(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பொல பொலவெனப் பொழுது புலரும் வேளை. கூக்குரல். ஒரே அமர்க்களம். விழித்துக் கொண்டேன். படுக்கையினின்று எழுந்து அலறிப் புடைத்துக் கொண்டு ஓடினேன். எதிர்வீட்டு மேலண்டை சுவரின் அருகே சந்தில் கூட்டம் அலையிரைந்து நெரிந்தது. உள்ளே புகுந்து சுவருக்கெதிரே வெளிவந்தேன். சுவரில் கன்னம். கன்னத்தின் பக்கத்தில். எடுத்த கல்லையும், மண்ணையும் ஒழுங்காய் குவித்திருந்தது. கன்னம் வைத்தவன் வேலையில் சுத்தம். சுவரின் திறந்த வாய்ச் சிரிப்பின் ஒழுங்கற்ற பற்கள் போல் கன்னத்தின் வழி அடுக்குள் சாமான்கள் தெரிந்தன.
கன்னத்தின் எதிரே வீட்டுக்கு சொந்தக்காரர்கள் வட்ட மாய் நின்றனர். வீட்டுக்கார முதலியார் வழக்கப்படி முழங் காலுக்கு மேல் தூக்கி, ஒற்றை வேட்டி கட்டி, பானை வயிற் றின் மேல் கைகட்டி நின்றார். அவர் எப்பொழுதுமே பேசமாட்டார். பக்கத்தில் அவர் மனைவி கன்னத்தில் கைவைத்து நின்றாள்.
ஐயா யானைக்குட்டி.
அம்மா வெள்ளையானைக்குட்டி.
“அத்தை! அத்தை!!” உள்ளிருந்து மூத்த மருமகள் பதறி ஓடி வந்தாள். ‘ஐயோ அத்தே! ஐயோ!’ மலை போன்ற மாமியை இறுகக் கட்டிக் கொண்டு அழுதாள்.
“என்னதான் சொல்லேன் அம்மே!”
ஆனால், மருமகளுக்குப் பேச வரவில்லை. அத்தையின் தோளில் புதைந்த முகம் நிமிர அஞ்சிற்று. வலது கரம் மாத்திரம் தூக்கிற்று. அதிலிருந்து அறுந்த தாலிச்சரடு பொட்டுடன் தொங்கிற்று.
‘ஹா! -‘
மார்பின் மேல் கவ்விய கையுடன் முகம் மேனோக்கிய நிலையில் என் மனத்தில் விறைத்துவிட்ட அவ்வுருவத்தின் வார்ப்பு இன்னமும் கனவிலும் நினைவிலும் வட்டமிடுகின்றது.
பொல பொலவெனப் பொழுது புலரும் வேளை.
வெள்ளிக்கிழமை.
அடுத்த வருடம் நான் ஊருக்குச் சென்றபோது அவள் இல்லை. “மஞ்சள் கயிறை மருமகள் கண்டெடுத்துக் கொண்டு வந்து கொடுத்த அன்னிக்கே, அப்பவே, அவளுக்கு பூமிலே வேர் விட்டுப்போச்சுடா! அவமானம் ஒருபக்கம். அந்த நிலை தனக்கு நேர்ந்துவிடுமோ என்கிற திகில் வேறே கண்டூடுத்து – அதனாலேயே கணவனை முந்திக்கத்திடம் பண்ணிண்டூட்டா. பிள்ளையார் மாடத்துக்கெதிரே உறியில் தொங்கும் விபூதிப் பல்லாயிலிருந்து தினம் ஒருகை வாயில் அள்ளி அள்ளிப் போட்டுண்டு, சோகை புடிச்சுப் போச்சு. இங்கே நடக்கிற வைத்தியமும் அப்படி இப்படித்தான்! விஷயம் முற்றிப் போச்சு. ஆனால், உயிரின் எண்ணத்தையே துறந்தவளிடம் சஞ்சீவியே என்ன பண்ண முடியும்?”
அம்மாவின் பேச்சை நின்று கேட்க முடியவில்லை. மூச்சு திணறிற்று. வெளியே வந்தேன்.
எதிர்வீட்டுத் திண்ணையில் முதலியார் உட்கார்ந்திருந்தார்.
யானைக்குழியில் விழுந்துவிட்ட காட்டானையைப் பார்ப்பது போல் பயமாயிருந்தது. மண்பிள்ளையார் முகத்தில் பதித்த குந்துமணிகள் போன்று சிவப்பேறிய கண்களில் விழிகள், கீழே விழ மறுத்து அங்கேயே வரண்டுவிட்ட கண்ணீரின் காங்கையில் கனன்றன. மழமழத்துக் கருங்கல்லாயிருந்த சதை சுருங்கி, சொரசொரத்து எலும்புக்குப் பாரமாய்த் தொங்கிற்று.
முறை மறந்து போய், சேர்ந்து வருவது போல், நேரத்துக் கொருமுறை நீண்ட உலைமூச்சு கிளம்பிற்று.
முதலியார் எப்பவுமே பேசமாட்டார். கால்மணி, அரை மணிக்கொருமுறை, மூக்கில் சதை அடைத்துக் கொண்டாற் போல், ஒரு கரடி உறுமல் தான் அவர் பாஷை.
“நெல்லை மாடு மேயுது.”
“தலை முழுவணும், சுடுதண்ணி விளாவு.”
“எள்ளுத் துவையலில் புளிகூட.”
“பிள்ளையார் கோயிலுக்கு விளக்கு வெச்சாச்சா?”
“பண்டாரம் வாசல்லே பசின்னு நிக்குது.”
அந்தந்த சமயத்தின் அந்தந்த அர்த்தத்தை அவர் மனைவியால் தான் புரிந்து கொள்ள முடியும்,
“உத்தமி , சுமங்கலி கொடுத்து வைத்தவள். முற்றத் தின் நடுவில் மேடை கட்டினாற் போல், மஞ்சள் பற்றிய நெற்றியில் பலகையா அந்தக் குங்குமத்தை இன்னி முழுக்கப் பார்த்துண்டிருக்கலாம்!”
அதெல்லாம் சரிதான். அல்ல சரிதானோ என்னவோ? ஆனால், வாய்விட்டுத் தீர்க்காததால் தன் மேலேயே திரும்பி விட்ட துக்கத்தின் சிதையில் மனிதன் உயிரோடு வேகும் அனல் என்மேல் தெறிக்கின்றது.
2
ஒரு கலியாணத்துக்குப் போயிருந்தேன். ராத்திரி ‘டின்னர்’ பாதி நடந்து கொண்டிருக்கிறது. பாதம்கீர் சமயம் கையில் ஏந்திய தொன்னையில் பவுனை உருக்கி வார்த்தாற் போல் கோகர்ணத்திலிருந்து பாயஸம் இறங்குவதைப் பார்த்துக் கொண்டிருக்கையிலே ‘குப்’பென்று விளக்குகள் அணைந்தன,
மின்சாரம் திரும்பவில்லை.
கை காயக் காத்திருந்தது தான் மிச்சம். பெட்ரோமாக்ஸுக்கு எவனோ ஓடினான். போனவன் திரும்பவில்லை. அப்படியே ரயிலேறி விட்டானா என்று பந்தியில் எவனோ கிண்டல் பண்ணினான்.
பிறகு எந்தப் புண்ணியவானுக்கு யோசனை தோன் றிற்றோ தெரியவில்லை. அவசரமாய்ப் பக்கத்துக் கடையி லிருந்து மெழுகுவர்த்திகள் வாங்கி வந்து விநியோகம் ஆயின. ஒரு வழியாய் சாப்பாடு முடிந்து இலையிலிருந்து எழுந்தோம். ஆனால் மனதுக்குத் திருப்தியில்லை. ருசி கெட்டுவிட்டது. வயிறு நிறையவில்லை. அதனாலேயோ, அதற்கு முன்னாலேயோ நடுப்பந்தியில், நடுக்கூடத்தில் விளக்கு அணைந்துவிட்டதாலோ, மன நிறைவில்லை.
கிணற்றடியில் கைகழுவ க்யூ’ நின்றது. இடையிடையே மெழுகுவர்த்திகளின் ஒளித்தெறிப்புக்கள், ‘லைன்’ மாறிக் கொண்டிருக்கும் ரயில் வண்டித் தொடர் போன்ற ‘க்யூ’ வின் வளைவைக் காட்டின.
எனக்கு முன்னால், கலியாணப்பெண ஒரு வர்த்தியைப் பிடித்துக் கொண்டு நின்றாள். அவளுக்கு முன் கலியாணப் பிள்ளை.
இந்தப் பந்தியிலேயே அவள் ஒருத்தி தான் பெண். திடீரென்று கலியாணப்பிள்ளை துள்ளிக் குதித்தான். “என்ன? என்ன?” – எல்லோரும் பதறினர்.
“ஒன்றுமில்லை” – ஏந்திய எச்சிற்கையில் முழங்கையை மறுகையால் பரபரவென்று தேய்த்துக் கொண்டான்.
“சொல்லேண்டா!” – ஒரு கிழவர் பொறுமையிழந்து கத்தினார்.
“இருட்டுவேளை இடம் புதிசு , ஒன்றுமில்லேன்னா என்ன அர்த்தம்?”
“ஒன்றுமில்லை பெரியப்பா மெழுகு ஒரு சொட்டு சிந்திவிட்டது.”
திகைப்பில் ஒரு கணம் ‘க்யூ’ முழுக்க வாயடைத்தது. மறுகணம் அத்தனை பேர்களின் சிரிப்பும் ஒரு பிழம்பாய்ப் பீறிட்டது.
கலியாணப் பெண்ணுக்கு முகம் கவிழ்ந்தது. கூட்டத்தில் குஷி இன்னும் தூக்கிற்று. ஆரவாரம் அதிகரித்தது. அப்போது எங்கள் இருபக்கங்களிலும் சாப்பாட்டுக்கு இன்னும் காத்துக் கொண்டு நின்ற பெண்கள் கூட்டத்தி லிருந்து ஒரு குரல் – கட்டைக்குரல் – புகைந்தது.
“ஏற்கெனவே என் பிள்ளைக்கு மிலிட்டேரிலே வேலை.
“சாப்பாட்டு வேளையில் விளக்கணைஞ்சு போச்சேன்னு நான் அடிவயத்துலே நெருப்பை கட்டிண்டிருக்கேன். நீ தாலி கட்டினதும் கட்டாததுமாய் அவனைச் சுட்டுப் பொசுக்க ஆரம்பிச்சூடு!”
கழுத்தை வெட்டி விட்டாற்போல் மணமகளின் தலை இன்னும் தாழ்ந்து தொங்கிற்று. அவள் கை மெழுகுவர்த்தி வெடவெடவென உதறிற்று. திரியடியில் மெழுகின் தண் துளும்பிற்று. அவன் அவள் கையிலிருந்து மெதுவாய் வர்த்தியை வாங்கிக் கொண்டான். மெழுகின் சுடரில் ஒளி வீசிக்கொண்டு அவன் புறங்கையின் மேல் ஒரு அனல் சொட்டு இறங்கிப் பொரிந்து மலர்வது கண்டேன், ஆனால், அது மெழுகின் சொட்டு அல்ல.
ஒருவரும் தன்னைப் பார்க்கவில்லை என்று தான் நினைத்துக் கொண்டபோது, அவன் கையைத் தூக்கி அந்த இடத்தை நக்கிக் கொண்டான்.
அவனுக்கு நாளைக்கு வண்டி. இன்னும் ஆறுமாதம் கழித்துத்தான் வருவான். பிறகுதான் சாந்தி கலியாணம்.
அதுவரை அவன் உட்கொண்ட அவள் நெஞ்சின் உருக்கு, அவன் இதயத்துள் நக்ஷத்திரம் போல் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.
அதன் ஒளியில் என் விழியோரங்கள் உறுத்துகின்றன.
3
இன்னொரு சமயம், இன்னொரு வீட்டில். இன்னொரு விசேஷத்துக்குப் போயிருந்தேன்,
நாட்டுக்கோட்டை செட்டியார் வீடு. அவர் செல்வ னுக்குப் ‘புதுமை’. வீடான வீடு! வீடா அது? அரண்மனை!
கிணற்றை ஒட்டிய சிமிட்டித் தொட்டியின் அகலமும் நீளமும் ஒரே சமயம் இந்தப் பக்கம் நாலு அந்தப்பக்கம் நாலு ஆக எட்டுக் குதிரைகளுக்குத் தண்ணீர் காட்டலாம். செட்டியார் வீட்டு விசேஷத்தில் கூட்டத்துக்குக் கேட்கணுமா? சம்பந்திகள், சிப்பந்திகள், தெரிந்தவர் – தெரியாதவர், வருவோர் – போவோர், புகுந்து புறப்படுவோர் – ஒரே உற்சவந்தான்; கடல் பொங்கிற்று.
வந்திருப்பவர்களுள் ஒரு குழந்தை அத்தனை பேர் உள்ளத்தையும் கொள்ளை கொண்டது. வயது மூணு இருக் குமோ? நாலு இருக்குமோ? வேற்று முகம் இல்லை. யார் அழைத்தாலும் அழைத்தவரின் விரிந்த கரங்களிடையே சிரிப்புடன் சென்றான்.
தந்தப் பொம்மைப் போல் சிறு கூடாய், அதற்குள் அளவில் அமைந்த அவயவங்கள், அவையுள் முகத்தில் செதுக்கிய அங்க நயங்கள்.
குழந்தைக்குரியவர் அவனுக்கு ‘கிருஷ்ண’ அலங்காரம் பண்ணிவிட்டிருந்தார்கள். நெற்றியில் ‘கோபி’. கோபியின் பாதத்தில் குங்குமப் பொட்டு. தலையில் முன் கொண்டை, அதில் சொருகிய மயிலிறகு. இடையில் ‘ஸேடின்’ நிஜார். கையில் குழல் தான் பாக்கி. யார் தூக்கிக்கொண்டாலும். அவள் எவ்வளவு ரூபவதியானாலும், அவள் ஒளி உடலே மங்கிற்று – அதைக் குழந்தை வாங்கிக்கொண்டாற் போல்.
“குழந்தைக்குச் சுற்றிப் போடுங்கள் ஆயுசோட நன்றாயிருக்கணும்!”
தாயாருக்குப் பெருமை தாங்க முடியவில்லை. குழந்தை முகத்தைச் சுற்றித் தன் நெற்றியில் நெரித்துக்கொண்டாள். சொடக்குகள் சொடசொடவென்று உதிர்ந்தன. குழந்தை இடுப்பினின்றிழிந்து, கூட்டத்தில் புகுந்து, தன் வயதுக் குழந்தைகளுடன் விளையாடக் கலந்து கொண்டான்.
“ஒரு வயதுக்குமேல் எந்தப் பொம்மனாட்டியும் வெறுங்கையை வீசிண்டு வெளியே கிளம்பக்கூடாது.”
பெண்கள் கூட்டத்தை அவள் வெற்றிப் பார்வை வெள்ளோட்டம் விட்டது. ‘இடுப்பில் ஒரு குழந்தை இருந்தால் தான் அழகு. அதுதான் அவளுக்குக் கௌரவம்!’
அவள் பெருமிதத்தில் ஆச்சரியமில்லை . ஆனால் எல்லோருக்கும் அவளுக்கு வாய்த்தாற்போல் இடுப்புக்கு எடுப் பாய்க் கிடைக்கணுமே என்பது தான் கேள்வி,
செட்டியார் வீட்டு வைபவம் பிரமாதம். தெருவை யடைத்துப் பந்தல். இரண்டு ‘ஸெட்’ பரிசாரகர். சமை யல் ஓயாமல் நடந்து கொண்டேயிருக்கிறது. மத்தியானச் சாப்பாட்டிற்குப் பிறகு பஜனை. பிற்பகல் நாயனர். மாலை டீ பார்டிக்கு பின் பாட்டுக் கச்சேரி . இரவு விருந் துக்குப் பின் சதிர்க் கச்சேரி. இரண்டு பெரும் அறைகள் தேங்காய்க் கிடங்காயும் பாத்திரக் கிடங்காயும் மாறியிருக் கின்றன. என்னால் மூக்கில் விரலை வைக்காமல் இருக்க முடியவில்லை. முந்திரி, மாகாணிமேல் தன் பாதங்களை ஊன்றித் தானே இங்கு மகாலக்ஷ்மி இப்படிப் பெருகியிருக்கிறாள்!
பகல் பந்திகள் ஓய்ந்தன . கிருஷ்ண கானம்’ ஆரம்பிக்க இருக்கிறது. யாருக்கு யோசனை தோன்றிற்றோ தெரிய வில்லை. “அந்த கிருஷ்ண வேஷக் குழந்தையை முன்னால் உட்கார வையுங்களேன்!’
குழந்தையைக் காணோம்.
ஒரு நிமிஷத்தில் கலவரம் தெருவைப் பற்றிக் கொண்டது.
“ஐயையோ!” புதிதாய் ஒரு அலறல் புழக்கடையி லிருந்து கேட்டு எல்லோரும் அலறிப் புடைத்துக்கொண்டு ஓடினோம்.
நான் அங்கு போய்ச் சேரக்கூடவில்லை. சேரவேண்டிய அவசியமேயில்லை. கைகள் வெலவெலத்து விட்டன. கிணற்றையொட்டி, எட்டுக் குதிரைகளுக்கு ஒரே சமயத்தில் தண்ணீர் காட்டும் அளவுக்குக் கட்டிய சிமெட்டித் தொட்டி யின் விளிம்பிலிருந்து ஒரு மயிலிறகு எட்டிப் பார்த்தது.
‘கிறீச்’ சென்ற ஒரு கத்தல், செட்டியாரின் அரண்மனையைத் துருவிற்று. குழந்தைக்குச் சொந்தக்காரி.
“ஐயோ பெத்தவளுக்கு என்ன பதில் சொல்வேன்!”
அதைக் கேட்டதும் அதன் அர்த்தம் என் மண்டையுள் தோய்ந்ததும், உடல் முழுவதும் பயங்கரமாய் மின்சாரம் தெறித்தது.
குழந்தையைத் தோற்றவள், குழந்தைக்குத் தாயென்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தவள், குழந்தைக்குத் தாயில்லை. தான் சொன்னபடி குழந்தையைத் தன் இடுப்புக்கு அணியாய்க் கொண்டு வந்தவள் தான்.
4
எனக்கு விழிப்பு வந்தபோது பொலபொலவென்று பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. வண்டியில் எதிர் ‘ஸீட்’டில் ஒரு ஸ்திரீ, அவளுடைய முழந்தையைத் தவிர வேறுயாருமில்லை.
அவள் எங்கே, எப்போது ஏறினாளோ, மற்றவர் கள் எங்கெங்கே, எப்போது இறங்கினார்களோ தெரியாது. ரயிலின் தாலாட்டு அவ்வளவு சுகமாய் இருந்திருக்கிறது.
கண்ணன் எனக்கு முன்னாலேயே விழித்துத் கொண்டு விட்டான். அவன் உடம்பில் என்ன தான் ஓடுகிறதோ, அவனால் ஒரு நிமிஷம் சும்மாயிருக்க முடியாது. ஆம்பி லேறித்தோம்பில் விழுவதும், ஜன்னல் வழி எட்டிப் பார்ப்பதும், பதில் கிடைக்காத கேள்விகளைக் கேட்பதும் – தூங்கும் சமயத்தில் கூட, நிஷடையிலிருப்பது போல் விழிப்பி லிருக்கிறான்.
எதிர் ஸீட்’டில் இருக்கும் அவள் குழந்தையை சிநே கிதம் பிடிக்க ஆரம்பித்து விட்டான். அவள் காது வரை இழுத்த மையின் மாயத்தில், அளவினும் பெரிதாய்த் தோன்றிய அகன்ற விழிகள் முதலில் ‘லேடி’ தோரணை. பிறகு வியப்பு, பிறகு மகிழ்ச்சி! பிறகு படிப்படியாய் வயதுக்கேற்ற தன்மைக்குக்கிறங்கி கண்ணன் சேஷ்டைகளில் அவை குழைந்தன. ஒருவரையொருவர் முதலில் மௌனமாய் ஆராய்ந்த பின், அவள் பட்டுச் சொக்காயைத் இவன் தொட்டுப் பார்க்க, அவள் தோள்களைக் குலுக்கிக்கொள்ள, இருவரும் விளையாட ஆரம்பித்துவிட்டனர்.
ஜன்னலுக்கு வெளியே கவனித்துக் கொண்டிருந்த தாயின் முகம் பக்கவாட்டில் திரும்பியிருந்தது.
எட்டினால் தொட்டுவிடலாம் போல கிட்டத் தழைந்து தோன்றிய வானில் செந்திட்டு வீசிப் படர்ந்தது. பாலங்களினடியிலே ஜல ஜரிகை ஓடி வீசிற்று. ஒவ்வொரு விடிவும் ஒரு புது வாழ்வு எனும் உண்மையின் துலக்கமாய், ஆங்காங்கே. மிருக மனித உருவங்கள் சிறிதும் பெரிதுமாய், தாவரங்களிடையே திடீரென முளைத்தன.
இப்படி இப்படி இருந்திருந்தால் எப்படி எப்படி இருந் திருக்கும்?” என்று பசித்தவன் பழங்கணக்கு எண்ணங்களில்
குழைத்து, ஜன்னலின் சட்டத்துள் தீட்டிய சித்திரமா அல்லது உயிர் முகமர், அல்லது முழுத் தூக்கம் கலையா அரை விழிப்பில், மனத்தின் அடிவாரத்தினின்று. இந்த ஜன்மத்தில் முழுக்காரணம் புரியாது. எத்தனயோ முற்பிறவிகளுள் எப்பிறவியின் அச்சாலோ எழுந்து, இதோ மறுகணம் மறைந்துவிடப்போகும் கனவா?
‘வீல்’ என அலறல் கேட்டு இருவரும் துடித்துத் திரும்பினோம். அந்தப் பெண் வலது கன்னத்தை ஏந்திக் கொண்டு கத்தினான். கண்ணன் அவளையும் எங்களையும் மாறி மாறித் திருதிருவென விழித்தபடி நின்றான்.
“என்னடா கண்ணா?’
அவள் தன் குழந்தையை அணைத்துக்கொண்டு கேட்டுத் தெரிந்து கொண்டதும் அவள் விழிகள் கொதித்தன. கண்ணனைப் பார்த்துத் தெலுங்கில் ஏதோ மளமள வெனக் கொட்டினாள். பிறகு அவள் குழந்தையின் முகத்தைச் சுட்டிக்காட்டி என்னிடம் ஏதோ இரைந்தாள். அவள் பெண்ணின் கன்னத்தில் வெடுக்கென சிவந்து மேலுங் கீழும் இரண்டிரண்டாய் நான்கு பற் குறிகள் தெரிந்தன.
எனக்குப் புரிந்துவிட்டது.
‘ஏண்டா அவள் கன்னத்தைக் கடித்தாய்?’
‘எனக்குத் தெரியல்லேப்பா! பாப்பா மேலே ஆசையாயிருந்தது, கட்டிண்டேன்-‘
குழந்தைக்கு முகம் வெளுத்துவிட்டது. அவனுக்குப் புரியாது, தெரியாது. கட்டுக்கடங்காத ஒரு செயலின் பீதியில் அவன் குழம்பி நிற்கையில் அவனைப் பார்க்கப் பரிதாபமாயிருந்தது. அவனை என் பக்கமாய் இழுத்து அணைத்துக் கொண்டேன்.
அவள் தன் குழந்தையை என்னென்னவோ கொஞ்சி, செல்லம் சொல்லி, கன்னத்தைத் தொட்டுத் தடவி திடீரெனக் குனிந்து, கடித்தவிடத்தில் முத்தமிட்டாள். அதைக் கண்டதும் என் உடல் முழுவதும் புல்லரித்து, ஒரு இன்ப பயங்கரம் கால் கட்டை விரலிலிருந்து மண்டை உச்சிவரை ஊடுருவிற்று. நான் மூர்க்கவசமானேன்.
கண்ணனை இழுத்து. அணைத்து முத்தமிட்டேன்.
என் செயல் கண்டு அவள் மீண்டும் தன் பெண்ணை முத்தமிட்டாள். இருவரும் மாறி மாறி அவரவர் குழந்தை களை முத்தமிட்டுக் கொண்டிருந்தோம்.
ரயில் அகன்ற மைதானத்தின் நடுவே போய்க் கொண்டிருந்தது.
உருவிழந்த ஆசைகள், உருக்குலைந்த ஆசைகள், உருமாறிய ஆசைகள், உருவுக்குக் காத்திருக்கும் ஆசைகள், உருக்கசந்த ஆசைகள், எல்லாம் சேர்ந்த வெறியாட்டங்கள் தன்மேலும், ஒன்றன் மேல் ஒன்றும் தம்தம் வஞ்சம் களைத் தீர்த்துக்கொண்டு, மீண்டும் தம்தம் உரு பிசு பிசுக்கவும். உருமாறவும், உரு அழியவும், உரு, பிறக்கவும் வசதியாய் அமைந்த பலிபீடம் போன்ற மைதானம்.
கீழ்த்திசையில் மேகங்களைப் பிளந்தவண்ணம் புறப் பட்டுக் கொண்டிருக்கும் ஒளி எரிமலைபோல் குமுறியது.
கண்ணன் கோபத்துடன் திமிர முயன்றான். ‘உன் மூஞ்சி குச்சி குச்சியாக் குத்தறதப்பா! இதென்ன முத்தப் போட்டி -?’
அவளுக்கு மூச்சு இரைத்தது. அவளுடைய கரடி யணைப்பில், அவள் குழந்தைக்கு விழிகள் பிதுங்கின.
ரயிலின் ஓட்டம் மெதுவடைய ஆரம்பித்து விட்டது. கண்ணனையும் கைப்பெட்டியையும் தூக்கிக்கொண்டேன். நான் இறங்கவேண்டிய இடம்.
நாங்கள் இறங்கிக் கொண்டேயிருக்கையில் திடீரென்று அவள் வாய்விட்டுச் சிரித்தாள். பாய்ச்சி கையியைக் குலுக்கினாற்போல் அதில் ஒலித்தது வெற்றியா? கேலியா? கோபமா? ஏமாற்றமா? எல்லாமேவா? வேறு எதுவோ? இன் னமும் அச்சிரிப்பின் உருட்டு நெஞ்சில் தெறித்துக்கொண்டிருக்கிறது.
5
படத்தில் சுவாரஸ்யமான கட்டம். பிரபல கதாநாயகி யின் பிரமாதமான நடிப்பு. திரை முழுக்க (இன்னும் இட மிருந்தால் அதையும் அடைத்துக்கொள்ளும்) அடைந்த ‘க்ளோஸ் அப்’ ஏன், இப்பொழுது தியேட்டரில் இருக்கும் அத்தனை பேர் நெஞ்சையும் அது அடைத்துக்கொண்டு தானிருக்கிறது. குகைகள் போன்ற பெரிய கண்களிலிருந்து இரண்டு பெருக்குகள் புறப்பட்டு, மலை போன்ற பிரம்மாண்ட மான கன்னங்களின் சரிவுகளிலிருந்து பின்னணி சங்கீதத்தின் சலங்கை மணி உருளல்களுக்குக் சரியாய், சரிந்து கொண்டு டிருக்கின்றன.
“த்ஸோ த்ஸோ த்ஸோ?”- நாயைக் கூப்பிடுபவர் எத்தனை பேர்.
“ஹாஹ் ஹா” – மிளகாயைக் கடித்தவர் எத்தனை பேர்! பெண்கள் கூட்டத்தில் ஒன்றிரண்டு விசிப்புகள்.
‘பட்’ – படம் அறுகிறது. ஒற்றை பல்ப் ஏற்றிக்கொள்கிறது. ‘பாபூ. மீனு . உடனே புறப்பட்டு வாங்கோ. அப்பாவுக்கு உடம்பு ஜாஸ்தி ஆகிவிட்டது.
எனக்கு முன் வரிசையில் எனக்கெதிர் நாற்காலிகள் இரண்டில் கலவரம் உண்டாகிறது.
“அம்மா அம்மா போயிடுவோம். அப்பாவுக்கு உடம்பு ஜாஸ்தி ஆயிடுத்தாமே!”
“இன்னும் கொஞ்ச நேரம், அஞ்சு நிமிஷண்டா! கதையின் திருப்பம் தெரிஞ்சுண்டூடலாம்.”
“இல்லேம்மா போயிடுவோம்மா. எனக்குப் பயமாயிருக்கு. இதுக்குள்ளே அப்பாவுக்கு என்ன ஆயிடுத்தோ?”
அவன் தாய் சபித்துக்கொண்டே எழுகிறாள். அவள் குரல் தாழ்ந்திருந்தாலும், என் செவிகளில் பளிச்சென்று விழுகிறது.
“இந்த மனுஷனுக்கு என்ன வேலை? நித்யகண்டம் பூரண ஆயுசா வருஷமாத் தள்ளிப்பிட்டு இன்னிக்கு வேலை தேடிக்கிற வேளையைப் பாரு!”
– அலைகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: செப்டம்பர் 1993, வானதி பதிப்பகம், சென்னை.