தெய்வம் பேசாது!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 30, 2021
பார்வையிட்டோர்: 4,577 
 

(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

சேகரன் ஒருபடியாகத் தன் மனைவி சுசீலாவை வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டான். ஆனால் அவளுக்கு சுகப்பிரசவமாக வேண்டுமானால் டாக்டர் எழுதிக் கொடுத்திருக்கும் ஊசி மருந்தை வாங்கிக் கொடுத்தே யாகவேண்டும். அதில் மூன்று குப்பிகள் இருக்குமென்றும் அவற்றின் விலை நூற்றிருபத்தைந்து ரூபாவாகும் என்றும் டாக்டர் சுருக்கமாகக் கூறிவிட்டார். ஆனால் பணம்? அவனை நம்பி அத்தனை பெரிய தொகையை யார் கொடுப்பார்கள். மனைவியை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கே அவன் தன் நண்பன் ராசுவிடம் இருந்து ரூபா பத்துப் பெற்றுக் கொண்டான். அவன் கேட்டவுடன் இல்லை என்று கூறாமல் உதவி செய்யக்கூடிய உத்தம நண்பன் அவன் ஒருவன் தான். அவனிடம் இன்று காலை கடன் வாங்கிய தொகையுடன் மட்டமாக ஐந்நூறு ரூபா ஆகி விட்டது. இனிமேலும் போய் அவனிடம் எப்படி கடன் வாங்க முடியும்? எந்த முகத்தைக் கொண்டு கேட்பது!

deivam-pic

கடந்த ஆறு மாதமாக அவன் படும்பாடு போதும் போது மென்றாகி விட்டது. ஏற்கனவே அவனுக்கு மூன்று குழந்தைகள். இது நான்காவது. கரு உற்பத்தியான நாளிலிருந்து அவர்களைப் பிடித்த கஷ்டம் ஒரு கொஞ்சமும் நீங்கியதாக இல்லை. அவன் மனைவிக்கு குழந்தை வயிற்றில் தங்கிய நாளிலிருந்து ஆரம்பித்த வருத்தம். இப்போது ஏழாவது மாதம். குழந்தை போனாலும் அவன் மனைவி உயிர் பிழைக்க வேண்டுமே! அவளுக்கு ஏதாவது நடந்தால் அவன் அதைத் தாங்கமாட்டான்! தாங்கவே மாட்டான்!!

வீட்டில் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும். ஆஸ்பத்திரிக்குச் சென்று மனைவியைப் பார்க்க வேண்டும். வேலைக்குப் போக வேண்டும். வெளி வேலைகள் பார்க்க பேண்டும். இவ்வளவும் அவன் ஒருவன் கையாற் தான் முடிய வேண்டும். இடையி டையே அவன் நண்பனும் மனைவியும் வந்து ஏதாவது செய்வார்கள். இத்தனைக்கும் அவன் ஆட்பேர் இல்லாதவன் அல்ல. அவனது நெருங்கிய உறவினர்கள் பலர் அந்த ஊரில் வாழ்ந்து கொண்டுதான் இருந்தார்கள். அது அவனது பிறந்த மண். அவனுடன் கூடப்பிறந்தவர்கள் ஓரிருவர் கார் பங்களாக்களுடன் வசதியாக வாழ்கின்றனர்.

ஆயினும் அவனுக்கும் அவர்களுக்கும் தொடர்பற்றுப் பல வருடங்களாய் விட்டன. அவர்கள் ‘பெரிய மனிதர்கள்’ என்ற பட்டியலின் கீழ் போலி கௌரவத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவன் சிறிய மனிதர்கள் மத்தியில் தன் சுய கௌரவத்துடன் வாழ்பவர், அவர்களிடம் சென்று யாசித்து உயிர் வாழ்வதை விட அவன் மனைவி மக்களுடன் சேர்ந்து இறக்கத் தயாராக இருந்தான்.

அவனுக்கு வாழ்க்கை ஒரு சோதனையாக அமைந்தது. இன்று நேற்றல்ல இளமைப் பருவத்திருந்தே கதை அது தான். அறியாத பருவத்திலேயே தாயை இழந்து சிற்றன்னையின் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டான். சிற்றன்னைக்கு ஐந்து குழந்தைகள் பிறந்த பின் அவன் நிலை இன்னும் சீர் கெட்டது. அவன் ஆறாம் வகுப்புப் படிக்கும் போது தந்தையை இழந்தான். சிற்றன்னையின் கொடுமையும் அதிகரித்து. ஒரு நேர உணவு கிடைப்பதே முயற்கொம்பாகியது. அதனால் மனமுடைந்த அவன் ஒருத்தரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஊரைவிடடே ஓடினான்.

திருகோணமலையிற் பிறந்த அவனுக்கு யாழ்ப்பாணக் குடாநாடு கை கொடுத்தது தெருவோரமாகயிருந்த ஒரு வீட்டுத் திண்ணையில் களைப்புடன் படுத்திருந்த அவனை அந்த வீட்டுக்காரர் எழுப்பி உள்ளே அழைத்துச் சென்று உணவளித்து அவனைப்பற்றி அறிந்து அவன் பரிதாப நிலைக்கிரங்கி அவனைத் தத்தெடுத்து வளர்த்த ஆளாக்கி விட்டார். அவர்களுடன் இருக்கும்வரை அவன் அவர்களுக்கு மிகவும் நன்றியுடையவனாக இருந்தான். அவனுக்கு அரசாங்கத்தில் ஒரு ‘கிளாக்’ உத்தியோகம் கிடைத்தது. அதன் பின் அவன் மணஞ்செய்து திருகோணமலைக்கே திரும்பவும் மாற்றங் கேட்டு வந்தான். அங்கேயே குடியும் குடித்தனமுமாகத் தங்கியும் விட்டான். தன் ஒன்றுவிட்ட சகோதரர்கள் பற்றி அறிந்து கொண்டான். தன் தந்தையின் சொத்து முழுவதும் அவர்களுக்கே உரித்தான செய்தி கேட்டு மனம் வருந்தினான். இருந்தும் அவர்களுக்கு குந்தகம் ஏற்படாத முறையில் ஒதுங்கி வாழ்ந்து கொண்டான்.

deivam-pic2

தனக்கும் ஒரு நல்ல காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்தான். அதற்காக அவன் இறைவனைப் பிரார்த்திக்காத நாட்களே கிடையாது. இறைவன் போல் அவன் வைத்திருத்த நம்பிக்கையைப் பார்த்து சில வேளைகளில் அவன் மனைவி கூடக் கேலி செய்வாள். அப்போது அவன் பொறுமையாகச் சிரித்துக்கொண்டு “நீ ஒரு நாள் அவன் கருணையைப் பார்க்கத்தான் போகிறாய் சுசீலா” என்று, சவால் விடுவான். “நீங்களும் உங்கள் கடவுளும்” என்று பரிகசித்து விட்டு அப்பாற் சென்று விடுவாள் அவள்.

இன்று இவற்றையெல்லாம் அலைசி ஆராய்ந்து பார்க்கும் போது சுசிலாவின் வார்த்தைகள் தீர்க்க தரிசனமாக அவனுக்குத் தோன்றுகின்றன.அதைத் தான அவனும் சிந்தித்துப் பார்க்கிறான். உண்மையிற் கடவுளிடம் அவன் கொண்டிருந்த நம்பிக்கைக்கு அப்படி அவர் அவனுக்கு எதைத் தான் அளவுக்கதிகமாகச் செய்து விட்டார். நாளாந்தம் அவன்படும் கஷ்டங்கள் அதிகமாகிக் கொண்டு இருகின்றனவே தவிரக் குறைந்தபாடாக இல்லை. அவன் வேண்டுவதைத் தருவதற்கு விருப்பமில்லாத கடவுள் அவன் வேண்டாதவற்றையெல்லாம் எதற்சுாகத் தரவேண்டும். கடவுளிடம் அவள் குழந்தை வரம் கேட்டானா? ஏற்கனவே அவனுக்குள்ள மூன்று குழந்தைகளையும் பராமரிப்பதே அவனுக்குப் பெரும்பாடாய் இருந்தது. இப்போது ஒன்று வேண்டும் என்று யார் கடவுளிடம் கேட்டார்கள், போதாததற்கு அவன் மனைவிக்கு ஒரே வருத்தம். சாப்பாட்டுக்கே அரோகராபோடும் நிலையில் அவன் வைத்தியச் செலவுக்கு யாரிடம் போவது?.

அவன் பலரைப் பார்த்திருக்கிறான். மனச்சாட்சியைக் கொன்று பிறர் பொருளைக் கொள்ளையடித்தும் அபகரித்தும் வாழ்க்கை நடத்துபவார்கள் நன்றாகத்தான் வாழ்கிறார்கள். அவனைப் பொறுத்தவரை மனச்சாட்சியையே அவன் தெய்வமாக வணங்கினான். பட்டினி கிடந்தாலும் பிறரை ஏமாற்றியோ சுரண்டியோ வாழ அவன் துணிந்தானில்லை. துணியவும் மாட்டான். ஆனால் அதனால் அவன் கண்ட பலன் நித்தி, வறுமையும் இல்லாமையுந்தான். தர்மம் தலகாக்கும் என்பார்கள். இதுவரை அவன் வாசல் தேடிப் பிச்சை என்று கேட்டு வந்தவர்களுக்கு அவன் இல்லையென்று கூறி அறியான். குழந்தைக்கு பாடசாலைக்குக் கொண்டு செல்லப் பென்சில் இல்லாவிட்டாலும் கூட இல்லாதோருக்கு அவன் இரண்டு சதம் கொடுக்க என்று பின் வாங்கியதில்லை. இப்போது அதன் தலை மட்டுமல்ல உயிரே போகிற நிலை, யார் அவனைக் காக்கப் போகிறார்கள்…?.

நேரம் போய்க் கொண்டேயிருந்தது. அவன் எப்படியாவது பணம் பெற்று மருந்து வாங்கியே ஆக வேண்டும். அவன் மனைவியின் உயிர் பிழைத்து விட வேண்டும். குழந்தையைப்பற்றி அவன் கவலைப்படவில்லை, ஆரமபத்திலேயே அதை ஒழிக்க அவர்கள் எடுத்த முயற்சிகள், மாத்திரைகள் எல்லாமே பயனற்றுப் போய் விட்டன. சீச்சயமாக அவன் தன் நண்பனிடம் செல்ல முடியாது. அவனுக்கு ஒரேயொரு வழிதான் புலப்பட்டது. அவனுடைய தலைமைக் கிளாக்’ கரிடம் ஒரு முறை சென்று கேட்டுப் பார்க்கலாம். இதுவரை அவரிடம் அவன் எதுவும் கேட்டதில்லை. ஆயினும் அவருக்குப் பல துறைகளில் அவள் சரீர உதவி செய்திருக்கிறான்.

அதன் பின் அவன் நடந்தான். தலைமைக் கிளாக்கரீன வீட்டுப் படியிற் கால்வைத்த பின்புதன் அங்கு ஏதோ விசேஷம் நடைபோவதை உணர்ந்தான். அவனுக்கு மறந்தே போய்விட்டது. அன்று அவருடைய ஒரே மகள் ஜெயந்தியின் ஐந்தாவது பிறந்ததின விழா. ஆமாம், அன்று அவர் ஆபீசுக்கு கூட வரவில்லை. வாசலில் நின்றபடியே அவன் சிந்திக்கிறான். குழந்தை, தெய்வம், குரு இவர்களிடம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்வதா? அதுவும் இன்று பிறந்ததின விழா விமரிசையாகக் கொண்டாடும் போது? அடுத்த நிமிடம் அவன் வந்த வழியே திரும்புகிறான்.

இடையில் பண்ணை முத்துக்குமாரு அவனை வழிமறிக்கறார். அவனிடம் உள்ள மாட்டை. இருநூறு ரூபாவுக்கு தரும்படி விலை பேசுகிறார், அவர் கேட்கும் தோரணையைப் பார்க்கும்போது இருநூறென்ன முன்னுறுக்கே தட்டி விடலாம் போல் அவனுக்குப் புலப்படுகிறது. அவன் விழிகளில் மகிழ்ச்சி ரேகை! கடைசியில் பொரிமாத் தோண்டியின் கதைதான். பண்ணையார் அவன் மௌனத்தைக் கண்டு இன்னும் ஐம்பது கூட வைத்துக் கேட்கிறார். அவனது யூகம் சரிதான். கடைசியில் அவர் முன்னூறுக்கே வந்து விட்டார். ஆனால் அவன் கூறிய பதில் அவரை நகரவைக்கிறது, ஆமாம்: அவனுக்கு வந்த சோதனைகளோடு வேதனையாய் இரண்டு வாரங்களுக்கு முன் காணாமற் போன கேப்பப் பசு இன்னும் கண்டு பிடித்த பாடில்லை. இதுவும் கடவுள் சோதனையா? “கடவுளுக்கு விளையாட வேறு மனிதர் கிடைக்கவில்லையாம். ஆதலால் உங்களோடு எப்போதும் விளையாடிக் கொள்கிறார்” சுசீலா இருந்தால் இப்படித்தான் பதில் கூறியிருப்பாள்.

அவன் எதிர்க் கடைக்குச் சென்றான். எப்போதும் காற்சட்டைப் பைக்குள் அவசியச் செலவுக்காக ஒதுக்கி வைத்திருக்கும் இரண்டு ரூபாவுக்கு சாக்கிளேட் வாங்கிக் கொண்டு நிமிர்ந்த நடையுடன் தலைமைக் கிளாக்கர் வீட்டுக்குள் நுழைகிருன். அங்கே அழகாக அலங்காரம் செய்யப்பட்ட குழந்தை தன்னளவு உயர்ந்த பொம்மை கேக் ஒன்றை வெட்டிப் பிறந்த தின விழாவை ஆரம்பிக்கிறது. என்லோரும் கை தட்டி மகிழ்கிறார்கள். அவன் வீட்டிலும் குழந்தைகளுக்குப் பிறந்த நாட்கள் வருவதுண்டு. சுமாரான கறிசோற்றுடன் கொண்டாடப்படும் விழாவை கடவுளுக்குக் கற்பூரம் ஏற்றி ஆரம்பித்து வைப்பான் அவன். “அந்த ஐம்பது சதத்திற்கு குழந்தைக்கு ஒரு ‘ஐஸ் கிறீம்’ வாங்கிக் கொடுத்தாலாவது மகிழ்வான்”. சுசீலா இப்படிக் கிண்டல் செய்வாள், “சுசி உன்னைப் போல் குழந்தைகளையும் நாஸ்திகர்கள் ஆக்கி விடாதே” என்று கூறிவைப்பான் அவன்.

இப்போது அவையெல்லாம் அவனுக்கு நினைவு வருகின்றன. கேக் வெட்டும் வைபவம் முடிந்து குழந்தைக்கு அன்பளிப்புகள் வழங்கப்படுகின்றன. மற்றவர்களது பரிசுகளுடன் தன்னுடையதையும் ஒப்பிடும் போது சேகரனுக்கு வெட்காக இருக்கிறது. ஆயினும் அவன் தான் கொண்டுவந்ததை மெதுவாகக் குழந்தையிடம் கொடுத்துவிடுகிறான். பக்கத்தில் நின்ற தலைமைக் கிளாக்கர் இராசையா அவனை அழைத்து அரவணைத்து, “உனக்கிருக்கும் கஷ்டத்துடன் இதென்ன வீண் செலவு…?” எனறு அங்கலாய்க்கிறார். அதுதான் தக்க சமயம் என்பதை உணர்ந்த சேகரன் தன் மனைவியின் கவலைக்கிடமான நிலையை எடுத்துக் கூறி தான் கேட்க நினைத்ததையும் கேட்டுவிடுகின்றான்.

ஆனால் அவர் தன்னிடம் ஒரு சதங் கூடக் கிடையாது என்று கையை விரித்து விடுகிறார். சேகரின் மனக் கோட்டை சுக்கு நூறாக நொறுங்கியது. ஆயினும் அவன் தன் மனக் கவலையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் விடை பெற்று வெளியேறுகிறான். கடன் வாங்க வந்து கையிருப்பைபும் இழந்த நிலையில் அவன் சோர்ந்த உள்ளத்தோடு வீடு திரும்புகிறான்.

வீட்டில் குழந்தைகளின் சோர்ந்த மூகத்தைப் பார்க்கவே அவனுக்கு வயிற்றைப் பற்றி எரிந்தது. “அப்பா! அம்பாவுக்கு மருந்து வாங்கிக் கொடுத்தீர்களா? இப்போது எப்படி யிருக்கிறது அப்பா?” அவனுடைய இரண்டாவது பெண் குழந்தை தான் கேட்டாள். அந்தக் குழந்தைகளுக்கு தாயின் மீது உள்ள அக்கறையைக் கண்டு அவனே பெருமிதப்படடான். இனிமேலும் தாமதிக்கக் கூடாது என்று ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாய் “இப்போது தான் பணம் கிடைத்ததம்மா, இனித்தான் சென்று வாங்கிக் கொடுக்கப் போகிறேன். நீ ஓடிப்போய் விளையாடு கண்ணே…” என்று குழந்தையை அனுப்பி விடுகிறான் அவன்.

அடுத்த நிமிடம் அவன் தன் பூஜையறை விளக்கை கையால் அணைத்துவிட்டு அதை எடுத்து நன்றாகத் துடைத்துக் கோணிப்பை ஒன்றுக்குள் போட்டு எடுத்துக் கொண்டு மிகவும் அவசரமாக வாயிற்படியைக் கடந்து தெருவில் இறங்கி நடந்தான். இனிமேல் நல்லதோ கெட்டதோ அவன் வீட்டில் குத்துவிளக்கு எரியமாட்டாது…… இது அவன் எடுத்துக் கொண்ட தீவிர முடிவு.

தெருவின் மூதற் சந்திக்குப் போயிருக்க மாட்டான் அவன் கண்கள் நிலை குற்றி நின்றன. ஆனால் அவன் கண்களையே நம்ப முடியவில்லை. ஆமாம்! அங்கே அவன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது அவனது காணாமற் போன பசு. அதன் பக்கத்தில் புத்தம் புதிய கன்று ஒன்று. அவனைக் கண்டதும் அது ‘அம்மா’ என்று அழைத்தது. அவன் மாட்டையும் கன்றையும் சாய்த்துக் கொண்டு வீட்டை அடைந்தான். அவன் நுழைவதற்கும் அவன் நண்பன் அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது.

“என்ன சேகர் மாடும்கன்றமாக” என்று நண்பன் இராசு கேட்டு முடிக்கவில்லை, “பண்ணையார் முன்னூறு ரூபாவுக்குக் கேட்கிறார் கொடுக்கப் போகிறேன் ராஜ்” என்றான் அவன்.

“இந்தப் பெரிய கேப்பை மாடு கன்றுடன் ஐந்நூறு ரூபா பெறுமே சேகர்? உனக்கு ஆட்சேபமில்லையானால் எனக்குத் தந்து விடு ஐந்நூறு ரூபா தந்து விடுகிறேன்.”

சேகர் நன்றியோடு அவனைப் பார்க்கிறான், “உனக்கு நான் ஏற்க னவே கடன்பட்ட பணம்…?”

சேகர் இழுக்கிறான்…!

“அதை இப்போது யார் கேட்டார்கள்? இந்தா ஐந்நூறு ரூபா. இதை எடுத்துப் போய் முதலில் உன் மனைவியைக் கவனி. மாட்டையும், நீயே கவனித்துக் கொள். நாளாந்தம் எனக்கொரு போத்தல் பால் மாத்திரம் தந்து விடு”.

கூறிவிட்டுப் போகும் நண்பன் இராசுவை நன்றிப் பெருக்கோடு பார்த்து நிற்கிறான் சேகர். அவனுக்குப் பேச முடியவில்லை. அவன் ஓடோடிச் சென்று முதல் வேலையாக குத்து விளக்கை ஏற்றித் தெய்வத்தை வழிபடுகிறான் எங்கோ இருந்து வந்த ஆலயமணியோசை அவனை ஆசீர்வதிக்கிறது. ஆனால் தெய்வம் என்றும் போல் அன்றும் பேசாது சிலையாகவே நிற்கிறது.

– அஞ்சலி மாத சஞ்சிகை – டிசம்பர் 1971

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *