கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 7,461 
 
 

இன்னமும் கூட நடக்கச் சிரமப் பட்டாள். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவளின் ஒன்பது தையல்களும் பிரிக்கப் பட்டிருந்தன. இருந்தாலும், இன்னும் புண் நன்றாக ஆறவில்லை. விடாமல் ஆயின்மெண்ட்டை இரண்டு வேளையும் தடவி வந்தால், இன்னும் ஒரு வாரத்திற்குள் நன்றாகக் காய்ந்து குணமாகி விடும் என்று டாக்டர் சொல்லியிருந்தார்.

ஐப்பசிமாத அடைமழையில் குழந்தையின் துணிகள் காயாமல் உள்கொடிகளில் மின்விசிறியின் வேகத்தில் லாலிபீலியென்றாடின. வெயில் படாமல் அவை வாடையடித்தன. சுதா குளிப்பாட்டிக்கொடுக்கப்பட்ட தன் பத்து நாள் குழந்தையைப் பார்த்தாள். பிறந்தபோதிருந்ததை விட கொஞ்சமேக் கொஞ்சம் மெலிந்திருந்தான். பிறந்தபோது ஒன்பது பவுண்ட் எடையில் இன்னும் அதிக ஆரோக்கியமாக இருந்தாற்போலத் தோன்றியது. ரப்பர் ஷீட்டின் மீது தன் அப்பாவின் பஞ்சுபோன்ற வெள்ளைவேஷ்டியின் மீது படுக்க வைத்து, பிஞ்சு உடலெல்லாம் பவுடர் போட்டு விட்டாள்.

நாளைக்குக் குழந்தைக்குப் புண்ணியாஜனம் மற்றும் நாமகரணம். மாலையில் தொட்டில். இன்று மதுரையிலிருந்து எல்லோரும் வந்து விடுவார்கள். குறிப்பாக ரகுவைப்பார்க்கப்போகும் ஆவலில் சுதாவிற்கு உடலிலும் உள்ளத்திலும் ஒரு துள்ளல் பிறந்தது. “குட்டியோட அப்பா வராப்போறாளா? அப்பா, அம்மாவோட நெறைய விஷயம் பேசுவா. கோந்தையோட வெளையாடுவா. அத்தே, பாட்டி, தாத்தா எல்லாரும் வரப்போறாளா? ம், வேற ஆரெல்லாம் வரப்போறா, குட்டியப் பாக்க? “, என்று பச்சைக் குழந்தையோடு வாய்க்கு வந்ததைப்பேசிக்கொண்டே ‘டையப்பரை’ படுக்கையருகில் இருந்த ஷெல்பிலிருந்து எட்டி எடுத்தாள்.

டையப்பரையும் அணிவித்து, மேல்ச்சட்டையையும், கால்ச்சட்டையையும் போட்டுவிட்டாள். குளிருக்கு இதமாய் கையுறை, காலுறைகளையும் மாட்டிவிட்டாள். வயிறு நிறைந்து, வெந்நீர் குளியலும் முடிந்ததில் குழந்தை குட்டி வாயைத் திறந்து கொட்டாவி விட்டுத்தன் தூக்கத்தைச் சொன்னான். குருவிக்குஞ்சு தன் வாயைத்திறந்தது போல் இருந்தது. அதன் செக்கச்சிவந்த வாயினுள் உற்று நோக்கி அதன் முகம் செய்த சேஷ்டைகளையும் பூரிப்புடன் ரசித்தாள் சுதா.

முதல் முறையாகத்தாயாகியிருந்த சுதா, உடல் ரீதியில் கடந்த சில நாள்களில் அதிகஅவஸ்தைகள் பட்டுவிட்டாள். அவற்றை ஈடு செய்வதைப்போல குழந்தையின் வரவு அவளுக்கு கோடை மழையைப்போல் உற்சாகத்தைக் கொண்டு வந்திருந்தது. தன் உணர்வுகளையெல்லாம் ரகுவுடன் பகிர்ந்துகொள்ள ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு காத்திருந்தாள். போனில் எத்தனை தான் பேசினாலும் நேரில் பேசுவது போல வராது என்றே எல்லோரையும்போல நம்பினாள்.

***

பிரசவ நாளன்று ஞாயிற்றுக்கிழமை. காலை ஏழரையிலிருந்து வலிய ஊசிபோட்டு வரவழைக்கப்பட்ட வலியில் மதியம் நான்கு மணிவரை உடலில் இருந்த கடைசித்துளி சக்தி வரை செலவிட்டுவிட்டுத் துவண்டு போயிருந்தாள்.

ஏற்கனவே அம்மா நிறைய அறிவுரைகளை அள்ளிவிட்டிருந்தாள். வலி வரும் போது தன்னை மறந்தும் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்குப் பாதகமாய் எதையும் செய்துவிடமல் கவனமாய் இருக்கவேண்டும். வயிற்றை அமுக்கிக் கொள்வது, ஒரேயடியாய் ஆடுவது போன்றவை ஆபத்து என்று படித்துப் படித்துக் கூறியிருந்ததால், சுதா மிகவும் கவனமாய் இருந்தாள், அத்தனை வலியிலும்.

பிரசவ வேதனையின் போது படுக்கையை விட்டு எழவேயில்லை. மல்லாக்கப் படுத்தபடியே கவனமாக கட்டிலின் பின்பக்கக் கம்பியைப் பிடித்துக் கொண்டு, பல்லைக்கடித்து வலிவிட்டாள், ஒவ்வொரு முறையும். ஒரு வாரத்திற்குப் பல் வலி இருந்தது. ஈறுகளிலிருந்து ரத்தம் கசிந்தது.

சாட்டையாய் விழுந்த வலியில் அவள் கண்கள் இருட்டும். பக்கத்தில் இருந்த நர்ஸிடம் சொட்டுத் தண்ணீர் கேட்டாலும் கொடுக்க மாட்டாள். பஞ்சை நீரில் நனைத்து உதட்டில் தடவுவாள். அந்தச் சொட்டுத் தண்ணீர் பார்வையைத் தெளிவாக்கும். அத்தனை வலியிலும் கூட அது அவளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. தண்ணீர் கொடுக்கக்கூடாதென்ற டாக்டரின் மீது கோபமும் வந்தது. மறுபடியும் மின்னல்வலி, கண்ணிருட்டு என்று பட்டுத்தீர்த்தாள்.

தான் எங்கிருக்கிறோம் என்பதே சிந்தையில் இல்லாத நிலை. வலி படிப்படியாக அதிகரித்து கடைசி கட்டத்தை அடையும் போது சுதாவிற்குத் தான் யாரென்றும் தெரியவில்லை. இந்தப் பத்து நாட்களில் நினைத்து நினைத்து அசை போட்டு வியந்தாள்.

லேபர் வார்டிற்குள் அவளைக் கொண்டுபோன போது சுதாவிற்குத் தன் வாழ்க்கையின் கடைசி நிமிடத்தை எட்டி விட்டதாய்த் தோன்றியது. பிரசவம் என்பது மறுபிறப்பு என்று பலமுறை சொல்லிக் கேட்டதல்ல காரணம். அவளிருந்த நிலையே அவளை அப்படி நினைக்க வைத்தது. லேபர் வார்டில் படுக்க வைத்திருந்த கட்டிலின் தலை மாட்டில் பிடிக்கக்கம்பி இல்லாதிருந்ததால், பயங்கரவலியில் சட்டென்று பக்கத்தில் நின்ற நர்ஸ் ஒருத்தியின் கையைப்பிடிக்க, அவள் ஆவென்று அலறிவிட்டாள். மறுநாள் கன்றிக் கருரத்தம் கட்டியிருந்த அவளது கையைக்காட்டிக் கேலி செய்தாள் சுதாவை.

***

அரை மயக்கத்தில் இருந்தாலும், “மாமி, பயப்படாதீங்கோ. தெரியும். இன்னிக்கு நாலரை ஆறு ராகுகாலம். நாலு கூட ஆகல்ல. இதோ இன்னும் அஞ்சு நிமிஷத்துல கொழந்த பொறந்துடும்”, என்று டாக்டர் அம்மாவிடம் சொன்னது உள்ளேயிருந்த சுதாவின் காதில் விழுந்தது.

ஐந்து நிமிடத்தில் குழந்தை பிறக்கட்டும், இல்லை என் உயிராவது போகட்டும் என்று தான் அவள் நினைத்தாள். டாக்டர் உள்ளே நுழைந்தார். குழந்தை பெரிதாக இருந்ததாலும், சுதாவால் முக்கி வெளித் தள்ளமுடியாததாலும் டாக்டருக்கு ஆயுதத்தை உபயோகிப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

தாயையும் சேயையும் சேதமில்லாமல் பிரிக்க டாக்டர் மரத்துப்போகும் மருந்தை ஊசிமூலம் உள்தொடைப்பகுதிகளில் செலுத்திவிட்டு, பிறப்புறுப்பைக் கத்திகொண்டு கிழித்துப் அகலமாக்கினார். குழந்தை ஒரு வழியாகப் பிறந்தது.

பிறகு ஒன்பது தையல்கள் போடப்பட்டன. அத்துடன் முடியவில்லை அவஸ்தை. பின் வந்த நாட்களில் தான் சுதா மேலும் அதிக அவதிப்பட்டாள். ஒவ்வொரு முறை சிறுநீர் கழிப்பது நரகவேதனையாக இருந்தது.

தாதி வந்து அறையிலிருந்த மற்றவரை வெளியேற்றி விட்டு ‘பெட்பானை’ அடியில் வைத்து விட்டு, மருந்து சேர்த்திருந்த வெந்நீ£ரை தையல் போடப்பட்டிருந்த பகுதியில் சிறிது நேரம் குழாய் மூலம் பாய்ச்சுவாள். முதல் நாள் அதைப் பற்றி தெரியாததால், சுதா பேசாமலிருந்தாள். நீர் பட்டதும் எரிச்சல் பயங்கரமாய் இருந்தது. அமிலத்தை ஊற்றியதைப்போலக் கடும் எரிச்சல். இது தினமும் இரண்டு வேளை. அந்த நர்ஸ் கையில் தேவையான உபகரணங்களுடன் ஒவ்வொரு அறையாக வருவது தெரியும் போதே சுதாவிற்கு எங்காவது ஓடி விடலாமா என்றிருக்கும். படுக்கையை விட்டு எழவே சிரமம். இதில் எழுந்து ஓடவாவது.

டாக்டர் அவளை மூன்றாம் நாளிலிருந்து மெல்ல எழுந்து நடக்கச் சொன்னார். நடக்கும் போது உராய்வினால் ஏற்பட்ட வலியில் சுதா துடிதுடித்தாள். புண்ணில் ஓர் இறுக்கம். அதனால், அவளுக்கு ரணவலி தாங்காமல் கண்ணீர் பெறுகியது.

***

மதியம் சீக்கிரமே எல்லோரும் வந்தனர் மாமியாரைத் தவிர. உள்ளே வந்தவுடன், நலம் விசாரித்தானதும், “அம்மா, வரல்ல?” என்று சுதாகேட்டதற்கு ரகுவும், “ம்,.இல்ல. அம்மா வல்லனுட்டா”, என்று அது வரை பல்லெல்லாம் தெரியத் தன் வாரிசைப்பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த முகத்தை விசையை அழுத்தினாற்போல் சட்டென்று சீரியசாக்கிக்கொண்டு சொன்னதன் காரணம் அவளுக்குப் புரியவில்லை.

குழந்தையைச்சுற்றி நின்றுகொண்டு ஆளாளுக்கு ‘ஜாடை’ கண்டு பிடித்தனர். ஒரே சிரிப்பும் கலாட்டாவுமாய் சூழல் மாற, குழந்தை பெரும்குரலெடுத்து வீறிட்டு அழ ஆரம்பித்தான். சுதாவின் மனதில் ‘ஏன் மாமியார் வரவில்லை’ என்று ஒரே அரிப்பு. முதல் பேரனின் முதல் விசேஷத்திற்கு வராமல் போனது சுதாவிற்குப் பெரும் புதிராய் இருந்தது. ” ரகு, அப்பிடியே நம்மாத்தக் கொண்டிருக்காண்டா என் மருமான்”, என்றார் நாத்தனார், குழந்தையை வைத்தகண் வாங்காமல்.

அறையில் தனியாக சுதா கேட்டபோதும் கூட ரகு முகத்தில் வெறுப்பை அப்பிக்கொண்டு, ” ஆ….மா, இப்பக் கேளு. அன்னிக்கி ஆஸ்பத்திரிக்கி அம்மா கொழந்தையப்பாக்க வந்தாளாமே. நீ புண்யாஜனத்துக்கு வாங்கோன்னு கூப்டலயாம். அதான் கோபம். வரல்லன்னுட்டா. நானும் எவ்வளவோ சொல்லிப் பாத்தேன்.”

மாமியார் ஆஸ்பத்திரிக்கு வந்ததே சுதாவிற்கு கனவில் பார்த்தது போல அரைகுறையாய்தான் நினைவில் இருந்தது. உடற்சோர்வு தெரியாமலிருக்கக் கொடுத்த மருந்துகள் அவளை இரண்டாம் நாள் முக்கால் மயக்கத்தில் வைத்திருந்தன. அம்மா தன் சம்பந்தியை ஆட்டோஸ்டாண்ட் வரை உடன் சென்று வழியனுப்பிவிட்டு, புண்யாஜனத்துக்கும் வரச்சொல்லி அழைத்துவிட்டு வந்திருந்தார். ‘ம்,..ம்.நா வராமயா மாமி’, என்றும் மகிழ்ச்சியுடன் சொன்னாராம்.

காலையில் சுதாவின் மனதில் நிரம்பி வழிந்த உற்சாகம் காற்று வெளியேறிய பலூனாய் இருந்த சுவடே இல்லாமல் புஸ்ஸென்று மறைந்தது. “ஒனக்கு கொஞ்சம் கூட பெரியவான்ற மரியாதையில்லன்னு அம்மா ரொம்பவே வருத்தப்பட்டா, தெரியுமா? ஒரு வார்த்தை கூப்பிடறதுக்கென்ன,ம்?” – யாரோ அந்நியனிடம் பேசும் தோரணயில் ரகு. “ஐய்யோ, நா அப்போ அரை மயக்கத்துல இருந்தேன்னா. அம்மா தான் கூப்பிட்டாளாமே,..”

ஹ¥ஹ¤ம், ரகுவிற்கு எந்தச் சமாதானமும் காதில் விழந்ததாகத் தெரியவில்லை. டில்லியிலிருந்து நேராகச்சென்னை வழி மதுரைக்குப்பறந்து, அங்கிருந்து தான் அவளையும் குழந்தையையும் பார்க்கவே வந்திருந்தான். அது கூடப்பெரிதாகத் தெரியவில்லை அவளுக்கு. அம்மா வராததற்கு அவளே காரணம் என்று குற்றஞ்சாட்டும் பாவனையில் அவளிடம் முகம் கொடுத்துக்கூடப் பேசாதது தான் அவளுக்கு மிகவும் வருத்தமாய் இருந்தது.

வளைகாப்பு முடிந்து திருச்சி வந்திருந்தாள். பிறகு ஒரு முறை கூட அவளைப்பார்க்கவே வரவில்லை. போன் செய்த போது லீவில்லை என்று ரகு சொன்னான். பிரசவத்தின் போது அவன் கிட்டவே இருக்க சுதா மிகவும் ஆசைப்பட்டாள். அதுவும் நடக்கவேவில்லை. அந்திவானில் இருள் கவிவதைப் போல வருத்தம் அவள் மனதிற்குள் மெல்லப்படர்ந்தது.

***

எல்லோரும் சாப்பிட்டுவிட்டு மலைக்கோட்டைக்குக் கிளம்பினர். ரகு அவளுடன் இருப்பானென்று நினைத்திருந்தாள். அடுத்த நாள் மற்றவருடன் கிளம்பி விடப்போவதாக வேறு சொல்லியிருந்தானே. மற்றவரோடு அவனும் கோவிலுக்குக் கிளம்பினது சுதாவிற்கு பெரும் ஏமாற்றம். அவனிடமிருந்து அவள் எதிர் பார்த்தது ஒருசில அன்பான ஆறுதலான வார்த்தைகளே. அம்மா, அப்பா மற்றும் தம்பி தங்கை எல்லோரும் எவ்வளவு தான் தாங்கினாலும் ரகுவின் சில வார்த்தைகளுக்கு ஈடாகுமா. ரகு அதை வழக்கம் போல உணரவேயில்லை.

எல்லோரும் போனவுடன்,அடக்கி வைத்திருந்த வருத்தமெல்லாம் சேர்ந்து வெடித்தது அவளிடமிருந்து ஓவென்ற அழுகையாக. அவள் அழுவதைப் பார்த்த அம்மா பதைபதைத்தாள். ‘பச்சை உடம்புக்காரி அழக்கூடாதே’, என்று பெற்றவளுக்குக் கவலை. அவளைச் சமாதானப் படுத்தித் தூங்க வைக்க முயன்றாள். போர்த்திய இரண்டு போர்வைகளையும் மீறி சுதாவிற்குக் குளிர்ந்தது லேசாக.

“சுதா, நீ இப்ப கண்டதையும் நெனச்சிண்டு, அழுதுண்டு இருக்கறது ஒன்னோட ஒடம்புக்கு நல்லதில்ல. சொன்னாக்கேளு. பேசாம தூங்கு. இதப்பத்தியெல்லாம் அப்புறமா பேசிக்கலாம்”, படுக்கையின் விளிம்பில் உர்கார்ந்து கொண்டு சின்னக்குழந்தைக்குச் சொல்வது போல அம்மா சொல்லிக்கொண்டிருந்தார். அவள் சமாதானமாகி தூங்க ஆரம்பித்ததும் தன் அடுப்படி வேலையைக் கவனிக்கச்சென்று விட்டாள்.

சில நிமிடத் தூக்கத்திலேயே சுதாவின் உடல் நடுங்க ஆரம்பித்தது. அவள் கைகால்கள் சில்லிட்டன. உதடு நீலமாக ஆரம்பித்தது போலத் தெரிந்தது. பற்கள் கிடுகிடுவென்று அடித்துக் கொண்டன. அந்தப்பக்கம் எதேச்சயாக வந்த அப்பா பார்த்துவிட்டு, அம்மாவையும் தம்பி தங்கைகளையும் பதறியடித்துக் கூப்பிட்டு, ஆளுக்கொரு கால்கை என்று சூடுபறக்கத் தேய்க்க ஆரம்பித்தனர். தேய்க்கத் தேய்க்க வெப்பம் பரவிஉடல் நடுக்கம் மெதுவாகக் குறைந்தது.

உடனே பக்கத்திலிருந்த டாக்டரை வரவழைத்தார் அப்பா. வந்த டாக்டர், ரத்தஅழுத்தப் பரிசோதனை செய்தார். தையல் போட்டிருந்த இடத்தில் ஏதும் ‘இன்·பெக்ஷன்’ இருக்கிறதா என்று மட்டும் கேட்டார். இல்லையென்று சொன்ன பிறகு ஒரு ஊசியைப் போட்டுவிட்டு கொஞ்சநேரம் தூங்கச் சொன்னார். பயப்படவேண்டாம், ஆனால் நிறைய ஓய்வு தான் தேவை என்று கண்டிப்பாகக் கூறினார்.

அம்மா குழந்தையை எடுத்துக்கொண்டு ஹாலுக்குப் போய் விட்டார். அழுது ரகளை செய்யாமல் குழந்தையும் ஒத்துழைத்ததில் இம்முறை அசந்து தூங்கினாள். மாலையில் எழுந்தபோது சுதாவின் நிலையில் முன்னேற்றம் தெரிந்தது, தலைவலி தவிர. சூடாக ‘மதர்ஸ் ஸ்பெஷல்’ குடித்ததும் தலைவலியும் மறந்தது.

***

எல்லோரும் வந்ததுமே, அப்பா ரகுவிடம் சுதா அழுததையும், அவளுக்கு ‘·பிட்ஸ்’ போல வந்ததையும், டாக்டர் வந்து போனதையும் நடித்துக்காட்டாத குறையாகச் சொல்லிவிட்டார். அப்பாவிடம் முன்பே சொல்லவேண்டாமென்று சொல்ல மறந்திருந்தாள் சுதா. அம்மா அப்பாவிற்கு மத்தியானத்திலிருந்து மனதே சரியில்லை. பெரும் அதிர்ச்சியிலிருந்து மீண்டிருந்தனர்.

அம்மா, ‘ எங்க பாட்டி சொல்லுவா, பிரசவிச்சவளுக்கு ஒரு மண்டலத்துக்குக் கட்டை அடுக்குவானாம் எமன். அவ்வளவு ஜாக்கிரதையா இருக்கணும்னு. இந்தப்பொண்ணானா அழுது, தலைவலி வரவழச்சுண்டு, நடுங்கி எல்லாரையும் பதற வச்சுட்டா’, என்று கண்கள் பளபளக்கப் புலம்பினார். நாத்தனார் கேட்ட, “இதுக்கும் முன்ன சுதாக்கு இது மாதிரி வந்திருக்கா?, என்ற விவகாரமான கேள்வி அவர்கள் இருந்த மன நிலையில் யாருக்கும் அப்போது புரியவில்லை.

ரகு இப்ப எப்படியிருக்கு என்று மட்டும் சிக்கனமாய்க்கேட்டு விட்டுத் தன் அக்காவுடனும் தன் அப்பாவுடனும் பேசிக் கொண்டேயிருந்தான். மச்சினனுடனும் மச்சினியுடனும் கூடப் பேசத் தோன்றவில்லை அவனுக்கு. தம்பிக்கும் தங்கைக்கும் அத்திம்பேரின் திடீர் ‘பாராமுகம்’ சரியாகப் புரியவில்லை.

சுதா தன் அப்பாவிடமும் கூட ரகு விட்டேற்றியாகப் பேசுவதைக் கவனித்தாள். வேண்டுமென்றே அவன் அவ்வாறு நடந்துகொண்டதைச் சுதா மட்டுமே அறிந்தாள். அம்மா வராத கோபத்தை சுதாவிடமும் அவள் குடும்பத்தினரின் மீதும் காட்டுவதாக நினைத்து எல்லோரையும் உதாசீனப்படுத்தினான்.

சீக்கிரமே தன் அறைக்கு வந்து பேசமாட்டானா என்று சுதா ஏங்கினாள். அவளுக்குப் பேசுவதற்கு நிறைய இருப்பது போல ஒரு சமயமும் ஒன்றுமே இல்லாததுபோல மற்ற சமயங்களிலும் தோன்றியது. நாளை அவன் ஊருக்குப் போய்விட்டால், மறுபடியும் குழந்தையோடு டில்லிக்குத் தான் போகும் வரை நேரில் பார்க்கவோ பேசவோ முடியாதே என்று அவள் மனம் காலக்கணக்கிட்டது. அவன் வரவேயில்லை. மதியம் நடந்ததை நினைத்து எச்சரிக்கையுடன் அழுது விடாமல் தன்னைத் தானே தேற்றிக்கொண்டாள்.

விசேஷத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் இரண்டு பந்தியாக இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, கிடைத்த அறைகளில் போர்த்திப் படுத்து விட்டனர். தூளியில் குழந்தையைத் தூங்க வைத்து விட்டு அம்மாவும் நகர்ந்துவிட்டார்.

சுதா தூங்க ஆரம்பித்திருந்தாள். சம்பந்தா சம்பந்தமில்லாமல் கனவு வந்தது. மயில் பீலியெல்லாம் வைத்துக்கொண்ட அவள் கிருஷ்ணனாய் பாறையின் மீது அமர்ந்து குழல் வாசித்தாள். கலர்கலராய் பாவாடையணிந்த ரகு ராதையாய்த் தன் முகம் சாய்த்து அவளின் முகம் பார்த்து ரசித்தபடி கீழே உட்கார்ந்திருந்தான். தூக்கத்திலேயே சுதாவின் இதழ்களில் புன்முறுவல் பூத்தது.

சுதாவின் அறைக்குள் அவள் ஆசைப்பட்டபடியே பின்னிரவில் ரகு வந்தான். ஆனால், அவள் ஆசைப்பட்டபடி அவளுடன் மனம் விட்டுப் பேச நினைத்தல்ல.

– சமாசார்.காம் 25-02-04, பாரிஸ் அனைத்துலக பெண்கள் சந்திப்பு மலர் அக்டோபர் 2004, பெண்ணே நீ – அக்டோபர் ’05 மாத இதழ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *