(2001ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-1 | அத்தியாயம்-2
“அதோ அந்தப் பச்சையில மஞ்சள் ‘பார்டர்’ போட்டதை எடுங்க.”
கடைச் சிப்பந்தி சளைக்காமல் எடுத்துப் போட்ட பாவாடைகள் குன்றாய் குவிந்திருந்தன.
மறுபடி அத்தனையையும் இளறி கலைத்து, அரக்கில் தங்கக் கரையிட்ட ஒன்றைத் தேர்ந்தெடுத்தாள் பரணி.
அதற்கேற்ற ‘டிஷ்யு’ ரவிக்கைத் துணி தேர்ந்தெடுக்க மேலும் கால் மணி நேரம். எண்ணூற்று சொச்சத்திற்கு ‘பில்’ வந்தது. “என்னம்மா… மொத்த பர்சேஸும் கால் மணி நேரத்துல முடிப்பீங்க. இன்னைக்கென்ன?” – கடையின் மேற்பார்வையாளர் விசாரித்தார்.
“வழக்கமாய் வாங்கற துணியெல்லாம் நான் தைச்சு விக்கறதுக்கு. இது என் அக்கா பொண்ணுக்கு.”
‘ஆகா? எத்தனை வயசு சுட்டி?”
“அஞ்சு முடியுது. இதுதான் அதுக்கு எடுக்கற முதல் பட்டு.”
“பொங்கிப் பெருகட்டும்”- கவுண்டரிலிருந்து பார்சலை வாங்கி, அவரே துணிப் பையிலிட்டு கண்களில் ஒற்றி நீட்டினார்.
“நன்றி… வரேன்.”
கடையின் அருகே இருந்த புது மண்டபத்திற்குள் போனாள். அவள் தைத்து விற்கும் அலங்கார ரவிக்கைக்கான பாசி, மணி, கண்ணாடி, குஞ்சங்கள் இங்கு மொத்த விலைக்குக் கிடைக்கும். நூலும், பித்தான்களுமாய் வாங்கி முடிக்க இரண்டு மணி நேரமானது.
மதியம் முழுக்க மதுரை வெயிலில் அலைந்த சோர்வு. குடித்த ஒரு சாத்துக்குடி ‘ஜூஸ்’ எப்போதோ வியர்வையாய் கரைந்திருக்க வேண்டும்.
நல்ல பசி.
ரோட்டோர இட்லி, சட்னி போதும்.
மதுரை நடைபாதையின் மல்லிப்பூ இட்லி, காரச்சட்னி பிரபலம். ஆனால், நாகரீகமான பெண் ஒருத்தி ரோட்டோரம் நின்று சாப்பிட முடியாது. பலர் நின்று பார்த்துப் போவார்கள்.
எனவே, ஓட்டலுக்குள் நுழைந்தாள்.
திருப்தியாய் சாப்பிட்டால்தான் வாங்கிய பொருட்களோடு சைக்கிளை மிதிக்க முடியும்- அதுவும் எட்டு கிலோ மீட்டர்…!
சாலை நெரிசலைத் தாண்டி மதுரை- திண்டுக்கல் சாலையைப் பிடிப்பதற்குள் வயிற்றுக்குள் ஈயப்பட்ட அத்தனையும் ஆவியாகி விட்டது போன்ற ஆயாசம். ஆனால், இதற்கே அசந்தால் முடியாது.
கோரிப்பாளைய சந்தையில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு வாங்கிக்கொண்டாள். இன்று அனு குட்டி மசாலா தோசை கேட்டிருந்தது. தினம் ‘நேயர் விருப்பம்’ போல அதன் விருப்பப்படிதான் சமையல்.
‘லொங்கு லொங்கெ’ன்று சொச்ச தூரத்தை மிதித்தால்தான் பள்ளியிலிருந்து அனு திரும்புவதற்குள் இவள் வீட்டு வாசலைத் திறந்து வைக்கலாம்.
‘சித்தி’ என்று அந்தக் குட்டி கட்டி முத்தமிட, இத்தனை ஆயாசமும் பாயாசமாகிப் போகும்!
மல்லிகை மொட்டுகளைப் பூப்பறிக்கப் பழகிய கைகள் எப்படி ‘விடு விடு’வென பறிக்குமோ அதேபோல இவளது மொத்த குடும்பத்தையும் விதியின் கைகள் கொய்துபோன பிறகு மிஞ்சின ஒரே மொட்டு அனுதான்.
இவள் பன்னீர் வார்த்து பாதுகாக்கும் சின்ன பூ.
இன்றும்கூட புது மண்டபத்துள் நுழைந்தபோது அக்காவின் ஞாபகம் வந்தது. தன் வளைகாப்புக்கு விதவிதமாய் வளையல்களைத் தானே தேர்ந்தெடுக்க வந்திருந்த பத்மாக்கா- இதே அனு அப்போது வயிற்றினுள்…
பத்மா இவளைவிட ஏழு வயது மூப்பு. அப்பாவின் ஜாடை போலும்.
அகன்ற மாநிற முகம். சதா அலையிடும் சிரிப்பு.
பரணி அப்படியே அம்மாவின் நகல்- பனித்துளியுடன் மஞ்சள் கலந்த சருமம். திறமையான ஓவியன், பிரபல பத்திரிகையின் அட்டைப் படத்திற்காக வரையும் பெண் போன்ற மிக அழகிய முகம்.
பார்க்கும் யாரும் அக்கா- தங்கை என யூகிக்க முடியாது.
ஆனால், பாசம் காட்டிக் கொடுத்துவிடும்.
என்னா பிரியம், எத்தனை ஒத்துமை, ‘சுத்திப் போடு சுப்பு’ என்று பலர் மெச்சியதுண்டு.
பரணி பிறந்த ஒரு வருடத்திற்குள் அப்பா உலகைவிட்டுப் போயாயிற்று.
மூளிபட்ட குடும்பத்தை அம்மா தன் அன்பால் நிரப்பினாள்.
ஆனால், வெறும் அன்பு வயிறுகளை நிரப்புமா?
கடவுள் அதற்கும் ஒரு வழி வைத்திருந்தார்.
அப்பா இருக்கும்போதே அம்மா துணி தைப்பதுண்டு. விரும்பிக் கேட்பவர்களுக்குத் தைத்துத் தருவதுண்டு. அப்படிப் பழக்கமானவர்தான் நட்சத்திரம்மா.
பரணி ஐந்தாறு வயதிருக்கும்போது அவர்களிடம் கேட்ட நினைப்பு.
‘ஏம்மா… உங்க பேரு நட்சத்திரமா?’
‘அந்தக் காலத்துல நட்சத்திரங்களைக் கொண்டுதான் திக்குதிசை அறிவாங்களாம். நட்சத்திரம் வழிகாட்டும். நானும் தேவைப்பட்டவங்களுக்கு வழிகாட்ட எங்க தாத்தா ஆசையா வச்ச பேரு அது?’
ஆனால், அனைவரும் அவரை அழைப்பது பெரியம்மா என்றுதான். அவருக்கு இரு பெண்கள். விதவிதமாய் தைத்துப் போட்டு அழகு பார்ப்பார்.
‘கச்சிதமாய் தைக்கிறே சுப்பு. ஒரு தையல் கடை போட்டுறலாம் நீ – கூட்டம் மொய்க்கும்’.
‘எங்கம்மா நேரம் இருக்கு? இவர் ‘பாக்டரி’ பக்கம்ங்கறதால மதியச் சாப்பாட்டுக்கு வீடு வந்திடுவார். சூடாய் சமைச்சுப் பறிமாறுவேன். சாயங்காலம் பத்மாக்குப் பாடம், பாட்டுன்னு கழியும். இடையிடையே கிடைச்ச நேரத்தில தையல்;.
ஆனால், யூனியன் தகராறு பெரிதாகி- அதில் தன் அப்பாவி கணவன் கொலையுண்ட பிறகு வழிபுரியாமல் சுப்பு தடுமாறி நின்ற நேரம் – நட்சத்திரம்மாதான் வழிகாட்டினார்.
அம்மாவின் அழகும் சத்ரு. வேண்டாத வண்டுகள் பல மொய்க்கலாயின.
“பேசாம கிளம்பு சுப்பு. எங்க ‘அவுட் ஹவுஸிலே தங்கு”
இவர்கள் தங்கியிருந்தது ‘பாக்டரி’க்குச் சொந்தமான- வீடு. வேண்டாத சீண்டல்கள். எனவே, அம்மா உடனே சம்மதித்தாயிற்று – மூட்டையைக் கட்டினார்கள்.
“உந்தம்பி வந்தான்னு கேள்விப்பட்டேன்.”
‘வந்தவன்…சம்பிரதாயம்னு என்னைப் பாத்து சொல்லிக்காமலேயே போயிட்டாம்மா. யார நோக? அவனுக்கும் மூணு பிள்ளைங்க.’
‘வீட்டுக்கு வெள்ளையடிக்க ஆளுங்களுக்குச் சொல்லி விட்டுட்டேன் – நீ மூட்டையைச் சீக்கிரமாய்க் கட்டு’
வேறு வழியின்றி, வேறு போக்கிடமின்றி அக்குடும்பம் வந்து சேர்ந்ததுதான் இந்த நட்சத்திர பங்களா!
ஆனால், வேறு வழி இல்லாததும் நல்லதுக்கென்பதும் பிறகு புரிந்தது.
பிக்கு பிடுங்கலின்றி அம்மா தைரியமாய், சுயமாய் சிந்தித்து வாழ கற்றுக்கொண்டது அங்குதான்.
தானே மதுரை போய் துணிகளைத் தேர்ந்தெடுத்து வாங்க ஆரம்பித்தாள்.
ஓரிரு பெண்களைத் தையலில் உதவிக்கு அமர்த்த, வியாபாரிகளைச் சந்தித்து உடைகளை விற்க என்று தேறினாள்.
அக்காவைக் கல்லூரி விழா ஒன்றில் பார்த்து விரும்பி வந்து பெண் கேட்ட அத்தானும் நல்ல மாதிரி.
அவருக்கு மதுரை நிறுவனம் ஒன்றில் நிறைந்த சம்பளத்துடன் நிலையான வேலை.
உயிர்தான் நீடித்து நிலைக்கவில்லை!
இவர்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே குடித்தனம் வைத்தார். தினம் மதுரைக்கு பஸ்சில் போய் வருவதுண்டு.
‘என்ன மாப்பிள்ளை… எட்டு எட்டு பதினாறு கல்லு தினமும் அலைச்சல், உங்க ஆபீஸ் பக்கத்திலேயே வீடு பாருங்களேன்.’
‘இல்ல அத்தை. ஆபீஸ் டவுன் ஹால் ரோடை அடுத்து நெரிசலான பகுதி. தூசும், சத்தமும் ஜாஸ்தி. சுத்துவட்டாரமே அப்படித்தான். வாடகையும் அதிகம். இங்கே பத்மாவுக்கு நீங்க துணை- உங்க எல்லாருக்கும் நாந்துணைன்னு பாந்தமாயிருக்கோம்…’ என்றவர், தன் பிஞ்சு மகளையும் துணையின்றி விட்டுப் போயாயிற்று விபத்து ஒன்றில்.
அத்தான் சிநேகிதர் வீட்டு விசேஷத்திற்காய் கிளம்பிய தம்பதியர் இருவரும் ஒன்றாய் காலி.
குழந்தை அனுவிற்கு அச்சமயம் மார்ச்சளி.
‘ஸ்கூட்டரிலே ஐப்பசி மாசம் இவ எதுக்கு? -மழை வேற வரும் போலிருக்கு. உங்கக்கூட நிம்மதியா இருக்கட்டும் அனு…’ -என்று மகளை இவளிடம் ஒப்படைத்துப் போனவர்கள் ஒரேயடியாய் போயாயிற்று.
ஈரச்சாலையில் நேர்ந்த விபத்து. இன்னும்கூட ‘விர்’ரென்று விமானமாய் சாலையில் பாயும் வாகனங்களைக் கண்டால் பரணிக்கு ‘திக்’கெனும்.
‘ஏனிந்த வேகம்?’ என்று பதறும்.
அதோ அந்த கரும் பச்சை காரும்கூட பேய்த்தனமாய் வருகிறது. அப்படி என்ன அவசரமோ?
அவள் யோசிக்கும்போதே அது வேகத்தைச் சற்றே குறைத்து கிளைச் சாலைக்குள் வளைந்தது.
ஆச்சரியமாய்ப் பார்த்தாள்.
அதுதான் இவளும் திரும்பவேண்டிய பாதை.
அரை பர்லாங்கிற்குள் பங்களா வரும்.
வேறு வீடுகள் அற்ற பகுதி அது.
தவறாய் திரும்பிவிட்டார்களோ?
இப்போது ஐயா, பெரியம்மா கூட இல்லையே?
அவர்களைப் பற்றி நினைவு வர, கண்களில் தானாய் நீர்க்குளம் கட்டியது.
– தொடரும்…
– ராணிமுத்து மார்ச் 1, 2009.