கதையாசிரியர்:
தின/வார இதழ்: தென்றல்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 12,146 
 

பிள்ளையார்பட்டி கோயில் கல்யாண மண்டபம் களைகட்டி இருந்தது. கெளரி அக்காவுக்கும் சங்கர் மாமாவுக்கும் கல்யாணம். தாலி கட்டுவதற்கு அரை மணி நேரம் இருந்தபோது அந்தச் செய்தி வந்தது. சங்கர் மாமாவின் சித்தப்பா மும்பாயில் இறந்துவிட்டார்.

அவசர அவசரமாக கெளரி அக்காவின் அப்பாவிடம் சங்கர் மாமாவின் அப்பா ஏதோ சொல்ல முன்னவரின் முகம் வாடியது. போட்டது போட்டபடி கிடக்க சங்கர் மாமாவின் குடும்பத்தினர் மும்பாய் செல்ல ஏற்பாடுகள் செய்யத் துவங்கினார். கெளரி அக்கா அழுதாள். பெரியம்மா சமாதானம் செய்தாள்.

அதன்பின் ஒருநாள் நான் பள்ளியில் இருந்து திரும்புகையில் சங்கர் மாமா என்னிடம் ஒரு கடிதம் கொடுத்து ”பாப்பா, ஓடிப்போய் இதை கெளரி அக்காவிடம் கொடு. அவள் ஏதேனும் பதில் கடிதம் கொடுத்தால் வாங்கிட்டு வா. நான் இங்கேயே நிற்கிறேன்” என்றார்.

தடைப்பட்ட திருமணம் மீண்டும் நடந்தது. திருமண நாளன்று கெளரி அக்கா அழகாக இருந்தாள். வாத்தியார் மந்திரம் சொல்லித் தாலியை எடுத்து சங்கர் மாமாவிடம் கொடுத்தார். அதைப் பெற்ற மாமா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அருகில் நின்று கொண்டு இருந்த தன் நண்பன் ரவியிடம் கொடுத்தார். அவர் அடுத்த விநாடி அதை கெளரி அக்கா கழுத்தில் கட்டினார். அவளும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாள். கெட்டிமேளம் கொட்டியது. நடந்ததை கவனிக்காதவர்கள் அட்சதையும் போட்டனர். ஆனால் மேடை மீதோ ஒரே குழப்பம். சங்கர் மாமா தனது தனது தந்தை, தாய், ரவி, கெளரி அக்காவின் பெற்றோர் ஆகியோரைத் தனது அறைக்கு அழைத்துச் சென்று ஏதேதோ சொன்னார்.

எனக்குப் புரிந்ததெல்லாம் ரவி தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவர். அவர் தந்தையும் கெளரி அக்காவின் தந்தையும் நண்பர்கள்தான். ஆனால் காதல், திருமணம் என்று வருகையில் பிடிவாதம். அக்காவின் தந்தை ரவி ஊரில் இல்லாதபொழுது கெளரி அக்காவிற்கும் எங்கள் சொந்தத்தில் சங்கர் மாமாவுக்கும் மணம் முடிக்க எண்ணினார். ஆனால் அதையோ இறந்த சித்தப்பா தடுத்துவிட்டார்.

தில்லி சென்று திருப்பிய ரவி வாயிலாக உண்மை அறிந்த சங்கர் மாமா இந்தத் திட்டத்தை தீட்டியிருக்கிறார். இடையில் குறைந்த நாட்களே இருந்ததனால் இந்த அவசரத் திட்டம். தாலியை கட்டியபின் எல்லாம் சரியாகிவிடும் என்று எண்ணினார் போலும்.

குழப்பங்களுக்கு இடையிலேயே கெளரி அக்காவின் திருமண வாழ்க்கை துவங்கியது. ஒரே வருடத்தில் ரவி அமெரிக்கா செல்ல அக்காவும் சில மாதங்களில் பின் தொடர்ந்தாள். சங்கர் மாமாவுடன் அவருடைய புதிய மனைவி லட்சுமியும் அடுத்த வருடமே அமெரிக்கா சென்றனர்.
நானும் எனது பத்தாம் வகுப்பு தேர்வு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு, பொறியியல் கல்லூரி நுழைவு தேர்வு என்று படிப்பில் மூழ்கினேன். அவ்வப்போது கெளரி, சங்கர் என்ற பெயர்கள் என் காதில் விழும். அவர்கள் நன்றாக உள்ளனர் என்று அறிந்து மகிழ்ச்சி அடைவேன்.

பொறியியல் கல்வி முடிந்தபின் எனக்கு கலிபோர்னியா பல்கலைகழகத்தில் மேற்கல்வி படிக்க அழைப்பு வந்தது. பயணத்தைத் துவங்கினேன். விமானப் பணிப்பெண்ணின் கொஞ்சலான கேள்வி என்னை நிகழ்வுக்கு கொண்டு வந்தது. நான் வருவதை அறிந்த சங்கர் மாமா தானே என்னைக் கவனித்துக் கொள்வதாக போன் செய்திருந்தார். அப்பொழுதுதான் எனக்கு அவர் கலிபோர்னியாவில் இருந்தது தெரிந்தது.

விமான நிலையத்தில் சங்கர் மாமா, லட்சுமி, அவர்களின் மகன் யுவன் ஆகியோர் என்னை அன்புடன் வரவேற்றார்கள். காரில் பயணம். யுவன் விடாமல் பேசி என்னை மயக்கினான். அழகிய வீடு மற்றும் செடிகளைப் பார்த்தபடியே மெல்ல எனது பெரிய பெட்டியை இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தேன். ”பாப்பா” என்று ஒரு மகிழ்ச்சி கலந்த அலறல். ”கெளரி அக்கா” நானும் கத்தினேன். அவள் என்னை அணைத்து முத்தம் இட்டாள். அக்காவைப் பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

”ரியா, இந்த அக்காவால்தான் உன் அப்பாவுக்கும் எனக்கும் அமைதியா கல்யாணம் நடந்தது” என்று தனது எட்டு வயது மகளிடம் சொல்ல அவளோ எல்லாம் புரிந்தது போல தலையசைத்தாள். ரவி என்னைப் பார்த்து நன்றியுடன் புன்னகைத்தார். என்னைச் சந்திக்க இவர்கள் சியாட்டிலில் இருந்து வந்திருந்தனர்.

அப்போது சங்கர் மாமா ”பாப்பா ஓடிப்போய்…” என்று சொன்னவர், ”அட, நீ அதே சின்னப் பெண்ணா?” என்று என்னை வியப்போடு பார்த்தார்.

லட்சுமி அக்கா “நீ போய் முகம் அலம்பிக் கொள். சூடாகக் காப்பி ரெடி” என்றார்.

– நவம்பர் 2003

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *