நதியின் ஓட்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 19, 2022
பார்வையிட்டோர்: 4,031 
 
 

கோமதி அம்மன் உடனுறை மகாலிங்க சுவாமி கோயிலில் வைத்து சௌந்திரம் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டான் கோதண்டம். உறவினர்கள் அனைவரும் வாழ்த்தினர்.

கோதண்டத்தின் மதினி அழகம்மாள் உறவினர்கள் மத்தியில் மிகவும் ஜபர்தஸ்தாக இருந்தாள். அண்ணன் அருணாசலம் எப்போதும் போல அமைதியாக சிரித்தபடி இருந்தான்.

கோயிலில் திருமணம் முடிந்து அவர்கள் வீட்டிற்கு சென்றனர். மதிய விருந்து முடிந்ததும் சில உறவினர்கள் கிளம்பி விட்டார்கள்.

சௌந்தரத்தின் சித்தி சுப்புவும் அப்பா சுந்தரமும் தம்பி பிரபுவும் மற்றும் சில உறவினர்கள் மட்டுமே இருந்தனர்.

கோதண்டத்திற்கு மதினி இத்தனை தன்மை யாக இருப்பது அதிசயமாக இருந்தது. அம்மா அப்பா இல்லாமல் அண்ணன் அருணாசலத்தின் அன்பினில் வளர்ந்தவன். ஆனால் மதினி அழகம்மாள் வந்த பிறகு அவள் வைத்தது தான் சட்டம்.

அருணாசலம் மனைவிக்கு எதிராகப் பேசமாட்டான். என்றாலும் அவள் கண் காணாத நேரங்களில் தம்பியை நன்றாக கவனித்துக் கொண்டான்.

முதலிரவு முடிந்து கல்யாணத்திற்கு மறுநாள் அனைவரும் அவரவர் ஊர் சென்று விட்டார்கள். அதன் பிறகு அழகம்மாள் தன் சுயரூபத்தைக் காட்டலானாள்

சௌந்தரத்தை அனைத்து வீட்டு வேலைகளையும் செய்ய வைத்தாள். கல்யாணம் முடிந்த வீடு ஆகையினால் பாத்திரம் தேய்ப்பது, வீடு ஒழுங்கு செய்வது என நல்ல வேலை வாங்கினாள்.

கோதண்டமும் வாடகைக்கு எடுத்த நாற்காலிகள் ஜமுக்காளம் பாத்திரங்களை கடைகளில் கொண்டு கொடுத்து வர அலைந்தான்.

அருணாசலம் வழக்கம் போல தனது மளிகைக் கடைக்கு காலையிலேயே சென்று விட்டான்.

சௌந்தரத்திற்கும் கோதண்டத்திற்கும் காலையில் கொடுத்தது கருப்பட்டி காப்பிமட்டுமே. சாப்பிடத் தருவாளா என்று பசியோடு இருந்தனர். மதியம் இரண்டு மணிக்கு பழைய சோறும் மோரும், நேற்று முன்தினம் கல்யாணத்தில் மீந்த காய்கறிகளை வைத்து செய்த சுண்டக் கறியும் சாப்பிடக் கொடுத்தாள்.

கல்யாணம் சமயத்தில் உறவினர்கள் அனைவரும் இருந்ததால் மதினி அவர்கள் முன் நன்றாக கவனித்து பாவலா காட்டி இருந்திருக்கிறாள். இனிமேல் பழையபடி தான் எல்லாம் என்று உணர்ந்தான். சௌந்தரத்தைப் பார்க்க அவனுக்குப் பாவமாக இருந்தது.

மதியம் மூன்று மணிக்கு அருணாசலம் வந்தான் சூடாக உணவு பரிமாறி னாள். நான்கு மணிக்கு பிள்ளைகள் பாலமுருகனும் மனோகரியும் வந்ததும் அவர்களுக்கும் உணவளித்து தானும் நன்றாக சாப்பிட்டாள்.

அருணாசலம் நான்கு மணிக்கு மீண்டும் கடைக்கு சென்று விட்டான். கோதண்டமும் சௌந்தரமும் மிகவும் களைப்பாக இருந்தனர.

அழகம்மாள் கோதண்டம் கையில் இரண்டாயிரம் ரூபாயைக் கொடுத்தாள் “இனிமேல் நீ உன் மனைவியைக் கூட்டிக் கொண்டு தனியாகப் போய்விடு.” என்றாள்.

கோதண்டம் திகைத்துப் போனான். மதினி பொல்லாதவள் என்றாலும் அண்ணனின் அரவணைப்பில் அவனுடன் மளிகை கடையில் உதவியாக இருந்தான்.

இப்போது கையில் வெறும் இரண்டாயிரம் ரூபாயுடன் மனைவி யோடு எப்படி தனிக்குடித்தனம் போவது? “அண்ணன் வந்ததும் கேட்டுக் கொள்கிறேன் மதினி” என்றான் வருத்தமாக.

இரவு பத்து மணிக்கு வீடு வந்து சேர்ந்தான் அருணாசலம். சாப்பிட்டு விட்டு படுக்க இரவு வெகு நேரம் ஆயிற்று. குழந்தைகள் தூங்கி விட்டனர் மதினி தங்களைத் தனியாகப் போகச் சொன்னதை அண்ணனிடம் கூறினான். “எங்கு போவது”.

அழகம்மாள் வீட்டிற்கு வெளியே உள்ள தார்சாவில் “நீங்கள் இருவரும் படுத்து தூங்குங்கள் “என்றபடியே சௌந்தரம் பிறந்த வீட்டு சீராகக் கொண்டு வந்து இருந்த ஜமுக்காளத்தை வீசினாள்.

அத்துடன் அவள் கொண்டு வந்திருந்த துணி சூட்கேஸ் மற்றும் அத்தியாவசிய பாத்திரங்கள் நிரம்பிய ஒரு சிறிய சாக்குப் பை அனைத்தையும்” வெளியே வைத்து க் கொள்ளுங்கள் “என எடுத்து வைத்தாள்.

அருணாசலத்திற்கு மனைவி யிடம் ஒன்றும் பேசமுடியவில்லை. ஆனால் எங்கே செல்வது என்று பாவமாக கேட்கும் தம்பியைப் பார்த்து மிகவும் கோபமான சொற்களை வீசினான்.

“உன் சேக்காளிதானே செந்திலும்? இரண்டு வருடங்களுக்கு முன்பே பட்டணத்திற்குப் போகவில்லை? இன்றைக்கு அவன் நன்றாகத் தானே இருக்கிறான்? பிழைக்க வழியா தெரியவில்லை உனக்கு? “என்றபடி அவனைப் பார்த்து உன்னோட துணிகளையும் ஒரு சூட்கேஸில் கொண்டு வந்து இங்கேயே வைத்துக் கொள்” என்றான்.

அழகம்மாள் வீட்டிற்குள் சென்று படுத்துக் கொண்டாள்.அருணாச்சலம் வீட்டிற்குள் சென்று ஒரு துணிப் பொட்டலத்தைக் கொண்டு வந்து சௌந்தரம் கையில் கொடுத்தான்.

“இதற்குள் எனது பழைய சட்டைகளும், வேஷ்டிகளும் உள்ளன. சட்டைகளை கிழிந்த இடத்தில் தைத்து அவனுக்கு கொடு” என்று உரத்தக்குரலில் கூறிவிட்டு உள்ளே சென்று கதவைத் தாளிட்டான்.

தார்சா, வீட்டின் வாசலில் எப்போதும் திறந்த நிலையில் இருக்கும். கல்யாணம் நடந்த வீடு ஆகையினால் விருந்தினர் படுத்து உறங்குவதற்காக துணிச்சீலைகளைக் கட்டி மறைக்கப்பட்டிருந்தது.

கோதண்டம் அடுத்து என்ன செய்வது என்று திகைத்தான். சௌந்தரம் ஆதரவாக அவன் கைகளை ப் பற்றி “நாமும் பட்டணத்திற்கேப் போகலாம். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை. முருகன் நமக்கு துணையிருப்பான் “என்றாள்.

சௌந்தரம் எட்டு வயதில் தாயை இழந்தாள். பத்துவயது முதல் சித்தி சுப்புவின் கொடுமையில் வாழ்ந்தாள். அப்பா சுந்தரம் வாயில்லாபூச்சியாக இருந்தாலும் மகள்மீது மிகவும் அன்புடன் இருந்தார்.

திருமணம் ஆனதும் சித்தி கொடுமையில் இருந்து தப்பிவிட்டதாக மகிழ்ச்சி அடைந்தாள். ஆனால் வந்த இடத்திலும் மச்சான் மனைவி மூலம் கொடுமைகள் தொடரும் என்பதனை ஒரே நாளில் உணர்ந்து கொண்டாள். நிம்மதியாக வாழ்வதற்கு சென்னைக்குப் போகலாம் என்று கூறினாலும் அவளுக்கும் மனதிற்குள் பயமாகத்தான் இருந்தது.

இரவு ஒரு மணிக்கு இரண்டு துணி பைகள், ஒரு சாக்குபையைத் தூக்கிக் கொண்டு ரயில்வே ஸ்டேஷன் நோக்கி நடந்தார்கள்.

சென்னைக்கு செல்லும் ரயில் அதிகாலையில் மூன்றரை மணிக்கு வந்தது. ஏறி அமர்ந்தனர். எதிரே ஒரு வயதான தம்பதியர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். இவர்களும் படுத்து உறங்கினர்.

மதியம் பன்னிரண்டு மணிக்கு கண்விழித்தாள் சௌந்தரம். கோதண்டம் ஏற்கனவே எழுந்திரித்து வயதான தம்பதியரிடம் பேசிக்கொண்டு இருந்தான்.

அவர்கள் பார்வதி அம்மாளும் அய்யாதுரை யும். ராமேஸ்வரம் புனித யாத்திரை சென்று விட்டு சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

பிரயாணத்தில் அவர்களுக்கு கோதண்டம் மிகவும் உதவிகரமாக இருந்தான். அவர்களும் கோதண்டம் மீது பரிவுகாட்டினர்.

சென்னைக்கு வந்து அவன் ஏதாவது மளிகை கடையில் இரண்டொரு நாட்களில் வேலைக்கு சேர்ந்து விடலாம். அதுவரை எங்கள் வீட்டில் இருந்து கொள்ளலாம் என்றனர்.

முருகன் தான் நம்மைப் பாதுகாக்கிறான் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் சௌந்தரம்.

சென்னை யில் போருரில் ஒரு படுக்கையறை கொண்ட தனிவீடு. வீட்டுக்கு வெளியில் மாடிப்படி. மாடியில் ஒரு அறை, கழிவறை குளியலறை யுடன்.

ஐயா துரை தனது மகன் வெளிநாட்டில் இருப்பதாகவும் எப்போதாவது இந்தியாவிற்கு வந்தால் தங்குவதற்கு தனி அறை மாடியில் கட்டியதாகவும் கூறினார். “மாடியில் நீங்கள் இரண்டு நாட்கள் தங்கி கொள்ளலாம். அதன் பின்னர் வேறு இடம் பார்த்து க் கொள்ளுங்கள்” என்றனர.

கோதண்டமும் சௌந்தரமும் அந்த ஒரு அறை வீட்டையேப் பெரிய மாளிகையாக நினைத்தனர்.

மறுநாள் காலை பக்கத்தில் உள்ள கடைகளில் வேலைக்கு கேட்டுப் பார்க்கலாம் என்று உடை மாற்றப் பையை எடுத்த பொழுது அண்ணன் கொடுத்த பழைய வேஷ்டி பொட்டலம் இருந்தது. அதனைக் கையில் எடுத்தான். அண்ணனையேப் பார்ப்பது போலவே இருந்தது. பாசத்தினால் கண்கள் கசிந்தன.

“இந்த சட்டைகளை எடுத்து கிழிசல் இருந்தால் தைத்து வை” என்று பொட்டலத்தைப் பிரித்தான்.

ஆனால் அதற்குள் புதியதாக இரண்டு வேஷ்டிகளும், புதியதாக இரண்டு சட்டைகளும்,.சௌந்தரத்திற்கும் இரண்டு விலையுயர்ந்த புடவைகள் மற்றும் அத்துடன் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் ஐம்பதாயிரம் பணமும் இருந்தது.

மதினியை எதிர்த்து அருணாசலம் ஒன்றும் செய்ய முடியாது. அவள்முன்பாக கடுமையாக பேசி வழக்கம் போல இவனை அரவணைத்து இருக்கிறான்.

அண்ணன் தன் மீது பாசமாக இருக்கிறான் என்ற நினைவே அவனுக்கு தெம்பளித்தது அதிலும் பணம் அவனுக்கு யானை பலம் கொடுத்தது.

இருவரும் குளித்து புத்தாடை அணிந்து கீழே சென்றனர்.பார்வதி அம்மாளையும் ஐயாதுரையையும் நமஸ்காரம் செய்தனர்.

“ஐயா, மாடி அறையை எங்களுக்கு வாடகைக்கு தருவீர்களா?” எனக் கேட்டு அவர்களும் சந்தோஷமாக சம்மதித்தனர். ஐந்தாயிரம் அட்வான்ஸ் மூவாயிரம் வாடகை.

அதன்பின்னர் கடை ஒன்று வாடகைக்கு வேண்டும் என்று கூறினான். ஐயாதுரையும் தெரு முனையில் ஒரு கடை காலியாக இரூப்பதாக கூறி அழைத்துச் சென்றார்.

ஐயா துரை யுடன் சென்று கேட்டதால் கடையும் அமைந்தது. பத்தாயிரம் ரூபாய் அட்வான்ஸ். ஐந்தாயிரம் வாடகை.

சிறிய கடை தான். என்றாலும் சிறுக கட்டிப் பெருக வாழலாமே. பத்தாயிரம் ரூபாய் முதல் போட்டு அண்ணன் பெயரில் அருண் ஸ்டோர்ஸ் என்று நல்ல நேரம் பார்த்து வீட்டுக்காரர்களை வைத்துக் கொண்டு ஆரம்பித்தான்.

முருகன் அருளால் கடை நன்றாக நடந்தது. முதல் குழந்தை பிறந்தான். அருண் என்று பெயரிட்டனர்.இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. சுந்தர் என்று பெயரிட்டனர்.

பார்வதி அம்பாளுக்கும் ஐயாதுரைக்கும் வயதாகி தளர்ச்சி அடைந்தனர். மகன் தன்னுடன் இருக்குமாறு அழைத்ததால் வெளிநாடு செல்ல இருந்தார்கள்.

கோதண்டம் நல்ல வசதியாக இருந்ததால் அவனுக்கே வீட்டை வாடகைக்கு விட்டு மகனுடன் சென்று விட்டனர்.

ஒரு நாள் காலை அவர்கள் வீட்டு வாசலில் ஒரு இளம் பெண் தனது மூன்று வயது பெண் குழந்தை, மற்றும் பத்து மாதம் கைக்குழந்தை யுடன் அமர்ந்து இருந்தாள்.

இரவு ஆனாலும் அவள் அங்கிருந்து போகவில்லை கோதண்டம் யாரம்மா என்று விசாரித்தான்.

அவள் தனது கணவன் குடிகாரன் தன்னை விட்டு போய் விட்டான் அதனால் கணவரது வீட்டுக்காரர்கள் அவளை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்கள். போக இடம் தெரியாமல் அமர்ந்திருக்கிறேன் என்றாள்.

அதனை பார்த்த சவுந்தரம் கண்கலங்கினாள். உறவினர்கள் இருந்தும் பயன் இல்லை. நாம் அந்த காலத்தில் இப்படித்தானே நிராதரவாக சென்னைக்கு வந்தோம். முன்பின் அறிந்திராத பார்வதி அம்மாளும் அய்யாதுரை ஐயா வும் தானே நமக்கு ஆதரவு அளித்தார்கள்.

இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு நிராதரவான இந்தப் பெண் எங்கு போவாள்? அவளுக்கு அந்தப் பெண் மீது கரிசனம் வந்தது.

கோதண்டமும் அவளுக்கு வாழ ஒரு வழி நாம் செய்து கொடுக்கலாம் என்று கூறினான். அதனால் அவளை மாடி அறையில் தங்க வைத்தார்கள்.

அவள் பெயர் பூஜா. பூஜாவும் நன்றியுடன் மறுநாள் காலை எழுந்தது முதல் இவர்களுக்கு வீட்டு வேலைகள் செய்து கொடுத்தாள். மேலும் கடைக்கு சென்று கடையைச் சுத்தம் செய்து கொடுத்தாள்.

கடையில் நான் உங்களுக்கு உதவியாக கணக்கு எழுதி தருகிறேன் என்று கூறினாள். படித்தப் பெண்ணாகவும் இருந்ததால் அவனுக்கு மிகவும் உதவியாக இருந்தாள்.

பூஜாவும் குழந்தைகளோடு கோதண்டத்தின் குடும்பமாக ஆனாள். சௌந்தரமும குழந்தைகளிடம் வேறுபாடு காட்டவில்லை.

பூஜா வந்த பிறகு செல்வம் பெருகியது. சின்னக்கடை பெரிய கடையாக மாறியது.

வெளிநாட்டில் ஐயாதூரை இறந்து போனதால் பார்வதி அம்மாள் மகனிடமே தங்கி விட்டாள். அதனால் வீட்டை ஒரு விலை போட்டு நீயே வாங்கிக் கொள் என்றார் கள்.

பூஜா கொடுத்த தைரியத்தில் பேங்க் கடனும் பெற்று வீட்டை வாங்கிவிட்டான்.

தன் குடும்பத்தினருக்கும் பூஜா, குழந்தைகளுக்கும் நல்ல சாப்பாடு, துணிமணி தேவையான நகைகள் வாங்கிக் கொடுத்தான்.

குழந்தைகள் நால்வரும் சென்னை யில் உள்ள நல்ல பள்ளியில் படித்தனர். வீட்டு கடனும் அடைந்து வீடும் சொந்தமானது.

ஒரு நாள் தற்செயலாக மளிகை சாமான்களை வாங்க அருண் ஸ்டோர்ஸ் க்குர் செந்தில் வந்தான். வெகுநாட்கள் கழிந்து சந்தித்த நண்பர்கள் பேசிக்கொண்டு இருந்தனர்

பேச்சு வாக்கில் அண்ணன் அருணாசலம் கொரானாவில் இறந்து போனான் என்ற விஷயம் அறிந்தான். கடையை பாலமுருகன் எடுத்து நடத்துகிறான். மனோகரியைப் பிரபுவுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். சுந்தரமும் வயதாகி இறந்து விட்டார். மேலும் பல ஊர் விஷயங்கள் அறிந்தான்.

செந்தில் சென்றபின் அண்ணன் இறந்த விஷயம் பற்றி கவலைப்பட்டான். லேசாக நெஞ்சு வலிப்பது போல இருந்தது. அப்போது அவன் அருகில் வந்த பூஜா மீது மயங்கி சரிந்தான்.

பூஜா அவனை மயக்கம் தெளிய வைத்து ஆசுவாசப்படுத்தினாள். அவன் மூலம் விஷயங்களை கேட்டு அறிந்தாள்.

சுந்தரமும் அருணாசலமும் இவர்கள் மீது உண்மையான பாசம் உடையவர்கள். இருவரும் இப்போது இல்லை. அவன் கவலையைப் பார்த்து பூஜா இப்போது இவ்விஷயங்களை சௌந்தரத்திடம் கூறவேண்டாம். அவளும் ரொம்ப கவலைப் படுவாள்.என்றாள்

கோதண்டத்தை மட்டும் கடை வேலையாக வெளியூர் சென்று வருவதாக கூறிவிட்டு சொந்த ஊர் சென்று பார்த்து வரும்படிக் கூறினாள். இது கோதண்டத்திற்கும் சரியென்று பட்டது.

சௌந்தரத்திடம் கடை வேலையாக வெளியூர் செல்வதாகக் கூறினான். ஊருக்கு சென்றான். அழகம்மாள் இவனை நல்ல வேஷ்டியும் மடிப்பு கலையாத உயர்ரக சட்டையும், செல்வ செழிப்பையும் கண்டு மிகவும் மரியாதையாக நடத்தினாள்.அண்ணன் இல்லாமல் வீடு வெறுமையாக இருந்தது.

பாலமுருகன் கையில் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து “கடையை விரிவாக்கம் செய்து கொள் “என்றான்.

மனோகரிக்கும் ஐம்பதாயிரம் பேங்கில் போட்டுக் கொடுத்தான். பிரபுவுக்கும் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து “உன் அக்காவின் பரிசு உனக்கு “என்றான். சுப்புவும் சௌந்தரத்தைப் பார்க்க அவனுடன் சென்னைக்கு வருவதாகவும் கூறினாள். தனது செல்வச் செழிப்பு தான் இதற்கு காரணம் என்பதனை நன்கு உணர்ந்து இருந்தான். எனவே தான் கடை வேலையாக வேறு வேறு ஊர்களுக்குச் செல்ல வேண்டிய துள்ளது என்று நாசுக்காகத் தவிர்த்தான்.

எல்லோரையும் பார்த்து விட்டு உடனே சென்னைக்கு திரும்பினான். பார்வதி அம்மாள் இறந்து போனதாக அவர் மகனிடம் இருந்து செய்தி வந்தது. ரொம்பவே மனம் சோர்ந்து போனான்.பூஜாவிற்கும் அவளது குடிகார கணவன் இறந்த செய்தி கிடைத்தது.

அன்று இரவு குழந்தைகளுக்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டு இருந்தாள் சௌந்தரம். கோதண்டம் “எல்லா குழந்தைகளையும் கீழேயே தூங்கப் பண்ணு “என்று மாடி ஏறிப் போனான்.

பூஜாவிடம் ஊர் போய் வந்த விவரம் கூறி துக்கம் தாளாமல் அழுதான்.

கணவன் மாடிஏறிப் போனதால் இன்னும் கீழே வரவில்லை என்று பார்த்தாள் சௌந்தரம். பூஜாவின் அறைக்கதவு தாளிடப்பட்டு இருந்தது. இரவு முழுவதும் கோதண்டம் அங்கேயே இருந்தான். சௌந்தரத்திற்கு சொல்லமுடியாத உணர்வாக இருந்தது.

அதன் பின்னர் தினமும் இதுவே வாடிக்கையானது. சௌந்தரம் என்னதான் சிரித்தபடி இருந்தாலும் முகத்தில் ஆழ்ந்த வருத்தமும் படிந்திருந்தது. இந்த குடும்பத்தை விட்டுப் பிரிக்க முடியாதபடிக்கு பூஜா ஒன்றியிருந்திருப்பதை உணர்ந்தாள்.

குழந்தைகள் வளர்ந்து அருண் ப்ளஸ் டூ வந்து விட்டான். சுந்தரும் பூஜாவின் பெரிய பெண் சஞ்சலும் பத்தாவது படித்தனர். சின்னப் பெண் மேனா எட்டாவது படித்தாள்.

ஒரு நாள் காலை கடைக்குச் சென்ற கோதண்டம் மார்பை பிடித்த படி சாய்ந்தான். தெய்வமாகிவிட்டான்.

எதிர்பாராத விதமாக ஒரு இழப்பு. சௌந்தரம் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துப் போனாள்.

பூஜா திடமாக இருந்தாள். தாலி கட்டியவன் இறந்த போது கழற்றாத தாலியை இப்போது கழற்றினாள்.

கோதண்டம் இல்லாத ஒரு குறைதான். மற்றபடி நமக்கு குறைவொன்றும இல்லை என்று தைரியம் அளித்தாள் கடையில் முன்பை விட அதிகம் உழைத்தாள். காலேஜ் படிக்கும் அருணையும் கடைக்கு அழைத்துச் சென்று பழக்கிவிட்டாள்.

அருண் எம் பி ஏ படித்து முடித்து கடை பொறுப்பு ஏற்றுக் கொண்டான். சுந்தர் சி ஏ படித்தான். சஞ்சல் எம் சி ஏ படித்து பெங்களூரில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கப் பெற்றாள். மேனா பி எஸ் சி கம்யூட்டர் சயின்ஸ் படித்தாள். குழந்தைகள் நல்ல நிலைக்கு வந்தனர்.

அதன்பின்னர் பூஜா சௌந்தரத்திடமிருந்து விடை பெற்றாள். தனது பெண்களுடன் பெங்களூரில் வசிக்கப் போவதாக கூறினாள். “இந்த குடும்பத்திற்கு வரும் போது வெறும் கையோடு வந்தேன். ஆனால் வெளியேறும் போது கோதண்டத்தின் படத்தை மட்டும் எடுத்துச் செல்கிறேன்” என்றாள் கண் கலங்க.

சௌந்தரமும் பேசவாயின்றி நெகிழ்ந்து போய் நின்றாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *