திருவிழா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 28, 2022
பார்வையிட்டோர்: 1,956 
 
 

(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருவிழாக் கோலம் பூண்டு திருவாகனமேரிக் கடவுளர் திருக்கோலமாக வீதி வலம் வரும் காட்சி பக்தி சிரத்தையுள் ளவர்களுக்கு நெஞ்சை நிரப்பும் காட்சிதான்.

இந்தத் திருக்கோலம் கடவுளுக்கு மட்டுமல்ல. மனிதனுக்குமுண்டு.

வாழ்க்கை சிலருக்குத் திருக்கோலமாகத் திருவிழாக் கோலமாக அமைந்து விடுகிறது! பலருக்குத் தீவெட்டி பிடிக்கும் வேலை தான் மிச்சம்!

முருகப்பனுக்குத் தீவெட்டி பிடிக்கும் வேலை என்னவோ இல்லைதான். ஆனால் தீயோடு விளையாடும் வேலை அவனுடையது! பசியில் கொதிக்கும் வயிற்றுக்குள் நெருப்பை அள்ளிப் போட்டு நிரப்பவில்லை அவன், உடம்பைத்தான் நெருப்பில் வாட்டியெடுத்தான்.

முருகப்பன் ஹோட்டல் சமையல்காரன்.

ஒரு காலத்தில் சாதாரண தேநீர் கடை சிப்பந்தியாகத் தான் இருந்தான் முருகப்பன். இன்றைய பெரிய ஹோட்டல் அன்றைய தேநீர் கடையாக இருந்த பொழுது தான் அவன் அங்கு வேலைக்குச் சேர்ந்தான். சமையல் வேலையில் அவன் கைவைத்த அன்று முதல் கடையில் வியாபாரம் பெருகியது. அவன் கையில் என்ன மந்திர சக்தி இருந் ததோ? அந்த வட்டாரத்து மக்கள் அவன் கைபட்ட உணவில் தனி ருசி இருப்பதாகப் பேசிக் கொண்டார்கள்.

நாளுக்கு நாள் சமையல் சட்டிகள் பெரிதாகிக் கொண்டே வந்தன. கல்லாப்பெட்டி என்றழைக்கப்பட்ட கல்லிப்பெட்டி இப்பொழுது தேக்குமர மேசையாக மாறி யது. சாப்பாட்டுப் பகுதி, தேநீர் பகுதி, முதலாம் கிளாஸ், இரண்டாம் கிளாஸ் என்றெல்லாம் உருவாகித் தேநீர் கடை ஹோட்டலாக மாறியது! காஷியரின் ஆசனம் கூடச் சற்று பெரிதாகத் தென்பட்டது. இப்பொழுதெல்லாம் பட்டணத் திலே முதல் தரமான பெரிய ஹோட்டல் அது ஒன்று தான். இந்த மாற்றங்களெல்லாம் முருகப்பனை அசைக்கவில்லை! அவன் இன்றும் சமையல்காரனாகத்தான் இருந்தான்.

பெரிய விறகு அடுப்புகளிலே நாலு பெரிய சட்டிகளை ஒரு காலத்தில் வைத்து முருகப்பன் சமையல் செய்வது பார்ப்பதற்கு ஒரு அலாதியான காட்சிதான், சட்டிக்குள் இருக்கும் பதார்த்தங்களை ருசி பார்க்க முனைவது போல தீ நாக்குகள் எழும்பிப் பின்வாங்கும். அந்த நேரத்தில் முருகப்பனின் கையும் அவன் கைக்குள் சிக்கியிருக்கும் கரன் டியும் சுற்றிச் சுழன்று வரும் லாவகம், கைதேர்ந்த சிலம்ப விளையாட்டுக்காரனைத்தான் ஞாபகப்படுத்தும். அந்த வேளையிலே சற்று ஒதுங்கி நின்று பக்கவாட்டில் அவன் உடம்பைக் கவனித்தால் நெருப்புக்குப் பக்கத்தில் வைத்த மெழுகுச் சிலை எப்படி உருகிப் பளமளக்கும்? அப்படிச் சுடர் விடும் அவனது கறுத்த மேனி!

ஆயிற்று,

சமையல் வேலை முடிந்து நிமிர்ந்து ஆள்காட்டி விரலை வளைத்து நெற்றியில் வைத்து குறுக்கே ஒரு இழுப்பு, சர்…ர்! என்று தண்ணீ ர் வடியும். தண்ணீ ரா அது? உழைப்பால் உடலைப் பிழிந்த சாறு! வியர்வை நீர்.

மற்றவர்கள் நினைப்பது போல் அவனுக்கு அந்த ஒருவேலை சுமையல்ல! கைவந்த ஒரு விளையாட்டு! அவன் மனைவி ராசம், மகள் நளினி, இவர்கள் வாழத்தான் அவன் அப்படி விளையாடினான். வேடிக்கை காட்டினான்!

உலகம் ஒரு நாடக மேடையென்றால், சமையல்கார முருகப்பனும் ஒரு நடிகன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஏனென்றால் இந்த சமையல்கார வேடத்தைக் கலைந்து விட்டு அந்த ஹோட்டலில் இருந்து. வெளியேற வேண்டிய நாள் ஒன்று அவன் குறுக்கே வந்து நின்றது.

முதலாளியின் தம்பிக்கும் முருகப்பனுக்கும் வாய்த்தர்க் கம், எதிர்பாராத சமயத்தில் முதலாளியின் தம்பி முருகப் பனை அடித்து விட்டான். அவனை ஒரே பிடியில் பிழிந்து அடுப்புக்கு நெருப்பாக்கி இருப்பான் முருகப்பன். ஆனால் மற்றவர்கள் விடவில்லை. நாலைந்து பேர் வந்து அவனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். அதற்குமேல் முருகப்பனால் அங்கே இருக்க முடியவில்லை. வெளியேறி விட்டான்.

அந்த ஹோட்டலில் அவன் சேரும்பொழுது தனிக் –கட்டையாகத்தான் இருந்தான். இன்று அதை விட்டு வெளியேறும் பொழுது மனைவியும் ஒரு குழந்தையும் இருந்தனர். அது தான் அவன் வாழ்க்கையின் மிஞ்சிய மதிப்பு!

வாழ்க்கை இதோடு முடிந்து விடுகிறதா? அவன் திரும் பவும் ஒரு தேனீர் கடையில் போய்ச் சேர்ந்தான். அவசி யம் ஏற்படும் பொழுது அடுப்பிலும் மற்ற நேரங்களில் மேசையிலும் அவன் கைகள் விளையாடின.

இன்பத்திலும் துன்பத்திலும் இடறி விழுபவன் தான் மனிதன். அதற்குத்தான் பெயர் வாழ்க்கை , ஆசையும் பாசமும் அதற்கு ஊண்டுகோல். உயிர் ஊட்டும் சத்து!

அன்று மட்டக்களப்பில் திருவிழா, கிழக்கு மாகாணமே சாதி மத பேதமின்றித் திருக்கோலம் பூண்டு திரளும் மாமாங்கப் பிள்ளையார் கோயில் திருவிழா!

அன்று காலை முருகப்பன் கடைக்கு போகப் புறப் பட்டபொழுது மனைவி ராசம் சொன்னாள்.

“இன்று தான் கடைசித் திருவிழா கொஞ்சம் நேரத் தோடு வாங்க என்ன?”

“சரி”

“இனுமொன்று!” அவள் வார்த்தையை இழுத்துப் பிடித்தாள்.

“என்ன?”

“இந்த முற எப்படியாவது ஒரு செப்புக்குடம் வாங்கவேணும்; கடையிலே கொஞ்சம் காசி வாங்கி வாங்க!”

“செப்புக்குடம் வாங்குவதென்டா குறஞ்சது முப்பது ரூவா வேணுமே?”

“அவ்வளவு பெரிய குடமா வாங்கப் போறம்? பத்து ரூபாக் கெல்லாம் வாங்கலாம் போதும்.”

முருகப்பன் ஒன்றும் பேசவில்லை. கடைக்குப் போய் விட்டான்.

ஆசை என்பது மனித உள்ளத்தின் ஊற்று நீர்! அது எப்பொழுதும் ஏதாவது ஒன்றுக்கு அஸ்திவாரம் இட்டுக் கொண்டேதான் இருக்கும்!

ஆனால்! ராசத்துக்கு ஆசை வருவதும் அதிசயமாகத் தான் வரும். அவள் விவாகம் செய்து நாலு வருசங்களாகின்றன. இந்த நாலு வருசங்களில் ஒரே ஒரு முறைதான் அவளுக்கு ஆசை வந்தது. அதுவும் குழந்தை நளினி பிறந்த பிறகு தான் அதுவும் வந்தது.

குழந்தை நளினிக்குக் காது குத்தி அந்தத் துவாரத்தில் தங்கத்திலான ஒரு தூக்கனம் போட்டுப் பார்க்க வேண்டு மென்று ஆசைப்பட்டாள். அந்த ஆசை இரண்டு வருடங் களுக்குப் பிறகு எப்படியோ நிறைவேறியது. இப்பொழுது மற்றொரு ஆசை செப்புக்குட ரூபத்தில் எப்படியோ அவள் மனதில் வந்து விழுந்திருந்தது.

ஆசைகளைத் துரத்தி விட்ட சந்நியாசியல்ல அவள். ஆசைகளுக்கு இடம் போட்டுக் கொடுக்கும் வாழ்க்கை வசதிகள் தன் கணவனுக்கு அமையவில்லை என்ற காரணத் தினால் விருப்பு வெறுப்புகள் அற்ற ஒரு வாழ்க்கை சூழ் நிலையைத் தனதாக்கிக் கொண்டிருந்தாள்.

இந்தச் சமயத்தில் தான் அவள் உள்ளத்தில் வந்து விழுந்தது அந்த ஆசை. இரண்டு மாதங்களுக்கு முன் ராசம் தன் மாமியின் வீட்டுக்குப் போயிருந்தாள், அவள் மாமியும் அப்படியொன்றும் வசதியானவள் அல்ல. ராசத்தைப் போல் தான் அவர்கள் வாழ்க்கையும். என்றாலும் அந்த வீட்டில் , செப்புக் குடம், குத்து விளக்கு. வட்டில் போன்ற செப்புப் பாத்திரங்கள் நாலைந்து இருந்தன. வீட்டில் செப்புப் பாத்திரங்கள் இருப்பது ஒரு மங்களமான காட்சி யல்லவா?

ராசத்திடம் செப்புப் பாத்திரம் என்று சொல்லக்கூடிய மாதிரி எதுவும் இருக்கவில்லை. ஒரே ஒரு எண்ணெய் விளக்குத்தான் இருந்தது. அதுவும் எண்ணெய்க் கரி பிடித்து இரும்பு விளக்காகக் காட்சியளித்தது. தன் வீட்டி லும் குறைந்தது ஒரு செப்புக் குடமாவது இருக்க வேண்டாமா? இந்த ஆசை அவள் மனதில் விழுந்தது. அதோடு இந்தத் திருவிழாவிலே அதை வாங்கிவிட வேண்டும் என்ற திட்டமும் இருந்தது.

முருகப்பன் இத்தகைய சிந்தனைகளில் மனதை மேய விட்டு உடம்பைக் கடை வேலையில் வளைத்துக் கொண் டிருந்தான்.

ஆயிற்று, நகரசபை மின்சார நிலையத்தில் இருந்து வளமையாக ஆறு மணியை அறிவிக்கும் ஊது குழல் ஓசை எழுப்பிற்று. முகத்தை அலம்பித் துவாலையில் துடைத்தபடி. முதலாளி மேசை என்றழைக்கப்படும் அந்தப் பச்சை நிறக் கல்லிப் பெட்டிக்கு முன்னால் வந்து நின்றான் முருகப்பன்.

தொழிலாளி வேலியைத் தாண்டி முதலாளி என்ற இலக்கண வரம்புக்குள்ளும் கட்டுப்படாது. சற்று இடைக் காலத்தில் முன்னேறுவதற்கு மூச்சு விட்டுக் கொண்டிருந்த அந்தக் கடைச் சொந்தக்காரர் தலையைத் தூக்கி முருகப்பனைப் பார்த்தார்.

“என்ன முருகப்பா?”

“இன்று திருவிழாவுக்குப் போக வேணும். அது தான் கொஞ்சம்…”

“அப்படியா சரி! வேறென்ன வேண்டும்!”

“செலவுக்குக் காசி கொஞ்சம் வேணும்!”

“ச்சூ… ச்சூ…! நேரத்தோடு சொல்லி இருக்கக் கூடாதா முருகப்பா?”

அவர் கை கல்லாப் பெட்டியை ஆராய்ந்தது. இரண்டு ரூபாய் நோட்டு, ஒரு ரூபாய் ஐம்பது சதம் என்று எல்லாமாக ஐந்து ரூபாய் அவன் கைக்குள் வைத்தார்.

“இந்தா முருகப்பா இப்போதைக்கு இவ்வளவு தான் இருக்கிறது…”

அவன் காசு கேட்டு இல்லையென்று சொன்ன நாட்கள் மிகவும் குறைவு தான். முருகப்பன் அவர் முன்னால் எதுவுமே பேசவில்லை. படி இறங்கி வீட்டை நோக்கி நடந்தான்.

தெருவில் நடப்பது அபாயம் போல் இருந்தது. திரு விழாவுக்குப் போவதும் வருவதுமாக இருந்த கார்களும் பஸ்களும் ஊர்வலம் செல்வது போல் காட்சியளித்தன! மனித நடமாட்டமும் அப்படித்தான். கரும்பு, தோடம் பழம் சர்பத் போத்தல் இவைகளைத் தூக்க முடியாமல் சுமந்து கொண்டு செல்பவர்கள் ஒரு புறம், பெட்டி பாய் விளையாட்டுச் சாமான்களுடன் செல்பவர்கள் மற்றொரு புறம். இவர்களுக்கு மத்தியிலே திருவிழாவை நோக்கி ஆடை கசங்காமல் அழகு நடை போடுபவர்கள், இத்தியாதி அவசரமும் அழகு நடையும் ஒன்றையொன்று முட்டி மோதித் தள்ளித் தடுமாறிக் கொண்டிருக்கும் அந்தத் தெருவிலே எப்படியோ வளைந்து நெளிந்து நடந்து வீடு வந்து சேர்ந்தான் முருகப்பன், நன்றாக இருட்டி விட்டது.

அவன் முகபாவத்தைப் பார்த்ததும் ராசத்துக்கு விசயம் புரிந்து விட்டது.

“என்ன? ஓங்களத்தான்! திருவிழாவுக்கு எங்க போக; உடம்புக்கு ஒரு மாதிரியா இருக்கு!”

“ஏன் உடம்புக்கென்ன?”

“தலையிடி மயக்கம் வராப்பிள இருக்கு….!”

“அதெல்லாம் சரியாகிடும்; கெதியா வேலைய முடிச் சிட்டு வெளிக்கிடு…”

“குழந்தையும் தூங்கிட்டாள்…!”

“தூங்கினா என்ன ராசம்? இரண்டு மூன்று நாளா ஒரே கருப்பு பலூன் எண்டு கேட்டுக் கொண்டே இருந்தது. பாவம் ஏமாந்து போகும், எழுப்பிச் சட்டையப் போடு; நான் தூக்கிக் கொள்ரன்”.

ராசத்துக்கு அதற்கு மேல் பேசுவதற்கு இடம் இருக்க வில்லை; பேசாமல் திருவிழாவுக்குப் போகப் புறப்பட்டாள்.

குழந்தை நளினியைத் தோளில் போட்டுக் கொண்டு முன்னால் நடந்தான் முருகப்பன் பின்னால் நடந்தாள் ராசம். பாம்பு ஊர்ந்து கொண்டிருப்பது போல் நகர்ந்து கொண்டிருந்த அந்தக் கும்பலோடு அவர்களும் கலந்து கொண்டனர்.

முருகப்பன் நடந்து கொண்டிருந்தான்; அவன் மனம் எங்கெல்லாமோ சுற்றிச் சுழன்று அலைந்து வந்தது.

பழைய முதலாளியை ஒரு முறை நினைத்துக் கொண் டான். அவன் அந்தக் கடையில் உழைத்துக் கொண்டிருந்த பொழுது தான் அவர் உயர்ந்தார். அவன் இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறான் உயரவில்லை.

இப்பொழுது மென்ன அவன் போனால் வேண்டா மென்றா சொல்லுவார்? முதலாளியின் தம்பி இருப்பதால் அவன் தான் போக மறுக்கிறான். தெருவில் முதலாளி கண்டால் சிரிக்காமல் போக மாட்டார்! முதலாளிகளில் ஒருவர், நன்றி மறவாத நல்லவர்!

யார் நல்லவராக இருந்தும் அவனுக்கென்ன லாபம். மனைவியின் செப்புக்குட ஆசையைப் போக்க முடியாதவ னாக மரக்கட்டையாகத்தானே போய்க் கொண்டிருக்கி றான்!

நெருக்கடியான கூட்டமும் கூச்சலும் கோயில் வந்து விட்டதை அறிவித்தன. அவன் தலையைத் தூக்கித் தெருவைப் பார்த்தான். கோயில் பக்கம் இருந்து வந்த கார் ஒன்று அவன் கண்ணில் பட்டது. என்ன நினைத்துக் கொண்டானோ கையைக் காட்டினான்; கார் நின்று விட்டது. காரை நெருங்கினான் முருகப்பன். பழைய முதலாளி சாரதியின் இடத்தில் இருந்தார்.

“யார் முருகப்பனா! கோயிலுக்கா?”

“…”

“என்ன வேணும் முருகப்பா?”

“இருபது ரூபா காசு தாங்க!”

முதலாளி ஆச்சரியத்துடன் அவன் முகத்தைப் பார்த்தார். அந்த முகத்தில் எவ்வித உணர்ச்சியும் தெரிய வில்லை .

அடுத்த நிமிசம் அவன் முகத்துக்கு முன்னால் இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்கள் விரிந்தன! அதை வாங்கிச் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு பின்னால் நகர்த்தான் முருகப்பன்.

முதலாளி இலேசாகச் சிரித்தார். அவர் தெஞ்சு நிறைந்திருந்தது. கார் மெல்ல நகர்ந்தது.

-1961, பித்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்ச் 1995, மல்லிகைப்பந்தல் பதிப்பகம், யாழ்ப்பாணம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *