(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வரக் வரக்கென்று மொட்டைத்தலையை சொறியச் சொறிய அப்படி இதமாயிருந்தது. இந்த ஒரு மணிநேரத்தில் மூன்றாவது முறையாக கழிவறைக்குள் வந்து இப்படி சொறிய வேண்டியதாகப் போய்விட்டது. அலுவலகத்தினுள் பலருக்கும் முன்னால் இப்படி சொறிய முடியவில்லை. அப்படியும் தலை அரிக்கத் தொடங்கிவிட்டால் கை கட்டுப்பாட்டையும் மீறி, இயல்பாய் தலையை நோக்கிப் போய்விடுகிறது. அதுவே சக ஊழியர்களுக்கு முன்னால் அவனுக்கு மிகவும் அவமானமாக இருந்தது.
யாரும் பார்க்காமலிருக்க வேண்டுமாயின் அவனுக்கென்று தனி அறை இருக்கவேண்டும். அப்படி தனி அறை கொடுத்து வேலை செய்யுமளவுக்கு அவனொன்றும் அங்கு முக்கிய அலுவலகன் அல்ல. அதற்காக அடிநிலை ஊழியனுமல்ல. அவன் ஒரு சராசரி உத்தியோகஸ்தன் மட்டுமே.
சொறிச்சல் தாங்கமுடியாமல் தான் தலையை மொட்டையடித்தான். “இது உன்னுடைய ஓவல் ஷேப் முகத்துக்கு கொஞ்சம் கூட பொருத்தமாயில்லை,” என்று சியூ கிம் சொல்வாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
அப்பொழுதுதான் கம்பிச்சிறகாய் அவன் தலையில் முடிகள் வளரத்தொடங்கிய நேரம். இந்த நேரத்தில் இப்படி ஒரு சண்டை இவர்களுக்குள் வந்திருக்கவேண்டாம். “என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருந்தால் உன்னுடைய முகமண்டலம் பற்றி நான் விளக்கியிருப்பேனே”, என்று சாதாரணமாகத்தான் சொன்னாள்.
இடியாய் கன்னம் அதிர்ந்தபோதுதான், ஓங்கி அறைந்தது ராஜ் என்பதே “சியூ கிம்”முக்கு உறைத்தது. சகலமும் பதறிட, எரித்துவிடுவதுபோல் அவனை முறைத்தபோது, அவன் வெளியேறிக்கொண்டிருந்தான்.
அவளை அடித்ததற்காக ஒரு “சோரி”கூட சொல்லாமல், அவன் வெளி நடப்புச் செய்ததை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.
‘பப்’புக்குப்போய் ஒரு பெக் விஸ்கியைக் கையிலெடுத்துக் கொண்டு, எல்லாவற்றையும் யோசித்தபோது தன்னிச்சையாகக் கண்களிலிருந்து கண்ணீர் வழியத்தொடங்கியது.
“என் தந்தை யார்? அடிப்படையில் நான் யாருக்கு, எந்த ஜாதியில் பிறந்தவன்? இதை ஏன் கடைசி வரை சொல்லாமலேயே அம்மா போய்த் தொலைந்தாள்? அடையாள சான்றிதழில் இந்தியன் என்றிருந்தாலும் நான் இந்தியன் தானா? அப்படியானால் தனக்கு ஏன் ஆங்கிலம் தவிர எந்த இந்திய மொழியுமே பேசத்தெரியவில்லை ?”
அவனுக்கு நினைவு தெரிந்த நாளாய் அம்மா ஒரு பிரிண்டிங் ஆபிஸில்தான் வேலை செய்தாள்.
அம்மா மிக அழகாக ஆங்கிலம் பேசுவாள். ராஜும் அம்மாவும் இறுதிவரை ஆங்கிலத்திலேயேதான் உரையாடியிருக்கிறார்கள். ஆனால் வீட்டுப்பாடத்தில் சந்தேகம் கேட்டால் மட்டும் சொல்லிக்கொடுக்கத் தடுமாறுவாள். மறுநாளே துணைப்பாட ஆசிரியரின் வருகை தடபுடல் படும். ராஜ் ஏ லெவெல் வரை கூட துணைப்பாட ஆசிரியரிடம் கற்றுக்கொண்டுதான் இருந்தான். ஆனால் தேர்வு முடிவு வருவதற்குள் ஒரு கார் விபத்தில் அம்மா இல்லாமலானாள். அந்த வெறுமை தாங்காமல் தான் மனம் போன போக்கில் வாழத் தொடங்கியதே.
சியூகிம் இவனோடு சேர்ந்து வாழத்தொடங்கிய பிறகு வாழ்க்கை மிக ரம்யமாக இருந்தது. இருவரும் ஒருவரையொருவர் அப்படிக் காதலித்தனர். ராஜ் வீடு திரும்பும் வரை அவள் உணவுண்ணவே மறுத்தாள். தனக்குத்தெரிந்த ஒரே சமையலான ‘டெவில் கறி’யை சமைத்து அவனுக்குப் பரிமாறினாள். ஒரு மாறுதலுக்கு ராஜ் பரவாயில்லை, என்று உண்டபோது அவளுக்கு மகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட்டது. ராஜ்ஜும் அவளுக்குத்தெரியாமல் ஒரு அந்தரங்கம் கூட தன்னிடம் இல்லை, என்பதுபோல் அப்படியே திறந்த புத்தகமாய் அவளிடம் தன்னை ஒப்படைத்தான். அப்படி ஒரு ஏகாந்தமான வேளையில் தான் இவனது மொட்டைத்தலை பற்றிய கருத்தைச் சொல்லத்தொடங்கினாள். அடுத்து திடீரென்று அவனது பிதுரார்ஜிதம் பற்றி விசாரித்தாள் சியூ கிம்.
அவன் ஒரு கணம் தடுமாறினாலும் சுள்ளென்று கோபம் வந்துவிட்டது. அப்பொழுது அவன் தலை அரிப்பின் உச்சத்தில் இருந்தது. தலையை மொட்டையடித்தாலாவது அரிப்பும், சொறிச்சலும், குறையும் என்று நினைத்துக்கொண்டிருக்க, இந்தமாதிரி கோபவேளையில் தான், சொறிச்சலின் இம்சையும் உச்சத்தை தாக்க, நெருப்பாய் உமிழ்ந்தான் வார்த்தைகளை. என்னுடைய பிறப்பு உன்னுடைய கேலாங் வாழ்க்கையை விட ஒழுங்கானதுதான்.”
அப்படியே ஸ்தம்பித்துப்போனாள் சியூ கிம்.
கேலாங் இரவுவிடுதியில் உல்லாசத்தின்போதுதான் சியூகிம்மை அறிமுகம். உடல் மட்டும் உறவு கொள்ளவில்லை. உள்ளங்களும் உன்மத்தம் பிடித்தாற்போல் ஒட்டி கொண்டுவிட்டது. ராஜ்ஜுடன் சேர்ந்து வாழத்தொடங்கியபிறகு, மறந்தும் அவள் தன்னுடைய பழைய வாழ்க்கைக்குப் போகவில்லை. வீட்டிற்கருகில் உள்ள துணி பேக்டரியில் சாதாரண சம்பளத்திற்கு வேலைக்குப்போனாள். வீட்டுச்செலவில் எல்லாமே அவளும் பகிர்ந்து கொண்டாள். அப்படிப்பட்ட தன்னைப்பார்த்தா?
உக்கிரமான வன்மத்தோடு அவனை முறைத்தவள் நிதானமாகக் கூறினாள்.
“நான் கேலாங் வாழ்க்கையில் இருந்தவள்தான் என்றாலும் என்னுடைய தாய்மொழி என்னவென்று எனக்குத்தெரியும், என்னுடைய தகப்பன் யார் என்று கூட எனக்குத்தெரியும்” கண்களில் பூச்சி பறந்தது. அவன் விட்டபேயறையில் நிலைதடுமாறி கட்டிலின் விளிம்பில் இடித்துக்கொண்டு கீழே விழுந்தாள்.
நிலைகுலைந்து கிடந்த அவளைத் திரும்பியும் பாராமல் நேராக ‘பப்புக்குச் சென்றவன், குடித்துவிட்டு விக்கி விக்கி அழுதான். அப்பொழுதுதான் ராஜ் அம்மாவைப்பற்றி ஆழமாக யோசித்தான்.
அம்மாவின் பெயர் சாரா. ஏன் அவள் எப்பொழுதுமே ஆங்கிலத்தில் மட்டுமே பேசினாள்? அவள் உடைகூட டீ ஷர்ட்டும், கால்சராயும்தான்.
வெளியில் போவதென்றால் மட்டுமே, நல்ல விலையுயர்ந்த முக்கால் ஸ்கர்ட்டும், நாகரீகமான பிளவுஸும் அணிந்து கொள்வாள். ஒருமுறை கூட அவள் சேலை அணிந்து அவன் பார்த்ததில்லை. ஒரேயொருமுறை மட்டும் அவள் ஏதோ தெரிந்தவர்கள் வீட்டு விசேஷத்துக்குப்போய் வரும் போது, நெற்றியில் கலர் பொட்டு ஒன்று ஒட்டவைத்திருந்தாள்.
வாழ்ந்த காலத்தில் ஒருநாள் கூட ஏன் அவள் தன் வாழ்க்கையைப் பற்றி, எதுவுமே தன்னிடம் சொல்லவில்லை? ஒருவேளை சியூ கிம் சொல்வதுபோல் —–நினைக்கவே நடுங்கியது. உடம்பெல்லாம் கூசியது.
மடேர்மடேர் என்று ஓங்கி ஓங்கிதன்னுடையமொட்டத்தலையில் அடித்துக்கொண்ட ராஜ் தேம்பித்தேம்பி அழுதான். சட்டென்று அந்த போதையிலும் அவனுக்கு வியர்த்துக்கொட்டியது. என்ன அபாண்டமிது? உயிர் விடும் காலம் வரை ஒருநாளாவது வேற்று ஆடவன் அம்மாவைத்தேடி வீட்டுக்கு வந்திருக்கிறானா? கடைசிக்காலம் வரை பிரிண்டிங் ஆபிசிலேயே வேல செய்து செய்து, கைவிரல்கள் தேயத்தேய தட்டச்சு செய்து, இரவெல்லாம் கைக்கு களிம்பிட்டு, உஸ், உஸ், ஸென்று, கைவலியை அனுபவிப்பதை கண்கூடாகப் பார்த்தவன் தானே? எப்படிப் பெற்றவளைப்பற்றி இப்படியெல்லாம் யோசிக்கப்போயிற்று?
சீ, ச்சீச்சீ, அம்மா, என் அருமை அம்மா! மூக்கிலிருந்து ஜலம் வடிய உறிஞ்சி உறிஞ்சி அழுதான். ஏனோ ஒருகணம் சிலிர்த்துக்கொண்டு வந்தது.
இன்னொரு லார்ஜ், என்று ஆர்டர் செய்துவிட்டு சிப்ஸை கொறிக்கத்தொடங்கியபோது, மீண்டும் தலை பூச்சிக்காடாய் அரித்தது. மருத்துவர் இது அலெர்ஜிக், என்று உறுதியாய் சொல்லமுடியாது என்று, சரும வியாதிகளில் ஒன்றாக மட்டுமே கண்டு மருந்து கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் மன உளைச்சலின் போதுதான் தலை அரிப்பும் தாங்க முடியாததாக இருந்தது. முதலில் சாதாரணமாகத்தான் இதை எடுத்துக்கொண்டிருந்தான்.
மருத்துவர் தந்த கிரீமோ, ஊசியோ, எதுவுமே பலன் தரவில்லை . சொறிந்து சொறிந்து தலையில் புண்போல் சிறு சிறு கொப்புளங்கள் வரத்தொடங்கிய பிறகுதான் இங்கிலீஷ்மருந்தையே கைவிட்டான். நண்பர் அறிமுகப்படுத்திய ஆயுர்வேத மருந்தின் கட்டுப்பாட்டில், கொப்புளங்கள் மறைந்தாலும், அரிப்பு முழுவதுமாய் நிற்கவில்லை.
அப்படித்தான் தலையை மொட்டை அடித்தான். மொட்டை அடித்த முகூர்த்தம் சியூகிம், மின் நாவில் விஷம் வந்து இறங்கியது. இவன் நாவில் ஆலகாலம் வந்து சொட்டியது.
மறுநாள் ஞாயிறு மதியம்தான் போதை தெளிந்தது. ராஜ் கண் விழித்துப்பார்த்த போது சியூ கிம் வீட்டிலில்லை. அவளின் எந்த உடமையும் கூட வீட்டிலில்லை .
அன்று மும்முரமாய் ராஜ் அம்மாவின் அலமாரியைக் குடைந்து கொண்டிருந்தான். அம்மா உயிரோடிருந்த காலத்தில் ஒருநாள் கூட இந்த அலமாரியை அவன் திறந்ததில்லை.
இந்த மூவறை வீடே அம்மா உழைத்து கஷ்டப்பட்டு வாங்கியதுதான். அவன் கேட்ட எதுவுமே வாங்கித்தர அவள் மறுத்ததில்லை. ஆனால் செலவு செய்யும் ஒவ்வொரு காசுக்கும் ராஜிடம் அவள் கணக்குக்கேட்பாள். சில சமயம் அலுவலக வேலையை வீட்டில் கொண்டு வந்து செய்து கொண்டிருப்பாள். அவளுக்குத் தோழிகள் கூட அதிகமில்லை. அவள் இறந்தபோது கூட அலுவலகத்திலிருந்து ஒரு தொகை கொடுத்துவிட்டுப்போனார்களே தவிர, பெரிதாக அவளைப்பற்றி யாருமே பேசவில்லை .
சரக்கென்று கையில் தட்டுப்பட்ட கவரைப்பிரித்தபோது, இன்ஷூரன்ஸ், பேங்க் பணம் என, எல்லாமே அவன் பெயருக்கு கிரமேயப்பட்ட பத்திரங்கள். பார்க்கப் பார்க்க அவனுக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. மேலும் குடைந்தபோது ஒரு பழுப்பு நிறக்கவரில் ஒரு புகைப்படம்.
சரஸ்வதி, ஆல்பர்ட், என்ற பெயரில் வந்த வாழ்த்துக் கடிதத்தில் அம்மாவுடன் சிரித்துக்கொண்டு ஒரு இளைஞன், பார்க்க யூரேஷியன் போல் தெரிந்தது. கப்பலின் மேல் தளத்தில் நின்றுகொண்டு இருவரும் எடுத்துக்கொண்ட படம். இன்னொரு படத்தில் ராஜ் குழந்தையாய் அவர்களின் நடுவில்.
ராஜ் அப்படியே கட்டிலில் போய்ச் சரிந்து விழுந்தான். “அம்மா, அம்மா! என்று மட்டுமே அரற்றினான். என் அம்மா பெயர் சரஸ்வதி. அப்பா பெயர் ஆல்பர்ட், என் தாய் தந்தையை நான் கண்டுவிட்டேன்,” பிழியப் பிழிய அழுதான்.
வெளியே சோவென்று மழை பொழிந்து கொண்டிருக்க, தனிமையின் உக்கிரம் தாளாமல், ராஜ் பித்துப்பிடித்தாற்போல் ஏங்கி ஏங்கி அழுதான்.
இடது கண்ணின் கீழிமை அசாதரணமாய்த் துடிக்க, எங்கோ காலிங்பெல்லின் சத்தம் இடி இடிக்கும் சப்தத்தில் அமுங்கிப்போனது. வானம் வெறி பிடித்தாற்போல் கிழிந்து ஊற்ற, மெத்தென்று அம்மாவே அவனை தன் மடியில் ஏந்திக்கொண்டாள். நெஞ்சு, முகம், கண், இமை, என ஆறுதலாய் தடவிக்கொடுத்தாள். அந்த இதம் தாங்காமல் ராஜ் அப்படியே மடியில் குப்புறப்படுத்துக்கொண்டு கேவினான். பளீர் பளீரென்று சாட்டைவிளாறாய் துளிமுகம் காட்டிய மின்னலோடு கருமேகங்கள் போட்டிபோட்ட நேரம் ராஜ் ஆசுவாசப்பட்டிருந்தான்.
இதமாய் பதமாய், அவன் தலையை கோதிகோதி சொறிந்து கொடுக்க முற்பட்டபோது தலையில் அப்பொழுது சொறிச்சலே இல்லை. அன்போடு அந்த கைகளை அவன் பற்றிக்கொண்டபோது, சியூ கிம் அவன் கன்னத்தில் குனிந்து முத்தமிட்டாள். “ஐ எம் சோரி ராஜ்,” என்றாள் உடைந்த குரலில்.
“ஐ லவ் யூ சியூ கிம்” என்று ராஜ் அவளை அணைத்துக்கொண்ட நிமிஷம் காலம் உறைந்து போனது.
– சூரிய கிரஹணத்தெரு, முதற் பதிப்பு: 2012, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.