த பார்ட்டி (The பார்ட்டி)

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 7,756 
 

மஹாதேவன் நித்திரை வராமல் புரண்டு படுத்தார். வீட்டையண்டிய தெருவில் சட்டென்று இரு கார்கள் மோதிப் பெரிய சப்தம் போட்டதால் அவர் மனைவியும் சாடையாக விழித்துப் பரண்டு படுத்தாள்.

அவரைப் போலவே அவளும் நித்திரையின்றி அல்லற்படுகிறாள் என்று அவருக்குத் தெரியும். அவர்களின் கட்டிலுக்குப் பக்கத்திலிருந்த அலாம் குளொக்கில்,இரவு ஒருமணி நாற்பது நிமிடம் விழுகிறது.

அவர் அந்த அறை மிகவும் சூடாக இருப்பதாக உணர்கிறார். ஆடிமாத கொடும் சூட்டில் லண்டன்; தெருக்களில்’தார்’ உருகுவதாக டெலிவிஷனிற் சொன்னார்கள்.

பல சிந்தனைகளால் அவர் மனமும் சூடாகி வியர்வையாக வழிந்துகொண்டிருக்கிறது.

எப்படிச் சூடான சுவாத்தியமென்றாலும் அவர்மனைவி படுக்கையறை ஜன்னல்களைத் திறந்து வைக்க விடமாட்டாள். ஓரு சிறு காற்றும் அவளையணுகவிடக் கூடாதாம். அவளுக்கு ஆஸ்த்மா வந்து விடுமாம்!.

அவளுக்கு ஆஸ்த்மா வந்து தொலைத்துவிடும் என்பதற்காகத்தான்,அவள் அவரை ஜன்னல் கதவுகளைத் திறக்காமற் பண்ணுகிறாள் என்பதில்லை. அவர் என்ன சொன்னாலும்,எதைச் செய்தாலும் அந்த விடயத்திற்கு எதிர்மாறக நடப்பதன்-சொல்வதின் மூலம் அந்தச் சூழ்நிலையை வைத்து,அவர் மனைவி கீதா ஒரு தர்க்கப் போராட்டத்தையே நடத்திவிடுவாள். மஹாதேவன் தர்க்கம் விரும்பாத ஒரு ‘சமாதான’விரும்பி.

அவர்கள் இருவரும் தங்கள் படுக்கையறையில் நித்திரையின்றித் தவிப்பதற்கு,இரண்டு நேர் வித்தியாசமான காரணங்கள் இருந்தாலும்,அவை பற்றி இருவரும் ஒருத்தொருக்கொருத்தர் மனம் விட்டுச் சொல்லப் போவதில்லை.

வெளியில் நல்ல நிலவு.ஜன்னற்திரை இடுக்குகளால் எட்டிப்பார்க்கிறது.

அவர் எழும்பி,படுக்கையறையை விட்டுக் கீழே வந்தார்.ஹால் முழுதும்,விரைவில் நடக்கப்போகும் ‘பேர்த் டே பார்ட்டிக்கு’ வாங்கிய பல தரப்பட்ட சாமான்கள் நிறைந்து கிடந்தது. அவற்றைப் பார்க்க அவருக்கு எரிச்சலாக வந்தது.

அந்த எரிச்சலைத் தவிர்க்க எதையோ வாசித்து மனதைச் சமாதானப்படுத்த, அண்மையில் வந்த ‘கணையாழி’யைப் பிரித்தால் வாசிக்க நினைத்த ஒன்றும் மனதில் தங்காமல்,அவர்கள் வீட்டில் நடந்த இன்றைய நிகழ்ச்சிகளும், நாளைக்கு நடக்கப்போகும்,பார்ட்டியும் நினைவில் மோதின.

அவர் மனைவி கீதா, தனது செல்வச் செருக்கைக் காட்ட,அவர்களின் குழந்தையைச் சாட்டாக வைத்துக்கொண்டு ஒரு பிரமாண்டமான பார்ட்டி வைக்கிறாள். இருநுர்று விருந்தாளிகள் வருகிறார்களாம்.

அவளை, அந்தப் பார்ட்டிக்கு வருபவர்கள் மெச்சிப் பேசுமளவுக்கு அவள் மிக விலையுயர்ந்த பட்டுச் சேலை வாங்கியிருக்கிறாள்.விலை மிக மிக அபாரம்.

இவ்வளவு நாளும் வைத்த பார்ட்டிகளைவிட, இந்தப்பார்ட்டி மற்றவர்கள் மெச்சிப் பேசுமளவுக்கு இருக்கவேண்டுமாம். கீதா அவருக்குச் சொல்வதுபோல் தனது திட்டத்தை விளங்கப் படுத்தினாள்.

‘ஏன் இந்த பேர்த் டே பார்ட்டி? ஏன் மற்றவர்கள் மெச்சுமளவுக்கு நீ இவ்வளவு ஆடம்பரத் திட்டங்கள் போடுகிறாய்? என்று அவர் கேட்கவில்லை.

அவருக்கு அவள் என்ன மறுமொழிகள் வைத்திருப்பாள் என்று தெரியும்.

அவர்களின் மகன் தினேசுக்கு ஐந்து வயதாகப் போகிறது. ‘அவனது ஐந்தாவது பேர்த்டே பார்ட்டிக்கு அவனுடைய,நேர்ஸரி வகுப்பு நண்பர்களெல்லாம் வரவேணும்’.அவள் பிகடனப் படுத்தினாள் அதாவது, அவர்களது மகனின் சினேகிதர்களின் தாய் தகப்பனெல்லாம் வரவேண்டும்!.

அவள் இந்த பேர்த்டே பார்ட்டியைச் சாட்டாக வைத்துக்கொண்டு, அவர்கள் அண்மையில் வாங்கிய லெதர் சோபாக்கள்,அல்லது அவள் அண்மையில் வாங்கிப் பெட்டியில் வைத்திருக்கும்,(வங்கியில் பத்திரமாக இன்னும் வைக்கவில்லை) வைர அட்டிகை பற்றிப் பேசலாம் என்பது அவருக்கு

நன்றாகத் தெரியும்.

மஹாதேவன்,தனக்கு முன்னால் குவிந்து கிடக்கும் பார்ட்டி டெக்கரேஷன்களை ஒருதரம் நோட்டம் விட்டார்.அவருடைய கடுமையான உழைப்பின் சேர்ப்பின் ஒரு பகுதி, நாளைய பார்ட்டியில் அழியப்போகிறதா? பலூன்களாக உடையுமா? ஐஸ்கிறிமா வழியுமா? விஸ்கியாக வெறியாட்டம் போடுமா?

கீதா அவர்களின் பார்ட்டிக்குத் தேர்ந்தெடுத்த ஹால் ஒரு மைலுக்கப்பாலிருக்கிறது. அழைப்பு கொடுத்திருக்கும் அத்தனை பெரிய கூட்டத்தை இந்த வீட்டில் சமாளிக்க முடியாதாம். வீட்டில் பேர்த் டே பார்ட்டி வைப்பது லண்டனில் வாழும் தமிழர்களின் பாஷனில்லையாம்.

கீதா, அவர்களின் ஐந்து வயது மகனின் பேர்த் டே பார்ட்டி வைக்கப் பெரிய செலவில் மண்டபம் ஒன்றைத்; தெரிவு செய்திருக்கிறாள்.அதை அவள் அவருக்குச் சொன்னபோது அவருக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது.

மஹாதேவன் பெருமூச்சு விட்டுக்கொண்டார். அவர் முன்னாலிருக்கும் மேசையிலிருந்த அவர்களின் ஐந்து வயது மகன் தினேசின் படம் அவரைப் பார்த்துச் சிரித்தது.

அவன் ஒன்றும் அறியாக் குழந்தை. தனக்கு இவ்வளவு செலவளித்து ஆடம்பரமான பார்ட்டி வைக்கச் சொல்லிக் கேட்டானா? வீட்டில் ஒரு சிறிய பார்ட்டி வைத்தாலென்ன,வெளியில் ஆடம்பரமாக ஒரு பார்ட்டி வைத்தாலென்ன அவன் இவற்றின் பரிமாணங்களையறியாத குழந்தை. நாளைக்குப் பார்ட்டியில்,சினேகிதர்களுடன் சேர்ந்து நிறைய ஐஸ்கிறிம் சாப்பிட்டு விட்டு,சட்டையெல்லாம் சாக்கலெட்டைப் புரட்டிக்கொண்டு விளையாடித் திரிவான்.

அவன் ஒரு பாலகன். அவனைப் பயன் படுத்தி,அவர் மனைவி செய்யும் கூத்துக்களை அவராற் சகிக்க முடியாதிருக்கிறது.அவர் பெருமூச்சு விட்டுக்கொண்டார் .மாடிக்குப் போய் படுக்கையறையில் நுழைய விரும்பவில்லை. கீதாவும் மஹாதேவனும் கல்யாணம் செய்து ஆறுவருடங்களாகின்றன.

அதற்குள்,அவர் தனது மனைவி கீதாவுடன் அரை நுர்ற்றாண்டைக் கழித்த சலிப்பு அவர் முகத்தில் பிரதிபலிக்கிறது.

ஆறு வருடத் திருமணம்! கீதாவுடன் இன்னுமொரு அரைநூற்றாண்டு வாழ்க்கையை நினைத்தபோது, அவர் நெஞ்கில் இனம் தெரியாத நோ பரவியது. தனது நெஞ்சைத்தடவியபோது, அவர் தனது பழைய நினைவுகளையும் சேர்த்துத் தடவிக் கொண்டபோது, நெருஞ்சி முட்கள் குத்திக் கிழித்தன.

காலையில் அவர் வாசித்து வைத்துவிட்டுப் போன எயார்மெயில் லெட்டர் இன்னும் டெலிவிஷனுக்கு மேலிருக்கிறது. வேலைக்குப் போகும் அவசரத்தில் அப்படியே வைத்துவிட்டுப்போய்விட்டார்.

அத்துடன்,கீதா அந்தக் கடிதத்தை ஒரு தரம் வாசிக்க மாட்டாளா என்ற நப்பாசை அவரின் மனதில் ஒரு மூலையிலிருந்தபடியாற்தான் அவர் அதை அவளுக்குத் தெரியும்படி வைத்துவிட்டுச் சென்றார்.

அவள் அதைப் படித்திருந்தால், அவர் வேலையால் வந்தபோது அவரைத் தன்வாயால்க் குத்திக் கிழித்திருப்பாள்.

அவள் படிக்கவில்லை என்பது,அவள் நாளைய பார்ட்டியைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதிலிருந்து தெரிகிறது.

காலையில் அவருக்கு வந்திருந்த கடிதம் உண்டாக்கிய சஞ்சலம் தீரமுதல், கீதா அவருக்கு உத்தரவு போட்டாள், ‘வேலையால வரேக்க இந்த லிஸ்டில இருக்கிற சாமான்களையெல்லாம் வேண்டிக் கொண்டு வாங்கோ’.

அவா,; தனது வீட்டிலிருந்து வந்திருக்கும் கடிதத்தின் உள்ளடக்கத்தை அவளிடம் சொல்லவில்லை.

‘ என்ன கடிதம் வரும்? பஞ்சப்பாட்டுப்பாடி உங்கட ஆட்கள் எழுதியிருப்பினம்’ கீதா எத்தனையோதரம், இப்படிச்சொல்லி அவரை அவமானப்படுத்தியிருக்கிறாள்.

‘ எவ்வளவு கொடுத்தாலும், அந்தச் சனியன்களுக்கு ஒரு நாளும் நிறைவில்லை’ என்று கீதா அவரின் குடும்பத்தைத் திட்டுவதை அவராற் தாங்கமுடியாது தவிப்பதுண்டு.

சீதனம் என்ற பெயரில்,எத்தனையோ இலட்சம் பணத்துக்கும், கொழும்பிலுள்ள ஒரு ஆடம்பரமான வீட்டுக்கும் அவர் கீதாவின் கணவராக விலைப்பட்டவர். அவர் அப்படி விலைபோகக் காரணமாகவிருந்தவர்கள் அவரின் குடும்பத்தினர்.; அவரின் கடைசித் தங்கைக்கு முப்பது வயது தாண்டி, முதுகன்னியாய்,முன்தலையில் ஒன்றிரண்டு தலைமயிர் நரை வரத் தொடங்கியதும், தமையனாகிய மஹாதேவன் பாடு பிரச்சினையாகிவிட்டது.

கடைசி மகள் ‘கரையேறாததால்’ இன்னும் கல்யாணம் செய்யாமலிருக்கும் மகனின் நிலைகண்டு அவரின் தாய்க்கு மிகவும் துன்பம்தான். குடும்ப நிலை காரணமாகச், சீதனத்துக்காக, தனது மகன்,அவனை’விற்றுக் கொண்டு’அவனுக்கு விருப்பமில்லாத யாரையோ திருமணம் செய்துவிட்டு,அவனின் வாழ்க்கை முழக்கத் துன்பத்துடன் வாழ நேரிட்டால் என்ற பயம் தாயை வாட்டியது.

இரண்டு தமக்கைகள்,இரண்டு தங்கைகளுக்கு நடுவில் ஆண்மகனாகப் பிறந்த சுமையை மிகப் பொறுப்புடன் சுமந்தவர் அவர்.

அவர் பல்கலைக்கழகம் படிப்புக்குக் காலடி எடுத்து வைத்தபோது, மகன் படித்து முடித்ததும், தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில், அவர்களின் மூத்த மகளின் திருமணத்திற்குப் பெரும் கடன்பட்டுத் திருமணம் செய்து வைத்தார்கள்.

இரண்டாவது தமக்கை தனக்குப் பிடித்தவரைக் காதலித்துத் திருமணம் செய்தவள்.ஆனாலும் மாப்பிள்ளை வீட்டார் ‘பேரம்’பேசத்தவறவில்லை!

முதல் இரண்டு பெண்களும் கரைசோர்ந்தாலும்,அவர்களுக்குப்பட்ட கடன் வட்டியும் குட்டியுமாய் ஏறிக்கொண்டிருந்தது.

பல்கலைப் படிப்பு முடிந்து,வேலை எடுத்து அந்தக் கடன்கள் கட்டி,அதன்பின் அவருக்கு அடுத்த தங்கைக்குக் கல்யாணம் செய்து கொடுத்தபோது வாழ்க்கையில் அவர் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளைத் தாங்கியது போதும் போதுமென்றாகி விட்டது.

அவரின் வயதும் ஏறிக்கொண்டு போனது.

‘கடைசித் தங்கச்சிக்கும் ஒரு வழியைப் பார்த்துப் போட்டு,உனக்கு விருப்பமான ஒரு பெட்டையப் பார்’ தாய் மகனிடம் பாசத்துடன் முணுமுணுத்தாள்.

காரணம்,அவருக்கு முப்பத்தி நான்கு வயது வந்துவிட்டது.அல்லது அவரின் சினேகிதன் ஒருத்தன், அவருக்கு யூனிவர்சிட்டியில படிக்கும்போது ஒரு சிங்கள மாணவியுடனிருந்த உறவை அவன் தாயின் காதில் படத்தக்கதாகப் பகிடி விட்டதுமாயிருக்கலாம்.

-இலங்கையில் எப்போதோ நடந்த பழைய சிந்தனைகளை உதறிவிட்டு, மஹாதேவன் தனது படுக்கையறைக்குப் போகிறார்.

அவர் மனைவி கீதா கட்டிலின் ஓரமாகப் படுத்திருக்கிறாள். இவரின் உடல் பட்டால் அவளுக்கு நித்திரை வராதாம்!

எத்தனை கணவர்கள் இந்த அவமானத்தைப் பொறுப்பார்களோ தெரியாது.

‘ தனிக் கட்டில் வைத்துக் கொள்வதற்கென்ன?’ அவமானம் தாங்காமல் அவர் எரிச்சலுடன் முணுமுணுக்க,’யாரும் பார்த்தால் என்ன சொல்வார்கள்?’ என்று இவரில் எகிறிப் பாய்ந்தாள் கீதா.

அவள் அவர்களின் வீட்டோடு சம்பந்தப் படாத உலகத்திலுள்ள வேறு,’யார்களுக்காகவோ’ வாழ்பவள்.கல்யாணம், நெருக்கமான உறவு, தாம்பத்தியம் எல்லாம அவளைப் பொறுத்தவரையில,;வேறு ‘யார்களாலோ’ அங்கிகரிக்கப்படவேண்டும் என்ற அபிலாஷைகளுடன் வாழ்பவள்.

வைர அட்டியல்,லெதர் சோபாக்கள்,கௌரவத்துக்காக, ஒரு படித்த,பட்டம்பெற்ற கணவன் என்ற மத்தியதர வர்க்கப் போலிக்கண்ணோட்டதைக் கொண்டுவாழும் ‘மிடில் கிளாஸ் தமிழ் லேடி’ அவள்!

அவர் சிந்தனை பழையபடி பின்னோக்குகிறது.

‘ உனக்கு விருப்பமான பெட்டையைச் செய்து கொள்’ அழகிய பௌர்ணமி நிலவின் தண்ணொளியில்,; யாழ்ப்பாணத்து மண்வாசனையைத் தடவி வரும் இரவின் மென் தென்றலில், மாமரத்தடியில் அவர் பாய் போட்டுப் படுத்திருந்தபோது அம்மா மேற்கண்டவாறு சொன்னாள்.

அந்தக் கால கட்டத்தில்,அவரின் கடைசித் தங்கைக்குக் கனடாவிலிருந்து கல்யாணம் பேசி வந்திருந்தார்கள்.

இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் அரசியற் பிரச்சினைகளால், பல தமிழ் இளைஞர்கள் உலகெங்கும் சிதறி ஓட,ஓட முடியாதவர்கள், இலங்கை அரசாங்கத்தால் பயங்கரவாதிகள் என்ற பெயரில் கொலை செய்யப்பட்டார்கள். அல்லது பல தமிழ் இளைஞர்கள் ‘தமிழரின் போராட்ட இயக்கங்களிற்’ சேர்ந்து ஒருத்தரை ஒருத்தர் கொலைசெய்து அழிந்துகொண்டிருந்ததால், ‘மாப்பிள்ளைகளின் விலைகள்’ யானை விலை,குதிரை விலை என்று ஏறிக்கொண்டிருந்தது.

அவரின் கடைசித் தங்கைக்கும் வயது ஏறிக்கொண்டிருந்தது.

கீதா ஒரு மத்தியதரக்குடும்பத்துப் பெண். அவர்கள் அவளக்கு ஒரு பட்டதாரி மாப்பிள்ளையைத் தேடிக்கொண்டிருந்தார்கள். மிக வசதி படைத்த அவளின் குடுப்பத்தின் தேவைக்குப் பலியாடுகளாக எத்தனையோ தமிழ் இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள்.

‘உனக்கு விருப்பமான பெட்டையைச் செய்துகொள்’ என்ற பாசத்துடன் சொன்ன தாயை ஏறிட்டு நோக்கினார் மஹாதேவன்.

‘நான் விரும்பிய பெண்ணுக்கும் எனக்குமிடையில், ஒரு பெரிய இனக்கலவரமும்,ஏழுவருடங்களும் வந்துபோய்விட்டன. அம்மா, நான் தமிழன், அவள் சிங்களப்பெண்,அவள் இப்போது எங்கேயிருக்கிறாள் என்று கூட எனக்குத் தெரியாது’ என்று அம்மாவுக்கு உண்மையைச் சொல்லத் துடித்தார். மாமரத்துத் தென்றல் அவர் நினைவுகளுடன் சிலிர்த்தது.

‘அம்மா, தங்கச்சிக்கு வயது போய்க்கொண்டிருக்கு. மாம்பிள்ளை எடுக்கிறது பெரிய கஷ்டம்.இந்தக் கனடா மாப்பிள்ளையை எப்படியும் செய்யப் பார்ப்பம்’ தொலைந்து போன அவரது காதலி நர்மதாவை நினைத்துக்கொண்டு; தனக்குப் பக்கத்தில் சொரிந்து பூத்துக் கிடந்த சிவப்பு ரோஜாக்களைத் தடவியபடி சொன்னார்.

அதைக்கண்ட தாய்,’ரோஜாவில முள் இருக்கும் மகனே’ என்று சொல்லிக்கொண்டு அவரின் கைகளை ரோஜாப் பூவிலிருந்து விலக்கினாள்.

ரோஜாப் பூவில் முள் இருந்தால் தொடாதே என்று சொல்ல தாய் இருப்பாள். வாழ்க்கையில் முள் இருந்தால் எடுத்துவிட,அன்புள்ள ஒரு தாரமில்லாவிட்டால்..?

‘அம்மா,நான் சீதனம் வாங்காமல் கல்யாணம் செய்தால், சின்னத் தங்கச்சிக்குக் கல்யாணம் நடக்காது.. நான் விரும்பிய பெண்ணைச் செய்யுற் காலம் எப்பவோ கடந்து போயிற்று’ இதைச் சொல்லும்போது எரிமலையாகும் தன் உணர்வுகளைக் காட்டாமல் தனது குரலைச் சாதாரணமான தொனியில் வைத்துக்கொண்டார்.

அன்றிரவு,அவருடன் இளமைக் கனவைப் பகிர்ந்து கொண்ட நர்மதா வீரக்கோன் கனவில் வந்தாள்.

இளமை ஒரு கனவு.சிலவேளைகளில் மிக மிக இனிமையான அனுபவங்களைத் தாராளமாக அள்ளிக் கொடுப்பது.எதிர்கால வாழ்க்கைக்கு அத்திவாரமாக இருப்பவை அந்த அனுபவங்களின் தாக்குதல்களே.

அவர் பெருமுச்சு விட்டார். இப்போது அவரின் ‘பாதிவாழ்க்கை’ அவர்களின் படுக்கையறைக் கட்டிலில் அவர் உடம்பு படாமல் ஒதுங்கிப் படுத்திருக்கிறது.

மஹாதேவன் கற்பனை செய்த தாம்பத்திய வாழ்க்கைவேறு. குடும்ப சூழ்நிலை காரணமாக அவர்,கீதா குடும்பம் கொடுத்த சீதனத்திற்காக அவரை’விற்றுக்கொண்டாலும்’அவர் கீதாவால் விலைக்கு வாங்கப் பட்ட வெறும் பண்டமாக இல்லாமல்,அவளுடன் சேர்ந்து வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள கொள்ள வந்த ‘பார்ட்னர்’ என்று நடக்க முயன்றபோது,இவரை அவள் ஏற இறங்கப் பார்த்தாள்.

படுக்கையறையிலும் ரேஷன்!

‘என்னை நீங்கள் கல்யாணம் செய்ய உங்களுக்குத் தரவேண்டியதெல்லாவற்றையும் தந்துவிட்டன். இப்ப என்ன கண்ட கண்ட நேரமெல்லாம் என்னைத் தொட்டுக்கொண்டு..’அவள் இப்படித்தான் அதிர்ந்தாள்.

மஹாதேவன் அவமானத்தால் குன்றிப்போனார். ஆத்திரத்தில் திணறினார்.

அவள் அவரின் மனைவி.அவருக்கு விருப்பமான நேரத்தில் அவளைத் தொடக்கூட உரிமைகிடையாதாம்!

‘நான் என்ன தேவடியாளா நீங்க விரும்பின நேரத்தில எல்லாம் கட்டிலுக்கு வர?’

உடல் உறவில் இணையும் தாம்பத்தியத்தின் நெருக்கத்தை உணராதவளா இவள்?

அவர் அப்படியே கூனிக் குறுகி ஸ்தம்பித்து விட்டார்.

லண்டன் ஹைட்பார்க்கில் இருக்கும் ஸ்பீக்கர் கோர்னருக்குப்போய், அங்குள்ள பெட்டிகளில் ஏறிநின்று,தங்களுக்குப் பிடித்த அரசியலையோ,தத்துவங்களையோ யாரும் பேசி முழங்கலாம்.

தானும் ஒருநாள் அங்குபோய், ஒரு பெட்டியில் ஏறிநின்று,’கல்யாண சந்தையில்,ஒரு இலங்கைத் தமிழனின் விலை’ பற்றிய வரைவிலக்கணப் பிரசங்கம்; கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்.

முதற் குழந்தை ஆண் குழந்தையாய்ப் பிறந்ததில் கீதாவுக்குச் சந்தோசம்.’பெட்டைச் சனியன்களைப் பெற்றால் பெரிய கரைச்சல்’ அவரின் குடும்பத்தைச் சாடிய படி அவள் தனது வைர அட்டியலைச் சரிசெய்துகொண்டு சொன்னாள்.

இப்போது அவளின் வைர அட்டியல் பெட்டியில். அவளின் கணவர் கட்டிலில் ஒதுங்கிப்போய்த் தன்னைக் கம்பளிப் போர்வைக்குள் புதைத்துக்கொண்டார்.

இன்றைக்கு நடந்தது.. அப்படிச் சொல்லக்கூடாது. இன்னும் கொஞ்ச நேரத்தில் விடியப்போகிறது.

நேற்று நடந்தவகைகளை நினைத்துப்பார்த்தார். நேற்றுக்காலை அவரின் தமக்கையிடமிருந்து கடிதம் வந்திருந்தது.அவள் படும் துயரை அழுது எழுதியிருந்தாள்.

‘தம்பி என்மகனின் உயிரை நீதான் காப்பாற்றவேணம்.ஊரில் அவன் நின்றால்,தமிழ் இயக்கங்கள் அவனைத் தங்களுடன் சேரச் சொல்கிறார்கள்.கொழும்புக்குப் போனால்,சிங்கள் அரசாங்கம்,தமிழப் பையன்களெல்லாம் பயங்கரவாதிகள் என்டு சொல்லி வேட்டையாடுது.அவனைக் கனடாவுக்கு அனுப்ப ஏஜென்சிக்காரர்கள் நாலு லட்சம் கேட்கிறார்கள். தம்பி, நீ லண்டனில நல்லா இருப்பதாகக் கேள்விப்பட்டன். தயவு செய்து என்ர மகனைக் காப்பாற்ற உதவி செய்’

அவர் கண்களில் நீர் வழிகிறது. கீதாவுக்கு விலைப்பட்டவர் அவர். அவளுக்காக லண்டனுக்கு வந்து மிகக் கஷ்டப்பட்டு உழைப்பவர்.அவரின் உழைப்பு,அவளின் வைர அட்டியலுக்கும்,பேர்த் டே பார்ட்டிகளுக்கும் விரையமாகிக் கரைகிறது. கீதாவிடம் அவர் தனது மருமகனுக்காக உதவி கேட்க முடியாது.

‘உங்களுக்கு லட்சக்கணக்காச் சீதனம் தந்திட்டன். அதற்கு மேலால என்னிட்ட ஒன்டும் கேட்க முடியாது’ என்று அவர் மனைவி எப்போதோ சொல்லி விட்டாள். என்றோ ஒருதரம் அவள் தந்த சீதனத்துக்காக,அவரின் ஆளுமையை, எதிர்கால உழைப்பை எல்லாம் அவள் உடமையாக்கிவிட்டாள்.

நாளைய பார்ட்டியின் செலவு சில ஆயிரம் ஸ்ரெலிங்ஸ். அவளின் அட்டிகையின் விலை பல ஆயிரம்.

இப்படிச் செலவழித்த பணத்துடன் இன்னும் கொஞ்சம் போட்டால்,இலங்கையில் உள்ள அவனின் அன்பான குடும்பத்திலுள்ள ஒரு இளைஞனின்.

உயிரைக் காப்பாற்றலாம்.

‘உங்கட குடும்பத்துக்கு இடம் கொடுத்தால், எங்கள நிம்மதியாக இருக்கவிடமாட்டுதுகள்’ கீதா,அவரின் குடும்பத்தை ஏதோ ஆடு மாடுகள் இனத்தில்ச் சேர்த்துப் பேசுவாள்.

அவரால் அவளுக்கு எதிராக மூச்சுவிட முடியவில்லை.

‘நீங்கள் மட்டுமா உதவி செய்யவேணும், என்னிட்டச் சீதனம் வாங்கி நீங்க கல்யாணம் செய்து கொடுத்துக் கனடாவில் போயிருக்கிற உங்கட கடைசித் தங்கச்சி உதவி செய்தா என்ன?’ கீதா விடாப்படியாகத் தர்க்கம் செய்கிறாள்.

அவர் நித்திரையின்றிப் பெருமூச்சுவிடுகிறார்.

விடிந்து விட்டது. அன்று,சனிக்கிழமை. பின்னேரம் அவர்களின் மகனின் பேர்த் டே பார்ட்டி நடக்கவிருக்கிறது. பார்ட்டி நடக்கவிருக்கும் ஹால் அலங்காரம் செய்யவேண்டிய சாமான்களை கொண்டுபோய் வைக்கச் சொல்லி கீதா சொல்லிவிட்டு,யாருடனோ டெலிபோனில் அலட்டிக்கொண்டிருக்கிறாள்.

பகல் பத்து மணிக்கே லண்டனில் அஹோர வெயிலடிக்கிறது.லண்டன் தெருக்கள்,இளம்பெண்கள்,இயற்கை கொடுத்த கொடையான அவர்களின் பருவ வளர்ச்சி அற்புதங்களை,அரைகுரையான கவர்ச்சி ஆடைகளுடன் வெளியில் காட்டும்; விளம்பர நிலையங்களாக்கிக் கொண்டு வலம்வரத் தொடங்கி விட்டார்கள்.

ஹாலுக்குப் போகும் வழியில் காரைத் திருப்பியபோது, றோட்டைக் கடக்க நின்ற பெண்ணைக்கண்டதும் அவர் திடுக்கிட்டார்.

நேற்றிரவு,பழைய நினைவுகளை மனதில் படம்போட்டுப் பார்த்தபோது அவர் இதயத்தை வருடிய நர்மதா வீரக்கோன் அவரின் காரைக்;கடக்கும் பலரில் ஒருத்தராய் நிற்கிறாள்!

அவரின் வாழ்விலிருந்து எப்போதோ கடந்து போனவளாக அவாரால் நினைக்கப் பட்டவள்.

பல வருடங்களுக்கப்பாலும் அவளைக்கண்டதும், அவர் இதயம் துள்ளுகிறது.

அவரை அறியாமல்,’ நர்மதா’ என்று இரைகிறார்.

றோட்டைக் கடந்த அவள் குரல் வந்த திசையில் தன் பார்வையைத் திருப்பினாள்.

‘மஹா..@ ஆச்சரியத்தில் அவள் தொண்டை அடைத்திருக்கவேண்டும்

அவர் தனது காரை, ஒரு ஓரத்தில் நிறுத்தினார். அவள் அவரை நோக்கி வந்தாள். எத்தனையோ வருடத்தின்பின் லண்டன் மத்தியிலுள்ள தெருவின் ஓரத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள்

என்ன பேசுவது?

உலகத்தின் அழகான யூனிவர்சிட்டிகளில் ஒன்றெனக் கணிக்கப்படும் இலங்கை,பேராதனை யூனிவர்சிட்டிப் பூந்தரையில்,உயர் மலைகள் தவழ்ந்து வந்து அவர்களைத் தழுவும் தென்றலின் வருடலில், உலகத்தைத் திருத்தும் தர்மமான கருத்துக்களை உணர்ச்சி பொங்கக் கொட்டிப் பேசிய அரசியல் வாதங்களை இன்னுமொருதரம் ஞாபகப்படுத்தலாமா?

‘எழுபத்தி ஏழாம் ஆண்டு இனக்கலவரத்தில் உங்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் தவித்துவிட்டேன்’ என்று அவள் ஓடிவந்து அவர் மார்பில் சாய்ந்து ஓலம் வைத்ததை ஞாபகப்படுத்துவதா?’

அம்மா சொன்னாளே ‘உனக்கு விருப்பமான பெட்டையைச் செய்து கொள்’ அப்போது அவர் ‘இவள்தான் எனக்குப் பிடித்தவள்’ என்று சொல்லத் துடித்தாரே அதை ஞாபகப் படுத்தலாமா?

அவள் எப்போதோ அவர் வாழ்க்கையிலிருந்து பல காரணங்களால் பிரிந்துவிட்டாளே.

என்ன ஆச்சரியம். எத்தனையோ வருடங்களின்பின்,அதுவும் அந்நிய நாடான இங்கிலாந்தின் தலைநகர் லண்டனின் தெருவோரத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள்.

‘ நாங்கள் கடைசியாகக் கண்டு எத்தனையோ வருடங்களாகிவிட்டன’ அவர் உணர்ச்சி ததும்ப முணுமுணுக்கிறார்.சிரிப்பம் அழுகையும் அவர் குரலில்.

‘கெட் இன் நர்மதா’ தனது காரைத் திறந்துவிடுகிறார்.அவர் குரலில் எதோ விதமான ‘உரிமையும்’ இணைவும்.அவள் அவரைப் புரிந்து கொண்ட சினேகிதி. அப்படி அவர் கீதாவுடன் எப்போதாவது சொல்லியிருப்பாரா? கிடையவே கிடையாது.

அவள் மௌனமாக ஏறி உட்கார்ந்தாள் எத்தனை வருடப் பிரிவ?

இன்று,சட்டென்று வந்து பக்கத்தில் இருக்கும் நர்மதாவுடன் எதைப் பேசுவது?

‘எனது மகனுக்கு இன்று ஐந்து வயதுப் பேர்த் டே பார்ட்டி’ எதையோ பேசுவதற்காக அவர் சம்பாஷணையைத் தொடங்குகிறார். அவர் இப்போது தான் ஒரு தகப்பன் என்பதை அவளுக்குச் சொல்கிறாரா?

அவள் ஒரு வித சலனமுமின்றி அவரை ஏறிட்டுப்பார்த்தாள்.

‘நீ ஒரு தமிழன், எப்படி உன்னிடம் வேறுவிதமான வாழ்க்கையை எதிர்பார்க்க முடியும்?’ என்ற பார்வையா அது? அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

‘ யு ஆர் வெரி லக்கி’ அவள் குரல் தடுமாறுகிறது. அவளின் தொனி அவரில் உள்ள அன்பை வெளிப்படுத்துகிறது. நர்மதாவை அவருக்குத் தெரியும். மூன்று வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். தாங்கள் வாழும் சமுதாயத்துக்கு நன்மை தரும் என்ற நம்பிக்கையில்,பல விதமான தத்துவார்த்த சிந்தனைகளால் ஒன்றுபட்டுச் சினேகிதர்களாகத் திரிந்தவர்கள்.

அதையும் தாண்டிய நெருக்கத்தில், இளமையின் அப்பழுக்கற்ற கற்பனைகளுடன் அபூர்வ இணைவுடன் பழகியவர்கள்.அவளை அவருக்கு அன்று நன்றாகத் தெரிந்திருந்தது.

அவரின் இன்மையான காதலை, குடும்பப் பொறுப்பை நிறைவேற்ற அதைத் தியாகம் செய்யும் அவரின் வேதனையை உணர்ந்தவள்.

‘நர்மதா.நான் உன்னைக் காதலிக்கிறேன். ஆனால் உன்னை நான் திருமணம் செய்து கொள்ள எனது குடும்ப நிலை விடுமோ தெரியாது’ என்று அவர் விம்மலுடன் கெஞ்சியதை உணர்ந்து கொண்ட நர்மதாவை அவருக்கு நன்றாகப் புரியும். அவள் அவரின் சினேகிதி. எவ்வளவு காலம் பிரிந்திருந்தாலும் ஒருத்தொருக்கொருத்தர் புரிந்து கொள்ளும் மானசீகமாக மதிப்பை உணர்ந்தவர்கள் அவர்கள்.

ஆறுவருடத் திருமணத்தில் அவரின் படுக்கையறையைப் பகிர்ந்துகொள்ளும் மனைவி கீதாவை அவருக்குப் புரியுமா?

நர்மதா அவரின் சினேகிதி;.அவர் அவளை ஏறிட்டு நோக்கினார்.

‘ஏன் லக்கி என்று சொன்னாய், ஐந்து வயதுப் பையனுக்கு ஆயிரக்கணக்காகச் செலவழித்துப் பார்ட்டி வைக்கிறாளே என் மனைவி அது லக் என்ற சொல்கிறாயா?’அவர் விரக்தியுடன் சொன்னார்.

‘வாழ்க்கையே தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் ஒரு பார்ட்டிதானே? போலி,பொய், நடிப்பு, நாடகம்’ அவள் சிரித்தாள் துன்பத் தொனி படர்ந்த சிரிப்பு.

அவர் பதில் சொல்லவில்லை. அவர்களுக்குள் இதுவரையிருந்த எத்தனையோ வருடப் பிரிவுகள் மறந்து விட்டது போன்ற உணர்ச்சி. அவளுடன் பக்கத்திலிருந்து பேசிக் கொண்டிருக்க வேண்டும்போலிருந்தது.

‘நீ எப்படியிருக்கிறாய்?’

‘முரண்பட்ட அரசியல் கருத்துக்கள் எனது கணவரைப் பலி வாங்கி விட்டது’ அவள் நீர் வழிந்த கண்களுடன் விம்மினாள்.கன்னங்கள் அவள் கண்ணீரைத் தாரையாக்கியது.

அவளைத் தொட்டு அந்தக்கண்ணீரைத் துடைக்க நினைத்தார் மஹாதேவன்.

ஆயிரம் வருடங்கள் பிரிந்திருந்தாலும்,அவளின் கண்ணீர் அவரைத் துடிக்கப் பண்ணும் என்பது அவருக்குத் தெரியும். அவர்கள் நேர்மையாகப் பழகவும் பேசவும் ஒருசில மேன்மையான பேராசிரியர்களால்.பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கப் பட்டவர்கள்;.

‘பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள்,தங்களுக்கப் பிடிக்காத பத்திரிகை நிருபர்களை எப்படி இலங்கை அரசு கொலை செய்கிறார்கள் என்பதை’

அவள் குரல் உடைந்து கரகரத்தது.

அவர் பெரு மூச்சுவிட்டார். நீண்ட இடைவெளியின் பின் தங்களின் சோக காவியத்தை இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

அவள் தொடர்ந்தாள்.

‘அரசியல் நேர்மை கெட்டவர்களால் நிறைந்த ஒரு கேவலமான சதுரங்க விளையாட்டாக மாறிவிட்டதால், மக்களுக்கு உண்மையைச் சொல்லும் விடயங்களை எழுதிய குற்றத்திற்காக, எனது கணவரை இலங்கை அரசாங்கம்-இனம் தெரியாத பேர்வழிகள் மூலம் கொலை செய்த கடலில் எறிந்துவிட்டார்கள்.பல நாட்களுக்குப் பின் எனது கணவர் அழுகிய பிணமாகக் கடற்கரையில் ஒதுங்கிக் கிடந்தார். இதுதான் இலங்கையில் நடந்துகொண்டிருக்கிறது. சமத்தவத்திற்குக் குரல் கொடுப்பவர்கள், யாராயிருந்தாலும்- தமிழர் ,சிங்களவர் என்ற பேதமின்றி அரசாங்கத்தால் அழிக்கப்படுவார்கள்’

அவளின் அழுகை அவரின் இதயத்தைப் பிழிந்தெடுத்துக்கொண்டிருந்தது.

‘ஐ ஆம் வெரி சாரி நர்மதா’ அவர் அவளைத்தேற்ற வேறு வார்த்தைகள் வராததால் அனுதாபமான சில வெற்றுச்சொற்களால் தன் துயரை வெளிப்படுத்தினார்.

இலங்கையில் நடைபெறும் கொடுமையான அரசியல் யாரைத்தான் விட்டு வைக்கிறது?

‘கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் லண்டனுக்கு வந்தேன். எனது குழந்தைகளைப் பாதுகாக்க நாடோடி வாழ்க்கையைத் தவிர வேறு ஒன்றும் எனக்குத் தெரியவில்லை’ அவரை நேரே பார்த்படி சொன்னாள். அவளின் நீர் ததும்பும் விழிகளில் தன்னைக் கண்டார் அவர்.

‘ நான் உங்களைக் கண்டதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்’ அவள் விம்மினாள்.

‘ நர்மதா,உன்னைக் கண்டது எனக்கும் மிகவும் சந்தோசமாக இருக்கிறது’

அவளிடம் உண்மையான தனது மனவோட்டத்தை வெளிப்படுத்தினார்.

‘நான் எனது சொந்தக்காரர் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். இதுதான் எனது டெலிபோன் நம்பர்’ அவள் ஒரு சிறுபேப்பர் துண்டில் தனது நம்பரை எழுதிக் கொடுத்தாள்.

‘வில் யு கம் டு மை சண்ஸ் பேர்த் தே பார்ட்டி’ அவளை விட மனமில்லாத அவசரத்தில் அவர் கேட்டார்.

‘மஹா, எனக்கு இந்த ஆடம்பரமான பார்ட்டிகள் எல்லாம் பிடிக்காது ,உங்களோடு பழகிய காலத்தில் எனக்கிருந்த சமூக சிந்தனை இன்னும் மாறவில்லை.. அவ்வளவு செலவு செய்து ஊதாரித்தனமாகச் செலவழிக்கும் பணத்தை, இலங்கையில் பட்டினியால் வாடும் குழந்தைகளுக்குக் கொடுத்தால் நன்மையாயிருக்கும் என்பது எனது கருத்து. அதையும் விட, அரச கையில் அல்லது, தீவிரவாதக் கோஷ்டிகளால் உயிரைக்கையிற் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு உயிரைக் காப்பாற்றினால் அது சமுதாயத்துக்குச் செய்யும் நன்மையாக இருக்கும்.பார்ட்டி வைப்பது உங்கள் குடும்ப விடயம். ஆடம்பர நாடகங்கள் எனக்குப் பிடிக்காது. தயவு செய்து மன்னிக்கவம்’

நர்மதா போய்விட்டாள்.

தீவிரவாதிகளிடமிருந்து தனது உயிரைக் காப்பாற்ற ஊரைவிட்டோடத் தன்னிடம் உதவி கேட்கும் அவரின் மருமகனின் பாதாபமான முகம் அவர் நினைவில் நிழலாடியது.

அவர் வீட்டுக்குப் போனபோது, பார்ட்டிக்குப் போக, மிகவும் ஆடம்பரமாக அலங்கரித்துக்கொண்டு அவர் மனைவி கீதா வெளிக்கிட்டுக்கொண்டிருந்தாள்.

‘கீதா’அவர் குரலில் கடுமை,அத்துடன் ஒரு தெளிவான தொனி. அவள் அவரிடம்,’என்ன என்ற கேட்காமல் அவரைப் பார்த்தாள்.

‘அக்காவின்ர மகன்- என்ர மருமகன் கனடா போக நாங்கள் உதவி செய்யவேணும்’ அவள் அவரை ஏற இறங்கப் பார்த்தாள்.

‘ஐயாயிரம் பவுண்ஸ் பாங்கில கடன் எடுக்கப் போறன்’ அவர் நிதானமாகச் சொன்னார். அவள் கண்களில் நெருப்புப் பொறி.

‘நடக்காது’ அவள் வெறிபிடித்தவள்போற் கத்தினாள்.

‘ எனது சம்பளத்தில நான்தான் கடன் கட்டப்போறன். நீ தந்த உன்ர சீதனக்காசில நான் தொடவில்லை’ அவர் உறுதியாகச் சொன்னார்.

‘அதென்ன நீங்கள் நான் என்ற வேறுபாடு.. நீங்க உழைக்கிற பணம்..’-அவள் கெட்டிக்காரி,அவரின் மனவோட்டத்தை ஒரு நொடியில் எடைபோட்டுவிட்டாள்.

தனது குரலை மென்மையாக்கி அவரை நேராகப் பார்த்தபடி சொன்னாள்.

‘கீதா,நீயும் நானும் எப்பவும் வேறுபட்ட மனிசராகத்தான் நடக்கிறம்.நீ என்னை ஒரு சராசரிக் கணவானக்கூட நடத்தியதாக நான் உணரவில்லை.அது உனக்குச் சரியாகத் தெரியும். ஓரு மனித உணர்ச்சியுள்ள மனிதனாக நான் வாழ நீ தடையாக இருப்பதை இனியும் நான் சகித்துக் கொண்டிருக்கப் போவதில்லை’

நர்மதாவை இன்று அவர் காணாமல் இருந்தால் அவர் இப்படி உறுதியுடன் கீதாவுடன் பேசியிருப்பாரா தெரியாது.

‘ஐயாயிரம் பவுண்ஸ்’ அவள் மிகவும் மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.

‘ஆமாம். ஐயாயிரம் பவுண்ஸ். நோ பிளடி எக்ஸ்பென்சிவ் பார்ட்டிஸ் எனிமோர் இன் திஸ் டாம்ன் ஹவுஸ் ப்போர் எ லோங் ரைம்’ அவர் குரலில் இடி மின்னல் பறந்தது.

அவரின் மருமகனுக்குப் பதினெட்டு வயது. அவரின் உதவியுடன் உயிர் தப்பி வாழ்ந்தால்- அவன் படித்து உழைத்தால் அவன் மட்டுமல்ல அவனை நம்பியிருக்கும் அவரின் தமக்கையின் குடும்பமும் பட்டினியின்றி வாழும். அவர்களின் எதிர்காலம் பரவாயில்லாமலிருக்கும்

‘தாங்க் யு நர்மதா’ அவர் மனம் முணுமுணுத்தது.

‘நீங்கள் ஏன் இப்படி மாறினீர்கள்?’ கீதா அழத் தொடங்கிவிட்டாள்.அவளின் வாழ்க்கையில் முதற்தரம் அழுகிறாள்.

அவர்களின்,ஆறுவருடத் திருமணத்தில் அவர் தனது சுயமையை,ஆளுமையை,ஆண்மையின் தேவைகளின் ஆசைகளை இழந்து மனம் விட்டுத் தனிமையில் பல தரம் அவர் அழுததை அவள் அறியமாட்டாள்.

‘நான் மாறவில்லை. சாதாரண மனிதனாக- சாதாரண ஆசை அபிலாசைகள உள்ள, குடும்பஸ்தனாக வாழத்;துடிக்கிறேன்.’ அவரின் நெகிழ்ந்த உணர்வினால் அவரின் இதயம் பட படவென அடித்துக்கொள்கிறது. நெஞ்சைத் தடவிக் கொள்கிறார். அப்போது அவர் கைகளில் அவரைப் புரிந்துகொண்ட சினேகிதி நர்மதாவின்; டெலிபோன் நம்பர் எழுதிய பேப்பர் தட்டுப்படுகிறது.

(யாவும் கற்பனையே)

– ‘சக்தி’ பிரசுரம் – நோர்வே – 02.03.1994

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *