைகளுக்குப் போட்டு, அப்பாவுக்கும் போட்டு, எல்லாத்தையும் அழைச்சிண்டு ஸ்கூலுக்குப் போய்டுவேன். சித்திக்கு ஒண்ணுமே பண்ண முடியாது. வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போவா. வந்து கூடத்திலே தூளியைக் கட்டிண்டு படுத்துண்டுடுவா; கொஞ்சம் எழுந்து கூடமாட ஒத்தாசை சேஞ்சுண்டு வளைய வருவா. மறுபடியும் தலையைச் சுத்தறது, வாந்தி வரதுன்னு படுத்துண்டுடுவா. அதுக்கப்பறம்… வைத்தீஸ்வரன் கோயில்… ஜட்கா வண்டி… கூடத்தில் தூளியைக் கட்டிண்டு படுத்துண்டுடுவா.

நான் எட்டாங் கிளாஸ் படிச்சிண்டிருந்தப்போ என்னை ஸ்கூலை விட்டு நிறுத்திட்டா. சித்திதான் வேண்டாம்னுட்டா. அப்புறம் நாள் பூரா அடுக்களை வேலைதான். புகை, கரி, புழுக்கம்… அடி அம்மா! மொகத்தைத் துடைச்சுண்டு ஓடி வந்து சித்தெ இந்த ஜன்னலண்டை நின்னா, எவ்வளவு சொகமா இருக்கும்! ஸ்! அப்பாடீ…

அப்படி நிக்கறச்சேதான் ஒரு தடவை என்னோட படிச்சாளே சுமதி, அவ கல்யாண ஊர்கோலம் வந்தது. அவளுக்கு என்ன தைரியம்! ஜன்னலண்டை வரச்சே என்னைப் பார்த்துச் சிரிச்சுண்டே கையை ஆட்டினாளே! எனக்கு வெக்கமா போய்டுத்து. நெஜமாகவே எனக்கு வெக்கமா இருந்தது, அவமானமா இருந்தது. நான் எட்டாவதோட நின்னுட்டேன்; அவ அதுக்குமேலே படிச்சா, பத்தாவது பாஸ் பண்ணினா, பாட்டு கத்துண்டா, வீணை கத்துண்டா, கல்யாணமும் பண்ணிண்டா; ஊர்கோலம் வரா; இப்ப என்னைப் பார்த்துக் கையை ஆட்டறா. எனக்கு வெக்கமா இருக்காதா? அவமானமா இருக்காதா? ம்… நான் என்ன பண்ணப் போறேன்?

பாத்திரம் தேய்க்க வேண்டியது; தெனம் ஒரு மூட்டை துணி தோய்க்க வேண்டியது. அடுப்படியிலே உக்காந்து நானும் வெந்துண்டே எதையாவது வேக வைக்க வேண்டியது. வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போய்ட்டுச் சித்தி கொண்டு வந்து தந்திருக்காளே அரை டஜன் தம்பிகள் – அதையெல்லாம் வளர்க்க வேண்டியது. இதுக்கு இடையிலே ஏதாவது கொஞ்சம் அவகாசம் கெடச்சா ஜன்னலண்டை வந்து சித்தெ மூச்சுவிட வேண்டியது. வேற நான் என்ன செய்யப் போறேன்?

சுமதி கையை ஆட்டினாளே! அன்னிக்கிச் சித்தி வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போயிருந்தா. அப்பாவும் நானும் மாத்திரம் தனியாயிருந்தோம். பசங்களைக் கூடக் காணோம்.

‘என்னம்மா கண்ணெல்லாம் செவந்திருக்கு’ன்னு அப்பா கேட்டார். வழக்கமா நான் அழும்போது யாராவது பார்த்துட்டா, ‘அம்மாவை நெனச்சிண்டேன்’னு பொய் சொல்லுவேன். ஏன்னா எனக்குப் பேரே தாயில்லாப் பொண்ணுதானே! அதிலே எனக்கு ஒரு செளகரியம். ஆனா, அன்னிக்கி நான் அப்படிச் சொல்லலை. நம்ப அப்பாதானேன்னு கொஞ்சம் தைரியமா மனசை விட்டுக் கேட்டேன்: “அப்பா அப்பா… எனக்கு எப்போப்பா கல்யாணம் பண்ணப் போறேள்?”னு கேட்டேன். என்ன தப்பு அதிலே?…

எனக்கு இன்னிக்கும் இது ஒரு தப்புன்னு தோணவேயில்லை. ஆனா, நான் கேட்டேனோ இல்லியோ உடனே அப்பா மொகம் மாறிடுத்து. என்னத்தையோ அசிங்கத்தை பார்க்கறமாதிரி மொகத்தை சுளிச்சுண்டு என்னெ மொறைச்சுப் பார்த்தார். நான் பயந்து நடுங்கிட்டேன். அதுக்கப்புறம் நான் அப்பா மொகத்தைப் பார்த்ததே இல்லை; செத்துப் போனப்புறம் கூடப் பார்க்கலை.

நான் கேட்டேனே அதுக்குப் பதில் சொன்னாரோ மனுஷர்? கோவம் வந்துட்டாப் போறுமா? கோவம் இவருக்கு மட்டுந்தான் வருமோ? எனக்கு வராதோ? கேட்டதுக்குப் பதில் சொல்ல வக்கில்லே. பெரிசாப் பேசினா எல்லாரும். நான் அப்பிடிக் கேட்டிருக்கப் படாதாம், நான் மானங்கெட்டவளாம், எனக்குக் கல்யாணப் பித்தாம், ஆம்பளைப் பயித்தியமாம். என்னென்னமோ அசிங்கம் அசிங்கமாப் பேசினா. எல்லாரும் கூடிக் கூடிப் பேசினா. எல்லாத்துக்கும் இந்த அப்பாதான் காரணம். சித்தி வந்ததும் வராததுமா அவகிட்டெப் போய் இதெச் சொல்லி வச்சிருக்கார். எனக்கு வேணும். நன்னா வேணும். ‘நம்ப அப்பாவாச்சே’ன்னு சொந்தமா நான் கேட்டேன் பாருங்கோ; அதுக்கு இதுவும் வேணும். இந்த மனுஷன் எனக்கா அப்பா? சித்திக்கின்னா ஆம்படையான்! அதுக்கப்புறம் இவர் கிட்டே எனக்கென்ன பேச்சு? இவர் மொகத்தை என்ன பார்க்க வேண்டியிருக்கு? செத்தப்புறமும் நான் பார்க்கல்லே. இப்ப நெனச்சுப் பார்த்தாக்கூட அவர் மொகம் ஞாபகம் வரமாட்டேங்கறதே!…

அப்படி என் மனசை வெறுக்கப் பண்ணிப்பிட்டா… ம்!… என்னைக் கொஞ்சமாவா படுத்தி வச்சிருக்கா… அடீ அம்மா! பொண்ணாப் பொறந்ததுக்கு எனக்கு ஒரு ஜன்மத்துக்கு இது போறுமே, போறுமே…

நான் ஜன்னலண்டை நின்னுண்டு யாரையோ பாக்கறேனாம். குளத்தங்கரை அரச மரத்தடி மேடையிலே யாரோ வந்து வந்து உக்காந்துக்கறானாம். அவனைப் பார்க்கறதுக்குத் தான் நான் போயிப் போயி நிக்கறேனாம். அங்கே யாரும் இல்லே. அரச மரத்தடியிலே தும்பிக்கையும் தொந்தியுமா ஒரு பிள்ளையார் தான் உக்காந்திருக்கார். பிள்ளையாரைப் பார்த்துண்டுதான் நானும் உக்கார்ந்துண்டிருக்கேன், பிள்ளையார் மாதிரி. அவர் தெய்வப் பிள்ளையார். நான் மனுஷப் பிள்ளையார். அவர் ஆம்பிள்ளைப் பிள்ளையார். நான் பொம்பிளைப் பிள்ளையார்.

அப்புறம் அங்கே சில சமயத்துலே நாய்கள் மேஞ்சுண்டு நிக்கும். சண்டை போட்டுண்டு நிக்கும். வெரட்டிண்டு திரியும். சரசமாடிண்டு வெளையாடும். குரைக்கும். அழும். மனுஷா மாதிரி படுத்துண்டு தூங்கும். முன்னே ஒரு நாய் அந்த அரசமரத்தடி மேடையிலே, அதோ ஒரு மூலை மாதிரி இருக்கே – அங்கே குட்டி போட்டு வச்சிருந்தது.

இதையெல்லாம் பாத்துண்டு நான் உக்கார்ந்திருக்கேன். நேக்கு இதெல்லாம் பிடிக்கறது. பார்க்கறேன். யாருக்கு என்னவாம்?

நான் ஜன்னலண்டை உக்காந்திருக்கறச்சே எனக்குத் தெரியாம பூனை மாதிரி அடி மேல் அடி வச்சு வந்து என் முதுகு மேலெ எக்கிண்டு பார்ப்பா சித்தி. தெருவிலே யாராவது போனா அவனுக்காகத்தான் நான் அங்கே வந்து நிக்கறேன்னு நெனைச்சுக்குவா. அரசமரத்தடியிலே எவனாவது ஒரு சோம்பேறி உக்காந்து பீடி குடிச்சிண்டிருப்பான். அவனைப் பார்த்துத்தான் நான் மயங்கிப் போறேன்னு இவ நெனச்சுக்குவா. யாராவது இருந்தா, அவனைப் பார்க்கறேனாம். யாருமே இல்லைன்னா யாருக்காகவோ காத்துண்டு இருக்கேனாம்! அப்படியெல்லாம் பேசிக்குவா. எனக்கென்ன போச்சு? யார் வேணும்னாலும் எதை வேணும்னாலும் நெனச்சுண்டு போகட்டுமே! அவா அவா புத்தி; அவா அவா நெனப்பு; அவா அவா குணம்…

யாரோ என்னைப் பார்க்கறாளாம். பாக்கட்டுமே! பார்த்தா என்னவாம்? ஜன்னலும் பாக்கறதுக்குத்தான் இருக்கு. ஜன்னல்ங்கறது உள்ளே இருக்கிறவா வெளியே பார்க்கறதுக்குத்தான். வெளியே இருக்கிறவா உள்ளே பார்த்தா, அதுக்கு நான் என்ன செய்யறது? நெனைக்கறது சரியாயிருந்தா பாக்கறதிலே ஒண்ணும் தப்பேயில்லை.

போகப் போக எனக்கு மனசிலே பட்டது. யாரையோ நான் தேடிண்டுதான் இருக்கேனா? யார் அது? தேடினால் தப்பா? நான் தேடவே இல்லையே. சும்மா ஒரு பேச்சுக்குக் கேக்கறேன்… தேடினாக்க தப்பா? நான் யாரைத் தேடறேன்? நான் யாரைத் தேடறேனோ அவனே வந்துட்டா, ஜன்னல் வழியாவா நான் அவனோடு ஓடிப் போக முடியும்? இவாள்ளாம் நெனைக்கறாளேன்னு நானும் வெளையாட்டா ஒரு நாளைக்கித் தேடிப் பார்த்தேன். எனக்கு ஒருத்தருமே தென்படலே. பாவம்! ஒவ்வொருத்தரும் அவாவா பாட்டுக்கு என்னவோ போறா, வரா; நிக்கறா; பேசறா; என்னை ஒருத்தரும் பார்க்கலை. இவாதான் தெருவிலே போறவன் வரவன் எல்லாரையும் என்னோட முடிச்சுப் போட்டுக்கறா. சீ! எவ்வளவு அசிங்கமா நெனைக்கறா! இந்தச் சித்தி ஒரு நாள் என்னை என்னமோ அசிங்கமா கேட்டா… நேக்குக் கோபம் வந்துட்டுது.

“உனக்குப் புத்தி அப்படித்தான்… வருஷத்துக்கு ஒரு தடவை ஓடறியே வைத்தீஸ்வரன் கோயிலுக்கு”ன்னு என்னமோ நன்னாக் கேட்டுட்டேன்… பின்னே என்ன? இவமட்டும் என்னெக் கேக்கலாமோ?

நான்தான் நெஜத்தைச் சொல்றேனே, எனக்கு மத்த இடத்திலெல்லாம் மூச்சு முட்டறது. இங்கே வந்து நின்னாதான் சித்தெ மூச்சுவிட முடியறதுன்னு. நான்தான் வெளியிலேயே போக முடியாது. வெளியே போறவாளையாவது பாக்கப்படாதா?

ஐயோ! அதெ நெனைக்கவே எனக்குப் பயமாயிருக்கு! ஒரு நாள், என் கழுத்தைப் புடிச்சு அமுக்கின மாதிரி, ஒரு பானையிலே போட்டு என்னைத் திணிச்சு அடச்ச மாதிரி, என்னைப் படுக்க வச்சு என்மேல ஒரு பாறாங்கல்லை வச்சு அழுத்தின மாதிரி… இந்த ஜன்னலை மூடிட்டா!… நேக்குக் கண்ணே குருடாயிடுத்து. அதெவிட அவா என்னெக் கொன்னுருக்கலாம். அலறி, மோதி, அடிச்சுண்டு அழுதிருக்கேன் பாருங்கோ… இன்னும் கொஞ்ச நாழி ஜன்னலைத் தெறக்காம இருந்திருந்தா நான் நெஞ்சு வெடிச்சுச் செத்துப் போயிருப்பேன். அப்…பா, தெறந்துட்டா, அன்னிக்கி இந்த ஜன்னல் கட்டையிலே ஏறி உக்காந்தவதான்! நான் ஏன் எறங்கறேன்? நான் அந்தப் பக்கம் போனா இந்தப் பக்கம் மூடிடுவாளே!…

ஜன்னலைத் தெறந்து விட்டுட்டா… அத்தோட போச்சா? திண்ணை நெறய ஒரே வாண்டுப் படைகள்! எனக்கு ஒண்ணும் புரியலை. என்னை எதுக்கு எல்லாரும் இப்பிடி வேடிக்கை பார்க்கறா? நானும் பொறுத்துப் பொறுத்துப் பாத்து என்னால தாங்க முடியாம ஒரு நாள் வெரட்டினேன். அடிக்கலே; வையலே… ‘என்ன ஏன்டா இப்பிடி எல்லாருமாப் படுத்தறேள்’னு அழுதேன். அதெப் பாத்து எல்லாரும் ‘ஓ’ன்னு சிரிக்கறா…

அப்பா வந்தார். நான் அவர் மொகத்தைப் பார்க்கலே; ஆனா எங்கேயோ பாத்துண்டு ‘அப்பா’ன்னு அழுதேன். அவரும் எங்கேயோ பாத்துண்டு பக்கத்திலே வந்து நிக்கறார்னு புரிஞ்சுது. “அப்பா! நான் தெரியாமக் கேட்டுட்டேன். நேக்கு கல்யாணமே வேண்டாம். இந்த ஜன்னலண்டையே நான் உக்காந்திண்டிருக்கேன். அது போறும்”னு சொன்னேன். “ஜன்னலை மட்டும் மூட வேண்டாம்னு சொல்லுங்கோ”ன்னு கெஞ்சினேன்.

“இனிமே நான் கல்யாணம் வேணும்னு கேக்கவே மாட்டேன்… ஏதோ எல்லார் மாதிரியும் இருக்கணும்கிற ஆசையிலே, எனக்குத்தான் அம்மா கெடையாதே, அப்பாகிட்டே கேட்டா தப்பில்லைன்னு கேட்டுட்டேன்… அதுக்காக என்னை இப்பிடிப் படுத்தி வெக்கறேளே… ஜன்னலை மூட வேண்டாம்னு சொல்லுங்கோ”ன்னு அழுதேன்.

“உனக்கு ஜன்னல்தானே வேணும்? ஜன்னலையே கட்டிண்டு அழு”ன்னு அப்பா சொன்னப்போ எனக்கு எவ்வளவு ஆறுதலா இருந்தது!

அப்புறம் ஒரு நாள்… “வாடீ என்னோட வைத்தீஸ்வரன் கோயிலுக்கு போயிட்டு வரலாம்”னு வாசல்லே வண்டியைக் கொண்டு வந்து வச்சுண்டு அப்பாவும் சித்தியும் என்னெ வேண்டி வேண்டி, உருகி உருகி அழைச்சா… நானா போவேன்? முடியாதுன்னுட்டேன். ஜன்னல் கம்பியை இறுக்கமாகப் புடிச்சுண்டு வரவே மாட்டேன்னுட்டேன்.

“நேக்கு வைத்தீஸ்வரன் கோவிலும் வேண்டாம்! இன்னொண்ணும் வேண்டாம். எனக்கு என்னோட ஜன்னல் போறும். இங்கேருந்தே நான் எல்லாத்தையும் பாத்துக்குவேன். என்னெ சித்தெ நிம்மதியா மூச்சுவிட விட்டுவிட்டு நீங்கள்ளாம் எங்கே வேணும்னாலும் போங்கோ”ன்னு இருந்துட்டேன்.

எனக்கு இந்த ஜன்னலே போறும்!

அப்புறம் திடீர்னு ஒரு நாள் என்னெச் சுத்தி ஒரே ஜன்னல்… பெரிய பெரிய ஜன்னல்…. சுவரே இல்லாம ஜன்னல்… ஐயையோ இது கூண்டுன்னா? தெய்வமே! நேக்கு கூண்டு வாண்டாமே! நான் என்ன புலியா? சிங்கமா? என்னெ எதுக்குக் கூண்டுலே போட்டேள்? எப்படிப் போட்டேள்? ஏன் போட்டேள்? எப்பப் போட்டு அடைச்சேள்?… நான் என்னடீ பண்ண?… அடீ அம்மா!…

வெறும் ஜன்னல் மட்டுந்தான் இருந்தது; அரச மரத்தைக் காணோம்; அதுக்குப் பின்னாலே இருக்கிற குளத்தைக் காணோம். சிவானந்தம் வீட்டைக் காணோம். கல்யாணமும் இல்லே, சாவும் இல்லே… வெறும் ஜன்னல். அதுவும் நம்பாத்து ஜன்னல் மாதிரி அழகா, சின்னதா இல்லே. ஜன்னல் கட்டை இல்லே… ஒரு பக்கம் சாஞ்சுண்டு இன்னொரு பக்கம் காலை உதைச்சுண்டு ம்ஹீம்… ஒண்ணும் முடியாது.

அப்பிடி ஒரு இடமா? அப்பிடிக்கூட ஒரு இடம் இருக்குமா? கூண்டு மாதிரி, குகை மாதிரி, ஜெயில் மாதிரி. ஒரு வேளை அது பொய்யோ, கனவு கண்டிருப்பேனோ?… நேக்கு ஒண்ணும் தெளிவா சொல்லத் தெரியலை… விடுங்கோ… இப்பத்தான் ஜன்னலண்டையே, மறுபடியும் இங்கேயே வந்துட்டேனே!…

ஒரு சமயம் உள்ளே ஜன்னல் வழியா ஒரு யானை வந்துட்டுது! ஸ்வாமி ஊர்வலம் போறச்சே அந்த யானையை நான் பார்த்திருக்கேன்… அதே யானை! அடீ அம்மா! எவ்வளவு பெரியா யானை! எவ்வளவு நைஸா மொதல்லே தும்பிக்கையை நீட்டி ஏந்தி என்னெக் கூப்படற மாதிரி வந்து நின்னுது. அசைஞ்சி அசைஞ்சி ரெண்டு கம்பிக்கும் நடுவிலே தும்பிக்கையை விட்டு என் கன்னத்துலே ‘சில்’னுனு தொட்டப்போ நன்னாவும் இருந்தது; பயமாகவும் இருந்தது.

ஜன்னல் கட்டையிலே உக்கார்ந்திருந்த நான் எறங்கி வந்து அறை நடுவிலே நின்னுண்டேன். அந்த யானை நீளமா தும்பிக்கை முழுசையும் அறைக்குள்ளே நீட்டிண்டு என்னெப் பிடிக்கறதுக்கு துழாவறது… அப்புறம்…

அடீ அம்மா! இந்த அதிசயத்தைப் பாருங்கோளேன்… பார்க்கறவரைக்கும்தான் அதிசயம்.. இப்ப ரொம்ப சர்வ சாதாரனமா இருக்கு… அந்த யானையோட உடம்பு அப்பிடியே கொஞ்சம் கொஞ்சமா தட்டையாகி ஒரு கறுப்புத் துணி மாதிரி – யானை உருவத்துக்கு ஒரு படுதாவிலே கத்தரிச்சுப் பெரிசா தொங்க விட்டா எப்படி இருக்கும் – அந்த மாதிரி ஆடி ஆடி ஜன்னல் கம்பிக்கு நடுவே நொழஞ்சு முழுக்க உள்ளே வந்துட்டுதே! நடு அறையிலே கூரையிலே முதுகு இடிக்கிற மாதிரி மறுபடியும் முன்னே மாதிரியே யானையா நிக்கறதே… தும்பிக்கையாலே ‘ஜில்’லுனு என்னெத் தொடறதே!

அடீ அம்மா! என்ன சொகமா இருக்கு!… எவ்வளவு சந்தோஷமா இருக்கு!.. பயமாவே இல்லே. கொஞ்சம் கூடப் பயமே இல்லே.

திடீர்னு சித்தி வந்துட்டாள்னா என்ன பண்றதுன்னு நெனச்சவுடனே தான் பயம் வந்துட்டுது.

“போ… போ”ன்னு நான் யானையை வெரட்டறேன். அது என் கழுத்தைத் தும்பிக்கையாலே வளைச்சுப் பிடிச்சுண்டு என்னையும் “வா வா”ன்னு இழுக்கறது.

ஐயையோ! எவனோடயோ ஓடிட்டாள்னு பழி வருமேன்னு நெனக்கறச்சே வயத்துலே ‘பகீர்’ங்கறது!…

“சனியனே! ஏன் வந்தே?… என்னெ எங்கே இழுக்கறே?”ன்னு அந்த யானையோட நெத்தியிலே ரெண்டு கையாலேயும் குத்தறேன்… யானை என்னைத் தும்பிக்கையாலே வளைச்சுத் தூக்கிண்டு கொஞ்சம் கொஞ்சமா வந்த மாதிரியே பின்னம் பக்கத்திலே துணி மாதிரி அலை அலையா மெதந்துண்டு ஜன்னல் கம்பிக்குள்ளே நுழைஞ்சு போயிண்டே இருக்கு. நான் ஜன்னலண்டை வந்ததும் ஜன்னல் பக்கத்துலே நன்னா முதுகைச் சாச்சுண்டு, ரெண்டு பாதத்தையும் எதிர் சுவத்திலே உதைச்சுண்டு குறுக்கா நாதாங்கி போட்டா மாதிரி உக்காந்துண்டேண். யானை நொழைஞ்ச மாதிரி நான் நொழைய முடியுமா?…

பாவம்! அந்த யானை வெளியிலே நின்னுண்டு பரிதாபமாப் பார்த்தது. என்ன பண்றது? நானும்தான் அப்பிடிப் பார்த்துண்டிருக்கேன்… எவ்வளவோ பேர் அப்பிடித்தான் பார்க்கிறா. அதுக்கு நான்தான் என்ன பண்றது? அவாதான் என்ன பண்றது? பார்த்துண்டே இருக்க வேண்டியதுதான்…

அப்பிடியே என்னெப் பார்த்துண்டே அந்த யானை பின்னம் பக்கமாவே நடந்து போயி, அரச மரத்தடியிலே பிள்ளையாரா மாறிடுத்து…

அதிசயமாயிருக்கு இல்லே! எனக்கு இது சர்வ சாதாரணமா இருக்கு. ஏன்னா, இந்த மாதிரி அடிக்கடி நடக்கிறது. ஆனை மட்டும் தான் வரும். நான் போறதில்லே – முடியுமா என்ன?

இப்பல்லாம் எனக்கு ஜன்னலண்டையே சாப்பாடு வந்துடறது. எங்க பாபுவோட ஆம்படையாள் இருக்காளே குஞ்சு, தங்கம்னா தங்கம். எனக்கு அப்பிடி சிசுருஷை செய்யறா போங்கோ! நன்னா இருக்கணும்.

நாணுவும், அவன் பொண்டாட்டியும் நெய்வேலியிலே இருக்கா… பாபு எங்கே இருக்கானோ அங்கேதான் நானும் இருப்பேன். அவனும் என்னெ விடமாட்டான்.

இப்ப சித்தி இல்லை. அவ செத்துப் போயி ரொம்ப நாளாச்சு!

புதுசு புதுசாப் பொறக்கறாளே அந்த மாதிரி மனுஷா பழசு பழசா செத்தும் போறா.

நான் மாத்திரம் எப்பவும் ஜன்னலண்டையே உக்காந்திருப்பேன். உக்காந்துண்டே இருப்பேன். இந்த வீடெல்லாம் இடிஞ்சு போனாலும் இந்த ஜன்னல் மாத்திரம் இருக்கும். நான் இதிலே சாஞ்சுண்டு காலை உதைச்சுண்டு பார்த்துண்டே இருப்பேன். லோகத்தை ஜன்னலாலே பார்த்தா பிரயாணம் போற மாதிரி நன்னா இருக்கு.

இந்தப் பிரயாணம் நன்னா இருக்கு. இந்த வீடு ஒரு ரயில் மாதிரி ஓடிண்டே இருக்கு. ரயில் பெட்டி மாதிரி இந்த அறை ஜன்னல்லே உக்காந்துண்டு பார்த்துண்டே நான் பிரயாணம் போறேன்… எல்லாம் ஓடறது. மனுஷா, மரம், வீடு, பிள்ளையார், தெரு, நாய், சொந்தக்கார மனுஷா, அந்நிய மனுஷா, செத்தவா, பொறந்தவா எல்லாரும் ஓடறா.

ரயில்லே போகச்சே நாம ஓடிண்டிருக்கோம். ஆனாக்க தந்திக் கம்பியும் மரமும் ஓடற மாதிரி இருக்கோன்னோ? அதே மாதிரிதான் இங்கே நான் உக்காந்திண்டிருந்தாலும் ஜன்னலுக்கு வெளியே எல்லாரும் ஓடறதனாலே நானே ஓடிண்டிருக்கிற மாதிரி இருக்கு, யாராவது ஒருத்தர் ஓடினா சரிதான். நாமே ஓடினாத் தானா?

இப்ப யாரும் என்னைப் பாத்து சிரிக்கிறதில்லை; என்னெ வேடிக்கை பாக்கறதில்லை. ஆனாலும் எனக்குச் சில சமயத்திலே அவா சிரிக்கிற மாதிரி இருக்கு. என்னைப் பத்தி அவா ‘ஜன்னலண்டை உக்காந்திருக்கா, உக்காந்திருக்கா’ன்னு சொல்லிண்டிருக்கிற மாதிரி இருக்கு. யாரு சொன்னா எனக்கு என்ன? எங்க குஞ்சு அப்பிடியெல்லாம் சொல்லவே மாட்டாள். அவ தங்கம்னா தங்கம்தான் குஞ்சு – அதான் பாபுவோட ஆம்படையாள். கொழந்தைகளைக் கொண்டு வந்து எங்கிட்டேதான் விட்டுட்டு அடுக்களைக் காரியங்களைப் பார்ப்பா.

இப்பல்லாம் நான் ஒரு வேலையும் செய்யறதில்லே. என்னெ வேலை செய்ய விடவே மாட்டா குஞ்சு.

நான் கொழந்தைகளை வெச்சிண்டு ஜன்னல் வழியா வேடிக்கை காட்டிண்டு இருக்கேன் – இல்லே, வேடிக்கை பாத்துண்டிருக்கேன்…

ஜன்னலுக்கு அன்னண்டை தெரியறதெல்லாமே வேடிக்கையாத்தான் இருக்கு!

“பாட்டி! ஜன்னலண்டை உக்காந்துண்டு என்ன பார்க்கறே?”

அடீ அம்மா! இதென்ன வேடிக்கை? பாட்டியாமே நான்? “யார் அது யாருடி நீ?”

“நான்தான் சரோவோட பொண்ணு – ஊர்லேருந்து நேத்து வந்தேனே”ன்னு என்ன வக்கணையாய்ப் பேசறது பாருங்கோ.

சரோவுக்குப் பொண்ணா? இவ்வளவு பெரியவளா? சரோ வந்து… பாபுவோட பொண்ணு… அப்போ நீ குஞ்சுவோட பேத்தியா?…

அடீ அம்மா! ஜன்னலுக்கு இந்தப் பக்கம் இவ்வளவு வேடிக்கையா நடந்திருக்கு? நான் கவனிக்கவே இல்லியே…

குஞ்சு! அடீ அம்மா! இங்கே வாயேன்! இந்த வேடிக்கையை சித்தெ வந்து பாரேன்… நான் பாட்டியாமே பாட்டீ…. உன் பேத்தி சொல்றாடி… குஞ்சு… குஞ்சு…!

(எழுதப்பட்ட காலம்: 1968)

நன்றி: ஜெயகாந்தன் ஒரு பார்வை – டாக்டர். கே.எஸ். சுப்பிரமணியன், முதல் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை – 600 017.

Print Friendly, PDF & Email

1 thought on “நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *