(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நவராத்திரி காலத்தில் ஸம்பாதிப்பது தான் உருப்படியாக நிற்கும். ராத்திரி பகலென்று பாராமல் உழைத்தால் பலனுண்டு. அவளுக்கு அவளுடைய கைதான் சொத்து. தன்னுடைய கைத்திறமையினால் அவள் ஜீவித்து வந்தாள். அவள் புருஷன் இருந்த காலத்தில் அவள் இருந்த நிலையே வேறு ; இப்போது இருக்கும் நிலையோ வேறு. ஆனால் இரண்டு காலங்களிலும் அவள் மனம் வைத்து உழைப்பதில் மாத்திரம் வஞ்சகம் செய்வதில்லை. மண் பொம்மைகளைச் செய்து வர்ணம் பூசி விற்று ஜீவனம் பண்ணி வந்தாள். அவளுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டி நிற்பவன் அந்தச் சிறு குழந்தை வேலன் ஒருவன் தான். அவன் ஒரு வயசாக இருக்கும் போது அவன் தந்தை இறந்து போனான். இப்போது அவனுக்கு அப்பாவைப்பற்றி ஒன்றும் தெரியாது. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அம்மா வுக்குள் அடங்கியிருக்கிறதென்பது அவன் நம்பிக்கை.
குப்பம்மாள் இந்த நவராத்திரியில் கொஞ்சம் பணம் மிகுத்தால் தன் பையனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து இரண்டு கோணல் எழுத்து வரப் பண்ணலா மென்று எண்ணியிருந்தாள். அவனுக்கு ஐந்து வயசு நடந்தாலும் அவனுடைய சுறுசுறுப்பும் சூட்டி கையும் அவள் நெஞ்சிலே ஒரு பெருமிதத்தை உண்டாக்கின. பொம்மை பண்ணும் வீட்டில் பிறந்தால் என்ன? அவன் படித்துப் பட்டம் பெற்றுக் கலெக்டராக வரக்கூடாதா என்ன? மண் பொம்மை களைப் பண்ணிச் சாலிவாகனன் பெரிய அரசனாக வந்தானென்ற கதையை அவள் கேட்டிருக்கிறாள். ஆகையால் தன்னுடைய நம்பிக்கை ஸாத்தியமானதே என்று அவள் நிச்சயித்தாள். தன் கண்ணுக்குக் கண்ணாக வேலனை வளர்த்து வந்தாள்.
அவனுக்கும் பொம்மை பண்ணத் தெரியும். அவனுடைய ஆசையில், ஆர்வத்தில், உழைப்பில் குறைவு ஒன்றும் இராது. ஆனால் அந்தப் பொம்மை ஏதோ ஓர் உருண்டையாக இருக்கும். அதற்குக் கைகால் முகமெல்லாம் அந்தக் குழந்தையின் கற்பனை யளவிலே நின்றுவிடும். “உன் பொம்மை நன்றா யில்லை” என்று குப்பம்மாள் சொல்லமாட்டாள். ரொம்ப நன்றாயிருக்கிறது. வயது வந்தால் நீ பெரிய கெட்டிக்காரனாக ஆவாய். உன் பொம்மைக்குக் கிராக்கி ஏற்படும்” என்று சொல்வாள்; அடுத்த கணமே, ‘சீ என்ன பைத்தியக்காரத்தனம். இந்தக் கேவலமான ஜீவனம் இந்தக் குழந்தைக்குமா வரவேண்டும்? இவன் தான் படித்து உத்தியோகம் பார்க்கப் போகிறானே!’ என்று எண்ணுவாள்; அந்த எண்ணத்திலேயே ஒரு குதூகலம் உண்டாகும்.
“அம்மா, அம்மா , இதோ பார் என் பிள்ளையார்” என்று காட்டுவான் குழந்தை. அது பிள்ளையாராகவும் இராது; குரங்காகவும் இராது; வெறும் மண் உருண்டை; அதுவும் கோணல் மாணலான உருண்டை.
“நன்றாக இருக்கிறது!” என்று அம்மா சொல்வாள். அம்மாவுக்கு மேலே பெரியவர்கள் அவனுக்கு இல்லை. அதனால் அந்தத் தீர்ப்பைக் கேட்டு அவன் உள்ளம் பூரிப்பான்.
வேலன் பண்ணின பொம்மைகள் – அவனுக்கு அவை பொம்மைகளல்லவா?- நாலைந்து இருந்தன. ஒருநாள் அவன் தன் அம்மாவிடம் கொஞ்சலாகக் கேட்கத் தொடங்கினான்:
“ஏம்மா, நீ அந்தப் பொம்மைகளை வித்துட்டு வாயேன்.”
தாய்க்குச் சிறிது ஆச்சரியம் உண்டாயிற்று. “உன் பொம்மையை வித்துக் காசு வாங்கறயே; இதையும் வித்துட்டு வாயேன்.”
“ஆகட்டும் கண்ணு.”
“எல்லாப் பொம்மையும் வித்துடுவையா?”
“விற்று விடலாம்! தம்பி.”
அவனுக்கு உண்டான சந்தோஷத்தை அப்போது பார்க்க வேண்டுமே!
அவன், தினந்தோறும் சாயங்காலம் அம்மா கடைவீதிக்குப் பொம்மைகளை விற்கக் கொண்டு போகும் போது தன் பொம்மைகளையும் விற்று விட்டு வரவேண்டுமென்று வற்புறுத்தினான். அவை களை எப்படி அவள் விற்பாள்! ஏதேதோ சாக்குச் சொன்னாள். இப்படித் தாமதம் பண்ணி வருவது அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு ஒரு யோசனை தோன்றிற்று; ‘ஏன் நாமே கொண்டுபோய் விற்கக் கூடாது?’ என்று எண்ணினான்.
2
கடைவீதியில் மாலையில் அந்தச் சிறு குழந்தை தன் கையில் ஒரு காய்ந்த மண் உருண்டையை வைத்துக்கொண்டு நின்றிருந்தான். அதன்மேல் வர்ணங்கள் ஒழுங்கின்றிப் பூசப்பட்டிருந்தன. நவராத்திரி காலம். எவ்வளவோ பேர்கள் பொம்மை களை விற்றுக் கொண்டிருந்தார்கள். வேலன் ஒரு மூலையில் நின்றுகொண்டிருந்தான்.
“பொம்மை வாங்கலையா பொம்மை! பிள்ளையார் பொம்மை” என்று அவன் தன் மெல்லிய குரலில் கூவினான். யாராவது தெரிந்தவர்கள் கண்டுவிடப் போகிறார்களோ என்ற பயம் உள்ளே இருந்தது. பொம்மை வாங்க அங்கே வந்தவர்கள் அவன் கையில் உள்ளதைப் பார்த்தார்கள். அவர்களுக்குச் சிரிப்புத் தான் வந்தது.
“இது என்ன பொம்மையப்பா?” என்று அவர்கள் கேட்பார்கள். வேலன் ஏதாவது சொல்லுவான். அதைக் கேட்டு அவர்கள் சிரித்துக்கொண்டே போய்விடுவார்கள். அவர்கள் சிரிப்பதன் அர்த்தம் அவனுக்குப் புரியாது. ‘நம்முடைய அம்மாதான் இது நல்ல பொம்மையென்று சொன்னாளே; இதை ஏன் இவர்கள் வாங்கவில்லை?’ என்று அவன் எண்ணினான். உண்மைதான்; அது அவனுக்கு நல்ல பொம்மை; அவன் அம்மாவுக்கும் அழகிய பொம்மை தான். மற்றவர் கண்களுக்கு அது அப்படித் தோன்றவில்லையே!
கால் வலிக்க நின்றதுதான் லாபம்; தொண்டை வலிக்கக் கத்தியும் பிரயோஜனம் இல்லை. அந்த ஏழைக் குழந்தையின் ஆசை நிறைவேறவில்லை. வந்தவர்களெல்லாம் அந்தக் குழந்தையின் கையிலுள்ள மண் உருண்டையைத்தான் பார்த்தார்கள்; அதன் மேல் தெளித்திருந்த வர்ணக் குழம்பின் அவலக்ஷணந் தான் அவர்கள் கண்ணிலே பட்டது. அந்தச் சிறு குழந்தை தன் முழு மனத்தையுஞ் செலுத்தித் தன் ஆர்வத்தை யெல்லாம் உருட்டி அதைச் செய்திருந்தானென்று அவர்கள் உணரவில்லை. பாவம்! அவர்கள் சிரிக்கும் போதெல்லாம், அந்தக் குழந்தையின் உள்ளத்திலே ஓர் ஈட்டி பாய்ந்தது போல் இருக்கும்.
அவன் ஆசை நிறைவேறாமல் ஏமாற்றத்தோடு வீடு திரும்ப இருந்தான். அப்போது ஒரு கிழவர் அங்கே வந்தார். அவருடைய கண்கள் வேலன் கையிலிருந்த வஸ்துவை மேற்போக்காகப் பார்க்கவில்லை; ஊடுருவிப் பார்த்தன; “இது என்ன தம்பி?” என்று அவர் கேட்டார்.
“பிள்ளையார் பொம்மை; நான் பண்ணினது” என்று அழாக் குறையாக அவன் சொன்னான். அவ்வளவு நேரம் இந்த உலகத்தின் பரிகாச அலையிலே மோதுண்டிருந்த அவனுடைய உணர்ச்சி அப்போது சிறிதே வெளிவந்தது.
“அப்படியா என்ன விலை?”
இந்தக் கேள்வியை இதுவரையில் ஒருவரும் கேட்கவில்லை. குழந்தை இதற்குத் தயாராக இல்லை. ‘என்ன விலை?… என்ன சொல்வது?’ அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. குழந்தையினிடமிருந்து விடை வரத் தாமதப்பட்டது. கிழவர் காத்திருக்கவில்லை. “சரி, இதை எடுத்துக்கொள்; பொம்மையை நான் வாங்கிக்கொள்ளுகிறேன்” என்று ஒரு நாலணா நாணயத்தைக் குழந்தையின் கையிலே வைத்து விட்டு அந்தக் களிமண் உருண்டையை அவர் வாங்கிக்கொண்டார்.
வேலன் முகம் மலர்ந்தது. அவன் வாழ்க்கையில் அது ஒரு பெரிய சந்தோஷமல்லவா? தன் பொம்மை கூட விலை போயிற்று; அவ்வளவு நேரம் சிரமப்பட்டுக் காத்திருந்ததன் பலன் அவனுக்குக் கிடைத்து விட்டது. ஒரே ஓட்டந்தான்!
“அம்மா! அம்மா! வித்துட்டேன். இதோ காசு!” என்று அம்மா கையிலே காசைக் கொடுத்தான் அவன்.
குழந்தையைக் காணவில்லையே என்று வருத்தப் பட்டுக்கொண்டிருந்த அவளுக்கு அவனுடைய வேகமான வார்த்தைகள் விளங்கவில்லை. அவன் சொல்லச் சொல்ல அவளுக்கு லேசில் நம்பிக்கை உண்டாகவில்லை. ‘இதைப் போய் யார் வாங்கிக் கொள்வார்கள்?’ என்று அவள் நினைத்தாள். ‘ஆனால், இவனுக்குக் காசு ஏது?’ – இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லை.
“என் கண்ணே, உன் பொம்மையை வாங்கினவர் யார்?” என்று கேட்டாள்.
“யாரோ தாத்தா வாங்கினார் அம்மா” என்றான் அவன்; “நாளைக்குக்கூடப் போய் வித்துட்டு வரப் போகிறேன்” என்று சொல்லி ஒரு குதி குதித்தான்.
மறுநாள் மாலையில் அவன் தான் செய்த ராசா பொம்மையைக் கொண்டு போனான். முதல் நாள் வந்த கிழவர் அன்றும் அந்தப் பொம்மையை வாங்கிக் கொண்டு சென்றார். அன்று குப்பம்மாள் தன் குழந்தை உண்மையிலேயே பொம்மையை விற்று விட்டுத்தான் வருகிறானென்பதை உணர்ந்தாள். ‘இந்தக் குழந்தை கைராசியுடையவன். தன்னுடைய மண் உருண்டைக்கு நாலணா வாங்குகிற இவன் நம்முடைய அழகிய பொம்மைகளுக்கு நல்ல கிராக்கி கொண்டு வருவான்’ என்று அவளுடைய மனத்தில் ஓர் ஆசை உண்டாயிற்று. படிக்க வைக்கிறதையும் உத்தியோகம் பார்க்கிறதையும் அப்போதைக்கு அவள் மறந்துவிட்டாள். தன் பொம்மைகளை அவன் சாயங்காலம் விற்கிறதும், வாங்குகிறவர்கள் அவனுக்காக நிறையப் பணம் கொடுக்கிறதும், அதனால் அவள் பணக்காரியாகிறதுமாகிய மனோராஜ்யத்தை அவள சிருஷ்டி செய்தாள்.
“தம்பி, நாளைக்கு நான் ஒரு பொம்மை தருகிறேன். அதைக் கொண்டு போய் விற்றுவிட்டு வா. அந்தக் கிழவருக்கே கொடு. நிறையக் காசு கிடைக்கும்” என்றாள் குப்பம்மாள். குழந்தை சம்மதித்தான்.
3
மாலை வேளை. தன் குழந்தைக்கு நன்றாக வேஷ்டியைக் கட்டிக் கையிலே அழகிய ராணி பொம்மை ஒன்றைக் கொடுத்துக் கடைவீதிக்கு அனுப்பினாள் குப்பம்மாள். அவன் புறப்பட்டுப் போனபிறகு அவள் மனம் படபடத்துக்கொண்டிருந் தது; “அரை ரூபாய்க்கு மோசமில்லை” என்று அவள் நிச்சயமாக நம்பினாள். தன் குழந்தை அந்தப் பொம்மையை ஒரு கிழவருக்கு விற்பது போலவும், அவர் ஒரு ரூபாயைக் கொடுப்பது போலவும், நாளைக்கு நிறையக் கொண்டுவாவென்று அவர் சொல்வது போலவும் அவள் கனவு கண்டாள். தன் குழந்தை விற்றுவிட்டு வரும் வரையில் காத்திருக்கும் பொறுமை அவளிடம் இல்லை. அந்தக் காட்சிகளை நேரிலே பார்க்கவேண்டுமென்ற ஆத்திரம் அவள் நெஞ்சில் அடித்துக்கொண்டது. அவளும் கடைவீதிக்குப் புறப்பட்டாள். தன் மகனுக்குத் தெரியாமல் ஒரு மறைவிடத்தில் நின்று கொண்டு அவனைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
வேலன் பொம்மையை எவ்வளவோ பேர் பார்த்தார்கள்; சிலர் கேட்டார்கள். அம்மா சொல்லியபடி அவன் அந்தக் கிழவரை எதிர்பார்த்திருந்தான். ஆதலால் வேறு யாரிடமும் அவன் கொடுக்கவில்லை. அன்றைக்குக் கிழவர் தாமதமாகவே வந்தார். வேலன் கையில் அழகிய ராணி பொம்மை இருப்பதைக் கண்டார்.
“தாத்தா, இந்தப் பொம்மையை வாங்கிக்கொள்ளுங்கோ” என்றான் வேலன்.
அவர் அதை நன்றாக உற்றுப் பார்த்தார். “தம்பி, இது நீ செய்தது அல்லபோல் இருக்கிறதே; யார் செய்தார்கள்?”
“எங்கம்மா பண்ணினது.”
“இதை நீ ஏன் எடுத்துக்கொண்டு வந்தாய்?”
“எங்கம்மா கொண்டு போகச் சொன்னாள்.”
“அப்படியா! இது உன் பொம்மையைப் போல் அழகாயில்லை. எனக்கு இது வேண்டாம். உங்கள் அம்மாவிடம் கொடுத்துவிடு” என்று சொல்லிவிட்டுக் கிழவர் மேலே நடந்தார்.
பையனுக்கு வருத்தம் சிறிதும் இல்லை. ஓட்டமாக வீட்டிற்கு வந்தான். அவன் தாய் முன்பே வந்துவிட்டாள். அவள் முகத்தில் ஈயாடவில்லை. “அம்மா, உன் பொம்மை நல்லா இல்லையாம். என் பொம்மைதான் நல்லா இருக்குதாம். இது வேணாமாம். தாத்தா சொன்னார்” என்று சொல்லிக் கொண்டே பொம்மையைக் கீழே வைத்தான். அவனுடைய முகத்திலே கர்வக் குறி தோன்றியது.
“நன்றாகவா இல்லை?” என்று அவள் கேட்டாள். அந்தத் தாத்தா ஏன் அப்படிச் சொன்னாரென்று அவளுக்கு விளங்கவே இல்லை; என்றும் விளங்கப் போவதும் இல்லை.
– கலைஞன் தியாகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 1941, கலைமகள் காரியாலயம், சென்னை.