தீபாவளி பர்சேஸ்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 26, 2023
பார்வையிட்டோர்: 3,180 
 
 

அரக்குக் கலர் சல்வார்;

வலிந்து வரவழைக்கப்பட்டப் புன்னகை;

விரித்துப் போட்டத் தலையலங்காரம்;

மொத்தக் கேசமும் தாவணிப் போல் ஒருபுறமாய்;

துப்பட்டா போல் இருபுறமும்;

ஒரு பாதி முன்னும் மறு பாதிப் பின்னுமாய்;

கண்ணும் கன்னமும் மறைக்குமாறு ஆலம் விழுது போல் சின்னச் சின்ன கொத்துக்களாய்;

புசு புசு வென குருவிக் கூடுபோல்;

பாப்வெட்டி சுருண்டதாய்;

பூவின்றிப் பொட்டின்றி;

இன்ன நிறம் தான் என்று அனுமானிக்க முடியாதபடி தலைமுடியிலும் புருவங்களிலும் வண்ணங்களை அப்பியபடி;

ஃபேஷன் ஷோவிலிருந்து நேரடியாகக் கடைக்கு வந்தாற்போல் ஆங்காங்கே அலைந்துக் கொண்டிருந்தார்கள் மாலில் பணிபுரியும் நங்கைகள்.

உதட்டுச்சாயம் அவர்களின் முகங்களைக் கூடுதலாய் விகாரமாக்கியது.

உண்மையான வயதை அதிகரித்துக் காட்டியது.

மாக்பெத்’க்கு முன்னால் மூன்று உருவங்கள் தோன்றிப் பாடியதே…

‘FAIR IS FOUL AND FOUL IS FAIR.’

ஞாபகம் வந்தது.


“ஷாப்பிங் மால் போறோம். சேல்ஸ்மென் கிட்டேயெல்லாம் அனாவசியமாப் பேசாதீங்க. டாக்கேட்டிவ்வா இருந்தா மரியாதை இருக்காது. ரிசர்வ்வுடா இருக்கணும். இது கிராமமில்லே. மெட்ரோபாலிட்டன் சிட்டி, அதுக்குத் தகுந்தாப்ல நடந்துக்கணும்…..!”

மகன் பலமுறை எச்சரித்தது நினைவில் வந்தது மாத்ருபூதத்துக்கு.

“சிவலைஸ்டா நடந்துக்கணும்…”

இப்படிச் சொல்லிச் சொல்லி அழைத்து வந்ததால் அவர் எதுவும் பேசாமல் ஜாக்கிரதை உணர்வோடு இருந்தார்….”

மகன் கொடுத்த முன்னெச்சரிக்கை அவர் வாயைக் கட்டிப்போட்டது.

‘இவ்வளவு கண்டிஷன் பேர்ல நான் எதுக்கு உங்களோட வரணும்…?’

கேட்கத்தான் ஆசை அவருக்கு. கேட்க முடியவில்லை அவரால்…?

இரண்டு நாட்களுக்கு முன் கிராமத்திலிருந்து கிளம்பும்போது மனைவியோடு நிகழ்ந்த உரையாடல் அவர் வாயைக் கட்டிப் போட்டது.


“ஏந்நா..”

“ம்…”

“நாம நாளு கிழமைன்னாதான் அங்கே போறோம்.”

“ஆமாம்..அதுக்கென்ன இப்போ…?”

“அங்கே போய் எதுவும் பேசப்படாது. இருக்கற வரைக்கும் மௌனமா இருந்துட்டு, நம்மால ஆன ஒத்தாசை பண்ணிட்டு கௌரதையாத் திரும்பணும்.”

“சரி…! ஏதோ எனக்குத் தெரிஞ்சதை அவனுக்கு சொல்லிவைக்கணும்னு நினைப்பேன். நீ சொல்றே அப்படியே ஆகட்டும் ” என்றார் மாத்ருபூதம்.

“நீங்க ஒண்ணும் சொல்லித்தர வேண்டாம். மாசம் ரெண்டு லட்சம் சம்பாதிக்கிறான் மகன். சாமர்த்யம் இல்லாமலா அவனுக்கு இவ்ளோ சம்பளம் தரா.‌ சாமர்த்யம் இல்லாமையா வருஷத்துக்கு நாலு தடவை அமெரிக்கா போயிட்டு வரான். நம்ம காலம் வேற, அவா காலம் வேற”

“வாஸ்தவம்தான்.”

“ரெண்டு மாச சம்பளம் போனஸ் கொடுத்திருக்காளாம் அவனுக்கு. தீபாவளி பர்சேஸ்க்கு அழைக்கறான். போறோம். அவனோட எந்த ஆர்க்கியூமெண்ட்டும் வேண்டாம். அவன் கூட நிழல் மாதிரி போயிட்டு வந்துடுவோம்….!”

‘மௌனம் கலஹம் நாஸ்தி.’ என்பதைத்தான் மனைவி இவ்வளவு விரிவாகச் சொல்வதாகப் பட்டது மாத்ருபூதத்துக்கு.


பேரனும் பேத்தியும் லூட்டி அடித்தார்கள்.

காரில் போகும்போது தாத்தாப் பாட்டிக்குக் கதை சொன்னார்கள்.

தங்கள் பள்ளியைப் பற்றிச் சொன்னார்கள். சினேகிதர்களைப் பற்றிச் சொன்னார்கள்.

மழலை இன்பத்தை அனுபவித்தபடி கார்ப் பிரயாணம் சுகமாய் இருந்தது.

“இது வேணும்ப்பா…!”

“அது வாங்கித் தாப்பா…!”

குழந்தைகள் விரும்பியதை, எடுத்து எடுத்துத் டிராலியில் போட்டுக் கொண்டார்கள்.

தன் ஒரே மகனின் குழவிப் பருவமும், மழலையும் நினைவுக்கு வந்தன மாத்ருபூதத்திற்கு

அடுத்தடுத்த தளங்களுக்குப் போனார்கள்.

அது, இது என தெளும்பத் தெளும்ப ட்ராலியை நிறைத்தார்கள்.

குழந்தைகள் நகரும் படிக்கட்டில் ஏறி இறங்கி விளையாடினார்கள்.

கண்ணாடியாய் வழுக்கும் தரையில் சறுக்கிச் சருக்கி விளையாட்டுக் காட்டினார்கள்.

முதல் தளத்தில் வாங்க வேண்டிய ஏதோ ஒன்று நினைவுக்கு வர; இறங்கினார்கள்.

“இது வாங்கணும்…!”

மீண்டும் நடு மாடி வந்தார்கள் ‌‌.

சரியானத் திட்டமிடல் இல்லை.

இது மறந்துட்டேன். அது இப்பத்தான் ஞாபகம் வருது என்று, மாறி மாறி அல்லாடினார்கள்.

மணிக் கணக்காய் பர்சேஸ் செய்தார்கள்.


‘நான் உட்கார்ந்துகிறேன். எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்து கூப்பிடுங்கோ …!’

சொல்ல அவர் நாக்குத் துடித்தது

“இதோ பாருங்கோ. நாம மகனாத்துக்கு போனாலும் ஒரு விருந்தாளி மாதிரிதான் நடந்துக்கணும். ஏதாவது அதிகாரமா பேசினாலோ சட்டமாப் பேசினாலோ அறுத்துக் கட்டினுடுவா இந்தக் காலத்துப் பசங்க. தாமரை இலைத் தண்ணிப் போலப் பழகணும்.”

“ஆட்டத்தான் பிள்ளை, ஊட்டத்தான் பிள்ளை, அதிகாரம்னு வரும்போது அடுத்த வீட்டுப் பிள்ளையாப் பாக்கணும்கறது உங்களுக்குத் தெரியாதா என்ன..?”

‘ஓலா’ மகன் வீட்டை நெருங்கும்போது சொன்னாள் மனைவி.

“தேர்வறைக்குச் செல்லும் முன், டியூஷன் வாத்தியார் இந்தக் கேள்வி வந்தா இப்படி எழுது…!” என்று நுணுக்கம் சொல்லித் தருவதைப் போலச் சொன்னாள்.

அப்பா அசதியாய் நடப்பதைப் பார்த்த மகன் “ நாங்க ஷாப்பிங் முடிக்கறவர நீங்க இங்கே உட்காருங்கப்பா …”

இடம் காட்டினான்.

உட்கார்ந்தார்.

பிஸியான தீபாவளி ஷாப்பிங் காட்சிகளை ரசித்தார்.


ட்ராலிகளைத் தள்ளிக் கொண்டு, பில்லிங் செக்ஷனுக்கு வந்தாயிற்று.

கிட்டத்தட்ட அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

நான்கு அடி நீளத்துக்கு கம்ப்யூட்டர் பில் கைக்கு வந்தது.

கிரெடிட் கார்டு உராசிப் பில் செட்டில் செய்தான் மகன்.

பில் தொகையை பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது மாத்ருபூதத்திற்கு.

இளைய தலைமுறையினரின் பகட்டையும், வரட்டு கௌரவத்தையும் மூலதனமாக வைத்து நிறைய ஏமாற்றுகிறார்கள் என்று நன்றாகத் தெரிந்தது அவருக்கு.

‘இந்தக் கடை ரொம்ப காஸ்ட்லி.’

சாதாரணமான கடையில வாங்கி இருந்தால் செலவு கனிசமாசக் குறைந்திருக்கும்.’ நினைத்தார்.

சொல்லக்கூடிய ஸ்தானமும், அனுபவமும் உண்டுதான் அவருக்கு.

சொல்லவில்லை.

சொல்வதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்கிற இடத்தில் அமைதி காப்பதுதானே நல்லது.


ரெஸ்டாரன்ட் போனார்கள்.

வாயில் நுழையாத பெயரில் டிஷ்களை ஆர்டர் செய்தார்கள்.

வயிறு நிரம்பியது.

வாய்க்கு ருசியாக இல்லை எதுவும்.

பில் தொகையைப் பார்த்தபோது, ‘ஆரிய பவனில் பத்து நாட்கள் ரவாதோதை குடும்பத்தோடு சாப்பிடலாம்.’ என்று தோன்றியது அவருக்கு.

கண்டபடி செலவு செய்து உடம்பை கெடுத்துக் கொள்ளும் இளைய தலைமுறையினரின் செயல்களைப் பார்க்கப் பார்க்க மனசு வலித்தது.

சுட்டிக் காட்ட முடியாத கையாலாகாத்தனத்தை நினைத்து கழிவிரக்கம் வந்தது.

சிக்னலில் நின்றது கார்.

“பேபி டாய்…! பேபி டாய்…!”

கலர்க் கலராய், சின்னதும் பெரிசுமாய், பொம்மைகள்.

குழந்தைகள் அது வேண்டும் இது வேண்டும் என்று அரித்தன.

முன்னும் பின்னும் கார் கண்ணாடியை இறக்கி, வியாபாரியோடு பேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

சிக்னல் விழ இன்னும் 40 செகண்டுகள் இருந்தன.

சிக்னல் விழுவதற்குள் ஒரு பொருளாது விற்றுவிட தவித்துக்கொண்டிருந்தனர், ஒவ்வொரு வியாபாரியும்.


டிரைவர் சீட் கண்ணாடியை இறக்கிவிட்டான் மகன்..

பொம்மைக்காரன் கேட்டதைக் கொடுத்தான்.

பொம்மைகளை வாங்கி உள்ளே வைத்தான்.

கண்ணாடியை இறக்கிவிட்டான்.

பச்சை சிக்னல் விழுந்தது. டிராஃபிக்கில் மட்டுமல்ல. மாத்ருபூத்ததின் மனத்திலும்தான்.

‘பெரிய பெரிய மால்களிலும், ஸ்டோர்களிலும், உணவு விடுதிகளிலும், கேட்டதைக் கொடுத்துவிட்டு, சாலைக் கடைகளிலும், கூடைக்காரிகளிடமும் பேரம் பேசும் சராசரி மனிதர்களைப் போல தன் மகன் இல்லை’

மகனின் குணத்தை நினைக்க நினைக்கப் பெருமையாகவும் நிறைவாகவும் இருந்தது மாத்ருபூதத்திற்கு.

– 20-10-2022, ஆனந்த விகடன்.

இயற்பெயர்: வரதராஜன் அ புனைப்பெயர்: ஜூனியர் தேஜ் ரத்த வகை: O Positive பிறந்த தேதி: 04.06.1962 குடும்பம்: மனைவி, மகன், மருமகள் பணி: உதவித் தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு ஓய்வு பெற்று இப்போது பணி நீட்டிப்பில். 31 மே 2023 ல் ஓய்வு) கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *