கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 19, 2013
பார்வையிட்டோர்: 10,112 
 
 

மகாபாரதம் தொடங்கி சில நிமிடங்கள் ஆகியிருந்தன. தொலைக்காட்சிப் பெட்டி இருந்த வரதன் பெரியப்பா வீட்டுக்கு முண்டி அடித்து சென்றடைந்தபோது அவர் அடிப்பட்ட மிருகம் போல கர்ஜித்தபடி ஹாலுக்கும் படுக்கையறைக்கும் இடையே உலாத்திக் கொண்டிருப்பது வாசலிலிருந்து ரங்கனுக்குத் தெரிந்தது. வெளியே வரிசையாக அடுக்கப்பட்டிருந்த செருப்புகளுக்கு மேல் வழக்கத்துக்கு மாறாக அவரது ஒரு செருப்பு கவிழ்ந்து கிடக்க, மற்றொன்று வீட்டுக்கு உள்ளிருந்து வீசியது போல தெருவைப் பார்த்துக் கிடந்தது.

மாமரத்தில் இரண்டு கிளிகள் கூடடைவது போன்ற கம்பி வளைவுகள் கொண்ட இரும்புக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றான் ரங்கன். முதலில் வரும் நீண்ட வராண்டாவைத் தாண்டி ஹாலை அடைந்தபோதுதான் அவர் பெரியம்மாவைத் திட்டவில்லை எனப் புரிந்துகொண்டான். ஹால் ஓரத்தில் நான்கு பேர் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய மேஜைக்கு பக்கத்தில் வீணை சுவரில் சாய்ந்திருந்தது. சின்னச் சின்ன சதுர ஸ்டார் டஸ்ட் பேப்பர் தாங்கிகள் நாளைய ராமர் உற்சவ போளி, கைமுறுக்கு பட்சணங்களுக்காக மேஜை மேல் காத்திருந்தன.

அந்திப் பொழுது நரசிம்மர் போல அடுக்களைக்குள் நுழையாமல் ஹாலுக்குள்ளும் வராமல் வரதன் பெரியப்பாவைப் பார்த்தபடி மகாபாரத பீஷ்மர் பேச்சுக்குக் காதைக் கொடுத்திருந்தாள் பெரியம்மா. கைகள் தன்னிச்சையாக சிவப்பு நிற மூடி போட்ட கண்ணாடி பாட்டிலைக் குலுக்கிக் கொண்டிருந்ததில், பெரியப்பாவின் அவசரம் தெரியாமல் நிதானமாய் வெண்ணையாக மாறிக்கொண்டிருந்தன தயிர் ஏடுகள். ‘என்னடி, நான் சொல்றது?’ என வரதன் பெரியப்பா கேட்பதற்கேற்றார்போல பாட்டில் மெதுவாகவோ வேகமாகவோ சலக் சலக்கெனச் சப்தமிடும்.

ஜெயந்தி அக்காவைத் தேடிய ரங்கன், அவள் தோட்டத்தில் இருப்பதைப் பார்த்து சண்டை தொடங்குவதற்குள் திரும்ப வேண்டிய அவசரத்தில் ஓடினான்.

“..கொஞ்சமா உப்பு காரம் தடவிக்கலாம். நல்லா பொரட்டிக்க. தாளிக்காம சாப்பிடக்கூடாது பாத்துக்க.”

பக்கத்து வீட்டு சரீனா அக்காவுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

“அக்கா சண்டை ஆரம்பிச்சிடும் போலிருக்கு.கொஞ்சம் சீக்கிரம் வாயேன்” என நிற்காமல் கத்திவிட்டு வந்த வேகத்தில் திரும்ப வீட்டுக்குள் ஓடினான் ரங்கன். அவள் வராததைப் பார்த்து, “அக்கா வர்றியா இல்லியா?” என மூச்சிரைக்கத் திரும்பி வந்து புளியங்கொட்டைகளை உருட்டிக் கொண்டிருந்த அக்காவின் கையைப் பிடித்து இழுத்தான். வலது கையிலிருந்து தூக்கி எறியப்பட்ட புளியங்கொட்டைகள் கீழே விழுவதற்குள் தரையிலிருந்தனவற்றை சர்ரக்கென வழித்து கையில் அள்ளி வெற்றிச் சிரிப்பு சிரித்தாள் ஜெயந்தி. புளியங்கொட்டைகள் அனைத்தும் மொத்தமாக சரீனா பக்கத்தில் இருந்த ஜியாமெட்ரி பாக்ஸுக்குள் போனது.

“நீ இதெல்லாம் செஞ்சு கஷ்டப்படாதே. இன்னும் ரெண்டு மூணு நாள்ல பறிச்சு நானே உனக்கு உரைப்பா ஊறுகா போட்டுத் தரேன், சரியா?” என ஜெயந்தி சரீனாவின் குண்டு கன்னத்தை கிள்ளிவிட்டு ரங்கனுடன் சேர்ந்து ஹாலுக்கு ஓடினாள். “ஒரே ஒரு பாட்டு பாடேன்,” எனக் கேட்டபடி தொடர்ந்த சரீனாவைத் தன் பக்கத்தில் அமர்த்தித் தொலைகாட்சி பார்க்கத் தொடங்கினாள்.

இந்த வீட்டுக்கு வந்த நாளிலிருந்து பக்கத்து வீட்டு சரீனாதான் ஜெயந்தியின் நெருங்கிய தோழி. அவள் கல்லூரிக்குப் போகும் நேரம் தவிர மற்ற நேரங்களெல்லாம் சரீனாவோடுதான் கழிப்பாள். இருவர் வீட்டையும் பிரித்திருந்த சிறு காம்பவுண்டுச் சுவரில் சாய்ந்தபடி மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்கள். ஜெயந்தியைப் பாடச் சொல்லி கேட்கும் சமயங்களில் சரீனா வீட்டு கிணற்றடிதான் கச்சேரி மேடை. சரீனா கிணற்றடியில் பேசிக் கொண்டிருக்கலாம் என அழைத்தால், அன்று கச்சேரி கண்டிப்பாக உண்டு. முதல் தடவை பாடும்போது, சரீனா கண்ணை மூடிக் கொண்டு கேட்டது ஜெயந்திக்கு வேடிக்கையாக இருந்தது. ஸ்வரம் பிடித்துப் பாடும் சமயங்களில் அவள் கண்களிலிருந்து கண்ணீர் கரைந்து ஓடும். பாடலைப் பாதியில் நிறுத்தவும் விட மாட்டாள், பாட்டு முடிந்ததும் வழக்கம்போல ‘நல்லாப் பாடின’ எனச் சொல்லிவிட்டு வேறேதாவது விஷயத்தைப் பேசத் தொடங்கிவிடுவாள்.

நடு ஹாலில் ஈசி சேரைப் போட்டு வாசலைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார் வரதன். கடுகடுப்பு குறையவில்லை. எப்போதும் மகாபாரதம் பார்ப்பவர், வாசலைப் பார்த்து சத்தமாகச் சண்டையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

“மத்தியானச் சாப்பாடு வீட்டில் இல்லையாம். பதினொன்றரைக்கே கிளம்பிடுவார்னு நரேஷ் மாமி சொன்னா” என செயலாக்கத்துக்கு வழிவகுக்க உந்தி விட்டாள் பெரியம்மா.

“அதிசயம் பாரு..போடி இவளே. தெனம் வெளிச்சாப்பாடுதான் அவனுக்கு. அவன் பாக்கேட்டுலேர்ந்தாப் போறது?”

“இல்ல, மயிலை ராஜூவும் நாளைக்கே கிளம்பிடுவாராம். இன்னிக்கு ராத்திரிக்கு பைரவில பத்து மணி வரைக்கும் கச்சேரியாம். கார்த்தாலதானே பிரீயா இருப்பார், போய் பார்த்துட்டு வரலாமே?”

“போயிட்டு நாம வீட்டுக்கு வர்றத்துக்குள்ள இன்னும் நாலு சிபாரிசோட வந்து நிப்பாண்டி. இவ்ளோப் பெரிய வித்வான்னுதான் பேரு. ராஜூக்குத் தங்கறத்துக்கு வேற எடமே கிடைக்கலியா?” என வரதன் கத்திக் கொண்டிருந்தார்.

பெரியப்பாவின் சத்தம் தொந்தரவாக இருந்தாலும் ரங்கன் பெரிதாகக் கவலைப்படவில்லை. படுக்கையறை கதவருகே இருந்த சுவரில் சாய்ந்துகொண்டு தொலைகாட்சியில் வரும் தாடிக் கிழவன் எப்போது முடிப்பான் எப்போது சண்டை ஆரம்பிக்கும் எனச் சலிப்புடன் அவனுக்குப் பிடித்த உருளைக்கிழங்கு சிப்சைக் கொறித்தபடி அவன் காத்திருந்தான்.

ஜெயந்தி கச்சேரி செய்வது போல் படம் போட்ட கேசட்டுகள் டேபிள் மேல் சுவரோரமாக வரிசையாக அடுக்கியிருந்தன. கேசட் வெளியான அன்று ரங்கனுக்கு பெருமையாக இருந்தாலும் படத்தில் அவள் போட்டிருந்த புடவை அவ்வளவாக பிடிக்கவில்லை. காதில் டாலடிக்கலை, நல்ல மேக்கப் போட்டு பளிச்சினு புடவை கட்டியிருக்கலாம் எனக் குறைபட்டுக் கொண்டான். அக்காவுக்குப் பிடித்த கிளிப்பச்சைப் புடவையை ஏன் போடவில்லை எனப் பல முறை கேட்டுவிட்டான். பக்கத்து வீடுகளில் கேசட்டைக் கொடுக்கும்போது அவர்கள் படத்தை உற்றுப் பார்க்கும் சமயம் மிகவும் கூச்சமாக உணர்வான்.

அக்கா நன்றாக பாடுகிறாள் என யாராவது சொன்னால், பத்து வீடுகள் தள்ளியிருக்கும் தன் வீட்டிலிருந்து ஓடி வந்து முதல் ஆளாக அக்காவிடம் செய்தி சொல்லுவான். அதில் அவனுக்கு ரொம்பப் பெருமை. ஒரு முறை ஜெயந்தி கச்சேரி பற்றிய நாலு வரிக் குறிப்புக்காக அப்பாவிடம் அடம்பிடித்து ‘புதுச்சேரிச் செய்தி’ பத்து காப்பிகள் வாங்கி வைத்திருந்தான். கருப்பு வெள்ளையில் படம் சரியாக விழவில்லை என்றாலும், இரு மடங்கு பெரிய பிரேம் போட்டு வரதன் ஹாலில் மாட்டியிருந்தார்.

புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் செயலகம் சார்பில் திட்ட நடவடிக்கைகளைத் தயாரித்து முதல்வருக்குக் கொடுப்பது வரதனின் வேலை. வளைந்து கொடுப்பதற்கும் காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்கும் பல சந்தர்ப்பங்களை அளிக்கும் பொறுப்பு என்றாலும் கடமையிலிருந்து பிசகியதாகப் வரதனை அவரது விரோதி கூடச் சொல்லமாட்டான். சூரத்தனம் செயலில் மட்டும் இல்லாமல் சாதக பாதக தராசைச் சட்டெனக் கணிப்பதாலும் முதல்வர் அனுவலகத்தில் அவருக்குத் தனி மவுசுண்டு. பத்து வருடங்களுக்கு ஒரு முறை வரும் கட்டாய மாற்றங்கள் கூட அவருக்குச் சில வாரங்கள்தான் செல்லுபடியாகும். அதிகார நிழலை ருசிக்க எண்ணி அருகில் வந்தவர்கள் தாக்கு பிடிக்க முடியாமல் கட்டாய மாற்றம் வாங்கிக் கொண்டு காணாமல் போயினர்.

தனிப்பேச்சில் அவர் சொல்வதில்லை என்றாலும் அலுவலக ஊழியர்களுக்கு ஜெயந்தியின் திறமை பற்றி தெரியும். ஏதேனும் உள்ளூர் கல்யாணம் அல்லது பண்டிகை நாட்களில் ஜெயந்தியின் கச்சேரியை புக் செய்வார்கள். எல்லாரும் ஏதேனும் வேலைகளில் மூழ்கியிருக்க ஜெயந்தி மூன்று மணி நேரம் உருகி கரைந்துப் பாடிவிட்டு வருவாள். ஏதேனும் மெல்லிசைக் குழுவைக் கூப்பிட்டிருக்கலாம் எனப் பலர் அவள் காதுபடவே பேசினாலும், இசை ஆர்வமுள்ள ஓரிருவர் முழு கச்சேரியையும் கேட்டுவிட்டு கேசட் வாங்கிச் செல்வர் .

சமயங்களில், கடுமையான பயிற்சிக்கு இடையே இந்த நினைப்புகள் ஜெயந்தியைத் துன்புறுத்தும். அச்சமயம் பொன்னாச்சி அத்தையோ அம்மாவோ அவளது பாடலில் குறை கண்டுபிடிக்கும்போது எரிச்சல் அதிகமானாலும் வெயிலில் அலைந்த நாக்கு ஜிலீர் தண்ணீரில் இதம் தேடுவது போல பாட்டால் மனம் சாந்தமடையும். பாடலில் பாவத்தைத் வெளிப்படுத்த பெருமுயற்சி செய்தாலும் ஸ்ருதி லயக்கச்சிதத்துக்கானப் பயிற்சியாக அது மாறும். உச்ச ஸ்தாயியில் பாடும்போது பிசிறு தட்டக்கூடாது என பொன்னா டீச்சர் வலியுறுத்துவதால் பாவத்தில் தன்னை தொலைப்பது கைகூடாமல் போகிறதோ என ஜெயந்திக்கு சமயத்தில் அழுகையே வந்துவிடும். முயற்சி கைகூடும் சமயத்தில் கிடைக்கும் பாராட்டுகளைத் தாண்டி பொன்னா டீச்சரின் உருவம் அவள் முன் நிற்கும். உனக்காக நீ பாடுறே என மனம் சொன்னாலும், மற்றவர்கள் நேரில் சொல்லும் பாராட்டுகளை அள்ளி சேமித்து வேண்டிய சமயத்தில் எடுத்துப் பார்த்து ரசிக்க முடியாதே? அவ்வப்போது அவை வந்தால் மனம் அடையும் துள்ளலுக்கு இருபது வயது பெண் எப்படி ஆசைப்படாமல் இருக்க முடியும்.

டிசம்பர் கச்சேரிக்காக வரதன் பல சபாக்களை அணுகினார். நேற்று கூட மெட்ராஸ் சபாக்களுக்குச் சென்றவர் காலையில் திரும்பிய கையோடு இயலாமையை அடக்க முடியாதவராக மனைவியிடம் கத்திக் கொண்டிருக்கிறார். மற்ற சபாக்களில் காலை ஸ்லாட் கிடைக்கலாம் என இரண்டொருவர் விசிட்டிங் கார்ட் கொடுத்தனர். அங்கு போனால், கடைசி தினம் கூட சிபாரிசோடு சிலர் வரக்கூடும் என்பதால் எல்லாவற்றையும் புக் செய்யாமல் லெவந்த் ஹவர் ஸ்லாட் என்றே செல்லப் பெயருள்ள சில நேரங்களை வைத்திருந்தார்கள். அவை யாருக்கும் கிடையாது. கேசட் கேட்டவர்கள் இவ்வளவு தெய்வீகமாக பாடுபவருக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என வாழ்த்தினர். தனிச்சுற்றில் வரும் விமர்சனங்கள் மண் வாசனை மறையும் நேரத்தை விட வேகமாகக் கரைந்து விடும் என்பது தெரியாதவரில்லை என்றாலும் பெரிய கலைஞர்களின் திடமான முன்னிறுத்தலின் தேவையைச் சந்திக்க இயலாது வரதன் திணறினார்.

“நாம என்ன இல்லாததையா கேக்கப் போறோம். இவ கேசட்டைக் கொடுக்கிற இடத்தில அவரோட வார்த்தையும் சேர்ந்து மதிப்பு அதிகமாகும். நன்னா பாடறான்னு அவர் தானே போன தடவ சொன்னார்?”

ஜெயத்ரதன் நெருப்பு அம்புகளாய் பொழிந்து கொண்டிருக்க அர்ஜுனன் அவற்றைச் தண்ணீர் அம்புகளால் சுலபமாக அணைத்துக் கொண்டிருந்தான். ச்சு என சண்டைக்கு இடைக்கால தடை போட நினைத்த ரங்கனை ஜெயந்தி அடக்கினாள்.

“பைரவி மாதிரி இடத்தில கேக்கறத்துக்கும் கிருஷ்ண கான சபாவுக்கும் வித்யாசம் இருக்கில்லடி? இன்னும் எட்டு மாசம் இருக்கு, ஆனா பார்க்கணும் சார், கிட்டத்தட்ட எல்லா ஸ்லாட்டும் புக் ஆயாச்சுன்னு கூசாமச் சொல்றான். விளம்பரம்தான் பெரிசா இருக்கு. நேரடியா அவாளையேப் போய்ப் பாக்கிறதெல்லாம் ஒண்ணுத்துக்கும் ஒதவாது..இந்த வருஷமும் மார்கழி பஜனை இங்கியே பண்ணவேண்டியதுதான்..” – முடிஞ்சாச்சு, இப்ப என்ன என்பது போல் ஈசி சேரில் சாய்ந்து ஒருக்களித்துக் கொண்டார்.

“அதனாலதான மயிலை ராஜுவைப் பார்க்கலாம்னு சொல்றேன். அலையக்கூட வேணாமே, நரேஷ் சார் வீட்டுலியே பார்த்துடலாமே?”

வில்லொடிந்த ஜெயத்ரதன் கண்ணை மூடி அடுத்து எந்த ஆயுதம் வருமோ என வேண்டிக் கொண்டிருந்தான். அவள் சொல்வது காதில் விழாதது போல பெரியப்பா அலுப்பாக ஹ்ம்ம்… என கீழ் தாடையை அசைத்துவிட்டு யோசிப்பது போலக் கண்ணை மூடிக்கொண்டார்.

அடுத்த வாரம் வரை அப்படியே இரு என ஜெயத்ரதனுக்கு கண்ணைத் திறப்பதற்கான நீண்ட அவகாசம் தரப்பட்டது.

கோவிலுக்குப் போய் ராமர் உற்சவத் தேர் அலங்காரங்களைப் பார்க்கலாமா என ஜெயந்தி கேட்டவுடன் மகாபாரதத்தோடு ஞாயிற்றுக் கிழமையே முடிந்தது போலச் சோகமாக இருந்த ரங்கன் உற்சாகத்தில் வேகமாகக் கிளம்பினான். தடுக்க முயன்ற அம்மாவை ஒரு மணிநேரத்தில் வந்துவிடுவதாகச் சொல்லிச் சமாளித்தாள்.

ராமகிருஷ்ணா நகரிலிருந்து ரேணுகா தியேட்டர் முன் திரும்பியபோது தன் வீட்டை எட்டிப் பார்த்து வாசலில் யாரும் இல்லாததால் ரங்கன் ஏமாற்றமடைந்தான். ஜெயந்தி அக்காவுடன் போவதை ஒருவராவது பார்த்து ஏதாவது கேட்க வேண்டும் என ஆசைப்பட்டான்.

“அக்கா, பஸ்ஸில போலாம்கா?” – கால் வலிக்கும் பாவனையுடன் ரங்கன் கேட்டான்.

“இங்க இருக்கிற கோயிலுக்கு பஸ்ஸா..வாடா..அது வர்றத்துக்குள்ள போயிட்டே வந்திடலாம்” எனப் பேச்சை வளர்க்காது நடக்கத் தொடங்கினாள். ஹவர் சைக்கிள் கடைப் பையன் ரங்கனைப் பார்த்து சிநேகமாகச் சிரிக்க ரங்கனும் குதூகலமான மூடுக்கு வந்துவிட்டான். பாரதிதாசன் கல்லூரியைக் கடக்கும்போது எதிரே இருந்த கண்ணன் வீட்டைப் பார்த்தான். ஓடிப்போய் அவனையும் அழைத்து வரலாமா என அக்காவைப் பார்த்தவன், எப்போதும் இல்லாத இறுக்கம் அவளது முகத்தில் படந்திருக்கப் பார்த்து , சரி, நாளை ஸ்கூலில் சொல்லிக் கொள்ளலாம் என தன் எண்ணத்தைக் கைவிட்டான்.

அஜந்தா திரையரங்கத்துக்கு முன் இருக்கும் பாலத்தில் பூக்கடைகளை காலை பத்து மணிக்கு மேலும் கோவில் விசேசத்துக்காகத் திறந்து வைத்திருந்தனர்.

“அக்கா, பெரியம்மா பூ வாங்கிண்டு வரச் சொன்னா” என அவள் கையை பூக்கடை நோக்கி இழுத்தான்.

“இப்போ வேணாம். வரும்போது வாங்கிக்கலாம்டா.” என சிக்னல் கடக்க பிளாட்பாரம் ஏறினாள். ரங்கனின் விரல்களை இன்னும் அழுத்தமாகப் பிடித்துக்கொண்டாள். சிக்னல் போட்ட பின்னும் தாண்டி வந்த ஓரிரு இரு சக்கர வாகனங்களை பிளாட்பார ஓரத்தில் நின்றபடி விசில் அடித்து துரத்திய டிராபிக் போலிஸ் வண்டியைச் சுற்றிக் கொண்டு நடையைத் தொடர்ந்தார்கள்.

சித்திரை ராமர் பண்டிகைத் தொடக்க நாள் உற்சவத்தை வரதராஜபெருமாள் கோயில் வாசல் அலங்கார பேனர்கள் அறிவித்தன. கோவிலை நெருங்க நெருங்க காற்றில் கலந்திருந்த நாதஸ்வரம், மிருதங்க இசை மங்களகரமானச் சூழல் ஜெயந்தி மனதில் உற்சாகத்தைக் கொண்டு வந்தது.

கோவிலுக்குள் மணவாள மாமுனிகள் சந்நதிக்கு வலப்பக்கம் இருந்தக் கண்ணாடி அறைக்கு முன் சிறு இடத்தை மேடாக்கி அதன் மேல் ஜமுக்காளம் விரித்திருந்தார்கள். கச்சேரி மேடை போல் பெரிதாக இல்லாவிட்டாலும் பாடகரை இடிக்காமல் வயலின் வாசிக்கலாம். பிரகாரத்தைச் சுற்றி வருபவர்கள் கச்சேரி தொடங்கியாச்சா என ஒரு நிமிடம் நின்றுப் பார்த்துவிட்டு சிறிது தூரம் தள்ளி இருந்த கிணறுக்கு முன் அமர்ந்துகொண்டனர்.

ஜெயந்தி அர்ச்சனைச் சீட்டு கொடுக்கும் இடத்துக்கு அருகில் இருந்த கல் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டாள். பக்கத்தில் உட்கார்ந்து அங்கு வைத்திருந்தக் கற்கண்டுகளை ஒவ்வொன்றாக வாயில் போட்டபடி வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினான் ரங்கன்.

யாரோ புதிய பாடகர். உட்கார்ந்திருந்தாலும் கண்ணாடி அறைக் கதவு பாதி மறையும் உயரம். இடப்பக்கம் நரை மயிருடன் மிருதங்க வித்வான், வலப்பக்கம் வயலினில் சிறுவன். வாத்தியக் கோஷ்டியைப் பார்த்து மையமாகத் தலையாட்டிவிட்டு கொஞ்சம் பதற்றத்துடன் பாடத் தொடங்கினார்.

“கோசலைப் புதல்வனை பணிவாய் மனமே..”

சில நிமிடங்களில் சுற்றியுள்ள கோவில் சத்தங்களைத் தாண்டி அவரது பாடலில் கரையத் தொடங்கியது கூட்டம். தொடங்கிய சில நிமிடங்களில் பதற்றம் காணாமல் போயிருந்தது. கணீரென்ற குரல். பாடலின் ஏற்ற இறக்கங்களுக்கேற்ப அவரே உருமாறத் தொடங்கினார். வார்த்தைகள் மறையத் தொடங்கின. உணர்ச்சிகரமான நாடகம் நடப்பது போல, சொற்கள் சத்தங்களாக மாறின. பரதன் ராமனிடம் நாட்டுக்கு வரப் பணிக்கும் சத்தம் இறைந்து கெஞ்சியது. தன் பலங்கொண்ட மட்டும் சீதையைக் காப்பாற்ற சண்டையிட்ட ஜடாயுவின் சொற்கள் கதறல்களாக மாறின. செய்தி கொண்டு சென்ற ஹனுமான் சீதையை மரத்தின் மேலிருந்து பார்க்கும் காட்சிக்காக உலகத்தையே அவர் காலடியில் போட்டுவிடலாம் போல ஆதூரம் நெஞ்சை நிறைத்தது.

சுருதி சுத்தத்தை கவனிக்கப் பழக்கப்பட்ட ஜெயந்திக்கு பாடுபவரே இசையாக மாறிய விந்தையை நம்ப முடியவில்லை. பக்தி பாவத்தை உணரப் பிரயத்தனப்பட்ட அவளது பயிற்சிகள் தன் முன் சிதறுவதைக் கண்டாள். பக்தியையும் தாண்டி அவரது பாடல் வேறெங்கோ சஞ்சாரிப்பதை உணர்ந்தாள். பாடலைக் கொண்டு நிறுத்தியிருந்த நிலையில் ஒவ்வொரு ஸ்வரமும் தனி இசைவெளியாக ஒலிக்கத் தொடங்கியது. எத்தனை அன்பையும், உணர்ச்சியையும் ஒவ்வொரு ஸ்வரத்திலும் பாடகர் செலுத்தியிருக்க வேண்டும் என நினைக்க நினைக்க ஜெயந்தியின் கண்களில் அவளறியாமல் கண்ணீர் சுரந்தது.

உயரமான மலை உச்சியை அடைந்த பின்னும் பாடலை மேலும் மேலும் இழைத்து மெருகேற்றி நீ எங்கு எடுத்துச் செல்லப் போகிறாய் என கதற வேண்டும் போல ஜெயந்திக்குத் தோன்றியது. இலங்கை தன்னோடு பத்து தலைவீழ சரிந்தவனுக்காக ஒரு நொடி வருந்தினாள். ராவணனுக்காக மனம் கரைவதைக் கண்டு அதிர்ந்தாள்.

எல்லையில்லா உணர்வு வெளியில் பக்தி பாவம் காணாமல் போனதை உணர்ந்தாள். வாழ்வில் இதுவரை அவளுக்குக் கிடைக்காத கச்சிதமான நொடி கையில் சிக்காமல் நழுவிக் கொண்டே போக்கு காட்டுவது போல அவளுக்குத் தோன்றியது. ஒரு எல்லைக்கு மேல் செல்ல முடியாமல், கனிந்து உருகி அசைந்து அசைந்து பாடல் தணியும்போது அந்த நொடியைக் கைப்பற்றிய களிப்பு அவளைப் பரவசமடைய வைத்தது. எதிர்பாராத அந்த கணம் கைகூடி லட்சிய உருப்பெற்று விட்டது. கொடுத்து வைத்த அந்த ஸ்வரங்கள் தங்கள் இயல்புக்குத் திரும்பி சொற்களாக உரு பெற்றன. ராமனின் பாதுகைகளைத் திரும்ப அளித்த பரதன் கோசலைப் புதல்வன் அரசாட்சிக்குத் திரும்புவதைப் பார்த்து நின்றிருந்தான். மீதமிருந்த இசை கோவிலைச் சுற்றியபடி ஒலித்துக் கொண்டிருந்தது.

பாடல் முடிவடைந்து கோவில் மணியோசைக் கேட்கத் தொடங்கியது. விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லியபடி ஒரு கோஷ்டி கோவில் பிரகாரத்தைச் சுற்றி அவளைக் கடந்து போயிற்று. புது உலகுக்கு வந்தவள். அருகில் ரங்கன் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டாள்.

தன்னையே திட்டியபடி வேகவேகமாக சுற்றும் முற்றும் தேடத் தொடங்கினாள். பிரகாரத்தை ஒரு முறை வேகமாகச் சுற்றி வந்தவள் ரங்கனைக் காணாமல் பதற்றத்துடன் அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தாள்.

மீண்டும் கச்சேரி நடக்கும் கண்ணாடி அறைக்கு அருகே வந்து கோபுரத்தைப் பார்த்து அவசர அவசரமாக கன்னத்தில் போட்டுக் கொண்டாள். பதற்றத்தில் கோவில் கிணறு, புஷ்கர்ணிக் குளம் என ஓடியோடி எல்லா இடங்களிலும் தேடினாள். தேசிகன் சந்நிதிக்கு அருகில் இருந்த கோயில் அலுவலகத்தில் பார்க்கலாம் என ஓடியபோது இரு கைகளில் புளியோதரை தொன்னைப் பிரசாதத்துடன் ரங்கன் வந்து கொண்டிருந்தது தெரிந்தது. அவன் இளித்தபடியே அருகில் வர, “எங்கடா போயிருந்தே?” எனக் கடிந்துகொண்டு அவன் தலையில் குட்டினாள். படபடப்பு குறைந்தாலும் அழுகை நிற்கவில்லை.

வீட்டுக்குத் திரும்பும் வழியில், அஜந்தா தியேட்டர் எதிரில் பூக்கடையைத் திரும்பப் பார்த்தாள். பூக்காரியின் இடுப்பில் உட்கார்ந்திருந்த குழந்தை அழுது கொண்டிருந்தது.

வெயிலில் காய்ந்த மல்லிகைப் பூக்கள் மேல் தண்ணீர் தெளித்து கூடையை உலுக்கிக் கொண்டிருந்தாள் பூக்காரி. ரோஜாப் பூக்களைத் திருப்பிப் போட்டு தண்ணீர் தெளித்து அப்போது பூத்தவைப் போல புதிதாக்கிக் கொண்டிருந்தாள் அவள். வீட்டுக்கு வாங்கிப் போகலாம் என நினைத்திருந்த ஜெயந்தியால் இக்காட்சியைப் பார்க்க முடியவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டு விறுவிறுவென ரங்கனை இழுத்தபடி கடையைக் கடந்தாள்.

“மூஞ்சிய அலம்பி ரெடியாகு. மயிலை ராஜுவைப் பைரவிலயே போய் பார்த்துடலாம்” என ஜெயந்தி உள்ளே நுழைந்தவுடன் சொன்ன வரதனுக்கு –

“அவர் பாடி நான் என்ன கேக்குறது அப்பா?” என நிதானமாகச் சொல்லிவிட்டு சரீனாவைத் தேடி தோட்டத்துக்குப் போனாள் ஜெயந்தி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *