நான்தான் தாரா பேசறேன்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 13,342 
 
 

நான் ஒரு ப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட். அரசியல்வாதிகள், அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று, பலதரப்பட்டவர்களைப் பற்றிய பேட்டிகளை மட்டுமே படித்து, அலுத்துவிட்ட என் மனதில், ஒரு திடீர் துள்ளல்… ஏன்… இப்படி செய்தால் என்ன என்ற ஒரு சிறு பொறி தட்டியவுடன், மனமெல்லாம் மந்தஹாசம் நிரம்பிவிட, சட்டென்று அந்த எண்ணைச் சுழற்றினேன்; மணி அடித்தது…
ரிசீவரை எடுத்தவர், “”ஹலோ…” என்றார்.
அந்த, “ஹலோ’ யாருடையது என்று எனக்குப் புரிந்து விட்டது.
“”நான் தான் தாரா ரவி பேசுகிறேன்,” என்றேன்.
அந்த எதிர் முனை, “ஹலோ’வின் முகத்தில், சின்னச் சின்னதாக யாரிவள் என்ற சந்தேக முடிச்சுக்கள் விழுவதை என்னால் உணர முடிந்தது. சட்டென்று அந்த முடிச்சுக்கள் சிதறி விழ, “”தாரா… ஹவ் ஆர் யூ…” ஒரு நிமிஷம் எனக்கு புரியவில்லை.
“”நீ எப்படீம்மா இருக்கீங்க?” (இத்தனை வருஷங்களாகியும் இன்னும் தமிழ் கற்றுக் கொள்ளவில்லை.) தமிழ் சரியாக பேச வரவில்லையே தவிர, குரலில் சுத்தமாக ஆணவம் துடைக்கப்பட்டிருந்தது என்னவோ சத்தியம்.
“”ஐ ஆம் பைன்… நீங்க எப்படி இருக்கீங்க?” என்றான்.
சற்று நீண்ட மவுனத்திற்குப் பின், “”வெல்… தாரா… உன்னுடன் உண்மைகளை பகிர்ந்து கொள்வதில் என்னம்மா தப்பு? நான் ஒரு பிரபலமான பார்-அட்-லா என்பது உனக்குத் தெரியும். என்னை பற்றி அடிக்கடி பேப்பரில் படித்திருப்பாய். நான் நீதிமன்றத்தில் தோல்வியையே சந்தித்தது இல்லை.
“”என் சொந்த வாழ்க்கையில், எனக்கு எதிராகப் போடப்பட்ட வன்ம முடிச்சுக்களை, என்னால் அவிழ்க்க முடியவில்லை தாரா. நான் பாரில் போய் தஞ்சம் அடைகிறேன் என்று, என் மேல் பழி சுமத்தி விட்டு, என் மனைவி, “லா’விடம் தஞ்சம் அடைந்தாள்; அவள் ஜெயித்தாள். அதன் பின் இன்று வரை நான் ஒரு அனாதை தாரா,” அவன் குரல் தழுதழுத்தது.
முப்பது வருடங்களுக்கு முன்…
பையன் பார்-அட்-லா. பையனின் அப்பா கிங்ஸ்லி, அசல் வெள்ளைக்காரர்; அம்மா காயத்ரி, அசல் தமிழ்நாட்டுப் பெண். கிங்ஸ்லியின் மறைவிற்குப் பின், தமிழகத்திற்கே வந்துவிட்ட காயத்ரிக்கு, எப்படியாவது தன் வம்சத்தை, பழைய கலாசாரத்திற்கு மாற்றிவிட வேண்டும் என்ற தீராத தாபம். எத்தனை முயன்றும் பெரிய, ஆசார குடும்பங்களிலிருந்து யாரும் இந்த பாரிஸ்டருக்கு பெண் கொடுக்க முன் வரவில்லை.
நான்தான் தாரா பேசறேன்“பெரிய இடம், பெரிய சீர்வரிசைகள் எல்லாம் வேண்டாம். நல்ல அழகும், கொஞ்சம் சுமாராக சொல்லிக் கொள்ளும்படியான ஸ்டேட்டசும், மகனுடன் குடும்பம் நடத்தத் தேவையான ஆங்கில அறிவும் (அவனுக்குத் தான் சுத்தமாக தமிழே தெரியாதே.) இருந்தால் போதும்!’ என்று சொல்லி விட்டாள் காயத்ரி.
பாரிஸ்டர் வருண் கிங்ஸ்லிக்கு முகம், கண், உதடு, மூக்கு, ஏன்… உடம்பு முழுவதுமே நான் என்ற, “ஈகோ!’ அத்துடன் இணைந்து, அவனின் பணத்திமிரும் அட்டகாசமாக வழிந்தோடிக் கொண்டிருந்தது. பெண் பார்க்க வந்த இடத்தில், தன் முன் வைத்திருந்த பஜ்ஜி, சொஜ்ஜி இரண்டையுமே, “போர்க்’ உதவியுடனேயே தின்று தீர்த்தான்.
இங்கிலாந்து பற்றி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பற்றி, ஆல்ப்ஸ் மலை பற்றியெல்லாம் பேசி அறுத்தான்.
ஒரு வழியாக புறப்படத் தயாரான போது, அவள் அப்பாவிடம், “மிஸ்டர் ஜெகன்… நான் உங்கள் மகளுடன் தனியாக ஒரு சில நிமிஷங்கள் பேச வேண்டும்…’ என்று சொல்லி கொண்டே, பக்கத்து ஹாலுக்குள் நுழைந்தான்.
இதைக் கேட்ட பெண்ணின் அம்மாவின் முகத்தில் ஏக கலவரம். அப்பா சற்றே துணுக்குற்று பெண்ணைப் பார்க்க, பாரிஸ்டரின் அம்மா அசடு வழிய, எந்தவித பாதிப்புமின்றி தாரா பக்கத்து அறைக்குள் நுழைந்தாள்.
அவளை உட்காரச் சொல்லிவிட்டு, தானும் மிக இயல்பாக அவள் பக்கத்தில் அமர்ந்தான். ஒரு சிகரெட்டை உருவி பற்ற வைத்து, ஒரு இழுப்பு இழுத்தான்…
“எனக்கு இந்த நாற்றம் எல்லாம் ஒத்துக் கொள்ளாது…’ என்று எழுந்தவளிடம், “சாரி… நீங்கள் உட்காருங்கள்…’ என்று சொல்லிவிட்டு, ஜன்னலருகில் போய் நின்று கொண்டான்.
“மிஸ் தாரா… இந்த பத்து நிமிஷ களேபர கூட்ட டிராமாவில், நாம் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது என்பது நடவாத காரியம்… ஆகையால், நாளை நீங்களும், நானும் ஊட்டிக்கோ, கொடைக்கானலுக்கோ போய் இரண்டு நாள் தங்குவோம். நாம் நெருங்கிப் பழகி, ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொண்டு, எதிர்காலத்தில் ஒரு ஆதர்ச தம்பதியாக வாழ, இந்த அணுகுமுறை நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். சரியா?’ என்றான்.
அவள் இந்தப் பேச்சைக் கேட்டு அதிரவில்லை.
“மிஸ்டர் வருண் கிங்ஸிலி… ஒரு பாரிஸ்டர் என்ற முறையில் உங்களுக்கு மிகவும் அழுத்தமான நினைவுகள் வேண்டும். ஆனால், அந்த ஞாபக சக்தி என்பது உங்களிடம் ஒரு அணு அளவு கூட இல்லை என்பது இப்போது எனக்குப் புரிகிறது…
“ஐ அம் ரியலி சாரி பார் யூ… இப்போது நீங்கள் இருப்பது இந்திய மண்… நீங்கள் பெண் கேட்டு வந்திருப்பது, தென்னிந்தியாவிலுள்ள ஒரு சின்ன ஊரில் வசிக்கும் பாரம்பரியமும், ஆசாரமும் மிகுந்த குடும்பம்… இந்த சின்ன விஷயத்தைக் கூட மறந்து விட்டு, நம் கலாசாரத்திற்கு முற்றிலும் மாறுபட்ட, விபரீதமான இப்படியொரு எண்ணத்தை வெளியிட…’ இடை வெட்டினான் வருண்.
“ஏன்… இதிலென்ன தப்பு மிஸ் தாரா?’
“உம்… தப்பொன்றுமில்லை. ஆனால், இப்படி பெண் பார்க்க வரும் ஒவ்வொருவருடனும் தங்கள் பெண்ணை இரண்டு நாட்கள் அவனுடன் வெளி ஊருக்கு அனுப்பி வைக்கும் இந்த பண்பு, நாகரிகம் பற்றி என் காட்டுமிராண்டி பெற்றோருக்கு ஒன்றும் தெரியாது!’ என்றாள்.
“அதனால்… இட் இஸ் ஸ்நாபி…’ முகம் சிவக்க குமுறினான் அவன்…
“மிஸ்டர் வருண் கிங்ஸ்லி… ப்ளீஸ் கெட் அவுட்…’ என்றாள் அடிக்குரலில். “வாட் யூ சிட் ஆப் எ கேர்ள்…’ ஏளனமாய் அவளை முறைத்து விட்டு, வெளியேறினான்.
அவளின் புத்திசாலித்தனத்தில் ஏராளமான நம்பிக்கையுள்ள அவள் அப்பா, அவளைப் பார்த்து மெலிதாக புன்னகைத்து விட்டு, ஒன்றுமே நடக்காததைப் போல், “ஹிண்டு’வைப் பிரித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்…
பேட்டிக்கான அடுத்த எண்ணைச் சுழற்றினேன்.
மணி அடிக்க… அதைத் தொடர்ந்து, “”கங்காதர் ஹியர்…” என்ற குரல்.
“”மிஸ்டர் கங்காதர்… நான் தான் தாரா ரவி பேசுகிறேன்…”
கங்காதரின் அகல நெற்றியில் நீள நீளமாய், வரி வரியாய் சிந்தனை கோடுகள் நெளிய, தன் விஞ்ஞான மூளையை சற்று அதிகமாகவே குடைந்து கொண்டார். பின் சட்டென்று, புரிந்து, “”எப்டீம்மா இருக்கீங்க? எங்கிருந்து பேசறீங்க?” கேட்ட குரலில் ஏகமாய் தளர்ச்சி. “”நான் இங்கே சிட்டிலேர்ந்து தான் பேசுறேன்… நீங்க எப்டீ இருக்கீங்க?”
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் பெருமூச்சுத்தான் பதிலாகக் கிடைத்தது…
“”ஏன்… என்ன ஆச்சு மிஸ்டர் கங்காதர்?”
“”என்ன ஆகலேன்னு கேளுங்கம்மா… நான் பண்ணின ஆராய்ச்சிகள் கொஞ்சமா, நஞ்சமா? எத்தனை இடையூறுகளைத் தாண்டி, எலிகளை வைத்து ஆராய்ச்சி பண்ணி கேன்சருக்கு மருந்து கண்டுபிடித்தேன்…’ பாம்புகளை வைத்து ஆராய்ச்சி பண்ணி, எய்ட்சுக்கு நிவாரணம் கண்டுபிடித்தேன்… ஆனால், ஆனால் மனைவிங்கறவளை வெச்சு எப்படி ஒழுங்கா குடுத்தனம் பண்ணனும்கற ஆராய்ச்சி மட்டும் பண்ணத் தெரியல்லேம்மா… அதனாலே, அவளும், “எலியோடையும், பாம்போடையும் குடித்தனம் பண்ணத் தான் நீ லாயக்கு…’ன்னு சொல்லிவிட்டு போயிட்டாம்மா.
“‘இப்போ நான் ஒரு தனிக்கட்டை… என் விஞ்ஞான அறிவு, வாழ்க்கைக்கு உதவவில்லை தாரா… எனக்கு இதமாக, என் உணர்வுகளுக்கு இதமாக… என்னுடன் உள்ளார்ந்த அன்பை பரிமாறிக் கொள்ள, என் வாழ்க்கையை ஒரு பூந்தோட்டமாக, ஒரு மனைவியால் தான் முடியும் என்பதை இப்பதாம்மா உணர்றேன்,” என்று வருந்தினார்.
“நாளைக்கு பெண் பார்க்க வரப் போகிற பையன், ஒரு பெரிய சயன்டிஸ்ட்… பிரமாதமாய் ஆராய்ச்சியெல்லாம் பண்ணியிருக்கான்… வீடு கொள்ளாத அளவு மெடல்களும், கேடயங்களும் வாங்கி குவித்திருக்கான். கல்யாண மார்க்கெட்லே இந்தப் பையனுக்கு ஏக டிமாண்ட்…’
தரகர் இப்படித்தான கட்டியம் கூறி, அந்த விஞ்ஞானியை மறுநாள் சாயங்காலம் அழைத்து வந்தார்… மிக தடிமனான சோடா பாட்டில் கண்ணாடி முகத்தை அலங்கரிக்க, சற்றே கூன் விழுந்த முதுகை பின்னால் கோர்த்துக் கொண்ட கைகள் அணைக்க… ஒரு, மிலிடரி பரேடில் ஸ்லோ மார்ச் பண்ணுவதைப் போல் மெதுவாக அளந்து அளந்து அடி எடுத்து வைத்து, உள்ளே நுழைந்தவரைப் பார்த்து…
“இந்த வாத்துநடை கூட ஒருவித ஆராய்ச்சியோ என்னவோ…’ என்று அந்த பெண் தன்னுள் சிரித்துக் கொண்டது… அப்புறம் டிபன் வந்தது… அந்த வருண் கிங்ஸ்லியைப் போல் பஜ்ஜியை, “போர்க்’ மூலம் வெட்டி சாப்பிட வில்லை. பஜ்ஜியை எடுத்து உருட்டி, திருகி, கவிழ்த்தி, நிமிர்த்தி, உற்று நோக்கி, பின் சட்டென்று பழம் நறுக்கும் கத்தியால் அதை நேர்கோணத்தில் இரு கூராக்கி சாப்பிட்டார்.
பெண்ணின் பக்கம் திரும்பி, “மிஸ் தாரா… நீங்க சயன்ஸ் குரூப்பா?’
“இல்லை… எக்கனாமிக்ஸ்…’ என்றாள்.
“மிஸ்டர் ஜெகன்… யூ ஹேவ் வேஸ்டட் யுவர் டாட்டர்… எனக்கு மனைவியாகப் போகிறவள் சயன்ட்டிஸ்ட்டாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் ஆசை… சமையலறையில் உட்கார்ந்து கொண்டு உப்பு, புளியுடன் மன்றாடுவதை விட, என் ஆராய்ச்சி கூடத்தில் என் ஆராய்ச்சிக்கு உதவ, என்னுடன் ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சிகளைப் பற்றி விவாதிக்க, ஒரு துணை தேவை… அந்தத் துணை என் மனைவியே என்றால் எனக்கு எத்தனை பெருமை… ஐ அம் ரியலி சாரி பார் யூ மிஸ்… யூ ஹேவ் பீன் வேஸ்டட்… இந்த எக்கனாமிக்சினால் உங்களுக்கு என்ன பிரயோஜனம்?’
இப்படித்தான் மிக நீளமாகத் தன் பிரஹஸ்பதித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தான் அந்த விஞ்ஞானி ரமேஷ் கங்காதர்… இடைவெட்டினாள் அவள்.
“மிஸ்டர் கங்காதர்… ஒரு பிரபல ஆராய்ச்சி புலியாகிய நீங்கள்… ஒரு சயன்ஸ் மேதை தான், தனக்கு மனைவியாக வர வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கும் நீங்கள், பின் எப்படி என்னை பெண் பார்க்க வந்தீர்கள்? “யூ ஆர் வேஸ்டட்…’ என்று புலம்புகிறீர்களே… இப்போது இந்த விசிட்டால் நீங்கள் தான் உங்கள் நேரத்தையும் வீணடித்து, எங்கள் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது புரிகிறதல்லவா?’ என்று கோபமாக கேட்டார்.
தன் சோடா பாட்டில் கண்ணாடி வழியாக அவளை உஷ்ணமாக எரித்து விட்டு வெளியேறினான் அந்த விஞ்ஞானி. அவள் அப்பாவின் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. வழக்கப்படி அவள் பாட்டியும், அத்தையும் மல்யுத்தத்தில் இறங்க… அவள் அம்மாவின் கண்களில் கங்கை!
முகமெல்லாம் குறும்பு கொப்பளித்து வழிந்தோட அடுத்த எண்ணைச் சுழற்றினேன். மணி அடித்தது,
“”ஹலோ…” குரலில் ஏகமாய் கம்பீரம்… அதனூடே ஒரு மென்மை மின்னியது என்னவோ சத்தியம்.
“”நான் தான் தாரா ரவி பேசறேன்… நீங்க எப்டீ இருக்கீங்க?” அந்த வருண்… கங்காதர் போல் யாரிவள் என்று வருந்திக் கொள்ளாமல் சட்டென்று புரிந்து கொண்டு விட்டவரைப் போல், “”நான் நல்லா இருக்கேன்… எனக்குத் தலைக்கு மேலே வேலை கெடக்கு… என் அப்பா, அம்மா பேச்சைக் கேட்டு ஒரு பொறுப்பில்லாத பொண்ணை கட்டிக்கிட்டதாலே இப்ப ரொம்பவும் அல்லாடிக்கிட்டு இருக்கேன். எனக்கு அரட்டை அடிக்க எல்லாம் நேரமில்லை. போனை வெச்சுருங்க… இன்னொரு நாளைக்கு சாவதானமா அரட்டை அடிக்கலாம்,” என்று போன் துண்டிக்கப்பட்டது.
போனில் பேசும்போது, மறுமுனையில் ஒரே சப்தம்… சிறு குழந்தைகளின் சிணுங்கல்கள்… சின்ன சின்ன அடிதடி… ஏதோ வெளிநாட்டு பாஷைகளில் பேச்சு வார்த்தைகள்…
அந்த வருண்… கங்காதர் போலல்லாது இந்த மனிதருக்கு மிகத் தரமான வாழ்க்கை அமைந்திருக்கிறது போலும்… அதான் பேச்சில் இத்தனை தோரணை… செழுமை…
அறிவிப்பு, அமர்க்களம் ஏதுமின்றி அந்த சாதுப் பையன் தன் அப்பா, அம்மா, சகோதரர், சகோதரிகள் என்று அரை டஜன் நபர்களுடன் வந்தான்… படு அப்பாவித்தனமான அழகு மூஞ்சி… “எனக்கு அலட்டல் தெரியாது… அடாவடித்தனம் தெரியாது… நான் ஒரு கொட்டில் பசு…’ என்ற நடை உடை பாவனை.
“ஏம்மா… பையன் பரம சாதுவா இருக்கானே… உன் வாய்க்கும், கைக்கும் இவன் சரிப்படுமா?’ என்ற சந்தேகப் புயலை எல்லாரும் கிளம்பினர். அந்த சாதுப் பசு, பெண் இருக்கும் பக்கம் தப்பித் தவறிக்கூட திரும்பவில்லை… “ஏண்டா… பெண் பார்க்க வந்துட்டு நீ பாட்டுக்கு டிபனை ஹதம் பண்ணினா எப்டீ? பெண்ணை நன்னா நிமிர்ந்து பார்த்து, இரண்டு வார்த்தை பேசேன்…’ அந்த பசுவுடன் வந்த கூட்டம் இப்படியெல்லாம் அதை கிண்டல் செய்த பின்னும் கூட, அது, அவள் பக்கம் திரும்பவே இல்லை…
எது எப்படியோ அவள் முகத்தில் பூத்த அந்த சின்ன சிரிப்பில் மூழ்கியிருந்த அர்த்தம், அவள் அப்பாவிற்கு புரிந்து விட்டது… அடுத்த வாரமே கொட்டில் பசுவை தன் மருமகனாக்கிக் கொண்டார்.
அவளை கைப்பிடித்த வேளை என்று தான் சொல்ல வேண்டும். அந்த காராம் பசு, உத்யோக ஏணியில் படிப்படியாக உயர்ந்து, மிகப்பெரிய அரசாங்கப் பதவிகளை, மிகச் சிறந்த முறையில் பணியாற்றி, உலக அரங்குகளிலும் புகழ் கொடி நாட்டி விட்டு, தற்போது பணியிலிருந்து ஓய்வு பெற்று, இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன…
அவர்களின் மணவாழ்க்கையும் எந்தவித சலசலப்புமின்றி மிக இனிமையான வசந்தங்கள் நிரம்பப் பெற்றது தான்… ஆசைக்கு இரண்டு பெண்கள்… ஆஸ்திக்கு இரண்டு ஆண்கள்.
நாளை மறுநாள் அவர்களின் சஷ்டியப்த பூர்த்தி. தங்கள் பெற்றோரின் சஷ்டியப்த பூர்த்தியை மிக விமரிசையாக கொண்டாட வேண்டும் என்ற பிடிவாதத்துடன் தங்கள் குடும்பத்துடன் வந்து ஒன்று கூடி இருக்கின்றனர் அவர்களின் குழந்தைகள்… கல்யாண களை கட்டி வீடே திமிலோகப்பட்டுக் கொண்டிருந்தது… மருமகன்களும், மருமகள்களும், மணமக்களை ஆளாளுக்கு சீண்டிக் கொண்டிருந்தனர்..
“மம்மி… உங்களது லவ் மேரேஜா?’ மூத்த மருமகன் மாமியாரைப் பார்த்துக் கேட்டதும், மனமெல்லாம் சந்தோஷ ஊற்றெடுக்க, “ஊக்கும், போயும் போயும் உன் மாமனாரை லவ் பண்ணும்படியாக என் ரசனை ஒன்றும் அத்தனை மோசமில்லை…’ என்றாள்.
நிஜமாகவே வியர்த்துப் போன மருமகன், “அப்படியா… ஹவ் டிட் ஹேப்பன்?’ குரலில் தான் என்னவொரு ஆதங்கம்?
“மம்மி… நீங்கள் வேறு யாரையாவது லவ் பண்ணினீர்களா?’ மிக அக்கறையாக தூண்டில் போட்டாள் இரண்டாவது மருமகள். மணப்பெண் சற்றும் பதறவில்லை. “உம்… நான் லவ் பண்ணி என்னடா பிரயோஜனம்? ஒரு பாவமும் அறியாத என் தலையில் இவரை என் பெற்றோர் கட்டி வைத்து, தங்கள் வன்மத்தை தீர்த்துக் கொண்டனர்!’ என்றாள்.
“பாவம் மம்மி நீங்க… என் கதையைப் போல் தானிருக்கிறது உங்கள் கதையும். போத் ஆப் அஸ் ஆர் செயிலிங் இன் தி ஸேம் போட். இனி வருந்தி என்ன பயன்? நீங்கள் உங்கள் காதலர்களை எப்போதாவது சந்திப்பதுண்டா? அட்லீஸ்ட் போனிலாவது பேசிக் கொள்வீர்களா?’ என்று கேட்டதும், சட்டென்று மணப்பெண் தாராவின் மனதில் உல்லாச அலைகள்…
ஏன்… இவள் சொல்வதைப் போல் பேசிப் பார்த்தால் தான் என்ன… இது ஒரு வித்தியாசமான பேட்டி… ஒரு வினோதமான அனுபவமும் கூட. இந்த கொட்டில் பசுவிற்கு முன், தன்னைப் பெண் பார்க்க வந்த இருவரும்… “யூ சிட் ஆப் எ கேர்ள்…’ என்று தன்னை முறைத்த அந்த வருண் கிங்ஸ்லி என்ற பாரிஸ்டர்… “யூ ஆர் வேஸ்டட்…’ என்று ஆருடம் கூறிய சயன்டிஸ்ட் ரமேஷ் கங்காதர்… இன்று, அந்த பிரபலங்கள் இருவருமே அதே ஊரில் தான் இருக்கின்றனர் என்பதால், சட்டென்று டெலிபோன் டைரக்டரியிலிருந்து அவர்கள் நம்பரை எடுத்து தொடர்பு கொண்டாள்.
“”என்னடா தாரா இது? வீட்டில் இத்தனை விருந்தாளிகளை வைத்துக் கொண்டு உனக்கு ஏண்டா இந்த வயதில் சில்மிஷம்? பல வருஷங்களுக்கு முன் அவர்கள் உன்னைப் பெண் பார்க்க வந்தபோது, கல்மிஷமில்லாத மனசோடு, உன்னிடம் மிக யதார்த்தமாக இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டனர் என்பதை இன்னுமா நீ மறக்கவில்லை? வேலை மெனக்கெட்டு, அவர்களை போன் பண்ணி, அவர்களின் ரணங்களைக் கீறிப் பார்ப்பதில் உனக்கு என்னடா டார்லிங் லாபம்?” என்று சற்றே படபடத்தார் கொட்டில் பசு ரவி.
“”ஐய்யோ ரவி… இந்த ஐடியாவை எனக்குக் கொடுத்ததே உங்கள் மருமகள் தான்.. நானும் ஒரு தமாசுக்காக, ஒரு க்யூரியாசிடியால் தான் போன் பண்ணினேன். இப்படி இவர்கள் இருவருமே தோல்வியைத் தழுவிக் கொண்டு நிற்பர் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை ரவி… ப்ளீஸ்… என்னை நம்புங்கள்.”
“”டாடி… மம்மி மேலே தப்பே இல்லை. நான் தான்…” என்ற மருமகளை, “உஷ்’ஷால் இடைவெட்டி, “”தாரா… கெட் மி வருண் ஆன் தி லைன்…” என்றதும், மாமியாரும், மருமகளும் படு டென்ஷனாகிப் போயினர்.
வருண், “ஹலோ…’ என்றதும், “மிஸ்டர் வருண்… ஐ அம் ரவி… தாரா’ஸ் ஹஸ்பெண்ட்…” என்றார்.
“”பத்து நிமிஷத்திற்கு முன் தான் தாரா என்னிடம் பேசினார். அந்த அதிர்ச்சியான சந்தோஷத்திலிருந்து நான் மீள்வதற்குள், மற்றுமொரு இன்ப அதிர்ச்சி. இந்த எதிர்பாராத இரட்டை சந்தோஷங்களுக்கு நான் இறைவனுக்குத் தான் நன்றி சொல்லணும் மிஸ்டர் ரவி!”
“”மிஸ்டர் வருண்… நாளை மறுநாள் என்னுடைய அறுபதாவது பிறந்த நாள்… என் வீட்டிலிருந்து இதில் கலந்து கொள்ள யாருமில்லையாதலால், மணமகன் ஒரு அனாதை என்ற கேலிப் பேச்சிற்கு ஆளாகிப் போயிருக்கிறேன்… ஆகையால், தயவு செய்து நீங்கள் என் சகோதரன் என்ற உரிமையான உறவில், இதில் பங்கெடுத்து, என்னை கவுரவிக்க வேண்டும். இது என் அன்புக் கட்டளை,” என்றார்.
“”வித் பிளஷர் மை பிரதர்!” என்றார் வருண். அதே போல் கங்காதரும் ஒரு சகோதரனாக பங்கெடுத்துக் கொள்ள ஒப்புக் கொண்டார்.
மறுநாள் சாயங்காலமே இருவரும் வந்துவிட்டனர். “”மாப்பிள்ளை வீட்டார் வந்தாச்சு. எல்லாரும் வாசலில் வந்து அவர்களை வரவேற்கணும்,” என்று ரவி உற்சாகத் துள்ளலுடன் வாசலை நோக்கி விரைய… எங்கள் குடும்பம் ஒட்டு மொத்தமாய் அவரைத் தொடர்ந்தோம்.
“”வெல்கம் ஹோம்,” என்று, அவர்களை ஆரத் தழுவி வரவேற்றார். என்னை அறிமுகப் படுத்தியதும், நான் என் வலக்கரம் நீட்டி கைகுலுக்க முயன்ற போது, என் கரங்களை பற்றிக் கொண்ட வருண், “”தாரா… உன் பெற்றோர் இதற்கு எதிர்ப்புச் சொல்ல மாட்டார்கள் அல்லவா?” என்று கண்ணடிக்க, “இவரும், அந்த நாளை நினைவில் பத்திரமாய் இருத்திக் கொண் டிருக்கிறார் போலும்…’ என்று நினைத்தேன்.
இருவருமே மிகவும் தளர்ச்சியடைந்து விட்டிருந்தனர். பாவம், விதியால் வஞ்சிக்கப்பட்டவர்கள். என் நெஞ்சு வலித்தது.
“”இவள் என் மூத்த மகள் காமாட்சி. இவளின் கணவர் சையில் மோபுடூ என்று தன் ஆப்ரிக்க மருமகனை அறிமுகப்படுத்தினார்… இவன் கல்யாண், அடுத்தவன் வெங்கிட சுப்பிரமணியன், இவன் மனைவி மிஞ்சூடு÷ஷாடா… ஜப்பானிய இறக்குமதி… இது வெங்கிட்டுவுக்கு அடுத்த நாராயணஸ்வாமி… இவன் மனைவி கோனீ – வாங்க் சீனத்து இறக்குமதி… இவள் கடைக்குட்டி மங்களம்… இன்னும் திருமணமாகவில்லை… தனக்கு கணவன் கிடைத்த மாதிரி தன் மகளுக்கும் யாராவது ஒரு ஏமாந்த சோணகிரி பையன் கிடைக்கமாட்டானா என்று இவள் அம்மா வலைவிரித்துக் கொண்டிருக்கிறாள்…” என்று ரவி சொன்னது தான் தாமதம்.
“”நாங்கள் ரெடி… என்ன சொல்றே தாரா?” என்று இருவரும் ஒரே நேரத்தில் குரல் எழுப்பி, “”யூ வருண்… நீ விலகி விடு… என்னுடன் மோதாதே…” என்று கங்காதர் சவால்விட…
“”யூ கங்காதர்… இத்தனை வருடங்கள் கழித்து தாராவிடம் இரண்டாம் முறையாக மூக்கை உடைத்துக் கொள்ளாதே… மரியாதையாக விலகி எனக்கு வழிவிடு,” என்று வருண் கோபப்பட, வீடே ஒரே கலகலப்பு மயமானது.
எங்களைச் சுற்றிலும் சின்னச் சின்ன சுருட்டை முடியும், தடித்த உதடுமாய், கறுப்பாய் கொஷுக் முஷுக்கென்று இரண்டு மூன்று சிட்டுக்குருவிகள்… கீற்று கண்களும் சப்பை மூக்குமாய் நாலைந்து சிற்றாற்றுப் பறவைகள், எல்லாமா போர்க்களத்தில் இறங்கியிருப்பதை பார்த்த இருவரும், “”அவர் கிராண்ட் சில்ரன்,” என்று கை வழிய வழிய அவைகளை அள்ளி மாறி மாறி முத்தமாரி பொழிந்தனர்…
அவர்கள் கண்களில் கசிவு… இந்த கசிவு சந்தோஷ கசிவு… சத்தியமா பொறாமை கசிவு அல்ல. “”தாரா… வி ஆர் வெரி கிரேட் புல் டூ யூ… நீ மட்டும் எங்களுக்கு போன் செய்திருக்காவிடில், நாங்கள் எங்கள் வாழ்க்கையின் சந்தியா காலத்தில் ஒதுங்க இப்படியொரு நெகிழ்வான, குளுமையான நிழல் கிடைத்திருக்குமா? எங்களின் மேல் அன்பை வர்ஷிக்க இதோ எங்களுக்கு ஒரு ஆப்ரிக்க மருமகன்… அவருக்கு இணையாக அன்பு செலுத்த ஒரு சீனத்து மருமகள்… போட்டி போட்டுக் கொண்டு எங்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கும் சின்னச் சின்ன தெய்வ குழந்தைகளாய் இந்த பேரன் பேத்திகளின் கூட்டம்… இதையும் விட எங்களுக்கு வேறு என்ன வேண்டும்?”
வருண் பேசப் பேச, ஆதரவாக அவர்கள் இருவரையும் அணைத்துக் கொண்டார் என் கணவர்.

– அக்டோபர் 2010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *