தூரப் போகும் நாரைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 8,540 
 
 

விழிப்படலத்தில் விழுந்தவை மங்கிய காட்சிகள் தான். ஆனாலும் அவற்றையெல்லாம் தாண்டிக் கொண்டு நெல் வயல்கள் பாரம் தாங்காமல் சாய்ந்து கொண்டிருப்பது பார்வதி ஆச்சியின் மனக் கண்ணில் தெரிகிறது. அறுகு வெளியின் நினைப்பு இந்த உயிர் போக முன்பு எப்படிப் போகும்? வேதனைத் திரைகள் படிந்து சுருங்கிப் போன முகத்தில் பேரக் குழந்தைகளைத் தேடும் ஆவல் போல ஒன்று, அந்த மெல்லிய இளம் பயிர்களையும் தேடும் சோகத்தை நெஞ்சில் இழையோட வைத்தது.

“அம்மா……… கொஞ்சம் பால் குடியுங்கோ அம்மா…….” மகளின் குரல், தடிமன்காரக் குரல் போல அடைசலுற்றுக் காதில் விழுந்தது. கூடவே மெல்ல நிமிர்த்தி பேணியைச் சாய்த்துப் பால் புகட்டும் மகளின் அன்பு….. அதற்கு அப்பாலும் மிகுந்த அன்பை அந்தக் கிராமத்திலிருந்து அவளைத் தேட வைக்கிறது.

அறுகுவெளி…..வயல்கள் சூழ்ந்த அந்த இனிப்பான ஊர் ஏன் இவர்களைத் தள்ளி வைத்தது? ஆச்சியும், அப்புவுமாய் அந்தச் சின்ன வீட்டைத் தென்றல் தழுவி வரும் இடத்தில் அமைத்து, வயலோரக் காற்றின் வாடையிலேயே உயிர் சுமந்து வாழ்ந்தவர்கள். எந்த இடப் பெயர்வுமே அசைக்காதிருந்த அவர்களை இந்த இடப் பெயர்வு மட்டும் எப்படி அசைத்தது? காரணம் அப்பு.போன வருடம் அப்பு செத்துப் போனார். ஆச்சிக்கு உறுதியான பிடிமானமாயிருந்த அந்த தூண் விழுந்த பிற்பாடு ஆச்சியால் உறுதியான முடிவுகள் எடுக்க இயலவில்லை. கடைசிவரை அப்புவின் இறுதி நாள் வரை கூட அந்த மண்ணைவிட்டு ஒரு பிரிவு வருமென்று ஆச்சி நினைத்திருக்கவில்லை.

பிள்ளைகள் படித்து முன்னுக்கு வந்து அவர்களுக்கென்று ஒரு வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்த பின்னரும் கூட அவர்கள் அந்த மண்ணோடு இசைந்திருக்கவே விரும்பினார்கள். நகரத்தில் வீடு கட்டிக் கொண்டு வசதியாய் வாழ்ந்த பிள்ளைகள் வருந்தி வருந்திக் கூப்பிட்டாலும் பிடிவாதமாய் மறுக்க, அப்போது அப்பு இருந்தார். அந்தப் பிடிமானத்தில் வாழ்வு அர்த்தமாய் இருந்தது. பிள்ளைகள் உத்தியோகத்தில் இருந்த போதிலும் ஆளாளுக்கு வயல் வைத்திருந்தார்கள்.

“உத்யோகம் இருக்கெண்டாப் போலை வயலைக் கவனிக்காமல் விடாதயுங்கோ…. அதுதான் தெய்வம்…… உங்களை வளத்து…. படிப்பிச்சது…. முன்னுக்குக் கொண்டு வந்தது….. எல்லாம் இந்த மண்தான். அந்த மண்ணைக் கும்பிட வேணும்….”

அவர்களுக்கு அந்த உண்மை புரியும். சின்ன வயதில் ஆளாளுக்கு களை பிடுங்குவதிலும், நாற்று நடுவதிலும், சூடு மிதிப்பதிலும் என்று ஒவ்வொரு சின்ன அலுவல்களிலும் ஈடுபட்டுப் பழகிப் போனவர்கள் அவர்கள். என்றாலும் உத்தியோகச்சுமை அழுத்த அழுத்த, வயல் வேலைகள் அவர்களைச் சலிப்புறச் செய்தது உண்மை தான். அப்போது அப்புவுக்கும், ஆச்சிக்கும் தான் இவர்களது வயல்களைக் கவனிக்கும் பொறுப்பும் கூடும். விதைப்புக் காலங்களில், உரம் போடுகையில், சூடு மிதிப்புக் காலங்களில் என்று பிள்ளைகள் வருகின்ற வேளைகளில் பேரப் பிள்ளைகளோடு வருவார்கள். பேரக் குழந்தைகள் சரியாக சுட்டிகள். ஓர் இடத்தில் இராமல் சுற்றித் சுற்றித் திரியுங்கள். வயல் நிலங்கள் பூராவையும் அளவெடுத்து நாரைகளைத் துரத்துங்கள்……

நாரைகள்….. எவ்வளவு சொந்தமான உறவுகள்! இந்த நெற் பயிர்களைப் போல…. பருவ காலத்துக்குத் தக்கபடி கூட்டங் கூட்டமாக வந்து பறக்கின்ற செங்கால் நாரைகள். வயல் வரப்புகளுடே ஆடி அசைந்து ஒய்யாரமாய் நடக்கும். ஒன்றோடொன்று அன்பாய் சிறகு கோதும். காத்திருந்து இரை பொறுக்கும். சாரி சாரியாய் சிதறிப் பரந்து பச்சைக் கடலாய் விரிந்த வயலுக்கிடையே…….. வெள்ளைப் பந்துகளாய் ஒளி காட்டும். யாரேனும் வருவதைக் கண்டால் ‘ஜிவ்’ வென்று ஒன்றொன்றாய் எழும்பித் தூரப் போய் அமரும். ஆபத்துக்கள் அண்மிக்க, அண்மிக்கத் தூரப் போய்க் கொண்டிருக்கும். பருவ காலங்களுக்கு அமையவும், எதிர்க்கும் மனிதர்களுக்கு அமையவும் இசைவுபடுத்தப்பட்ட வாழ்க்கை. பரந்த சிறகுகளை வெண்மைச் சாமரமாய் விரித்தபடி பறக்கும் அழகு…..!

இந்த நாரைகளோடு பிரியம் வைக்க முனைந்து தோற்றுப் போனவன் சுட்டா. பார்வதி ஆச்சியின் கடைசிப் பேரன். கொஞ்சம் சின்ன வயதில் பெண்மைத்தனமான மென்மையான செய்கைகள். அவனுக்குள் வன்மத்தைக் கிளப்பியவை அந்த நாரைகள். கொஞ்சம் பயந்த சுபாவமுள்ள அவன் அடிக்கடி நாரைகளுக்குப் பின்னே திரிவான். அவனோடொத்த மூத்த பேரக் குழந்தைகள் வைக்கோற் போரில் ஏறி உருண்டு கொண்டிருக்கிற வேளைகளில் இவன் பச்சைப் பசேல் என்ற வயல்கள் வெறிச்சோடி இருப்பதை ஒரு சோகத்தோடு; பார்ப்பான். அவனுக்கு வயல் பசுமையாய் இருப்பது தான் பிடிக்கும். அதனை யாரும் வெட்டி விடக் கூடாது. இந்த நாரைகள் எப்போதும் அங்கு திரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது அவன் விருப்பம்.

வரப்போரம் மெல்ல நடப்பான். தூரத்தில் நாரைகள் தெரிகின்ற இலக்கை நோக்கி அவற்றின் கவனம் கலைந்து சிதறாமல் இருக்கும் பொருட்டு சத்தமிடாமலே பதுங்கிக் பதுங்கி நடப்பான். நெருங்க நெருங்க மனது சந்தோஷமுறும். ‘நான் உங்களைப் பிடிக்க மாட்டேன். நீங்கள் என்னோடு விளையாடலாம்’ என்பதாய் அவன் கண்கள் சேதி சொல்லும். ஆனால் நாரைகள் அவன் கண்களைப் பார்ப்பதில்லை: அவனது எண்ண ஓட்டங்களைப் புரியும் சக்தியும் அவற்றுக்கு இருப்பதாய்த் தெரியவில்லை. ஏதேனும் ஒரு நாரை, ஒரு மனிதனின் வரவு – அது ஒரு சிறுவனாய் இருந்தாலும் கூட – உணர்ந்து எழுந்து தூரத் தள்ளிப் போய் உட்காரும். மளமளவென்று செய்தி உணர்ந்தாற் போல ஒன்றொன்றாக நிதானம் தவறாமல் எழுந்து போய்த் தள்ளி உட்காரும். இவன் சலிப்பில்லாமல் மேலும் தொடர்வான். அதற்கு அப்பால், அப்பால்… அப்பாலுக்கப்பால்…… வயல்களே இல்லை என்றாற் போல் நாரைகள் சுற்றிச் சுற்றி, மாற்றி மாற்றி வட்டங்களை உருவமைக்கும். கால் வலிக்கும் வரைக்கும் நாரைகளைத் தொடர்வது அவனுக்குச் சலிப்பைத் தருவதில்லை. அப்படியாயின் அவனுக்குக் காலே வலிப்பதில்லை என்று அர்த்தம். ஆனால், அவன் நாரைகளைத் தொடர்வதை நிறுத்த வேண்டி வரும். பார்வதி ஆச்சியின் தொடர்ச்சியான வற்புறுத்தல்களால் சுற்றிச் சுற்றித் திரிந்து நீண்ட தூர அலுப்பில் இருக்கும் அவனைப் பார்வதி ஆச்சியின் அன்பும் கேலியுமான குரல் தாக்கும்.

“இண்டைக்கு எத்தனை நாரை பிடிச்சாப்போலை…..” அவனுக்கு ஆச்சியின் கிண்டல் கோபத்தைச் சுரக்க வைக்கும்.

“பாருங்கோ ஆச்சி, ஒரு நாளைக்கு இல்லாட்டி ஒரு நாள், நான் உந்த நாரைகளிலை ஒண்டையாவது சுட்டு, நாரையிறைச்சி கொண்டு வந்து தாறன் உங்களுக்கு……” நாரைகளை வசியப்படுத்த முடியாக் கோபத்தில் சொல்வான்.

“சீச்சீ, சீச்சீ அதுகள் பாவம். என்னத்துக்கடா பிள்ளைக்கு உந்த நினைப்பெல்லாம். உயிர்களைக் கொல்லக் கூடாதடா…..” ஆச்சி அவனை வாரியெடுத்து அணைத்துக் கொள்வார்.

அப்போது தான் அவனுக்கு அவ்வளவு நேரமும் வலியெடுக்காத கால்கள் வலியெடுப்பதாய்த் தோன்றும். கால்வலியை மீறி நாரைகள் கிடைக்காமற் போன ஆற்றாமை கண்களில் வழியும்.

“ஆச்சி ஏன் ஆச்சி….. என்னட்டை மட்டும் நாரைகள் வராதாம். ஏன்னைப் பார்க்க பயமாயோ கிடக்கு…..:” சின்ன மனதில் தாங்கல் ஏற்பட்டு சிதறும்.

“ஆர் சொன்னதடா அப்படி? நாரைகளெண்டா அப்பிடிதான். எங்களைப் போல எல்லாரும் இருக்கேலாதானையடா. நாரைகளை வேட்டையாடவும் ஆக்கள் இருக்கினை தானை. அது தான் அது எல்லாரைப் பார்த்தும் விலகி விலகிப் போகுது. வேண்டாத தொந்தரவுகளை ஏன் விலைகுடுத்து வாங்குவானெண்டுதான்….. தூரத் தள்ளிப் போறது எதுக்கும் நல்லது தானை….”

“ம்….ஹ_ம்….இது எனக்கு விளங்கேல்லை”. அவன் ஆச்சியின் முகத்தோடு முகம் இழைத்துக் கொண்டு சிணுங்குவான். எல்லாம் ஆச்சியின் வீடு வரும்வரைக்கும் தான். வீட்டுக்கு வந்த பிறகு எல்லாம் மறந்து போவான். சுற்றி வரப் பேரக் குழந்தைகளை அமர்த்தி நிலாவொளியில் ஆச்சி கதை சொல்லும் வரைக்கும் தான்.

ஆச்சியின் கதைகளும் நிலவுக்குள் பாக்கு இடிக்கிற ஒளவைப் பாட்டியின் தோற்றமும் அவனுள் பரவசத்தைக் ஏற்படுத்தும். அதையும் விட அதிகமாய் பூ வரசம் இலைகளை ஒவ்வொருவரிடமும் கொடுத்து விட்டு மத்தியானச் சோற்றையும் கறிகளையும் போட்டுப் புரட்டிய குழையல் சோற்றை வயது பேதமின்றி எல்லாருக்குமாய் ஆச்சி உருட்டி உருட்டித் தருகின்ற போது அவனுக்குப் பெரிய பரவசமாய் இருக்கும். அப்புவைப் போல வண்டி மாடுகளை ஓட்டும் பெரியவராய் அவருக்கு சமதையாகி விட்டாற் போலத் தோன்றும். அதே போல அலுவலகத்தில் பைல்களோடு போராடும் தந்தைக்குச் சமனாகி விட்டது போலவும் பள்ளிக் கூடத்தில் ‘சோக்’ கட்டியோடு படிப்பித்து மிரட்டுகின்ற மாமாவுக்குச் சமனாகிப் போனது போலவும்…. இன்னும் அம்மாவுக்கு, அண்ணாக்கு, அக்காவுக்கு என்று எல்லோருக்கும் சமனாகி விட்டது போலவும் தோன்றும். பொச்சடித்து பொச்சடித்துச் சாப்பிடுவான்.அந்த வேளைகளில் அவனை மற்றப் பேரன்கள் கேலி செய்வார்கள். தாங்கள் செய்த பெரிய கூத்துக்களை யெல்லாம் விலாவாரியாக விவரிப்பார்கள். “இவனைப் போல ஒரு பெட்டைப் பிள்ளை ஒரு இடமும் இல்லை…” என்று வம்புக்கு இழுப்பார்கள்.

“பெட்டைப் பிள்ளையோ? நாங்கள் கூட மரமேறுவம் அவன் அதுவுமில்லை. ஆக அவன் பெட்டையுமில்லை…..” என்று மச்சாள் காரிகள் சீண்டுவார்கள். அவன் ரோஷம் தலைக்கேற சோற்றுக் கையை உதற முனைவான். பார்வதி ஆச்சி பரிவாய் கைப்பிடித்துத் தடுப்பா.

“என்ரை பிள்ளை தங்கமெல்லோடா. உதுகள் எல்லாந்தான் குழப்படிக் கூட்டம்….”

அவன் அவர்களைப் பெருமையாய் பார்ப்பான். மற்றதுகள் வாய்க்குள் நெளித்துத் தங்களுக்குள் இரகசியம் பேசிச் சிரிக்குங்கள். இவன் ஆச்சியின் மிருதுவான நூல் சேலைக்குள் முடங்கிப் படுத்துக் கொண்டு வானத்தைப் பார்ப்பான். வானத்தில் நட்சத்திரங்கள் சிரிக்கும். எட்டாத்தொலைவில் இருந்து கொண்டு “அருகே வா….வா…” என்றழைக்கும். அவன் கற்பனைக்குள் கரைந்து போவான். ஒரு இனிமையான உலகைச் சிருஷ்டித்து அதற்குள்ளேயே லயித்துப் போவான். அந்த உலகில் மற்றச் சிறுவர்களுக்கு இடமில்லை. ஆனால் பார்வதி ஆச்சிக்கு நிச்சயமாய் இடமுண்டு.

ஆச்சியின் வீட்டில் அருமையான ஒரு கிணறு உண்டு. ஐம்பத்தெட்டில் கட்டிய கிணறு. வற்றாத தண்ணீர். சவர் படாத….. உப்புக் கலக்காத சுத்தமான தண்ணீர். இளநீர் போல….என்று அதைப் பருகுபவர்கள் சொல்லாமற் போவதில்லை. பல காலமாக அங்கு வசிப்பவர்கள் அங்கு தான் தேவைக்கு நீரெடுக்க வருவார்கள். ஊர்ப் பெண்கள் வருகிற போது ஊர்த்துளவாரமெல்லாம் அங்கு தான் அடிபடும். அதுவே ஒரு சந்தோஷமாய் மலரும். அந்த சந்தோஷங்கள் கடந்த சில வருடங்களில் குறுகிக் கொண்டு போயின. யுத்தம் அப்படி நெடுநேரம் நின்று பேச விடுவதில்லை. அன்றியும் சற்றுத் தள்ளி ‘பாசறை’ அமைத்திருக்கும் ‘அவர்கள்’ கிணற்றுக்கு அடிக்கடி வந்து போவார்கள். கிணற்றில் குளிக்கவும், துணி துவைக்கவுமென்று வந்து கிணற்றடியை அல்லோலகல்லோலப்படுத்தி விட்டுப் போவார்கள். ஆச்சியையும் அப்புவையும் பேச்சுக்கு இழுத்து வம்படிப்பார்கள்.

“பேரன்கள் ….. சரியான குழப்படிப் பிசாசுகள்….” என்று தோன்றும் எண்ண ஓட்டம் ஒவ்வொருவராய்க் களத்துக்குப் போக விடை பெற வருகையில் கண்ணில் குளமாய்த் தேங்கும்.

பிறகு ‘அவர்கள்’ போனார்கள். ‘மற்றவர்கள்’ வந்தார்கள். ‘மற்றவர்களுக்குரிய கிணற்றடியும் அதுவாய்த்தான் மாறிப் போனது. குளிப்பும், துவைப்பும், பரிகாசப் பேச்சுக்களுமாய் கிணற்றடி கலகலக்கும். ஆனாலும் கிணற்றடிப்

பூவரசுகள் மௌனத்தோடு எதுவுமே பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கும். அமைதியான இந்தப் பூமி ஒருநாள் வேட்டுக்களால் சடசடக்கக்கூடும். அப்போது இந்தக் கிணற்றடியில் ஒவ்வொரு ‘சீசனிலும்’ மாறி மாறிக் குளித்தவர்கள் தங்களுக்குள் அடிபடக் கூடும்.

ஆச்சிக்கு அரசியல் பிடிப்பதில்லை. ‘மனிதர்கள்’ என்ற சொல் மட்டும் பிடிக்கும். அந்தக் கிணறு இனமத பேதமின்றி எல்லாருக்கும் நீர் சுரப்பது மாதிரி எல்லாருக்கும் அன்பைச் சுரக்க ஆச்சியால் முடியும். அப்பு இடைக் கிடையே அலுத்துக் கொள்வதுமுண்டு.

“உவங்களோடை உனக்கென்ன கதை……..?”

அப்புவும் போய்விட்டார். போன வருஷம் வயல் விதைப்பின் போது வயலுக்குள் சளி பிடித்துக் கொண்டது. பிறகு காய்ச்சலாகி ஆஸ்பத்திரியில் வைத்திருந்து மூளை மலேரியா என்று ‘சேர்ட்டிபிக்கேற்’ கொடுக்கப்பட்டு இரண்டு நாளில் அப்பு செத்துப் போனார். ஆச்சிக்கு வெறுமையாயிற்று வாழ்வு. வெறுமையைப் போக்க ஆச்சிக்கு கிடைத்த துணை சுட்டா.

தங்களோடு இருக்கச் சொல்லி வற்புறுத்திய ஒவ்வொரு பிள்ளையின் வேண்டுகோளையும் ஆச்சி ஏற்கவில்லை.

“நான் இந்த இடத்தை விட்டு வரன். அயலுக்கை உள்ள சனம் ஏதேனும் ஒண்டெண்டாப் பாக்காதே…..”

பிள்ளைகளது வற்புறுத்தல்களெல்லாம் தேய்ந்து போக ஆச்சியின் சேலைத் தலைப்புக்குள் முடங்கிக் கொண்டிருந்த சுட்டா எஞ்சி நின்றான்.

“வாடா போவம்” கைப்பற்றியிழுத்த தாயின் பிடிக்குள் அடங்காமல் சிணுங்கலோடு சொன்னான்.

“நான் ஆச்சியோட இருக்கப் போறன்……”

“ஆச்சியோடையோ ……..” சின்ன மகனைத் தன் கைப்பிடிக்குள்ளேயே வைத்து வளர்த்தவள் அவனை விட்டுப் போக மனமின்றிக் கேட்டாள்.

“அதுக்கென்ன அம்மாவையும் தனிய விடக்கூடா. ஒரு மாசமெண்டாலும் அவன் நிக்கட்டும். இப்ப பள்ளிக் கூடமும் லீவுதானை”

கடைசியில் அதுவே தீர்மானமாய் ஆயிற்று.

சுட்டாவின் நெஞசெல்லாம் பூக்கள் பூத்துச் சிரித்தன. அவன் வீட்டுக்குப் போவதற்கிடையில் ஒரு நாரையையாவது வசப்படுத்திவிட மாட்டானா….?

ஆச்சிக்கு அந்த வேதனையான காலகட்டத்தில் சுட்டாவின் அருகாமை நிரம்பவே இதமாக இருந்தது. அப்புவுடனான தன் வாழ்க்கையின் இனிய ராகங்களைச் சுட்டாவிற்கு முன் ,திரும்பவும் மீட்டிப் பார்க்க முடிந்தது. சுட்டா வானத்து நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டு ஆச்சி மீட்டுகின்ற அந்த ராகங்களைக் கேட்டுக் கொண்டிருப்பான்.

அந்த ராகங்கள் திடீரென்று நின்றன. பதிலாகப் பயங்கரச் சத்தங்கள் செவிப்பறையை மோதின. வேட்டுகளின் ஆங்காரத்தில் நாரைகள் பறந்தன. தூரத் தூரப் போகும் நாரைகள் ….. இன்னும்….. இன்னும்….. அப்பாலுக்கு அப்பால் பறக்க வேண்டிய தேவை உணர்ந்து கொண்டிருந்த நாரைகளிலொன்று பொத்தென…. விழுந்தது பச்சை வயல்களுக்கிடையே.

பஞ்சைத் தோற்கடித்த வெள்ளைச் சிறகுகள் குருதியில் தோயத் துடிதுடித்து, அரும்பத் தொடங்கிய நெற்பயிர்களுக்கிடையே குருதி வடித்துக் கிடந்தது. கூடப் பறந்த நாரைகள் சுற்றிப் பறந்து கரைந்தன. எதுவுமே செய்ய முடியாமல் அழுது கரைந்து அடுத்த வெடிச்சத்தத்தின் பின் தாக்குப் பிடிக்க முடியாமல் அவலத் தொனியில் கத்திக் கொண்டே பறந்து போயின.

ஆனால் சுட்டாவை அவர்கள் விட்டுப் போகவில்லை. பார்வதி கதறிக் கதறி வரண்ட தொண்டைக்குள் இன்னும் வார்த்தைகளைத் தேடியபடி, இரத்தமாகிப் போன சுட்டாவைக் கைகளில் ஏந்தியபடி ஓடி வந்து கொண்டிருந்தா. மறித்துச் சுட்ட ஹெலியின் சடசடப்புக்கு அஞ்சிப் பதுங்கிய போதும், ஆச்சியின் கரங்கள் தளராமல் அவனைப் பற்றியிருந்தன.

“ஐயோ என்ரை பிள்ளை…..”

ஆச்சியின் கைகளில் சுட்டாவைப் பார்த்த சுட்டாவின் தாய் தாளமாட்டாமல் மயங்கி விழுந்தாள்.

மற்றச் சிறிசுகள் வெறித்தபடி நின்றன.

ஆச்சியோ துக்கமும், வருத்தமும், களைப்பும் ஒரு சேர நோயில் விழுந்தா.

“ ஆச்சி நான் இஞ்சையிருக்கிறன்…….” பிஞ்சுக் குரல், மென்மையின் சாயல் படிந்தபடி.

“எங்கேயடா…. எங்கை…….?”

பச்சை வயல்களின் நெற்கதிர்களைப் பிடித்து அசைத்தபடி ஒளிக்கிறான் அவன்……

“ஆச்சி நான் ஒரு நாரை பிடிச்சிட்டன்…..”

வயலுக்குள் செத்துக் கிடந்த நாரை அவன் கைபட்டுச் சிறகசைத்து அவனோடு விளையாடுகிறது.

“ஆச்சி வாங்கோ ஆச்சி, அறுகு வெளிக்கு….”

“சுட்….டா நான் வாறண்டா……”

“என்னம்மா செய்யுது…….?

“என்ன ஆச்சி….?

“சுட்….டா, சுட்….டா கூப்பிடுறான்…..”

“அக்கா …… பால் குடக்கா”

ஆச்சியின் வாய்க்குள் மகள் பால் ஊற்றுகின்றாள்.

“சுட்…டா”

ஆச்சியின் தலை சரிந்து விழுகிறது.

– பெப்ரவரி 15 ,2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *