தேவை, ஒரு உதவி!

 

இடி இடித்தது; காற்று சுழன்றடித்தது; ஈரமண்ணின் வாசனை..இதோ, சற்று நேரத்தில் மழைவரப் போகிறது…

அட, வந்தேவிட்டது!. விண்ணிலிருந்து சடசடவென்று இறங்கிய மழை நீர் பூமியை நனைக்கஆரம்பித்தது.

சின்னப்பையன் ஓடிவந்து மூச்சிரைக்க நின்றான். அண்ணே!அண்ணே!

“என்னடா சின்னு, என்ன ஆச்சு?” காபி பார் அருள் கேட்டான்.

“அண்ணே!அம்மினியக்காகிட்டே பாபுப் பய போட்டுக் கொடுத்துட்டான். மீன் கொழம்பு சோறு போட்டு, கையில பத்து ரூவா நோட்டை நீட்டினதும் வெசயத்தைக் கக்கிப்புட்டாண்ணே!
பத்ரகாளி கணக்கா நம்ம புது வூட்டுக்கு அக்கா போய்கிட்டிருக்கு!”

“என்னது?” அதிர்ந்தான் அருள். “போச்சு, போச்சு, எல்லாம் போச்சு!” தலையில் அடித்துக் கொண்டான். திடுமெனத் திரும்பி, “சின்னப்பையா, நம்ம வாத்தியாரு எங்கேடா?”

“அதோ, பழைய புஸ்தகக் கடைல நின்னுகினு கீறாரே, கூப்டவாண்ணே?”

“சீக்கிரம் இட்டுகினு வாடா! சொல்லிவிட்டுத் திரும்பி காபிமாஸ்டர் பாண்டியனிடம், கொஞ்சம் கடையைப் பாத்துக்க பாண்டியா, தோ வந்துர்றேன்!”

பின்புற அறையில் ஆணியில் மாட்டியிருந்த சட்டையை எடுத்து அணிந்து கொண்டான். கை உதறியது; உடம்பு பதறியது. வேகமாக டூவீலரை எடுத்தான். ஊஹும், இது உதவாது! மழைல தெப்பமா நனைஞ்சுடுவேன்! கைதட்டி ஆட்டோவை அழைத்தான்.

இதற்குள் வாத்தியார் மழையில் நனைந்தபடி வந்தான். இருவரும் ஆட்டோவில் ஏறினர். “என்ன ஆச்சு அருள்?”

“பெருமாள் கோயில் தெரு போப்பா!” என்றவன் திரும்பி, அம்மிணியக்காகிட்டே பாபுப் பய எல்லாத்தையும் சொல்லிப் புட்டான் வாத்தியாரே! அக்கா இப்ப நம்ம புது வீட்டுக்கு வேகமாப் போய்கிட்டிருக்காம்!” எனக் கவலையோடு சொன்னான்.

வாத்தியார் சிரித்தான். “அவ்ளோதானே? எதுக்கு நீ கவலைப் படறே அருள்? நான் சொல்றாப்புல செய்யி.. விஷயம் கச்சிதமா முடிஞ்சுடும்!”

வாத்தியார் கைகளைப் பற்றிக் கொண்டு தழுதழுத்தான் அருள்.“நீங்க பக்கத்துல இருந்தாலே எனக்குத் தெகிரியம். அம்மினியக்கா என்னையும் பூர்ணிமாவையும் மிதிச்சே
கொன்னுப்புடும். என்னைப் பத்திக் கவலையில்லே வாத்தியாரே, பூர்ணிமாவைத் திட்டி அடிச்சுப்புடுமே, அதுதான் மனசு திக் திகுன்னு அடிச்சுக்குது!”

“அடஇன்னாப்பா அருள், கொழந்தையாட்டம்! ஒண்ணு சொல்றன் கேட்டுக்க, அம்மிணியக்கா இன்னாதான் கூச்சலு போட்டாலும், எவ்ளோதான் அடிச்சு ஆர்ப்பாட்டம் பண்ணினாலும் எதுத்து நீ உன் ரவுடித் தனத்தைக் காட்டிப்புடாதே! பெத்த பொண்ணை அடிக்க, திட்ட அவுங்களுக்கு உரிமை இருக்கு. அதேபோல ஒன்னை அடிச்சாலும் திட்டினாலும் நீ பொறுமையா
இரு. ரெண்டு பேரும் தடால்னு அக்கா கால்ல வுளுந்துடுங்க. மத்ததை நான் பாத்துக்கறேன்!”

பெருமாள் கோயில் தெரு வந்துவிட்டது. வீட்டு வாசலில் ஆட்டோ நின்றது. வீடு அமைதியாக இருந்தது. நல்லவேளை, அம்மிணியக்கா இன்னும் வரவில்லை! “வாங்கண்ணே! என்று
கைகூப்பிவரவேற்றாள் பூர்ணிமா. பதிலுக்கு வாத்தியார் வணங்கினான். நல்லா இருக்கியாம்மா?”

குத்துவிளக்கு போல பளிச்சென்று இருந்தாள் பூர்ணிமா. பிறைநுதலில் வட்டநிலவாய் குங்குமம், தலையில் பாந்தாக குண்டுமல்லிகைச் சரம்; கழுத்தில் புது மஞ்ச்ள் சரடு!

அருள் அவளை நெருங்கி விஷயத்தைச் சொன்னான். பூர்ணிமாவின் முகத்தை பயம் கவ்விக் கொண்டது. “ஐயையோ, அம்மா வருதா?… நா இப்ப என்ன செய்வேன்?” கைகளை
உதறியபடி பதறினாள்.

அம்மிணியக்கா என்று கூறப்படும் பெண்மணி, உண்மையில் லாங்கு பஜாரில் காபிக்கடை வைத்திருக்கும் அருளின் சொந்த அக்காதான்!

வேலூர் சத்துவாச்சாரியில் நாலைந்து மாடுகள் வைத்துக் கறந்து பால் வியாபாரம் செய்து வந்தாள். சில நம்பகமான மனிதர்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்து சம்பாத்தியம், ஒழிந்த நேரத்தில் அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்களுக்குத் தையல் மிஷினில் சுரிதார், பிளவுஸ், புடவைகளுக்கு ஃபால்ஸ் தைத்தல்! ஒரு நிமிடம் கூட சும்மா இருக்கக் கூடாது என்பது அக்காவின் கொள்கை…

அக்காவின் கணவன் சிவாஜி அவளை ஏய்த்து விட்டு, தோட்டப்பாளையம் மேனா மினுக்கியுடன் ஓடிப்போனதை வேறு எந்தப் பெண்ணாக இருந்தாலும் தலைவிதி என்று விட்டுத்
தொலைத்து மூலையில் முடங்கியிருப்பார்கள். ஆனால், அம்மிணி அப்படிக் கணவனை விட்டுவிடத் தயாராக இல்லை. கோர்ட் படியேறி ஏழு வருடங்கள் அலைந்து திரிந்தாள். கடைசியில் ஜீவனாம்சம் தரும்படி கோர்ட் உத்தரவு வழங்கியது.

“அந்த ஆளு அவமானப்படணும் கோர்ட்டுக்கு அலைஞ்சு அவதிப்படணும்கறது தான் என்னோடஆசை. தீர்ப்பு வந்தப்ப, அந்தக் கோர்ட்டுலியே எனக்கு ஜீவனாம்சம் வேணாம்!னு
சொல்லி என் எட்டு வயசு பூர்ணிமாவோட வெளியே வந்து படாதபாடுபட்டு, என் பொண்ணை வளர்த்து ஆளாக்கினேன்..

ஆம்பளைகளை நம்பி ஏமாந்துடக் கூடாதுடீ பொண்ணே! நீ நல்லாப் படி. சுயமா உன் காலில் நில்லு. பொம்பளைன்னா என்ன வேணாச் செய்யலாம்னு ஆம்பளை நினைப்பான்.
பொண்டாட்டியைக் கழட்டி விட்டுட்டா மூலையிலே முடங்கிப்பான்னு அவன் நினைக்கக் கூடாதுல்ல? அந்த ஆளு எவ்ளோ கஷ்டம், கொடுத்தாரு தெரியுமா?”

கணியம்பாடிக்குப் பக்கத்துக் கிராமம் ஒன்றில் பெற்றோர் இறந்துவிட, வேலூருக்கு அக்காவின் தயவை நாடி வந்துவிட்டான் தம்பி அருள். லாங்கு பஜாரில் தம்பிக்கு காபி பார் வைத்துக்
கொடுத்தாள் அம்மிணியக்கா. அக்காவின் வீட்டில் முன் அறையில் தங்கிக் கொண்டான் அருள். தம்பிக்குத் தன் மாடுகள் கறக்கும் பாலை விற்பனை செய்தாள். தம்பியும் கடைப் பையன்களும் சாப்பிடச் சமையல் செய்து அனுப்பி, அதற்கும் ஒரு தொகையை வாங்கிக் கொண்டாள் அம்மிணி. தாயும் பிள்ளையுமாக இருந்தாலும், வாயும் வயிறும் வேறு என்பது அக்காவின் கொள்கை!

அருள் பள்ளிப்படிப்பைத் தாண்டவில்லையேதவிர, நிறையக் கதைப் புத்தகம் படிப்பான். கடைக்கு வரும் படித்தவர்களிடம் பேச அருளுக்கு ரொம்பப் பிடிக்கும். அப்படி அறிமுகமாகி
நண்பரானவன்தான் பி.ஏ. படித்துவிட்டு வேலை கிடைக்காமல் சுற்றி வந்த வாத்தியார். பெயர் ஜோசப். ஆனால் அழைப்ப தென்னவோ வாத்தியார் என்ற பெயரில்தான்! அவ்வப்போது
அவன் எழுதும் கதைகள் பத்திரிகைகளில் பிரசுரமாவது உண்டு. ஜோசப்பைத் தன் குருவாக மதித்துப் போற்றினான் அருள். வாத்தியாரைக் கேட்காமல் எதுவும் செய்ய மாட்டான்.

அம்மிணியக்கா அடிக்கடி வட்டிப் பணம் வசூலிக்க வெளியே போய்விடுவாள். அச்சமயங்களில் அக்காவின் மகள் பூர்ணிமா வுடன் அதிகம் பழக வாய்ப்பு கிடைத்தது அருளுக்கு. பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொண்டதில் வியப்பென்ன?

தாமதமாகத் தான் அம்மிணிக்கு இவர்கள் நெருக்கம் புரிந்தது. “என் வீட்டில் துரோகிக்கு இடம் இல்லை. உன் கடைக்கு இனிப் பால் ஊற்ற மாட்டேன். உன் கூட்டத்துக்கு வடிச்சுக் கொட்ட
இனிமேல் என்னால் முடியாது. என் மூஞ்சிலேயேஇனிமே நீ முழிக்கக்கூடாது!” கொதிப்புடன் கூறி அருளை வெளியேற்றி விட்டாள்.

வாத்தியார் ஜோசப் திட்டம் போட்டுக் கொடுத்தான். பி.ஏ. படித்துவந்த பூர்ணிமாவின் இறுதிப் பரீட்சை தினத்தில் தேர்வு தொடங்கிய அரைமணி நேரத்தில் பேப்பரைக் கொடுத்துவிட்டு
வெளியேவந்தாள். வாத்தியார் வாடகைக் காருடன் காத்திருந்தான். அதில் பூர்ணிமா ஏறிக் கொண்டாள். சித்தூரில் அருள் காத்திருந்தான். திருப்பதி அலமேலுமங்காபுரம் சென்று இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். வாத்தியாரும் கடைசியில் வேலை செய்யும் காபி மாஸ்டர் பாண்டியனும் சாட்சிக் கையெழுத்து போட்டார்கள்.

முன்னதாகவே திட்டமிட்டு பெருமாள் கோயில் தெருவில் ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து வைத்திருந்தார்கள். அருள் பூர்ணிமா வாடிநக்கை அங்கு தொடங்கியது. அம்மிணி, தேர்வு எழுதப் போன மகள் வீடு திரும்பவில்லையே என்று பரிதவித்தாள். எங்கெங்கோ தேடினாள். தம்பியின் வேலை என்று புரிய, நெஞ்சில் தீ பற்றியெரிந்தது. துரோகம்! குமுறினாள். வீட்டினுள் முடங்கினாள் அழுது அழுது முகம் வீங்கினாள். இந்தநிலையில்தான் அருளின் காபிபாரில் வேலை பார்த்த பாபு சிக்கினான். விஷயத்தைக் கறந்தாள். இதோ மகளின் வீடு நோக்கி ஆக்ரோஷமாகப் போய்க் கொண்டிருக்கிறாள்.

கொட்டும் மழையில் தெப்பமாக நனைவதைப் பொருட் படுத்தாமல் கையை வேகமாக வீசிப் போட்டு நடந்து அந்த வீட்டுப் படி ஏறினாள்.

வாத்தியார் முன்னே போய் கைகூப்பி, “வாங்க அக்கா!” என்றான். “சீ, போடா நாயே!” என்று தன் இடக்கையால் ஒரே தள்ளாக அவனைத் தள்ளினாள். அருளும், பூர்ணிமாவும்
சரேலென்று அம்மிணியின் காலில் விழுந்தார்கள்.

“எங்களை மன்னிச்சுடும்மா!” என்றாள் பூர்ணிமா; கண்ணில் நீர் வழிய. “என்னை மன்னிச்சிடுக்கா!” என்று குனிந்து அருள் அவள் காலைத் தொட்டான்.

சரேலென்று பின்னுக்கு நகர்ந்தாள் அக்கா.

“நா யாரு ஒங்களை மன்னிக்க? எப்ப என் கூடவே இருந்து என் கழுத்தை அறுத்தியோ, அப்பவே உறவு முறிஞ்சு போச்சு. இந்தப் பூனையும் பால் குடிக்குமா? என்கிறதைப் போல நடிச்சு, என் தலைல கல்லைத் தூக்கிப் போட்டாளே நான் பெத்த பொண்ணு.. அதுக்காக நா பெருமைப் படறேன்!” – வார்த்தைகள் தீக்கங்கு களாய் தெறித்தன.

“நீங்க எப்பிடி நடந்துகிட்டாலும் நா என் கடமையைச் செய்யணும்னு நினைக்கிறேன். என் பொண்ணு கல்யாணத் துக்குன்னு நகை நட்டு பண்ட பாத்திரம் பீரோன்னு ஒண்ணுவிடாம
வாங்கிச் சேர்த்து வெச்சேன். அதெல்லாம் வாசல்ல டெம்போ வண்டில வந்து நிக்குது. அதைக் கொடுத்துட்டுப் போறதுனால இனிமே அம்மா உறவு கொண்டாடிக்கிட்டு நீயோ, அக்கா ஒறவு கொண்டாடிகிட்டு அவனோ வந்து என் மூஞ்சியில முழிக்கக் கூடாது, ஆமா சொல்லிப்புட்டேன்!”

“என்னங்க, பெரிய வார்த்தையெல்லாம்..?” என்றான் வாத்தியார்.

“டேய் வாத்தியான், நீ பேசாதே! இது எல்லாத்துக்கும் யோசனை சொல்லிக் கொடுத்து நடத்தி வெச்சவன் நீதான்னு எனக்குத் தெரியும்” என்றவள், ஏதோ சிந்தனையோடு சற்று
நின்றாள். வாத்தியாரை நேருக்கு நேர் பார்த்தாள். இருகரத்தையும் கூப்பி அவனைக் கும்பிட்டாள்.

“வாத்தியாரே, இவ்வளவு வேலை பண்ணுனியே, எனக்காக ஒரு உதவியைச் செய்வியா, உனக்குப் புண்ணியமா இருக்கும்?” என்று தழுதழுத்த குரலில் கேட்டாள். “இன்னாக்கா செய்யணும், சொல்லுங்க!” என்றான் வாத்தியார்.

“புருசன் கைவிட்டுப் போன பெறவு படிக்காத ஜென்மமா இருந்து நா படாதபாடு பட்டேன். என் பொண்ணுக்கு மட்டுமில்ல, வேற எந்தப் பொண்ணுக்கும் என் கதி வரக் கூடாது! என் பொண்ணைப் பட்டதாரி ஆக்கணும்னு கனவு கண்டேன். டிகிரி மூணாவது வருஷம், கடைசிப் பரீட்சையை முழுசா எழுதவிடாம கூட்டிட்டுப் போயிக் கல்யாணம் பண்ணி வெச்சவன் நீதானே? அவ எழுதாத கடைசிப் பரீட்சையை வர்ற செப்டம்பர்ல எழுத வெய்யி. ஒரு டிகிரிங்கறது குறைஞ்ச பட்சக் கல்வித் தகுதின்னு சொல்றாங்க. எந்தப் பொண்ணுமே தன் புருசனைச் சார்ந்திருக்கக் கூடாது. தன் கால்ல நிக்கஅவளுக்குப் படிப்பு அவசியம். தேவை ஏற்படும்போது இந்தப் படிப்பு அவளுக்கு உதவும்! செய்வியா வாத்தியாரே?”

இப்படிச் சொல்லிவிட்டு மீண்டும் அவனை நோக்கிக் கைகூப்பினாள். பிறகு, அம்மிணியக்கா திரும்பி வாசலுக்குப் போய், இன்னும் விடாத மழையைப் பொருட்படுத்தாமல்
வீதியில் இறங்கி வேகமாக நடக்கத் தொடங்கினாள். வாத்தியாரும் மற்றவர்களும் சிலையாக நிற்க, டெம்போவில் இருந்து சாமான்கள் ஒவ்வொன்றாய் இறங்கத் தொடங்கின.

(நெல்லை தினமலர் – ஞாயிறு மலர்) 

தொடர்புடைய சிறுகதைகள்
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கழித்து, சொந்த ஊரான புதூருக்கு இவன் போன போது ஏகப்பட்ட மாற்றங்கள். ``மிஸ்டர் ராஜேஷ்! உங்க ஊருக்கு விசிட் போறேன். ஒருநாள் லீவு போட்டுட்டு வாங்களேன். காரில் ஜாலியாப் பேசிகிட்டுப் போன மாதிரியும் இருக்கும்; உங்களுக்கு ஒரு மாறுதலாகவும் ...
மேலும் கதையை படிக்க...
``ஸார்!” ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்த கார்த்தியை பிளாட்பாரத்தில் நின்ற ஓர் இளைஞன் அழைத்தான்: ``ஸார் ட்ரிச்சினாப்பள்ளி போறாப்பிலியா?'' ``நோ, நோ!... மயிலாடுதுறை!'' ``அடடே, மாயவரத்துக்கா... ரொம்ப நல்லதாப்போச்சு! சுமதி! ஸார் மாயவரம் போறாராம்.. உன் கவலை எனக்கு விட்டுச்சு!'' என்றான் இளைஞன். இவன் பக்கம் திரும்பி, ``கைக் குழந்தையோடு ராத்திரி ...
மேலும் கதையை படிக்க...
அந்த விரைவுப் பேருந்து கோயமுத்தூரிலிருந்து கிளம்பிக் காங்கயத்தில் டிபனுக்கு நின்று மீண்டும் கிளம்பியபோது எனக்கு முந்திய ஆசனத்திலிருந்த நபர் எழுந்து, சன்னல் வழியே பார்வை எட்டுமட்டும் கழுத்தை வளைத்து யாரையோ தேடினார். ``இந்தாப்பா கண்டக்டர், கொஞ்சம் வெயிட் பண்ணு! எனக்குப் பக்கத்து சீட்காரர் ...
மேலும் கதையை படிக்க...
வீரணம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அன்று அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. புது மெடிகல் ஆபீசர் வந்து டியூட்டியில் சேரப் போகிறார். தாராபுரம், திருப்பூர், காங்கேயம் - மூன்று ஊர்களுக்கு நடுவில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் அந்தக் கிராமம் அமைந்திருந்தது. சுற்று வட்டாரக் ...
மேலும் கதையை படிக்க...
பள்ளிக்கூடத்திலிருந்து வேலை முழ்்து திரும்பிய நளினா காபி கூடச் சாப்பிடாமல் தன் அறைக்குச் சென்று படுக்கையில் சாய்ந்ததில் தாய் பங்கஜத்துக்கு மனம் தாளவில்லை; பதைத்துப் போனாள். ``என்னம்மா நளினா, தலை வலிக்குதா? தைலம் வேணாத் தடவி விடட்டுமா?'' என்று அருகில் சென்றாள். நளினாவின் ...
மேலும் கதையை படிக்க...
பஞ்சாயத்துத் தலைவர் முனியாண்டி அனல் பறக்கும் விழிகளுடன் நடுநாயகமாக வீற்றிருக்க, அவரைச் சுற்றி அமர்ந்திருந்த ஏழெட்டு மனிதர்கள், தலைவரின் கோபத்தை எப்படித் தணிப்பது என்று புரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தனர். ``ஏங்க சுப்பையா, அந்தக் கெழவன் என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கான்? நாம யாருன்னு இன்னும் ...
மேலும் கதையை படிக்க...
அந்த அலுவலகத்தின் ரிக்கார்டு பிரிவில், உளுத்து, பழுப்பேறிய கோப்புகள் வைக்கப்பட்ட மர ஷெல்ஃபு வரிசையை ஒட்டி நின்றிருந்த ஐந்து இரும்பு பீரோக்களில், நடுவில் இருந்த ஒரு பீரோ மட்டும் வல்லிசாய் காணாமல் போயிருந்தது... ஒரு மாத லீவு முடிந்து ஹெட்கிளார்க் அன்று காலை ...
மேலும் கதையை படிக்க...
அம்பத்தூரில் வசிக்கும் தங்கை கலாவிடமிருந்து ராகவனுக்கு அலைபேசி அழைப்பு. "அண்ணே, அம்மாவுக்கு கொஞ்சம் ஒடம்பு அதிகமா இருக்கு. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போறேன்னா வரமாட்டேன்னு அடம்…" "என்ன ஒடம்பு அவங்களுக்கு? நல்லாத்தானே இருந்தாங்க..." "ஆமாண்ணே. போன வியாழக்கிழமை வீட்டுல பூஜை வெச்சிருந்தேன். நிறைய டெவோட்டீஸ் வந்திருந்தாங்க. சுவாமிக்கு ...
மேலும் கதையை படிக்க...
அந்தப் பங்களாவின் வாசலில் நின்று கேட்டுக்கு அப்பால் தெரியும் வீதியைப் பார்ப்பதும், பங்களாவின் உட்புறம் பார்ப்பதும், பின் இருப்புக் கொள்ளாமல் இங்குமங்கும் நடப்பதுமாக இருந்தார் ராமேசன். ``ஏங்க உங்களைத்தானே, சந்நியாசிகளை இன்னும் காணோமே..?'' எனக் கூறிக் கொண்டே உள்ளேயிருந்து வந்தாள் அவரின் சகதர்மிணி ...
மேலும் கதையை படிக்க...
‘என் இனிய தோழருக்கு, நான் உங்களை பலமுறை பார்த்தும், பேசியும் இருக்கிறேன்... ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்தது என் வாழ்க்கையில் மிகப்பெரியதொரு திருப்பம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நான் பல குழப்பங்களும், பிரச்சனைகளும் சந்தித்திருந்த தருணம் அது. மேலும் ஒரு வாரமாக ...
மேலும் கதையை படிக்க...
முகங்கள்
அந்த ரெயில் வண்டியில் ஒரு விபரீதம்…
மனிதன் என்பவன்…
பழையன கழிதலும்…
வீரன் மகள்
காற்றில் படபடத்த ஒரு காசோலை!
நடுவுல ஒரு பீரோவைக் காணோம்!
அம்மாவின் பெட்டி
அதிதி
உறவு சொல்ல ஒரு கடிதம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)