கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 15,266 
 

சந்திரிகா கோபத்தில் சிவந்திருந்தாள்.

ஏர் கண்டிஷன் குளிர்ச்சியையும் மீறி அவள் முகத்திலுருந்து வெளிப்பட்டன உஷ்ணக்கதிர்கள். அவளுடைய பரந்த மேஜையின் மேல் அவள் கோபத்துடன் விசிறியடித்த ஃபைல் தவிர ரத்தச் சிவப்பில் இண்டர்காம், அதே நிறத்தில் கார்ட்லெஸ் டெலிபோன், மேஜை காலண்டர், மார்க்கர் பேனாக்கள், மானிட்டரில் அடுத்த கட்டளைக்காக கர்ஸர் கூடு திக்கிக் காத்திருக்கும் பர்சனல் கம்ப்யூட்டர்…

சந்திரிகா கத்தினாள். “ஜடம் மாதிரி நின்னா என்ன அர்த்தம்?. ஏதாவது சொல்லுங்க..”

எதிரில் தலையைக் குனிந்து நின்றிருந்த அந்த நாற்பத்தைந்து வயது மனிதர் மெதுவாய், ‘ஸ… ஸாரி மேடம்…” என்றார்.

சீறினாள் சந்திரிகா. “டோன்ட் ஸே திஸ் ப்ளடி வோர்ட். ஸாரி சொன்ன எல்லாம் சரியாய் போயிடுமா? உங்களோட கவனக் குறைவால கம்பெனிக்கு தினசரி நஷ்டம்.”

“இனிமே… கவனமா வேலை செய்யறேன் மேடம்..”

“கெட் லாஸ்ட், என் முன்னால நிக்காதீங்க. போங்க.”

வியர்த்த முகத்தை வழித்துக்கொண்டு அவர் வெளியேறினார்.

சந்திரிகா பஸ்ஸரை அழுத்தினாள். எட்டி பார்த்த பியூனிடம், “ஜெயந்தை வரச் சொல்லு.” என்றாள்.

சொற்ப வினாடிகளில் ‘எக்ஸ்க் யூஸ்மி’ சொல்லிக் கொண்டு பிரவேசித்த ஜெயந்த் இருபத்திநான்கு வயது இளைஞன். அசப்பில் அரவிந்தசாமி.

பவ்யமாய் நின்றான்.

“எஸ் மேடம்..”

” ஜெயந்த், உனக்கு கேஷ் ஃப்ளோ என்ட்ரி எப்படிப் போடணும்னு தெரியுமா?”.

“தெரியும் மேடம்”

“நாராயண மூர்த்தி தப்புத் தப்பா அந்த வேலையை செஞ்சிருக்கார். அதனால கம்ப்யூட்டர்ஸ் பூராவும் தப்புக்கு கணக்கு காட்டுது. கம்ப்யூட்டர் டேட்டாவை நம்பி எக்சிக்யூட்டிஸ் நாங்க கம்பெனி ப்ரோக்ரேஸ்ஸை திட்டமிடறோம்”

“அந்த வேலையை இனிமே நான் செய்யறேன் மேடம். மேற்கொண்டு பிரசினை வராம பார்த்துக்கிறேன்.”

அவன் சொன்ன வினாடி – இண்டர்காம் தொண்டையை செருமியது. ரிசீவரை எடுத்தாள் சந்திரிகா.

“ஹலோ சந்திரிகா ஹியர்.”

“நான் எம்.டி பேசறேன்.”

“குட் ஈவினிங் ஸார்”

“குட் ஈவினிங், ஒரு நிமிஷம் என் ரூம்க்கு வாம்மா”

“வரேன் ஸார்”

ரிசீவரை வைத்தாள். ஜெயந்திடம், “நீ போகலாம்.” என்றாள். எம்.டி எதற்காகக் கூப்பிட்டிருப்பார்? யோசித்திக்கொண்டே மேனேஜிங் டைரக்டரின் அறைக்குள் நுழைந்து எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.

எம்.டி. வீவா நிறத்திலிருந்தார். தலையில் எழுபத்தைந்து சதவீதம் பாலைவனம். ரீடிங் கிளாஸை கழற்றிக்கொண்டே சந்திரிக்காவைப் பார்த்தார்.

“உன்னோட லீவ் அப்ளிகேஷன் பார்த்தேன்”

“அம்மா ஸார், நாளைக்கு ஒரு நாள் லீவ் வேணும்”

“நாளான்னிக்கு லீவ் எடுத்துக்கலாமே?. நாளைக்கு நீ அவசியம் வரவேண்டியிருக்கு”

சந்திரிகா சட்டென்று சொன்னாள். “மன்னிக்கணும் ஸார், நாளைக்கு நான் வீட்டில் பர்சனலா ஒரு இன்டெர்வியூ நடத்த வேண்டியிருக்கு”

“என்ன சொல்றே.. நீ?”

“அம்மா ஸார், நாளைக்குத்தான் என்னோட லைஃப் பார்ட்னரை தேர்ந்தெடுக்கணும். என்னைப் பெண் பார்க்க இரண்டு பேர் வர்றாங்க!”

எம்.டி.யின் முகத்தில் தீவிர ஆச்சர்யம்.

“வாட் ஏ சர்ப்ரைஸ் நியூஸ்! நீ நிஜம்மாவா சொல்றே?”

“எஸ் ஸார்”

“இவ்வளவு பெரிய விஷயத்தை என் கிட்டே கூட சொல்லாம நீ ரகசியமா வெச்சிருந்திருக்கியே!”

“ரகசியமா வெச்சிருக்கணும்னு எனக்கு இன்டென்ஷன் எதுவும் இல்லை ஸார், எப்படி உங்ககிட்டே இதை சொல்றதுன்னு புரியாம தயங்கிட்டு இருந்தேன், சொல்லப் போனா கூச்சமாக் கூட உணர்றேன்.”

“இதில் கூச்சப்பட என்னம்மா இருக்கு?”

“இவ்வளவு வருஷமா விட்டுட்டு இந்த முப்பத்தெட்டு வயசில் கல்யாணம் பண்ணிக்கிற முடிவுக்கு வந்திருக்கேனே.. மத்தவங்களைப் பொறுத்தவரை இது நகைப்புக்குரிய விஷயம்தானே…” சந்திரிகா விடை பெற்றாள்.

***

அசோகனை நாற்பது வயது மதிக்கலாம், நரையை மறைக்க டை முயற்சிகள் தெரிந்தது. தடிமனான பவர் கிளாஸ், புன்னகைக்கிறபோது ஒரு காரைப் பல் உறுத்தியது.

சந்திரிகா பேசி முடித்ததும் சொன்னார், “உங்களைப் பத்தின எல்லா விபரங்களையும் விளக்கமா சொல்லிடீங்க, இனி நான் என்னைப் பத்தி சொல்லட்டுமா?”

சந்திரிகாவின் உதட்டில் புன்னகை. “உங்களைப் பத்தி நீங்க சொல்றதை விட நானே கேட்டுத் தெரிஞ்சிக்க விரும்பறேன்.”

தோள்களைக் குலுக்கினார் அசோகன், “கேளுங்க”.

“பொறுக்கியெடுத்த மாதிரி சில கேள்விகள்தான், என்கிட்டே உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கு?”

“பல ஆம்பிளைங்க படிச்சிட்டு வேலை கிடைக்காம திண்டாடிகிட்டு இருக்கிற இந்தக் காலத்தில் ஒரு பெண்ணாயிருந்தும் உழைச்சி எக்சிக்யூடிவ் லெவெலுக்கு உயர்ந்து மாசம் பன்னிரெண்டாயிரம் சம்பாதிக்கிறிங்களே… புவர் ஃபாமிலில் பிறந்ததாலும் கார் பங்களான்னு வசதிகளைப் பெருக்கிக்கத் தெரிஞ்ச உங்க புத்திசாலித்தனம் எனக்குப் பிடிச்சிருக்கு.”

“நான் இது நாள் வரைக்கும் கல்யாணம் பண்ணிக்காம இருந்ததுக்கான காரணத்தை உங்களுக்கு தெளிவா சொல்லிட்டேன், அதே மாதிரி உங்க கல்யாணம் தள்ளிப் போனதுக்கான காரணத்தை நான் தெரிஞ்சிக்கலாமா?”

“ஓரளவுக்கு அந்தஸ்து உள்ள பெண்ணா தேடறேன். சில சமயம் நான் எதிர்பார்க்கிற அந்தஸ்தில் பொண்ணு அமையும், ஆனா பார்வைக்கு அழகா இருக்காது. எல்லாம் பொருந்தி வர்றப்ப பெண் வீட்டாருக்கு என்னை பிடிக்கறதில்லை” சொல்லிவிட்டு பலமாய்ச் சிரித்தார் அசோகன்.

“அப்படின்னா உங்களுக்கு கல்யாண ஆசை இல்லாம இல்லை”

“சர்ட்டனிலி”

“அப்படி இருக்கும்போது உங்க எதிர்பார்புகளைக் கொஞ்சம் குறைச்சிக்கலாம் இல்லையா?”

“அதெப்படி? கல்யாணம்ங்கறது ஆயிரங்காலத்துப் பயிர், அதில் என்னிக்குமே நோ காம்ப்ரமைஸ்.”

அரை மணி நேரத்திற்கும் மேல் பேசிக் கொண்டிருந்த சந்திரிகா கை கூப்பி அசோகனுக்கு விடை கொடுத்தாள். “தாங்க்ஸ் மிஸ்டர் அசோகன். என்னோட முடிவை நான் லெட்டர் மூலமா உங்களுக்கு தெரிவுப்படுத்தறேன்”.

மத்தியானம் வர இருக்கும் வைகுண்டராமன் என்கிற நபருக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள்.

***

மறுநாள்.

சாயந்திரம் ஆறு மணிக்கு அந்த ஃபியட் கார் புழுதி பறக்க வந்து போர்டிகோவில் நின்றது. காரின் கதவைத் திறந்துக் கொண்டு வாணி இறங்கி வந்தாள்.

“வா வாணி” என்றாள் சந்திரிகா. வாணி அவளுடைய நீண்ட காலத் தோழி.

எதிரில் இருந்த சேரில் அமர்ந்து கொண்டே ஆர்வத்தோடு கேட்டாள் வாணி.

“என்னாச்சி? நேத்திக்கு அவங்க வந்தாங்களா? ரெண்டு பேரில் யாரை செலக்ட் பண்ணினே?”

“ரெண்டு பேரையும் ரிஜெக்ட் பண்ணிட்டேன் வாணி”

வாணி முகத்தில் திகைப்பு.

“ஏன்?”

“காலைல வந்த அசோகன் நான் சம்பாதிக்கிற பணத்திலேயே குறியாயிருக்கார். மத்தியானம் வந்த வைகுண்டராமன் என்னோட பதவி, வசதி இதெல்லாம் பார்த்திட்டு கல்யாணத்துக்கு அப்புறமா நான் அளவுக்கதிகமா ஆதிக்கம் செலுத்தி வேணாங்கற பயத்தோடவே பேசினார். ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்பாங்க, நான் ரெண்டு சோறை பதம் பார்த்துட்டேன். எல்லா ஆம்பிளைகளுமே இந்த வகையிலதான் அடங்குவாங்க. ஒன்னு என் சம்பாத்தியத்தைப் பார்த்து ஆசைப்படுவாங்க அல்லது என் சாமர்த்தியத்தைப் பார்த்து பயப்படுவாங்க. இதையெல்லாம் கடந்து சந்திரிகாங்கிற ஒரு பெண்ணை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளுக்கு உண்மையான பற்றுதலோட ஒருத்தன் கிடைப்பான்னு எனக்கு சந்தேகமா இருக்கு”

“அதனால இந்த துணை தேடற பிஸினஸே வேண்டாம். தனிமையிலேயே காலத்தைக் கழிச்சிரலாம்ங்கற முடிவுக்கு வந்துட்டியா?”

“நோ, நோ, என்னை எனக்காகவே விரும்பக்கூடிய ஒரு துணையை நான் தேர்ந்தெடுத்துட்டேன்”

“யாரு?”

“என்னோட ஆபீஸில் வேலை பார்க்கற ஜெயந்த்”, அதிர்ந்தாள் வாணி.

“ஒரு தடவை எனக்கு அறிமுகம் பண்ணி வெச்சியே.. சின்சியரா வேலை செய்வான் ..என்கிட்டே பிரியமா நடந்துப்பான்னு.. ஒரு யங் சாப்! அந்த ஜெயந்த்தா?”

“ஆமா”

“யோசிச்சுத்தான் முடிவெடுத்தியா?”

“ஜெயந்த் கிட்ட பேசிட்டேன், மனப்பூர்வமா சம்மதம்”

“உனக்கும் அவனுக்கும் கிட்டத்தட்ட பதினாலு வயசு வித்யாசம் இருக்கும். அவன் ரொம்பச் சின்னப் பையன். இதனால பின்னாடி குடும்ப வாழ்க்கையில் பல சிக்கல்கள் எழ வாய்ப்பிருக்கு. இன்னும் நல்ல யோசனை பண்ணு சந்திரிகா”

“மை குடனஸ்! எனக்கிருக்கும் சந்தோஷமான முடிவ விளக்கமா சொல்லாம விட்டுட்டேன். சின்ன வயசிலிருந்தே அனாதை இல்லத்தில் ஆதரவில் வளர்ந்து ஆளான ஜெயந்தை தத்து எடுத்துக்கற முடிவுக்கு வந்துட்டேன்”

சந்திரிகா நிஜமான உற்சாகத்தோடு சொல்லிக் கொண்டே போனாள்.

– 1995(நன்றி: http://www.sathyarajkumar.com/)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *