(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 | அத்தியாயம்-11
அன்று தொடக்க விழா நாள்.
இரவு விருந்திற்கான பொறுப்பை சமையல் புள்ளியிடம் ஒப்படைத்திருந்தான் பாஸ்கர்.
சமையல் பொறுப்பு விலகிய உற்சாகத்தில் ராணியும், பரணியும் வீட்டை அலங்கரிப்பதில் மும்முரமாக இருந்தனர். மேசை,நாற்காலிகளை சற்று ஓரமாய் நகர்த்தி, வேறு முறையில் அமைக்க ஹால் மேலும் விஸ்தாரமாய் தெரிந்தது.
கழுவித் துடைத்த சிவப்புத் தரை, மருதாணியிட்ட பெண்ணின் பாதம் போல மயக்கியது.
அனுவின் பிறந்த நாள் அன்று பாஸ்கர் தொங்கவிட்ட அதே அலங்காரங்களைச் சுவரில் அங்கும் இங்குமாய் தொங்க விட்டாள். கண்ணாடி குவளைகளில் வாசனை ரோஜா கொத்துகள்.
வாசலில் ரங்கோலி.
“ஹா! ஆண் எத்தனை சாமர்த்தியமாய் வியர்வை சிந்த மெனக்கெட்டாலும் இந்த நளினம் வராது. ‘ஸ்டார் ஓட்டல்’ அசத்துதே நம்ம வீடு…!” பாராட்டிய பாஸ்கர் மூச்சை இழுத்துவிட்டான்.
“நம்ம தோட்டத்தில் இத்தனை ரோஜாக்கள் பூத்திருந்தனவா என்ன?”
“மதுரையில் சொல்லி வச்சு வாங்கினேன்!”
“ஆங்… நான் சாப்பாடு ஏற்பாடு செய்தாப் போல, இத்தனை டஜன் ரோஜான்னா அவங்க கொண்டுவந்து தந்திருவாங்க. அப்படித்தானே?”
“ஆங்…யாருங் கொண்டு தரல. பரணிப் பொண்ணுதான். சைக்கிள்ல போய் கொண்டாந்தது. வர்ற வழியில் நாலு தடவு நிறுத்தி ஐஸ் தண்ணி தெளிச்சு, ஈரத்துணி போர்த்தி குழந்த மாதிரி அலுங்காத எடுத்தாந்தது…”
பலூனை ஊதியபடி சென்னாள் ராணி.
“ஷ்… பலூனை மட்டும் ஊது… போதும் ராணி” தாழ்ந்த குரலில் கண்டித்தாள்.
“எதுக்கு இந்த அலைச்சல். கார் இருந்ததே?…”
“எல்லாருக்கும் வேற வேலையும் இருந்துச்சே… இது என்னால முடிஞ்ச ஒரு சின்ன பரிசு…அதான்…”
“பலூன் எல்லாம்கூட நீதான் வாங்கினியா?”
“ம்… ஆளுக்கு நாலாய் ஊதத் தந்தேன்- எல்லாம் ரெடி.”
“தா… தாங்க்ஸ் பரணி. எல்லாம் அற்புதமா இருக்குது.”
அவன் பேச்சில் மெய்யான நன்றி இருந்தாலும், பழைய துள்ளல் தொனி இல்லாதது நன்றாகவே இல்லை.
புள்ளிகளற்ற சிவிங்கியை, வரிகளை உருவியப் புலியை பார்ப்பது போலிருக்க- வருந்தினாள்.
அவனுக்கு அதிக வேலை. அதோடு, தொடரும் புது வியாபாரம் நல்லபடி போக வேண்டுமென்கிற பதற்றமாக இருக்கும்.
“எல்லாம் நல்லபடி நடக்கும். நீங்க அரை மணி நேரமாவது படுத்து எழுந்திருங்க…” பரிவாய் சொன்னாள்.
“சரி… உங்கதை என்ன? வீடு மட்டும் அசத்தினாப் போதுமா?”
“இதோ…. கிளம்பிட்டேன்”
வீட்டுக்கு போய்விட்டு- மாலையில் விழா ஆரம்பிக்க பத்து நிமிடம் முன்பு பங்களாப் படி ஏறினவளின் அலங்காரம் எளிமையாய் தோன்றினாலும் கண்ணை நிறைத்தது.
கரும் சிவப்பு ஜார்ஜெட் சேலை.
அந்த பிளெயின் சேலைக்கு அழகே அந்த ரவிக்கையால்தான். கருப்புப் பட்டில் சிவப்பு. தங்கமணிகள் பதித்து மின்னியது. ஊடாய் கண்ணாடி வட்டங்களின் கண் சிமிட்டல். தளரப் பின்னிய ஜடையில் ஒற்றை சிவப்பு ரோஜா, காதில் பெரிய வளையங்கள்.
அந்த ரவிக்கை நாள்கணக்காய் அர்ச்சனாவிற்காகத் தைத்தது. மிக அழகாய் வந்திருந்தது. ஆனாலும், அர்ச்சனாவிற்கு திருப்தி இல்லை.
“கழுத்து ரொம்ப மேலேறி இருக்கே பரணி. எனக்கு எப்பவும் ‘லோ கட்’தான் பிடிக்கும். இறக்கிடு”
“அப்ப வேற தையி!”
“அப்ப… இது வீணாயிடும்ே மேடம்”
மணிக்கணக்கில் சில நாட்களாய் மெனக்கெட்டிருந்தாள்.
விரல் நுனிகள் சிவந்து தோல் உரிந்திருந்தன.
ஒவ்வொரு மணியும், முத்துமாய் ஊசியில் கோர்த்து – சோர தைத்த ரவிக்கையின் பிசிறில்லாத வேலைப்பாடு.
“பச்…எனக்கு வேணாம். என் உடம்புக்கு கழுத்து இறக்கமா இருந்தாத்தான் எடுப்பு. இது ஏதோ போன நூற்றாண்டு மகாராணி மாதிரியில்ல இருக்குது…!”
“நிறைய வேலை…”
“அதுக்கான கூலி தந்திடறேன். ரவிக்கையை நீயே வச்சுக் அல்லது வித்திடு” – அலட்சியமாய் பதில் வந்தது.
அந்த ரவிக்கையை தனக்கென்று வைத்துக் கொண்ட பரணி. ஆனால் சும்மாயில்லை. தானே வேறொரு கருநீல பட்டுத்துணி வாங்கி, அதேபோல விரல் ஒடிய- நகங்கள் சிவக்க வேலைப்பாடு செய்தும் தந்தாயிற்று. பைசா கூலி வாங்கி கொள்ளவில்லை.
சிறு அசைவிலும் அந்த ரவிக்கை மின்னலாய் பளபளத்து அனு பட்டுப் பாவாடையில் பட்டாம்பூச்சியாய் திரிந்தாள். சிறு வெள்ளித்தட்டில் கல்கண்டுடன் அனுவை வாசலில் நிறுத்தி வைத்தாள். அதுவும் மகாகர்வமாய் நின்றது!
வருபவர்களை ‘வாங்க’ என்று இனிப்பு நீட்டி அது வரவேற்கும் பாங்கு கொள்ளை அழகு.
அத்தனையையும் ரசித்த பாஸ்கரனது விழிகள் அவ்வப்போ இவளை நன்றியுடன் தொட்டன.
அர்ச்சனாவும் வந்துவிட்டாள்.
தன் தந்தையுடன் தோரணையாய் வந்திறங்கியவன் பாஸ்கருடன் இழையலானாள். தான் வெகு கவர்ச்சியாய் உடுத்தி வந்திருந்தும்கூட அவன் பார்வை அடிக்கடி பரணியைத் தேடி தொட்டு மீண்டதை எரிச்சலோடு கவனித்தாள்.
“ஏதும் உதவி வேணுமானா சொல்லுங்க பாசு”
“சொல்லாமலேயே அத்தனையையும் பரணி இழுத்துப் போட்டு செய்துட்டா” என்றவன், தோள் குலுக்கினான்.
ழைத்திருந்த அனைவரும் வந்திருந்ததில் அவன் உற்சாகம் மீண்டிருந்தது. இளம் சாம்பல் நிற கோட், கருநீல பேண்டில் ஏதோ விளம்பர நாயகன் போலத் தோன்றினான். கருநீலச் சட்டையின் மேல் இரு பொத்தான் வரை இறுக்கி, டையும் மடிச்சிட்டிருந்தால் தோற்றத்திற்கு ஒரு இறுக்கம் வந்துவிடும். இத்தனை இயல்பான கவர்ச்சி வாய்க்காது. அவனை ரசித்ததோடு அவன் விழிகள் தன் மீது பதிந்த பாதெல்லாம் பரணி பூரித்தாள்.
அவனுக்குத் தன்னாலான உதவியைச் செய்ய முடிந்த உற்சாகத்துடன் மேலும் சுற்றிச் சுழன்றாள். அந்த சந்தோஷச் சூழலில் முகத்தில் தனி சோபை ஏறியிருந்தது. பரபரப்பில் அவளது கன்னங்கள் தக்காளியாய் கனிந்திருந்தன.
“பாட்டுகளை ஜெராக்ஸ் செய்து வச்சிருந்தேனே, பரணி?” தேடினாள்.
“இதோ தரேன்” உள்ளே ஓடினாள்.
“விருந்துக்குப் பிறகு பரிமாற வேண்டிய ஐஸ்கிரீம்?”
“வந்தவுடனேயே பிரிட்ஜிலே வச்சுட்டேன்.”
“பாட்டில் ஓப்பனர் எங்கே?”
“அங்கதானே வச்சிருந்தேன்.”
அவனும்,பரணியுமாய் இணைந்து சுழல, அர்ச்சனாவின் கண்கள் எதையும் கவனிக்க தவறவில்லை,
பார்வையில் பச்சை அடித்தது – பொறாமையின் பச்சைத் தணல்!
தன்னை ‘மேடம்’ என்றழைத்து கைநீட்டி கூலி வாங்கி பிழைப்பவள் இன்று இவ்விழாவின் நாயகியாய் சுற்றி வருவதென்ன? நேசமுள்ள புருஷன் – பொண்டாட்டி போல இருவர் பார்வைகளும் இணைந்து இழைவதென்ன?
பரணிக்கு மாளிகைக்கு ஏற்ற அழகும்கூட… அவள் செய்கிற எந்த வேலையும் நேர்த்திதான். பாஸ்கர் சதா அவளைத்தான் எதிர்பார்க்கிறான்.
அர்ச்சனாவிற்கு பிரியாணி சுவைக்கவே இல்லை.
அங்கு வந்திருந்த பெரிய மனிதர்கள் அவளுக்கு தோதான வயதில் இல்லை. பார்த்து பார்த்து பண்ணின தன் அலங்காரம் வீண் சலிப்பு, அவளுக்கு. இடுப்பில் வெகு இறக்கமாய் கட்டிய சேலையும், கையில்லாத சின்னஞ்சிறு சோளியும் அச்சிறு ஊருக்கும், எளிய விழாவிற்கும் பொருந்தவில்லை.
தான் சோடியம் விளக்காய் கண்ணைக் கூசினாலும், பரணி பாவைவிளக்கின் அம்சத்தோடு இருப்பதை உணர்ந்த எரிச்சல்.
தனக்கும் அழைப்பு கிடைத்ததில் உற்சாகமாய் சுற்றிவற மாரிமுத்துவை அழைத்து சற்று நேரம் பேசினாள்.
விருந்தும், வாழ்த்துகளும் முடிந்து அனைவரும் விடைபெற்று வாசல்புறம் குழுமி இருந்தனர்.
இரவு காற்று ஜிலஜிலுத்தது.
பீடா தட்டை எடுத்து வந்து அனைவருக்கும் நீட்டிய பரணி அகஸ்மாத்தாய் பாஸ்கர் பக்கம் நின்றாள்.
வெகு பொருத்தமான ஜோடி… இவனுக்கென்று படைக்க பட்ட மறுபாதி என்னும் படி…
அர்ச்சனாவிற்கு நெஞ்சு எரிந்தது.
காற்றில் சேலையும், நெற்றி கேசமும் அசைந்து புரள மிருதுவான புன்னகையுடன் நின்ற பரணி அழகிய தேவதை போலிருந்தாள்.
“குளிரலையா பரணி?” பாஸ்கர் பரிவாய் குனிந்து கேட்க அர்ச்சனாவிற்கு தாளவே முடியவில்லை.
“அது நல்ல கெட்டிப்பட்டு. முத்தும், மணியுமாய் வச்சு தச்ச அந்தப் பட்டு ரவிக்கை உறுத்துமே தவிரக் குளிராது. அது நான் வேணாம்னு கழிச்சுக்கட்டின சோளி. எனக்கு தெரியாதா என்ன – சரிதானா பரணி?”
‘கணீர்’ என்று அர்ச்சனாவின் குரல் அத்தனை பேருக்கும் கேட்டது. பரணி குறுகினாள்.
அத்தனை பேருக்கும் நடுவே சேலை நழுவினது போன்ற அவமானம்.
“நல்லவேளை! இந்த ரவிக்கை பரணிக்குப் போச்சு அர்ச்சனா. ஏன்னா, வேற யாருக்கும் இது இத்தனை அழகாய் இருந்திருக்காது. மனுஷங்களுக்குப் பொருந்தாது… தேவதைகளுக்கு மட்டுமே பொருந்தும்… ம்ம்?”
பாஸ்கர் வெகு நிதானமாய் – குரல் தாழ்த்தாமல் பதிலடித்தான்.
அர்ச்சனாவின் அப்பா, நிலைமை புரிந்து கிளம்பினார்.
“வரோம் பாஸ்கர்”
“என் அழைப்பை மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றி ஸார்” பணிவாகக் கை குவித்தான்.
ஆனால், அவரின் அருகில் இருந்த அர்ச்சனாவை லட்சியமே பண்ணவில்லை. “என்ன பாசு, கண்டுக்காம நகருறீங்க? எங்கிட்டேயும் ரெண்டு நிமிஷம் பேசலாம் – அதுக்குள்ள பரணி புகையா மறைஞ்சிடமாட்டா?” உதடு சுழித்தாள். அவனும் கடித்த பல்லூடே சீறினான்.
“தெரியும்.”
“இன்ன இன்ன வேலை நடக்கணும்னு சொன்னா நானும் வந்து ஒத்தாசை செய்திருப்பேன்ல…?”
“நாந்தான் சொன்னேனே அர்ச்சனா – அத்தனையும் பரணியே இழுத்துப் போட்டுச் செய்தாள்னு…”
“எனக்கிந்த வேலைக்காரி ‘டைப்’ வேலையெல்லாம் அவ்வளவாய் ஓடாது. ஆனா, தொழில்ல புலி.”
“கொஞ்சம் நொண்டிப்புலி! நாம் சந்திச்ச மறுநாளே தொழில் பற்றி விசாரிச்சீங்க. ஆனா. நீங்க கேட்ட கேள்விகள்லயே தொழில்ல உங்களுக்கு அனுபவம் இல்லைங்கறதைப் புரிஞ்சுகிட்டேன்!*
சிரிப்பு மாறாமல் காலை வாரினான்!
“ஷ்…அனு, ஓரமாய் நில்லு. இத்தனை கார்களின் நடுவே குட்டியாய் நீ ஓடலாமா?” – மெல்லிய அதட்டலுடன் அனுவின் பின்னால் வந்த பரணிக்கு அவன் பதில் கேட்டது.
ஆக, அவன் அவளோடு சரசமாடவில்லை. பொதுவான பேச்சுத்தான், அதுவும் அர்ச்சனா வலிய வந்து வளர்த்ததால்… ஏன் இந்த உண்மை நெஞ்சில் பாலை வார்த்தாற்போல் அத்தனை இதம் தருகிறது?
அவள் அருகிருப்பது தெரியாமலோ அல்லது பொருட்படுத்தாமலோ பேச்சு தொடர்ந்தது.
“தவிர, பரணி பழகவேண்டிய வேலைதானே அத்தனையும்…”
“அதற்கென்ன அர்த்தம்?”
“இத்தனை நாள் பங்களா விசேஷங்களில் உதவிப் பழகினவள். நாளைக்கு இத்தனைக்கும் முதலாளியம்மாவாகப் போகிறவ – அந்த அர்த்தம்தான்!”
அர்ச்சனாவிற்கு எப்படியோ… இதைக் கேட்ட பரணிக்கு விக்கியது!
எத்தனை சாதாரணமாய் சொல்கிறான்? சம்பந்தப்பட்ட தன்னிடம் சொல்லாததை – தன் சம்மதம் இல்லாததை, மூன்றாம் நபரிடம் உண்மைபோல புளுகும் துணிச்சல்!
அந்த மாலை நேரம் – சந்தரனைக் கண்ட அல்லி போல வெகு இயல்பாய் மலர்ந்து மணத்துக் கொண்டிருந்த நெஞ்சு ‘சுளீர்’ என்று உச்சி சூரியன் சுட்டது போல சாம்பியது.
– தொடரும்…
– ராணிமுத்து மார்ச் 1, 2009