தீபாவுக்கு உடல் வலியை விட மனம் அதிகமாக வலித்தது. மனம் மகிழ்ச்சியாக,நிறைவாக இருந்தால் உடல் வலி மறந்து போகும்,பறந்து போகும்.
தான் தவழும் வயதிலேயே தாய் தவறிவிட்டதால் மறுமணம் செய்து கொண்டார் தந்தை. அன்பும்,பாசமும் அதிகம் வைத்துள்ள தந்தைக்கு வெளியூரில் வேலை. விடுமுறைக்கு வரும் போது ஆடைகளும்,ஆபரணங்களும் வாங்கி வந்து தாயுமாகி,தந்தையுமாகி அழகு பார்ப்பார்.
செல் போனில் முன் படமாக தன் படத்தை தந்தை வைத்திருப்பது கண்டு பூரித்துப்போவாள். அப்படிப்பட்ட தந்தையை தன்னிடம் செல் போனில் கூட பேச விரும்பாத அளவுக்கு தன்னைப்பற்றி தவறான கருத்துக்களை தந்தையிடம் சொல்லி,சொல்லி மாற்றி விட்ட சித்தியை வெறுத்தாள்.
கல்லூரியிலிருந்து தாமதமாக வந்தால் மனம் கூசுமளவுக்கு மட்டமான வார்த்தைகளைக்கூறி அன்று இரவு பசியுடன் படுக்கச்செல்ல வைப்பாள். சித்திக்கு முன் திருமணத்தில் பிறந்த பெண்ணுக்கு தந்தை தனக்கென வாங்கித்தந்த ஆபரணங்களை போட்டு அழகு பார்ப்பாள்.
தனது முப்பத்தைந்து வயது சகோதரனுக்கு இரண்டு குழந்தைகளுடன் மனைவி பிரிந்து சென்று விட, அந்தக்குழந்தைகளை தன் வீட்டில் வைத்து வளர்ப்பதோடு தீபாவை ‘மம்மி’என அழைக்க வற்புறுத்துவாள்.
தன் சகோதரனுக்கு கொடுத்திருக்கும் படுக்கையறையை சுத்தம் செய்ய வைப்பாள்.
வேண்டுமென்றே கல்லூரி பேருந்து செல்லும் வரை தனக்கு உணவு கொடுக்காமல் பின் கொடுத்து,தன் சகோதரனுடன் இரண்டு சக்கர வாகனத்தில் செல்ல வற்புறுத்துவாள்.
ஒரு நாள் தன் சகோதரன் மகா குளிக்கும் போது அவனுக்கு தீபாவை முதுகு தேய்த்து விட சொல்ல,மறுத்த தீபா கால்கள் மீது கொதிக்கும் நீரை ஊற்றி துடிக்க விட்டாள்.
இதையெல்லாம் தீபாவளிக்கு வரும் அப்பாவிடம் கூற இருந்த நிலையில், வந்த அப்பா மிக கண்டிப்பானவராக,இயல்புக்கு மாறாக தன்னை அழைத்து “இனி காலேஜூக்கு போக வேண்டாம்,கல்யாண ஏற்பாடு பண்ணிட்டேன்.”
இதைக்கேட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்டு தனது கருத்தை சொல்வதற்க்குள் அப்பா தொடர்ந்து பேசினார்.
“உனக்கு பிடித்தாலும்,பிடிக்கலேன்னாலும்
மகா மாமா தான் மாப்பிள்ளை” என சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது போல பெரிய குண்டைப்போட்டது தீபாவை இனிய தீபாவளி நாளில் நிலைகுலையச்செய்து விட்டது.
தனது லட்சியம்,குறிக்கோள் அனைத்தும் சுக்குநூறாகியதாகவும்,வாழ்வில் இருண்டகாலம் தொடங்கி விட்டதாகவும் எண்ணி கண்கலங்கியவள், கதறிஅழ சக்தியின்றி மயங்கி விழுந்தாள்.
மருத்துவமனையில் கண்விழித்த போது வயதான மனிதரும்,அவரது மனைவியும் கண்கலங்கியவாறு சோகமாக அதே சமயம் பாசத்தின் உருவமாக இருந்தனர்.
“எங்களை யாருன்னு உனக்கு அறிமுகப்படுத்தாமலேயே உன் அம்மா கண் மூடிட்டாள். நாங்கதான் உன் அம்மாவை பெத்தவங்க. உன்னோட கண்டிப்பான அப்பா எங்களை உன்னைப்பார்க்க விடலேன்னாலும் தூரமா இருந்து பார்க்காம இல்லை. உன் கொடுமைக்கார சித்தி காலேஜ் பீஸ் கட்டாத போது நாங்க கட்டுவோம். உன்னோட நிலைமையை டாக்டர் கூப்பிட்டு சொல்ல ஓடி வந்திட்டோம்.”
“……….”
“இனி உன்னை நாங்க பார்த்துக்கிறோம்,எங்களோட சொத்துக்களை உனக்கே கொடுக்கப்போறோம். உன் எண்ணம் போல வாழ வைக்கிறோம்” என தாயின் பெற்றோர் இருவரும் ஒருசேரக்கூற கேட்டு,தன் வாழ்க்கைச்சோலையில் பட்டுப்போன மரங்கள் தளைத்து பூத்து மணம் வீசியதாக மகிழ்ந்த தீபாவுக்கு மகிழ்ச்சி பட்டாசு வெடித்து மத்தாப்பு போல் சிதறியது.