தேவதூதரும் தலைவலியும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 25, 2014
பார்வையிட்டோர்: 14,847 
 
 

எனக்கு மட்டும் உதவி செய்வதற்கு சில தேவதூதர்களை கடவுள் படைத்திருப்பார் போலும்….நான் தலைவலியால் துன்பப்படுவதை அறிந்த அந்த இதயம், அலுவலகத்தில் எனக்காக விடுப்பு எடுத்துக் கொண்டார்… தலைவலி இப்போது இல்லைதான் இருப்பினும் அந்த தேவதூதரின் அன்புக்கட்டளைக்கு இணைங்கி மருத்துவமனைக்கு சென்றோம்..

அரசாங்கம் பாதி ..தனியார்பாதி என இரண்டு வகைமருத்துப் பிரிவுகளைக் கொண்ட அந்த பிரம்மாண்டமானமருத்துவமனைக்குள் நுழைந்தோம்…

எங்களை சுமந்துசென்ற வாகனத்தை நிறுத்தும் இடத்தில் சேர்த்து விட்டு…மக்களுடன் கலந்து பொதுப் பிரிவுக்குள் சென்றோம்…மிகப்பெரிய இடப்பரப்பு முழுவதையும் மக்கள் அடைந்து இருந்தனர். அவர்களில் எத்தனைபேர் நோயாளிகள்…எத்தனை பேர் உடன் சென்றவர்கள்…என்பது ஆராயாமல் …. இவ்வளவு பேர்கள்தங்கள் உயிருக்காகவோ அல்லது உடன் இருப்பவரின் உயிருக்காகவோ போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று சிந்திப்பதை மறந்து….

புதிதாக வரும் வெளிப்புறநோயாளிகளுக்குரிய ஒரு அட்டையை சுய விபரங்கள் கூறிய பிறகு பெற்றுக் கொண்டேன்….

அடுத்ததாக எங்கே செல்ல வேண்டும் என குழப்பம்.

அட்டையை வழங்கியர் அடுத்த அட்டை வழங்கும் பணியில் மும்முரமாக இருந்தார்…ஆகையால் , அருகே நின்றிருந்த மருத்துவமனை பெண் ஊழியரிடம்விசாரிக்கலாம் என்று எண்ணி அவரை அழைத்தேன்…

மேடம்…. அக்கா…. அம்மா…..எஸ்கியூஸ் மீ…..

இப்படி எல்லாம் அழைத்தும்கூட அவரிடம் எந்த ஒரு அசைவும் இல்லை ..

பாவம் அவருக்கு காது கேட்கவில்லை என நீங்கள் நினைக்கலாம்….

அதுதான் இல்லை… அவரின் பக்கத்தில் உள்ள பெண்களிடம் அவ்வளவு சுவாரசியாமாக பேசிக் கொண்டிருந்தார் அந்த அம்மையார்…. ஆகையால் அடுத்த நபரைத் தேடி எங்கள் நான்கு கால்களும் பயணித்தது..நான்கு கால்களும் ஓர் இடம் நின்றது. நான்கு கண்களும் நின்ற இடத்தினை நோக்கின வரவேற்பிடம்.. அங்கே சென்றுஅட்டையைக் காண்பித்து அடுத்த இடத்திற்கு எப்படி செல்வதெனக் கேட்டோம்….

ஓர் அறையைச் சுட்டிக்காண்பித்தார். அந்த அறைக்குள் ஒரு சுமாரான அழகுடைய இளம்பெண் ஒருத்திஅமர்ந்திருந்தாள்..

அவளிம் அட்டையைக் காண்பித்து விளக்கம் கேட்டேன்.. என் அட்டையின் எண்களை அவள் வைத்திருந்த நோட்டில் குறித்துக்கொண்டு என் அட்டையில் ஒரு முத்திரைகுத்தி அனுப்பினாள்..

அவள் கூறியபடியே நான்காவது தளத்திற்கு சென்றேன்…

அந்த தளத்திற்கு சென்றதும் எந்த அறை என்ற குழப்பம்…மறுபடியம் விசாரித்தோம்..நாங்கள் சென்று பார்க்க வேண்டிய அறை ஒரு மூலையில் இருந்தது.. அறைக்கு வெளியே பத்து பதினைந்து நோயாளிகள் அங்கிருந்த மரப் பலகையில் அமர்ந்திருந்தனர்..வௌியே ஒரு அம்மையார் ஒரு நோட்டுப் புத்தகத்தோடு அமர்ந்திருந்தார். நேராக அவரிம் அட்டையைக் காட்டி என்ன செய்வது எனக் கேட்டேன்.அட்டையைப் பெற்றுக் கொண்டு அதில் ஒரு முத்திரை பதித்து வெளியில்
இருக்கும் நோயாளிகளுடன் காத்திருக்கச் சொன்னார்…

வேறு வழியின்றி அந்தக்கூட்டத்தில் எங்களையும் இணைத்துக் கொண்டோம்..சுமார் ஒரு மணிநேரங்களை காத்திருப்பதிலேய செலவுசெய்தோம்.. நான் காத்திருப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது…ஆனால் தேவையில்லாமல் அந்த தேவதூதரும் காத்திருந்தது எனக்கென்னவோ தர்மசங்கடமாய் இருந்தது.அந்த ஒருமணி நேரத்தையும் பேசியே விரட்டினோம்.என்னை உள்ளே அழைத்தனர்..

தேவதூதருக்கு உள்ளே அனுமதியில்லை. ஆகவே , அவர் வெளியே நின்று கொள்ள…நான் மட்டும் மருத்துவர்கள் உள்ள அறைக்குள் சென்றேன்.அங்கேயம் பத்து நபர்கள் காத்திருந்தனர்.. நானும் அவர்களுடன் காத்திருக்க ஆரம்பித்தேன்..

கண்களால் அந்த அறையை மேய்ந்தேன்… நான்கு மருத்துவர்கள் இருக்க வேண்டி இருக்கைகள் நான் குதிசையிலும் இருந்தது.

ஒரு இருக்கையில் மட்டும் மருத்துவருக்கு பதில் வெற்றிடம் நிரம்பியிருந்தது..மும்மூர்த்திகளாய் அந்த மருத்துவர்கள் இயங்கிக் கொண்டிருப்பார்களாதலால் சீக்கிரமே பார்த்து விடலாம் என்று நினைத்திருந்த நினைப்பில் தீயள்ளிப் போட்டதுபோல் , மும்மூர்த்திகளில் ஒரு மூர்த்தி வெளிநடப்புசெய்தார்… இப்போது இரண்டு மருத்துவர்கள் மட்டுமே. அந்த இருவரில் ஒருவர் நோயாளிகளை நோக்கிக்கொண்டிருந்தார். மற்றொருவர் நோக்கியா செல்போனை கவனித்துக் கொண்டு யாரிமோ கதையளந்து கொண்டிருந்தார்.

கடைசியாக கடவுள் போலக்காட்சியளித்தவர் அந்த நோயாளிகளைக் கவனித்துக் கொண்டிருந்தவர்தான்.. ஒரு மணி நேரம் காத்திருந்தேன்… அந்த ஒரு மணிநேரமும் அந்த பெயர் தெரியாத… இளம் வயதேயுடைய அந்த புண்ணியாத்மா….ஒவ்வொரு நோயாளியையும் கவனிக்கும்போது கருணைநன்கு தெரிந்தது..

அவரின் அனுகுமுறை அழகாயிருந்தது…அவருக்காகவே நான் அவ்வளவு நேரம் காத்திருக்கலாம் என நினைத்துக்கொண்டேன்…ஒரு வழியாக என் முறை வந்தது… தனியாகப் போய் அவர் அருகில் சென்றேன்.

எங்கேயிருந்து வந்தாரென்று தெரியவில்லை எனதருமை தேவதூதர் எனக்கு அருகில் வந்தமர்ந்தார்.. எனைப் பரிசோதிக்க ஆரம்பித்தார் மருத்துவர் … ஒருவழியாக பரிசோதனைகள் முழுவதுமாக முடிந்தது..இந்தப் பாழாய்ப் போன ஒற்றைத் தலைவலிக்கு அவராலும் சரியான தீர்வு சொல்ல முடியவில்லை…கண் பரிசோதனைக்கு பரிந்துரைத்தார்… அவரிடம் விடைபெறுமுன் கேட்டே விட்டேன் ” சார்நேம் என்ன ? ” அவர், ” சந்துரு ” என்றார் சிரித்தபடி…. கைகுலுக்கியபடியே அவரைப் பாராட்டிவிட்டு மருத்துவமனையை விட்டுவெளியே வந்தோம்….

என் ஒற்றைத் தலைவலிக்குஒரு தீர்வு கிடைத்ததோ இல்லையோ நானறியேன்…..உங்களிடம் கூறுவதற்கு ஒரு சிறு கதை கிடைத்திருக்கிறது… !

(இந்த சிறுகதை பாக்யா என்ற வார இதழில் ” தேவதூதரும் தலைவலியும் ” என்ற தலைப்பில் பிரசுரமாகியுள்ளது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *