துளசிப்பாட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 10,658 
 
 

திடீரென விழிப்புநிலைக்குத் தள்ளப்பட கட்டிலில் புரண்டவாறே அறையைச் சுற்றிலும் பார்த்தேன். சுவரின் மீது சாய்ந்திருந்த கடிகாரம், அறையின் வலது புற ஓரமாயிருந்த சன்னல், அதன் எதிர்ப்புறமாயிருந்த இருந்த மேசை, துணிகளைத் தன்னுள்ளே புதைத்துக் கொண்டு விழாமல் நிற்கும் அலமாரி, காற்றைத் திசை திருப்பியவாறு அயராமல் சுழன்று கொண்டிருந்த மின்விசிறி. மெல்ல வல புறமாய் திரும்பிப் படுத்தேன். மேசையின் மீதிருந்த புத்தகங்கள் அடுக்கப்படாமல் இருப்பது தெரிந்தது. ஒரு வாரத்திற்கும் மேல் மேசை பயன்படுத்தபடாமல் இருப்பது மேசையின் மீது படிந்திருந்த மெல்லிய தூசுப்படலம் நினைவுப்படுத்தியது. எல்லாமும் அப்படியே இருந்தன. ஒரு மாற்றமுமில்லை. ஆனால் துளசிப்பாட்டிதான் இல்லை. துளசிப்பாட்டி இறந்து பத்து நாட்கள் ஓடிவிட்டிருந்தன. இறப்பு என்பது நிரந்தர பிரிவு என்பதையும் அதிலும் அன்பிற்குரியவர்களின் பிரிவு வேதனைகளைப் பன்மடங்கு அதிகரிக்கும் என்பதையும் இந்த வயதில் முதன்முதலாக உணர்ந்தபோது வாழ்வின் ஒரு பகுதியை அடைந்துவிட்டதைப் போன்ற உணர்வு. துளசிப்பாட்டி இறந்த நாள் முதல் இன்று வரையிலும் எந்த வேலையிலும் மனம் ஒன்றிப்போகாமலே இருந்தது. அவ்வப்போது பாட்டியின் முகம், அவருடனான முந்தைய உரையாடல்கள், புன்னகை சிந்திய தருணங்கள் என ஏதாவதொன்று மனதில் எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தது. அதை விரட்ட இயலாமல் வேதனை நிரம்பி வழிகையில் யாருக்கும் தெரியாமல் அழுதேன். பல சமயங்களில் உறக்கம் கூட களைந்து போய்விட்டிருந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டேன். கரங்களில் ஈரப்பசை படர்ந்தது.

இந்த வீட்டு குடியிருப்பில் எங்கள் வீட்டு முன்புற வரிசையில் மூன்றாவது வீடுதான் துளசிப்பாட்டி வீடு. இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது பாட்டியின் வீட்டுக்குப் போவது என் பழக்கமாயிருந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன் பாட்டி இங்குக் குடிவந்தபோது ஆரம்பக் காலங்களில் அம்மாவுடன் சென்ற தினங்கள் மாறி நான் மட்டும் அடிக்கடி சென்று வந்தேன். நாள் முழுவதும் பாட்டியுடன் பரிமாறி கொண்ட தினங்கள் ஒவ்வொரு மாதத்திலும் விடுப்பட்டதில்லை. பாட்டி மட்டும்தான் அந்த வீட்டில் இருந்தார். தாத்தா பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே காலமாகிவிட்டதைப் பாட்டி சொல்லியதுண்டு. காலையிலேயே எழுந்துவிடும் பாட்டி நடந்தே அருகிலுள்ள மாரியம்மன் கோயிலுக்குச் செல்வார். கோயிலுக்குச் செல்வதற்கு முன் வீட்டின் பூச்செடிகளில் புதிய வரவாய் மலர்ந்திருக்கும் மலர்களைப் பறித்து பூத்தட்டில் வைத்துக் கொள்வார். விடுமுறை தினங்களில் சில சமயங்களில் நானும் அவருடன் கோயிலுக்குச் செல்வதுண்டு. காலையில் கோயிலுக்குச் சென்ற நாட்கள் எல்லாமே ஒரு வித களையோடு களிவதைப் பாட்டியிடம் சொல்லிப் பெருமைப்பட்டது நினைவில் நிற்கின்றது. அப்போது பாட்டி தலையை ஆட்டி புன்னகைத்தார். என் தோளைத் தட்டிக் கொடுத்தார்.

ஆலய வழிப்பாட்டுக்குப் பின் வீடு திரும்பி காலைச் சிற்றுண்டி தயார் செய்து தாத்தாவின் படத்தின் முன் வைத்து அதன் பின்னரே அதை உண்ணுவார். மதிய உணவு, தேநீர், இரவு உணவு என எல்லாமே தாத்தாவிற்கு முதல் உபசரிப்பு. தாத்தாவின் படத்தின் முன் எப்போதும் வெற்றிலை பாக்கு தவறாமல் இருந்தது. தாத்தாவுக்கு வெற்றிலை போடும் பழக்கம் இருந்ததாம். பாட்டி வெற்றிலை கொடியை வீட்டின் வேலியோரம் வளரவிட்டிருந்தார். தினமும் காலை மாலை இருவேளையும் தாத்தாவுக்கு வெற்றிலையைப் பறித்து படத்தின் முன் வைப்பதை பாட்டி மறந்ததேயில்லை. தாத்தாவின் நினைவுகள் பாட்டியின் மனதில் ஒட்டிக் கொண்டிருப்பதைப் அவருடன் உரையாடும்பொழுது பலமுறை உணர முடிந்தது.

‘இப்ப அக்கம் பக்கத்துல நடக்கற புருஷன் பொண்டாத்தி சண்டய பார்த்தா ஆச்சர்யமா இருக்கும்மா.. எங்க அப்பா அம்மா பாத்து செஞ்சு வைச்ச கல்யாணம்.. ஒருநாள்கூட எங்களுக்கு சின்ன பிரச்சனை கூட வந்ததே கெடையாது. குடும்பத்துல சின்ன சின்ன பிரச்சன வந்தாத்தான் நல்லாருக்கும்னு கொஞ்ச பேரு சொல்வாங்க. எங்கள பொறுத்த வரைக்கும் அப்படிலாம் இல்ல.. அதெல்லாம் பிரச்சனைக்கு அவங்களாவே சொல்லிக்கிற காரணம்னு தாத்தா சொல்வாரு.’

‘தாத்தாவுக்கு அவரைக்கா சாம்பருன்னா உசிரு.. ஆட்டிறைச்சி சாப்ட மாட்டாரு.’

‘மரம் சீவிட்டு வீட்டுக்கு வந்தா அந்தியில கொல்லை கொத்த போயிடுவாரு.. கொஞ்ச நேரம்கூட உட்கார மாட்டாரு.. உழப்புதான்.. சொந்தமா சம்பாரிச்சி சாப்டாதான் ஒடம்புல ஒட்டும்னு சொல்வாரு..’

இவ்வாறான தாத்தாவைப் பற்றிய பல விஷயங்கள் பாட்டியின் பேச்சுனூடே இழையோடும். தாத்தாவைப் இதற்கு முன் பார்க்காவிட்டாலும் பாட்டியின் மூலம் அவரின் சுயசரிதையே எனக்குத் தெரிந்துவிட்டிருந்தது. பாட்டி அமைதியானவர். அவர் அதிர்ந்து பேசி நான் கண்டதில்லை. பாட்டியின் மகன்கள் இருவரும் குடும்பத்துடன் வெவ்வேறு மாநிலங்களில் வசிப்பதால் பாட்டியைப் பார்க்க வருவது குறைவு. அந்த வீடு தாத்தாவின் பணத்தினால் வாங்கிய வீடு என்று மட்டும் ஒரு முறை கூறியுள்ளார். பாட்டியிடம் கேட்க என்னிடம் பல கேள்விகள் தொக்கி நின்றன. ‘உங்க மகனுங்க உங்கள பாக்க வர்றது கொறவு. போன் பண்ணி பேசுவாங்களா பாட்டி?’, ‘உங்களுக்கு பணம் அனுப்புவாங்களா?’, ‘உங்க மகனுங்க, பேரப்புள்ளைங்கள பாக்கனும்னு தோனுதா பாட்டி?’ உங்க மகனுங்களோட தங்கலையா பாட்டி?’ போன்ற கேள்விகள் அந்த வரிசையில் காத்திருந்தவற்றில் சில. ஆனாலும் ஏனோ பாட்டியிடம் கேட்க நினைத்த இக்கேள்விகள் என்னுள்ளே பதிலை அறியாமல் தொலைந்திருந்தன.

பாட்டியின் இறப்புக்கு வந்த மகன்கள் இருவரும் இன்னும் பாட்டியின் வீட்டில் தங்கியிருந்தனர். பாட்டி உயிருடன் இருந்தபோது கூட இவ்வாறு தங்கியிராதவர்கள் இப்பொழுது தங்கியிருப்பதற்குக் காரணம் இருக்கவே செய்தது. வீட்டைப் பற்றி கேள்வி எழுந்தபோது வழக்கறிஞரின் தகவல் புதிராய் அவர்களைச் சூழ்ந்திருந்தது. புது தகவலாய் அறியப்பட்ட அப்புதிர் அவர்களைக் கிளம்ப விடாமல் தடுத்திருந்தது. பாட்டி அந்த வீட்டை விற்றுவிட்டாராம். யாருக்குமே அதுவரையிலும் தெரியாமல் இருந்த விஷயம் என எல்லாருக்குமே அப்போதுதான் தெரிய வந்தது. பாட்டி வீட்டை விற்றதைப் பற்றி என்னிடம்கூட சொன்னதில்லை. பாட்டி எண்பதாயிரம் ரிங்கிட்டிற்கு வீட்டை விற்றுள்ளதாக குடியிருப்பு பகுதியில் இருந்தவர்களிடம் மெல்ல கசிய தொடங்கியிருந்தது. பாட்டியின் வங்கிக் கணக்குப்புத்தகத்தில் எண்பதாயிரத்துக்கான வரவும் அதே சமயம் வெளியேற்றமும் செய்யப்பட்ட கணக்கு விபரம் மிக தெளிவாக பதிவு செய்யப்பட்டிருந்தது. பாட்டி காசோலை வடிவில் அதை வெளியேற்றிருக்கக்கூடும் என பாட்டியின் மகன்கள் ஊகித்தார்கள். பெரிய இலக்கத்தைக் கொண்ட பணம் எங்கே என்பதே பெரிய கேள்வியாக உருவெடுத்து அவர்களுக்குத் தீரா வேதனையைத் தந்து கொண்டிருந்தது. பணத்தின் தேடல் பாட்டியின் வீட்டை முற்றிலும் ஆக்கிரமித்திருந்தது. வீடு முழுவதும் தேடி அலுத்திருந்தார்கள். தத்தம் வங்கிக் கணக்குகளை ஒருமுறை சரிப் பார்த்துக் கொண்டனர். பாட்டி மகன்களின் வங்கிக் கணக்கில் பணத்தைச் சேர்த்தற்கான தடயம் காணப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அவர்களுக்குத் தந்தது.

மாலை நேரங்களில் நடந்து செல்வதை வழக்கமாக்கியிருந்ததால் துளசிப்பாட்டியின் வீட்டை நடந்தவாறே நோட்டமிட முடிந்தது. பூச்செடிகளில் பூக்கள் நிரம்பியிருந்தன. காய்ந்த பூக்கள் செடியின் காலடியில் சுயமாக வீழ்ந்திருந்தன. பாட்டியின் பேத்தி எனக்குத் தோழியாகியிருந்தாள். என்னைக் காணும் சமயங்களில் பேசுவாள்.

தாத்தாவின் படமும் அவர்களின் தேடலில் தப்பிக்கவில்லை. படத்தைக் கண்ணாடி ப்ரேமிலிருந்து அகற்றி தங்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்தியிருந்தனர். கழற்றப்பட்ட கண்ணாடி ப்ரேம் தவறி கீழே விழுந்து உடைய, அதனை வீட்டின் முற்றத்தில் வீசியிருந்தனர். பாட்டியின் பேத்தி என்னிடம் இத்தகவலைச் சர்வ சாதாரணமாய் ஒப்புவித்தபோது என் உடல் முழுதும் அக்கண்ணாடி துண்டுகளால் கீறப்பட்டதுபோல் இருந்தது.

‘காச எங்க வச்சாங்கனு தெரில.. கண்டிப்பா செக்காதான் இருக்கணும்.. வீடு முழுக்க தேடியாச்சு. ஆனா இன்னும் கண்டுபிடிக்க முடியல. அதனால அப்பா வேலைக்கு லீவு போட வேண்டியதா போச்சு..’சலித்துக் கொண்டாள்.

‘நானும் வேலைக்கு லீவு போட்டுட்டு இருக்கறேன். போரிங் கா இருக்கு..’ பாட்டியின் இறப்பு துளியும் அவளிடம் வருத்தத்தை ஏற்படுத்தவில்லை.

‘இதுக்கு முன்ன உங்கள இங்க பாத்ததில்ல..’

‘நாங்க இங்க வந்து அஞ்சு வருஷமாச்சு. அப்பா, அம்மா, எனக்கு எல்லாத்துக்கும் வேல.. டைம் இருக்காது. சித்தப்பா வீட்லயும் ரொம்ப நாள் வரல.. எல்லோருமே பிசி..’

‘அப்போ இந்த வீட்ட வாங்கனவரு யாருனு தெரியுமா?’

‘லோயர் போன் நம்பர் குடுத்தாரு.. இந்த வீட்ட வாங்கனவருகிட்ட ஒவ்வொரு மாசமும் பாட்டி சேவா குடுத்துருக்காங்க.. அவங்க இருக்கற வரைக்கும் இந்த வீட்ல இருக்க அவர்கிட்ட பெர்மிஷன் கேட்டுருக்காங்க..’

அன்று மாலையும் வழக்கம்போல் பாட்டியின் வீட்டருகே நடந்து சென்றபோது பாட்டியின் பேத்தி எனக்காக காத்திருந்தவள்போல் வீட்டினுள் இருந்து வெளியே வந்தாள்.

‘பாட்டி ரூம்ல ஒரு சின்ன இரும்புபெட்டி இருந்துச்சி. அலமாரி மேல….. சின்னதாக பூட்டு போட்டிருந்துச்சி. அதலதான் பாட்டி செக்கை வச்சிருப்பாங்க போல.. அந்த பூட்ட உடைக்க ட்ரை பண்ணிக்கிட்டு இருக்காங்க..’ அவளின் குரலின் குதூகலம் தென்பட்டது.

மறுநாள் சனிக்கிழமையாக இருந்ததால் காலையிலேயே பாட்டியின் வீடு வரை நடந்து செல்ல எண்ணம் தோன்ற கடைக்குச் செல்வதாய் காரணத்தை முன்வைத்து நடையை எடுத்து வைத்தேன். பாட்டியின் வீட்டில் அனைவரும் கிளம்பும் ஆயத்த பணியில் இருப்பது தெரிந்தது. காரில் பொருட்களை எடுத்து வைத்த வண்ணம் பரபரப்பாயிருந்தார்கள். ‘பாட்டியின் செக் கெடைச்சிடுச்சி போல…’ மனதிற்குள்ளாகவே சொல்லிக் கொண்டேன். காரினுள் துணிப்பையை வைத்த பாட்டியின் பேத்தி என்னைக் கண்டு கூப்பிட்டவாறே ஓடி வந்தாள்.

‘கடைக்குப் போறேன்…’ அவள் ஏதும் கேட்பதற்கு முன்னே வார்த்தைகள் முந்திக் கொண்டன.

‘நாங்க கெளம்பறோம் ரத்னா. உங்க போன் நம்பர் என்ன?’ என கைத்தொலைப்பேசி எண்களை அவளின் கைத்தொலைப்பேசியில் பதிவு செய்து கொண்டாள். என் கைகளைக் குலுக்கிப் புன்னகைத்தாள்.

‘டெக் கேர்..’ என்றவள் திரும்ப எத்தனித்தாள்.

‘பாட்டியோட செக் நேத்து ஒடைச்ச பெட்டிலதான் இருந்துச்சா?’ புதிராய் மனதினுள் உருவெடுத்த கேள்விக்குப் பதிலைத் தேடி அலைந்தது மனம்.

‘இல்ல ரத்னா. அந்தப் பெட்டிக்குள்ள வெத்தலை இடிக்கற கல்லுதான் இருந்துச்சி.. தாத்தாவோடயாம். பல்லு இல்லாததால வெத்தல இடிக்க யூஸ் பண்ணினாராம்…. தேடி கண்டுபிடிக்க முடில… நாங்க கெளம்பறோம்..’ ஏமாற்றம் அவளது பேச்சினில் கலந்திருந்தது.

‘ஓகே… டெக் கேர்..’ நடையைத் தொடர்ந்தேன்.

‘யூ ஆர் ரியலி கிரெட் பாட்டி….’ பல நாட்களாக தொலைந்திருந்த புன்னகை என்னுள் மெல்ல தடம் பதித்தது.

– பிப்ரவரி 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *