அன்று பிரேமாவைப் பார்த்ததும் ஓடி ஒளிந்துகொள்ளத் தோன்றிற்று. அவளுடைய கல்யாணத்திற்கு நேரில் வந்து, எவ்வளவு வற்புறுத்தி அழைத்திருந்தாள்!
கோயிலில் நடந்த அந்த வைபவத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு என் உடல்நிலைமேல்தான் பழி போடவேண்டும். சொன்னால் ஏற்றுக்கொள்வாளா?
`இதெல்லாம் இயற்கை. தலைக்கு ஜலம் விட்டுக்கொண்டு வந்திருக்க வேண்டியதுதானே?’ என்று வாதாடுவாள் அந்த சண்டைக்காரி.
மறைவான இடம் எங்கு இருக்கிறது என்று நான் விழித்துக்கொண்டிருந்தபோதே அவள் என்னைப் பார்த்துவிட்டாள். கழுத்தில் அழுக்கேறாத மஞ்சள் கயிறு.
அந்த புது மணப்பெண் எதுவும் கேட்குமுன்னரே நான் முந்திக்கொண்டேன். “ஸாரி பிரேமா. ஒன் கல்யாணத்துக்கு வரமுடியல”.
பிரேமா கலீரென்று சிரித்தாள். பேரழகியான அவள் முகத்திற்கு இன்னும் மெருகேற்றியது அந்தச் சிரிப்பு.
“கல்யாணம் நடந்திருந்தாத்தானே!” சிரிப்பு பலத்தது.
“பின்னே..?” என்ன கேட்பது, எப்படிக் கேட்பது என்ற தர்மசங்கடத்துடன் அவள் கழுத்தையே பார்த்தேன்.
“சாயந்திரமா ஒங்க வீட்டுக்கு வந்து, விவரமா சொல்றேன், பானு. சாப்பாட்டு வேளை முடிஞ்சதும், ஒடனே வேலைக்கு வராட்டா, அந்த மானேஜர் பிசாசு கத்துவான்!”
யாருக்கும் அடங்காத இவளை அவ்வளவு தூரம் பயமுறுத்தி வைத்திருக்கும் அந்த `மானேஜர் பிசாசைப்’ பார்க்கவேண்டும்போல் இருந்தது எனக்கு.
பதினேழு வயதிலேயே உத்தியோகம் பார்த்துச் சம்பாதிக்க வேண்டும் என்று பிரேமாவுக்கு என்ன கட்டாயம்?
`பொறுமையாக இரேன். அவள்தான் வீட்டுக்கு வந்து சொல்லப்போகிறாளே!’ நிதானமின்றி அலைந்த மனதை வைதேன்.
பிரேமாவும் நானும் பேசிக்கொண்டிருந்தபோது, `இந்த தறுதலையோட என்ன பேச்சு!’ என்று அம்மா உள்ளே முணுமுணுத்துக்கொண்டிருந்தாள்.
பிரேமாவின் காதிலும் விழுந்திருக்கும். ஆனால் யார் என்ன சொன்னாலும் அதனால் பாதிக்கப்படாததுபோல் நடந்துகொள்வாள்.
“என்னைக் கேக்காம, அப்பா அந்தக் கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டார். அந்தக் கறுப்பனை யார் கட்டிப்பாங்க! அதான், கல்யாணத்துக்கு மொதநாள் அவனோட அண்ணனோட ஓடிப்போயிட்டேன்!” மீண்டும் சிரிப்பு. “அவனோட பேர் என்ன தெரியுமா? ரெமோ! முழிக்காதே. ரெங்கசாமி மகன் மோகன்!”
எனக்கு மேற்கொண்டு என்ன பேசுவது என்று புரியவில்லை.
“எனக்கு ஒங்கிட்ட மனம்விட்டுப் பேச முடியுது, பானு. நாம்ப சின்ன வயசிலேருந்து பழகினவங்க இல்லியா? அதான்,” என்றவள் தொடர்ந்தாள். “ரெமோவுக்கு இன்னும் படிப்பு முடியல. நான்தான் வேலை செஞ்சு சம்பாதிக்கிறேன்”.
ஒரு வழியாக என் குரல் வெளிப்பட்டது. “ஒங்க வீட்டிலே?”
பதிலுக்கு, இடி இடியென்று சிரித்தாள் பிரேமா. “நாங்க பண்ணின காரியத்துக்கு எந்த வீட்டிலே சேர்ப்பாங்க?”
அதன்பின், பத்து வருடங்கள் கழித்துத்தான் நான் பிரேமாவைப் பார்த்தேன். அவளுடைய சிரிப்பு மட்டும் மாறாது, அப்படியே இருந்தது.
“ரெமோவுக்குப் படிப்பு முடிஞ்சு, நல்ல வேலை கிடைச்சுடுச்சா?” நிறைய தங்க நகைகள் அணிந்திருந்தவளைப் பார்த்ததும் என்னையும் அறியாமல் அப்படி ஒரு கேள்வி எழுந்தது.
“யாரு? ஓ, அவனா!”
அப்படி என்ன அலட்சியம்?
“இப்போ நான் அவனோட இல்லே”. இன்னொரு அதிர்ச்சியை அளித்தாள்.
`நல்லவேளை, அம்மா அருகில் இல்லை, இவள் பேசுவதைக் கேட்க!’ என்று சிறிது நிம்மதி எழுந்தது எனக்குள்.
“நான் முந்தி வேலை செஞ்சிட்டு இருந்தேன் பாரு, அந்தக் கடை முதலாளி என்மேல ஆசைப்பட்டார். `உன்னை ராணிமாதிரி வெச்சுக்கறேன்’னார். எதுக்காக ரெமோவுக்கு உழைச்சுக் கொட்டறது?”
“இன்னொரு கல்யாணமா?” என் குரல் எனக்கே கேட்கவில்லை.
“போதும். ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் பட்ட அவதி! `ஒனக்குப் பிறந்ததை நீயே வெச்சுக்கடா’ன்னுட்டு, என் மகனையும் அவங்கிட்ட குடுத்துட்டு, ஜாலியா வெளியே வந்துட்டேன்!”
இதற்கும் ஒரு சிரிப்பா?
நான் முகத்தைச் சுளிக்காமல் இருக்கப் பாடுபட்டேன்.
வெளிநாட்டில் பல வருடங்கள் கழித்துவிட்டு, அம்மாவைப் பார்க்கத் திரும்பி வந்தேன்.
“பிரேமாவைப் பாத்தியா? எப்படிம்மா இருக்கா?” என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.
தலையைத் திருப்பிக்கொண்டு உள்ளே போனாள் அம்மா. காதில் விழவில்லை என்று நான் நினைத்துக்கொள்ளவேண்டுமாம்!
ஒரு கதையின் முடிவைத் தெரிந்துகொள்ளாமல் போனதுபோல் தவிப்பாக இருந்தது எனக்கு.
சொல்லி வைத்தாற்போல், அவளே என்னைத் தேடி வந்தாள்.
“ஒங்கம்மாவை மார்க்கெட்டில பாத்தேன். நீ வந்திருக்கிறதா சொன்னாங்க”. ஏதோ ஒப்பிப்பதுபோல் சொன்னாள்.
இளமையின் உற்சாகம் எப்போதும் நிலைத்திருக்குமா? அவளுக்கும் இப்போது ஐம்பது வயதாகி இருக்காது?
“எங்கேயாவது வெளியே போகலாமா, பானு?” என்றாள் மெள்ள.
எனக்குப் புரிந்தது. அவள் சொல்லப்போவது அம்மா காதில் விழக்கூடாது!
என்று இவள் பிறர் நினைப்பதைப்பற்றி கவலைப்பட்டிருக்கிறாள் என்கிற ஆச்சரியமும் எழாமலில்லை.
உணர்ச்சியற்ற குரலில், “ரெமோ செத்துப்போயிட்டான்,” என்று ஆரம்பித்தாள்.
என்னதான் அவனை விட்டுப் பிரிந்திருந்தாலும், சட்டப்படி அவள் இன்னும் அவனுடைய மனைவிதானே! அந்த துக்கமோ?
“எனக்கு யாரும் சொல்லிவிடலே. பேப்பரில பாத்துத் தெரிஞ்சுக்கிட்டேன். இறுதி யாத்திரை இந்த விலாசத்திலே, இத்தனை மணிக்குன்னு போட்டிருந்தாங்க. ரயில்ல அங்க போனேன்”. அதன்பின் நீண்ட மௌனம். அவள் பார்வை எங்கோ நிலைத்திருந்தது.
“மொதல்ல என் மகனை எனக்கு அடையாளம் தெரியல. எப்பவோ, ரெண்டு வயசில பாத்தது. அவங்கப்பாமாதிரியே அழகா இருந்தான். அதை வெச்சுத்தான்..!”
நான் சற்றும் எதிர்பாராவிதமாக பிரேமா விம்ம ஆரம்பித்தாள்.
“அவன் எல்லார்கிட்டேயும் என்ன சொன்னான், தெரியுமா பானு? `எனக்கு ஒரு அம்மா இருக்கிறதே தெரியாது,’ அப்படின்னான். எங்கிட்ட வந்து, `இனிமே இங்க வராதீங்க,’ன்னு கறாரா..! என்னால அவனுக்கு அவமானமாம்! பெத்த தாய்னுகூட பாக்காம என்னை விரட்டி அடிச்சுட்டாண்டி!”
பெரிய குரலெடுத்து அழுதவளை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது?
`ஒரு தாயாக நீ அவனுக்கு என்ன செய்தாய்?’ என்று கேட்கத்தான் தோன்றியது.
ஆனால், என் கை வாயை முந்திக்கொண்டது. அவள் முதுகைப் பரிவுடன் தடவிக்கொடுத்தது.
அடுக்கடுக்கான சங்கிலிகள்மேல் கை பட, பேச்சை மாற்றும் எண்ணத்துடன், “இவ்வளவு நகை போட்டுக்கிட்டு வெளியே வரலாமா, பிரேமா? தொலைஞ்சுடாது?” என்று செல்லமாகக் கடிந்தேன்.
`எதை எதையோ தொலைச்சுட்டேனே! நகை என்ன, கேவலம் உயிரில்லாத சாமான்!’ என்று எண்ணியிருப்பாள். இல்லாவிட்டால், அப்படிக் கதறியிருப்பாளா?
பி.கு: எனக்குத் தெரிந்த மூன்று பெண்களின் குணாதிசயங்களை, அவற்றால் ஏற்பட்ட அனுபவங்களை, பிரேமா என்கிற ஒரே கதாபாத்திரத்துக்குள் புகுத்தியிருக்கிறேன்.