அப்போது எனக்குப் பத்துக்கு மேற்பட்ட வயது இருக்கலாம். தண்ணீரில் ஆட்டம் போடுவது என்றால் கொள்ளை ஆசை. எனக்கு மட்டுமா எங்கள் தோட்டத்து என் வயது பையன்களுக்கும். பருவத்தின் நுழை வாசலில் காலடி எடுத்து வைக்கக் காத்திருக்கும் இளசுகளான எங்களுக்கு கால் சிலுவாரை அவிழ்த்துப் போட்டு விட்டு அருகிலுள்ள அல்லூரில் ஓடிப்போய் குதித்து நீச்சலடிப்பதில் ஒரு பேராநந்தம். அந்த வழியாக அல்லூரின் மேற்பகுதிக்குச் செல்லும் இளங்கன்னியர் பார்த்தும் பார்க்காதது போல் செல்வது எங்களுக்கு அல்லையில் கொஞ்சம் கிச்கிச்சு மூட்டியதைப் போன்ற ஒரு கிலுகிலுப்பைத் தரும். சிலர் குறிப்பாக அதனை மறைத்துக் கொள்ள தண்ணீரில் மூழ்கிக் கொள்வார்கள். சிலர் அப்போதே தன்னை வீரனாகக் காட்டிக் கொள்வார்கள். நான் எப்படியோ இப்போது மறந்து விட்டேன்.
“டேய் டேய்! ஏண்டா தண்ணிய இப்படி மொண்டு மொண்டு ஊத்தற… தண்ணி சாமி மாதிரி… வீணாக்கதடா..!” என அம்மா காட்டுக் கத்தலா கத்தாத நாளே கிடையாது. வீட்டில் குளிக்கும் போது வாளித் தண்ணீரில் பாதியளவு சத்தம் மட்டும் கேட்க உடம்பில் படாமல் கீழே போகும். நான் மட்டுமல்ல தண்ணிமலையும் முனியாண்டியும் கூட அம்மாக்களை ஏமாற்ற அந்த நுணுக்கத்தைக் கையாள்வதாகக் கூறிப் பெருமை பட்டுக் கொள்வார்கள்.
அம்மா சொல்வதோ இரைவதோ காதில் விழாது. தோட்டத்து பீலி. அதனால் கவலை இல்லை. பல வீடுகளில் தண்ணீர் இப்படி வீணே புரண்டு ஓடிக் கொண்டிருக்கும். குடி நீருக்காகக் கிணற்றிலிருந்து ‘பம்ப்’ செய்யப்பட்டுச் சில இடங்களில் ‘பீலி’ போடப்பட்டிருக்கும். அங்கே போய்த் தண்ணீர் பிடித்துக் கொள்ள வேண்டும். அப்போதெல்லாம் பொதுக் குழாய் வசதி கிடையாது. பல சமயங்களில் குழாய் நீருக்குப் பதிலாகக் காற்று மட்டும் பக்கத்து வீட்டுத் தாத்தா விடும் குறட்டைச் சத்தம் போன்று ‘கொர்’ என விட்டு விட்டு வந்து கொண்டிருக்கும்.
இப்படியான நிலையில் ஒரு பருவத்தில் நாட்டில் அதிலும் எங்கள் மாவட்டத்தில் இரண்டு மாதங்களாகவே மழை பொய்த்துப் போனது. அல்லூருகள் எனப்படும் சிறு சிறு அருவிகள் வற்றிப் போயின. எங்களுக்குக் குடிநீர் வாழ்வாதாரமான தோட்டத்துக் கிணறுகள் வரண்டு விட்டன. மழை பெய்ய தோட்டத்தின் வழி வழிப்படி மாரியம்மனுக்கு சிறப்புப் பூசையும் பலியும் கூட கொடுக்கப்பட்டதை மறக்க முடியாது.
கிணற்றில் சொட்டிச் சொட்டி எடுக்கும் சுரப்பு நீருக்காகப் பால் மரக்காட்டு வேலைக்குப் போக ‘ரோல் கால்’ பெயர் பதிவிற்கு, ‘ஆஜர் ஐயா’! என குரல் கொடுப்பதற்கு முன்னே அம்மா தாம்புக் கயிறும் சின்ன வாளியோடும் கிணற்றுக்கு ஓடுவார். அவருக்கும் முன்னே சிலர் கேணியைச் சுற்றி இடித்துப் பிடித்து நிற்பார்கள். அந்த விடிகாலைப் பொழுதில் வரட்டுப் பசுவின் மடியில் சுரந்திருக்கும் பாலைப்போல் கேணியில் நீர் சுரத்து இருக்கும். அதைச் சேந்தி எடுக்கும்போது வரட்டு வரட்டு என சத்தமும் கொஞ்சமாகச் சேறு கலந்த தண்ணீரும் வரும். அது தான் அன்றைய நாள் முழுதும் குடும்பத்துக்குக் குடி நீர். தண்ணீருக்காகக் கண்ணீர் விட்ட கொடுமையான நாட்கள்.
அப்போதுதான் கண்களை இலேசாகத் திறந்தேன். கூசியது. வலியும்கூட. சிமிட்டிக் கொண்டேன். மருத்துவமனை அறையின் காட்சி ஆங்காங்கே மஞ்சள் பூத்தது போல் தெளிவற்று என் கண்களுக்குள் தோன்றியது.
எனக்கும் இன்னொருவரின் படுக்கைக்கும் இடையில் அகன்ற கோடு கோடாக ஓடிக் கொண்டிருந்த கணினிக்கு அருகில் அமர்ந்திருந்த சீன தாதிப் பெண்ணைக் காணவில்லை. எனக்கு எதிர் படுக்கையில் இருந்த அவரும் இல்லாது போயிருந்தார். அவர் எப்போதும் எதிரே படுக்கையிலிருந்தவர்களுக்கு இலவச உடற்பயிற்சி அளித்துக் கொண்டிருப்பார். படுத்தவாறே கைகளை மேலே கீழே தூக்கி ஆட்டி உதறி இப்படியாகச் சில. விந்தையான மனிதர். மருத்துவமனை படுக்கையிலுமா இப்படியான கோணங்கித்தனங்கள்.
தொண்டை எதையோ யாசித்துக் கொண்டிருந்தது. அறுவைச் சிகிச்சைக்குப் பின் புதிய வார்டுக்கு மாற்றப் பட்டிருப்பது தெரிந்தது. படுக்கைக்கு எதிரில் அமர்ந்திருந்த தாதி மும்மூரமாக கடமையில் மூழ்கிப் போயிருந்தாள். அந்தப் பெண்ணைக் கூப்பிட்டேன். அவள் காதில் விழவில்லையா அல்லது நான் அழைத்த ஒலி என்னுள்ளிருந்து வெளியேற மறுத்துட்டதா! எனக்கே விளங்காமல் போனது.
நல்ல நேரம்! அப்பாடா… எதற்காகவோ நிமிர்ந்தாள் நீல நிற உடையிலிருந்த அந்தப் பெண். நான் கட்டை விரலை நீட்டி மற்ற நான்கு விரல்களையும் மடக்கி தண்ணீருக்கு வேண்டிய சைகையை வாய் வரைக்கும் கொண்டு போக வில்லை. எதற்காகவோ எழுந்து அடுத்த அறைக்குள் போய் விட்டாள் தாதிப் பெண்.
அம்மாவின் குரல் மீண்டும் எதிரொலித்தது.
குடிக்க வைத்திருந்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாகப் பரத்தி ஊற்றிக் கொண்டிருந்தேன். பின்னால் வானவில் தெரியும் என பிச்சை சொல்லியிருந்தான். ஏழு வர்ணங்கள் தொன்றவில்லை. அம்மாவின் வேலை காட்டுக்குப் போய் வந்த எண்ணெய்யும் வியர்வையும் வழிந்த முகம்தான் கடுமையான பார்வையுடன் தோன்றியது.
‘குடிக்கற தண்ணிய இஷ்டத்துக்கு மொண்டு மொண்டு ஊத்தறயே நாய… இப்ப தெரியாது… ஒரு நேரத்தில வாயில ஊத்தறதுக்கு ஒரு சொட்டு தண்ணி கெடடைக்காதான்னு ஏங்கற நேரம் வரும் போது அப்போது புரிம்டா…’
அம்மா விட்ட சாபம் இப்போது பலித்துக் கொண்டிருக்கிறது.
தாதிப் பெண் கணினிக்கு எதிரே உட்கார்ந்து அதில் மூழ்கிப் போனாளானால் அக்கம் பக்கத்தில் நடப்பது எதுவும் அவளுக்குத் தெரியாது. அதற்குள் அரை லிட்டர் மினரல் வாட்டர் போத்தலாவது கேட்டுப் பெற்று விட வேண்டும். அது போதும் இப்போதைக்கு.
அருகில் அழைத்தேன். அவளும் வந்தாள். நம்மைக் கண்ணை இமை காத்துக் கொள்வது போல் கண்காணித்துக் கொள்வது தானே அவர்களது கடமை. கூப்பிட்ட குரலுக்கு ஒடோடி வர வேண்டாமா… வந்து நம் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தானே அவர்கள் பணியில் அமர்த்தப் பட்டிருக்கிறார்கள். இல்லாவிட்டால் மருத்துவர் வந்தவுடன் புகார் கொடுத்தால்…என்ன நடக்கும்! அந்த பயம் முகத்தில் காட்சி கொடுக்கிறதா என கவனித்தேன். தெரியவில்லை. போகட்டும் பாவம்!
தொண்டயைக் காண்பித்தேன். முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு தண்ணீர் வேண்டுமென மீண்டும் கட்டை விரலைக் கொண்டு நீரை அடையாளப் படுத்திக் கொண்டு வாய்க்கு அருகில் கொண்டு சென்றேன். நா வரட்சியில் குரலும் பேச்சை இழந்து சொற்களும் காய்ந்து போய்க் கிடந்தன. ஆகக் குறைந்த அளவுள்ள பாட்டில் நீராவது போதும். அதுவும் வேண்டாம்… ஒரு மிடறு போதுமே! எனக்கே தெரிந்திருக்க வில்லை. எத்தனை மணி நேரமாக என் தொண்டை நீர் காணாமல் வற்றி வரண்ட பாலைவனமாகப் போய்க் கிடக்கிறதென்று. எப்போதுமிப்படி இருந்ததில்லையே! ‘யுட்யூப், புலனம் மற்றும் நாட்டு வைத்தியர்களின் மருத்துவக் குறிப்பெல்லாம் பார்ப்பதோடு, எந்தெந்த நேரத்தில் எந்த அளவு நீர் பருகினால் உடலுக்கு எவ்வாறான நன்மைகள் விளையும் என்பதைப் பட்டியல் போட்டுச் சொல்லும் மகா வித்துவான்களின் விளக்கங்களைக் கேட்டு முறை தவறாமல் நடந்து வந்திருக்கிறேனே. ஆரம்பத்தில் காலையில் தண்ணீரை ஆறு கிளாஸ்களில் ஊற்றி வைத்துக் கொண்டு மடக் மடக் என குடித்து விட்டு வெளியே புறப்பட்டுப் போய் ஒன்றுக்கு முட்டி பட்ட அவஸ்தைகள் எல்லாம் பட்டியல் போட்டுக் கொண்டு நினைவில் தோன்றின.
இப்போது ஒரு வாய்த் தண்ணீருக்கு பிச்சையும் கெஞ்சவும் வைத்து விட்டாயே… நான் இறைவனிடம் முறையிட, ‘தம்பி, தண்ணின்றது மனுச வாழ்வுக்கு ஆதாரம்பா… அத வீணாக்க கூடாது..!’ அம்மா மீண்டும் நினைவுத் தடாகத்தில் தோன்றினார்.
நாங்கள் தாமான், அதாவது ஒரு குடியிருப்பில் வீடு வாங்கியிருந்தோம். ஒரு புதிய வண்டியும் வாங்கிவிட்டேன். அதில் என் முகம் தெரியும் அளவுக்கு பளபளக்க வேண்டுமென வேலை இருக்கிறதோ இல்லையோ இரண்டு நாளுக்கொரு முறை நுரை வழிய சுத்தமாககத் தேய்துக் குளிப்பாட்டி விட வேண்டும். அன்றைய தினம் பார்த்து துணைவியும் அவர் பங்குக்கு வீட்டை ஒரு வகையான நறுமணம் கமழும் சவர்க்கார நீரில் தண்ணீர் ஆறாகப் பெருகியோடக் கழுவி விடுவார். இந்த பந்தயத்தில் சமயங்களில் பக்கத்து வீட்டுக்காரரும் பங்கு கொள்வதால் அந்தத் தெருவே வெள்ளப் பெருக்கு எடுத்து ஓடும்.
‘மனுசனுங்க குடிக்க, தாகத்த போக்க சில எடங்கள்ல தண்ணியில்லாம கஷ்டப்படுதுங்க… எங்க… இதுங்களுக்கெல்லாம் சொன்னா வெளங்கவா போவுது…!’ காது படவே பேசிக் கொண்டு போன அவரை அன்று உதாசீனப்படுத்தினேன்…அவரின் மனக் குமுறலும் இன்று அணிவகுத்துக் கொண்டதோ..!
நினவுச் சுழலிலிருந்து தாதியின் குரல் மீட்டது. “மன்னிக்க வேண்டும் ஐயா, மருத்துவர் வந்து ரிப்போர்டில் எழுதியோ அல்லது சொல்லும் வரையிலோ தங்களுக்கு நீ அருந்தத் தர முடியாது.”
இப்படியான நல்ல தமிழில் சொல்லவில்லை. மலாய் மொழியில் சற்று கடுமையாகவே விளக்கம் கூறி விட்டு நான் அடிக்கடி கூப்பிட்டுத் தொந்தரவு செய்வேனோ எனும் கடுப்பில் தற்காலிகமாக அந்த இடத்திலிருந்து நகர்ந்து விட்டாள்.
அடுத்து, வெள்ளை கோட் போட்டு துணை மருத்தவரோடு இரண்டு மூன்று தாதிப் பெண்களும் பச்சை சீருடை அணிந்து தலையில் வெள்ளை தொப்பி அணிந்த உயர் பதவி தாதி புடைசூழ வரும் ஒரு மருத்துவப் பட்டாளத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அந்தப் புண்ணியவான் வந்து என் நா வறட்சிக்கு நீர் எனும் மதிப்புமிகு அமிர்தத்தை அருந்த எனக்குக் கொடுக்க அந்த நர்ஸ் பெண்ணுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும். மௌனமாகப் பிரார்த்திக் கொண்டேன்.
நான் அப்போது கிள்ளான் நகரிலிருந்து கோலலம்பூர் வழியில் சென்று கொண்டிருந்தேன். எனக்கு முன்னே சென்ற வண்டிகள் ஒரு மாதிரியாக குனிந்தும் நெளிந்தும் வளைந்தும் யாரோ குறுக்கே நிற்று வழி மறைப்பது போல பயணித்துண்டிருந்தன. அருகில் சென்ற போதுதான் தெரிந்தது. சாலை ஒரத்தில் தண்ணிர் பீச்சி அடித்து அங்கே கீழிருந்து மேல் நோக்கிச் செல்லும் ஒரு செயற்கை நீர் வீழ்ச்சியை உருவாக்கியிருந்தது. அதற்காகத்தான் பாவம் மோட்டார் ஓட்டிகளின் இந்தக் கோணல்மாணல்கள். மண்ணுக்கடியில் போடப்பட்டிருந்த பொதுக் குழாய் உடைந்து மூன்று நாளாகியும் சம்பந்தப் பட்ட இலாகா இன்னும் வந்து சரி செய்ய வில்லை. அடப்பாவிகளே எத்தனை ஆயிரம் கன மீட்டர் நீர் உபயோகமற்று வீணே தெருவோரத்துக் கால்வாயில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வட்டாரத்து பொது மக்கள் குடி நீர் வசதியின்றி என்னைப்போல் நாவறண்டு கிடக்கிறார்களோ..! என்னைப்போல் பலரும் அவதிப் பட்டிருப்பார்கள் தானே!
இப்போது அந்த நிகழ்வு மனத்துக்குள் ஊடாடி ஒரு கவள நீர் என் தொண்டை குழியில் இறங்கினால் எவ்வளவு குதூகலப் படுவேன். பக்கத்துப் படுக்கையைக் கண்கள் துழாவின. நர்ஸ் பெண் வருவதற்குள் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு விடலாம். குடித்ததில் மீதத்தை மறைத்து வைத்துக் கொள்ளலாம். அலைந்து கெஞ்சிக் கூத்தாடிக் கொண்டிருக்க வேண்டாமே! அப்படிச் செய்தால் தலையா போய் விடும்… அப்போதுதான் தெரிந்தது என் மனவோட்டம் மட்டுமே செயல் பட்டது. உடல் அசையக்கூடச் சக்தியற்றுப் போயிருந்தது. ஏன்… இந்த நிலை… எனக்கு என்ன ஆகிப்போனது… காலை நேரத்தில் சமயங்களில் ஏற்படும் மேக மூட்டமாக வந்து போனது அந்த ஞாபகங்கள்.
அன்றைய தினம் காலை ஒரு நீண்ட அங்கியும் தலையில் அணிந்து கொள்ள ஒரு வகையான தொப்பியும் அந்த வார்டு ஆண் உதவியாளர் கொடுத்து விட்டு முந்திய இரவு விளக்கமாகச் சொன்னதை மீள் நினவு படுத்திவிட்டுப் போனார்.
நான் அந்த வெள்ளை நீண்ட அங்கியை அணிந்த பின் பின்னால் முடிச்சு போடுவதில் சிரமப் படுவதைக் கண்ட பக்கத்து படுக்கை மலாய் நண்பர் உதவி செய்தார். “நாளை எனக்கும் உங்களைப் போன்றுதான் எனக்கும் அறுவை சிகிச்சை நடை பெற உள்ளது. இன்று நடை பெறும் உங்கள் அறுவை சிகிச்சை நல்லபடி நடக்க வேண்டிக் கொள்கிறேன்” என கூறிய அந்தத் தருணத்தில் இனம் கடந்த அவருடைய பெருந்தன்மையை நன்மதனத்தை மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
அதன் பின்பு காலையிலே இதய அறுவைச் சிகிச்சை கூடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன். என்னை மருத்துவமனை தள்ளு வண்டியில் படுக்க வைத்து வெள்ளை துணியைப் போர்த்தி தள்ளிச் சென்ற காட்சி ஞாபகத்தில் வந்து போனது.
தாகம். உயிரே பறித்துக் கொண்டு போகும் அப்படிப்பட்ட ஒரு நாவறட்சி தொண்டை வரையில் ஆட்சி கொண்டிருந்தது. ஒரு சொட்டு நீர் தொண்டை குழியில் இறங்கினால் போதுமே. அதைக் கொடுப்பவர்களுக்கு… அதற்கு மேல் என்னால் எதையும் நினைக்கவே முடியவில்லை.
தாதிப் பெண் வந்து அமர்ந்து விட்டாள். எனக்குத் தண்ணீர் குடிக்கத் தரலாம் எனும் நல்ல செய்தியை தாங்கிக் கொண்டு வந்திருக்கலாமோ. இருந்தாலும் அவளிடம் அதற்கான அறிகுறி எதனையும் காணோம்.
‘நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு…’ ஔவயின் மூதுரை செய்யுள் ஒன்று நினைவுக்கு எட்டியது. அறிவை நீருக்கு ஒப்பீடு செய்கிறார். இருப்பினும் என்ன
பயன்… இத்தருணத்தில் என் தொண்டை காய்ந்து நீருக்காக ஏங்குகிறதே… இறங்கி ஓடிப்போய் தண்ணீர் குடிக்க எத்தனை தடைகள்.
ஒரு மாநில சட்டமன்ற கூட்டத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிகட்சிக்கும் அமளி துமளி நடந்தாக நாளிதழ்களில் தலைப்புச் செய்தி. இத்தனைக்கும் தண்ணீர் பிரச்சினைதான். அந்த மாநிலத்தின் முக்கிய நீர் விநியோகத் தேக்கத்தில் யாரோ ஒரு வகையான திரவத்தைக் கலந்து மாசுபடுத்தி விட்டார்களாம். மக்களுக்கான குடிநீரைக் கெடுத்து விட்டதானது ஆளுங்கட்சியின் அலட்சியப் போக்கைக் காட்டுவதாக எதிக்கட்சியின் குற்றச்சாற்று. அது பெரிய பிரச்சினையாகி அந்த மாநிலத்தின் ஆட்சியையே ஆட்டங்காண வைத்து விட்டது.
இப்போதைக்கு கணினிக்கு முன்னால் கண்களை பதித்து வைத்திருக்கும் அந்த நங்கை ஒரு மிடறு நீரை எனக்குக் கொடுத்தால் போதுமே.
என் வேண்டுகோள் அவள் மேலான செவிகளுக்கு எட்டியதோ..! மெதுவாக என் மிக அண்மையில் வந்தாள். அந்நேரத்தில் கணநேரத்து தேவதையாகத் தோன்றினாள்.
“நீங்கள் படும் அவஸ்தை எனக்கும் புரிகிறது. இருந்தாலும் இப்போதைக்கு நீங்கள் ஒரு சொட்டு தண்ணீர்கூட குடிக்கக் கூடாது. குடித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். உங்கள் நுரையீரலில் நீர் கோர்த்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு…” முடிக்காமல் என்னைப் பரிதாபத்துக் குறியவனாகப் பார்த்தாள்.
‘தம்பி எங்க தோட்டத்தில கொஞ்சம் பேருக்கு வேலை இல்லாமப் போயிடும் போல தெரியுது. இப்போதே போதிய வருமானம் இல்லாம இருக்கு. தோட்டத்து ஒரு பகுதியை ஒரு மினரல் வாட்டர் கம்பனிக்கு வித்துட்டாங்களாம். அந்த நிலப் பகுதி ஒரு சின்ன மலைக்கு அடிவாரத்தில இருப்பதினால என்னேரமும் நீர் வளம் இருக்கும். அதனால தண்ணீர் வற்றாம கெடைக்கும்..! இப்படிப்பட்ட சுரண்டல் நடந்தா நிலத்தடி நீரும் வற்றிப் போகுமே..’ அவர் நாட்டின் நீர் வளத்தைக் கூறி வருத்தப் பட்டார்.
போத்தலில் அடைத்து விற்பனை செய்யும் நீர் மக்களின் வாழ்வாதாரத்தையே சுரண்டி விடும் நிலை ஏற்பட்டு விட்டது. ‘நீரின்றி அமையாது உலகெனின்’ என குறள் கூறுகிறது. ஆனால், நிலத்தில் சுரக்கும் நீர், இயற்கையின் கொடை அந்த தோட்டத்தில் குடியிருந்த மக்களின் வாழ்க்கையையே காவு கொள்ளும் போலிருக்கிறதே.. இப்போது நீரின் தேவையை முழுமையாக அறிந்து விழிப்பு அடைந்திருந்தேன். அப்போது தலைமை மருத்துவரும் அவர் குழுவும் நான்கு நோயாளிகள் அடங்கிய என் வார்டுக்குள் நுழைந்தார்கள். நிச்சயமாக உயிர் போகும் என் தாகம் தீர்ந்து விடும். தண்ணீருக்காக ஏங்கி நான் படும் அல்லல் ஒரு முடிவுக்கு வந்து உடல் முழுதும் புத்துணர்ச்சி பெற்று விடும்.
எங்கே தீர்ந்தது..! கடும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு போராடும் நேரத்தில் எதிரே கைக்கு எட்டும் தூரத்தில் மிதந்து வரும் ஒரு மரக்கட்டை பிடிக்குக் கிடைக்காமல் தள்ளிப் போய்விட்டால் எப்படி இருக்குமோ அப்படியாகி விட்டது என் நிலைமை.
‘அவர் உங்களை கவனிக்கும் டாக்டர் இல்லை…’ என தாதிப் பெண் மிக நளினமாகச் சொல்லி விட்டு மீண்டும் தன் கடமையில் மூழ்கி விட்டாள்.
நான் மீண்டும் ஒரு மிடறு நீருக்காகத் தொண்டை காய்ந்து சொற்கள் வரண்டு ஏங்கிக் காத்திருக்கிறேன்.
‘ஐயா, ஒரு சொட்டு தண்ணியைக் கூட பாழாக்கக் கூடாதுப்பா…அது இல்லாம கஷ்டப்படும்போதுதான் அதன் அரும தெரியும்..!’ அம்மா அப்போது சொன்னது இப்போதும் வேத வாக்குதான்!