தெய்வத்திற்கு மேல்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 6, 2024
பார்வையிட்டோர்: 4,962 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

“ஜோஸ்யரே, நான் பிழைப்பேனா? ஜாதகம் பார்த்தீர்களே” என்று படுத்த படுக்கையாக இருந்த மீனாக்ஷியின் தாய் ஜோஸ்யரைப் பார்த்துக் கேட்டாள். 

”அதுதான் இத்தனை நாழிகை உன் ஆம்படையானுக்கு எடுத்துச் சொல்லிண்டிருந்தேன். உனக்கும் சொல்லித் தைரிய மூட்டச் சொன் உள்ளே வந்தேன். ஆயுசுக்கு ஒண்ணும் பயமில்லே; கவலைப் படாதே. இன்னும் இரண்டு மாசந்தான் சனிதசையிலே சூரியனுடைய புக்தி படுத்தறது. இரண்டு பேரும் பரம வைரியோன்னோ? சங்கராந்தி ஆகவேண்டியதுதான். சூ ரிய புக்தி முடிந்து சந்திர புக்தி ஆரம்பமாகிறது; அப்பறம் ஒண்ணும் பண்ணாது. படிப்படியாக் குணந்தான். நான் சொல்றேன்னு பாரு”. 

“என்னமோ, உங்க வாயாலே சொல்லுங்கோ. பலிக்கட்டும்”.

“நானா சொல்றேன்? சாஸ்திரம்னா சொல்லறது?”

“அவர் ஜாதகத்தை, பையன் கிருஷ்ணமூர்த்தி ஜாதகத்தை ரெண்டையும் பார்த்தேளா? அதுலே ஏதாவது எனக்குப் போராதூன்னு இருந்தா?” 

“ரெண்டையுந்தான் பார்த்தேன். எல்லாத்திலேயும் படுத்தறத்துக்கு வேணுங்கறது இருக்கு. அதுக்கு மேலே ஒண்ணுமில்லே.” 

இப்படிச் சொல்லிக்கொண்டே ஜோஸ்யர் அங்கு இவர்கள் சம்பாஷணையை ஆவலாய்க் கவனித்துக்கொண்டிருந்த சிறு பெண் மீனாக்ஷியைப் பார்த்து, “இந்தாடி குட்டி, உள்ளே கேட்டுக் கொஞ்சம் மோர்த் தீர்த்தம் வாங்கிண்டு வா, நல்ல ஆம்படையான் வருவன்” என்றார் சிரித்துக் கொண்டு. 

“போடி, தாத்தாவுக்கு மோர் வாங்கிண்டு வா” என்று அவள் தாய் சொல்லிவிட்டு, “வாஸ்தவமாகவே ஜோஸ்யரே, குழந்தை ஜாதகத்தையும் பார்த்து, எப்படி வாழ்க்கைப்படுவள், என்னமாயிருப்பள் எல்லாம் சொல்லுங்களேன். இருந்து பார்க்கிறேனோ என்னமோ; காதாலேயாவது கேட்கிறேன்” என்றாள். 

‘இருந்து பார்க்கிறேனோ’ என்ற தாயின் வார்த்தை மீனாக்ஷியின் கண்களில் கலகலவென்று கண்ணீரை வரச் செய்துவிட்டது. அதை அவர்கள் பார்க்காமல் இருக்க வேண்டியே அவள் மோர் வாங்கிவர உள்ளே ஓடினாள். அப்பொழுது மீனாக்ஷிக்கு ஏழு அல்லது எட்டு வய சிற்கு மேல் இல்லை. இருந்தாலும் தாய் பத்து மாதமாகக் காயலாவாகக் கிடப்பது அவளை உள்ளூறக் கவலைப்படுத்தியது. பாதி சமயம் தன்னோடொத்த பெண்களுடன் விளையாட்டில்கூட அவள் மனம் செல்லவில்லை. 

திரும்பி அவள் மோருடன் வந்தபொழுது, ஓர் ஓலைச் சுவடியை வெகு கவனமாக மூக்குக் கண்ணாடி அணிந்து பார்த்துக்கொண்டிருந்தார் ஜோஸ்யர். அவர் சொன்னது முழுவதும் மீனாக்ஷிக்குத் தெரியாவிட்டா லும், தனாதிபதியும் லாபாதிபதியும் பரஸ்பர வீக்ஷண்யம், அம்மா! குழந்தைக்கு நல்ல தனலாபம் உண்டு” என்று சொல்லிக்கொண்டிருந்தது தெரிந்தது. 

ஜோஸ்யர் போனபிறகு மீனாக்ஷியைத் தன்னிடம் அணைத்துக் கொண்டு அவள் தாய், “நல்ல பணக்காரியா யிருப்பயாம்டி கண்ணே! நல்ல மனசாய்த் தான தருமம் செய்துண்டிரு; தெரியுமா?” என்றாள். பணக்காரி என்ற சொல், பணத்தின் பெருமையை அறியச் சக்தியற்ற அந்தச் சிறுமியைக்கூடச் சந்தோஷத்தால் தலைநிமிரச் செய்தது. அவர் கள் பேச்சைக் கேட்டுக்கொண்டே வந்த அவள் தமையன் கிருஷ்ண மூர்த்தி, “பணக்காரி என்கிறதுக்குள்ளே சந்தோஷத்தைப் பாரு. தலை கழுத்துலே நிக்கல்லே!” என்றான் கிண்டலாக. 

“போடா, குழந்தையை ஒன்னும் சொல்லாதே. உனக்குப் பத்து வயசு சின்னவள். உன்னை விட்டா அவளுக்கு யாரு? நீதான் அவளைப் பார்த்துக்கணும். நான் பிழைப்பேன்னு தோணல்லே” என்றாள் அவர்கள் தாய், வருத்தத்துடன். 

“என்னம்மா, ஜோஸ்யர் சொன்னதை வேறு கேட்டுவிட்டு மறுபடியும் இப்படிப் பேசறயே? சாவைப் பத்தியே நினைக்கப்படாதுன்னா, நீ அதுதான் சதா நினைவா இருக்கே” என்றான் கிருஷ்ணமூர்த்தி. ‘அம்மா இருந்தாலும் செத்துப் போவதையே நினைச்சுண்டு இருக்கா. அதுதான் தப்பு’ என்று மீனாக்ஷிக்கும் தோன்றிற்று. ‘நான் பணக்காரியாவேன்னு ஜோஸ்யர் சொன்னா அம்மா நம்பறா; அவரே அவள் பிழைப்பாள்னா நம்ப மாட்டேங்கறாளே, அது ஏன்?’ அவளுக்கு அது புரியவே இல்லை. அதை நினைத்தபொழுது வேதனை வேறு தாங்காது உண்டாயிற்று. 

கடைசியில் ஜோஸ்யர்கள், வைத்தியர்கள் எல்லாருக்கும் மேலாக அவள் தாய் நினைத்ததுதான் சரியாக இருந்தது. இரண்டு மாதம் கழித துச் சூரிய புக்தி முடிந்து சந்திர புக்தி ஆரம்பிக்கும் அன்று, அவள் கண்மூடியே விட்டாள். சிறுமி மீனாக்ஷியின் மனத்தில் மட்டும் அவள் தாய் அவளை அணைத்துக்கொண்டு அன்று சொன்ன சொல் மறக்காமல் பதிந்தது. அவள் பணக்காரியாவாள், அப்பொழுது தான தருமங்கள் செய்வாள் என்பதுதான் அது. 

அதற்கப்புறம் இப்பொழுது முப்பது வருஷங்கள் சென்றுவிட்டன. ‘மீனாக்ஷி’ என்ற அம்பாளின் பெயருக்கு இரண்டு பொருள்கள் கவிகள் சொல்லுகிறார்கள். மீன வடிவைப் போன்று அகன்று நீண்ட கண்கள் என்பது ஒன்று. மற்றதுதான் பின்னும் விசேஷமானது. மீன் குஞ்சு பொரிக்கும் முறையே தனி. தண்ணீரில் முட்டை இட்டுக்கொண்டே போய், போகும்போதே திரும்பிப் பார்த்துக்கொண்டே போகுமாம். அந்தப் பார்வை பட்டதுமே குஞ்சுகள் உயிர் பெற்றுவிடுமாம். ஸாக்ஷாத் அம்பிகையின் கடைக்கண் பார்வைக்கும் உயிர்களை உஜ்ஜீவிக்கும் சக்தி உண்டாதலால், மீனின் தன்மை பொருந்திய கண்கள் என்று பொருள் பட மீனாக்ஷி என்று பெயர் அமைந்தது என்பதாகச் சொல்லுகிறார்கள். நம் மீனாக்ஷியின் விழிகளும் நீண்டு அகன்றவையே. அதனால் உயிர்ப்பிக்கும் சக்தியொன்றும் அவைகளுக்கு ஏற்பட்டுவிடவில்லை. அதற்க்கு மாறாக அவளைச் சுற்றி அவள் அன்புக்குப் பாத்திரமானவர்களின் சாவைத்தான் அவை அதிகம் பார்த்தன. 

அவள் தாய் இறந்து நாலைந்து வருஷம் கழித்து அவள் கல்யாணம் நடந்த வருஷமே அவள் தந்தையும் இறந்து போனார். பிறகு அவள் கணவனுடன் வாழ்ந்ததெல்லாம் நாலைந்து வருஷங்களுக்குள்ளேதான். அதிலும் அவள் முழுவதும் சந்தோஷமாக இருந்தாளென்று சொல்வதற் கில்லை. கணவன் செலவாளியாக இருந்தான் என்பதற்காக அவன் தமையன் சொத்தைத் திருப்பிக் கொடுத்து அவனைத் தனியே அனுப்பி விட்டான். தன் பங்குச் சொத்தையும் சேர்த்து இழக்க அவன் விரும்ப வில்லை. 

கணவன் பட்டணத்தில் சொற்ப உத்தியோகத்தில் இருந்தான். குதிரைப் பந்தயம், சினிமா இவ்விதம் பல துறைகளில் அவன் பணம் போய்க்கொண் டிருந்தது. திடீரென்று ஒரு நாள் இரவு பலத்த காய லாவாகிப் பிதற்றலும் பிடுங்கலுமாக அவன் வீடு திரும்பினான். ஒரு வாரத்திற்கெல்லாம் அந்த ஜுரம் அவனைக் கொண்டே போயிற்று. பிறகு மீனாக்ஷி தமையன் ஆதரவில் வந்து சேர்ந்தாள். ”உன்னை விட் டால் அவளுக்கு யாருடா?” என்று அவள் தாய் அவளிடம் சொன்னது அப்படியே உண்மையாயிற்று. எங்கோ சேலம் ஜில்லாவில் அவள் கண வனுக்கு இருந்த வானம் பார்த்த சிறு பூமியிலிருந்து ஒரு காசும் அவ ளுக்கு வரவில்லை. ரொக்கம் பிரித்துக்கொண்டதை எல்லாந்தான் அவன் செலவழித்து விட்டானே. அவள் ஜாதகத்திலிருந்த தனயோகத் தின் பலன் அவ்வளவுதான். ‘அம்மா இருந்தால் இப்போது தன் நிலை மையைக் கண்டு என்ன நினைப்பாளோ? அவளுக்குப் பெண்ணினுடைய தனலாபத்தில் அவ்வளவு நம்பிக்கை இருந்ததே!’ என்று மீனாக்ஷி நினைத்தாள். 

அண்ணன் வீட்டில் அவளுக்கு ஒரு குறைவும் இல்லை. அவள்தான் வீட்டிற்கு எஜமானி. அவள் மனம் வருந்தக்கூடாதென்று எதிலும் அவள் இட்டது சட்டமாக அவன் வீட்டில் வைத்திருந்தான். மதனிக் கும் அடிக்கடி பிரசவித்து உடம்பு இருந்த துர்ப்பலத்தில் மீனாக்ஷி குடும்ப யாரத்தை முழுவதும் வகிப்பது சௌகரியமாகவே இருந்தது. அண்ணா குடும்பமும் ஐந்தாறு குழந்தைகளுடன் விருத்தியாகி இருந்தது. அவன் சம்சாரி என்ற பட்டம் பெற்று வரவு செலவுக் கணக்குப் பார்க்கும் நிலை மையில் இருந்தான். பட்டணத்தில் இருக்கும் பெரிய பிள்ளைக்கு மாதம் பிறந்தால் காலேஜுக்கும் ஹாஸ்டலுக்குமாகப் பணம் அனுப்பவேண்டி யிருந்தது. குடித்தனக்காரர்கள் மாதமாதம் சுளை சுளையாக ரூபாய்க்கு எங்கே போவார்கள்! பெண்ணொன்று கல்யாணத்திற்கு வயசு நிரம்பி நின்றது. இன்னும் எவ்வளவோ சில்லறைச் செலவு. 

அவன் சிரமப்படுவது மீனாக்ஷிக்குத் தெரிந்துதான் இருந்தது. கடன் வாங்கியும் சமாளித்துக்கொண் டிருந்தான். ஒரு பகுதி நிலத்தை விற்க அவன் அவர்கள் அம்மாஞ்சியுடன் யோசனை செய்துகொண்டிருந்தது சொல்லாவிட்டாலும் இவளுக்குத் தெரியவந்தது. அவர்கள் குடியானவன் குப்பன் ஒரு நாள் மீனாக்ஷியிடம் வந்து முறையிட்டுக் கொண்டான். ‘அம்மா, எசமான் நிலத்தை விக்கப் போறாங்களாம். நீங்கதான் கூடா தூன்னு சொல்லித் தடுக்கணும்” என்றான். 

மீனாக்ஷிக்குக் கேட்கத் தூக்கிவாரிப் போட்டது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, ‘பணமுடைக்குக் கொஞ்சத்தை வித்தா என்னடா மோசம் போச்சு? கடன் வாங்குவதைவிட அது மேலல்லவா?” என்று சொல்லிப் பார்த்தாள். குப்பன் ஒப்புக்கொள்ளவில்லை. 

குப்பனுக்குத்தான் அவர்கள் குடும்பத்தினிடம் எவ்வளவு அபி மானம்! அவர்கள் தந்தை நாளிலிருந்து அவன் அவர்களுக்காகப் பாடு படுகிறான். நமது கையை விட்டு நிலம் போயிட்டா அப்புறம் என்னா இருக்கு? கெளரவமே போயிடுமே. கூடவே கூடாது” என்றான் குப்பன். 

“எப்படியாவது அண்ணாவுக்குச் சொல்லுங்க. நான் சொன்னத்துக்கு அவரு கேக்கல்லே. நீங்க சொன்னாக் கேப்பாருன்னுட்டுத்தான் உங்களிடம் ஓடியாந்தேன்” என்றான். 

அதைப்பற்றி மீனாக்ஷி அண்ணாவைக் கேட்டாள். “குப்பன் கூடாதுன்னு அடித்துக்கொள்கிறானே” என்று சொல்லிப் பார்த்தாள். “கடன் ஏறி, நிலம் முழுவதும் போவது தேவலையாமா?” என்றுதான் அவள் தமையன் பதில் சொன்னான். அதற்குமேல் அவள் என்ன செய்வாள்? சமைத்துப்போட்டுச் செட்டாய்க் குடித்தனம் செய்யும் ஒத்தாசைதான் அவள் செய்யக்கூடியது. வேறென்ன அவளால் முடியும்? சண்டையினால் ஏற்பட்டிருக்கும் பஞ்சம் கிராமத்தைக்கூடப் பீடித்திருக்கிறது. மலிந்து கிடக்கும் கறிகாய், நெய், பால், தயிர் எல்லாங்கூட விலை ஏறிக் கிராக்கி யாகிவிட்டது. என்ன செய்வது?’ என்று மீனாக்ஷி நினைத்தாள். 

இப்படி இருக்கும்போதுதான் ஒரு நாள் கிருஷ்ணமூர்த்தி கையில் ஒரு கடிதத்தோடு மீனாக்ஷியிடம் வந்தான். “மீனாக்ஷி, இதற்கு என்ன சொல்கிறாய்? உன் நிலத்தை யாரோ விலைக்குக் கேட்கிறார்களாம். ரூபாய் பதினாயிரம் தருகிறார்களாம்” என்றான். 

பதினாயிரமா! அவள் நிலத்திற்கா! அதென்ன அதிசயம்? அவள் காதுகள் சரியாகக் கேட்கின்றனவா? அவளுக்கு நம்பிக்கையே வர வில்லை

“அதிலிருந்து காலணா வரவில்லையே, அண்ணா. அதற்கா அவ்வளவு தொகை கொடுக்கிறேன் என்கிறார்கள்?” என்றாள் அதிசயத்துடன். 

“பர்மா போனதில் யாரோ செட்டி பணத்தோடு வந்திருக்கிறான். பாங்கிகளை நம்ப மனமில்லை. உங்கள் ஊரையே வாங்குகிறான் போல் இருக்கிறது. நமக்கென்ன? நல்லதாயிற்று. ந்தோஷமாக விற்றுவிடு வோமே” என்றான் அவள் தமையன். 

“பணம் வேண்டாம் என்பாரும் உண்டா? அதுக்குச் சொல்லல்லே அண்ணா பாவம்! அதை வாங்குகிறவனுக்கு நஷ்டந்தானேன்னு பார்த்தேன்” என்றாள். 

இளமையிலேயே வாழ்க்கை இன்பத்தைத் துறந்த அவளுக்குப் புரா ணக் கதைகளை வாசிப்பதும் நீதி சாஸ்திரங்களைப் பயில்வதும் பொழுது போக்காக இருந்தன. அந்தப் போக்கிலே சென்ற உள்ளத்தில் பாவ புண் ணியம், நியாய அநியாயம்,பிறரிடம் கருணை, தெய்வ பக்தி ஆகியவை குடி புகுந்து நிற்பது இயல்புதானே? 

“அவன் கேவலம் உழுது பயிரிட அதை வாங்குவதாகத் தோன்றவில்லை.  அங்கு அவர்கள் ஏதோ தொழிற்சாலை ஏற்படுத்துவதாகக் கேள்வி. எதுவாய் இருந்தால் நமக்கென்ன? சரியென்று எழுதி ஏற்பாடு செய்யச் சொல்லிவிடுகிறேன்” என்றான் அவள் தமையன். 

மீனாக்ஷி ஒப்புக்கொள்ளத் தடை என்ன இருக்கிறது?’பணம் வந்தால் அண்ணாவுக்காவது உதவலாம்’ என்று நினைத்தாள். விற்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் நடந்து கைக்குப் பணமும் வந்து சேர்ந்தது. ‘ஜோஸ்யமும் ஒருவாறு பலிக்கத்தான் பலித்திருக்கிறது!’ என்று மீனாக்ஷி எண்ணினாள். 

இதற்குள் ஊரெல்லாம் இது விஷயம் பரவி, ஏதோ லாட்டரி விழுந்த மாதிரித்தான் அமர்க்களப்பட்டது. எல்லாரும் வித விதமாய் அவளைச் சந்தோஷம் விசாரித்தார்கள். அடுத்த தெருவில் இருந்த அவள் அம்மாஞ்சி,பெரிய பணக்காரியாய்ப் போயிட்டே. இனிமே மீனாக்ஷி அம்மாள் என்றுதான் சொல்லவேணும்! மீனாக்ஷி என்று ஏக வசனத்தில் என்னைப்போன்ற பந்துகூடச் சொல்லப்படாது; இல்லையா?” என்றெல் லாம் வேடிக்கை செய்தான். மீனாக்ஷிக்குப் பணம் வந்ததில் சந்தோஷப் படுபவர்களில் முக்கியமாக அவன் ஒருவன். ஊரிலேயே எல்லோரும், ‘லக்ஷக்கணக்கில் கிடைத்துவிட்டதா என்ன? என்று மீனாக்ஷிக்கே தோன் றும்படி பேசினார்கள். 

அவ்வூர்க் கோவில் தர்மகர்த்தா சுப்பையர் காதிலும் இது விஷயம் விழுந்தது. அவர் வயசு சென்றவர். மீனாக்ஷியைக் குழந்தை முதல் அறிந்தவர். இப்பொழுது அவ்வூரில் இடிந்து கிடந்த கோவிலைப் பல பேர் பண உதவியைக் கொண்டு புதுப்பிக்கும் வேலையில் ஈடுபட்டிருந் தார். புதுப்பித்த பெருமை முழுவதும் தம்மையே சேர வேண்டு மென்பது அவர் விருப்பம். அதற்கு ஒரு தடங்கல் இருந்தது. இன்னும் கோவில் கர்ப்பக்கிருகத்திற்கு விமானம் கட்டியாக வேண்டும். அதற்கு வேண்டிய பொருள் அனைத்தும் அவருக்குக் கிடைப்பதாக இல்லை. இப் பொழுது மீனாக்ஷிக்குப் பணம் கிடைத்திருக்கும் செய்தி தெரியவுமே, எப்படியாவது உபதேசம் செய்து அவள் மனத்தைத் தர்ம கைங்கரியத். தில் திருப்ப அவளைத் தேடி அவர் வெகு வேகமாக வந்தார். 

அம்மா, இந்த அதிசயத்தைப் பாரு. சுவாமி காரியம் முடிவதற். கும் கிட்டத்தட்டப்பதினாயிரம் ரூபாய்தான் வேண்டியிருக்கிறது. உன் கைக்கும் அதே தொகை வந்திருக்கிறது. என்றென்றைக்கும் உன் பெயர் நிலைத்து விளங்கவேதான் இந்தமாதிரி நேர்ந்திருக்கிறது. அதிலும் சுவாமி த லைக்குமேல் இருக்கும் விமானத்துக்கு உன் பணம் உதவப் போகிறதென்றால் அந்தப் புண்ணியமும் பேரும் யாருக்குக் கிட்டும்? நீ எத்தனை ஜன்மமாகத் தவம் செய்தாயோ, இந்த நல்ல சந்தர்ப்பம் நேர்ந் திருக்கிறது. உங்கள் அம்மாவுக்குக் கோவில் குளத்தில் இருந்த பக்தி தான் இதற்குக் காரணம்” என்றார். 

பொதுக் காரியங்களுக்குச் சந்தா சேர்ப்பதையே தொழிலாகக் கொண்ட தர்ம தூதர்களுக்கும், இன்ஷ்யூரன்ஸ் ஏஜண்டுகளுக்கும் பேசச் சொல்லித் தரவேண்டுமா என்ன? கல்லையும் கரைக்கும் அதிசய சாமர்த்தி யம் அவர்களிடமுள்ள மூலதனம். 

தர்மகர்த்தாவின் பேச்சைக் கேட்கக் கேட்க மீனாக்ஷிக்கு மெய் சிலிர்த்தது. சுவாமியே தன்னிடம் யாசகத்திற்கு வந்ததுபோல் இருந். தது. அவள்- சிறு பிராயம் முதல் ஈசுவர பக்தி மணம் வீசும் இடத்தில் இருந்தவள். அவள் வாழ்க்கையும் அதை ஒட்டியே அமைந்துவிட்டது. ஏதோ அண்ணா குடும்பத்திற்கு உழைத்தது போக மீதி நேரத்தைப் பகவந் நாம ஸ்மரணையில்தான் இதுவரையும் அவள் கழித்து வந்திருக்கிறாள். அதனால்தான் தன்க்கு இந்தப் பாக்கியம் இப்பொழுது கிட்டுகிறதோ என்று அவளுக்குத் தோன்றிற்று. 

கோவில் கட்டி முடிவதற்கு வேண்டிய அதே தொகை அவளுக்குக் கிடைத்திருக்கிறது. அவ்விதம் நேர்ந்திருப்பது அவள் கோவிலுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே போலும்! ஜோஸ்யப்படி அவள் பணக்காரியாகிவிட்டாள். அம்மாவின் விருப்பப்படி அவள் தருமம் செய்ய வேண்டும். அதற்கு இதை விட்டால் வேறு நல்ல சந்தர்ப்பம் அவளுக்கு எங்கே கிடைக்கப் போகிறது? அவள் வாழ்வு முழுவதற்கும் ஏழு ஜன்மத்திற்கும் இது ஒன்றே போதுமே; வேறு என்ன வேண்டும்? அண்ணாவுக்கு வேண்டுமானால் உபகாரம் பண்ணலாம். அது சுவாமிக்குச் செய்வதுபோல் ஆகுமா? ஒரு வேளை அண்ணா தனக்குப் பணமுடையாக இருக்கும்பொழுது வேறு ஏதோ செய்கிறாளே என்று நினைப்பானோ? அவன் இவ்வளவு நாளும் அவளை வைத்து ரட்சித்திருக்கிறான். அதற்கு ஒருவாறாகப் பிரதி செய்ய அவள் கடமைப்பட்டிருக்கிறாள். ஆனால் அவன் குடும்பத்திற்குத்தானே இவ்வளவு நாளும் அவள் சரீரத்தால் உழைத் திருக்கிறாள்? இன்னும் உழைக்கிறாள். அது போதாதா?-இவ்விதம் இரண்டு விதமாகவும் அவள் மனம் நினைத்தது. 

அண்ணாவிடம் அவள் தன் எண்ணத்தைச் சொன்னபொழுது, அவள் பயந்ததுபோல அவன் தப்பாக நினைக்கவோ தடுத்துச் சொல்லவோ இல்லை. ‘கைக்குப் பணம் வந்த வேகத்தில் அதை விட்டுப் பிரிய அவ ளுக்கு எப்படி மனசு வருகிறது?’ என்றே அதிசயித்தான். தனக்குக் கொடுக்கக்கூடாதா என்று அவன் சிறிதும் நினைக்கவில்லை. இவ்வளவு நாளும் அவள் ஒத்தாசையை எதிர்பார்த்து வழக்கப்படாத அவன் மனசு இப்பொழுது மட்டும் எதற்காக மாற வேண்டும்? ஏதோ அவள் போகிற வழிக்குப் பேரும் புண்ணியமும் சம்பாதித்துக்கொள்வதில் அவனுக்கு வெகு திருப்தி. ‘இவ்வுலகில் அவளுக்கு வேறு கிடைக்கக்கூடியது என்ன? நாலு பேர் புகழக் கேட்டாவது அவள் மனசு சந்தோஷப்படட்டுமே’ என்று நினைத்தான். அதை அப்படியே மனசை விட்டு மீனாக்ஷியிடம் சொல்லவும் சொன்னான். 

அண்ணா மனசு தெரிந்தபோது அவளுக்கு நிம்மதி ஏற்பட்டது. தான் சிரமப்படும்பொழுது தனக்கு உதவாமல் ஏதோ புகழை விரும்பிச் சுயநல மாகக் காரியம் செய்வதாகவே அவன் கருதவில்லை. அதற்குமேல் அவள் வேண்டுவது என்ன! கோவில் கட்டி முடிந்து கும்பாபிஷேகம் நடப்பது போலவும், சுற்றுவட்ட ஊர்களிலிருந்து வந்து கூடிய ஜனங்கள் அவள் தான் கோவில் பூர்த்தியாகக் காரணமென்று தெரிந்து அவளைப் பிரமாத மாகக் கொண்டாடி அவளை நேரில் பார்க்க அவள் வீட்டு வாசலுக்கே வந்துவிட்டது போலவும், என்ன என்னவோ கற்பனையில் ஆழ்ந்து விட்டாள். சுவாமி தலைக்கு நிழல் அவளால்தான் ஏற்படப் போகிறது. அவள் `அண்ணா குடும்பத்துக்கு ஒரு குறையும் வரும்படி சுவாமி விட மாட்டார் என்று நிச்சயித்தாள். 

அவளுக்கு இருந்த சந்தோஷத்தில், “ஏண்டா, சாமிக்குச் செஞ்சா புண்ணியந்தானே? அவர் பதிலுக்கு நன்னாப் பார்த்துப்பாரோன்னோ?” என்று அண்ணாவின் நாலு வயசுள்ள கடைசிப் பையனிடம் சொல்லிக் கொஞ்சுவாள். அன்று இரவு அவள் இரவு அவள் தூங்கும்பொழுதுகூட இவ்வளவு நாளும் வராத அவள் தாய் கனவில் வந்து சந்தோஷத்தோடு அவளைப் .பார்த்துப் புன்முறுவல் பூப்பதுபோல் இருந்தது அவளுக்கு. முப்பது வருஷங்களுக்கு முன் சிறுமியான அவளிடம் அவள் தாய் விரும்பிச் சொன்னதை இப்பொழுது அவள் அப்படியே நடத்தப் போகும்போது தாயின் ஆத்மா களிப்புறாமல் என்ன செய்யும்? 

மறு நாள் அம்மாஞ்சி வந்தபொழுது அவனிடத்திலும் தன் எண்ணத்தை அவள் தெரிவித்தாள். “உன் தர்ம சிந்தை ரொம்பவும் உயர்வானது. வெகு நல்ல காரியந்தான். இருந்தாலும், ‘முழுப்பணத்தை யும் கொடுத்துவிட வேண்டுமா?’ என்றுதான் யோசிக்கிறேன்” என்றான். 

“கோவில் பூர்த்தியாகக் கணக்காக அந்தத் தொகைதானே வேண்டியிருக்காம்?” என்றாள் மீனாக்ஷி. 

“கணக்கெல்லாம் சுப்பையர் சொல்லுகிறதுதானே? உண்மையை யார் கண்டது? பாதி சாமிக்கு, பாதி அவர் குடும்பத்துக்கு!” என்றான் அம்மாஞ்சி. 

“அதென்னமா நாம் சொல்கிறது? நல்ல காரியம் செய்கிறவர்களை இவ்விதம் தூஷிப்பது கெட்ட வழக்கம்” என்று மீனாக்ஷி அம்மாஞ்சியைக் கடிந்துகொண்டாள். 

“நான் காரணம் இல்லாமலா சொல்லுகிறேன்? ஊருக்கெல்லாம் தெரிந்த ரகசியந்தான். உனக்குத்தான் தெரியாது. இந்த அபவாதத்தி னால்தான் பணங்கூட முன்போல இப்பொழுது அவருக்கு வசூலாகமாட் டேன் என்கிறது. அவர் குடும்பம் இருந்த வறுமை நிலை நாமெல்லாம் அறியாததா? இப்பொழுது இந்தக் கோவில் வேலை ஆரம்பித்த பிறகு அவர் வீட்டில் லக்ஷ்மி தாண்டவமாடுகிறாளே. வீட்டு ஸ்திரீகள் பொன்னும் புடைவையுமாக ஜமாய்க்கிறார்கள். தேன் எடுப்பவன் புறங்கையை நக்காமல் இருப்பானா? பணத்தில் புழங்கும் பொழுது வீட்டிற்கும் கொஞ்சம் எடுத்துக்கொள்வது சகஜந்தானே? யாருக்காவது கணக்கு ஒப்பிக்க வேண்டுமா; அதில்லை பாரு?” 

இப்படி அவன் சொன்ன பொழுது, சுப்பையரின் பேத்தியைச் சர்வாபரண பூஷிதையாகச் சரிகைச் சேலையும் அரையுமாக, சுவாமி சந்நிதியில் அடிக்கடி பார்ப்பது அவள் நினைவிற்கு வந்தது. அடுத்தாற் போல் அதே வயசுடைய  தமையன் மகளுக்கு அதில் கால்வாசி நகைகளோ புடைவைகளோ இல்லையே என்று நினைக்கவும், அம்மாஞ்சி சொல்வது சரியாக இருக்குமோ என்று அவளுக்குச் சந்தேகம் உதித்தது. சிரமப்படும் அண்ணா குடும்பத்திற்குக் கொடுக்காமல், பிறர் பணத்தில் சௌகரியமாக வாழும் மற்றொரு குடும்பத்திற்கு இன்னும் பணம் உதவுவதாக முடியுமோ அவள் செய்யப் போகிற தர்ம காரியம்? வெகு அழகு! அவள் மூளை குழம்பியது; ஒன்றும் சொல்லத் தோன்றாமல் தயங்கினாள். 

அந்தச் சமயத்தில், “அத்தை, உனக்குக் கடுதாசு” என்று சொல்லி அவள் மருமகள் ஒரு கடிதத்தை அவளிடம் கொடுத்தாள். “யாரு எனக்கு ஒரு எழுதறவா?” என்று சொல்லிக்கொண்டே அதைப் பிரித்துக் கீழே கையெழுத்தைப் பார்க்கவும், “எங்க மச்சினர்” என்று அதிசயத்தோடு சொன்னாள். 

அவள் முழுவதும் படிக்கும் மட்டும் பேசாமல் இருந்த அம்மாஞ்சி பிறகு, “என்ன எழுதியிருக்கிறான்?” என்று கேட்டான். 

“ஒன்றும் இல்லை. நிலம் விற்றது தெரிந்திருக்கிறது. நல்ல விலைக்குப் போனதற்குச் சந்தோஷம் விசாரித்திருக்கிறார்” என்றாள். 

“போகிறது, எங்கே அதில் பங்குக்கு வந்துவிட்டானோ என்று பார்த்தேன்” என்றான் அம்மாஞ்சி. 

“இத்தனை காலம் திரும்பிப் பாராமல் இருந்துவிட்டு அப்படிக்கூட ஒருத்தர் வருவாரா?” என்றாள் மீனாக்ஷி. 

“ஏன் மாட்டான்? அன்று அவன் தம்பியின் உயிர் போய்க்கொண்டிருந்தபோது அவன் பேரில் வந்த போலீஸ் வாரண்டைக் கண்டு, எங்கே தன்னை என்ன பாதித்துவிடுமோ என்று விலகியவன் தானே அவன்?” என்றான் ஆத்திரத்துடன். 

“போலீஸா? வாரண்டா? அது என்ன?” என்று கேட்டாள் மீனாக்ஷி. பிறகுதான் இவ்வளவு நாளும் அவளுக்குத் தெரியக்கூடாதென்று அவள் தமையன் வைத்திருந்த ஒரு ரகசியத்தை ஆத்திரத்தில் தான் நினைவில்லா மல் சொல்லிவிட்டது அவனுக்குத் தெரிந்தது. இனி விளக்கிச் சொல்லா விட்டால் மீனாக்ஷி கேட்பாளா? இருபது வருஷத்திற்கு முந்தி நடந்து மறந்துபோன விஷயத்தை இப்பொழுது சொல்லும்படி ஆயிற்று. 

அவள் கணவன் சினிமா நட்சத்திரம்’ ஒருத்தியிடம் மோகங் கொண்டு அவள். இருப்பிடம் தேடிப் போனான். அங்கு அதுபோலவே வந்திருந்த மற்றோர் ஆளோடு கலகம் மூண்டு சண்டைபோட நேர்ந்தது. அதனால்தான் அன்று அவன் காய்ச்சலோடு ஜன்னி பிறந்து வீடு வந்தான். அந்த ஆள் இவன் தன்னை அடித்துக் காயப்படுத்திவிட்டதாகக் ‘கேஸ்’ போட்டுவிட்டான். இவன் வீட்டில் நினைவில்லாமல் கிடக்கிறான். அந்தச் சமயத்தில் இவன் பேரில் ‘வாரண்ட்’ வந்து நிற்கிறது. பிறகு என்ன? கிருஷ்ணமூர்த்தி நிலைமையைச் சமாளித்துப் பணம் கொடுத்துச் சமாதானம் செய்தான். 

“அப்பொழுது நானும் கூட இருந்தேன். அதில் சம்பந்தம் வைத் துக்கொள்ளக் கூடாதென்று இந்த மனிதன் தூர விலகியே இருந்தான். அவ்வளவு நல்ல மனசு அவனுடையது” என்றான் அம்மாஞ்சி. 

“எனக்கு ஏன் இவ்வளவு நாளும் இத்தனை விவரமும் தெரியவில்லை?” என்று கேட்டாள் மீனாக்ஷி. 

“உனக்குத் தெரிந்தால், அவன் அகால மரணத்தால் ஏற்படும் வருத்தத்திற்கு மேலாக அவன் கெட்ட நடத்தைக்கு அவமானம் தாங் காது ‘உன் இதயமே வெடித்துவிடுமென்று பயந்து அவன் ரகசியமாக எல்லாம் செய்தான். பின்னாடியும் ரகசியமாகவே வைத்திருந்தான். நான் இன்று அசட்டுத்தனமாய் வெளியிட்டுவிட்டேன். இருபது வருஷம் கழித்து இதற்காக நீ வருந்த மாட்டாயென்று நம்புகிறேன். வருந்தவும் கூடாது” என்றான். 

சென்று போனதை நினைத்து அவள் மனசு வருந்தவில்லை. அண்ணா. வின் அன்பை நினைத்துத்தான் உருகிவிட்டது. அவன் அந்தச் சமயத். தில் செய்த உபகாரம் பெரிதல்ல; கணவனின் நடத்தை அவள் இருத. யத்தைப் பிளந்து மீளா வருத்தத்தில் ஆழ்த்திவிடும் என்பதற்காக. அவன் ரகசியத்தைக் காப்பாற்றியதை நினைக்க நினைக்க நன்றி மேலிட்டு உணர்ச்சி பொங்கியது. 

அவள் இந்தக் கோவிலைக் கட்டி முடிக்கப் பணம் உதவ நினைத்தாள்.. அவன் ஒரு கோயில் இடியாமல் காப்பாற்றினான். வெளிக் கோயிலை யாரும் பண உதவியால் கட்ட முடியும். மனக் கோயிலையோ? இடிந்துபோனால், அதைச் சரிபண்ணுவது சாத்தியமா? இப் பொழுது அவள் கணவன் விஷயம், அவளுக்குப் பிரமாதமாகப் வில்லை. புதிதாய் அப்பொழுது அந்த இளவயசில் கேட்டிருந்தால் அவளால் தாங்கக் கூடியதா? தெய்வமே அவள் தமையன் உருவில் தோன்றி அவளைப் பொறுக்க முடியாத மனக் கஷ்டத்தினின்றும் அப் பொழுது காப்பாற்றி யிருக்கிறது. கோவில் தெய்வம் இதைவிட என்ன செய்துவிட முடியும்? 

இருபது வருஷத்தில் ஒரு நாள்கூட ஒரு சந்தர்ப்பத்தில் அவன் அதைப்பற்றி ஒரு வார்த்தை சொன்னதில்லையே? அவனே மறந்து’ போயிருக்கிறான், நிச்சயம்! அவள் அதற்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறாள்? அவனுக்கு அவசியம் ஏற்பட்டிருக்கிறபொழுது அவனுக்கு இல்லாமல் தெய்வத்திற்கு என்று நினைத்து வேறொரு குடும்பத்திற்குப் பணம் கொடுப்பதையா அவள் செய்வது? தெய்வமேயன்றோ அதற்குக் கோபித்துக்கொள்ளும்! கோவிலுக்கு ஏதோ சிறு தொகை கொடுத்து விட்டு, மீதத்தை அண்ணா காலடியில் அவள் சமர்ப்பிப்பாள். அவளுக் குத் தெய்வம் அவன்தான். 

அதை அம்மாஞ்சியிடம் சொன்னபோது அவன், “உன் இஷ்டம். ஆனால் பழைய சமாசாரத்தை நான் வெளியிட்டதாகக் கிருஷ்ணமூர்த்தியிடம் சொல்லாதே. அவன் என்னிடம் அப்பொழுது சத்தியம் வாங் கிக்கொண் டிருக்கிறான். ஏதோ ஆத்திரத்தில் வாய் தவறிவிட்டது” என்று சொல்லிச் சென்றான். 

அவன் வாய் தவறினதே நன்மை என்று மீனாக்ஷி நினைத்தாள். இல்லாவிட்டால் பெரும் தவறன்றோ அவள் செய்ய இருந்தாள்? அதற் குக் கடவுள்கூட அவளை மன்னித்திருக்க மாட்டார். நன்றி மறப்பது அவர் விரும்பக் கூடியதல்ல. பணத்திற்குத் தமையன்தான் உரியவன். 

இவ்விதம் தீர்மானித்த பொழுது அவள் பணத்தோடு கூடவே தனக்கு வரவிருந்த கீர்த்தியையும் தியாகம் செய்யத் தயாராக இருந் தாள். அவளுக்கே அது தியாகமென்று தெரியாது. ஒரு புறம் அன்பே உருக்கொண்ட தமையன்; இன்னொரு புறம் எல்லாம் வல்ல கடவுள் என்றல்லவா நிலைமை ஏற்பட்டிருக்கிறது? தமையனுக்குச் செய்வதில் கடமை இருக்கலாம்; புகழ் இல்லை. கடவுளுக்கு இருக்க நிழல் அவ ளால் என்றாலோ, அதில் அவளுக்குக் கிட்டும் புண்ணியம் அளவிடக் கூடியதா? உலகில் ஏற்படப்போகும் கீர்த்திக்குத்தான் ஓர் எல்லை உண்டா? 

ஆனால் என்ன? மெல்ல எண்ணிப் பார்த்தாள். இருதயம். புண்பட்டுத் துடிதுடிக்காமல் ஒரு சமயம் தமையனை எண்ணியபோது, “ஆம், அவன் தெய்வத்திற்குமேல்” என்ற முடிவுக்கு வந்தாள். 

– ஜனவரி, 1944.

– கலைமகள் கதம்பம் (1932-1957), வெள்ளி விழா வெளியீடு, முதற் பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

1 thought on “தெய்வத்திற்கு மேல்

  1. Ki.saraswati Amma is marvelous writer.Her Nobel “Kandrin kural:published in vikatan. is an excellent one This short story is a lovable work.zThe authors sincerity without any pretention in writing is admirable

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *