திவ்ய திவலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 20, 2022
பார்வையிட்டோர்: 3,135 
 

விவாகமான நாலாம் நாள் படுக்கையறைக்குப் போனபோது எதுவிதசலனமும் முகவாட்டமும் இன்றி, அவள் என்னைப்பார்த்துக் கேட்டாள்

‘முன்பு உங்களுக்கும் விமலாவுக்கும் ஏதாவது தொடர்புகள் இருந்ததுண்டா?’

தீயை மிதித்தவன் போல நான் திடுக்கிட்டேன். எந்த இரகசியத்தை அவள் அறியக்கூடாது என்பதற்காக – கட்டிக்காத்து ஜாக்கிரதையாகப் பழகினேனோ அதை அவள் அறிந்துவிட்டாளா? அவள் கேள்வியால் ஏற்பட்ட அதிர்ச்சியைத் திக்கித் திணறிச் சமாளித்து- மெதுவாக, பவ்வியமாக அவளைப் பார்த்துக் கேட்டேன்.

‘என்ன சீலி அப்படிக் கேட்கிறாய்? என்மீது உனக்கு நம்பிக்கை இல்லையா?’

அவள் முகம் சிவந்தது. கன்னத்தில் குழி விழ மெதுவாக முறுவலித்தாள். என்னை நெருங்கி, வளையல்களணிந்த வலக்கரத்தால் என் கழுத்தைச்சுற்றி வளைத்து அணைத்து, முகத்தோடு முகம் பொருந்த, விழிகளில் ஏக்கம் ததும்ப, தனது இடக் கையால் எனது மார்பைத் தொட்டுச் சொன்னாள்.

‘நீங்கள் தான் என் தெய்வம். நான் இத்தெய்வத்தை ஆராதிக்க வந்த பக்தை. இந்த இதயத்தின் இயக்கத்தில் தான் என் இதயமும் இயங்கும். இந்த இதயத்தின் இன்ப, துன்ப, துயர, வேதனைத் துடிப்புகள் தான் என் இதயத்திலும் எதிரொலிக்கும். நீங்களின்றி நானில்லை. நீங்களும் நானும் ஒன்று. உங்களை நம்பாவிட்டால், நான் என்னையே நம்பவில்லை என்றல்லவோ அர்த்தம்’.

என்ன தோன்றியதோ தெரியாது திடீரென்று எழுந்து, குனித்து என் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றினாள். நான் அவளை அணைத்துக் கொண்டேன்.

சூதுவாது அறியாத குழந்தை உள்ளம் கொண்ட இவளை நான் ஏமாற்றுகிறேனா? முழுக்க முழுக்க என்னையே நம்பி, எனக்காகத் தன்னை- தன் வாழ்வை, யாவற் றையுமே அர்ப்பணித்திருக்கும் இவளுக்கு நான் துரோகம் செய்கின்றேனா? என் நெஞ்சம் துடிதுடித்தது. என் கண்ணில் நீர் அரும்பிற்று.

அவள் மெதுவாக என் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள். வாஞ்சையோடு என் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். என் கண்களில் கண்ணீர் வருவதைக்கண்டு, ‘கண்களில் துசி விழுந்து விட்டதா’ என்று கேட்டு, தன் சேலைத் தலைப்பி னால் என் கண்களில் ஒற்றினாள், இருதலைக் கொள்ளி எறும்பாக நான் துடித்தேன். வெளியே வீசிய இளங் காற்றில் மரஇலைகள் சலசலத்தன, விடிவிளக்கின் ஒளிச்சு வாலை ஆடி அசைந்தது. நானிருந்தகடற்கரையைாட் டிய அறையின், கிழக்குப்புற ஜன்னல் வழியாக நீலக் கடலலை’களின் இரைச்சல் கேட்டது. நாம் படுக்கையில் கிடந்து புரண்டோம். விமலாவுடன் பழகிய அந்த நாட்கள், மங்கிய நினைவுகளாக என்மனத்தில் மிதந்தது. பல்கலைக்கழகத்துக் கட்டிடங்களும், விரிவுரை மண்டபங்களும், நூல் நிலையமும், பனி மூடிய மலைச் சிக ரங்களும், முருகன் கோவிலும், பேராதனைப் பூங்காவும், உதிர் ந்த மலர்களைச் சுமந்து கொண்டு ஓடிச்செல்லும் மகாவலிகங்கை யின் அசுர வேகமும், பூக்களாய் பூத்துக் குலுங்கும் மரங்களும், தை மாசி மாதக் கடும் பனிக் குளிரும், எல்லாவற்றிலும் சோடியாய், சோடியாய், சோடியாய்…!

வாழ்க்கையில் நினைப்பதெல் லாம் நடப்பதில்லைத்தானே! அப்படி நினைப்பதெல்லாம் நடக்கும் என்றால், ‘சந்தித்து – அன்பு செய்து – பிரிகின்ற’ இந்த வாழ்க்கைக்கு அர்த்தமே கிடையாதே’.

நான் பெருமூச்சு விட்டேன். அருகில் ‘சீலி’ நிம்மதியாக உறங் கிக்கொண்டிருந்தாள். ‘தான் நம்பி வந்தவர், தன் நம்பிக்கைக்கு ஏற்றவர்’ என்ற தெம்பில் அவள் நிற்சலனமாக உறங்கிக் கொண்டிருந்தாள். உறங்குகின்ற அவள் முகத்தின் அந்த அமைதியை – சாந்தத்தை என்னால் தாங்கவே முடியவில்லை. என் இதயத்தில் ஒரு குறுகுறுப்பு, நான் அவளுக்குத் துரோகம் செய்கிறேனா?

அவளின் கரங்களி லொன்று என்மார்பின்மீது அடைக்கலம் தேடிக் கிடந்தது. என் நெஞ்சில் இடம் பெற்றிருக்கிற கபடம், இதயத்துடிப்புகளின் வழியாக அவள் கைகளுக்கு எட்டினாற் போல, அவள் தன்கையை எடுத்த்து, மறுபக்கமாகத் திருப்பி, நீட்டி நிமிர்ந்து படுக்கலானாள்.

நான் என்னுள்ளே நோக்கி னேன். என்னை நம்பிய ஒருயிருக்கு நான் செய்கின்ற துரோகத்தை எண்ணி மறுகினேன். என் வாழ்க் கையின் கறை படிந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் புழுக்களாக மாறி என் இதயத்தைத் துளைப்பது போலத் துடிதுடித்தேன். அந்த வேதனையைத் தாங்கமாட்டாது வாய்விட்டுக் கத்த வேண்டும் போலத் தவித்தேன்.

‘அவைகளை அவளுக்குச் சொல் லிவிடலாம்’ என்று எண்ணிய போது மனதில் ஒரு பாரம் குறைந்த மாதிரி-மனம் லேசான மாதிரி-அந்தரத்தில் அப்படியே அலாக்காக பறக்கிற சுகம்மாதிரி இருந்தது. அவைகளை அவளுக்கு சொல்லா விட்டால் என்வாழ்வில் நிம்மதியே கிடையாதென்று நான் உணர்ந்தேன்.

அவள் மறுபுறம் திரும்பிப் படுத் தாள். அரைத்தூக்கத்தில் முன குபவள் போல என்ன இன்னமும் தூங்கவில்லையா?’ என்று கேட்டாள்.

நான் அவள் கரங்களை எடுத்து மார்பில் புதைத்துக்கொண்டே கேட்டேன். “சீலி! நானொன்று சொல்லுவேன், கோவித்துக் கொள்வாயா?”

அவள் தன்கைகளை விடுவித்து என்வாயைப் பொத்தினாள். அப்படி எல்லாம் சொல்லக் கூடா தென்று மன்றாடினாள். ‘தெய்வத்திடம் பக்தன் கோவிக்கலாமா?’ என்று கேட்டாள்.

“நாம் நினைத்தமாதிரி தெய்வம் நடக்காவிட்டால் பக்தன் கோவிக்கலாம் தானே” என்றேன்.

அவள் சொன்னாள்.

“இந்தத் தெய்வத்திடம் இந்தப் பக்தை என்ன எது நடந்தாலும் கோவிக்க மாட்டாள்”

நான் என்னுள் அழுதேன். எனது கயமையை எண்ணி அழுதேன், அவள் அதைச் சொல்லு மாறு மன்றாடினாள். நான் என்னை மறந்தவனாகச் சொல்லத் தொடங்கினேன்.

தெய்வ சன்னிதானத்தில் நாம் செய்த சிறுமைகளை நினைத்து அழுது உருகுவது மாதிரி நான் சொல்லத்தொடங்கினேன், விமலாவுக்கும் எனக்கும் இடையில் திகழ்ந்த ஒவ்வொரு சிறு சம்பவத்தையும் அப்படி அப்படியே நான் அவளிடம் ஒப்படைத்தேன். ஒரு வித வெறியில், என்னை மறந்த நிலையில்- என் வாழ்வில் நிகழ்த்த அந்தரங்கங்களை எல்லாம் அவளிடம் விண்டுவைத்தேன்.

மழை பெய்து ஓய்வது போல, நான் பேசி முடிந்து அவளை நிமிர்ந்து பார்த்தேன்.

அவள் அழுதாள், தேம்பித் தேம்பி அழுதாள். ‘இந்தப் பாவியில் இவ்வளவு நம்பிக்கை வைத்த அவள் அழத்தானே வேண்டும், நல்லாய் அழட்டு’ மென எண்ணினேன்.

அவனின் முகத்தை நிமிர்த்தி “சீலி என்னுடன் கோபமா? என்னை மன்னிப்பாயா அம்மா” என்றேன்.

அவள் என் வாயைப் பொத்தினாள்.

“சிலி என்னுடன் கோபமா” என்றேன் மீண்டும். என்குரல் கம்மியிருந்தது. அவள் இல்லை யென்று தலையசைத்தாள், “அப்போ , நீ ஏன் அழுதாய்?” என்றேன். அவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள், கண்ணீரைத் துடைத்துவிட்டுச் சொன்னாள்.

“வாழ்க்கையின் இளமைப்பருவக் கனவுகளில், சிலர் தவறிவிடலாம், நான் அதைப் பொருட்படுத்த மாட்டேன், நான் அதற்காக அழவில்லை. இந்த ஏழைமீது இவ்வளவு அன்பு வைத்து, நம்பிக்கைவைத்து இவற்றையெல்லாம் சொன்னீர்களே அத்தான்-அந்த மகிழ்ச்சியின் கனத்தை என்னால் தாங்கமுடியவில்லையே அத்தான்’ என்று, என்மார்பில் தன் முகத்தைப் புதைத்து அழுதாள்.

நான் என்னுள் விம்மித்து நின்றேன். அவள் அன்புக் கடலில் நான் அணுவின் அணுவாகச் சிக்கித் தவித்தேன், ஆண்மகனாக நான் அவளின் பெருந்தன்மைக்கு முன்னால் எவ்வளவோ சிறியவனாக, துரும்பாக மாறிப் போனேன்.

என் மார்பில் புதைந்திருந்த அவள் முகத்தை நிமிர்த்தினேன். கீழைக் கடலில், அபர பட்சத்துப் பால்வண்ணச் சந்திரன் உதயமானான், நான் நிலவைப் பார்த்தேன். அவள் முகத்தையும் பார்த்தேன், அவள் முகம் களங்க மற்று நிர்ச்சலனமாக இருந்தது. நீலக் கடலலைகள் இரைந்து கொண்டே இருந்தன.

என் மனத்திலிருந்த கபடம் அகல, ஒருவரையொருவர், புரிந்து கொண்ட இலயிப்பில்- அந்தச் சுகத்தில், ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டோம். முந்திய மூன்று நாட்களில் இல்லாத இறுக்கம் அதிலிருந்தது. கிழக்கு ஜன்னலினாடாக களங்க மற்ற பால்வண்ண நிலவு எங்களைப் பார்த்துச் சிரித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)