நடுத்தர மனசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 2, 2012
பார்வையிட்டோர்: 9,605 
 

‘எங்க தான் போச்சு அது!’

கை வெங்காயத்தை வெட்டிக்கொண்டிருந்த போதிலும், மனம் மும்மரமாய் தேடிக் கொண்டிருந்தது.

“என் பனியன எங்க வச்ச? அலமாரில தேடிப்பார்த்தா காணோமே?” பதில் சொல்வதற்கு முன்,

“அம்மா என் பென்சிலைக் காணோம், பார்த்தியா?”

“ஏண்டா, எழுதினதும் பத்திரமா எடுத்து வையின்னு எத்தன முறை சொல்லியிருக்கேன்! படிச்சா அங்கேயே போட்டுட்டு போயிடற! அப்புறம் எப்படி கிடைக்கும்?”

“நான் இங்க தான்ப்பா வச்சேன்.”

“அப்ப கால் முளைச்சு ஓடிப்போச்சா?”

கை பனியனை எடுத்துக் கொடுத்தபோதும், உரையாடல்களை காது கேட்டுக் கொண்டிருந்த போதும், மனம் தேடலில் லயித்திருந்தது.

இன்னும் சற்று நேரத்தில் இந்த பரபரப்பு ஓய்ந்து விடும். பிறகு தான் அலமாரியை தலை கீழாக கவிழ்த்து தேட வேண்டும்.

காலை நேர பள்ளிக்கு மகன் கிளம்பி சென்றவுடன் பாதி சத்தம் குறைந்தது. பசியாறச் செய்து கணவரை வழியனுப்பியதும் வீடு மொத்தமும் அமைதியானது. இப்போது காணாமல் போன அந்த கம்மல் மனதை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டது.

அலமாரியிலிருந்து புடவைகளை எல்லாம் அடுக்கு கலையாமல் எடுத்து மேஜையின் மீது வைத்தாள். அடியில் விரித்திருந்த செய்தித்தாள்களைத் தூக்கிப் பார்த்தாள். அவற்றை ஒவ்வொன்றாய் எடுத்து, முழுமையாய் விரித்து உதறினாள். ம்ஹீம். . .

இரண்டு நகைக் கடை ரசீதுகளும், வாசனைக்காக வைக்கப்பட்டிருந்த சோப்பு உறைகளும் சற்று தள்ளிப் போய் விழுந்தன. ஒரு கரப்பான் பூச்சி தரையில் விழுந்து, சமாளித்து, இலக்கில்லாமல் ஓடி அலமாரியின் அடியில் ஒளிந்தது.

‘எப்போ கடைசியா போட்டோம்?’ மனம் அலசிப் பார்த்தது.

‘சென்ற மாதம் பெருமாள் கோயிலுக்கு போனோமே, அப்பவா!’

‘இல்லயே! அன்னிக்கு ஆரஞ்சு கல்லு வச்ச கம்மல் தானே போட்டிருந்தோம், அந்த ஆரஞ்சு புடவைக்கு ஏத்த மாதிரி!’

‘அதுக்கு முன்னால் எங்க போனோம்?’ சரியாக நினைவுக்கு வரவில்லை.

கை அனிச்சையாய் புடவைகளை உதறிக் கொண்டிருந்தது.

‘ரஞ்சிதா பெண்ணின் பிறந்த நாளுக்கு… இல்லை அப்போ அந்த ‘ரூபி செட்’ போட்டிருந்தோம். கவிதா கூட ‘அழகா இருக்கு, எவ்வளவு?’ ன்னு விசாரிச்சாளே!’

மறுபடி புடவைகளை உள்ளே அடுக்கினாள். நவம்பர் மாதம் ஊருக்கு போகும் போது எடுத்துச் சென்றோமா? அவளுக்கு சரியாய் ஞாபகம் இல்லை. அலமாரியை முற்றுமாய் அடுக்கி விட்டு நிமிர்ந்த போது, மணி பத்தை நெருங்கியிருந்தது. சந்தைக்குப் போக வேண்டும் என்பது நினைவுக்கு வந்தது. மனம் லயிக்காமலே, லேசாக தலையை வாரிவிட்டுக்கொண்டு கிளம்பினாள்.

மின்தூக்கியின் அருகே இரண்டு வீடுகள் தள்ளி குடியிருக்கும் மிஸ் கோ “ஹல்லோ, ஹவ் ஆர் யூ!” என்றாள். நன்றாய் இருப்பதாய் சிறு புன்னகையுடன் சொல்லிவிட்டு, பதிலுக்கு விசாரிக்கவும் மறந்து கம்மலில் மூழ்கினாள்.

மின்தூக்கியை விட்டு வெளியே வந்த போது, ஒரு கறுப்புப் பூனை வலமிருந்து இடம் ஓடியது. பூனை குறுக்கே ஓடினால் நல்லதில்லையே! சற்றே தயங்கி நின்றாள்.

‘சந்தைக்குத் தானே! பூனை என்ன செய்யப்போகுது!’ மேலே நடந்தாள்.
மேகம் சூழ்ந்திருக்க வெயில் சற்றே தணிந்திருந்தது.

‘இந்த ஊரில் இருந்துக் கொண்டு பூனையையும் நாயையும் பார்த்தால் ஆகுமா?’ சிரிப்பு வந்தது அவளுக்கு.

உடனே தொலைந்து போன கம்மல் மனதுக்குள் தோன்றி சிரிப்பை ரத்து செய்ய வைத்தது. கணவரிடம் சொன்னால் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்.

‘போனதை விடு! என்ன செய்ய முடியும்! இனி ஜாக்கிரதையா இரு அவ்வளவு தான்!’ என்று சொல்லிவிட்டு தன் லேப்டாப்பில் மூழ்கி விடுவார்.

இவளுக்கு தான் மனசு கேட்கவில்லை. எப்படியும் முக்கால் பவுனுக்கு குறையாது. கிராம் அறுபத்தி ஐந்து வெள்ளிக்கு விற்கும் நிலையில். . . குறைந்தது ஐநூறு வெள்ளிகளாவது இருக்கும்! போகட்டும், கணவர் முதன் முதலாய் வாங்கிக் கொடுத்தது.

மனம் சங்கடப்பட்டது. அடிவயிற்றிலிருந்து பெருமூச்சு கிளம்பியது. விளையாட்டுத் திடலில் கம்மல் அணியாத அல்லது கம்மலைத் தொலைக்காத யுவ, யுவதிகள் சத்தமாய் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். இவளுக்கு அது ரசிக்கவில்லை.

பார்வை, என்னமோ கம்மல் அங்கே தான் விழுந்து தொலைந்தது போல, நிலத்தையே அளைந்துக் கொண்டு வந்தது. அறிவு இடித்தாலும், கண்களை மேலெழுப்ப முடியவில்லை.

பொத்தான், உடைந்து போன பேனா, மழையினால் நனைந்து எழுத்துக்களை இழந்த தாள், பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடிய பாட்டரி, கசக்கிப் போடப்பட்ட செய்தித்தாள் என்று தரையில் ஒன்றிற்கொன்று சம்பந்தமில்லாத ஏராளமான பொருட்கள் காணப்பட்டன.

இவ்வளவு நாட்கள் இவை கண்களில் படாமல் தப்பியது ஆச்சரியமாய் இருந்தது. ‘குப்பைப் போட்டால் அபராதம் என்ற நடைமுறை இருந்த போதும் இவ்வளவு குப்பையா! எப்படி தைரியமாய் போட்டார்கள்!’

சில்லென்ற காற்று முகவர் ஒருவரின் விளம்பரத் துண்டை ஐந்து மாடி உயரத்திற்கு தூக்கி, பின் அடுத்திருந்த சாலையில் இறக்கியது. மழை பெய்யப் போவது போல வானம் இருட்டிக் கொண்டு வந்தது. குடை கொண்டு வரவில்லையே என்ற மனஅதிர்வு சட்டென்று தோன்றி, தோன்றிய வேகத்திலேயே மறைந்தது.

சிங்கையில் குடை அவசியப்படாத வகையில் தான், பெரும்பாலான கட்டிடங்களும் நடைபாதைக் கூரைகளும் கட்டப்பட்டிருக்கின்றன. பெருமழையிலும் அதிகம் நனையாமல் வீடு சென்று சேர்ந்துவிடலாம். சந்தையை அடைந்த போது தூரல் ஆரம்பித்தது.

கடைக்காரர்கள் வெளியே வைக்கப்பட்டிருந்த விற்பனைப் பொருட்களுக்கு அவசர அவசரமாக ப்ளாஸ்டிக் உறைகளை போட்டுக் கொண்டிருந்தார்கள். வழக்கமாக வாங்கும் சீனப் பெண்ணிடம் உருளையும், வெங்காயமும் வாங்கிக் கொண்டாள். தோடு அணியாத அந்த பெண்ணின் மஞ்சள் காது இவளைக் கவர்ந்தது. அவளுக்கு தோடு தொலையும் பிரச்சனையே இருக்காது என்று நினைத்துக் கொண்டாள். அவள் தோட்டைத் தவிர வேறு எதையும் தொலைத்திருப்பாளா என்ற அனாவசிய சந்தேகம் ஏற்பட்டது. எதைத் தொலைத்தாலும் தனக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு அவளுக்கு ஏற்பட்டிருக்குமோ! இருக்காது என்றே தோன்றியது.

இது போல ஆசையாய் வாங்கிய பொருளை யாராவது கைமறதியாய் வைப்பார்களோ! அப்படி வைத்தவர்கள் யாராவது தன் அனுபவத்தைச் சொன்னால் ஆறுதலாக இருக்குமென்று தோன்றியது. ஆனால் எதையும் தொலைத்திராத மக்கள் பேசியபடியோ, குழந்தையைத் தள்ளிக்கொண்டோ, கையில் பைகளுடனோ அவளைக் கடந்துச் சென்றார்கள்.

தனக்கு தெரிந்த எவரேனும் எதையேனும் தொலைத்திருக்கிறார்களா என்று யோசித்துப் பார்த்தாள். ப்ரியா ஒரு முறை அடையாள அட்டையைத் தொலைத்திருக்கிறாள். பரவாயில்லை நூறு வெள்ளிகள் கட்டி புதிதாய் ஒன்றைப் பெற்றுக் கொண்டாள்.

வேறு யார்? . . . . ஒரு முறை குழந்தையையே தொலைத்திருக்கிறாள் மரகதம். சந்தைக்குச் செல்லும் போது கவனமின்றி கையை விட்டுவிட, குழந்தை வேடிக்கை பார்த்தபடி மேலே சென்றுவிட்டது. பிறகு கத்தி, அழுது, ரகளை செய்து சற்று தள்ளி இருந்த பொம்மைக் கடையில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மகளைக் கண்டுபிடித்ததாகச் சொன்னாள்.

சிறு வயதில் அம்மா ஒருமுறை கைப்பையைத் தொலைத்ததாகச் சொல்லியிருந்தாள். மற்றபடி . . . சில்லறைகளைத் தவிர மதிப்பிற்குரிய பொருளைத் தொலைத்த யாரையும் அவளுக்குத் தெரியவில்லை. உலகத்திலேயே தான் மட்டும் தான் பொறுப்பற்றவள் என்று தோன்றியது, அவளுக்கு.

ஈரச் சந்தையில் மீன் வாங்கிக் கொண்டிருந்த போது மழை வலுத்திருந்தது. அருகிலேயே ஏழரை வெள்ளிக்கு கோழியும் வாங்கிக் கொண்டாள்.

மகனுக்கு கோழி என்றால் உயிர். ஆனால் கணவர் மீனை மட்டுமே விரும்பினார். வீட்டில் மூன்று பேராக இருந்தாலும் எப்போதும் விருந்தாளிக்கான சமையல் தான். அதிலும் காலை, மதியம், மாலை, இரவு என்று நான்கு வேளைக்கும் சம்பிரதாயமான சமையல்!

மழை கூரைகளிலும், சாலையிலும் பெரும் சத்தத்தோடு கொட்டிக் கொண்டிருந்தது. எவ்வளவு கவனமாய் நடந்த போதும் உடையின் கீழ்பாதி முழுதுமாய் நனைந்து விட்டிருந்தது.

எப்படியும் வீட்டிற்குப் போய் இன்னொரு முறை குளித்தாக வேண்டும். எதிரில் ஒரு பெரிய பையை சுமந்தபடி ஒரு வயதான பெண்மணி வந்துக் கொண்டிருந்தாள்.

“சுடிதார் பாக்கறியாம்மா!” என்றாள். மறுத்தவளை,

“சரி, இங்க ரயில பிடிக்க எப்படிம்மா போறது?” என்றாள்.

பார்க்கும் போது அம்மாவின் நினைவு வந்தது. ஊரிலிருந்து டூரிஸ்ட் விசாவில் பொருட்களை எடுத்து வந்து இது போல விற்பவர்களை இப்போதெல்லாம் அதிகம் பார்க்க முடிகிறது. அவளுக்கு வழியை காட்டிவிட்டு நடந்த போது மழையின் வேகம் குறைந்திருந்தது.

தன் ப்ளாக்கின் கீழே வந்த போது தான் முட்டை வாங்கவில்லை என்று ஞாபகம் வந்தது. கோழி, மீன் இத்தனை செய்தாலும் முட்டை ஆம்லெட்டும் வேண்டும் கணவருக்கு.

‘இனி எங்கே இன்னொரு முறை சந்தைக்குப் போவது!’ என்ற சலிப்பு தோன்ற அடுத்த ப்ளாக்கின் கீழே இருந்த கடைக்குச் சென்றாள். விலை சற்று அதிகம் தான்! இருந்தாலும் அவசரத்திற்கு அங்கே தான் வாங்குவது.

அந்த கடையில் ஒரு வயதான மூதாட்டி அமர்ந்திருந்தார். பத்து முட்டை இரண்டு வெள்ளி ஐம்பது காசுகள் என்றார். ஈரச் சந்தையில் இன்னும் மலிவாய் கிடைத்திருக்கும். மகனுக்கு பிடித்த இரண்டு பிஸ்கட் பொட்டலங்களையும் எடுத்து வைத்தாள்.

அந்த மூதாட்டி மனதிற்குள் விலையை கணக்கிட முயன்று, முடியாமல் இவளை ஒரு முறை பார்த்து சிரித்துவிட்டு, ஒரு வெற்றுத் தாளை எடுத்தார். கண்களை இடுக்கியபடி பொட்டலத்தின் மேலிருந்த விலையை பார்த்து அதில் எழுதினார். இவளும் அதை எட்டிப் பார்க்க, ஒரு பொட்டலத்தின் விலையைக் குறைவாக எழுதியிருந்தார். 2.80 என்பது 2.30 தாக அவர் கண்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

‘விலைய ஏத்திவச்சு தானே விக்கறாங்க! முட்டையில ஏத்தி வச்சது, பிஸ்கட்டுல குறைஞ்சிடுச்சி!’ என்று சந்தோஷமாக இருந்தது.

‘தாங்க் யூ’ சொல்லிவிட்டு பையை வாங்கிக் கொண்டு வேகமாக நடந்தாள்.

லிப்டில் ஏறும் போது மனம் குறுகுறுத்தது.

‘இந்த அம்பது காசுல அவங்களுக்கு ஒன்னும் பெரிய நஷ்டம் வந்துவிடாது’ என்று சொல்லி சமாதானப் படுத்திக் கொள்ள முயன்றாள்.

‘இது தான் விலைன்னு தெரிஞ்சு தானே அங்கே போனோம்! அப்ப அந்த விலையை கொடுக்கறது தானே நியாயம்!’

மறுபடி மனசாட்சி குறுக்கிட்டது.

‘எத்தனை 4டி சீட்டு வாங்கறோம்! எவ்வளவு செலவு பண்ணறோம்! அம்பது காசுக்கு ஏமாத்தறோமே இது தப்பில்லையா!’

‘சின்ன வயசாயிருந்தாலும் பரவாயில்ல! ஒரு வயசான பாட்டிகிட்ட போய் இப்படி செய்துவிட்டோமே!’

‘ஏமாற்றுக்காரி! ஏமாற்றுக்காரி!’ என்று மனம் இடித்தது.

அந்த பாட்டியும் அவள் கணவனும் மாற்றி மாற்றி பார்த்துக் கொள்ளும் கடை. அவர்களின் அரை கோப்பை தேத்தண்ணிக்கான காசை பறித்துக் கொண்டது போன்ற எண்ணம் ஏற்பட்டது.

வீட்டை திறக்கத் தோன்றாமல் மறுபடி அந்த கடைக்குச் சென்றாள் பாட்டியிடம் நடந்ததை விளக்கி, ஐம்பது செண்ட்டை திருப்பிக் கொடுத்தாள்.

“ஷ்யே ஷ்யே!” என்று திரும்பத் திரும்பச் சொன்ன பாட்டியின் கண்களில் நன்றி தெரிந்தது. இவள் மனபாரம் அகன்று திரும்பினாள்.

வீட்டைத் திறக்கும் போது தான், ஊருக்கு சென்று திரும்பிய உடன் கம்மலை பெட்டியிலிருந்து எடுத்து பூஜை அறையில் சாமி படத்திற்கு பின்னே வைத்தது, சட்டென்று நினைவிற்கு வந்தது. அவளுக்கு நிம்மதியாயிருந்தது.

Posted by ஹேமா (HVL) at 07:03 8 comments Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
Labels: சிறுகதை
Sunday, 12 August 2012சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்

மஞ்சுளாவிற்கு சாப்பிடுவதில் அதிக விருப்பம் இருந்தது. எதையாவது சாப்பிட்டபடியே இருந்ததால் அவள் பூசின உடல்வாகைக் கொண்டிருந்தாள். சிறுவயதில் அப்பாவோ அல்லது உறவினர்களோ வாங்கி வரும் பொட்டலங்களில் மற்றவர்களை விட தனக்கு கொஞ்சமாவது அதிகம் கிடைக்கும் படி பார்த்துக் கொள்வாள். வீட்டின் கடைசி பெண் என்பதால் அம்மாவின் பங்கில் பாதியேனும் அவளுக்குக் கிடைத்துவிடும்.

மெல்லிய சவ்வுத் தாளில் கடைக்காரர்கள் சுற்றித்தரும் தீனிகளை விட கவர்ச்சிகரமான தகர டப்பாக்களில் விற்கப்படும் சாக்லேட்டுகளின் மீது அவளுக்கு ஆசை அதிகம் இருந்தது. ஒரு முறை சித்தியின் வீட்டிற்கு சென்றிருந்த போது மழமழ வென்று சிறிய முட்டை வடிவ சாக்லேட்டுகள் படம் போட்ட செவ்வக டப்பா ஒன்றைப் பார்த்ததிலிருந்து தான் இந்த ஆசை ஏற்பட்டது. அந்த டப்பாவின் உள்ளே நிஜமாகவே அது போன்ற சாக்லேட்டுகள் இருக்குமா என்ற சந்தேகம் அவளுக்கு ஏற்பட்டது. அதை ஆவலுடன் திறந்து பார்க்க பேனா மற்றும் பென்சில்கள் போட்டு வைக்கப்பட்டிருந்தன. வீட்டிற்கு வந்த சித்தப்பாவின் நண்பர் ஒருவர் வாங்கி வந்ததாய் சித்தி சொன்னாள். தன் வீட்டிற்கு வருபவர்கள் மட்டும் இது போல வாங்கி வருவதில்லையே என்ற ஆதங்கம் மஞ்சுளாவிற்கு ஏற்பட்டது.

அந்த சாக்லேட் தொட்டுப் பார்க்க கண்ணாடியைப் போல மழமழப்பாய் இருந்ததாகவும், வாயில் போட்டவுடன் கரைந்து போகக்கூடியதாய் இருந்ததாகவும், நடுவில் வைக்கப்பட்டிருந்த பருப்பு ஒரே கடியில் தூள் தூளாகி இனிப்புடன் கலந்து நாவில் பட்ட போது அமிர்தம் போல இருந்ததாகவும், இரவு படுத்திருக்கும் போது சித்தியின் பெண் சொன்னாள். அன்று இரவு கனவில் ‘கல்யாண சமையல் சாதம்’ பாட்டில் வருவது போல தட்டுகளில் குவியல் குவியலாய் முட்டை வடிவ சாக்லேட்டுகள் வந்தன. அதைச் சாப்பிடுவதாய் நினைத்து இரவெல்லாம் தூக்கத்தில் வாயை அசைத்தபடி படுத்திருந்தாள் மஞ்சுளா. வீட்டிற்கு போகும் போது அப்பாவிடம் அதை வாங்கித் தரச் சொல்லி அடம் பிடித்தாள். அவள் இன்னும் சிறு பிள்ளை இல்லையென்பதை நினைவு படுத்திய அப்பா, அந்த மாத சம்பளம் வந்ததும் வாங்கித் தருவதாய் சொல்லி, அதை அதோடு மறந்தும் போனார்.

அதன் பிறகு அவள் ஆசை கல்யாண சாப்பாட்டின் மீது சென்றது. பசிய வாழையிலையில் இனிப்பு, வடை, பொரியல், கூட்டு, ஊறுகாய் போன்றாவற்றைக் கரைகட்டி, சூடான சாதம் வைத்து, சிறிது நெய் விட்டு, சாம்பார் ஊற்றி சாப்பிடும் சுகமே அலாதியாய் இருந்தது. திருமண சமையலுக்கென்று இருந்த பிரத்தியேக மணம் அவளைக் கவர்ந்தது. இது போன்றதொரு மணம் அம்மாவின் சமையலில் ஏன் இல்லை என்ற சந்தேகம் அவளுக்குள் நெடுநாட்கள் இருந்தது. எந்த திருமணத்திற்கு சென்றாலும் அவளின் நினைவு சாப்பாட்டு பந்தியின் மீதே இருந்தது. அவள் கெட்டி மேளம் கொட்டியதும் முதல் பந்தியில் அமர விரும்புபவளாய் இருந்தாள். எதையும் தவறவிடக் கூடாது என்ற ஆவேசத்தில் மிக வேகமாய் சாப்பிடக் கூடியவளாக அவள் மாறினாள்.

ஒரு முறை பந்தியில் பரிமாறப்பட்ட கேசரி மிக நன்றாய் இருந்தது. இன்னொரு முறை கேட்கலாமா என்று தயக்கத்தோடு யோசித்தாள். எதிர் வரிசையில் உட்கார்ந்திருந்த பெரியவர் ஒருவர்

“ஏம்ப்பா! அந்த கேசரியைக் கொஞ்சம் போடு!”

என்று சொல்ல, இவளும் தைரியமாய் கேட்க தயாரானாள். அதற்குள் நேரமாகிவிட்டது என்று அப்பா அவளை அவசரப் படுத்தியதில் மனமில்லாமல் பந்தியை விட்டு எழுந்தாள். அன்று தவறவிட்ட இனிப்பின் சுவை அவள் நாவில் நெடுநாட்கள் தங்கியிருந்தது.

அதே போல நெடுந்தூர பயணங்களையும் அவள் விரும்புபவளாயிருந்தாள். பிரயாணத்தின் போது கிடைத்த நொறுக்குத் தீனிகள் அவளுடைய பயண நேரத்தை இனிமையாக்கின. மஞ்சுளாவின் பயணங்கள் உணவை நோக்கியே சென்றன. காலையில் பயணம் துவங்கும் போதே மதிய உணவிற்கு என்ன வாங்குவது என்று அவள் மனதிற்குள் முடிவு செய்துக் கொள்வாள். மதிய உணவு வரை அந்த சுகம் நீடிக்கும். பின் இரவு உணவை நோக்கி அவளின் பிரயாணம் நீளும்.

அவளின் திருமணத்தின் போது தான் முதன்முறையாக அவளுக்கு உணவின் மீதான உரிமை மறுக்கப்பட்டது. சடங்குகளின் காரணமாக பந்திக்கு மற்றவர்களைப் போல நேரத்திற்கு செல்ல முடியாமல் போனது. சென்ற போது, இலையோரத்தில் வைக்கப்படும் வடை மற்றும் இனிப்புகள் தீர்ந்து போயிருந்தன. அது அவளுடைய மனதில் ஒரு குறையாகவே நின்று போனது.

புகுந்த வீட்டில் உண்ணும் சுதந்திரம் குறைந்துவிட்டது. காலை எழுந்த உடன் பசித்தாலும், குழந்தைகளும், வேலைக்குச் செல்லும் ஆண்களும் சாப்பிட்டு முடிக்க காத்திருக்க வேண்டியிருந்தது. இட்லி வேகும் மணமும் சட்னி தாளிக்கும் மணமும் பசியைக் கிளறிவிட்டாலும், நாவில் நீர் சுரக்க, மனதால் உணவை சுவைத்தபடி, மற்றவர்கள் உண்டு முடிக்க காத்திருப்பாள். இப்போது சூடான உணவைச் சாப்பிடுவதும் அரிதாகிப் போனது. உறவினர்கள் வாங்கிவரும் சிற்றுண்டிகளை மூத்த தலைமுறையினர் குழந்தைகளுக்கு மட்டும் பகிர்ந்தளித்த போது தான், மற்றவர்கள் தன்னை பெரியவர்களின் உலகில் சேர்த்துவிட்டதை உணர்ந்தாள். சட்டென்று காலடியில் நழுவிப்போன பிள்ளைப் பருவம் மிகப்பெரிய வருத்தத்தைக் கொடுத்தது.

நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகளுக்கு உணவு பங்கிடும் பொறுப்பையும், சிறிய பிள்ளைகளுக்கு ஊட்டிவிடும் பொறுப்பையும் அவள் எடுத்துக் கொண்டாள். அவர்களுக்கு உணவளிக்கும் போதே யாரும் அறியாமல் இவளும் சாப்பிட பழகிக் கொண்டாள். அவ்வப்போது கிடைக்கும் உணவுப் பொருட்களைத் தன் கைப்பைக்குள் பதுக்கி வைக்கவும் தலைபட்டாள். குழந்தைகள் வளர்ந்த பின்னும், வீட்டுப் பெரியவர்கள் இறந்து போய் தனிக் குடும்பமாய் பிரிந்த பின்னும் இந்த பழக்கம் தொடர்ந்தது.

பிள்ளைகளின் திருமணத்திற்கு பின் மருமகள்கள் வந்த போது தான் இது ஒரு பிரச்சனையாக மாறியது. வாங்கி வந்ததை கிழவி திருடி ஒளித்து வைக்கிறாள் என்ற வசைமொழி கிடைத்தது. ஆனாலும் இந்த பழக்கத்தை துறக்க மஞ்சுளாவால் முடியவில்லை. அதனால் அவள் அனைவரும் உறங்கிய பின் இருட்டில், உணவு சேகரிப்பிற்காக அலையும் எறும்பைப் போல நடமாடத் தொடங்கினாள். குறைபட்ட கண் பார்வையோடு பாத்திரங்களை உருட்டிவிட்டு மருமகள்களின் பேச்சுக்கு ஆளாகவும் செய்தாள்.

அவள் கைப்பையில் சேகரித்த உணவுப்பொருட்கள் நாள்பட்டு, அழுகி, எறும்புகள் மொய்த்த பின் கைப்பற்றபட்டு அனைவரின் கேலிக்கும் உள்ளானது. இதனால் அவள் ஒளித்து வைக்கும் இடத்தை மாற்றியபடியே இருந்தாள். வைத்த வேகத்திலேயே மறந்து போகவும் துவங்கினாள். இப்போது அவள் அனைவரின் கண்களுக்கும் திருட்டுப் பாட்டியாக தோன்றினாள். ‘இதென்ன பரலோகம் போற வயசுல, இப்படி ஒரு பெருந்தீனி!’ என்று அவள் காதுபட மற்றவர்கள் உரக்க பேசத் தொடங்கினர்.

கண்ணும் காதும் மந்தமாகிப் போனாலும் வாசனையை வைத்தே சமையலில் குறைபட்டிருப்பது புளியா, உப்பா என்று அவளால் அறிந்துக் கொள்ள முடிந்தது. இவளுக்கு பத்தியச் சோறு என்றாகிப் போயிருந்தாலும் இவளால் அதை பொறுக்க முடிந்ததில்லை. அந்த வழியே செல்லும் பேரனையோ பேத்தியையோ அழைத்து,

“டேய் தம்பி! அம்மாவை குழம்புல கொஞ்சம் உப்பு போடச் சொல்லுடா!” என்பாள்

“இந்த கிழத்தால சும்மா இருக்க முடியலை! இது நொள்ளை, அது நொட்டைன்னு எதையாவது சொல்லிகிட்டே இருக்கணும்! வயசாயிடுச்சில்ல, பேசாம கிருஷ்ணா, ராமான்னு இருக்கறத விட்டுட்டு சாப்பாட்டுக்கு எப்படி அலையுது பார்!” என்பாள் மருமகள்.

மஞ்சுளா இறந்த போது மருமகள்களுக்கு நிம்மதியாகவே இருந்தது. வருடம் தவறாமல் அவளுடைய திவசத்தின் போது பலவகையான இனிப்புகள் மற்றும் திண்பண்டங்களை இலையில் வைத்து கும்பிட்டு, மாமியாரின் ஆத்மா சாந்தி பெற்றிருக்கும் என்ற நம்பிக்கையில் அவற்றை தங்களுக்குள் பகிர்ந்துக் கொண்டனர்.

– 1 செப்டம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *