கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 8, 2024
பார்வையிட்டோர்: 1,737 
 

நிலானி… நான் உன் சித்தி கதைக்கிறேன்… உன் அம்மாவ ஒரு தடவை வந்து பார்த்துட்டு போயிடம்மா… மருந்து மாத்திரை எதுவும் சரியாகல… பேரப்பிள்ளைகளை கொண்டு வந்து காட்டினால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்று பேசிய சித்தியின் பேச்சை சிலைபோல் கேட்டுக்கிட்டே இருந்த என் கண்களில் என்னையறியாமல் கண்ணீர் கொட்டியது… சரி சித்தி… நான் சீக்கிரமா வரேன்.. என்றவாறு பதிலுக்காக காத்திராமல் தொலைபேசியை வைத்துவிட்டு சமையலறையில் எனது வேலைகளை தொடர்ந்தேன்… ஆனாலும் மனம் அமைதி கொள்ளவில்லை.

கடந்த காலங்களில் நடந்த யுத்தமும் வெளிநாட்டு வேலையாலும் அப்பா சிறு வயது முதல் எம்மோடு அருகில் இருக்கவில்லை. அம்மா தான் சகல பாரங்கள், சுமைகளை தாங்கி எம்மை படிப்பித்து ஆளாக்கினார். எம்மை வளர்த்தெடுக்க பட்ட பாடு சொல்லிமாளாது. ஆனாலும் ஊரரின் தேவையற்ற கதைகளும் கேலிப்பேச்சுக்களும் அம்மாவை ரணப்படுத்தியதை நானும், தம்பியும் நன்கறிவோம்.

அப்பா அருகில் இல்லாத காரணத்தால் அப்பாவின் சகோதரங்களும் எம்மோடு இதுவரை ஒட்டவில்லை, ஒதுங்கியே நிற்கிறார்கள். அம்மாவுடன், அம்மாவின் சகோதரங்கள் உறுதுணையாய் பக்கபலமாய் இருந்தது தான் அம்மாவிற்கான பெரிய ஆறுதல்.

நான் கல்லூரி விடுமுறையில் வீட்டிற்கு வந்து நின்ற போது ஒருநாள் நடு இரவு அம்மா மெதுவாக அழும் சத்தம் கேட்டது.. நான் மெதுவாக சென்று பார்த்தேன், தனிமையில் சுவாமி படத்தின் முன் இருந்து அழுதவாறு பேசிக்கொண்டிருந்தார்… அம்மா.

“எனக்கு திருமண வாழ்க்கையும் சரியாக அமையல, எனக்கு எப்பவும் என்னோட ரெண்டுபிள்ளைகளும் நல்ல இருக்கனும். இனி அதுகளோட வாழ்க்கை இருக்கு ஆனாலும் ஊர்காரங்கள் கேட்க ஆம்பிள இல்லை என்ற தைரியத்தில என்னென்னமோ எல்லாம் பேசுறாங்க… என் பிள்ளைகளை நான் நல்லா பார்த்துகனும் என்று கடவுள் முன் பிரார்த்தனை செய்தார். இது நான் நேரில் கண்ட ஒன்று. இதைப்போல எத்தனை இரவுகள் தனிமையில் என் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டுமென கடவுளிடம் மன்றாடியிருப்பார்.எனும் போதே என் இதயம் பதைபதைக்கிறது.

கால மாற்றத்தின் பிரதிபலனும் அம்மாவின் பிரார்த்தனைகளும் வீண்போகவில்லை. நான் படித்து பட்டாதாரி ஆகினேன். ஆசிரியர் நியமனம் கிடைத்து விட்டது. தம்பியும் பட்டம் பெற்று கொழும்பில் பல்வைத்தியராக இருக்கிறான். இன்று சிங்கப்பெண்ணாக அம்மா ஜெயித்து விட்டாள் தன் வாழ்வில்… ஊராரரும் வாயில் கைவைத்து எம்மை ஆச்சரியமாக பார்த்த நாட்கள் எமக்கு ஆடம்பரமான நாட்களாக அமைந்தன. ஆனாலும் அம்மாவின் தாரக மந்திரம் “காசு பணம் முக்கியமில்லை, நோய் நொடியற்ற அமைதியான வாழ்க்கை போதும்” என்பதே! அதனால் தானோ நானும் தம்பியும் இன்று வரை வசதி வாய்ப்புக்களை பெரிதுபடுத்துவதில்லை.

நானும் கண்டியில் உள்ள பாடசாலையில் ஆசிரியராக பணி புரிந்து வரும் வேளையில் தான் நல்ல வரன் அமைய திருமணம் முடித்து வெளிநாட்டுக்கு வந்து இன்றைக்கு ஆறேழு வருடங்கள் உருண்டோடிவிட்டது. வேலை பிள்ளைகள் என நாட்கள் கடந்து விட்டன.  

அம்மாவும் ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் என்னோடும், பேரப்பிள்ளைகளோடு கதைத்து மகிழ்ந்திருந்தார். 

எப்படியாவது பேரப்பிள்ளைகளை கூட்டிக்கொண்டு வந்துட்டு போ… என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் கேட்டுக்கொண்டே தான் இருந்தார். சூழ்நிலைகள் சரிவர அமைந்தால் விரைவில் வருவேன் அம்மா… என்று சொல்லியிருந்தேன்.

அம்மாவுக்கு இவ்வளவு சீக்கிரம் ஆரோக்கிய குறைவு வரும் என்று நானோ, ஏன் யாருமே எதிர்பார்க்கவில்லை 

அம்மாவுக்கு எந்த குறைவும் இப்போது இல்லை. தம்பி நல்ல நிலையில் வைத்து அம்மாவை உடனிருந்து கவனித்து வந்தாலும் அம்மாவின் மனது தேடுவது, ஏங்குவது பேரப்பிள்ளைகளை நேரில் காண வேண்டும், அவர்களை தூக்கி சீராட்டி விளையாட்டு காட்ட வேண்டும். 

பேரப்பிள்ளைகளுக்கும் – பேர்த்திக்கும் இடையிலான பாச போராட்டம் இப்பொழுதெல்லாம் ரசிக்க கூடியதாய் தான் இருக்கிறது.

இளமையையும் வாழ்க்கையையும் எமக்காக தியாகம் செய்த என் அம்மாவுக்கு நான் செய்யக்கூடிய ஒன்று தான் விரைவில் தாய்மண்ணுக்கு திரும்பி அம்மாவுடன் சிலகாலம் இருக்க வேண்டும். என் பிள்ளைகளுக்கும் அம்மம்மாவின் அன்பு கட்டாயம் தேவை.இதுவே அவர்களின் உடலிற்கு மருந்தென்றால் என்கணவரும் துணை நிற்பார்.   

“அம்மாவென்று அழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று எது…”

என்ற மன்னன் திரைப்பட பாடல் வரிகள் ஞாபகம் வர அம்மாவுடன் வாழ்ந்த நாட்கள் இனிமையான தருணங்களாய் கண்முன் நிழலாடுகின்றன.

விரைவில் பெத்த மனசினை குளிர்விப்பதற்காக தாயகம் நோக்கிய பயணத்தில் பிள்ளை மனம் பூரிப்படைந்து இறைவனிடம் மன்றாடுகிறது.

என்னை பெற்ற அன்னையவள் மகிழ்வோடும், நலத்தோடும் வாழ வேண்டும். பெத்தமனம் எம்மை வாழ்த்தனும், என்றென்றும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *