“டேவிட்டு, அப்பா போய்ட்டாருடா” என்று போனில் அலறிய அம்மாவின் குரல் என்னை உலுக்கியது. மணி காலை நான்கு.
“என்னம்மா சொல்ற? நல்லாத்தானே இருந்தார்? திடீர்ன்னு எப்படி”
“ஆக்சிடென்ட்ரா டேவிட். பெரிய கார எடுத்துக்கிட்டு கொடைக்கானல் போனார் அப்பா. ஒரு பிசினஸ் விஷயமா. வர்ற வழில ஆக்சிடென்ட். அங்க formalities முடிஞ்சுதான் இங்க வரணும். நான் உன் சித்தப்பாவோட இன்னும் அரை மணில கெளம்பறேன். நீ ஒடனே கெளம்பி சென்னை வாடா.” என்று போனை வைத்தாள்.
சிங்கப்பூரிலிருந்து சென்னை அதிக தூரமில்லை என்பதாலும் டைரக்ட் பிளைட் கிடைத்தாலும் நான் சீக்கிரமே சென்னை வந்து சேர்ந்தேன். வந்து சேர்ந்ததும் அம்மாவுக்குப் போன் செய்தேன். மறுநாள் காலைக்குள்ள வந்துடுவோம்ன்னு சொன்னாங்க. அப்புறம் அவங்க சொன்னது தான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. “டேவிட்டு, ரொம்ப அடி பட்டிருக்குடா அப்பாவுக்கு. மொகம் பார்க்கவே ரொம்ப கஷ்டமாயிருக்கு. அதனால நீ நம்ம சர்ச் பாதர் கிட்ட கலந்துக்கிட்டு நல்லா பாடம் செய்யறவங்க யாருன்னு கேட்டு வய்யி. நாளைக்கு டைரக்டாவே அங்க எடுத்துக்கிட்டு போயிடலாம்’னு சொன்னாங்க.
சாயந்தரம் சுமார் நாலு மணிக்கு நான் சர்ச்சுக்குப் போனேன். அப்பா ந்யூஸ் கேட்ட பாதர் தன்னோட வருத்தத்தத் தெரிவிச்சுக்கிட்டாரு. கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்த பின்ன வந்த விஷயத்தைச் சொன்னேன். உடனே அவர் ஒரு நம்பர் தந்தார்.
“டேவிட்! இவர் ரொம்ப நாளா எனக்குப் பழக்கம். நல்லா பண்ணுவாங்க.: என்று சொன்னவர் ஏதோ நினைத்துக்கொண்டவர் போல “இரு! போன வாரம் புதுசா ஒருத்தர் வந்து கார்ட் தந்துட்டுப் போனாரு. அவரும் நம்ம கிறிஸ்டியன் தான். ஆனா கெமிக்கலுக்குப் பதிலா ஏதோ ஹெர்பல் எக்ஸ்ட்ராக்ட் யூஸ் பண்றாங்களாம். அதையும் தர்றேன்” என்றார்.
நான் அந்த இரண்டு நம்பரையும் வாங்கி கொண்டேன். அவரிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்த நான் அந்த இரண்டு நம்பருக்கும் கால் செய்தேன். ஒருத்தர் மவுண்ட் ரோடு. இன்னொருத்தர் கேளம்பக்கத்துல ஒரு இடம். இரண்டாவது எனக்குப் பக்கம் என்பதால் அங்கு முதலில் செல்ல முடிவு செய்தேன்.
ஒரு அரை மணியில் அந்த அட்ரஸில் இருந்தேன். ஒரு மிகச் சாதரணமான பில்டிங். இரண்டு பக்கமும் காலி மனைகள் (யாருடையது என்று விசாரிக்க வேண்டும்).
Star Undertakers (Traditional and Herbal) என்று ஒரு டல்லான போர்ட். உள்ளே சென்றேன். சென்றவுடன் என்னைத் தாக்கியது இன்னதென்று சொல்ல முடியாத ஒரு வாசனை. இந்த இடத்தில் கெமிக்கல் வாசம் வருமென்று பார்த்தால் பூ வாசம் வருகிறதே என்று நினைத்தேன்.
ரிசப்ஷன் மாதிரி ஒரு ரூம். ஒரு பெரிய சைஸ் பாத்ரூமை விட சற்று சின்னது. ஒரு சிறிய மேஜை. அதன் பின் சேரில் ஒருத்தர் அமர்ந்திருந்தார்.
உள்ளே நுழைந்த என்னை “எஸ்?” என்று கேட்டார்.
“Father Paul Manickam sent me” என்று அந்தக் கார்டை அவரிடம் தந்தேன்.
கார்டைப் பார்த்தவர் முகம் பிரகாசமானது. “Please take your seat” என்று சொன்னார். அந்த பூ வாசம் ரிசப்ஷனிலும் நிறைந்து இருந்தது.
“சொல்லுங்க”
நான் சுருக்கமாக அப்பா பற்றி சொன்னேன். பொறுமையாகக் கேட்டுவிட்டு, என்னைப் பற்றிய விவரங்கள் கேட்டார்.
நான் சிங்கப்பூரில் மிக பெரிய பிசினெஸ் செய்வதையும், அப்பா மீது என் குடும்பத்தாரின் பாசம் இதெல்லாம் கேட்டதும் அவர் முகத்தில் மிக மெலிதான ஒரு மாற்றம்.
“லுக் மிஸ்டர் டேவிட், வேலைய கச்சிதமா முடிச்சிரலாம். எந்த மாதிரி பாக்கேஜ் வேணும்னு டிசைட் பண்ணிச் சொல்லுங்க. இந்தாங்க எங்க catalogue” என்று ஹோட்டலில் மெனு கார்ட் கொடுப்பதைப் போல கொடுத்தார்.
எனக்கு ஒரே ஆச்சர்யம். பாக்கேஜா? இது என்ன புதுசா இருக்குன்னு யோசிச்சுக்கிட்டே அந்த catalogue புக்கைத் திறந்து பார்த்தேன்.
Star Undertakers (Traditional and Herbal) பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகத்துடன் ஆரம்பித்து இருந்தது. அப்புறம் அடுத்தப் பக்கத்தில் அவர்கள் பாக்கேஜ்கள் பெயரும் அதன் பக்க எண்ணும் குடுத்திருந்தது.
One star package – Page 1
Two star package – Page 15
Three star package – Page 27
திறந்து படிக்கலானேன். One star package வழக்கமான முறையில் பாடம் செய்வது பற்றி இருந்தது. நிறைய டெட் பாடிக்களின் படங்கள் இருந்தன. பாடம் செய்வதற்கு , முன் பாடம் செய்த பின் என்று. மனம் கனத்தது. மூடி வைத்துவிட்டேன்.
“ஏன்?” என்றார் அந்த ஆசாமி. “நீங்களே சொல்லிடுங்க” என்றேன்.
“சரி. One star package பார்த்தீங்க. நார்மல் தான். Two star package கொஞ்சம் காஸ்ட்லி. சில குடும்பங்கள்ள ஒருத்தர் மேல ஒருத்தர் ரொம்ப பாசமா இருப்பாங்க. உங்க குடும்பம் மாதிரி. அதுல ஒருத்தர் இறந்துட்டார்னா அதத் தாங்கக் கூட முடியாது. அந்த மாதிரி கஸ்டமர்ஸ்காக ஸ்பெஷலா தயாரிச்சது. இறந்தவர் உடலை பாடம் பண்ணுவதோடு அல்லாமல் அவரை மாதிரியே இன்னொரு உருவம் ரெடி பண்ணுவோம். லேட்டஸ்ட் தொழில் நுட்பம் மூலம் ஸ்கின், ஹேர், நகம் இதெல்லாம் கூட ரியலிஸ்டிக்காக இருக்கும். அச்சு அசல் இறந்தவர் மாதிரியே இருக்கும். மேலும், சவப்பெட்டியில் வைத்துவிட்டால், அவர்கள் குடும்ப டாக்டர் கூட கண்டுபிடிக்க முடியாது. இறந்த சொந்தக்காரர் உடம்ப வீட்டோடு ரகசியமா வச்சுக்கலாம். எவ்வளவு வருஷமானாலும் கெடாது. ஆனா ரேட் பத்து லட்சம்” என்று சொல்லி முடித்தார். நான் உறைந்து போனேன்.
“பயப்படாதீங்க, எந்த லீகல் பிரச்சனையும் வராது”
“Three star package?” என்றேன் ஈனச்ஸ்வரத்தில்.
“அது தான் எங்க கம்பனியோட சூப்பர் பேக்கஜ். இதற்கும் Two star package தான் base. அதே தொழில் நுட்பம். கூடவே நம்ம நாட்டோட பாரம்பரிய மூலிகைகளின் மகத்துவம்.
உங்களுக்குத் தெரியுமா? இமாலயத்தில் சஞ்சீவினி என்று ஒரு மூலிகை கிடைக்கிறது. அந்த மூலிகையின் சக்தி அளவிட முடியாதது. எந்தவித ரணமாயிருந்தாலும் ஆற்றிவிடும். மேலும் சஞ்சீவினி என்பதற்கு ஆங்கிலத்தில் “One that infuses life” என்று தான் பொருள். ராமாயணத்துல யுத்த காண்டத்துல
मृतसञ्जीवनीं चैव विशल्यकरणीम् अपि |
सौवर्णकरणीं चैव सन्धानीं च महौषधीम् ||
அப்படீன்னு அதன் reference வருமே அந்த சஞ்சீவினி தான். அதோட ரசத்தால பாடம் செஞ்ச உடலுக்கு உயிர் கொடுப்போம். ஊர் கண்ணுக்கு நீங்க அந்த டம்மி ஒடம்பப் பொதைக்கலாம். உங்க சொந்தக்காரர வீட்டோட வச்சுக்குங்க . இல்ல வேற ஊருக்குப் போயி செட்டில் ஆகிடுங்க. அதுக்கான கன்சல்டன்சி இந்த சார்ஜுல அடக்கம். இந்த Three star package cost இரண்டு கோடி.” என்று சொல்லி முடித்தார்.
நான் ஏதோ கனவுலகத்தில் இருப்பது போலவும் இதோ எழுந்து விடுவேன் போலவும் உணர்ந்தேன். என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். வலித்தது. நிஜம்தான்.
“நம்ப முடியல இல்லையா?” என்று மெலிதாகப் புன்னகைத்தார்.
“ஆமாம்.”
அந்த catalogueஐ திரும்பவும் என்னிடம் தள்ளினார். “முப்பதாம் பக்கத்தைப் பாருங்க”
நான் அவநம்பிக்கையுடன் முப்பதாம் பக்கத்தைத் திறந்தேன். Mr. Sebastian Selvapillai. Expired on 30.11.2012 என்று போட்டு எனக்கெதிரில் உட்கார்ந்திருந்த ஆசாமியின் படம் போட்டிருந்தது.
“Three star packageக்கான அட்வான்ஸ் எவ்வளவு” என்று கேட்டபடியே நான் செக் புக்கை எடுத்தேன்.
– ஜூன் 2014