நான் – அவர் – அவர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 29, 2014
பார்வையிட்டோர்: 13,885 
 
 

கடன் என்கிற வார்த்தையை ஆழ்மனதிற்குள் செலுத்தினேன்.மன உருண்டையை சுழற்றிவிட்டு பல கோணங்களில் தேடினேன். யாகூ , கூகுள் போன்ற இணைய தளத்தால் கண்டுப்பிடித்து தரமுடியாத பலரும் என் அகக்கண் முன் வந்து நின்றார்கள். அதில் ஒருவரை ஜீம் செய்தேன்.அந்த ஒருவர்தான் மிஸ்டர் ஜெயராமன் சார்.அவர் வீட்டிற்குத்தான் இன்று நான் கடன் கேட்டு போகப்போகிறேன்.

நான் கடன் கேட்குமளவிற்கு அவர் தகுதியான நபர்தானா?கொடுத்தக்கடனை திரும்பக் கேட்காத நபர்தானா?அடுத்தத்தேடலில் இறங்கினேன்.நீள், குறுக்கு வெட்டுக்கோணத்தில் அவரை எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்தேன்.எந்தக்கோணத்தில் பார்த்தாலும் அவர் தகுதியான நபராகவே தெரியத்தொடங்கினார்.எந்த வகையிலெல்லாம் அவர் தகுதியானவர்?முதல் தகுதி எனக்கு அவர் அதிகாரி.ஒவ்வொரு நாளும் அவர் கேட்காமல் கூனிக்குறுகி வணக்கம் வைத்துக்கொண்டிருக்கிறேனே. வணக்கம் அல்ல அது .கும்பிடு;பெரிய கும்பிடு. மற்றொரு தகுதி, அவர் வீட்டில் அவரையும் சேர்த்து மூன்று பேர் அரசு உத்தியோகம் பார்க்கிறார்கள்.எப்போதும் அவர் பணப்புழக்கத்தில் இருக்கக்கூடியவர்.இதைவிட வேறு என்ன தகுதி வேண்டும்?மாலை ஐந்து மணிக்கெல்லாம் அவர் முன் தோன்றி கடன் கேட்கும் படலத்தை தொடங்கவிட வேண்டும் என நேரம் குறித்துக்கொண்டேன்.

மிஸ்டர் ஜெயராமன் சார் எனக்கு மட்டுமல்ல. என்னைப்போல பலருக்கும் அவர்தான் அதிகாரி. அவரிடம் போய் கையைப்பிசைந்து கொண்டு , கால் கட்டை விரலால் வட்டம் போட்டுக்கொண்டு எல்லாரிடம் கேட்பது போல அவரிடம் கடன் கேட்டால் அவரது சுயமரியாதை என்னாகும்?அவரது சுயமரியாதை ஒரு பக்கம் இருக்கட்டும். என் மரியாதை என்னாவது? . யார் சுயமரியாதையும் பாதிக்காதளவிற்கு ஒரு பிரத்யேகமான முறையில் அவரிடம் கடன் கேட்க வேண்டும். அதுஇதுவரை யாரும் கையாளாத ஒரு புது யுக்தியாக இருக்க வேண்டும் .அதற்கான ஒத்திகையில் இறங்கினேன்.

துவைத்து இஸ்திரி செய்த சட்டையை எடுத்து அணிந்து கொண்டேன்.“ அழுக்கு படிந்த சட்டையை அணிந்திருப்பவர்களுக்கு கொடுக்கும் கடன் வராக்கடன் “ எனும் ஒரு விதி நடைமுறையில் இருக்கிறதே. ஒரு துண்டு காகிதத்தில் கொஞ்சம் விபூதி மடித்து சட்டை பைக்குள் வைத்துக்கொண்டேன். சற்று அழுக்கான வேஷ்டியை இடுப்பில் இடுக்கிக்கொண்டேன். பின்னே ரொம்பவும் வெள்ளையும் சொள்ளையுமாகவா போக முடியும்?“ கேட்க வந்திருப்பது கடன். இதில் பகட்டு என்ன வேண்டிக்கிடக்கு “ என அவர் நினைத்துவிடக் கூடாது அல்லவா!

வெறுங்கையை வீசிக்கொண்டு போனால் கடன் வாங்குவதற்கென்றே வந்தவன் என்றாகி விடும்.ஏதேனும் ஒரு வார இதழை சுருட்டி கையில் வைத்துக்கொள்வது எதற்கும் நல்லது.ஒரு வேளை அவர் வீட்டிற்குள் படுசோலியாக இருந்தால் அவர் வரும் வரை படிப்பதாக நடித்து கொண்டிருக்கலாம். மின் தடை ஏற்பட்டால் வீசிக்கொண்டு புழுக்கத்தை போக்கிக்கொள்ளலாம்.அதற்காகஅலமாரியின் மேல் தட்டில் அடுக்கியிருந்த இதழ்களில் ஒன்றை உருவினேன். பிரபலமான தமிழ் வார இதழ் அது.கடந்த மாதத்து இதழாக இருந்தாலும் பார்க்க அது புதுசாகவே இருந்தது.அதை சுருட்டி உள்ளங்கையிற்குள் வைத்துக்கொண்டேன்.

சரி.கடன் எவ்வளவு கேட்கலாம்?நூறுக்குள் கேட்பதாக இருந்தால் “ சார்……… பாக்கெட் மணி சில்லறையா இல்ல . பஸ்ல டிக்கெட் எடுக்க நீட்டினா கண்டெக்டர் எரிஞ்சு விழுவாரு.சில்லறை இருந்தா கொடுங்க“ எனசிரித்துகொண்டே கேட்டுவிடலாம். நூறு ரூபாய்க்கு மேல் கடன் கேட்பதாக இருந்தால் தலையை சொரிவதைத் தவிர வேறு வழி இல்லை. ஆயிரம் ரூபாய் என்றால் எப்படியும் அரை மணி நேரம் பேசியாக வேண்டும்.சௌகரியத்தை நீட்டி மடக்கி அவர் மீது அதிக அக்கரை உள்ளவனைப்போல காட்டிக்கொள்ள வேண்டும். தேவைப்படுமிடங்களில் அவரை சற்று புகழ்ந்து கண், காது , மூக்கு வைத்து கற்பனை முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும். இரண்டாயிரம் , மூவாயிரம் என்றால்“ அடுத்த மாதம் சம்பளத்தில் தாறேன் சார். இல்லைனு சொல்லாம கொடுங்க “ எனதருமத்திற்கும் கடவுளுக்கும் பயப்படுகிற அரிச்சந்திரன் மாதிரி நடந்துக்கொள்ள வேண்டும்.
பத்தாயிரம் , இருபதாயிரம் என்றால் இருக்கவே இருக்கு “ யாருக்கிட்டயாவது “ என்கிற திருவாசகம் . அதை பயன்படுத்தி கேட்பதை தவிர வேறு வழி இல்லை.“ யாருக்கிட்டயாவது வட்டிக்கு வாங்கிக்கொடுங்க. ஒன்னாம் தேதி ஆனா வட்டிய கொடுத்திடுவோம். ரெண்டு மாசத்தில அசலை கொடுத்திடுவோம் ”என சொல்லியாக வேண்டும். இல்லையேல் சுவற்றில் அடித்த பந்து போல “ அடடே…..என்னைக்குமில்லாம கேட்குறீங்க. இப்போதைக்கு இல்லையே“ எனஉடனடி பதில் வந்து விடும். அப்படியொரு பதில் வந்ததன் பிறகு தலைகீழாக நின்றாலும் கடன் வாங்க முடியாது. பீ கேர் புல் !எனக்கு நானே எச்சரித்துக்கொண்டேன்.

“ அவரிடம் எவ்வளவு கடன் கேட்கலாம்? ” . பத்தாயிரம்! வேண்டாம். அவ்வளவு வாங்கினால் தேதியுடன் தன் டைரியில் எழுதி வைத்துக்கொள்வார். சொன்னபடி , சொன்ன தேதியில் கடனைகொடுக்க நேரிடும் . அது மட்டுமா ?வட்டிக் கேட்பார்.அவர் கேட்க விட்டாலும் அவருக்கு கீழ் பணியாற்றும்ஒரு நபரை அனுப்பி கேட்க வைப்பார். ஆயிரம் அல்லது இரண்டாயிரம்?. ஆம் அது போதும். இரண்டாயிரம் கேட்கலாம் . அப்போதுதான் “ இதுதான் இருக்கிறது என ஆயிரம் ரூபாயாவது கொடுப்பார்“ என் மூளை போடும் கணக்கை உள்ளுக்குள் மெச்சிக்கொண்டேன்.
“ சரி எப்படி கேட்பது? “ எல்லோரையும் போலவும் எடுத்த எடுப்பில் அவரிடம் கடன் கேட்டுவிட முடியுமா? அப்படி கேட்டால் அவர் முன் நான் சராசரி கடன் நுகர்வோராகி விடமாட்டேனா? . பிறகு நான் பத்தோடு பதினொன்னு. அத்தோட இவன் ஒன்னு என்றாகி விடுவேன்.அப்படி கேட்கப்போய்தான் பல நண்பர்களை இழந்து நிற்கிறேன். யார் யாரிடம் எப்படி கடன் கேட்க வேண்டுமென்று சில வரையறைகள் இருக்கின்றன.அதன்படிதான் கேட்க வேண்டும்.
அத்தை மகன் சிவானந்தம். அவனிடம் ஒரு நாள் ஆயிரம் ரூபாய் கடன் கேட்டேன். வெறும் ஐம்பது ரூபாயை என் கையில் கொடுத்து “ இந்த பணத்தை நீ திருப்பித்தர வேண்டாம். இனி கடன் கேட்டு என் வீட்டிற்கு வராதே “ என சுந்தரகாண்டம் பேசினான். என் சுயமரியாதைக்கு வந்ததே கோபம்.“ ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிற இடத்தில் இந்த ஐம்பது ரூபாய் எதுக்கு நாக்கு வழிக்கவா? “ என கேட்டதுமில்லாமல் அவன் கொடுத்த அந்த ஐம்பது ரூபாயை அவன் முகத்தில் விட்டெறிந்து விட்டு வீடு வந்து சேர்ந்து விட்டேன். அவ்வளவுதான்! அவனுக்கும் எனக்குமான உறவு அறுந்துஇதுநாள் வரைக்கும் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. கடன் கேட்கும் போதுஎதற்கும்நிதானம் வேண்டும் ஆட்காட்டி விரலை முகத்திற்கு நேராக நீட்டி தனக்குத்தானே அறிவுறுத்திக்கொண்டேன்.
வசதி படைத்தவனிடம் கடன் கேட்பதும் கடவுளிடம் வரம் கேட்பதும் ஒன்றுதான் . முதலில் கும்பிட்டாக வேண்டும்.பிறகு தன்னுடைய குறைகளை சொல்லி அழ வேண்டும் அல்லது அழுவதைப் போல பாவனை செய்ய வேண்டும். அதற்காக அவரிடம் அழுதிட முடியுமா? . அலுவலகத்தில் போடும் அதே கும்பிடை சற்று உயர்த்தி தாழ்த்தி வைத்தால் போதும்.
அவர் வீட்டிற்கு சென்றவுடன் முதல் வேலையாக “ கோயிலுக்கு போனேன் சார். “ என்றபடி விபூதியை எடுத்து அவர் முன் நீட்ட வேண்டும். பிரசாதம் இல்லாமல் விபூதியை மட்டும் கொடுத்தால் நன்றாகவா இருக்கும்?.“ அதற்காக கடன் கேட்டு போகிற இடத்திற்கெல்லாம்பிரசாதம்வாங்கிக்கொண்டா போக முடியும்? ” என் கட்டுப்பாட்டை மீறி பாய்ச்சல் எடுக்கும் என் மூளையை எச்சரித்து கொண்டு அவருடைய வீட்டை நோக்கி நடைக்கட்டினேன்.
முடிந்தவரை அவராகவே “வாங்க தம்பி . வந்த விசயம் என்ன ?“என கேட்குமளவிற்கு நடந்துக்கொள்ள வேண்டும். இந்தக் கேள்வி அவர் வாயிலிருந்து வந்ததன் பிறகு கண்களைப்பார்த்தபடி , அரும்பு போல சிரித்து கொண்டு கேட்க வேண்டும். “ முக்கியமான செலவு சார்.இரண்டாயிரம்ரூபா தேவைப்படுது.” இதை சொல்லும் போது நாக்கு தடுமாறக்கூடாது.
அவர் முகம் என் முகத்தை பார்த்து கொண்டே இருந்தால் லாட்டரி அடித்து விட்டது என்று பொருள்.பேச்சை அத்துடன் நிறுத்திக்கொள்ளலாம்.ஒரு வேளை அவர்,முகத்தை வேறொரு பக்கம் திருப்பிக்கொண்டால் மேலும் எதையாவது அவிழ்த்தாக வேணும்.“ அதுக்காக வரல சார். வாக்கிங் வந்தேன்.நீங்க கைராசிக்காரராச்சே. அதான் எதுக்கும் ஒரு வார்த்தை கேட்டுப்பார்க்கலாமென………..” இந்த இடத்தில் சடன் பிரேக் தேவை.இதை சொன்னதும் அவர் என்னை பார்க்கவே செய்வார்.“ கைராசிக்காரர் “ என்கிற வார்த்தை அவரது உச்சந்தலையில் போய் உட்கார்ந்துக்கொள்ளும். அதிலிருந்து அவர் மீண்டு வர சில நிமிடங்கள் கூட ஆகலாம்.

அந்த வார்த்தையிலிருந்து அவர்மீண்டு வரும் வரைக்கும்காத்திருக்கக் கூடாது.குடிக்க தண்ணீர் கேட்க வேணும் . அவரை வீட்டிற்குள் போய் வர வைக்க அது ஒன்றே வழி.அவர் மட்டும் இருந்தால்தான் தண்ணீர் கேட்கணும் . வீட்டில் அவருடைய மனைவி , மக்கள் இருந்தால் அந்த கேள்வி அந்த இடத்தில்அவசியமே இல்லை.

சாலையில் நின்றபடிஅவருடைய வீட்டைப்பார்த்தேன்.வீடு மாளிகையாக தெரிந்தது. மரம் , செடி , கொடிகளின் கரங்கள் வீட்டின் அழகை மூடி மறைக்க முயற்ச்சித்து தோற்றுக்கொண்டிருந்தன. போர்டிகோவில் ஒரு சொகுசுகார்.அதன் அருகில் சற்றே ஏறக்குறைய என் உயரத்தில் ஒரு நாய் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தது. அதையொட்டி ஒரு சோபா. அதில் யாரோ ஒருவர்உட்கார்ந்து கொண்டிருப்பது தெரிந்தது.யாரென ஊன்றிக்கவனித்தேன்.அவரேதான்.மிஸ்டர் ஜெயராமன் சார்.
நான் வீட்டை நெருங்கிய உடன் அந்த நாய் “ இது என் ஏரியா . உள்ளே வராதே“ என அகோரப் பற்களைக்காட்டி மிரட்டியது. சங்கிலியை இழுத்துக்கொண்டு வெளி கேட் வரைக்கும் வந்து என் மீது பாய முயற்சித்தது .ஜெயராமன் சார்எதையும் கண்டுக்கொள்ளாமல் தினசரியில் மூழ்கிக்கொண்டிருந்தார்.

“ ஐயா வணக்கம் “ என்றபடி ஒரு பெரிய கும்பிடு போட்டேன். உட்கார்ந்திருந்தவர் சட்டென எழுந்து வெளியே வந்தார். நாயை வலது கையால் அணைத்துக்கொண்டு கேட்டை திறந்துவிட்டார்.“ அடடே வாங்க தம்பி. என்ன விஷேசம் ?“ என்றபடி என் கரங்களை இறுகப்பற்றினார். என்ன கொடுமையடா இது!. இந்த கேள்விக்கு இப்ப என்ன அவசரம்?.சற்று நேரத்திற்கு பிறகு இதை அவர் கேட்டிருக்கலாமே.இப்பொழுது கடன் கேட்டால் நாயை அவிழ்த்து விட்டு கடிக்க விட்டாலும் விடுவார்.மௌனியாக அவரை பின் தொடர்ந்தேன்.

வீட்டிற்குள் அழைத்துச்சென்று ஒரு சோபாவில் உட்கார வைத்தவர் , எதிர் சோபாவில் அவர் உட்கார்ந்து கொண்டார்.

“ ஷோபனா………………“

சமையல் அறையிலிருந்து ஒரு பெண்மணி வந்தார். இவரை விட பத்து வயது குறைந்தவராக தெரிந்தார்அவர் .அவரது முகத்தில் லெட்சுமி குடிக்கொண்டிருந்தாள்.அவரது நெற்றியில் வியர்வைத்துளிகள் அரும்புகள் போல பூத்திருந்தன. அதை முந்தானையால் ஒற்றி எடுத்தபடி “ வாங்க “ என என்னை வரவேற்றார். நான் மெல்ல எழுந்து அரும்பு போல சிரித்து கொண்டு “ நல்லா இருக்கீங்களா ?“ என்றேன். பதிலுக்கு அவரும் சிரித்தபடி “ இருக்கோம்” என்றவர் “ பேசிக்கிட்டிருங்க காஃபி கொண்டு வாறேன்“ என்றவாறு உள்ளேபோய் விட்டார்.

விபூதியை எடுக்க பாக்கெட்டிற்குள் கையை நுழைத்தேன்.மனைவியை அவர் மறுபடியும் அழைத்தார்.“ ஷோபனா “

“ இதோ வந்திட்டேன்க“

“ கோயில் பிரசாதம் கொண்டு வா “

“ அதான்க எடுத்துக்கிட்டு இருக்கேன் “

எனக்கு மின்னல் வெட்டியது.சட்டை பாக்கெட்டிற்குள் நுழைந்த கையை எப்படி வெளியே எடுத்தேன் என்று தெரியவில்லை. தலையை சுவற்றில் முட்டிக்கொள்ளணும் போல இருந்தது.ஒத்திகை பார்த்தது போல எதுவும் நடந்தேறவில்லையே என்கிற கிறக்கம் என்னை ஆட்கொண்டது.நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது இதுதானோ? தண்ணீராவது கேட்டுப்பார்க்கலாம் ; அடுத்தக்கட்ட சோதனையில் இறங்கினேன்.

“ ஷோபனா ………….. பிரசாதத்துடன் தண்ணியும் எடுத்துக்கிட்டு வந்திடு “

எனக்கு எதிராக காலம் பகடை விளையாடுகிறது. என் மீது நடத்தும் திட்டமிட்ட பலி வாங்கல் இது .இமைகளை மூடி தியானித்தேன். பிறகு மெல்ல கண்களைத் திறந்தேன். என் முன்ஒரு சிறிய தாம்பூலம் . அதில் விபூதி , பொரி, பஞ்சாமிர்தம், கற்கண்டு , திராட்சை என பலவும் இருந்தன. “ எடுத்துக்கிறுங்க தம்பி “ என்றபடி தாம்பூலத்தை என் அருகே தள்ளிய அவர் , ஒரு திராட்சையை கொய்து வாயில் போட்டுக்கொண்டு மீண்டும் தினசரியில் மூழ்கத்தொடங்கினார்.

“ இது என்னங்கபழக்கம்?. உங்களைப்பார்க்க ஒருவர் வந்திருக்கார்.அவர்கிட்ட நீங்க பேசிக்கிட்டிருக்கலாம். எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கலாம் .அதையெல்லாம் விட்டுட்டு எந்நேரமும் இந்த நியூஸ் பேப்பர் மேலேயே கவுந்துக்கிடக்குறீங்களே?“ என்றபடி என் முன் காஃபியை நீட்டிக்கொண்டிருந்தார் ஷோபனா. அவருடைய மனைவி வெடித்ததைக் கேட்டு தினசரியிலிருந்து முகத்தை எடுத்த அவர் என்னை ஆழமாகப் பார்த்தார். அவரது பார்வை தெரியாத கேள்விக்கு பதில் தேடுவதைப்போல போல இருந்தது. பிறகு என்னை நானே அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

“ என் பேர் செல்வராஜ். ஐயா ஆபிஸ்ல இ1 கிளர்க்கா இருக்கேன்.பக்கத்தில மண்டேலா நகர்ல வாடகை வீடு எடுத்து தங்கிருக்கேன்.கல்யாணம் ஆயிடுச்சு.மனைவி வீட்லதான்.ஆண் ஒன்னு , பொண் ஒன்னு . பையன் பிப்த் படிக்கிறான். பொண்ணு செகன்ட் கிளாஸ் பிடிக்கிறா“

“ அப்படிங்களா ……“ என்றவர் கண்களை வேகமாக சிமிட்டிக்கொண்டு கொஞ்ச நேரம் நின்றவர் பிறகு மீண்டும் சமையல் அறைக்குள் நுழைய கதவு தானாகவே சாத்திக்கொண்டது.

தாம்பூலத்தை பார்த்தேன்.நான்தின்றது போக மீதம் விபூதி மட்டுமே இருந்தது.அதை எடுத்து மடித்து சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டேன்.அடுத்து என்ன செய்யலாம்? மூளையை அவசரமாக கசக்கினேன்.ஒன்றும் பிடிக்கொடுக்கவில்லை.“ சார் நான் கிளம்புறேன் ” என்றபடி மெல்ல எழுந்தேன். தினசரியை மடித்து மேஜையில் வைத்துவிட்டு என் முகத்தை பார்த்து கேட்டார் .“ சொல்லுங்க தம்பி . என்றைக்குமில்லாம வந்திருக்கீங்க. என்ன விசேஷம் ?” முதலில் கேட்ட அதே கேள்வியை மறுபடியும் கேட்டது எனக்குஆறுதலாக இருந்தது.

“ வாக்கிங் வந்தேன் சார். அப்படியே உங்களையும் பார்த்திட்டு போகலாமுனு……………“

“ குட் கேபிட் . வாக்கிங் டெய்லியா ? இல்ல எப்போதாவதா?“

“ நேரம் கிடைக்கிறப்ப சார் “

“ டெய்லி அதுக்குனு நேரம் ஒதுக்குங்க . பாடி, மயி்ன்ட் ரெண்டுமே ரிலாக்ஸா இருக்கும் “

“ எங்கே சார் முடியுது. முயற்சி பண்ணிக்கிட்டுதான் இருக்கேன்“

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார்.பிறகு அவரே கேட்டார்.“ வாடகை வீட்டில் இருக்கீங்களே . சம்பளம் கட்டுப்படியாகுதா? செலவுகளை எப்படி சமாளிக்கிறீங்க ?“

இதுதான் சரியான தருணம்.இதற்கு மேலும் தாமதித்தால் முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு ஏமாற்றத்துடன் வெளியேற வேண்டியதுதான்.“ எந்த மாதமும் இப்படியொரு கஷ்டம் வந்ததில்ல சார். இந்த மாதம் கொஞ்சம் டைட். தேதி வேற இருபது ஆச்சுங்களா . அதான் உங்களைப்பார்த்திட்டு போகலாமுனு வந்தேன் “

“ செலவுக்கு பணம் எதுவும் வேணுங்களா ?“

சக்சஸ்! உள்ளுக்குள் குதித்துக்கொண்டேன்.“ ஆமாம் சார் “ என்றேன் பவ்வியமாக.

“ எவ்வளவு வேணும் ?“

எவ்வளவு கேட்கலாம்.கேட்கும் தொகையை கொடுப்பாரா? இல்லை ஆடி தள்ளுபடியைப்போல கேட்கும் தொகையில் பாதி , முக்கால் என கழிக்கப் பார்ப்பாரா? தெரியவில்லையே.எவ்வளவு கேட்கலாம்?ஒரு வேளை கேட்கிற தொகையை கொடுத்துவிட்டால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கேட்டிருக்கலாமோ என நினைக்கத்தோன்றுமே.

“ சார் ரெண்டாயிரம் தேவைப்படுது சார். “

“ ரெண்டாயிரமா ! “ என்றவர் கொஞ்ச நேரம் யோசனையில் மூழ்கினார். பிறகு “ இவ்வளவு தொகை இப்ப என்னக்கிட்ட இல்லையே “ என்றபடி எழுந்தார்.

நான் கட்டி வைத்திருந்த மனக்கோட்டையில் விரிசல் விழத்தொடங்கியது. முகத்தை பாவமாக , ஏக்கமாக, கெஞ்சுவதைப்போல காட்டிக்கொண்டிருந்தேன்.

“ ஒரு நிமிசம் வெயிட் பண்ணுங்க. இதோ வாறேன் “ என்றவர் பிரத்யேகமான ஒரு அறைக்குள் நுழைந்தார். ஐந்து நிமிடங்கள் மனைவியுடன் ஆலோசித்தார். பிறகு கணவன் , மனைவி என இருவரும் வெளியே வந்தார்கள். வரும் பொழுது ஜெயராமன் சார்கையில் ஒரு துண்டு காகிதம் இருந்தது.அதை என்னிடம் நீட்டினார்.

“ பத்து பேரிடமிருந்து எனக்கு பணம் வர வேண்டிருக்கு. யார் யார் எவ்வளவு தரணுமுனு இதில விவரமாக எழுதிருக்கேன். அவங்களுடைய அட்ரஸ், மொபைல் நம்பர் உட்படஎழுதிருக்கேன். அவங்கள போய் பார்த்து என்னைய பணம் வாங்கிக்கிற சொன்னார்னு சொல்லி பணம் வாங்கிக்கிறுங்க. இந்த பணத்தை உங்க பேர்ல எழுதிக்கிறேன்“ என்றபடி அந்த காகிதத்தை என் கையில் கொடுத்தார்.

காகிதத்தை மடித்து என் பாக்கெட்டிற்குள் வைக்கும் பொழுது யாரோ, எப்பொழுதோ சொன்ன “ மீன் கேட்டால் மீனை கொடுக்காதே. மீன் பிடிக்க தூண்டிலைக்கொடு “ என்ற சீனத்தத்துவம் நினைவில் வந்துச்சென்றது. அவர்களிடமிருந்தும் அவர் வீட்டின் முகப்பில் கட்டிக்கிடந்த நாயிடமிருந்தும் விடைபெற்று வெளியேறினேன்.

பத்தடி தூரம் நடந்தபிறகு அந்த காகிதத்தை பிரித்துப் பார்த்தேன்.பத்தாயிரம் ரூபாய் வசூலிக்க வேண்டிருந்தது.இது நான் எதிர்ப்பார்த்த தொகையை விட அதிகமானது.நடையாக நடந்து எப்படியும் இதைவசூலித்திடவேணும்.ஆழ்மனம் தாளம் போட்டது.

அடுத்துபணம்கொடுக்க வேண்டியவர்களின் பெயர்களைப் பார்த்தேன். எனக்கு பகீரென இருந்தது.அவர்கள், கொடுத்தக்கடனை வசூலிக்க என்னை தேடிக்கொண்டிருப்பவர்கள்.

– மார்ச் 2014(நன்றி: http://akaramblogspot.blogspot.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *