தீர்ப்பு சொல்லுங்க…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 31, 2020
பார்வையிட்டோர்: 4,913 
 

” வணக்கம். நான் சென்னை உயர் நீதிமன்றம். என்கிட்டே ஒரு வழக்கு வந்தது. ரொம்ப காலமா நடந்தது. நான் வழக்கை எப்போதும் போல் ரொம்ப அக்கறை , கவனமாய் விசாரிச்சிதான் தீர்ப்பு சொன்னேன். ஆனா… அந்த தீர்ப்புல சம்பந்தப்பட்ட மூணு பேருமே திருப்தி அடையல. அதனால அவுங்க உச்ச நீதிமன்றத்துக்கு அப்பீல் பண்ணி இருக்காங்க. அது நடக்கிறபடி நடக்கட்டும். தீர்ப்பு வர்றபடி வரட்டும்.

இப்போ எனக்கொரு யோசனை. அவுங்க உச்ச நீதிமன்றம் போறதால என் தீர்ப்பு சரியா தப்பான்னு எனக்கே சந்தேகம். மனசுக்குள்ள ஒரு குழப்பம். அதனால…… உங்களை உச்ச நீதிமன்றமாய் நினைச்சி அந்த வழக்கை நான் உங்ககிட்ட கொண்டு வர்றேன். சம்பந்தப்பட்டவர்களையும் உடன் இங்கே ஆஜர் படுத்தறேன். நீங்க தீர விசாரிச்சு தீர்ப்பு சொல்லுங்க. என்ன சரியா…?

என்ன… நீங்க தயாராகிட்டீங்களா.?

” சதீஷ்குமார்!… சதீஷ்குமார்..! சதீஷ்குமார்…! ”

” நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை. இது சத்தியம் ! ”

” சரி சதீஷ்குமார். இப்போ நீங்க உங்க வாக்குமூலத்தைச் சொல்லலாம்….? ”

”நன்றி ஐயா.! நான் ஒரு டாக்டர். சாதாரண டாக்டர் இல்ல. ஒரு பெரிய புகழ் வாய்ந்த தனியார் மருத்துவமனையில் விரல் விட்டு எண்ணக்கூடிய பெரிய டாக்டர்ல நான் ஒருத்தன். இன்னும் இரண்டு வருடங்களில் தலைமை மருத்துவராய் உயர வாய்ப்பிருக்கு. அந்த அளவுக்கு நான் பெரிய, திறமை வாய்ந்த மருத்துவர். வயசு நாற்பது.

நான்… முக ராசியானவன், அழகானவன், திறமைசாளி. அதனால மாலை நேரத்தில் என் கிளினிக்கிற்கு நோயாளிகள் அதிகமா வருவாங்க. இதனால…நான் மற்ற மருத்துவர்கள் மத்தியில் அதிக பொறாமை, பொச்சரிப்போடு வாழறேன். இது நிதர்சன உண்மை.

இதோ… என் எதிரில் குற்றவாளி கூண்டில் நிற்கும் பெண்மணி கமலா என் மனைவி. அவளிடம் அன்பு, பாசம், பரிவு, அழகு எல்லாம் ஒரு பெண்ணுக்கு இருக்கிறதை விட அதிகமா இருக்கு. நாங்க காதல் திருமணம் கிடையாது. பெற்றோர்களாய் பார்த்து என் சம்மதத்ததோட முடிச்ச திருமணம். எங்களுக்குத் திருமணம் முடிந்து எட்டு வருடங்கள் ஆவுது. எங்களின் இல்லற வாழ்க்கைக்குச் சாட்சியாய் ஒரு பையன் இருக்கிறான். அவன் இந்த சென்னையில் ஒரு நல்ல தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறான்.

‘இங்கே எங்களுக்குச் சொந்தமாய் பெரிய பங்களா தி.நகர்ல இருக்கு. ஆடி கார் வச்சிருக்கிற அளவுக்கு வசதியோடு வாழறேன். எந்தவித பிக்கல் பிடுங்கல் இல்லாத தனிக்குடித்தனம். மனைவி உதவி ஒத்தாசைக்கு ஒரு சமையற்காரியும், பங்களாவை பராமரிக்க ஒரு வேலைக்காரனும் வேலைக்கு இருக்காங்க.

இப்படி இருக்கிற குடும்பத்துல இப்போது சூறாவளி. சூறாவளின்னு சொல்றதைவிட சுனாமின்னே சொல்லலாம். இந்த சுனாமியில் என்னோட மானம், மரியாதை, கவுரவம் எல்லாம் சுத்தமாய் அழிஞ்சி போச்சு. வெளியே தலை நிமிர்ந்து நடக்க முடியாத அளவிற்கு அவமானம்.

இதுக்குக் காரணம் நானில்லே. ஏன்னா….. ஒரு குடும்பத்தலைவன் என்கிற முறையில் என் மனைவி, மகனுக்கு எந்தவித குறையும் வைக்கல. அவர்கள் மேல் அன்பு, பாசம், பணமெல்லாம் அளவுக்கு அதிகமாகவே வைச்சிருக்கேன். ஒரு ஆண்மகனாய், குடும்பத்தலைவனாய் கணவனாய், தகப்பனாய்

என்னிடம் எந்த குறையும் கிடையாது. அதனால் இந்த வழக்கை நீங்க நல்லா தீர விசாரிச்சு எனக்கு ஒரு நல்ல தீர்ப்பு சொல்லும்படி உங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அவ்வளவுதான் யுவர் ஆனர்.! ”

” கமலா…! கமலா..! கமலா….! ”

” நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத்தவிர வேறொன்றுமியில்லை. இது சத்தியம் ! ”

” சரி. ! நீங்க சொல்லுங்கம்மா ! ”

” நான் கமலா. சதீஷ்குமார் மனைவி. என் கணவர் சொன்னதெல்லாம் உண்மை. அவர் எனக்கு, என் குழந்தைக்கு எந்தவித குறையும் வைக்கல என்கிற உண்மையில் ஒரு குறை இருக்கு.

அவர் பெரிய மருத்துவர்தான் அதில் எந்தவித சந்தேகமுமில்லே. காலையில் எட்டு மணிக்கு அவர் மருத்துவமனைக்குச் சென்றால் மதியம் சாப்பிட வீட்டுக்கு ஒரு மணிக்கு வருவார். சாப்பிட்டுவிட்டு சின்னதாய் ஒரு குட்டித்த துக்கம் போட்டு சரியாய் இரண்டு மணிக்கெல்லாம் திரும்ப வேலைக்குப் புறப்பட்டுடுவார்.

எங்கள் ஒரே குழந்தை விக்னேஷ் காலையில் இவருக்கு முன் பள்ளிக்கு வீட்டு வாசலுக்கு வரும் பேருந்தில் ஏறி பள்ளிக்கூடம் சென்றுவிடுவான்.

சமையற்காரி… காலை ஆறுமணிக்கு வந்து வாசல் தெளித்து, பத்துப்பாத்திரங்கள் தேய்த்து ஒன்பது மணிக்கெல்லாம் சமையல் வேலை முடித்து சென்றுவிடுவாள். அடுத்து அவள் மாலை ஐந்து மணிக்கு வந்து எட்டு மணிக்குச் செல்வாள்.

வேலைக்காரனும் இப்படித்தான். காலையில் வந்து காரைத் துடைப்பான். தோட்டத்து பூச்செடிகளுக்குத் தண்ணீர் விட்டு பராமரிப்பான். பத்து மணிக்குச் சென்று.. மாலை ஐந்து மணிக்கு போய் கிளினிக் திறப்பான். இரவு மூடும்வரை அங்கே இருப்பான். கிளினிக்கிற்கும் வீட்டிற்கும் சம்பந்தம் கிடையாது.

காலையில் எல்லோரும் சென்றபிறகு நான் தனி. எந்தவேலையும் கிடையாது. படிப்பேன், கொஞ்சம் தொலைக்காட்சிப் பெட்டிப் பார்ப்பேன். அப்புறம் பொழுதுபோக வாசல் ஜன்னல் ஓரம் உட்கார்ந்து சாலையை வேடிக்கைப் பார்ப்பேன்.

மதியம் கணவர் ஒன்னு டூ ரெண்டு வந்து போனபிறகும் இப்படித்தான். பகல் துக்கம் கிடையாது.

பள்ளிவிட்டு மாலை ஐந்து மணிக்கு மகன் வருவான். முகம் கழுவி காபி குடிச்சுட்டு டியூசன் போவான். திரும்ப எட்டு மணிக்கு வந்து படிப்பான், சாப்பிடுவான், தூங்குவான்.

கணவர் மாலை ஐந்தரை மணிக்கு வந்து கொஞ்சம் முகம் கழுவி காபி குடிச்சுட்டு கிளினிக் செல்வார். திரும்ப வர மணி பதினொன்றரை. அதுக்கு மேல் சாப்பிட்டுவிட்டு அசதி, தூக்கம் பாவம். வீட்ல அப்பாருக்கும் மகனுக்கும் என்னோட பேசவே நேரம் இருக்காது.

இப்படி ஒரு வீட்டில தனிமரமா என்னோட வாழ்க்கை எட்டு ஆண்டுகள். இதுக்குப்பிறகுதான் என் வாழ்க்கையில் சின்ன மாற்றம். அவ்வளவுதான்.! ”

” அவ்வளவுதானா கமலா…? ”

” ஆமாம் யாவர் ஆனர் ! ”

” நடராஜ் ! நடராஜ்..! நடராஜ்..! ”

” நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத்தவிர வேறொன்றுமியில்லை. இது சத்தியம் ! ”

” ம்ம்…. நீங்க சொல்லுங்க..? ”

” நான் நடராஜ் சார். வயசு 34 . டைலர். டாக்டர் சதீஷ்குமார் வீட்டிற்கு நேர் எதிரே கடை வைச்சிருக்கேன். அந்த வீட்டுக்கும் என் கடைக்கும் ஒரு முப்பது அடி சாலைதான் இடைவெளி. அதனால் என் இடத்திலிருந்து பார்த்தா டாக்டர் வீட்டு முகப்பு நல்லாத் தெரியும். என் தொழில் சுத்தம், நேர்மையைப் பார்த்து எனக்கு வாடிக்கையாளர்கள் அதிகம். என் கடையில் ஐந்து தொழிலாளிகள் வேலை செய்யுறாங்க. என் வேலை…… ஆர்டர்கள் வாங்குவது, கட்டிங் செய்வது. தையல் வேலைகள் அனைத்தையும் ஆட்கள் பார்த்துக்குவாங்க. என் வேலை முடிஞ்சதும் கல்லாவுல உட்கார்ந்து டெலிவரி செய்வது, காசு வாங்குவது. இன்னும் திருமணம் முடிக்கலை. பொண்ணு கிடைக்கலை.

வழக்கம்போல் ஒரு நாள் கடையைத் திருந்து வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். யாரோ ஒரு பொடியன் வந்து என்னிடம்….” உங்களை எதிர்வீட்டு டாக்டர் கூப்பிடுறார் ! ” சொன்னான்.

அவர் என்னோட வாடிக்கையாளர். என்னைத்தவிர வேற யாரிடமும் எந்தத் துணியும் தைக்கமாட்டார். தைத்து அனுப்பியதும் சரியாய் கூலியைக் கொடுத்து அனுப்பிடுவார். அதனால எனக்கு அவர் மேல மதிப்பு மரியாதை அதிகம். அவர் கிழிஞ்ச துணியைக் கொடுத்தாலும் உடனே முடிச்சு அனுப்புவேன். அழைச்சால் உடன் போவேன்.

அன்னைக்கும் அதேமாதிரி கை வேலையை விட்டுட்டு அவர் வீட்டுக்குப் போனேன். என் கடைக்கும் அவர் வீட்டுக்கும் முப்பது அடி ரோடுதான் இடைவெளி. அதனால சட்டுன்னு போயிட்டு சட்டுன்னு திரும்பிடலாம்.

டாக்டர் என்னைப் பார்த்ததும்….. ” வீட்டுல துணி இருக்கு தைச்சு கொடு ” சொல்லிட்டு உடன் தன் வேலைக்குக் கிளம்பிட்டார். அவர் எப்போதுமே அப்படித்தான். ஆற அமர பேச நேரம் இருக்காது.

அவர் போனதும் அவர் மனைவி என்னிடம் துணிகளைக் கொடுத்து…..” உள்ளே அளவெல்லாம் இருக்கு ” சொல்லி கொடுத்தாங்க.

நான் கடைக்கு வந்து அவுங்க கொடுத்த பையைப் பார்த்தேன். ஒரு பேண்ட், இரண்டு ஜாக்கெட், இரண்டு செட் பையனுக்குச் சீருடை தைக்குற அளவுக்கு துணிகளும் அளவுகளும் இருந்தது.

விடுவிடுன்னு வெட்ட ஆரம்பிச்சேன். மொதல்ல பேண்ட். அப்புறம் பையன் சீருடை. கடைசியாய் ஜாக்கெட்டை வெட்ட ஆரம்பிக்கும்போதுதான் எதிர்வீட்டு வேலைக்காரர் வந்து, ” அம்மா உங்களை உடன் வரச் சொன்னாங்க. ” சொல்லி அழைச்சார். சடனா எதிர்வீட்டு ஜன்னலைப் பார்த்தேன். வழக்கம்போல டாக்டர் மனைவி கமலா என் கடையைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க.

உடன் போய்… ” என்ன விசயம் அழைச்சீங்க..? ” ன்னு கேட்டேன்.

” கொடுத்த அந்த அளவு ஜாக்கெட் சரி இல்லே. புதுசா அளவெடுத்து தைக்கனும். ” சொன்னாங்க. அளவெடுத்து வந்து தைச்சேன்.சுருக்கமா சொன்னா அன்னைக்கு பஞ்சும் நெருப்பும் பத்திக்கிடுச்சு.

நான் பத்து வருசமா அங்கே கடை வச்சிருக்கேன். டாக்டர் கலியாணம் கட்டியதிலேருந்து எட்டு வருசமா அவர் மனைவி எனக்கு அறிமுகம்.இத்தினி வருசமா இல்லாத பழக்கம் நெருக்கம் இப்போ திடீர்ன்னு பத்திக்கக் காரணம் இருக்கு. ஒரு பெண்ணுக்கு என்னதான் வசதிகள் இருந்தாலும் அவளோட கணவன் மனைவியின் ஆசாபாசங்கள் , உணர்ச்சிகள் , ஏக்கங்கள், சின்னச் சின்ன ஆசைகள், கோபதாபங்கள் இவைகளை புரிஞ்சி மதிச்சு நடங்கலேன்னா அவ எவ்வளவு வருத்தப்படுவாள் . அதனால் அவ மனம் எப்படி எப்படியெல்லாம் பாதிக்கப்படும்ன்னு கமலாவோட பேச பழக ஆரம்பிச்சதிலேர்ந்து புரிஞ்சிகிட்டேன். எனது ஆறுதலான பேச்சு, நடவடிக்கை, அணுகுமுறை அவுங்க புண்பட்ட மனசுக்கு மருந்து தடவிச்சு.

மைலார்ட் ! நான் அவுங்களை மொதல்ல தொட்டேனா …இல்லே அவுங்க என்னை மொதல்ல தொட்டாங்களான்னு எனக்கு நினைவில்லே. ஆனா…. நாங்க ரெண்டு பேரும் இந்த உறவை மனசுல நினைச்சுப் பழகலே என்கிறது உண்மை. அவுங்களோட தப்பா நடந்துக்கிறபோதுகூட ஒரு தோழிக்கு, அபலைக்கு நம்மால செய்யப்படுற உதவி இது என்கிற உணர்வுதான் எனக்கு இருந்ததே தவிர கீழ்த்தரமான மோகம்,வெறியில்லே.

ஆகவே… கணம் நீதிபதி அவர்களே ! இந்த சூறாவளி , தவறுக்கு நான் மட்டும் காரணம் இல்லே என்கிறது உண்மை.அவ்வளவுதான்! – நிறுத்தினான்.

” …………………………………….”

” என்ன சார் யோசனை….? யார் மேல தவறு என்கிறது உங்களுக்குக் குழப்பமா இருக்கா…? வேணுமின்னா… நீங்க அவுங்களை குறுக்கு விசாரணை செய்து அதை தீர்த்துக்கோங்க. ”

” சரி ! ”

” சதீஷ்குமார்! சதீஷ்குமார்..! சதீஷ்குமார்…! ”

” குற்றவாளி கூண்டுக்கு வந்துட்டேன். சொல்லுங்க சார். ”

” டாக்டர் ! என்னதான் நீங்க வசதிகளை உங்க மனைவிக்கு செய்து கொடுத்திருந்தாலும் , அவுங்க ஒரு குழந்தைக்கு தாய் ஆனாலும் அவுங்களுக்குன்னு ஆசை, ஏக்கங்கள்,கோபதாபம், உணர்ச்சிகள் இருக்கு என்பதை புரிஞ்சிக்காம நடந்து இருக்கீங்க.ஆகையினால் இந்த தவறுக்கு மூலகாரணம் நீங்கதான் என்பது என் அபிப்பிராயம். இறுதியா நீங்க ஏதாவது சொல்ல விரும்புறீங்களா …? ”

” என்ன சார் இது..? என் மேல் பழியைப் போடுறீங்க..? நான் யார் …? ஒரு திறமையான, ராசியான, பெரிய டாக்டர் . மனித உயிர்களைக் காப்பாத்துறவன்.அவர்களோட உறவாடுகிறவன்.அதனால் காலை எட்டு மணியிலிருந்து ராத்திரி மணி பதினொன்னைத் தாண்டியும் என்னைக் சுத்தி வெறும் நோயாளிங்க. இவரிடம் போனால் நோயும் அதன் உபாதைகளும் தீரும் என்கிற நம்பிக்கையில் வேதனையோடு வரும் நோயாளிகளிடம் கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமல்…..

” எனக்கு நேரமில்லே. என் மனைவி மக்களை கவனிக்கணும் திருப்திப் படுத்தனும் நாளைக்கு வாங்க” ன்னு சொல்றது நாகரீகமா..? இல்லே அது என் மருத்துவ தொழிலுக்குத்தான் சரியா..? ‘

என்னைப் பத்திக்கூட நினைக்க யோசிக்க விடாம என்னைச் சுற்றி எப்போதும் வெறும் நோயும், நோயாளிக் கூட்டங்களும். இதுக்கு யார் காரணம்..? நோயா..? அந்த நோயாளியா..? அப்படியானால் என்னையும் என் குடும்பத்தையும் கவனிக்க விடாம செய்யும் அந்த நோயாளிகளும் குற்றவாளிகள்தானே ! நான் நோய்களைத் தீர்த்து வைக்கிற மருத்துவன்தான். அதுக்காக என்னை இந்த நிலைக்கு ஆளாக்கினது அவுங்கதானே !?

இன்னொன்னு சார். நான் வெறும் நோயாளிகளைச் சந்திச்சுட்டு என் மனைவியை மறக்கல. அவளுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்திருக்கேன். தாம்பத்தியத்திலும் குறை வைக்காம ஒரு ஆண் குழந்தையைப் பெத்திருக்கேன். அது மட்டுமில்லே… நான் ஒரு பிள்ளையோட கணவன் மனைவி தாம்பத்தியத்துக்குத் தாழ்ப்பாள் போடல. அப்பப்ப தொட்டிருக்கேன். ஒரு சில நேரங்களில் தவறி இருக்கலாம். அதுக்கு காரணம் காலையில எட்டு மணியிலேர்ந்து ராத்திரி பதினோரு மணி வரை மாடாய் உழைக்கிற அசதி.

அதனால் கணம் நீதிபதி அவர்களே.. ! இந்தத் தவறுக்கு நிச்சயமா நான் காரணமில்லே என்பது எனது தாழ்மையான கருத்து. ”

” கமலா…! கமலா..! கமலா….! ”

” இதுவரைக்கும் நடந்தவைகளைப் பார்க்கும்போது கணவனோட நிலைமை தெரிஞ்சு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாமல் சிதறவிட்டது உங்க தப்பு. ஆகவே…..”

” கொஞ்சம் இருங்க சார். தங்கக் கூண்டுக்குள்ளே கிளி இருக்கிறதுனால பசி எடுக்காம இருக்குமா..? ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம்தான் நான் தனிமையிலே இருக்கிறது..?

” சார் அதிருக்கட்டும்… புருஷன் என் சமையலைச் சாப்பிடும்போதோ, நான் நல்ல துணிமணிகளை உடுத்தி இருக்கும்போதோ.. ‘ நல்லா இருக்குன்னு ‘ ஒரு வார்த்தை மனம் திறந்து பாராட்டினாலோ மனம் விட்டு ஒரு நாளைக்கு அரை மணி நேரம் பேசினாலோ என் மனசு இதையெல்லாம் குப்பையாய் நினச்சு மனசு ஆறிப்போகும். அதுக்குக்கூட நேரமில்லாம அவருக்கு ஏகப்பட்ட வேலை. எல்லா தாய்மார்களும் போல நானும் என் குழந்தையோட ஒன்றிப் பழகி இருந்தேன்னா எல்லாம் தூள் தூளாகி இருக்கும். அதுக்கு வழி இல்லாம படிப்பு என்கிற பேர்ல குழந்தைக்கு வயசுக்கு மீறிய சுமை. அதுக்கும் வழி இல்லே. இப்படி ஒரு வடிகால்கூட இல்லாம எல்லா ஆசாபாசங்களையும் போட்டு அமுக்கி எத்தனை நாளைக்குத்தான் வாழறது..? ஒரு வருசமா இரண்டு வருசமா.. எட்டு வருடங்கள். சாதாரணமா..?

” இன்னொரு முக்கியமான விசயம். பசி அடங்காம அறையும் குறையுமாய் சாப்பிட்டதைப்போல எப்பவாவது புருச சுகத்தை அனுபவிச்சிக்கிட்டு எத்தனை நாட்களுக்குத்தான் என் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக்கிட்டு வாழறது..?

கணம் நீதிபதி அவர்களே ! இதுக்காக நான் தாம்பத்தியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன், அலையறவள்ன்னு தப்பா நினைக்காதீங்க. நானும் எல்லா உணர்ச்சிகளையும் உடைய ஒருத்தி. உணர்ச்சிகள் என்கிறது எல்லோருக்கும் பொது, இயற்கை. கணம் நீதிபதி அவர்களே ! நான் சொன்னதையெல்லாம் என் இடத்திலிருந்து நீங்க யோசிக்கணும். அப்போதுதான் என்னுடைய வலி , இம்சையெல்லாம் உங்களுக்குப் புரியும். ! ”

” நடராஜ் ! நடராஜ்..! நடராஜ்..! ”

” நீங்கதான் ஒரு பெண்ணோட பலவீனத்தைப் பயன்படுத்தி அவளைத் தட்ட வேண்டிய இடத்தில் தட்டி, தடுமாற வச்சி உங்க உடல் பசியைத் தீர்த்திருக்கீங்க. ஆகவே நீங்கதான் உண்மையான குற்றவாளி ! ”

” அது எப்படி சார்…? ! தப்பு செய்த எல்லோரையும் பார்த்து, ” நீங்கதான் குற்றவாளி ! நீதான் குற்றவாளி ” ன்னு சொல்லி அவுங்க மறுத்ததும் …. கடைசியா நான்தான் குற்றவாளின்னு உங்க அஸ்திரத்தை எடுத்து என் மேலும் வீசுறீங்க.

” சார் ! திருமண வயதிலிருக்கும் ஒரு இளைஞனை ஒருத்தி அழைச்சி எனக்கு என் கணவனால சுகம் இல்லேன்னு சொன்னா என்ன அர்த்தம் ..? நான் சமுதாயத்துக்குப் பயந்து நேர்மையா நடக்கனும் என்கிற ஆசையில அவளைக் கவனிக்காம வந்தேன்னா..பிச்சைக் கேட்டவளுக்கு உதவி செய்ய முடியாத கல்நெஞ்சுகாரன் என்கிற மாதிரிதானே அர்த்தம். சரி அதை விடுங்க. நான் யோக்கியமா அவளைக் கண்டுக்காம வர்றேன்னே வைச்சுக்குக்கோங்க. அவ என் ஆண்மையை சந்தேகப் பட மாட்டாளா..? நான் தவறிப் போனதுக்கு என் இளமைகூட காரணமா இருக்கலாம். அதுக்காக அத குறை சொல்ல முடியுமா…?

” போதும் நிறுத்து..! நிறுத்து ! ”

” ஏன் சார் இப்படி அலறி முடியைப் பிச்சிக்குறீங்க..? எல்லோருடைய வாக்குமூலத்தையும் கேட்டு உங்களுக்கே குழப்பமாகிடுச்சா..? நானும் உங்களாட்டம்தான் சார். இதே போல விசாரிச்சு என் முடியப் பிச்சுக்கிட்டேன். இவர்களை இப்படி விசாரிச்சுக்கிட்டே இருந்தா சம்பந்தப்பட்டவங்க நீதி நேர்மையைத் தங்களுக்குச் சாதகமாய்த்தான் வளைச்சி இல்லேன்னு சொல்லுவாங்க. அதனால இவர்களோட வாக்குமூலத்தையெல்லாம் கேட்டுகிட்டு நிறுத்தி நிதானமா யோசிச்சி இப்படி தீர்ப்பைச் சொன்னேன்.

” இதுவரைக்கும் நடந்த விசாரனையில் எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சிப் பார்த்தால் ஒவ்வொருத்தர் மேலும் தவறு இருக்கு. அது மட்டுமில்லே… பெற்றவர்களோட ஒட்ட முடியாத அளவுக்கு குழந்தையோட கல்வித்தரம் இருக்கு.

” எது எப்படியோ… தப்பு ஒன்னு நடந்து போச்சு. அதுக்கு நீங்க மூணு பேரும் குற்றவாளி இல்லே சொல்றீங்க. நியாயம். தப்பு செய்த எல்லோருமே தன் தவறை நியாயப்படுத்தத்தான் செய்வாங்க. இது மனித இயல்பு.

சரி… விசயத்துக்கு வரேன். கணவன் மனைவியின் ஆசாபாசங்களை மதிக்காததும், மனைவி கணவனுக்குத் துரோகம் செய்வதும், இன்னொருத்தன் மனைவியை வேறொருத்தன் அபகரிக்கிறதும் தவறு என்பதை நமது தர்மங்களும், இதிகாசங்களும் நமக்குத் தெளிவா எடுத்துச் சொல்லி இருக்கு. ஆனாலும் இது தப்புன்னு நாம ஒரேயடியா ஒதுக்கித்தள்ள முடியாது. சம்பத்தப்பட்ட மூணு பேர்கள் நிலையில் நின்று பார்த்தால் உங்க எல்லோர் பக்கமுமே நியாயம் இருக்கு. ஆனா…. நடந்தது தப்பு என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

நியாயத்துக்குத் தண்டனை வழங்க முடியாது. அப்படி செய்யிறதும் தப்பு. சரி இந்த தப்புக்கு என்ன தண்டனை..? என்ன நீதி..? ஒன்னும் கிடையாது. அதனால் நீங்க மூணு பேரும் தவறுகளை ஏத்துக்கிட்டு, நடந்த தவறை மறந்து… மறுபடியும் மூணு பேரும் பழைய வாழ்க்கையை வாழறதுதான் நல்லது. இதுதான் சரி நியாயம். ”

” இதுதான் சார் நான் சொன்ன தீர்ப்பு. இதுல அவுங்களுக்குத் திருப்தி இல்லே. உச்ச நீதி மன்றத்துக்கு மேல் முறையீடு செய்திருக்காங்க. அதுல என்ன தீர்ப்பு வருது பார்க்கலாம். ”

மக்களே! இப்ப இதுக்கு நீங்க என்ன தீர்ப்பு சொல்லப்போறீங்க.?? சொல்லுங்க ???

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *