திருவண்ணாமலை சுவாமிகள் பெங்களூர் வந்திருக்கிறாராம். நாளைக்கு 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வருவதாக தன் செகரட்டரியிடம் சொல்லி சந்தானத்திடம் சொல்லச் சொன்னாராம்.
சுவாமிகளின் செகரட்டரி இப்பதான் சந்தானத்திற்கு போன் பண்ணிச் சொன்னார்.
இந்த நேரம் பார்த்து அவரின் அருமை மனைவி கமலா தன் தாயாருக்கு உடம்பு சரியில்லை என்று ஸ்ரீரங்கம் சென்று விட்டாள். மூன்று நாட்கள் கழித்துதான் திரும்பி வருவாள்.
மனைவி வீட்டில் இல்லாவிட்டாலும் சுவாமிகளை வரவேற்று மரியாதை செய்ய சந்தானம் தயாரானார். சுவாமிகள் அவருக்கு நன்கு அறிமுகமானவர்தான். இதற்கு முன் மூன்று முறை வீட்டிற்கு வந்திருக்கிறார்.
பத்து வருடங்களுக்குமுன் சுவாமிகளின் அறிமுகம் ஏற்பட்டதிலிருந்து சந்தானத்திற்கு வாழ்க்கையில் ஏறுமுகம்தான். முதல் தடவை அவரை திருவண்ணாமலை சென்று பார்த்தபோது, பெங்களூரில் ஒரு பெரிய நிலம் வாங்குவது சம்பந்தமாக சுவாமிகளிடம் கருத்துக் கேட்டார். சுவாமிகள் ஒரு பூடகமான புன்னகையுடன், “அந்த நிலத்தை உடனே வாங்கு….நீ போகும் உயரம் மிகப் பெரியது” என்றார்.
சந்தானம் உடனே அந்த இடத்தை வாங்கினார். அடுத்த ஆறுமாதம் கழித்து கட்டிடம் கட்டுவதற்காக நிலத்தை தோண்டியபோது “டொங்” என்று எதோ ஒரு பாத்திரத்தில் இடிப்பது போன்ற ஒரு சத்தம் கேட்டது. அப்போது மணி மாலை ஆறு. வெள்ளந்தியாக தோண்டிக் கொண்டிருந்தவனை “நாளைக்கு வா” என்று வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு சந்தானம் ரகசியமாக தோண்டியபோது ஒரு பெரிய பித்தளைப் பாத்திரம் நிறைய ஏகப்பட்ட தங்கக் காசுகள்.
அரசாங்கத்திடம் சொல்ல சந்தானம் என்ன முட்டாளா? இன்றுவரை அதைப்பற்றி சந்தானம் யாரிடமும் மூச்சு விடவில்லை. தன்னுடைய கார்மென்ட் தொழிற்சாலையை பெரிதாக விரிவு படுத்தி கொள்ளை லாபம் பார்த்தார்.
அதிலிருந்து சந்தானத்திற்கு திருவண்ணாமலை சுவாமிகள் என்றால் ஏகப்பட்ட மரியாதை. அவரது ஆசிரமத்தின் வளர்ச்சிக்கென ஒரு கோடி ரூபாய் தனது டிரஸ்டின் மூலம் கொடுத்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு, சந்தானம் அனுப்பிய வெள்ளைநிற பென்ஸ் காரில் சுவாமிகள் வந்து இறங்கினார்,
சுவாமிகளை மரியாதையுடன் வரவேற்று ஏ.ஸி. ஹாலின் சோபாவில் அமர வைத்து, வழக்கம்போல் அவருக்கு பாத பூஜை செய்தார் சந்தானம். இரட்டைப் பிறவிகளான தன் அழகிய பருவ மகள்களான மேனகா-ஜனகாவை சுவாமியை நமஸ்கரிக்கச் செய்தார். நமஸ்கரித்தவுடன் அவர்கள் இருவரும் மாடியில் அமைந்திருக்கும் தங்களுடைய அறைகளுக்குச் சென்று விட்டனர்.
“எங்கே உன் பாரியாள்?” சுவாமிகள் தனது நீண்ட வெண் தாடியை தடவியபடி கேட்டார்.
“அம்மாக்கு உடம்பு சரியில்லைன்னு திருச்சி போயிருக்கா சுவாமி.”
“திருச்சில மலையா…குளிரா” என்றார். அவர் பேசுவது பூடகமாக இருந்தது.
சந்தானத்திற்கு ஒன்றும் புரியவில்லை. எனினும் சமாளித்தபடி “திருச்சில மலைக்கோட்டைதான் மலை…..அங்கு எப்பவும் வெயில்தான்….குளிரே கிடையாது சுவாமி” என்றார்.
திடீரென்று சம்பந்தமே இல்லாமல், “தங்கம் தங்கமாக இருந்தது…இப்ப எல்லாம் பித்தளை” என்றார்.
சந்தானம் பயந்தார். “சுவாமிகள் என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை” என்றார்.
“நீ கவனமா இருக்கணும்…நேரம் சரியில்லை, அபவாதங்கள் அதிகம்.”
சுவாமிகள் திடீரென எழுந்தார். விடுவிடுவென வாசலை நோக்கிச் சென்று வெளியே இருந்த பென்ஸ் காரின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்தார்.
அவர் பின்னாலேயே பதட்டத்துடன் ஓடி வந்த சந்தானம் காரில் இருந்த சுவாமிகளிடம் பவ்யமாக குனிந்து, “எனக்கு பயமா இருக்கு… தயவுசெய்து எதுவா இருந்தாலும் புரியும்படியா சொல்லுங்க சுவாமி” என்றார்.
சுவாமிகள் அவரை நிதானமாக ஏறிட்டு, “அடுத்த மாதம் ஒன்பதாம் தேதிக்குள், ஓடிப்போன பெண்ணால் அவமானம்… அபவாதம்” என்று சொல்லி கதவை அடித்து சாத்திக்கொண்டார், பென்ஸ் கார் மெல்ல கிளம்பிச் சென்றது.
சந்தானம் குழப்பமடைந்தார். சுவாமிகள் ஏதாவது ஒன்று சொன்னால் அது நடந்துவிடும். இன்று தேதி 24. அடுத்த மாதம் ஒன்பதாம் தேதிக்குள் என்றால்…இப்பவேகூட ஓடிப்போவது நடக்கலாம். இரண்டு பெண்களில் யாராக இருக்கும்? தன் இருபது வயது இரட்டைப் பிறவிகளான அழகிய மகள்களை உடனே காபந்து பண்ண வேண்டும் என்று முடிவெடுத்தார்.
அவர்களை தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்தார். ஒருவிதத்தில் கமலா இன்று வீட்டில் இல்லாதது நல்லதாகப் போயிற்று. அவள் இருந்திருந்தால் உடனே சுவாமிகளின் வார்த்தைகளைப் பெரிது பண்ணி பெரிய கலாட்டா செய்திருப்பாள்.
அவர் சில அவசர முடிவுகள் எடுத்தார். முதலில் இதுபற்றி கமலாவிடமோ அல்லது வேறு யாரிடமோ பிரஸ்தாபிக்கக் கூடாது. நிதானமாக புத்திசாலித்தனமாக யோசித்து செயல்பட வேண்டும். இரவில் கமலாவுடன் இருக்காது வேறு பெட்ரூமில் படுத்துக் கொண்டு, தூங்காமல் அடிக்கடி தன் பெண்களை நோட்டம் விட வேண்டும்.
மறுநாள் காலை மேனகாவும் ஜனகாவும் கல்லூரிக்குச் சென்றதும், சந்தானம் உடனே குளோப் டிடக்டிவ் எஜன்சிக்குச் சென்றார். அங்கு இருந்த ஜெனரல் மானேஜரிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, சுவாமிகள் சொன்னதைச் சொல்லி, தன் இரண்டு மகள்களையும் கவனமாக கண்காணிக்கச் சொன்னார். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, அவர்களின் நடவடிக்கையில் எந்தவிதமான மாற்றங்களோ, அல்லது வாலிப பையன்களின் குறுக்கீடுகளோ இருந்தால் தன்னிடம் அதை உடனே தெரிவித்து சுவாமிகளின் கூற்றைப் பொய்யாக்கி, தன் குடும்ப மானத்தை காப்பாறியே தீர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். தவிர மகள்களின் மொபைல் நம்பரைக் கொடுத்து தனக்கு தினமும் அவர்களின் கால் டீடெய்ல்ஸ் தரப்பட வேண்டும் என்றார்.
சந்தானத்திடம் ஒரு பெரும் தொகையை முன் பணமாகப் பெற்றுக் கொண்டவுடன், டிடக்டிவ் ஏஜன்சிமூலம் இரண்டு பெண்கள் ரகசியமாக நியமிக்கப் பட்டனர்.
அன்றைய மதியத்திலிருந்து மேனகாவும், ஜனகாவும் மிக கவனமாக, உன்னிப்பாக கவனிக்கப் பட்டனர்.
மறுநாள் ஸ்ரீரங்கத்திலிருந்து கமலா திரும்பி விட்டாள். அம்மாவுக்கு தற்போது பரவாயில்லை என்றாள். சுவாமிஜி என்ன சொன்னார் என்று கமலா கேட்டபோது, “என் ஜாதகப்படி அடுத்த பெளர்ணமி வரையில் நாம் இருவரும் பிரிந்துதான் படுக்க வேண்டுமாம்” என்றார்.
“ஆமா சேர்ந்து படுத்துட்டாலும், நீங்க என்ன செய்யப் போறீங்க? உங்களுக்குத்தான் அதுல ஆசையே இல்லையே….சில்மிஷங்களும்கூட இல்லாமல் அது பற்றிய கற்பனையே இல்லாத ஒரு வறட்டு வாழ்க்கை” என்றாள்.
அப்பாடி ஒரு வழியாக கமலாவை சமாளித்தாகி விட்டது.
தேதி 6. அன்று மேனகாவின் மொபைல் கால் டீடெய்ல்ஸ் பார்த்தபோது வித்தியாசமாக ஒரு நம்பர் காணப்பட்டது. அந்த நம்பருக்கு தன் மொபைலிலிருந்து போன் பண்ணபோது திலீப் என்கிற பெயரில் ஒரு வாலிபன் பேசினான். கல்லூரியில் படிக்கிறானாம். சந்தானம் உஷாரானார்.
மேனகாவிடம், “அது யாரும்மா திலீப்? உன்னோட மொபைலில் நேற்று பேசினானே…” என்றார்.
“அட உங்களுக்கு எப்படிப்பா அவனைத் தெரியம்? என் கூட கல்லூரியில் படிக்கிறான்…இன்னிக்கி ரெக்கார்ட் நோட் திருப்பித் தர அவன் நம் வீட்டிற்கு வருகிறான்” என்றாள்.
மாலை நான்கு மணிக்கு காரில் அவர்கள் வீட்டிற்கு திலீப் வந்தான். மீசைகூட முளைக்காமல் அப்பாவி முகத்துடன் காணப்பட்டான். கண்டிப்பாக இவன் மேனகாவை இழுத்துக்கொண்டு ஓட மாட்டான் என்று சந்தானத்துக்குத் தோன்ற, நிம்மதியானார். எதுக்கும் அவனை தனக்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்கச்சொல்லி அவன் நம்பரை சரிபார்த்துக் கொண்டார்.
அடுத்த நாள் தேதி 7. சுவாமிகள் சொன்ன தேதிக்கு இன்னும் இரண்டு நாட்கள்தான் பாக்கி. அன்று இரவும் சந்தானம் தூங்காது தன் மகள்களின் பெட்ரூமை அடிக்கடி நோட்டமிட்டார்.
எட்டாம் தேதி காலை ஐந்து மணிக்கு கமலாவின் பெட்ரூமில் லைட் எரிந்து கொண்டிருந்தது. ‘இவ என்ன பண்றா தூங்காம’ என்று நினைத்த சந்தானம் கதவைத்திறந்து உள்ளே சென்றார். சீலிங்பேன் சுற்றிக் கொண்டிருந்தது. டிரெஸ்ஸிங் டேபிளின் மீது ஒரு கடிதம் பட படத்தது.
சந்தானம் மெதுவாக அதை எடுத்துப் படித்தார்.
“என்னை மன்னிச்சிடுங்க. நான் பக்கத்து வீட்டு பரந்தாமனுடன் வாழப் போகிறேன். எனக்கு உங்களுடன் வாழப் பிடிக்கவில்லை. சென்ற சனி, ஞாயிறுகளில் நான் ஸ்ரீரங்கம் போகவில்லை. என்னவருடன் ஊட்டி போயிருந்தேன். என்னைத் தேட வேண்டாம்.” கமலா
‘அடப்பாவி, ஊட்டிக்கா போன….அதுதான் சுவாமிகள் அன்று மலையா, குளிரா என்றாரா’ என வியந்தார்.
துடிதுடித்துப் போனார். பதட்டத்துடன் அவசர அவசரமாக சுவாமிகளுக்கு போன் பண்ணி நடந்ததைச் சொல்லி அழுதார்.
சுவாமிகள் நிதானமாக, “அமைதியாக இரு. ஆசை தீர உடம்பை உழுதுவிட்டு மோகம் தீர்ந்ததும் விரட்டி விடுவான். அடுத்த மாதம் திரும்பி வருவாள். உன் குழந்தைகளுக்காக மன்னித்து சேர்த்துக்கொள். ஆனால் நீ சேராதே” என்றார்.
பாராட்டுக்கு மிக்க நன்றி பாலாஜி.
எஸ்.கண்ணன்
Excellent