படு வேகமாக வந்து தெரு ஓரத்தில் சர்ரென திரும்பியது அந்த வண்டி..!
தூக்கி வாரிப் போட்டு .. எழுந்து ஓரமா ஓடினேன் நான்..!
அம்மா டக்குனு பயந்து போய்ட்டாங்க.! “உன்ன தெரு ஓரமா படுக்காதேன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்.! ஒழுங்கா இங்க வந்து ஓரமா மரத்தடியில படு”..ன்னு பயத்தோட அதட்டினாங்க…. !
எனக்கும் ரொம்ப பயமாப் போச்சி.. பேசாம சைலன்ட்டா ஓடிப் போய் அம்மா கிட்ட படுத்துகிட்டேன்..! அக்காவும் ஏற்கனவே அம்மா கூடத்தான் இருந்தா..!
எனக்கு தூக்கம் வரல…!
அம்மாட்ட கேட்டேன்.. “அம்மா பசிக்குதும்மா..! ”
“கொஞ்சம் பொறுடா.. காலைலதான தோச சாப்ட.!”
“போம்மா அது நல்லாவேயில்ல.. ஜில்லுனு வெறைச்சு போயி..! ”
“என்ன பண்ண சொல்ரடா கண்ணு.. அதுதான போடராங்க.. நேத்து ராத்திரி செஞ்சு மிச்சமானதுடா அது.. !”
“நேத்து ராத்திரியே போட்ருந்தா நல்லா இருந்திருக்கும்லம்மா..?!”
“நல்லாதான்டா இருக்கும்.. ஆனா அப்டியெல்லாம் போட மாட்டாங்க..! தனக்கு வேண்டாம்னு உறுதியா தெரிஞ்சாத்தான் நமக்கு போடுவாங்கப்பா..! அது சரி தூக்கம் வரலியா உனக்கு..?!”
“இல்லம்மா… ஏம்மா நாம ஏன் ரோட்ல இருக்கோம்..? ஆனா அந்த ப்ரின்ஸ்.. ஒய்ட்டி மாதிரிலாம் நமக்கு வீடு இல்லையா.? அது மாதிரி பெரிய வீடு இருந்தா ஜாலியா இருக்கும்லம்மா..?”
“கொஞ்சம் வாய மூட மாட்டியா நீ..? தொண தொணன்னு..!” அக்கா.. புரண்டு படுத்தாள்…!
அம்மா இப்ப உண்மையிலேயே அக்கறையோட உத்து பார்த்தாள் ஒரு நிமிடம்…!
“எதுடா கண்ணு ஜாலி…? அங்க பாரு நீ சொன்ன ஒய்ட்டி..ப்ரின்ஸ்லாம் சங்கிலியில கட்டி வெச்சிருக்காங்க…. அவங்க வீட்டுக்குள்ள கூட போக விடரதில்ல… எப்ப பார்த்தாலும் கேட்டுலயே தலைய வெச்சுகிட்டு போர வர்ரவன பாத்து கத்தனும். இதுதான் அவங்க வேல…! ரெண்டு வேள சோறு கிடைச்சாலும் அது அடிமை வாழ்க்கைடா கண்ணு….இப்ப பாரு தெருவில நாம இருந்தாலும் நம்மள கேக்க யாருமில்ல.. தெருபூரா நம்ம வீடுதான்… இப்ப சொல்லு எது உண்மையான ஜாலி..! ”
“அட ஆமாம்.. அம்மா சொன்னது தான் கரெக்டு…அந்த ப்ரின்ஸ் இனிமே பீத்துனான்னா திரும்ப பதிலுக்கு நாமளும் நல்லா கேப்போம்னு நெனச்சுகிட்டேன்..!”
“ஏம்மா.. ! என் அப்பா யாரு..? ஏன் நம்ம கூட இல்ல” னு கேட்டேன்..!
அம்மா.. கொஞ்ச நேரம் அமைதியா இருந்தாங்க..?
“அப்பா.. அடுத்த தெருவில இருக்கார்ல வெள்ளயா உயரமா ..மணி..அவர்தான்டா கண்ணு உங்க அப்பா..!”
“அவரு ஏம்மா நம்ம கூட இல்ல..? ”
“அவரு சித்தி கூட இருக்காங்கடா.. ! வேற எதாவது கேளு” ன்னு பேச்ச மாத்தினாங்க… !
ஆமா நான் பாத்திருக்கேன்..நாங்க அந்த தெருவுக்கு சில சமயம் போகும்போது அப்பாவ பாத்திருக்கேன்.. அப்பாவும் என்ன பாப்பாரு.. அம்மாவையும் பாப்பாரு.. அப்புறமா தலைய வேற பக்கம் திருப்பிப்பாரு.. ஏன்னு தெரியாது.. ஆனா என்ன பாக்கும்போது மட்டும் எனக்கு என்னமோ பண்ணும் …!! அவருக்கும்தான் போல…! ஏன்னா எனக்கும் அவர மாதிரியே கண்ணுக்கு கீழ ப்ரௌன் கலர் பட்ட இருக்கே..!
“ஒரு நாளைக்கு நாமும் அவரோட சேர்ந்து இருக்கணும்மா.. அதாம்மா என் ஆச…!”
“நடக்கும்டா…நடக்கும் ..! கடவுள் இருக்காரு. சரி சரி.. அதை விடு..!”
“இல்லம்மா… நாம ஏன் இந்த தெருவில இருக்கோம்.. நம்ம தாத்தா பாட்டி கூட இதே தெருவுதானா..! ?”
அம்மா என்ன ஒரு நிமிஷம் வேதனையோட பார்த்தாங்க…! ஆனா உடனே கண்ல வேதனை போய் பெருமிதம் வந்த மாதிரி ஒரு உணர்வு…!
“இல்லடா கண்ணு… நம்ம பரம்பர பரம்பரையா பெரிய குடும்பம்..! வீரப் பரம்பரை…சண்டைக்கெல்லாம் போவமாம் முன்னாடி..!”
“நாம அடிக்கடி அந்த மேட்டுத் தெருவில இருக்கிற பெரிய பங்களாவுக்கு போவோம் தெரியுமா…?? அதுதான் நம்ம தாத்தா பாட்டிலாம் வாழ்ந்த அரண்மனை.. ஜமீன்தாருக்கு வேட்டக் காரங்களா..வயல் வெளி… ஆடுமாடுகளுக்கு பாதுகாவலர்களா.. வாழ்ந்திருக்கோம்… ! ”
“காட்டுக்கு வேட்டைக்கு போனா நாம நாலுபேர் சேந்தா சிறுத்த ஓநாயெல்லாம் அடிச்சு வெரட்டிடுவோம் னு உன் தாத்தா சொல்லியிருக்காரு… உன் அப்பாவ பாத்தியா அதே மாதிரி தான உயரமா கம்பீரமா இருக்காரு..?”
அம்மா கண்ல அப்பாவப் பத்தி சொன்ன உடனே ஒரு வெளிச்சம் பாத்தேன்..! இருக்காதா பின்ன..?!
“அப்புறம் ஏம்மா நம்மள இப்படி நடுத்தெருவில கொண்டு வந்துட்டாங்க… நம்மளயும் நல்லா பாத்துகிட்டா நாமும் அவங்கள நல்லா பாத்துக்கலாம்ல….?”
” இல்லடா கண்ணு.. இவங்களுக்கு வெளிநாட்டுக்காரங்க மேலதான் மோகம் அதிகம்… நம்மள தொரத்தி விட்டுட்டாங்க… பரவால்ல விடு.. இதெல்லாம் போட்டு மனச கொழப்பிக்காத” ன்னாங்க அம்மா..!
அடுத்த முறை அந்த மாளிக வீட்டுப்பக்கம் போனா நல்லா சுத்திப்பாக்கணும்.. என்னோட தாத்தா பாட்டி வாழ்ந்த வீடாச்சே னு நெனச்சுகிட்டேன்…!
அப்ப தோ..தோ..தோ.. னு ஒரு சவுண்டு.. பச்ச க்ரில் கேட்டு வீட்ல இருந்து..!!
இருடா வர்ரேன்னு அம்மா எழுந்து ஓடிப்போனாங்க…! அடுத்த தெருவில இருந்தும் ரெண்டு ஆன்ட்டிக ஓடி வர்ர சத்தம் வேற கேட்டது..
அம்மா உஷாரா முன்னாடியே ஓடிப்போனாங்க… அம்மாவுக்கு ஒரு கால் கொஞ்சம் விந்தி விந்தி நடப்பாங்க…யாரோ அடிச்சிட்டாங்களாம்..! அதனால வேகமா ஓட முடியாது… அதனாலதான் அப்பாவுக்கு பிடிக்கலையோ…? தெரியல..!
ஆனா அம்மா இந்த தடவ டக்குனு முன்னாடி போய் அந்த பேப்பர் பொட்லத்த எடுத்துட்டாங்க.. நேரா எங்ககிட்டதான் வந்தாங்க..!
“ரெண்டுபேரும் சாப்பிடுங்கப்பா… தயிர் சாதம்..வெயிலுக்கு நல்லது…! ”
“அம்மா நீயும் சாப்பிடும்மான்னு சேர்ந்து சாப்டோம்.. ! ”
ஒரு நாளைக்கு .. சர்ருனு ஒரு ஜீப்பு வண்டி வந்துச்சு.. அம்மா அதப் பாத்த உடனே “டேய் டேய் வாங்கடா. அந்த தோட்டத்துக்குள்ள ஓடிருங்க..” ன்னு பதட்டமா கத்துனாங்க… எனக்கு ஒன்னும் புரியல.. பக்கத்து தெருக்காங்களும் ஓடி ஔிய ஆரம்பிச்சாங்க…. நானும் அக்காவும் கூட அந்த குட்டி வாழ மரத்து பின்னால ஓடி ஔிஞ்சிகிட்டோம்..!
அப்பாவும் ஓடி வந்தாரு..வேக வேகமா ! ஓடி வரும் போது எங்க ரெண்டு பேரையும் ஒரு நிமிஷம் பாத்துட்டு திரும்ப வேற பக்கம் ஓடிட்டாரு….!
ஆனா அம்மாவால வேகமா ஓட முடியல..பாவம் கால்ல அடி பட்ருக்கே..! பின்னால ஸ்லோவா வந்தாங்க ..!
அப்ப அந்த வண்டில இருந்து ரெண்டு மூனு பேரு எறங்கினாங்க… கையில வளையம் மாதிரி ஏதோ..!
அக்கா சொன்னா..” டே தம்பி..! இவங்க நம்மள புடிக்கத்தான்டா வந்திருக்காங்க.. நம்மள புடிச்சு கொண்டு போய் ஜெயில்ல போட்ருவாங்களாம்.. அம்மா சொல்லியிருக்காங்க முன்னாடியே.. பத்திரமா ஔிஞ்சிக்கோ..ன்னா..!
ஓ .. இருக்கிற கொஞ்ச நஞ்சம் பேரையும் அழிக்கப் பாக்கராங்கன்னு மட்டும் புரிஞ்சது… வயித்துல ஏதோ பண்ணிச்சு.. பயமா.. கோபமா.. வருத்தமா ன்னு தெரியல..!
ஐயோ.. அவங்க அம்மாவ ரவுண்டு பண்ணிட்டாங்க… அம்மா மாட்டிகிட்டா.. ஓடவே முடியல…. நான் கோபத்துல யும் பயத்திலயும் கத்தினேன்.. அப்ப கூட குட்டியாத்தான் கத்த முடிஞ்சது..! அக்கா “கத்தாத கத்தாத”ன்னு அதட்டினா…! ஆனா என்னால முடியல..! கண்ணுக்கு நேரா அம்மாவ புடிச்சிட்டாங்க…! அம்மாவால திமிர முடியல…!
“என்னாங்க” ன்னு கத்தினா அம்மா…! அப்பாவத்தான் கூப்டரான்னு புரிஞ்சது… !
அப்பா வேகமா, பதட்டமா ஓடி வந்தாரு.. அந்த மாமரத்து பின்னாடி நின்னு எங்களயே பாத்தாரு..!
“என்னாங்க.. பசங்கள பாத்துக்கங்க”ன்னு அம்மா அப்ப கதறினது இன்னும் கண்ண விட்டு போகல..!!
போச்சு.. போச்சு.. எல்லாம் போஞ்சு.. அம்மாவ புடிச்சிட்டாங்க..ஒருத்தன் அம்மா மண்டையிலயே கம்பால அடிச்சான்..! படுபாவி.. அம்மா வால கத்த முடியல .. கீழ விழுந்துட்டாங்க…. தர தரன்னு அம்மாவ எங்க கண்ணு முன்னாடியே இழுத்து வண்டிக்குள்ள தூக்கி போட்டாங்க…!
எனக்கு துக்கம் தாங்கல.. அழுக அழுகையா வந்தது என்ன பண்ரதுன்னு புரியல.. ஓடிப்போய் அந்த ஆளுங்கள கடிச்சிரலாமான்னு யோசிச்சேன்.. ஆனா நான் இன்னும் குட்டிப்பையன்தான்கர உண்மை புரிஞ்சுது..!
நான் அப்பாவ பாத்தேன்.. அப்பா கண்ணும் கலங்கியிருந்தது.. வண்டியவே பாத்துகிட்டு இருந்தாரு.. ! நானும் அக்காவும் அப்பாவ பாத்து ஓடினோம்….!
தூரத்துல மல்லிகைச் செடி புதர் பக்கத்தல நின்னுகிட்டு சித்தியும் பாத்துகிட்டு இருந்தாங்க..!
நான் அப்பாவையே பாத்தேன்..! அப்பா னு துக்கம் தொண்டைய அடைக்க கூப்பிட்டேன்..!
அப்பா என்னையே உத்து பார்த்தாரு.. மெல்ல எங்கிட்ட வந்தாரு..!
முன்னங்கால தூக்கி என்னயும் அக்காவையும் தன்னோட சேர்த்து கட்டிகிட்டாரு…!
அப்பாவோட வாசன அடிச்சது..! முதல் முதலா..!
தலைய நிமிர்த்தி அந்த வண்டிய பார்த்தாரு.. அம்மா ஜன்னல் வழியா எங்கள பார்த்தாங்க.. கண்ல கண்ணீரோட ஒரு சந்தோஷம்…. பலமா கத்துனாங்க..! “நல்லா இருங்கடா பசங்களா..!”
அப்பா அம்மாவையே பார்த்தாரு… அம்மாவும்தான்..!
நான் இனிமே அப்பா கூடத்தான் இருக்கப் போறேன்னு புரிஞ்சிடுச்சு…!
ஆனா அம்மா இல்லாம….!
வண்டி கிளம்பிடிச்சு…. அம்மாவும்தான்..!
பின்னாடியே நாங்கெல்லாம் ஓடினோம்..! அப்பா பலமா கத்தினாரு..!
அம்மா எங்க மூனு பேரையும் வெறிச்சு பாத்துகிட்டே போய்ட்டாங்க…! போயே போய்ட்டாங்க…! வரவே மாட்டாங்க இனிமே…!!
” அம்மா.. அம்மா.. அம்மாமாமாமாமா..!! ”
கண்ல தண்ணியா வந்துது…!
அப்பா என் முகத்த நக்கி குடுத்தாரு…!! கண்ணுக்கு கீழ ப்ரௌன் கலர் பட்ட மேலயே…!!
கொஞ்ச நேரம் அமைதியா இருந்தோம்…..!!
தோ..தோ..தோ னு ஒரு குரல்…!
இந்த முறை அப்பா எங்களுக்காக வேகமா ஓடினாரு…!
கம்பீரமா…!!