தோற்றமயக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 23, 2024
பார்வையிட்டோர்: 8,493 
 

மித்ராவுக்கு நாளைக்கு ஒன்பது மணிக்கு கல்வித்திணைக்களத்தில் நேர்முகப்பரீட்சை. தான் இன்றைக்கு முன்மதியம் தொடரி பிடிச்சு வருவதாக நேற்றே அத்தை சங்கரிக்குப் போன் பண்ணியிருந்தாள்.

“அத்தை எனக்கு மருதானை ஸ்டேஷனில இறங்கி 155 பஸ் எடுத்து வெள்ளவத்தைக்கு வரத்தெரியும். நீங்கள் மாமாவை வீணாய் ஸ்டேஷனுக்கு அனுப்பி அலைக்க வேண்டாம்” என்று அவள் அழுத்திச்சொன்னதால் சங்கரி அத்தனை கவலைப்படவில்லை, அவளாக வந்திடுவாளென்று இருந்துவிட்டாள்.

இருந்தும் பின்னேரம் ஐந்துமணிபோல தொலைக்காட்சியில் தொலைந்திருந்த கணவன் ரகோத்தமனை உசுப்பி “யாழ்ப்பாணம் ட்ரெயினை ஒருக்கால்ப் பார்த்திட்டு வாங்கோப்பா குமர்ப்பிளையல்லே…… தனிய வாறது றிஸ்க்” என்றாள்.

“யாழ்ப்பாணத்தில இருந்து மருதானை மட்டும் வந்தவளுக்கு இதில வெள்ளவத்தைக்கு வாறதுக்கிடையில அப்பிடி என்ன ‘றிஸ்க்’ வந்திடும்.”

ரயிலடிக்குப்போனால் மித்ராவுக்கும் தான்தானே பயணச்சீட்டுக்கும் அழவேண்டிவருமேயென்று யோசித்தவன் “ அவளென்னப்பா குமர்ப்பிள்ளை, முப்பது வயசாகுது,….. கழுதைக்கு காலத்தில கட்டுப்போட்டிருந்தால் இப்ப நாலைஞ்சு பிள்ளையளோட குஞ்சும் குருமானுமாய் இருந்திருப்பள்………ம்ம், அதுக்கில்ல காலையிலயிருந்து எனக்கும் வயிறுங் கொஞ்சஞ் சரியில்லப்பா, போற இடத்தில பிசகு பண்ணிச்சென்றால் வம்பாயிடும் ” என்று தந்திரமாக மறுத்துவிட்டான்.

இரவு எட்டுமணியுமானது. அவள் வராததால் சங்கரி பதட்டமானாள். இவ்வளவு வாயாடியான மித்ராவிடம் ஒரு சாதாரணதர எடுப்புப்பேசிகூட இல்லாதது அவளுக்கு வருத்தமாக இருந்தது. பிசினாறிக் கணவனை ஒரு பாட்டம் வைதுவிட்டு தேனூர் உபதபால் அலுவலகத்தின் தபால் அதிபரோடு கதைத்து விபரம் சொன்னாள். அவர் ‘மறுநாள் காலை அந்தப்பக்கமாகக் கடிதம்கொண்டுபோகும் தபாற்காரர் யாரையாவது மித்ராவீட்டுக்கு அனுப்பி விசாரித்துவிட்டு உறுதிப்படுத்திறேன்’ என்றார்.

அரசாங்க அலுவலகங்களின் நேர்முகப்பரீட்சைகள் திடுப்பென ரத்தாவது ஒன்றும் அதிசயமான சாங்கியமல்ல.

அப்படித்தான் இவளதும் ரத்தாகியிருக்கும், ‘மித்ரா சூட்டிகையானவள், வாய்வேறு நீளம், எந்த இடர்கழியிலும் சுழித்துவழுக்கித் தப்பித்துவந்திடுவாள்’ என்ற நம்பிக்கை சங்கரிக்கு இருந்தது.

சங்கரி என்பாட்டன் வழியில் எனக்கும் உறவுக்காரிதான். தேனூரில் எங்களுடைய வீட்டுக்கு மேற்காக வீதியில் நாலு வீடுதள்ளியிருக்கிறது சிவசேகரம் அண்ணர்வீடு. அவருக்கு கச்சேரியில் அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் ‘சேர்க்கிட் மெசெஞ்சர்’ வேலை. சிற்றூழியந்தான், எனினும் நாங்கள் அவரை ஊருக்குள் கௌரவமாய் சி.எம் என்போம். அவருடைய தாய் பத்தினியாச்சி வாரத்துக்கொருமுறை அச்சுவேலியிலிருந்து வந்து இரண்டு நாட்கள் மகன்வீட்டில் தங்கிப்போவார். ஆச்சியின் பள்ளிக்கூட இடாப்புப்பெயர் பத்மாசினியாம், அது ஊர்வாயில் பத்தினியாகச்சுருங்கி நிலைத்து விட்டது. சிவசேகரம் அண்ணருக்கும் இரண்டு பெண்களும் இரண்டு பையன்களுமாக நாலு பிள்ளைகள். மூத்தவள் மித்ராதான் இக்கதையின் துருத்தி நிற்கும் பாத்திரம். அவள் க.பொ.த.உயர்தரத்தில் தேறவில்லையாதலால் பல்கலை எதிலும்புக வாய்க்கவில்லை. ஆதலால் தன் படிப்புக்கேற்ற வேலையொன்றை 10 வருடங்களாகத் தேடித்தேடியே முதிர்கன்னியாகிவிட்டவள்.

பத்தினியாச்சிக்கு இன்னொரு மகள் திருநெல்வேலியில் வாழ்க்கைப்பட்டு இருக்கிறாள். அவளுக்கு இரண்டு மகன்கள் மட்டும். அவளின் கணவன் சிவசம்புவுக்கு யாழ்ப்பாணத்தில் கே.எஸ்.சுப்பிரமணியம்ஸ் என்கிற பிரசித்த ஆயுர்வேத மருந்துக்கடையில் மருந்துகள் இடித்துக்கொடுக்கும் பணியைச் செய்து கொண்டிருந்தார். வாய்க்கும் வயிற்றுக்குமான சீவியந்தான். தமிழ்ப்பகுதிகளில் ஈழத்துக்கான போராட்டம் ஆரம்பித்தபின் அம்மருந்துக்கடையும் இல்லையென்றாக அவர் தொழிலும் இல்லாமற்போனது. பின்னர் எங்கேயாவது கோவில்களில் திருவிழா, தேரோட்டமென்றால் அதுக்குச் சறுக்குமுண்டு போடுவது, சிகரம் சப்பறம் கட்டிறவைக்கு தொட்டாட்டு, லைட் இஞ்ஜின்காரருக்கு ஒத்தாசை என்றிருந்தாரேயொழிய பெம்மானுக்கு உருப்படியான வேலையோ .வருமானமோ கிடையாது. அவர்களின் இரண்டு பெடியங்களுக்கும் தகப்பனைபோலவே நிரந்தரமான வேலை ஒன்றுங்கிடையாது. இயக்கங்கள் இருக்கும்போது இருவரும் யாரிடமோ பிடுங்கிய இரண்டு மிதுயுந்துகளை வைத்துத் தேய்த்துக்கொண்டு களப்பணியென்று திரிந்தார்கள். இப்போ இயக்கங்களுமில்லை. களப்பணிகளுமில்லை. கட்டுச்சோறுமில்லை. பத்தினியாச்சி திருநெல்வேலியிலுள்ள அந்தமகள் வீட்டுக்குப்போனால் ஒருபொழுதுக்குமேல் தங்கமாட்டார், திரும்பிவிடுவார்.

எங்கம்மா பத்தினியாச்சி திருநெல்வேலியிலிருந்து வருவதாகச்சொன்னால் மகளவை எப்படியிருக்கினம் என்று ‘அவர்கள் பாடுகளை’ விசாரிப்பார்.

மனுஷி முகத்தைப் படுவீறமைவாக (சீரியஸாக) வைத்துக்கொண்டு செல்லும்:

“அவளுக்கென்னணை குறைச்சல்……. தேப்பனும் பிள்ளையளுமாய்த் தாயை ஒரு மகராணியைமாதிரியெல்லே வைச்சு ஏந்திறாங்கள். கேளன் பின்னை. பின்னேரமாகிப் பொழுது இறங்கிச்சென்றால் பெடியள் ரெண்டும் ஆளுக்குத்தக்கமாதிரி ரெண்டு குலையளோட வந்திறங்குவாங்கள். பிறகு கொஞ்சஞ்செல்ல இருட்டுக்கட்டினாப்போல தகப்பன் பெரிசாய் ஒரு குலை கொண்டுவந்து இறக்குவார்…. அவளுக்கென்னகுறை மகராசியாள் இருக்கிறாள்…….மோனை.”

அம்மா வெள்ளந்தியாகக்கேட்டார்:

“என்ன இவங்கள் ஏதும் வாழைக்குலைச்சங்கத்துக்கோ கொழும்புக்கடையளுக்கோ குலையள் ஏத்தித் தரகு கிரகு சம்பாதிக்கிறாங்களோ….”

தாடையை இறக்கித் தோள்மூட்டில் ஒரு இடி இடித்துவிட்டுச் சொன்னார்:

“அடி இவளுமொரு விசரி……. அவங்கள் காலமை வீட்டிலயிருந்து . கொண்டுபோகிற குலையளைத்தான் சொல்றன்…… இடையில எங்கே இறக்கிறது……., எங்க சுத்தினாலும் வீட்டிலதானே கொண்ணந்து இறக்கவேணும்…… இறக்கிப்போடுவங்கள்!”

சிரிக்காமல் வெகு சீரியஸாகச்சொல்லி முடிப்பார் பத்தினியாச்சி.

பத்தினியாச்சிக்கு ஒரு தமையனுமிருந்தார். . உடம்புபூராவும் புஸு புஸுவென்று கரடியைப்போல உரோமம். நாங்கள் அவருக்குக் கேளாதபடி அவரைக் ‘கரடித்தாத்தா’ என்போம். சரசாலையிலுள்ள மகன்வீட்டுக்கு மிதியுந்தில் போகும்போது எப்போதாவது எங்கள் வீட்டுக்கும் வருவார், வந்தால் நெகிழிப்பையிலடைத்த கமலா பிஸ்கெட் பாக்கெட் (25சதம்) வாங்கிச் சால்வையில் முடிந்துகொண்டுவந்து சிறுவர்களாகிய எங்களுக்குத் தருவார்.

மசுக்குட்டித்தாத்தாவுக்கு இரண்டே பையன்கள். அதில் மூத்தவருக்கு பொலிஸ் உத்தியோகம். மாமா என்றாலும் முறுக்கு மீசைவைத்திருக்கும் அவரைப்பார்த்து அப்போது எங்களுக்குப்பயம். .

பொலீஸ்மாமா மதவாச்சியில் பணியிலிருந்த காலத்தில் யாரோ ஒருத்தர் அங்கே காட்டுமரமொன்றில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவல் கிடைத்ததும் பொலீஸ்போய் உடலைக் கீழேயிறக்கி வைத்தாலும், மரணவிசாரணை அதிகாரியும் உடற்பகுப்பாய்வு மருத்துவருக்கும் கோர்த்துக்கொண்டு அன்று அநுராதபுரத்திலிருந்து வரமுடியவில்லை. அவர்கள் மறுநாள் வரும்வரைக்கும் ஒரு பெற்றோமாக்ஸைத் தந்து. இரவு இவரை அவ்வுடலுக்குக் காவலிருக்கப் பணித்திருக்கிறார்கள். தலைமைப்பரிசோதகர் தலைமறைவானதும் மாமாவும் ஓடிப்போய் ஒரு கள்ளுக்கடைக்காரர் வீட்டில் குணங்கிக்கொண்டார். இரவு உடலை ஏதோ காட்டுவிலங்குகள் இழுத்துச்சென்றுவிட, பொற்றோமாக்ஸையும் யாரோ திருடிச்சென்றுவிட்டார்கள். அன்றே வீட்டைப்பார்த்து வந்தவர்தான் பொலிஸ்மாமா. பின்னர் எங்களுக்கு அவரிடம் கொஞ்சமும் பயங்கிடையாது!

“இருட்டுக்குப் பயந்தவனுக்கு என்ன மசித்துக்குப் பொலிஸுவேலை” என்று நொடிப்பார் பத்தினியாச்சி.

பொலிஸு மாமாவுக்கு அக்காலத்தில் 3 இலக்கச் சம்பளந்தானே…… அவர் திருமணமாகி ஐந்தோ ஆறோ ஆண்டுகளின் பின் முதன்முறையாகத் தன் ஆசைக்கிழத்திக்கொரு சிங்கப்பூர் வூலிச்சேலையை வாங்கிக்கொண்டுவந்திருக்கிறார். அவர்களின் வீடு அக்காலப் பாணியில் முன்னுக்கு இரண்டு பக்கமும் இரண்டு உயரமான சீமெந்துத்திண்ணைகள் வைத்து நடுவில் தட்டுமுட்டுச்சாமான்கள், தேங்காய், மிதியுந்துக்கொரு ஒடுங்கலான மால், மற்றவிருபக்கங்களிலும் படுக்கைக்கு ஒன்றும், சமையலுக்கு ஒன்றுமாக இரண்டு அறைகள், எளிமையாக மரக்கிராதியாலும் சப்புப்பலகையாலமைந்த சுவர்கள், அலுமினியத்தகரத்தால் வேய்ந்த வீடுதான்.

பொலிஸ்மாமாவின் தம்பி நகுலேஸ்வரன்மாமா பத்தாவதைப் பலமுறை முற்றுகையிட்டுத் தோற்றபின் ஊராரின் வானொலிப்பெட்டிகள், தையலியந்திரங்கள், பெற்றோமாக்ஸ், மண்ணெய் அடுப்பு பழுதுபார்ப்பது, மிதியுந்துகளைக் கழற்றி எண்ணெய்த்தோய்ச்சல் செய்துகொடுப்பதென்று உழன்றுகொண்டிருந்தார். அச்செம்மனசு ஆட்காட்டிகளே தூங்கும்வேளையில் மழைதூறிக்கொண்டிருக்க ஓசைப்படாமல் எழும்பி அவர்களின் படுக்கையறையிலிருந்த வூலிச்சேலையைச் சலனமின்றி நகர்த்திக்கொண்டு கச இருட்டுக்குள்ளால்ப் போய் உணாவிலிலுள்ள அவரது காதலிக்குப் பரிசளித்து முத்திவிட்டு விடியமுதல்வந்து தேமேயென்று போர்த்திக்கொண்டு படுத்துவிட்டார்.

இதுவன்ன தன் குடும்பத்தின் வாழ்மானங்கள், சீர்த்துவக் கேடுகளைச் சொல்லிச்சொல்லித் ‘தன்னுடைய உறவுக்குள் தான் உரிமையோடு கைநனைக்கக்கூடிய பிள்ளைகளோ மருமக்களோ ஒன்றும் ‘சீராய்… விறுத்தியாயில்லையே’ என ஆதங்கப்படுவார் பத்தினியாச்சி.


பாட்டியாரைப்போலவே மித்ராவுக்கும் பழைய 5 சதத்தை நினைவுபடுத்தும் வடிவிலான மாநிறமுகம். லேசாகச் சுருண்டகேசம், சதா எதைப்பற்றியாவது அலப்பறைக்கும் வாய். பத்தினியாச்சியின் நுவணையான பேச்சும் நளினமும் அப்படியே மரபணுவழி மித்ராவுக்கும் கைவந்திருந்தன.

அவளுக்கு கல்லூரியின் தமிழ்மாணவர் அவையின் விழாவுக்கு வருகைதந்திருந்த பேராசிரியர் கா. சிவத்தம்பியிடம் அணுகிப்பேச வாய்ப்பொன்று கிடைத்தபோது,

“சேர் உங்களுக்கு கமலைப்பிடிக்குமா ரஜனியைப்பிடிக்குமா” என்று கேட்டிருக்கிறாள்.

அவரோ பூடகமாய் “நீர் கேட்பதைப்பார்த்தால் எனக்கு கட்டாயம் அவர்களில் ஒருவரைப் பிடித்தாகவேண்டும் என்கிற ஒரு நியதி இருப்பதைப்போலொரு தொனி இருக்கு… சரி அப்படி ஒன்றும் இல்லையென்றால் எனக்கு நஷூருதீன் ஷாவைத்தான் பிடிக்கும்” என்றாராம்.


மறுநாட்பொழுதும் வெள்ளவத்தையில் அந்தரமாகக் கழிந்தது சங்கரிக்கு. மதியம் சாப்பாடு தொண்டையால் இறங்கமறுத்தது, இந்த மூணாத்தி இன்டர்வியூவுக்குப் போனாளோ எங்கேயாவது தொலைஞ்சாளோ என்னாச்சுதோ என்று பதகளித்தாள். இன்னும் சிலமணிநேரம் பார்த்துவிட்டு பொலீஸில் ஒரு முறைப்பாடு கொடுத்துவிடுவதே நல்லது என மனதில் திட்டமிட்டாள்.

மாலை ஐந்துமணியுமாகிவிட்டிருந்தது, சங்கரி கணவனும் அலுவலகத்தால் வந்திருந்தான், அவனுக்கொரு கோப்பை தேநீரைக்கொடுத்துவிட்டு அவனது அசண்டையீனத்துக்காக அவனை வைது அராத்திக்கொண்டிருக்க அடுக்ககத்தின் கீழே வாசலில் ஒரு தானி (ஆட்டோ) டுபு-டுபு-டுபு என்று அடித்துக்கொண்டுநின்றது. எட்டிப்பார்த்தால் மித்ரா தோரணையுடன் .ஒரு பிறீஃப்கேஸ் சகிதம் இறங்கி தானியை வெட்டிவிட்டு, சல்வாரின் துப்பட்டாவைச்சுழற்றி முகத்துக்கு விசிறிக்கொண்டு படிகளில் மேலே வந்துகொண்டிருந்தாள்.


நேற்றுக்காலை மித்ரா அவசரத்தில் இரண்டு இடியப்பக்கம்பியை வாயில் போட்டுக் கொண்டு யாழ் பேருந்தைப் பிடித்து நேரந்தப்பாது கொழும்பைநோக்கிய யாழ்தேவியில் ஏறியமர்ந்துவிட்டாள். போர் முடிந்தபிறகு நாட்டில் மீண்டும் இருப்புப்பாதைகள் போடப்பட்டதும் தன்னால் கொழும்புக்கு நேர்முகப் பரீட்சைக்குச் செல்ல முடிவதுவும் அவளுக்கு நம்பமுடியாமலிருந்தது. அவளுக்கு இளவயதிலிருந்தே ஆங்கிலபாடத்தில் ஒரு மோகமிருந்தது. தன்பாட்டுக்குத் தப்புந்தவறுமாக ஆங்கில வசனங்களை ஆக்கிக்கொண்டு எங்களிடம் பேச முயற்சிப்பாள். ஆங்கிலம் படித்தால் இலகுவில் வெளிநாட்டுக்குப்போய்விடலாம் என்கிறவொரு கனவும் இருந்திருக்கவேண்டும், அதைக்கவனமாகப் படித்து க.பொ.த. பத்திரப்பரீட்சையில் ஆங்கிலத்தில் விசேடசித்தியும் பெற்றுவிட்டாள். இலங்கைஅரசு அரசுப்பள்ளிகளில் கீழ்வகுப்பு மாணவர்களைப் பயிற்றுவிப்பதற்காக (Training) தராதரப்பத்திமற்ற ஆசிரியர்களைச் சேர்த்துக்கொள்ள வர்த்தமானி மூலம் விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. அதில் தேர்வான க.பொ.த ஆங்கிலத்தில் விஷேடசித்தி எய்திய விண்ணப்பதாரிகளுக்கு நேர்முகப்பரீட்சைகளையும் நடத்தியது, குறைந்தபட்சம் ஒரு ஆசிரியையாகிவிடுவது எனும் விருப்பால் மித்ராவும் அதற்கு விண்ணப்பித்திருந்தாள்.

நேர்முகப்பரீட்சைக்குப் படிக்கிறேன் என்று முதநாள் வெகுநேரம் விழித்திருந்தவளுக்கு தொடரியில் ஏறியதும் கண்ணைச் சுழற்றிக்கொண்டுவரத் தூங்கிவிட்டாள். ‘பொல்ககவெல’ வந்ததுந்தான் விழிப்புத் தட்டவும் எழுந்தவள் தனக்கு எதிரில் மூலை இருக்கையில் ஒரு அழகான இளைஞன் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். அந்த இருக்கையில் வேறொருவருமில்லை. ‘அம்முகம் முன்னர் எப்போவோ பார்த்தவொரு பரிச்சயமான முகமாக இருக்கே…….. அட இவன் யாராக இருக்கும்’, சிந்தித்தாள். ஏதும் தொலைக்காட்சி வர்ணனையாளராக இருப்பானோ…… சிங்களத் தொலைக்காட்சித் தொடர்நாடகங்களில் நடிப்பவனோ….. உயர்ரக ஜீன்ஸோடு மரூன் வர்ணத்தில் டீ-ஷேர்ட்டும் அணிந்திருந்தான், முகத்தில் ஒரு பணக்காரக்களை. அந்த கெட் அப்பில் நம்ப விஜய் – அஜித் – பிருத்விராஜைவிட அழகாயிருக்கானே. கோடம்பாக்கத்துக்கு மட்டும் போனானென்றால் முதல்நாளிலேயே சான்ஸ் கிடைச்சிடும். மாலைச்சூரியனின் தெறித்த மஞ்சட்கதிர்பட்டு அவன் ஒரு ராஜகுமாரனைப்போலவே இவளுக்குத் தெரியவும் நேர்முகத்துக்கான கோப்பினால் தன் முகத்தின்பாதியை மறைத்துக் கொண்டு அவன் முகத்தை ஜொள்ளுடன் மேலும் இரண்டுதரம் திருட்டுத்தனமாகப் சூம் பண்ணி வருடிவருடிப் பார்க்கையில் ’அவன் யார்’ என்பது அவளுக்குத் திடுப்பெனப்பொறித்தது. அடடா… அது வேறு யாருமல்ல நம்ப ’நாமல் ராஜபக்ஷ’. அட அவரே Lyca முதலீட்டாளர்களுடன் சேர்ந்து கோடிக்கணக்கில் பணம்போட்டுப் படங்கள் தயாரிப்பவர். சினிமா சான்ஸெல்லாம் கேட்டுப்போகிறவாரா என்ன………. ச்சே… எப்பிடி எனக்கு இந்த பித்துக்குளித்தனமான யோசனை வந்தது? மானஸீகமாகத் தனக்குத்தானே கொட்டிக்கொண்டாள். சாந்தம் வழியும் நட்புரீதியிலான முகம், பேச்சுக்கொடுத்தால் பேசுவான் போலிருக்கவும். அவனைப்பார்த்து ஒரு புன்னகையைத் தவழவிட்டாள்.

அவனும் பதிலுக்குச் ஸ்நேகமாகப் புன்னகைத்தான். இவள்,

“நீங்கள் மிஸ்டர். நாமல் ராஜபக்ஷதானே…” ஆங்கிலத்தில்.

அக்கேள்வியால் திடுக்கிட்டவன்… சற்று நேரங்கழித்துத் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு ‘ஆம்’ என்பதாகத் தலையை மேலும் கீழுமாக ஆட்டினான்.

“நான் மித்ரா. ஒரு நேர்முகப்பரீட்சைக்காகக் கொழும்புக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். நீங்கள் இப்படி மெய்க்காவலர்கள் இல்லாமல் ஒரு சாமானியரைப்போல எனது தொடரியின் பகுப்பறைக்குள் வருவீர்களென்று நான் எதிர்பார்க்கவே இல்லை சேர்.”

சுட்டுவிரலை உதடுகளில் எச்சரிப்பதைப்போல வைத்தவன் கனிவான குரலில்,

“சத்தமாகப்பேசாதீர்கள்… நான் எப்படி நம்நாட்டில் ரயில்கள் நேரத்துக்கு ஓடுகின்றனவா, சுத்தமாக வைத்திருக்கிறார்களா, சேவைகள் சரியாக இருக்காவென ஆய்வு செய்வதற்காக உருமறைப்பில் வந்திருக்கிறேன். ரயில்வே அலுவலர்கள் யாரும் கண்டுகொண்டால் உஷாராகிடுவார்கள், மெதுவாகப்பேசுங்கள் ப்ளீஸ்” என்றான்.

“ஓகே… சேர் “ என்ற மித்ராவைச் சிலநேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு என் பெயரைச் சத்தமாகச் சொல்லாதீர்கள், அதுவே சிக்கலாக்கிவிடும்” என்றான் அவன்.

‘அடியேய் போதும்டி… இனி உன் வேலையைப்பற்றிக் கதையேன்’ ‘கதையேன்’ என்று அவளது ஆழ்மனது அவளை உறுக்கியது.

“அப்போ மிஸ்டர் நாமல்… நான் ஒரு சாமானியத்திலும் சாமானியள், மேலும் சொன்னால் அரசின் சமுர்த்திப்பணத்தில் பிழைத்திருப்பவள். உங்கள் பரோபகாரத்தினால் எனக்கு இந்த வேலையைப் பெற்றுத்தருவீர்களென நான் எதிர்பார்க்கலாமா…”

“உங்கள் முழுப்பெயரையும் பிறந்த திகதியையும் கொடுங்கள்… செகரெட்டரியிடம் சொல்லிவைக்கிறேன்” என்றான் அவனும் தோரணையாக.

அவள் சொல்லச்சொல்ல அதைத்தனது சாமர்த்தியப்போனில் பதிந்துகொண்டவன். “நேரமிருந்தால் அப்படியே என்னோடு வீட்டுக்கு வாங்களேன்… செகரட்டரியையும் நேரில் பார்த்ததாயிற்று ” என்று சாமர்த்தியமாக முதல்த் தூண்டிலை வீசினான்.

‘அடடா…… அப்படியே அவன் வளமனைக்குப்போனால் ஷிராந்தி ராஜபக்ஷவையும் பார்த்துப்பழக்கம் பிடித்ததாகிவிடும்’ என்ற எண்ணம் குமிழவும்

“Of Course… its my pleasure…” என்றாள் தோள்களை உயர்த்தி.

இருவரும் கோட்டையில் இறங்கி ஒரு வாடகையுந்தில் சென்றுகொண்டிருக்கையில் நாமல் மீண்டும் தன் சாமர்த்தியப்பேசியை எடுத்துச் சிங்களத்தில் பேசினான். பேசிமுடித்ததும் வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னான்: “ வெறி சொறி……மித்ரா டியர்… அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இன்று முக்கியமான வெளிநாட்டுத்தூதுவராலயம் ஒன்றில் பார்ட்டி இருக்குதாம், அதனால் வீட்டில் நிற்கமாட்டார்களாம்… நாம எமது ஹொட்டலுக்குப் போயிடுவோமா…”

‘மித்ரா டியர்’ என்ற வார்த்தை அவளை நெகிழ்த்தி உருக்கவும், ஒரு கனவுலகத்தில் மிதந்தாள்.

‘எனக்கு வேலை வாங்கித்தரப்போகிற ராஜகுமாரன் தன் தேரில் அழைத்துப் போகிறான்… எங்கேதான் போனால் என்ன’ அவள் மௌனமாக இருக்க அவர்களது தங்கத்தேர் ஒரு ஹொட்டலுக்கு விரைந்தது.


“ஏன்டி நேற்றுவரமுடியாதென்றதை எங்களுக்குப் போன்பண்ணிச் சொல்லேல்லை ” என்று சங்கரி பாயவும் அவளை இடைமறித்த மித்ரா “ பொறுங்கோ பொறுங்கோ….. அத்தை… என்னை முழுக்கதையையும் முதல்ல சொல்லவிடுங்கோ, நான் போன் பண்ணாதது என்னுடைய பிழைதான்…. வெறி சொறி… பொறுத்துக்கொள்ளுங்கோ….. கதைக்க எனக்கு நேரமேகிடைக்கேல்ல அத்தை, நான் ஒன்றும் வேணுமென்று செய்யேல்லை அத்தை.”

“என்ன நேற்று எனக்கு வரமுடியேல்லை என்று ஒரு வார்த்தை சொல்ல உனக்கு நேரங்கிடைக்கேல்லையோ… என்னடி றீல் விடுறாய்… இஞ்ச நானும் அந்தக் ஹார்ட் வீக்கான மனுஷனும் நாடிநரம்பு துடிச்சுப்

பதறிப்போயிருக்கிறம்… எங்களைப்பற்றி யோசிச்சியா கொஞ்சம்…”

“எனக்கிந்த வேலை சுவறாகக்கிடைக்கப்போகுது…… அத்தை, அதுக்குப் பெரிய ஒராளின்ட றெகமன்டேசனல்லே கிடைச்சிருக்கு…”

“யாரது…” என்றான் ரகோத்தமன்.

“நம்மட நாமல் ராஜபக்ஷதான் அவர்.”

“என்னடி லூஸு மாதிரிப்பினாத்திறாய்…. அவன் ஏன்டி உனக்கு றெகமென்ட் பண்ணப்போறான் ” சங்கரி.

“ஆளையே நேர்ல சந்திச்சுக்கதைச்சிட்டு வாறன் என்றன் ”

“அவனை எங்கேயடி நீ சந்திச்சாய்…”

“அவர் நேற்று நான் வந்த ரயிலிலதான் பொல்ககவெலவிலிருந்து கொழும்புக்கு வந்தவர்.

“பிறகும் லூஸு மாதிரிக்கதைச்சியானால் டென்னிஸ் மட்டையாலதான் உனக்குச் சாத்துவன், அவங்கள் என்னவொரு எலீட் ஃபமிலி ஆட்கள், உன்னோட ரயிலில செகன்ட் கிளாஸில வந்தவனோ… மூணாத்தி.”

“இதையே சொன்னால் நம்பிறியளில்லை… இன்னுமொன்று சொன்னேன் என்றால் திகைச்சுப்போவியள்…”

“ஆங்…. சொல்லு சொல்லு… இன்னுங்கொஞ்சம் திகைப்பம் நேரமிருக்கு.”

“இன்னும் மூன்று மாதத்தில அவர் என்னைக் கல்யாணம் செய்யிறேன் என்றும் புறோமிஸ் பண்ணியிருக்கிறாராக்கும்.”

“அவங்கட குடும்பம்….நாமல் உன்னை வந்து யாழ்ப்பாணத்தில கலியாணங்கட்ட விட்டிடுமோடி ஏதும் நம்பிறமாதிரிச்சொல்லுடி…லூஸுப்பேயே….”

“கோட் புறோமிஸ் அத்தை…அவர் ஏதும் பிரச்சனை என்டால் ஹெலியில வந்து என்னைப் பிக்-அப் பண்ணிறதாய்ச் சொல்லியிருக்கிறார்…. அவர் அப்பிடி வாறநாளை உங்களிட்ட மட்டும் நான் இரகசியமாய்ச் சொல்லுவேனாம், நீங்கள் எல்லோரும்வந்து எங்களை ஆசீர்வதிக்க வேணும் சரியா…”

சங்கரி கணவனைப்பார்க்க, அவன்

“சரி, கலியாணம் இருக்கட்டும்…… அது நடக்கிற நேரம் பார்ப்பம், இண்டவியூவுக்குப்போன்னியோ அது என்னாச்சு ” என்றான்.

“I Swear Uncle…… beyond any doubt……. Centum to Centum success….!” என்று நுவன்றாள்.

“சரிடி……. பிறகும் கதைக்கலாம், உந்தத்தேசம் எல்லாம் அலைஞ்சுலைஞ்சு வந்திருக்கிறாய்…….. முதல்ல குளிச்சிட்டு வந்து சாப்பிடு………” என்றாள் சங்கரி,

“‘முதற்சம்பளத்தில ’றிச்சா’யொரு மோபைல் வாங்கிட்டுத்தான் மற்றவேலை……. ஓக்கே அத்தை… டவல் ஒன்று தாங்கோ……” என்று அவள் கேட்டுவாங்கிக்கொண்டு மாற்றுடுப்புகளுடன் குளியலறைக்குள் செல்லவும்

“என்னடி மீன்குளம்போட சோறுவைக்கவா… அல்லது தோசை வார்க்கட்டோ…” என்றாள் சங்கரி.

“தோசையையே வாருங்கோ அத்தை… உங்கடைதோசை வெல்வெற்போல இருக்கும், குளம்போட சாப்பிடுறன்.”

ரகோத்தமன் குரலைத்தணித்துக் கிண்டலாய்

‘’என்னவாம்…. உவள் நாமலைக் கட்டினாப்போலையும் டீச்சர்வேலைக்குத்தான் போகப்போறாளாமோ ” என்றான்.

“யாரோ ஒரு நாயிட்ட….. ஏமாந்துவந்திருக்கிறாள் போல கிடக்கு பார்ப்பம்…….. குமருகளை வீட்டில

முத்தவைச்சுக்கொண்டிருந்தால் இப்பிடித்தான் பிரகண்டங்கள் தலையில வந்து விடியும்.”

சங்கரி அவளுக்குத்தோசை வார்த்துக்கொண்டிருக்க மித்ராவுக்கு கொழும்புக்குளோரீன் தண்ணிபடவும் இடுப்புக்குக்கீழே தணல்மாதிரி அனத்திற்று. ஷாம்பூவைமட்டும் உடலுக்கு லேசாகப்பூசிக்குளித்து உடுப்பைமாற்றிக்கொண்டு பாதங்களைச் சவட்டியும் திருகியும் வைத்து அவள் ஒரு சிந்துநடையில் சமையலறைக்கு வருவதைக் கண்ட சங்கரி,

“எதுக்கடி இப்ப கெந்திறாய்… ஒழுங்காய்த்தானே வந்தனி… பாத்றூமுக்க விழுந்து கிழுந்திட்டியோ…” என்றாள்.

“நான் விழேல்லை அத்தை…தொடைகிடை எல்லாம் கடிச்சுக் காந்திப் புண்ணாக்கிட்டான் அந்தப்பாவி… நெருப்பாய் எரியுது.”

“யாரடி அந்த நாதாரி…….”

“அந்த நாமல் குரங்குதான்…ஃபக்கிங் ஜொப்புக்கான்டி எல்லாத்தையும் பொறுத்திட்டன். ”

ஏதும் Tetanus ஆக்கிடுமோவென்று பயந்த சங்கரி,

“சரி நீ பயப்படாம சாப்பிடு…ஏதாவது ஆன்டிசெப்டிக் போட்டுவிடுறன் கெதியில சுகமாயிடும்…. கடி தொடைகள்ல மட்டுந்தானோ…” என்றாள் அர்த்தத்துடன்.

“தொடையையே இப்பிடிக்காந்தினவன் மிச்சத்தைச் சும்மா விட்டவனே….”

மித்ராவின் கண்கள், சங்கரியின் பார்வையின் உஷ்ணம் தாங்காமல் துளிர்த்து நிறைந்து தளம்பத் தொடங்கின.

– 01.02.2024 காலச்சுவட்டில் வெளிவந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *