கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 9, 2021
பார்வையிட்டோர்: 2,213 
 

(இந்த கதை கரு என்னுடையது அல்ல, திரு மகரிஷி அவர்களின் 1972ல் எழுதிய “ஒலிபெருக்கிகள் ஓய்ந்து விட்டன” என்னும் சிறுகதையில் இருந்து எடுத்தது)

இரவு ஒன்பது மணி ஆகியும் அந்த அலுவலகம் சுறு சுறுப்பாகத்தான் இருந்தது ராஜேஸ்வரி எக்ஸ்போர்ட் கம்பெனி முதலாளியும், மேனேஜிங்க டைரக்டருமான ராமபத்ரன் தனது கம்பெனியின் நிர்வாக தலைவரும் டைரகடருமான மிஸஸ் ரூபாவதியை அழைத்தார்.

எஸ் சார் உள்ளே நுழைந்த ரூபாவதியை கவனித்தார். வயது நாற்பதுக்கு மேல் இருக்கலாம், இன்னும் அழகு இருந்தது. பார்ப்பவர்களையும்,பேசுபவர்களையும் தன் வாதத்தால் வசப்படுத்தும் ஆற்றலும் இருந்தது. இந்த நேரத்திலும் முகத்தில் களைப்பு தெரியாமல் இருப்பதை பார்த்த ராமபத்ரனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

வாங்க உட்காருங்க, ரூபாவதி, சாரி ரொம்ப லேட்டாயிடுச்சு, என்ன பண்ணறது, நாளைக்கு சிங்கப்பூர் கிளம்பறேன், அப்படியே யூகே, யூஎஸ், எல்லாம் போயிட்டு வர்றதுக்கு பதினைஞ்சு நாளாயிடும். அதுனாலதான் உங்களை இவ்வளவு நேரம் காக்க வச்சுட்டேன். ஐ. ஆம்.சாரி..

பரவாயில்லை சார், நாம சும்மா உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க போவதில்லையே !

இதுதான் ரூபாவதி, களிப்புடன் சொன்னார் ராமபத்ரன். எனக்கு ரொம்ப புடிச்சது உங்களோட அப்ரோச்தான், எதையும் நேரடியாக பேசுவது, காரியங்களில் மட்டும் கண்ணாய் இருப்பது.

சாரி சார், தயவு செய்து புகழாதீங்க, நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்கறீங்க?

கொஞ்சம் நில்லுங்க, என் மனைவி வந்துடுவாங்க,

சொல்லிக்கொண்டிருக்கும்போதே மே ஐ கம் இன்..உள்ளே நுழைந்தாள் மஞ்சுளா. சாரி லேட்டாயிடுச்சா? கேள்வியை கணவனை நோக்கி வீசி விட்டு ரூபாவதிக்கு அருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.

உங்க இரண்டு பேருக்கு ஹாட்டா, கூலா ஏதாவது சொல்லலாமா? பதவிசாய் கேட்டார் ராமபத்ரன்.

இந்த நேரத்துல ஹாட்டா இருந்தா பெட்டர், மஞ்சுளா சொல்லி விட்டு மெல்ல சிரித்தாள்.

ஓ.கே.. அடுத்த மாசம் பத்தாம் தேதி நம்ம அசோசியேசனுக்கு எலக்சன் வருது தெரியுமில்லையா? ஆரம்பித்தார் ராமபத்ரன்.

அப்படியா, வியந்தாற் போல் கேட்டாள் ரூபாவதி.

என்ன ரூபாவதி இப்படி கேட்கறீங்க? இந்த எலக்சன்ல என்னைய எதிர்த்து நிற்க போறது யாருன்னு தெரியுமா?

இல்லை என்று தலையசைத்தாள் ரூபாவதி

உங்க கணவர் மிஸ்டர் பத்ரிதான்.

அப்படியா, ஒரு வியப்பான சொல்லை மட்டும் உதிர்த்தவள் அதற்கு நான் என்ன செய்ய? என்பது போல் ராமபத்ரனை பார்த்தாள்

அதுனால இந்த முறை போட்டி கண்டிப்பா ரொம்ப கடுமையா இருக்கும். சாரி நான் இப்படி கேட்கறது, தப்புத்தான். இருந்தாலும், நீங்க நம்ம கம்பெனியோட நிர்வாக அதிகாரியா இருக்கறீங்க, அதனால உரிமையா கேட்கறேன், நீங்க என் மனைவியோட நான் இல்லாத இந்த பதினைஞ்சு நாள்ல நாம சங்கத்து உறுப்பினர்களை பார்த்து எனக்கு ஆதரவா பேசி அவங்களை எனக்கு ஆதரவா திருப்பணும்.

சில நிமிடங்கள் திகைத்தாள். சரியான இடத்தில் கிடுக்கி போட்டு நிறுத்தி இருக்கிறார் ராமபத்ரன். நீ எனக்கு ஆதரவாக வேலை செய், அதுவும் உன் கணவனுக்கு எதிராக. இல்லையென்றால்……. இந்த கேள்வி வர வேண்டிய அவசியமே இல்லை. அவளுக்கு தானாக புரிந்தது.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த மஞ்சுளா ஆதரவாய் அவள் கைகளை பற்றிக் கொண்டாள். இதுல என்ன தயக்கம், என் கூட வேலை செய்யறதில்ல.

அதுக்கில்லை, தயங்கினாள் ரூபாவதி..

அதெல்லாம் அப்படீன்னு சொல்லி தப்பிக்காதீங்க, உங்க கணவனை எதிர்த்து வேலை செய்யறதுல தயங்குறீங்களா?

இதற்கு என்ன பதில் சொல்வது? உண்மையில் சொன்னால் ஆம் என்பதுதான் சரியாய் இருக்கும்.

உங்களுக்கு விருப்பமில்லை என்றால் இதிலிருந்து விலகிக்கொள்ளலாம் மெதுவாய் சொன்னார் ராமபத்ரன்.

அவளுடைய ஈகோவை கிளப்பிய வார்த்தை, சட்டென முடிவு செய்தாள், அப்படி இல்லை சார் நம் கம்பெனி சார்பாக இந்த வேலையை கண்டிப்பாக செய்கிறேன்.

தட்ஸ் குட்,. நாம் சங்கத்தில் முதன்மையாக இருந்தால் நம்முடைய கம்பெனியின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

சிறிது நேரம் அமைதி..ஓ.கே தேங்க்ஸ், நாம் மூவரும் கிளம்பலாமா?

மஞ்சுளாவும் ராமபத்ரனும் ஒன்றாய் காரில் ஏறி போவதை பார்த்து கொண்டிருந்தாள்

ரூபாவதி. அவள் மனதில் தன் கணவன் இதை பற்றி என்ன நினைப்பானோ என்ற எண்ணம் வந்து விட்டது.

வீட்டில் அனைவரும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடும் நேரம், ரூபாவதி தன் மனதை திடப்படுத்திக்கொண்டு மெல்ல தனக்கு ராமபத்ரன் கொடுத்திருந்த வேலையை மெல்ல சொன்னாள்.

பத்ரி எதுவும் பேசாமல் மெளனமாய் அமர்ந்து சாப்பிடுவதை தொடர்ந்தார். பையன் இப்பொழுதுதான் அப்பாவின் கம்பெனி பொறுப்புக்களை எடுத்திருப்பவன் மெல்ல அம்மாவை முறைத்தான். பெண் முகத்தையும் பார்த்தாள் ரூபாவதி. அவள் முகம் கூட ரூபாவதி சொன்னதில் களை இழந்து போயிருந்தது.

உங்க மூணு பேருக்கும் விருப்பமில்லையின்னா நான் இந்த வேலையில இருந்து விலகிக்கறேன். இப்பவே மிஸ்டர் ராமபத்ரன் கிட்டே போன் பண்ணி சொல்லிடறேன்.

சட்டென ரூபாவதியின் கையை அழுத்தி பிடித்தார் பத்ரி, வேண்டாம், அப்படி செய்தால் இண்டஸ்ரில உன் பேர் கெட்டிடும், அதை அழகா செஞ்சு உன் பேரை கெடுத்துடுவான் ராமபத்ரன். அதனால நீ தாராளமா எனக்கு எதிரா வேலை செய்யலாம்.

பையன் சத்தமாய் முணு முணுத்தான். அப்பா அம்மா உனக்கு எதிரா வேலை செஞ்சா மட்டும் தப்பா பேசமாட்டாங்களா?

கொஞ்சம் பேர் பேசலாம், அதை பத்தி கவலை இல்லை. மத்தவங்க எங்க இரண்டு பேரை பத்தியும் தெரிஞ்சவங்க. ஏன் ராமபத்ரனுக்கே எங்க இரண்டு பேரோட குணமும் தெரியும். இண்டஸ்ரியல நாங்க தனித்தனியாகத்தான் இது வரைக்கும் செயல்படறது.

பதினைந்து நாட்கள் மஞ்சுளாவுடன் அனைத்து கம்பெனி முதலாளிகளை சந்தித்து ராமபத்ரனுக்காக ஆதரவு திரட்டினர். நிறைய பேருக்கு ஆச்சர்யம், எப்படி மேடம் உங்க கணவனுக்கு எதிரா வேலை செய்யறீங்க?

மஞ்சுளா அதற்கு சட்டென பதில் சொல்லி சமாளித்தாள், அவள் எனக்காக வேலை செய்கிறாள். அவளுடைய பால்ய தோழியை விட்டு கொடுக்க விரும்பாமல் தன் கணவனை எதிர்க்கிறாள்.

இந்த பதினைந்து நாட்களும் தன்னுடைய வாரிசுகள் தன்னுடன் பேசுவதை குறைத்து விட்டனர். ஏதோ விரோதியை பார்ப்பது போல் பார்த்தனர். கணவன் பத்ரி மட்டும் அவளிடம் கலகலப்பாய் பேசினான். மறந்தும் அலுவலக விஷயங்களை பேசவில்லை.

மஞ்சுளா ஒரு முறை மனம் விட்டு சொன்னாள், உன் கணவன் உண்மையிலேயே “ஜெம்”, இல்லேண்ணா ஒரே வீட்டுல எதிரும் புதிருமா இருந்தும் நட்போட இருக்கறாரு. எனக்கு என் கணவன் செய்யும் எதுவும் பிடிப்பதில்லை. அதற்காக அவரை எதிர்த்து உன்னைப்போல் ஏதாவது செய்து விட்டாள் அவ்வளவுதான், என்ன நடக்கும் என்று தெரியாது.

ரூபாவதிக்கு இந்த வார்த்தைகள் மனதுக்குள் சுரீர் என்ற உணர்வை தோற்று வித்தன. கணவன் செய்யும் காரியம் பிடிக்கவில்லை என்றாலும் அவருக்காக வேலை செய்கிறாள், ஆனால் நான்…

எதிர்பார்த்தது போல ரூபாவதி, மஞ்சுளா இவர்களின் தீவிர உழைப்பினால் ராமபத்ரன் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தலைவராக தேர்வு பெற்று விட்டார்.

அன்று அலுவலக்த்தில் ஒரே கொண்டாட்டமாக இருந்தது. வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருந்தார் ராமபத்ரன். அதை விட ஆச்சர்யம் பத்ரி நேரிடையாக இவர்கள் கம்பெனிக்கு வந்து ராமபத்ரனுக்கு வாழ்த்தை தெரிவித்து சென்றார்.

இவர்களின் கொண்டாட்ட மனநிலைகளை ஓரமாய் நின்று கவனித்து கொண்டிருந்த ரூபாவதியின் மன நிலை பெரும் பூகம்பமாயிருந்தது. தான் செய்தது சரியா?

ஏன் இப்பொழுது கூட வெற்றி பெற்றவனின் அருகில் நின்று மகிழ்ச்சியை அனுபவிக்கிறோமே, தன்னுடைய கணவன் தோல்வியில் நின்று ஆறுதல் சொல்வதுதானே முறை. அதை ஏன் நான் செய்யவில்லை.

இதோ கணவனின் அருகில் அவரது செயல்களே பிடிக்காத அவர் மனைவி அந்த மகிழ்ச்சியை பங்கு போட்டு கொண்டிருக்கும்போது தான் மட்டும் சுதந்திர உணர்வு என்று சொல்லி இங்கு நின்று கொண்டிருப்பது என்ன நியாயம்?

அலுவலக அறைக்குள் நுழைந்தவள் ஒரு வெள்ளை தாளில் தன்னுடைய எல்லா நிலைகளிலிருந்து விடுவிக்கும்படி ஒரு விண்ணப்பத்தை எழுதி தன் உதவியாளனை அழைத்து மேனேஜிங் டைரக்டரிடம் கொடுக்க சொல்லி விட்டு அந்த அலுவலக கட்டிடத்தை விட்டு வெளியே வந்தாள்.

வீட்டுக்குள் நுழையும்போது வீடு அமைதியாக இருந்தது. உள்ளுக்குள் அப்பாவுடன், மகளும், மகனும் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். இவள் குற்ற உணர்ச்சியுடன் அவர்கள் முன்னால் நின்றாள்.

மகள் அம்மாவிடம் கோபமாக ஏதோ பேச முற்பட்ட பொழுது சட்டென அமர்த்தி விட்டு எழுந்த பத்ரி தன் மனைவியை அணைத்து உட்கார சொன்னார். அவள் அதுவரை அடக்கி வைத்திருந்த மன அழுத்தத்தை அழுகை மூலம் அவர் தோளில் சாய்ந்து கொட்டி தீர்த்துக்கொண்டிருந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)