தொலை கடல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 21, 2023
பார்வையிட்டோர்: 4,755 
 
 

நீண்ட செவ்வகக் கண்ணாடித் துண்டம்போல அசைவற்றிருக்கும் அந்த நீர்த்தொட்டி அடிக்கடி உயிர்பெற்று, ஒளியலைகளைச் சுவரெங்கும் விசிறும். அதன் எண்ணற்ற கண்களென அசையும் நிறம் நிறமான மீன்கள். ஆளற்ற வீட்டின் தரையிலும், சுவரிலும் ஆடும் கண்ணாடி நிழல்கள், கூடத்தில் யாரோ அமைதியாக அமர்ந்து உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உறுத்தலையும், சங்கடத்தையும் ஏற்படுத்தும். அலுவலகத்திலிருந்து திரும்பும் ராதா கதவைத் திறந்ததுமே நடுக்கூடத்தில் உட்கார்ந்திருக்கும் அதனுள்ளிருந்து துருவும் பார்வைகள் தன்மீது மோதுவதை வெறுத்து, கைப்பையை விட்டெறிந்து, வாஷ்பேஸினுக்கு ஓடி முகத்தைக் கவிழ்த்துக்கொள்கையில், இறைஞ்சிக் குவிந்த உள்ளங்கைகளில் தடைகளற்றுப் பொழியும் நீரின் ஆறுதல்.

தொட்டி நீருள் ஆழத் துள்ளும் மீன்கள் குழந்தை நவீனாவிற்கு மிகவும் ப்ரியமானவை. பள்ளி விட்டதும் அதன் முன்பு உட்கார்ந்து கொள்வாள் மணிக்கணக்காக. “அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு இதை வாங்கவென்று, மீன்பண்ணைக்குப் போன நாளை ஞாபகம் கொண்டாள். தான் கழற்றியிருந்த ஹெல்மட்டை மகளின் தலையில் மாட்டிச் சிரித்தார் அப்பா. பெரிய கவசத்திற்குள் சின்னஞ்சிறிய தலை. “விண்வெளி வீராங்கனை மாதிரியே இருக்கிறாள்” என்றார். வரிசையாக மீன்தொட்டிகள் அடுக்கிய நீள் அறையைச் சுற்றி நடந்தார்கள். விரிந்த கண்களைக் கொட்டாமல், விடுபட்ட அப்பாவின் கைகளை மறந்து மீன்களைக் கவனித்தாள்; நீலத்தில் வெண் கோடிட்ட சிவப்பில் கரும்புள்ளியுள்ள கத்தியாக நீண்ட, நெல்மணிகளைப் போல் பொடிப் பொடியான மீன்கள்.

பழுப்பு நிறத்தில் படுத்துக் கிடக்கும் ஒரு தூங்குமூச்சி, இன்னொன்று செயற்கைப் பாறைகளில் முகத்தை முட்டி முட்டிக் குமறும் அழுகுணி. சாம்பல் நிறத்திலிருக்கும் மற்றொன்று சிறு கற்களின் மீது, சிந்தனையே உருவாகக் குந்தியிருக்கும்.

நவீனாவின் தொட்டியில் தங்கம் தடவிய, சாம்பல் வரிகளோடிய சிறு மீன் ஒன்றும் சிறு மயிர்கள் போன்ற கருஞ்செதிள்களோடு இருந்தது. அது அம்மாவின் மூடிய இமைகளைப் போலிருக்கிறதென்று நினைத்தாள்;

அவர்கள் வீடு சேர்ந்தபோது வியர்த்த முகத்தோடு அடுப்படியிலிருந்து வெளிவந்த ராதா மீன்தொட்டியை வெறித்தாள். அவள் முகத்திலொரு அசாதாரணமான திகில் படர்ந்தது.

“உள்ள வேலையே பார்க்கத் தீரல. இதில் இது வேற எதுக்கு இப்ப? உங்க ஆபீஸ் பெங்களூரில். நீங்க போயிடுவீங்க நாளைக்கே. நானும் ஆபீஸ•க்கு. இவ ஸ்கூலுக்கு. யார் இதைக் கட்டிச் சேவிக்கிறதாம்?” வழக்கத்துக்கு மாறான உரத்த குரலில் சிடுசிடுத்தாள் ராதா.

வீட்டைப் பெருக்கிக்கொண்டிருந்த முத்தம்மா, “பிள்ளை ஆசை ஆசையா வாங்கியாந்திருக்கு. இருந்துட்டுப் போகட்டுமேம்மா. நான் பாத்துக்கிறேனே” என்றாள் தயங்கியபடியே. ரகு – எத்தனை நாளைக்கொருதரம் எப்படித் தண்ணீர் மாற்ற வேண்டும் என்ற விவரமும், உணவளிக்கும் விதமும் சொல்லச் சொல்ல, அப்பவையே ஆர்வத்தோடு பார்த்தாள் நவீனா. மறுபடி சலிப்போடு அடுப்படிக்குள் நுழையப்போன அம்மாவிடம் மகள் பாரும்மா, “இதன் நீ” என்றால் தங்கமீனைச் சுட்டி. நெருப்புத் தீண்டிய துணியாகச் சுருங்கியது ராதாவின் முகம். “இல்லை; அது நானில்லை என்னால் எந்தத் தொட்டியிலும் அடைந்து கிடக்க முடியாது ” முணுமுணுத்தாள் சோர்வாக.

வெளியூர் வேலையில் அப்பா. வீட்டிலில்லாத அம்மா. பள்ளி முடிந்ததும், எதிர் வீட்டில் சாவி வாங்கித் திறந்து யாருமற்ற வீட்டிற்குள் மீன்களோடிருப்பாள் நவீனா. அவற்றிற்குப் பெயரிடுவாள் யோசித்து, யோசித்து, “ஜிட்டு, பட்டு, ஜில்லு, குலு, ஜங்லி” என்று என்னென்னவோ பெயர்கள். “சாப்பிட்டாயிற்றா” என்று விசாரிப்பில் துவங்கி அவற்றோடு சளசளவென்று பேசுவாள். பள்ளிக் கதைகள், அப்பா-அம்மாவின் சம்பள நாள் சண்டைகள், பாதையோரச் செடியிலிருந்த மஞ்சள் வயிறுள்ள பறவை. ஏதேதோ கேள்விகளோடு, மீன்களின் பதில்களுக்கான இடைவெளியைக் கவனமாக விடுவாள். “ம்ம்ம்” என்று தலையாட்டிக் கொள்வாள். வாயைத் திறந்து திறந்து மூடும் மீன்களை வெளிக் கண்ணாடியில், முகம் பதித்து முத்தமிடுவாள் செல்லமாக.

இன்றென்னவோ அவள் கூம்பிய முகம்; சிவந்த கண்கள்; இறுகிய உதடுகள். கவனித்து மிரண்ட இரட்டை வால் மீன் ஓடிப்போய் சண்டைக்காரனிடம் சொன்னது. நட்சத்திர மீன்கள் சுழன்றுகொண்டே கேட்க, முதிர்ந்து பழுத்த பஞ்சாயத்துக்கார மீனும் நீண்ட தாடியைத் தடவியபடியே யோசித்து தீவிரமாக நவீனா தன் குட்டை ஜடையில் பட்டாம்பூச்சிக் க்ளிப்பைப் பிடுங்கித் தரையில் விட்டெறிந்தாள். அந்தச் சத்தத்திற்குப் பதிலாக அம்மாவின் அறையிலிருந்து, ஒரு அசைவோ, அதட்டலோ எழும்பாததில் எரிச்சலாகி இன்னும் சிவந்தது அவள் முகம்.

அவள் தன் சிறிய நாற்காலியை மீன்தொட்டிக்கு அருகில் இழுத்துப்போட்டு, ஏறிநின்று நீண்ட கைப்பிடியுள்ள பிளாஸ்டிக் வலையால் தண்ணீரைத் துழாவத் தொடங்கினாள். வெறிகொண்ட சிறு கைகள் நீரைப் புரட்டின. மிரண்ட மீன்கள் பதற்றத்தில் அங்குமிங்கும் சிதறி, தொட்டியிலிருந்த சிறுகற்களூடேயும், தாவரங்களுக்கிடையேயும் ஒண்டின.

தங்கமீன் மட்டும் தன்னந்தனியே மிதந்து கொண்டிருந்தது அலட்சியமாக. பிளந்த வால் நொடிக்கொரு தரம் சிமிட்டியது. அணைந்து கிடந்த தொலைக்காட்சித்திரை நீர் நிழல்களாடத் தன்னைத் தந்திருந்தது. குரோதம் பெருகும் விழிகளால் தங்கமீனைக் குத்தினாள் நவீனா. வலையை அதன் மீது வைத்து அழுத்தினாள். அவசரமாக அது அடித்தளத்திற்கு நழுவப் பார்க்கையில் தன் கையைத் தோள் வரையிலும் தொட்டிக்குள் விட்டு, ஒரு சிறுமிக்குச் சாத்தியமேயற்ற பலத்துடன் அதை நசுக்கித் தீர்த்தாள். வலையைத் தொட்டிக்குள்ளேயே எறிந்துவிட்டு ஸோபா மூலையில் சுருண்டு கொண்டாள். சென்ற வாரத்தின் அந்த இரவு. அரை உறக்கத்தில் முதுகை வருடிய அம்மாவின் விரல்கள். அம்மா அவள் கருவிழிகள் அசையவில்லையெனத் தன் சுண்டுவிரலை மிக மென்னையாக மூடிய இமை மீது வைத்துச் சோதித்தாள். மகளின் கையிலிருந்த தன் முந்தானையை விடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள். ஆனால் அவளுக்குக் குழந்தை ஏன் இவ்வளவு சீக்கிரமே தூங்க வேண்டும் என்றிருந்தது. ஆழ்ந்த உறக்கத்திலும் அவ மீன்களைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள். தனது அறைக்குள் ராதா நுழைந்தபோது காற்றிலாடிக் கொண்டிருந்தன ஜன்னல்கள். சற்றுத் தொலைவில் புரண்டு கொண்டிருந்தது கடல் ரகசியமாகக் காமமுற்ற பெண்ணைப் போல.

மங்கலான நிலவொளியில் அதன் கருநீல அலைகள் நிலைகொள்ளாமல் நெளிந்தன. பொங்கி எழும்பின. தயங்கித் தணிந்தன. ராதா கட்டில் விளிம்பிலிருந்த தன் கல்யாணப் புகைப்படத்தைத் திருப்பி வைத்தாள். மறுபடி அதை எடுத்து ரகுவை ஒரு தரம் பார்த்துவிட்டுக் கவிழ்த்துக் போட்டாள்.

கலைந்த புடவை கொடியிலாடித் துடித்துக் கொண்டிருந்தது. தானுமொரு கருங்கடலாய் உருக்கொண்ட இரவு அலையோசையை அதிரவிட்டது அவள் உடலெங்கும். படுக்கையருகே துழாவி, அந்தப் புத்தகத்தை எடுத்துத் திறந்தும் அரை இருளிலும் ஒளிர்ந்துகொண்டிருந்தன விஷ்ணுவின் விழிகள். மென்நீல விளக்கொளியை அமைத்துக் கட்டிலில் சரிந்து அவன் புகைப்பட முகத்தை உற்றுக்கொண்டிருந்தாள் நெடுநேரம், கடுமையும், எச்சரிக்கையும் தொனிக்கும் கண்கள். சட்டென ஒற்றை விரல் அவற்றை மறைத்ததும், அந்த உதடுகள் குவிந்த நெசிழ்ந்து அழைப்பதாக உணர்ந்தாள். ஒருவருமற்ற அறையின் தனிமையை மறுதரமும் உறுதிப்படுத்திக்கொண்டு, நா நுனியால் அந்த உதடுகளைத் தீண்டினாள். ஒரு நாள் எதிர்பாராமல் வீட்டினுள் நுழைந்த அவன் இதே செயலில் இருந்த அவளைக்கண்டு சிரித்தான். களவில் பிடிபட்டதைத் தாளமுடியாமல், சமையலறைக்கு ஓடியவளைத் துரத்திச் சொன்னான்: “முத்தம் மட்டும் இடாதே” காதோரம் கிசுகிசத்த அவன் வார்த்தைகள் முதலில் புரிபடவில்லை. புரிந்ததும் அடுப்பின் ஆரஞ்சுத் தழல் அவள் கன்னங்களிலாடியது. அவன் எப்போதோ போய்விட்டிருந்தான்.

இன்னொருமுறை புகைப்படத்தில் குவியும் அவள் இதுழ்கள், அறைக்குள் ததும்பும் கருமையின் தாபம், மார்பில் கவிழ்ந்திருந்த புகைப்படம். பாதிமயக்கத்தில் விழி மூடிப் புரண்டதில் இடுப்புக்குக் கீழே நழுவியதும் திடுக்கிட்டு அதை மறுபடி புத்தகத்துக்குள்ளேயே ஒளித்தாள். தான் வெளிச் சொல்லாத வெற்றுக் கனாக்களில் ஒன்றினைப் போல.

அலுவலகத்தில் விஷ்ணு தன்னைச் சுற்றிலும் எழுப்பியிருப்பவை அச்சமூட்டும் வலுவான அரண்கள்:

“என் அறைக்குள் உத்தரவின்றி நுழையாதே – முன் அனுமதியின்றி தொலைபேசாதே, பேசுமுன் யோசித்துப் பேசு. உன் வேலையைப் பாரு” என்று எரிந்து விழுவான்; விரட்டித் தள்ளுவான். அவள் தொடவே கூடாத ஏதோ ஒன்றைப் பதுக்குவான் மன ஆழத்திற்குள். உரையாடல்களில் அவன் உருவாக்கியபடியே இருக்கும் விடுவிக்க முடியாத சிடுக்குகள், புதிர்கள். திரைகள் மௌனம் காக்க, கடல் நிம்மதியற்றுப் புரள நினைவில் இறைந்த சொற்களை மீண்டும் மீண்டும் மனநுனியால் தீண்டி ஒலியெழச் செய்துகொண்டிருப்பாள் இரவெல்லாம்.

“என்ன செய்கிறீர்கள்?” எனும் அவளதுதொலைபேசிக் கேள்விக்கு.

“என் தோழியோடு படுக்கையில் காதல் செய்கிறேன். இப்போது அவள் தூங்குகிறாள். போதுமா?” என்பான் மர்மமான தொனியில்.

பிறகொரு நாள் “அதெல்லாம் சும்மா. உன்னைச் சீண்ட” என்றொரு முடிச்சிடுவான்.

பேச்சேயற்ற சில நாட்களுக்குப் பின்னதான தனிமையில், தன்னையறியாமல் அனிச்சையாக அவன் எண்களை ஒற்றுவாள் தொலைபேசியில். ஒரு “ஹலோ”வில் நிரம்பி விடும் கண்களை, நல்லவேளை, அவன் பார்க்கவே முடியாது என நிம்மதியுறுவாள்.

“பிடிக்கலைன்னு சொன்னேனா என்ன? என்ன பிரச்னை, அடிகிடி விழுந்ததா வீட்டில்?” அதிசயமாய்க் கனியும் அவன் குரல் மறுநாளே ” பிடிக்குதுன்னு சொல்லலியே?” என்று அகப்படாமல் நழுவும்.

“உன் அழுகுணிக் கதைகள் எனக்கு வேண்டாம்” என்பான் முறைப்பாக. குழம்பிச் சரிவாள் தலையணையில். உள்ளங்கைக்குள் இருக்கும் அவன் நிழற்படத்திடம் ரகசியமாகக் கத்துவள். “முரண்பாடுகளின் மூட்டை”.

கடலின் விடாத கூப்பிடுதல் சபலமூட்டும்; சுவர்களை மீறி வந்து அவளுடலை மோதும். விறைத்த முலைகளில் கிளைத்த பச்சை நரம்புகள் விரிந்து வெடித்துத் தேகமெங்கும் வலையாகப் படரும். அடி வயிற்றை உள்ளங்கை அழுத்தும். மனம் முணுமுணுக்கும்.

“இது தான் காமம். இது ரஜோ குணத்திலிருந்து உண்டானது. பெருந்தீனி தின்பது மஹாபாவம் இது. இவ்வுலகில் காமமே பெரும் பகைவனென்று அறிவாயாக!”

தூங்கிவிட்ட மகளிடம் ஓடி சிறு கட்டிலுக்கு வெளியே நீண்டு தொங்கும் குட்டிக் கையைத் தொட்டுக் கொண்டு, குளிர் பரவிய வெற்றுத் தரையில் குப்புறக் கிடப்பாள். உடலுள் அலைகளாட, உள்ளங்காலைச் சிறு மீன்கள் சீண்டக் கண்கள் கரித்து வழியும். எதுவோ கீறலுறும் ஒலியில் பதறியெழுந்து மீன்தொட்டியைக் கவனமாகச் சோதிப்பாள். ஒற்றை விரலால் அணுஅணுவாக வருடுவாள். அவள் தொடுகையை ஏற்று மீன்கள் துள்ளும். தொட்டி இருக்கும் அசையாத திடத்தோடு நெருடலேயற்று.

மீன்கள் நெருங்கி, உரசி முத்தமிட்டன. உடனடியாக விலகின. தொட்டியின் சுவர்களோடு சமரசமாக உலவின. விரிந்து, விரிந்து வீடளவு விஸ்தாரம் கொண்டது தொட்டி.

அலைகளின் தன்மையை நிராகரிக்க இயலாதது அறைச்சுவர்களின் உறுதியின்மை. படுக்கையிலேயே காத்துக்கிடந்தது அந்தப் புகைப்படம். இறுகக் கடித்த உதடுகளோடு அதைப் புத்தகமடிப்பில் செருகினாள்; காற்றில் கலைந்து, மறுபடி வெளிவந்து படபடத்தது கேலியாக. உடைகள் உடலை விலக்கித் துடிக்க, காற்றில் கூந்தல் உளைய தன்னையறியாமல் நகர்ந்து கொண்டிருந்தாள். கோடி நாகங்களின் விரிபடங்கள் ஜொலிக்கும் அலைகளை நோக்கி. பாதங்களை வருடி மீட்டும் அலைகள் கணுக்காலைக் கடந்து முழுங்காலுக்கு மேல் தொடைகளைத் தொட்டதும் திகிலுற்றுக் கட்டிலுக்கு ஒடிக் கனமான போர்வைக்குள் தன்னைப் பொதிந்தாள். அவன் விரல்கள் பிடரியை நெருடின. திகைத்து எழுந்ததும் போர்வைகள் சரிந்தன. அவன்தான்.

அஞ்சி நடுங்கும் குரலில்,

“எப்படி வர முடிந்தது?” என்றவாறே மேற்கூரைத் தளத்தை ஆராய்ந்தாள், சந்தேகமாக.

“சொன்னேனே, வருவேனென்று” குறும்பாக நிசப்தங்களை ஊடுருவும் சிரிப்பு.

“ஆனால் எப்படி?”

“வாசல் வழியாகத்தான்”

“நான் கதவை இறுக்கமாகப் பூட்டியிருந்தேனே” குழம்பினாள்.

“உனது பூட்டுகள் மிகவும் பலவீனமானவை. நீ எப்போதும் எல்லைகளை மீற விரும்புபவளாகவே இருக்கிறாய்”

அவள் மறுத்தாள் அவசரமாக.

“இல்லை நான்…”

குறுக்கிட்டான் “ஆமாம் நீ!”

படுக்கையில் கிடந்த அவன் படம் கசங்கி விடக்கூடாதேயென்று பயந்தாள். மனத்தடைகள் நெகிழ, பொங்கும் கடலின் போக்கில் சுழன்றன உடல்கள். மதில்கள் விலகி நடந்தன. முத்தங்களில் அகலமாயின ஜன்னல்கள். இடையில் அழுந்தும் அவன் முகம். அவளுடலின் பிரியமான பகுதிகளைத் தொட்டுச் சுட்டி நகரும் விரல். ஈர மணலில் குறுகுறுக்கும் பாதம். கடலைக் குடித்துப் போதையுற்ற அரையில், அணைப்பில் கிறங்கிய அவள் கண்ணில் பதியவே பதியாமல் கடந்தது ஒருக்களித்திருந்த ஜன்னலில் – ஒரேயொரு நொறுங்கிய நொடி மட்டும் தெரிந்த மகளின் நுனி விழி, பளபளவென்ற கத்தி முனைபோல, சிறு திமிறலும் சாத்தியமின்றி அவனோடு ஒன்றிவிட்ட உடலை மீட்க முடியவில்லை புரிந்தவனாக, “சும்மாயிரு அவள் நன்றாகத் தூங்குகிறாள்” என்றான். கடல் முடிவேயற்றுப் பெருகியது.

காலையில் தன் குற்றவுணர்வின்மையே ஒரு குற்றமெனத் திரட்ட முயற்சித்தாள். வழக்கமான அடங்கள் இல்லாமல் மௌனமாகச் சாப்பிடும் மகளின் சலனமற்ற முகம் எதுவுமே சொல்லவில்லை.

செத்து மிதந்த தங்கமீன் குப்பைவாளியில் கிடந்தது விறைத்த விழிகளோடு. பிறகு வந்த நாட்களில் ஒவ்வொன்றாக உயிரிழக்கத் தொடங்கின மீன்கள். ரகு ஊரிலிருந்து வந்த நாளில் துடித்துக் கொண்டிருந்த கடைசி மீனும் செத்ததை அவன் கவலையோடு கவனித்தான். அவன் கொண்டு வந்திருந்த கண்ணாடி ஜாடியில் புதிய மீன்களிருந்தன. சிறியதொரு தங்கமீனும் கூட. மீன்களில் சாவுதான் மகளின் உற்சாகமின்மைக்குக் காரணமென்றெண்ணினான்.

இந்தப் புதிய மீன்களால் அவள் பழைய குதூகலத்திற்குத் திரும்புவாள் என நம்பினான்.

சாப்பாட்டு மேஜையில் மூவரும் உட்காருகையில் மின்சாரம் அறுந்தது. காத்திருந்தாற் போல் இருள் வீட்டிற்குள் நுழைந்தது பரபரவென்று. தயாராக இருந்த மெழுகுவர்த்திகளை ராதா ஏற்றினாள். சுடர்கள் எதற்கோ பதறி நடுங்கின. ஜாடி மீன்கள் ஒளியேற்றி நீந்தின. எதிர்எதிராக அவளும், கணவனும். தனி மூலையொன்றில் குழந்தை. “இருட்டில் சாப்பிட்டால் பேய்களும் நம்மோட சாப்பிடுமாம் சேர்ந்து” என்றால் ராதா சகஜமான புன்னகையோடு. குழந்தையின் உதடுகள் அழுகைக்கு ஆயத்தமாவது போல் குவிகையில் அவள் ஒரு விதமான நிம்மதியையும் விடுவிடுப்பையும்” உணர்ந்தாள். ” சொல்லட்டும், சொல்லிவிடட்டும் ” ராதா காத்திருந்தாள்.

குழந்தை கண்ணாடிஜாடியின் வளைவுகளோடு மன்றாடிக் கொண்டிருந்த மீன்களைப் பார்த்தபடியே சொன்னாள். அவள் குரல் அபூர்வமான ஈரமும், சாந்தமும் நிறைந்ததாயிருந்தது.

“இனிமேல் இந்த மீனையெல்லாம் கடலிலேயே விட்டுடுங்க அப்பா, தயவு செய்து”

பிறகு அவள் வேகவேகமாகச் சாப்பிடத் தொடங்கினாள்..

– தொலை கடல் (சிறுகதைத் தொகுப்பு), தமிழினி பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *