தீர்க்கதரிசனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 8, 2023
பார்வையிட்டோர்: 2,987 
 
 

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பன்னிரண்டாவது மாடியின் பல்கணியில் நின்று பார்த்த போது பகலை விட மின்விளக்குகள் கீழேயும், நட்சத்திரங்கள் மேலேயுமாய் மின்னிக் கொண்டிருக்கும் இரவு அழகாயிருந்தது.

பகல் பார்த்த போது கனடா ஒன்ராறியோவின் எக்லிங்ரன் அவெனியூவின் நீண்டு விரிந்து தெரியும் விளையாட்டு மைதானம் ஆங்காங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த கால்பந்து, கைப்பந்து போன்ற ஆட்டங்களால் ஆர்ப்பாட்டமாகத் தெரிந்தது. பல்கணிக்கு நேரே கீழே உள்ள சிறிய நீச்சல் தடாகம் நீச்சலடிக்கும் சிறிசுகளின் சண்டையும், சந்தோசமும் கலந்த கூக்குரல்களில் கலகலத்துக் கொண்டிருந்தது.

இப்போது அவைகள் ஓரளவு ஓய்ந்திருந்தாலும் நிசப்தத்தைக் குலைக்கும் சத்தங்கள் கேட்டுக் கொண்டுதான் இருந்தன. காற்று எங்கிருந்தோ அழகிய தமிழ்ப்பாடலை அள்ளி வந்து கொண்டிருந்தது.

‘இந்த நேரத்தில் இத்தனை சத்தமாகப் பாடலா!’ பல்கணியில் நின்ற படியே காற்று வந்த திசையைக் கூர்ந்து பார்த்தேன். மைதானத்தின் ஓரமாக அடுத்த வீட்டு பல்கணிக்கு எதிரே கீழே ஒரு கார் நிற்பாட்டப் பட்டு கதவு திறந்திருந்தது. ஒரு இளைஞன் எதிர் வீட்டு பல்கணியையே அண்ணாந்து பார்த்தபடி நின்றான்.

பாடல் வரிகள் தெளிவாக காதில் விழுந்தன. “காதலா.. காதலா.. காதலால் தவிக்கிறேன் ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்…”

“ஏன் இப்பிடிச் சத்தமாய்..!”

“இந்த இரவு நேரத்திலை.. இப்பிடிச் சத்தமாப் பாட்டுப் போடலாமே?” மைத்துனரின் மகனை வியப்போடு கேட்டேன்.

“சித்தி, இது ஒவ்வொரு நாளும் நடக்கிற விசயந்தான். அந்த வீட்டு எட்டாவது மாடியிலை ஒரு வடிவான தமிழ்ப்பிள்ளை இருக்கு. அதுதான்.. இவன்…”

ம்… எனக்கு விளங்கி விட்டது. இது கனடா ஸ்ரைலில் ஒன்றாக இருக்க வேண்டும்.

“ஜேர்மனியிலை எண்டால் உந்தச் சேட்டையள் சரிவராது. பத்துமணிக்குப் பிறகு வீட்டுக்குள்ளையே சத்தமாப் பாட்டுப் போடக் கூடாது. இப்பிடி ரோட்டிலை நிண்டு அதுவும் இவ்வளவு சத்தமாப் பாட்டுப் போட்டால்.. பொலிஸ் பிடிச்சுக் கொண்டு போயிடும்.”

“சித்தி, இண்டைக்குத்தானே கனடாவுக்கு வந்தனிங்கள். போறதுக்கிடையிலை இன்னும் கனக்க விசயங்கள் பார்ப்பிங்கள்”

அவன் சொன்னது போலவே எனக்காகக் கனக்கக் காத்திருந்தன. அடுத்த நாள் காலையில் லிப்ற்றில் நுழைந்த போது ஒரு மாநிறமான பெண் நின்றாள். தமிழ்ப்பெண் போலத் தெரிந்தாள்.

“வணக்கம்” என்றேன்.

அவள் மௌனமாக நின்றாள்.

“சித்தி, அது தமிழ் இல்லை. அவை பிஜி தீவிலையிருந்து வந்தாக்கள்.”

“பார்க்க தமிழ் மாதிரி இருக்கு.”

“இல்லை, அவையளுக்குத் தமிழ் தெரியாது. இந்த பில்டிங்கிலை இப்பிடி நிறையப் பேர் இருக்கினம்”.

‘புலம் பெயர்ந்த எமது ஐரோப்பியத் தமிழர்களின் சந்ததியினரும் ஒரு காலத்தில் இப்படித்தான் தமிழ் தெரியாத தமிழர்களாய் இருப்பார்களோ?’ மனதுக்குள் ஒரு சிறிய அச்சம் தோன்றியது.

வாசலில் செக்கியூரிட்டியைத் தாண்டி வெளியில் போனபோது சில்லென்ற காற்று வேகமாக வந்து முகத்தில் மோதி, தலையின் முன் முடிகளைக் கலைத்தது. கோடைகாலம் என்றாலும் இரவின் சில்லிப்பு இன்னும் விலகாமலே இருந்தது. அந்தச் சில்லிப்பையும் பொருட்படுத்தாது ஒரு வயதானவர் வீதியோரமாக இருந்த பெரிய கற்களில் ஒன்றின் மேல் அமர்ந்திருந்தார். அவருக்கு எனது பாட்டாவின் வயதுதான் இருக்கும் போல் தெரிந்தது.

எனது பாட்டா இப்பவும் ஊரில்தான் இருக்கிறார். அவரும், கனடாவுக்கு வராவிட்டாலும் அமெரிக்காவுக்குப் போயிருக்கலாம். இப்படி கல்லிலிருந்து காற்று வாங்கியிருக்கலாம். ம்.. ஏனோ மறுத்து விட்டார். அவருக்கு ஊரில் கோர்ட்டில் உறுதி எழுதும் வேலை. அதை விட்டிட்டுப் போக விருப்பமில்லையோ என்னவோ!

பாட்டாவின் தம்பி அவரது பிள்ளைகளோடு அமெரிக்காவில்தான். அவ்வப்போது அவரின் கடிதங்கள் பாட்டாவுக்கு வரும். இடைக்கிடை சிறிது டொலர்களும் கடிதத்துக்குள் வைக்கப் பட்டிருக்கும். நான் அந்தக் கடிதங்களில் ஒட்டி வரும் அமெரிக்கா முத்திரைகளை ஆசையோடு எடுத்து எனது அல்பத்தில் ஒட்டி வைப்பேன்.

அப்படித்தான் ஒரு முறை கடிதம் வந்தது. பாட்டா வாசித்துக் கொண்டிருக்கும் போதே நான் கடித உறையை கேத்தில் ஆவியில் பிடித்து முத்திரையைக் கழற்றி எடுத்து விட்டேன். பாட்டா கடிதத்தை வாசித்து முடித்ததும் என்னிடம் தந்து விட்டு கோர்ட்டுக்குப் போய் விட்டார். அதில் எழுதியிருந்த வரிகளைப் பார்க்கப் பார்க்க எனக்குப் புல்லரித்தது. பாட்டாவை அமெரிக்காவுக்கு வந்து விடும்படி பாட்டாவின் தம்பி எழுதியிருந்தார். எல்லாச் செலவையும் அவரே பார்க்கிறாராம். ரிக்கெற்றையும் அனுப்புகிறாராம்.

பாட்டியும் இறந்த பின் மனதாலும், உடலாலும் வாடித் தளர்ந்து போயிருக்கும் பாட்டா அமெரிக்காவுக்குப் போனார் என்றால் எவ்வளவு சந்தோசமாக இருப்பார். இவ்வளவு நல்ல விடயத்தைப் பற்றி என்னோடு ஒன்றுமே கதைக்காமல் போயிட்டாரே! எனக்கு மத்தியானம் பாட்டா வீட்டுக்கு வரும் வரை இருப்புக் கொள்ளவில்லை. கடிதத்தை இரண்டு மூன்று முறையாக வாசித்துப் பார்த்தேன்.

பாட்டா அமெரிக்காவுக்குப் போனால்… என்ன, எங்கடை வீட்டுத் தென்னம் பாத்திகளுக்கு நாங்கள் குளிக்கும் போது வாய்க்கால் வழி ஓடும் சவர்க்காரம் கலந்த தண்ணீரை மாத்தி, மாத்தி விடவும், தென்னம் பாத்திகள் சிதைந்து போகாமல் சுற்றிவர பொச்சு மட்டைகளை அழகாக அடுக்கி பாதுகாக்கவும் ஆளில்லாமல் போகும். வேலிச்

சிதம்பரத்தம் பூக்கள் தீண்டுவாரின்றி வாடி வீழும். பாட்டாவின் சுவாமியறை பூவின்றி, சாம்பிராணிப் புகையின்றி நாஸ்திகக் கோலம் கொள்ளும்…

நினைவுகள் பாட்டாவை அமெரிக்காவுக்கு அனுப்பிப் பார்த்து அதன் நன்மை, தீமைகளை ஆராய்ந்து கொண்டிருக்க ஒருவாறு மதியம் வந்து விட்டது. பாட்டாவும் வெள்ளை வேட்டி கசங்காமல் நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையுமாக வந்தார். உறுதி எழுதி வந்த காசில் ஒரு பகுதியையும், சந்தையில் வேண்டிக் கொண்டு வந்த நாவற்பழப் பையையும் அம்மாவிடம் கொடுத்து விட்டு, வெள்ளை சேர்ட்டுக்கு மேல் போட்டிருக்கும் சால்வையைக் கூட எடுத்துக் கீழே வைக்காமல் அம்மா சமைத்த கும்பிளா மீன் குழம்பையும், செம்பாரைக் குஞ்சுப் பொரியலையும் சேர்த்து மதிய உணவைச் சுவைத்துச் சாப்பிடத் தொடங்கினார்.

நான் பக்கத்துச் சுவரில் சாய்ந்து கொண்டு பாட்டா சாப்பிடும் அழகை ரசித்த படியே “பாட்டா நீங்கள் அமெரிக்கா போறதை நினைக்க எனக்குச் சந்தோசமாயிருக்கு. எவ்வளவு நல்ல சான்ஸ்.” என்றேன்.

“சும்மாயிரு மேனை. நான் போக மாட்டன்.”

“ஏன் பாட்டா? “

“இங்கை என்ரை பேரப்பிள்ளையள் நீங்கள் எல்லாரும் இருக்க, உங்களை விட்டிட்டு நான் அங்கை போய்… எனக்கு அது சரிவராது”.

“அவர் உங்கடை தம்பிதானே பாட்டா..!”

“அவன் அங்கையிருந்து என்ன கஸ்டப் படுறானோ ஆருக்குத் தெரியும்? மகளும், மருமகனும் அங்கை டொக்டர் எண்டாப்போலை அமெரிக்கா எங்கடை மண்ணாகிடுமோ? இல்லை அவன்ரை பேரப்பிள்ளையளும், பிள்ளையளும் என்ரை ஆகிடுமோ? நான் போக மாட்டன்.” பாட்டாவின் குரல் தழுதழுத்தது.

‘பாட்டா பிழை விட்டிட்டார், நல்ல ஒரு எதிர்காலத்தை காலுக்குள்ளை போட்டு மிதிச்சிட்டார்.’ என்று அப்போது நினைத்துக் கொண்டேன்.

அப்போது மட்டுமல்ல யாரும் எதிர் பார்க்காத விதமாக நாமெல்லோரும் கட்டாயமாக எமது நாட்டை விட்டு வெளிநாட்டை ஏகிய பின்னும், அந்த நினைவு வரும் போதெல்லாம் ‘பாட்டா அமெரிக்காவுக்குப் போயிருக்கலாமே’ என்று மனசுக்குள் ஒரு குறுகுறுப்பு ஏற்படும். இப்போதும் கல்லில் இருந்த பெரியவரைப் பார்த்ததும் மனசு குறுகுறுத்தது.

அருகே செல்லும் போது ஆவலுடன் அவர் முகத்தைப் பார்த்து “வணக்கம்” சொன்னேன். அவருக்கு சற்று அதிர்ச்சி கலந்த சந்தோசம். கனடாவில் அந்த 1996 காலப்பகுதியில் ‘வணக்கம்’ சொல்லும் வழக்கம் இல்லையாம். கூனிக் குறுகி அமர்ந்திருந்த அவர் கண்களுக்குள் எதையோ பறி கொடுத்த சோகம். கஸ்டப் பட்டுச் சிரித்த சிரிப்பில் உயிர்ப்பு வாடி இருந்தது. அவரைத் தாண்டிச் சென்ற பின்னும் ‘ஏன்?’ என்ற கேள்வி என்னைக் குடைந்தது. அதிக நேரம் குடைச்சலைத் தாங்க முடியாததால் மைத்துனரின் மகனிடம் கேட்டும் விட்டேன்.

அவன் சொன்னான். “சித்தி, அவர் இங்கை தன்ரை மகனோடையும், மருமகளோடையுந்தான் இருக்கிறார். அவையள் காலைமை வேலைக்குப் போற பொழுது இவரையும் வெளியிலை விட்டுக் கதவைப் பூட்டிப் போட்டுப் போயிடுவினம். பின்னேரம் வேலையாலை வந்தாப்போலைதான் இவரும் உள்ளை போகலாம்”.

“அப்ப, அவர் மத்தியானம் சாப்பிடுறது. ரொயிலற்றுக் போறது எல்லாம்…”

“எல்லாம் அவையள் வந்தாப் போலைதான்”

“அப்ப ஏன் அவர் இங்கை இருக்கிறார். நாட்டுக்குத் திரும்பிப் போகலாந்தானே!”

“அவையள் விட மாட்டினம். அவற்றை பெயரிலை வெல்ஃபெயர் வருகுதில்லோ.”

சத்தமில்லாமல் ஒரு கொடுமை நடந்து கொண்டிருப்பது புரிந்தது. அதற்கு மேல் பேச மனம் வரவில்லை.

ரவுணுக்குள் வேலைகளை முடித்து விட்டுத் திரும்பும் போது மதியமாகியிருந்தது. அப்போது அங்குள்ள கற்களில் இன்னும் சில வயதானவர்கள் சேர்ந்து, சோகத்தைச் சுமந்தபடி கூட்டமாக இருந்தார்கள்.

அவர்களில் சிலருக்கு அவர்கள் பிள்ளைகளுக்கு எத்தனை மணிக்கு வேலை முடிகிறதோ அப்போதுதான் மதியச் சாப்பாடு என்று தெரிந்த போது மனசு கனத்தது.

நாடு விட்டு நாடு வந்து, வீடிருந்தும் ஆறி அமர இருக்கைகளோ, நிழலுக்குக் கூரைகளோ இல்லாதவர்கள் போல்… இத்தனை காலம் கழிந்து ஏதோ ஒன்று புரிந்தது.

– 23.5.2003, மனஓசை, முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2007, @சந்திரவதனா

சந்திரவதனா செல்வகுமாரன் (மேலைப்புலோலியூர், ஆத்தியடி, பருத்தித்துறை, இலங்கை) ஜேர்மனிய, ஈழத்து எழுத்தாளர். இவர் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை பல்வேறு தளங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். பல இணைய இதழ்களின் ஆசிரியராகவும் இருக்கிறார். வாழ்க்கைச் சுருக்கம் சந்திரவதனா இலங்கையின் வடபுலத்தில் அமைந்துள்ள மேலைப்புலோலியூர், பருத்தித்துறை, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மு.ச.தியாகராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகள் பெற்றெடுத்த எண்மரில் இரண்டாமவர். வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி யில் கல்வி கற்றவர். கணிதத் துறையில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *